நவராத்திரி நாயகியர் 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
நவராத்திரி நாயகியர் 3-ம் பதிவில் கண்ட அவதாரங்களைத் தவிரவும் அம்பிகை தேவர்களின் நலன் காக்கவேண்டிப் பல அவதாரங்களை எடுத்திருக்கிறாள். அதில் மஹாவிஷ்ணுவின் யோக நித்திரையான மஹாமாயையாக அவதரித்து, மது கைடபர்கள் வதம் செய்ய மஹாவிஷ்ணுவிற்கு உதவியது,
தேவி.jpg
மஹிஷாசுரனை வதைக்க சகல தேவர்களின் சக்தியிலிருந்து தோன்றிய மஹிஷாசுர மர்த்தினி,சும்ப, நிசும்பர்களை கெளசிகீயாகத் தோன்றி வதைத்தது, சண்ட, முண்டர்களை வதைத்த சண்டிகா என எடுத்த அவதாரங்கள் தவிரவும், மூல ஸ்வரூபமாகவும், முக்கிய ஸ்வரூபமாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் தோன்றி ஆதி பராசக்தியான அவளிலிருந்து சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவும், ஸ்திதிகர்த்தாவான விஷ்ணுவும், சம்ஹார கர்த்தாவான ருத்ரனும் தோன்றியது, சரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி போன்றவர்களையும் தோற்றுவித்ததும், அம்பிகை ஒருத்தியே மஹாமாயையாகவும், மஹா காளியாகவும், மஹாமாரியாகவும், க்ஷுதா (பசி)ரூபமாகவும், நித்ரா ரூபமாகவும், த்ருஷ்ணா(ஆசை) வடிவாகவும், ஏகவீரா(எவராலும் வெல்லமுடியாத வீரியம் கொண்டவள்) இருப்பதும் வியாசரால் ஜனமேஜயனுக்குச் சொல்லப் பட்டது. தேவர்கள் தங்கள் சக்தியை எல்லாம் தேவிக்குக் கொடுத்து அசுர குலத்தை அழிக்கச் செய்துவிட்டுத் தாங்கள் பொம்மை போல் இருந்த காரணத்தால் நவராத்திரியில் மண்ணாலாகிய பொம்மைகளை வைத்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டதாய்ச் சொல்லுவார்கள்.



இந்த உலகைப் படைத்தவளே பராசக்தி. அவள் ஒவ்வொரு உயிரிலும் சக்தியாகக் கொலு வீற்றிருக்கிறாள். என்றாலும் இவ்வுலகைப் படைத்த அம்பிகை ஒவ்வொரு ஜீவராசியையும் எவ்வாறு படிப்படியாகப் பரிணாம வளர்ச்சியடைய வைத்தாள் என்பதை இந்த பொம்மைக் கொலு நமக்குச் சுட்டிக் காட்டும். கொலு வைப்பதன் முக்கிய தத்துவமும் அதுவே. அழகுக்காகக் குளம், பார்க் என்று கட்டி
கொலு.jpg
மணலைப் பரப்பினாலும் உண்மையில் உலகைப்படைக்கையில் முதலில் தோன்றியது நீரும், மணலும் அல்லவா? ஆகவே தரையில் குளங்கள், மலைகள், மணற்பாங்கான நிலங்கள், செடி, கொடிகள் என வைத்து அவற்றில் ஓரறிவுள்ள ஜீவராசிகளின் பொம்மைகளை வைக்கிறோம். ஒரு சிலர் கீழிருந்து ஆரம்பிக்கும் முதல்படியிலும் வைப்பார்கள். இரண்டாவது படியில் இரண்டறிவுள்ள உயிரினங்களான ஊர்ந்து செல்லும் நத்தை, பாம்பு, சங்கு, அட்டை, பூரான் போன்றவையும், 3-வது படியில் மூன்றறிவுள்ள உயிரினங்களான எறும்பு, கரையான் போன்றவையும், நான்காம் படியில் நான்கறிவுள்ள வண்டு, பறவைகள் போன்றவையும், ஐந்தாம்படியில் ஐந்தறிவுள்ள