நா.கண்ணன் பார்வையில் திவாகரின் நம்ம ஆழ்வார்: நம்மாழ்வார்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

நம்ம ஆழ்வார் - நம்மாழ்வார். - எழுதியவர் திரு திவாகர்.


வம்சதாரா புகழ் திவாகர் அவர்கள் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள ஒரு நூலின் பெயர் நம்ம ஆழ்வார் நம்மாழ்வார். மிக்க அன்புடன் அதை எனக்கு வாசிக்க அனுப்பிவைத்தார். காரணம் ஒரே இனம்! என்ன இனம்?

மனத்தாலும் வாயாலும் வண்குருகுர் பேணும் இனம்!! அதாவது `எந்தை சடகோபன் பாதங்களே யாமுடைய பற்று` எனும் கொள்கையுடையவர்கள் நாங்கள் இருவரும். நம்மாழ்வாரின் பெயர் சடகோபன், மாறன் என்பவை.

நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்களிலிருந்து 30 பாடல்களை எடுத்துக் கொண்டு பாமரனுக்கும் திருவாய்மொழி மீது பற்றுவர வேண்டும் எனும் ஆசையால் ஒரு நூல் செய்துள்ளார். இவை பிரபந்த உரையல்ல. அப்பிரபந்தம் இவருள் எழுப்பிய பாதிப்பு, எண்ண அதிர்வுகள் என்று கொள்ளலாம்.

திருவாய்மொழியில் பல பாசுரங்கள் தாய் பேசுவது போல் அமையும், சில பாங்கியர் பேசுவது போலிருக்கும், பல நாயகி பேசுவது போல் இருக்கும். அவர் ஞானதிசையில் இருக்கும் போது தன்னியல்பான பேச்சாக இருக்கும், பிரேம திசைக்கு மாறும் போது தாய்ப்பாசுரமாகவோ, நாயகி பாசுரமாகவோ அமையும். அவையெல்லாம் மிக ஆழ்பொருள் உள்ளவை. தூது விடும் போதும் அத்தூது போகும் பறவை/வண்டு எதைக் குறிக்கிறது என்று வேதாந்த பூர்வமாக நிருவப்பட்டுள்ளது. திவாகர் இந்த சமாச்சாரத்திற்குள்ளெல்லாம் போகவில்லை. நேரடியாக இப்பாடல் என்ன பொருள் சொல்கிறது என்று எளியோர் விளங்கிக்கொள்ளும் வண்ணம் எழுதியுள்ளார்.

எனவே நாயகி பாவத்தில் வரும் பாடல்களில் இவரது கற்பனைத்திறம் கொடி கட்டிப்பறக்கிறது. ஏனெனில் இவரொரு நாவலாசிரியர். காதல் மொழியைக் கைவசமாக்கி வைத்திருப்பர். காட்சிகளை அமைக்கும் சினிமாத்திறம் பெற்றவர். அற்புதமாக ஜோடனை போடுகிறார். உதாரணமாக, ‘ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்’ எனும் திருவாய்மொழி பற்றிப்பேசும் போது நட்டநடு இரவில் உறக்கமின்றித்தவிக்கும் ஒரு அபலைப் பெண்ணின் நிலையை மிக அழகாக வருணிக்கிறார்.

மேலும் இவர் இராஜாஜியிடம் பாடம் கேட்டவர். எனவே பாரத, புராணக்கதைகள் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார். அதையெல்லாம் மிக அழகாக எடுத்துச் சொல்கிறார்.

இவையெல்லாம் வாசகனை வாசிப்பில் தக்க வைப்பது உறுதி. எனவே அவைகளை பொது வாசகனுக்கு வைத்துவிட்டு, இந்நூல் கயிற்றில் நடக்கும் சில வேலைகளைச் செய்திருப்பதை மட்டும் இங்கு சுட்ட விரும்புகிறேன். அதற்கான காரணத்தையும் சொல்கிறேன்.

மூத்த எழுத்தாளர் திரு.ஸ்ம்பத் நல்லதொரு முன்னுரை எழுதியுள்ளார். அதில் முக்கியமான ஒன்றைச் சுட்டுகிறார். அது திவாகர் அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் ஒரு குறை பற்றியது. அக்குறை என்னவென்று சொன்னால்தான் இந்த என் எண்ணப்பகிர்விற்கு பொருள் கிட்டும். இல்லையெனில் ’பாமரனுக்கு என்று எழுதிய நூலில் பண்டிதத்தனம் பார்க்கலாகாது’ எனும் குறைபாடு என் எழுத்திற்கு வந்துவிடும். அதுவல்ல என் நோக்கம்.

திவாகர் காணும் குறை என்னவெனில் வைணவர்கள் திருவாய்மொழியை கோயிலுக்குள் பூட்டி வைத்துவிட்டனர் என்பது! அதைப் பரவலாக்கி நம்மாழ்வாரை எல்லோரும் அனுபவிக்கச் செய்யவில்லை என்பது. அந்த எண்ணத்தில்தான் இந்த நூலே எழுந்துள்ளது. எனவே இதில் எவ்வளவு உண்மையுள்ளது. அதில் ஆசிரியர் எவ்வளவு வெற்றி பெற்றுள்ளார் என்று ஆராயலாம்.

