வேங்கடவற்கு என்னை விதி .
[பெரியாழ்வார்தான் ஆண்டாளா ? (பகுதி இரண்டு)]
பெரியாழ்வார்தான் ஆண்டாள் என்று கொள்வதில் பெரிய சமூக/சரித்திர தில்லு முல்லு இருப்பாதாக நம்ப வேண்டி வருகிறது. ஏனெனில் இது ஒரு பெரிய இலக்கிய புரட்டு என்றாகிறது. செழுமையான வைணவ பாரம்பரியம் அப்படியானதொரு பொய்யை நம்பி எழும்பி இருக்கிறது என்று சொல்வது நம்மை நாமே இழிவு படுத்துவது போலாகி விடுகிறது. குருபரம்பரை நூல்கள் ஆண்டாள் என்ற பெண் உதித்த நட்சத்திரம், ஆண்டு, மாதம் எல்லாம் சொல்லுகின்றன. ஆண்டாளும் தனது பாடல்களில் வரிக்கு ஒருமுறை பட்டர்பிரான் கோதை என்றும், குழல் கோதை என்றும், வில்லைத் தொலைத்த புருவத்தாள் என்றும், பெண்மை நிரம்பிய வரிகளால் சொல்வதைப் பார்க்கும் போது "பல ஸ்துதி" என்று சொல்லும் வரிகளில் இவ்வளவு பொய்மை இருக்கும் என்று கொண்டால், பின் அவள் சொல்லும் இறைமையில் என்ன உண்மை இருக்கும் என்ற விபரீத, விதண்டா வாதத்தில் போய் முடியும்! மேலும், பாண்டியன் சபையில் பரம் பொருள் எது என்று நிறுவி பாண்டியனை சீடனாகக் கொண்ட "வேத வாய்த் தொழிலாளர்கள் வாழ் வில்லிபுத்தூர் விட்டு சித்தன்" எப்படி இப்படியொரு பொய்யை நிறுவ முடியும்? அப்படி நிறுவி அவர் காணும் பேறுதான் என்ன? அப்படியொரு பொய்யைச் சொல்பவர் எப்படி "விட்டுசித்தன் தன் கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே" என்று தைர்யமாகக் கூறமுடியும்?
ஆண்டாள் மேலும் தன்னைப் பற்றி இப்படி கூறுகிறாள்:
மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னளவும்,
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை,
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.
இதில் "தாழ்குழலாள் துணிந்த துணிவை" என்ற வரிகள் முக்கியமானவை. அவளுக்கே நன்கு தெரிந்து இருக்கிறது தான் மரபை மீறி துணிந்து பல விஷயங்களைச் சொல்கிறோமென்று
தன்னை பெண்ணாக பாவித்து யசோதை போல் வாழ்ந்த பட்டர் பிரானால் தன் பெண், பெண்ணாக இருந்து
கண்ணன் மேல் காதல் கொள்வதைப் பெரும் பேறாகத்தான் பார்த்திருக்க- முடிந்திருக்குமேயன்றி வேறொன்றாக அல்ல. அதனாலாயே அவள் காதல் மொழிகளை அவர் குழல் இனிது, யாழினிது என்பது போல்தான் கேட்டு அனுபவித்து இருந்திருக்க வேண்டும். அதை விரசம் என்று ஒரு காலும் அவரால் சொல்லி இருக்க முடியாது. ஆண்டாளின் தைர்யம், விட்டு சித்தர் கொடுத்தது. அப்பாவே சரி என்று சொல்லும் போது, கோதையால் ஏன் தைர்யமாக எழுத முடியாது?
இனி அகச் சான்றுகளிலிருந்து புறச் சான்றுகளுக்குப் போவோம். நாச்சியார் திருமொழித் தனியன்களைப் பார்ப்போம்:
திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு
மட மயில், மெல்லியலாள், அரங்கனின் துணைவி என ஆண்டாளை விளிப்பது அவள் பெண் என்று காட்டுகிறது. மேலும், பெரியாழ்வார் காலத்தால் பின் தங்கியரானாலும், அவர் செய்வித்த பல்லாண்டு, பல்லாண்டு என்ற பாசுரத்தின் மூலம்தான் பாசுர சாற்றுமுறை ஆரம்பமாகிறது. இது எவ்வளவு பெரிய பேறு! இது போதாது என்று அவருக்கு விட்டு சித்தன் என்ற பெயர் போய் "பெரிய ஆழ்வார்" என்ற பட்டம் வேறு. இது அவருக்குப் பின் வந்தது என்று கொண்டாலும் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் அரசனால் சிறப்பிக்கப் பெற்றிருக்கிறார். தனியாக ஆண்டாள் என்ற பெயர் கொண்டு அவர் புகழுக்காக செய்ய வேண்டியது ஏதுமில்லை
உய்யக் கொண்டார் வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர். அவர் நெக்குருக ஆண்டாளை நினைத்து இப்படியொரு தனியன் செய்கிறார்:
சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.