நாய், பசு, சிங்கம், புலி, மான் போன்றவைகளும் மற்றக் காட்டுமிருகங்களின் பொம்மைகளும் வைக்கலாம். ஆறாம்படியில் ஆதிமனிதனைச் சுட்டும் வகையில் குறவன் குறத்தி, பாம்புப் பிடாரன், ஜிப்ஸிக்கள், வாத்திய கோஷ்டி போன்றவை இடம்பெறவேண்டும். கல்யாணங்கள் நடக்கும் விதத்தைச் சுட்டும் பொம்மைகள், பாரம்பரிய உடைகள் அணிந்த பெண்கள், ஆண்கள் போன்றவர்களையும் வைக்கலாம். அதற்கும் மேல் தங்கள் ஞாநத்தால் சித்தியடைந்த மஹான்களான ரமணர், ஷிர்டி பாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகாநந்தர், புத்தர், ராகவேந்திரர், ஆதிசங்கரர், மாத்வாசாரியார், ராமானுஜர் போன்ற மஹான்களின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.
அதற்கடுத்து வரும் எட்டாவது படியில் பரம்பொருளின் மனித அவதாரங்களைச் சுட்டும் பொம்மைகள், முக்கியமாய் மஹாவிஷ்ணுவின் தசாவதார பொம்மைகள், வெங்கடாசலபதி, பிள்ளையார், ஈசன், முருகன், சோமாஸ்கந்தர், வள்ளி, தெய்வானையுடன் முருகன் போன்ற பொம்மைகள் இடம்பெறும்.
பொம்மை.jpg
ஒன்பதாம் படிதான் கடைசிப்படி, சஹஸ்ராரத்தைச் சுட்டும் விதமாய் அங்கே அம்பிகையின் திருவுருவம், அவளின் அவதாரங்களைச் சுட்டும் பொம்மைகள், கொலுவிற்கு வைக்கும் பூரணகும்பத்துடன் கூடிய கலசம் போன்றவை வைக்கவேண்டும். நாம் நம் வாழ்க்கையில் எவ்வாறு எதுவும் அறியாத ஓரறிவுள்ள ஜீவராசியாகப் பிறந்து இன்று மனிதர்களாக ஆகியிருக்கிறோம் என்பதை நினைவு கூர்வதோடு கடைசியில் நாம் ஐக்கியமாகவேண்டியது பராசக்தியிடமே என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாய்க் கொலு வைக்கப் படுகிறது. கொலு வைத்ததோடு வேலை முடிந்தும் விடாது. தினமும் பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பெண்குழந்தையை அழைத்து அம்பிகையாகப் பாவித்து பூஜை செய்து, குழந்தைக்குப் பிடித்த நிவேதனம் செய்து கொடுத்து, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, துணிவகைகள்(இயன்றவர்கள்) கொடுத்து உபசரிக்க வேண்டும். தினம் மாலையில் சுண்டல் நிவேதனம் செய்து அக்கம்பக்கம் உள்ள சுமங்கலிப் பெண்கள், மற்றப் பெண்கள், குழந்தைகளைக் கூப்பிட்டு வெற்றிலை, பாக்கோடு வைத்துக் கொடுக்கவேண்டும். இனி முதல் நாளில் இருந்து கொலுவின் கடைசி நாள் வரை பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளையும் செய்ய வேண்டிய நிவேதனங்களையும், நிவேதனங்களின் செய்முறைகளையும் காணலாம்.
--Geetha Sambasivam 08:44, 23 நவம்பர் 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=நவராத்திரி_நாயகியர்_4&oldid=3338" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 23 நவம்பர் 2010, 08:44 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,070 முறைகள் அணுகப்பட்டது.