வைணவர்கள் திருவாய்மொழியை, சிதம்பரத்து தீக்ஷதர்கள் போல் பூட்டி வைத்திருந்தனரா? இல்லை போற்றிப் புகழ்ந்து பாரெட்டும் பரப்பினரா?

திருவாய்மொழி என்பது வைணவர்களுக்கு திராவிட வேதம் போன்றது. கம்பன் இராமாயண காவியம் இயற்றி அரங்கேற்ற ஸ்ரீரங்கம் வரும் போது அருளப்பாடாய் வந்த முதல் கேள்வியே, ‘எம் சடகோபன் அடி பற்றிய பின் இந்தக் காவியம் வந்துள்ளதா?’ என்பதே. எனவேதான் கம்பன் சடகோபர் அந்தாதி ஆக்கினான் என்பது கதை. திருவாய்மொழியின் புகழை இவர்கள் தமிழ் மண்ணில் பரப்பி இருக்காவிடில் கிருமிகண்ட சோழனின் மகன் ஸ்ரீரங்கம் வந்த போது வைணவத்தைக் காக்கும் இரு தூண்கள் என்று இராமாயணத்தையும் திருவாய் மொழியையும் சொல்லியிருக்க மாட்டான். சரி இதையெல்லாம் விட்டுவிட்டால் கூட திருவாய்மொழி எனும் பனுவல் மாற்றோரால் பிழையாகப் புரிந்து கொள்ளப்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ‘ஆசார்ய ஹிருதயம்’ என்ற உரைக்காவியம் தோன்றியிருக்காது. அம்மட்டோ? அம்பாள் அலங்காரப்பிரியை என்றால் பெருமாள் உற்சவப்பிரியர். ஹாய்யாக அவருக்கு அடிக்கடி உலா வரப்பிடிக்கும். திருமஞ்சனக்காப்பு, வக்கணையாய் செய்து கொள்ளப் பிடிக்கும். ஆனால், இதையெல்லாம் விட்டு, ஒரு நாள் அல்ல, ஒரு வாரமல்ல, ஒரு வருடம் தன் அத்தனை உற்சவங்களையும், திருநீராடலையும் நிறுத்திவிட்டு, ‘ஓய்! ஜீயரே நீர் திருவாய்மொழி வியாக்கியானம் செய்யும். இருந்து கேட்கிறேன்!’ என்று எந்தத் தெய்வமாவது சொல்லுமோ? அரங்கன் சொல்லியிருக்கிறான். மணவாள மாமுனிகள் ஒரு வருடம் திருவாய்மொழி காலட்சேபம் செய்திருக்கிறார். எவ்வளவு ஆழ்பொருள் தெரிந்திருந்தால் ஒரு பனுவலுக்கு இப்படியொரு மாரத்தான் வியாக்கியானம் செய்திருக்கமுடியும்? (இரண்டு பக்கம் எழுதுவதற்குள்ளே நமக்கு நாக்குதள்ளிவிடுகிறது :-)

எனவே திருவாய்மொழியை வைணவர்கள் கோயிலில் சிறை வைக்கவில்லை என்பதே உண்மை. அதற்கு மாறாக இருந்திருக்கிறது சரித்திரம்.

ஆனால் திவாகர் சொல்ல வருவது அதுவல்ல. ஒரு தமிழ்ப்பாடலுக்கு கோனார் உரை சொல்வது போல் ஏன் திருவாய்மொழிக்கு உரை சொல்ல அனுமதிக்கவில்லை என்பதே! நன்றாக அக்காரடிசில், பக்குவமுடன் செய்பவர் செய்து பரிமாறி உண்பது என்பது ஒரு அனுபவம். கிராம பூஜைகளில் நாலு துண்டு வெல்லம் போட்டு கஞ்சி போல் ஒரு பொங்கல் சாப்பிடும் அனுபவம் வேறு. பாசுரங்களுக்காக வியாக்கியானமா? இல்லை வியாக்கியானத்திற்காக பாசுரங்கள் ’அப்படி’ இயற்றப்பட்டனவா? என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு மூலம் இடங்கொடுக்கிறது. இவர்கள் தகைசார்ந்த அறிவுத்திறம் இடம் கொடுக்கிறது. அப்படியொரு மரபு எம்பெருமானார் காலத்திலிருந்து, இன்றுவரை ஸ்திரப்பட்டு விட்டபின் திருவாய்மொழிக்கு கோனார் உரை போடமுடியாது.

அதைக்குறையென்றும் காணமுடியாது. ஏனெனில் இன்றும் கூட திருவாய்மொழி காலட்சேபங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இணையமெனும் ஊடகத்தையும் கூட அது பயன்படுத்திக்கொண்டுள்ளது என்பதே உண்மை. எனவே நமக்கு திருவாய்மொழி கேட்கும் ஆசை வேண்டும். ஆர்வமிருந்தால் மூலப்பொருள் அறியலாம். சென்னைப் பல்கலைக் கழகம் ஈடு உரையை மணிப்பவள நடையிலிருந்து தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது.