பல் வளையாய் என்ற பதம், தொல் பாவை என்ற பண்டைய பெண்கள் செய்யும் நோன்பு இவைகளை செய்வித்த ஆண்டாள் - இவள் பெண் என்பது. உருக்கமான வரிகள், ஆண்டாளைப் போல் வேங்கடவற்கே என்னை விதி என்ற மாற்றம் நிகழ அவளையே சரண் புகுகிறார். வேங்கடவற்கே என்ற ஏகாரம் கவனிக்க வேண்டியது. உய்யக் கொண்டார் போன்ற ஆச்சார்யர்களே இத்தகைய உள மாற்றத்திற்கு ஆண்டாளிடம் மன்றாடும் போது, ஆண்டாள் கொண்ட பக்தி சாதாரணமாக எல்லோருக்கும் வரக் கூடிய ஒன்றில்லை என்று தெரிகிறது
ஸ்ரீராமானுஜர் ஆண்டாளின் மேல் பேரும் பக்தி கொண்டவர். இவருக்கு "திருப்பாவை ஜியர்" என்ற பட்டப் பெயர் கூட உண்டு. இவர் திருமாலிருஞ் சோலை கள்ளழகரை சேவிக்க சென்ற போது கீழ்காணும் பாசுரத்தை (நாச்சியார் திருமொழி) சேவித்தார்:
நாறு நறும்பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைநத
அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான்
இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ.
இன்றுவந் தித்தனையும்
அமுதுசெய் திடப்பெறில்,நான்
ஒன்றுநூறாயிரமாக்
கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,
தென்றல் மணங்கமழும்
திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்,அடியேன்
மனத்தேவந்து நேர்படிலே.
அப்போதுதான் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. சிறுமியான ஆண்டாள் பெருமாளுக்கு உண்மையிலேயே நூறு தடா வெண்ணெய் வார்த்து அக்கார அடிசில் செய்வித்து இருப்பாளோ என்று. இவர்தான் திருப்பாவை ஜியர் ஆச்சே, ஆளைப் பேரை பிடித்து இவர் ஆண்டாள் வேண்டிக் கொண்ட பிரகாரம் நூறு தடா அக்கார அடிசில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யதாக வரலாறு.
இவ்வளவு உருக்கமாக இவர் செய்வித்த காரியம் ஆண்டாளின் மனதை நிறையச் செய்தது.இவர் ஸ்ரீவில்லி புத்தூர் க்ஷேத்திராடணம் செய்ய வந்த போது "அண்ணா!"என்று கூவியவாறு ஆண்டாள் வந்ததாகவும், அவள் வந்து இவரை வரவேற்ற இடத்திலேயே ஆண்டாளின் சன்னிதானம் இருப்பதாகவும் ஐதீகம்.
இதை சரித்திர உண்மையென்று நிறுவுவது கடினம்தான். ஆனால் இந்த ஐதீகத்தில் உள்ள உண்மை என்னவெனில் ஆண்டாள் பெண் என்பது. பெரியாழ்வார் ஓடிவந்து, ஸ்ரீராமானுஜரை "அண்ணா!" என்று அழைக்க வில்லை. அப்படி அழைத்திருந்தாலும் "தம்பி" என்றுதான் அழைத்திருப்பார். ஏனெனில் அவர்"பெரியாழ்வார்" (இதுதான் _ஆழ்வார் கடி_ என்பது:-)
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன. ஆண்டாள் பெண் என்பதை
ஆண்டாளை பெண்தானா என கேள்வி கேட்க வைத்தது எது? அவளது விரகக் கவிதைகள். விரகக் கவிதைகளை ஆண்கள் எழுதலாம், ஆனால் பெண் எழுதினால் தப்பு என்னும் ஆணாதிக்க மனோ பாவம். இதற்கு மாற்று உண்டா? ஸ்ரீராமானுஜர் சொல்கிறார், "கண்ணனுக்கே ஆமது காமம்" எனவே நாமெல்லோரும் பெண்கள்தான் என்று!
என்ன ரெ.கா சார்? இப்போ நீங்க ஆம்பிளையா? பொம்பளையா?
நா.கண்ணன்.
Subject: [tamil.net] Pasura madal 25
Date: Tue, 23 Dec 1997 22:29:10 +0100