பாசுர மடல் 007 : சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே ?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே ?



 பிரம்ம சூத்திர உரைகளில் திரமிடாசார்யார் (திராவிட ஆசாரியர்) ஒருவர் குறிப்பிடப்படுகிறார். இவர் திருமழிசைப்பிரானாக இருக்க வேண்டும் என்று பேரா.குப்புசாமி சாஸ்திரியார் கருதுகிறார். இவ்வாழ்வார் சமைத்துள்ள திருச்சந்த விருத்ததில் மலைக்க வைக்கும் சந்தங்களை ஆண்டுள்ள விதத்திலிருந்து இவரது ஆழமான சமிஸ்கிருத புலமையும் தெரியவருகிறது. இவர் கி.பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது கி.பி.8ம் நு¡ற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்



தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின் கண் நின்றதே



சொல்லினால் தொடர்ச்சிநீ, சொலப்படும் பொருளும்நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால் படைக்கநீ படைக்க வந்து தோன்றினாய்
சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்ல வல்லரே?


-திருச்சந்தவிருத்தம் 10,11


என்ன அழகான பாசுரங்கள்! சந்தத்தில், பொருளில், கவிதை அழகில்!



திரைகடலில் கிளர்த்து எழும் பேரலையானது எழுந்து, ஆர்ப்பரித்து, ஆடிக்களைத்து பின் அக்கடலிலேயே அடங்கிவிடுவது போல் இறைவன் என்ற ஒன்றில் பிறந்து, நின்று, திரிந்து,இறந்து பின் இறையினுள் அடங்கிவிடுகிறது என்கிறார்


இது இந்திய ஞானிகளுக்கேயுரிய ஒரு பரந்த நோக்கு


இப்படி "ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்" ஒன்றை வார்த்தைகளால் பிடிக்க முடியுமா? என்பது அடுத்த கேள்வி. அன்றைய ரிஷிகளிலிருந்து, இன்றைய ஜே.கிருஷ்ணமுர்த்திவரை இதைசொல்லி களைத்து இருக்கிறார்களே தவிர உண்மையையாய் " சொல்ல" முடியவில்லை! "சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?" என திருமழிசை கேட்பது சரிதான்!


ஊனில்மேய ஆவிநீ! உறக்கமோ டுணர்ச்சிநீ
ஆனில் மேய ஐந்தும்நீ; அவற்றுள் நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும்நீ
யானும்நீ, அதன்றி எம்பிரானும்நீ, இராமனே!


-திருச்சந்தவிருத்தம் 94


                                          
47252 wallpaper280.jpg


அத்தனாகி, அன்னையாகி, யாளுமெம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்து நம்மையாட் கொள்வான்
முத்தனார், முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினா லிடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே!


-திருச்சந்தவிருத்தம் 115


என்ன எப்படி போகிறது சந்தம் பாருங்கள்! திருமழிசை - சித்தர்கள், அருணகிரிநாதருக்கு முன்னோடி! ஓடப்பர், உடையப்பர்....என்ற பராசக்தி வசனத்திற்கு முன்னோடி (சமயம் தவிர்த்து ஆழ்வார்கள் எம்மை ஆழ்பவர்களே! -கலைஞர் ஒரு பேட்டியில்)


பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை
(3.77-80)


என்று பரிபாடல் திருமாலைப் பாடுகிறது (சங்கப்பாடல்). பாழ் என்றால் பூஜ்யம்; தொண்டு என்றால் ஒன்பது, பாகு என்றால் அரை. சங்கப்பாடல்களின் தொடர்ச்சிதான் பிரபந்தங்கள் என்று ஒரு கணக்கு. பரிபாடல் மாதிரியே புரியாத பாடலொன்றை (ஒன்றா?) திருமழிசையும் எழுதியுள்ளார். சாம்பிள்:


ஐந்துமைந்து மைந்துமாகி அல்லவற்றுளாயுமாய்
ஐந்து மூன்று மொன்றுமாகி நின்ற ஆதி தேவனே!
ஐந்துமைந்து மைந்துமாகி அந்தரத் தணைந்து நின்று
ஐந்துமைந்து மாயநின்னை யாவர் காணவல்லரே?


-திருச்சந்தவிருத்தம் 3



இப்படியே ஒன்று, மூன்று, ஆறு என்று வகைக்கு ஒன்றாய் பாடி இருக்கிறார்!

திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!!!



நா.கண்ணன்.

Date: Wed, 10 Sep 1997 17:01:11 +0000

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2010, 07:27 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,234 முறைகள் அணுகப்பட்டது.