அடுத்து, திரு.ஸம்பத், திவாகர் பிறப்பால் வைணவரில்லையெனினும் ஆர்வத்தால் வைணவர் என்பது போல் சொல்லிச் செல்கிறார். யார் வைணவரில்லை? என்று, திருவிக்கிரமன் தன் பாதங்களை இப்பூமண்டலத்தின் மீது வைத்துவிட்டானோ அன்றே எல்லோருக்கும் தீக்ஷை ஆகிவிட்டது. ஆநாதையான குழைந்தை தன்னைக் கிறிஸ்தவனென்றும் , முஸ்லிமென்றும், சைவனென்றும் சொல்லிக்கொள்வதால் வைஷ்ணவன் இல்லையென்று ஆகிவிடாது. நாம் யார், நம் மரபு என்ன? நம் வேர் எங்குள்ளது என்று கண்டு அறிய வேண்டும். இப்பேருண்மை புலப்பட்டவுடன்தான் ஸ்ரீராமானுஜர் எல்லோருக்கும் வைணவ தரிசனம் கொடுக்கத்துணிந்தார். அவர் வழி வரும் ஸ்ரீபிரபுபாதா மேலை நாட்டினரையும் தன் உண்மை ஸ்வரூபம் என்னவென்று காட்டத்துணிந்துள்ளார். எனவே நாம் அன்னியப்பட்டு போய் விட்டதால் இன்றும் அந்நிறியில் இருப்போரைக் குறை காணுதல்கூடாது....

(முதல் பாகம் முற்றிற்று..)
--


இப்புத்தகத்திற்கு மிக அழகாக ஓவியம் வரைந்திருக்கிறார் திரு.ஜீவா. கண்ணன் காதலிக்கும் பாராங்குச நாயகியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலுள்ளது :-)) நம்மாழ்வார் தன்னை அப்படியொரு சுந்தரியாகத்தான் வருணிக்கிறார் :-)


திரு.ஸம்பத் அவர்களின் முன்னுரை `சாராக` வைணவ சித்தாந்தக் கருத்துக்களை எளிய முறையில் சொல்கிறது. அதில் ஒரு கூற்று திவாகரின் பாடலொன்றுக்குப் பொருந்துமாறு போட்டுப்பார்க்கிறேன். திருவாய்மொழியின் கடைசிப்பத்தில் வரும் பாசுரம், “அவா அறச் சூழ் அரியை, அயனை, அரனை, அலற்றி வீடு பெற்ற குருகூர் சடகோபன்` அதற்குப் பொருள் சொல்லும் போது திரு.ஸம்பத் எழுதுகிறார், `இவனே பிரம்மனுக்கும், சிவனுக்கும் உள்ளே இருந்து அவர்களை நியமிப்பவன்` என்று. இது மிகவும் கவனிக்க வேண்டிய வசனம்.


ஸ்ரீமந் நாராயணன் பரம்பொருள் என்பதில் ஆதிசங்கர பரமாச்சாரியருக்கோ, எம்பெருமானார் ஸ்ரீஇராமானுஜருக்கோ, ஸ்ரீமாத்வாச்சாரியருக்கோ, ஸ்ரீவல்லபாச்சாரியாருக்கோ, ஸ்ரீபிரபுபாதாவிற்கோ எள்ளளவும் சந்தேகம் கிடையாது. பின் எதில் அவர்கள் வேறுபடுகிறார்கள்? ஆதிசங்கர பரமாச்சார்யா அவனது வியாபகத்தன்மையைக் காண்கிறார். அவன் ஒருவன்தான் எதிலும் இருக்கிறான் எனும் `காரணத் தன்மையில் அத்வைதமே முன் நிற்கிறது. ஸ்ரீஇராமானுஜருக்கோ அவன் அந்தர்யாமியாகி எல்லாவற்றையும் நிர்ணயம் செய்வது பிரதானமாகப்படுகிறது (எனவேதான் ஸ்ம்பத் காட்டும் வியாக்கியானம் அப்படி வருகிறது). அதாவது காரியம் எப்படி நடக்கிறது எனும் விளக்கம்.மாத்வருக்கோ, கடைத்தேற என்ன வழி எனும் தேடல் முக்கியமாகப்படுகிறது. எனவே அவனே ரட்சகன் நாம் அவன் பிரஜைகள் எனும் துவைத நிலைப்பாடு முக்கியமாகப்படுகிறது. இந்தப் புரிதலோடு அவர் பேசும் திருவாய்மொழிக்கு வருவோம்.


’அரியை, அரனை அயனை’ மூவரையும் ஒன்றாக, ஒருவராக கண் முன்னே கண்டு போற்றிப் புகழ்ந்தவர் நம்மாழ்வார் அல்லவா? என்று பாடல் ஐந்து பற்றிய தன் எண்ணைத்தப் பதிவு செய்கிறார் திவாகர். இங்கு சந்தேகம் வருகிறது. மூவரையும் ஒன்றாகக் கண் முன் காண்கிறார் எனும் போது மூவரின் தனிப்பட்ட இருப்பை ஒத்துக்கொள்வது போலாகிவிடுகிறது. அதாவது மூவரும் உளர், அவர்களை இவர் சமமாகக் காண்கிறார் என்பது போல் அர்த்தம் தொணிக்கிறது. உண்மையில் நம்மாழ்வார் அப்படியா காண்கிறார்? இல்லை! வேத நூல் பிரகாரம் நாரணன் காரணப்பொருள். அவனிடமிருந்து பிரம்மா தோன்றுகிறான். பிரம்மனிலிருந்து 12 ருத்திரர்களும், பிறரும் தோன்றுகின்றனர்.


அவனிடமிருந்து பிரிகின்ற எல்லாம், தன்னுள் வேற்றுமை காண்பதால் சம்சாரிகள் கூட்டத்தில் அடங்கிவிடுகிறது. பிரம்மலோக பரியந்தம் சம்சார உலகமே என்பதே வேதாந்தப்புரிதல். இக்காரணத்தினால்தான், சிவனுக்கு தனிப்பட்ட எந்த விசேஷத்தையும் வைஷ்ணவம் தருவதில்லை. இது காழ்ப்புணர்வினால் அல்ல. உண்மை அப்படி இருப்பதால். வேடிக்கை என்னவென்றால், திவாகர் எடுத்தாளும் திருவாய்மொழிக்கு ஈடு சொல்லும் உரை வேறு :-)


கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்க வாறும், கலந்தசுரரை
உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்,
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்,
உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே


திவாகர் இதற்கு உரை செய்யும் போது, வெள்ளமெனப் பொழியும் கங்காதேவியை தலையில் தாங்கி உலகத்தைக் காத்த சிவன் உன்னுடன் வேற்றுமை தெரியாது விளங்க என்று எழுதுகிறார். அது கள்ளவேடம் என்பதை புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை :-)


ஈடு என்ன சொல்கிறது பார்ப்போம்:


|வஞ்சனை பொருந்திய வேடத்தைக் கொண்டு சென்று திரிபுரத்திலெ புகுந்தவிதமும், அங்குள்ள அசுரர்களோடு கலந்து அவர்களுடைய மனங்களை வேறுபடுத்தி உயிர்களைப் போக்கிய உபாயங்களும், கங்கையைத் தரித்த சடையுடைய சிவபிரானும் உன் பக்கல் வேறு அல்லாதபடி விளங்க நின்றதும், என் மனதிற்குளே புக்கு என் உயிரை உருக்கி முடிக்கின்றன|


என்பது. அதாவது திரிபுரம் எரித்தது சிவனது பராக்கிரமம் என்று பேசப்படுவது. ஆயின் அப்பராக்கிரம செயல்களையெல்லாம் செய்தவன் கண்ணன். அது என் நெஞ்சை உருக்குகிறது என்கிறார். நெஞ்சை ஏன் உருக்க வேண்டும்? ஏனெனில் சிவனாருக்கு பராக்கிரம் இருப்பது போல் உலகிற்கு காட்ட ஒரு நிகழ்வை இவன் ஏற்படுத்திக்கொடுத்து, மிக மறைவாக, தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இவன் இருக்கும் எளிமை நம்மாழ்வாரை உருக்குகிறது. ஆனால், நம் திவாகர் இப்பாடலை எடுத்துக்கொண்டு அரியும், சிவனும் ஒன்று என்று சொல்லவருவது பெரிய முரண்நகை. ஏனெனில் இப்பாடல் மிக எள்ளல் தொணியுள்ள பாடல். ஒன்றுமே இல்லாத நாம் பெரிய பராக்கிரமசாலி என்று பேசிக்கொள்வது எவ்வளவு நகைப்பிற்குரியதோ அது போல்தான் திரிபுரம் எரித்ததும் என்று சொல்லிப் போகிறது திருவாய்மொழி.


மலைபோற் பொறுத்தாரும் தா அம், பணிவில்சீர்ச்
செல்விடைப்பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
தொல்புகழ் தந்தாரும் தாம்

என்பது பரிபாடல்.


எனவே திருவாய்மொழிக்கு கோனார் உரை எழுதமுடியாது. You ought to be by conviction a Vaishnavite. அது இல்லையெனில் நாம் பேசுவது, திருவாய்மொழி எனும் மெய்மைக்கு குந்தகம் செய்வதாய் அமையும்.

(இரண்டாம்) பாகம் முற்றிற்று..)


அவன் ஒருவனே பரம். அவனுக்கு ஒப்பாரும், மிக்காரும் இலர் எனும் உணர்வு உள்ளத்தில் தெளிவாய் பதிதல் வேண்டும். அதன் பின்னே திருவாய்மொழி தேனாய் இனிக்கும்.


கள்ள வேடத்தைக் கொண்டுபோய்” எனும் பாசுரத்தை விளக்கும் போது கம்பனின் அழகானதொரு பாடலை மேற்கோள் காட்டி இப்படி விளக்குகிறார் நம் திவாகர்:


“அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்”
என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பரகதி சென்று அடைவு அரிய பரிசே”


சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா, என வாதிப்பவர்களை முட்டாள்கள் என்று வர்ணிப்பதோடு மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட அறிவிலோருக்கு மோட்சகதி என்பது கிடைத்தற்கு அரியது என்கிறது இந்தப் பாடல் வரிகள். ஏன் கம்பர் இப்படி ஒரேயடியாக இவர்களைத் தூற்றவேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும், முழுமுதற்காரணம் ‘தெய்வம் தெளியாமை’ என்பதே.


ஆக, கம்பன் வாழ்ந்த காலத்திலேயே இந்த சர்ச்சை வந்துவிட்டது என்று தெரிகிறது. அன்று அவன் சொன்ன `தெய்வம் தெளியாமை` இன்றுவரை நீடிக்கிறது. வைணவநெறி கொண்டோருள்ளும் இது நீடிக்கிறது! சைவ நெறி கொண்டோருக்கும் இதே கதியே!


தெய்வம் தெளிதல் ஒரு கணக்குப் பாடம் போன்றது. 1=2=3 என்று கணக்குப் போடமுடியாது. 1+1=2 என்று கொள்ளலாம். இருப்பது ஒன்றுதான் என்று எல்லோருக்கும் தெரிகிறது. ஒன்றுதான் இருக்கிறது என்றால் பல ஏன் வந்தன? என்ற கேள்விக்கு விளக்கம் சொல்லணும். அந்த ஒன்று எதுவென்று பதில் சொல்லணும். எனவே, அரியும், சிவனும் ஒன்று என்று சொல்லிவிடக்கூடாது. அது தெளிவின்மை. ஒன்றுதான், ஏனென்றால் ’இப்படி’ என்று தெளிந்து கொள்ள வேண்டும். அப்படித்தெளியாதவருக்கு பரகதி கிடையாது என்று கம்பன் சொல்லிவிட்டான் :-)


இதற்கான அத்தனை விளக்கமும் திருவாய்மொழியில் உள்ளது. திவாகரே அப்பாசுரங்களை மேற்கோள் காட்டுகிறார். அதற்குள் போனால் நீளும். ஆனால் கம்பனும் நம்மாழ்வாரும் தரும் எளிய உதாரணங்களை மட்டும் இங்கு காட்டுவோம்.


இவன் ஒரே ஆளாக சும்மா இருந்திருக்கலாம். ஆனால், `நானே பலவாக மாறுக!` என்று சங்கல்பித்துக் கொண்டான். பல வந்தவுடனேயே குழப்பம் வந்துவிடுகிறது. எல்லாம் எங்கேயிருந்து வந்தோம் என்று தெரியாமல் அலையத் தொடங்குகின்றன. ஒரு நிலையில் எல்லாம் சுயம்பு என்று எண்ணத்தொடங்குகின்றன. தனக்கு எல்லாப் பராக்கிரமும் உண்டு என்று எண்ணத்தொடங்குகின்றன. சிங்கத்தின் கம்பீரமும், யானையின் பலமும், மானின் நளினமும் தானாக வந்துவிடவில்லை. எங்கோ அந்த வலிமை இருந்திருக்க வேண்டும். அந்த பலம், அந்த நளினம். அதன் சாயலாக இங்கு இதை நாம் காணலாம். ஆனால் யானைக்கு இது எப்படித தெரியப்போகிறது? :-) தான் பலசாலி என்றுதான் அது நினைத்துக்கொள்ளும். முதலை காலைப்பிடிக்கும்வரை!! அப்போதும், அது சும்மா பிளிறியிருக்கலாம். `ஆதிமூலமே!` என்று பிளிறிவிடுகிறது. இதைக் கேட்டவுடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடிவிடுகிறார்கள். யார் அந்த `ஆதிமூலம்` என்று கண்டறிய!! இதில் சிவனும், பிரம்மனும் சேர்த்தி. அப்போதுதான் அந்தக் கருட வாகன வைபவம் நடக்கிறது.


இவன் ஏன் இப்படி இதை மறைத்து வைக்கணும்? மூவரை உருவாக்கினானே, அவர்களைக் கூலி ஆள் போல் உருவாக்கியிருந்தால் பிரச்சனை வந்திருக்காது. 1+1+1 = மூன்று என்று காட்டுகிறான். அப்படிக்காட்டும் அந்தக் கணக்கில் ஒன்றான தானும் கலந்து கொள்கிறான். அது மறைவாக உள்ளது. இதைத் தெளிதல்தான் தெய்வம் தெளிதல். இவனே மூவருள்ளும் உட்காருவதால் யார் உசத்தி என்ற கேள்வி வந்துவிடுகிறது. இதைக் `கள்ளத்தனம்` என்று சொல்லாமல் எப்படிப் புரிந்து கொள்வது? இவனே விஷ்ணுவாக இருக்கிறான், பிரம்மனாக, சிவனாக. எல்லாம் கள்ளவேடம்!! இறைவனைக் `கள்ளன்` என்று சொல்லும் ஒரே மதம் இந்து சநாதனமாகத்தான் இருக்கும்! வேறு எப்படியும் இந்தக் கணக்கை விளங்கிக்கொள்ளமுடியாது. சரி, ஏண்டா இப்படிச் செஞ்சே? அப்படிண்ணு கேட்டா!


சும்மாக்காச்சுக்கும்!” என்று பதில் வருகிறது! இது என்ன விளையாட்டு? ஆகா! “அலகிலா விளையாட்டு உடையான். அவன் தலைவன். அவன் சரண் நாங்களே!” பாருங்க இதிலேயும், பிரபஞ்ச சிருஷ்டியை `விளையாட்டு` என்று புரிந்து கொள்ளும் ஒரே சமயம் நம் சமயமாகத்தான் இருக்க முடியும்? மற்றவர்களிடம் சொன்னால் மிரண்டு போகிறார்கள்! என்ன? இறைவன் திருடனா? இறைவன் விளையாடுகிறானா? என்று!! திருவாய்மொழியில் மட்டும் ”கள்ள” என்ற சொல் எத்தனைமுறை பயன்பட்டிருக்கிறது என்று யாராவது கணக்குப் போட்டுப் பார்க்கலாம் :-))


ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெருநாடு காண இம்மையிலே பிச்சைதான் கொள்வர்
திருநாராணன் தாள் காலம் பெறச் சிந்துத்துய்ம்மினோ!


என்ற பாசுரத்திற்கு வருவோம். எல்லாத் தமிழ் சமயங்களும், தெய்வம் தொழுதலை முன்வைக்கின்றன. ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது தமிழ் மொழி. அதனால்தான் நாஸ்திக மதங்களான சமணமும், பௌத்தமும் கூடக் கோயிலைக் கட்டி வைத்தன. இல்லையெனில் அவற்றின் இருப்பிற்கே இடம் இல்லாமல் போயிருக்கும். தினம் கோயிலுக்குப் போவது நல்லொழுக்கம். அதுவும் இளமையிலேயே போய்விடுதல் நலம். இக்கருத்தை பல்வேறு வகையில் நாம் சொல்கிறோம். அதிலொன்று ஆக்கை நிலையாமை. நாம் எப்போது சாவோம் என்பது தெரியாத நிலையில், இருக்கும் போதே, ‘கிருஷ்ணா, ராமா, கோவிந்தா!’ என்று சொல்லிப்பழக வேண்டும். அடுத்து செல்வம் நிலையாமை. இப்பாசுரம் பற்றி முன்னம் மின்தமிழில் பேசியிருக்கிறோம். ‘நாயகம்’ என்ற சொல்லாட்சி குறித்து. நம்மாழ்வாருக்கு நகையுணர்வு இல்லை என்று சொல்லிவிடமுடியாது!


இப்பாடலில் வரும் கதையைப் பாருங்கள். இவன் எல்லோருக்கும் நடுநாயகமாய், அரசனாய் கம்பீரமாக வீற்றிருக்கிறான். பாவம்! இவன் போதாத காலம். செல்வம், புகழ் எல்லாம் போய் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிடுகிறான். வயிறு பசிக்கிறது. சாப்பிட வேண்டுமே! பிச்சைதான் ஒரே வழி. ஆனால் முன்பு இராஜாவாக இருந்தவன் பிச்சை எடுத்தால் ஊர் சிரிக்காதா? அதனால் இரவில், முகம் தெரியாமல் பிச்சை எடுக்கிறான். இரவு நேரம். கருநாய் கிடக்கிறது. குட்டிக்கு பாலூட்டிய வண்ணம். இவன் கால் அதன் வாலில் பட, வெறியுடன் இவன் காலைக் கடித்துவிடுகிறது. ஒரு காலத்தில் கணையாழி பூண்ட கால் இன்று கருநாய் கவர்ந்த காலாக நிற்கிறது! எனவே, மக்கா! புத்தியுள்ள போதே, ‘நாராயணா!’ என்று சொல்லிப்பழகு. அவன் கோயிலுக்கு போய் பழகு என்பது பாடற்பொருள். என்னமாய் சொல்கிறார் கதை! இம்மாதிரிக் கதைகள் சொல்லி பயமுறுத்துவது வழக்கம்தானே! எனவே இதற்கு உதாரணம் கொடுக்கும் போது


திவாகர் ,இன்னும் effective வாக சரித்திர, புராணங்களிலிருந்து drasticஆன கதைகளைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அரச பதவியில் இருக்கும் போதே இதை உணர்ந்து ஏழ்மையை வரிந்து ஏற்றுக்கொண்ட அசோகன், இராஜராஜன் என்று இரண்டு கதைகளைச் சொல்கிறார். அது அவ்வளவாகப் பொருந்தவில்லை. ஏனெனில் போரின் வன்முறை கண்டு உள்ளம் திருந்தியவன் அசோகன். நன்றாக `இராஜ இராஜனாக` வாழ்ந்துவிட்டு கடைசியாக சிவபாத சேகரனாக மாறியவன் இராஜராஜன். ஆனால் நம்மாழ்வார் பேசும் கரிகாலர்கள் (கருநாய் கவர்ந்த காலர்) இவர்கள் இல்லை!!


அதே போல்,

உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும்
உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும்,
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,
உற்றார்களுக் குற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?,
உற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன்யான்
உற்றென் னுடைப்பே தையுரைக் கின்றனவே?


என்ற பாசுரத்திற்கும் விளக்கம் சரியாக அமையவில்லை. இதற்கு வியாக்கியானம் சொல்லும் போது, வியந்து, ‘இவளென்ன புது கீதை சொல்கிறாள்!’ என்று பேசுவார் பரனூர் அண்ணா! ஆம! இதுவொரு அத்வைத அனுபவம். இந்தப்பத்து முழுவதுமே அப்படியானதொரு ஞானநிலை!

அடுத்து,


அகலில் அகலும் அணுகில் அணுகும்
பகலும் அரியன் பொருவல்லான் எம்மான்
நிகரில் அவன்புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே


எனும் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லும் போது, திவாகர் சொல்லுவார், ”யார் கூப்பிட்டாலும் ஓடிச் சென்று உதவ ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். ஆனால் சமதர்மம் அறியாத மனிதர்கள் இதைச் சரியாகப் புரிந்துகொள்வது இல்லை. புரிந்தவரிடம் ஆண்டவனே அணுகி அவரிடம் அன்பைப் பெற்று அந்த அன்புக்கு ஈடாக இன்னமும் உயர்ந்த செல்வங்களைத் திருப்பித் தருகிறான். புரியாதவர்களிடமும் அவன் செல்கிறான். ஆனால் அவர்களோ இவனை வேண்டாமெனும்போது அவன் என்ன செய்ய.. அவர்களிடமிருந்து, அவர்கள் கேட்டுக் கொண்டபடி விலகுவதைத் தவிர..” என்று சொல்கிறார்.


ஒருவகையில் இப்படிச் சொல்வது பொருத்தமாய் இருந்தாலும், அச்சமயத்திலும் இவன் விலகி இருப்பதில்லை என்பதே உண்மை. அவனது சகல இயக்கத்திலும் இவன் காரணப்பொருளாய் உள்ளேதான் நிற்கிறான். எனவே விலகுவது அவனல்ல. நம் மனதுதான். அதனால்தான் நம்மாழ்வார் கடைசி வரிகளில், “ஒப்பு இல்லாதவனாய் இருக்கின்ற இறைவனுடைய புகழ்களில், பகலும் இரவும் படிந்து குடைந்து, அவற்றைப் பாடிக்கொண்டு, பிரிவு இன்றியே இருப்போம்’ என்று முடிக்கிறார்.

அதே போல்,


மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை யிலங்கை அரண்காய்ந்த மாயவனே
உன்னுடைய சுண்டாயம் நானறிவேன்,, இனி அதுகொண்டு செய்வதென்
என்னுடைய பந்தும் சுழலும் தந்துபோகு நம்பீ!


எனும் பாசுரத்தைச் சொல்ல வரும்போது வைணவத்தின் அடிநாதமாகிய ‘கூடியிருந்து குள்ளக்குளிர மகிழ்தலை’ சொல்லியிருக்கலாம். இது களவியல் பாடல்தான். ஆனால், நாயகியிடமிருந்து பிரிக்கும் மற்ற பெண்களை எப்படி அழைக்கிறாள் பாராங்குச நாயகி என்பதைக்கவனிக்க வேண்டும். “மின்னிடை மடவார்! என்கிறாள்.


சக்களத்தியை யாராவது புகழ்வார்களா? இன்னொரு பாசுரத்தில், பூதணையைச் சொல்லும் போது கூட மிக அழகாகவே வருணிப்பார் நம்மாழ்வார். இதைப் பரனூர் பெரியவர் கிண்டலடிப்பார். பூதணைக்கு, இது அவசியமா என்று :-)) ஆனால், வைஷ்ணவத்தில்தான் பகைவன் என்பதே கிடையாதே! பிரகலாதனுக்கு, பலிச்சக்கிரவர்த்திக்கு, பரீக்ஷத்திற்கு, விபீஷணனுக்கு கிடைத்த பேறு தேவர்களுக்குக் கூட கிடைக்கவில்லையே! எனவே, களவியல் பாடல் என்றாலும் உள்ளே ஓடுவது ஆத்ம பந்தமே! இல்லையெனில், அப்பெண்கள் உன்னைக் கடத்திக்கொண்டு ஓடிவிட்டனர் என்று சொல்லாமல், “நின்னருள் சூடுவார்” என்கிறாள் நாயகி. இதனால்தான், ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கு பொது சொந்தமன்றோ, ஏனோ ராதா? இந்தப் பொறாமை?’ எனும் பாடல் வைஷ்ணவநெறி அறியாதவர் பாமரத்தனமாக எழுதிய பாடல் என்பது புலனாகும். இராதைக்கு பொறாமை என்ற குணமே கிடையாது. தன்னைப் பின்னையாகப் பார்க்கும் நம்மாழ்வாருக்கும் அக்குணம் கிடையாது. அதனால்தான் நம்மாழ்வாரை, ‘பிரபந்ந கூடஸ்தர்’ என்று புகழ்ந்து போற்றுகிறது தமிழ் உலகம்.

அதே போல்,


நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க
எண்ணாராத் துயர் விளக்கும் இவையென்ன உலகியற்கை
கண்ணாளா! கடல் கடைந்தாய்! உன் கழற்கே வரும் பரிசு
தண்ணாவா தடியேனை பணிகண்டாய் சாமாறே..


என்ற பாசுரத்திற்கு குந்தியின் அற்புதமான கதையை கொண்டு வந்து இணைத்திருக்கிறார். குந்தியின் கதையை இராஜாஜி போலவே மிக அழகாக திவாகர் சொல்லியிருந்தாலும், நம்மாழ்வாரின் இப்பாசுரத்தில் வரும் தொணிக்கு பொருந்தாமல் நிற்கிறது அந்த உதாரணம். நம்மாழ்வார் இப்பாடலில் உலக மாந்தரின் பகடித்தனத்தை, போலியை, ஆஷாடபூதியைக் கண்டு வெறுத்துப்பாடுகிறார். இப்படிப்பட்ட, ‘கெட்ட பயல்கள்’ உள்ள உலகில் என் ஒரே பற்றுக்கோல் நீ என்பதே அவரின் தொணி. எனவே திவாகர் இதற்கேற்றார் போல் வேறொரு உதாரணம் அளித்திருக்கலாம்.


இவர் ஏனோ, ‘பகவான், பகவான்’ என்கிறார். இவையெல்லாம் கோவிந்தனைப் பொறுத்தவரை ‘சிறு பெயர்கள்’. வாயார, ‘கிருஷ்ணா! கோவிந்தா; மாதவா! மதுசூதனா! என்று இவர் இன்னும் சொல்லிப்பழக வேண்டும் :-))


நான் சுட்டிக்காட்டியவையெல்லாம் வைஷ்ணவ nuances.

திவாகருக்கு இறையருளால் நல்ல பல வைஷ்ணவத்தொடர்புகள் கிட்டியிருக்கின்றன. இராஜாயின் மாணாக்கராக இருப்பது சுலபமா? இல்லை சம்பத் போன்ற பெரியோரின் தோழமை கிடைப்பது சுலபமா? வேங்கடவனை நினைத்தால் போய் சேவிக்கிறார்.
ஆந்திராவின் வைஷ்ணவப்பெரியோர்களுடன் எப்போதும் இருக்கிறார். எனவே இன்னும் கொஞ்சம் முயன்றால் அவருக்கே உரித்தான வைஷ்ணவ பொக்கிஷம் கிட்டும்.


இவ்வளவும் ஒரு உரிமையில் சொன்னேன்! அவர் செய்திருக்கும் செயல் மிக அரிய செயல். நம்மாழ்வாரிடம் நம்மைக் கூட்டிக் கொண்டு போகிறார். நம்மாழ்வார் யார்? வைஷ்ணவர்களின் ”முதல் தாய்”. ஏன் ஒரு ஆண் மகனைத் தாய் என வேண்டும்?


அவன் வெறும் ஆண் மகன் அல்லன். அவன் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மூத்த ஆச்சார்யன். தாய் என்ன செய்கிறாள்? ஒரு குழந்தைக்கு அவனின்/அவளின் தகப்பன் யார் என்று காட்டுகிறாள். `தாய் நிச்சயம், தந்தை நம்பிக்கை` என்று சொல்லும் ஒரு ஆங்கிலப்பழமொழி. எனவே நமக்கு தந்தை யாரென்று காட்டும் தாய் போன்றவர் ஆச்சார்யன். உலகின் முதல், ஒரே தந்தை ஸ்ரீமந் நாராயணனே! அவனைக் காட்டிக்கொடுப்பதால் நம்மாழ்வார் நம் தாய் ஆகிறார். அந்தத் தாயிடம் அனாதைகளாய் திரிகின்ற பாமர ஜனங்களை அழைத்துச் செல்கிறார் திவாகர். இது எவ்வளவு பரோபகாரமான செயல்!


திருவாய்மொழி மெய்மை சக்தி பீடம். அதனருகில் இட்டுச் சென்றால் போதும் அது தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும். அந்த அளவில் திவாகர் நம் எல்லோரையும் திருவாய்மொழி எனும் சக்தி பீடத்திற்கு அழைத்துச் செல்லும் கருணையைப் பாராட்டுவோம்.


இந்நூலின் மற்றொரு வெளியீடு வரும் போது நான் கூறிய கருத்துக்களுக்கு செவிமடுத்தால் நான் மகிழ்வேன். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்தில் நம்மாழ்வார் யார்? தமிழ் வளர்ச்சியில், ஆன்மீக நெறியில் அவரின் பங்களிப்பு என்ன? ஒட்டுமொத்த இந்திய பண்பாட்டுச் செறிவில் அவரின் பங்களிப்பு என்ன என்பது போன்ற பொது விஷயங்களைச் சொல்லியிருக்கலாம். திரு.ஸ்ம்பத் நல்லதொரு முன்னுரை கொடுத்து இருந்தாலும், `பாமரனுக்குப் போகும் நூலில்` இத்தகவல் மிகவும் அவசியம்!


எங்கோ கிடக்கும் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி எனக்கு இந்த நல்ல நூலைஅனுப்பி வாசிக்க வைத்து, இதை விமர்சிக்கும் முழு சுதந்திரத்தையும் தரும் திவாகர் என் உள்ளத்திற்கு உவப்பானவர். தமிழ் எழுத்துலகில் மிக அரிதாகக்காணக்கூடிய ஒரு நல்ல பழக்கத்தை திவாகர் முன்னோடியாய் செய்கிறார். அதுஅவர் நூலுக்கு வரும் விமர்சனம் அது எத்தகையதாய் இருந்தாலும் அதனைஉவப்புடன் ஏற்றுக்கொண்டு தனது வலைப்பதிவில் போடுகிறார். எனதுவிமர்சனங்கள் கொஞ்சம் காரமாகவே இருப்பதை நான் உணர்கிறேன். அது என்பிழையன்று. தமிழ் மரபில் தெய்வம் என்பதையும், கற்பு நெறியையும் ஒன்றாகக்கலந்து வைத்திருப்பதுதான். நமக்கு ஒரே புருஷன் அந்தப் பரந்தாமன் தான்.அவனைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிடில் ஒரு ஆதங்கத்தில் அப்படி எழுதிவிடுகிறேன். ஆனால் உள்ளத்தில் நான் என்றும் யார் மீதும் வன்மம் வைத்ததில்லை. திவாகர் போன்ற பாகவதர் மீது எனக்கேன் கோபம் வரப்போகிறது!


“பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழிதரக் கண்டோம்”.



மிக்க அன்புடன்
நா.கண்ணன்.

தேதி - 15 - 03 - 2011.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 15 மார்ச் 2011, 12:20 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,782 முறைகள் அணுகப்பட்டது.