நவரத்தின மாலை - பகுதி - 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அன்பே சிவமாம் அமர்ந்திருப்போரே’


நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்
தேனாயின் னமுதமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாருமுயிற் வாழ்க்கை ஒறுட்தன்றே வெறுந்திடவே

மணிவாசகர்.

உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி
அடியேன் நடுவுன் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்தும்
முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.

திருத் தொண்டீசுவரர் கோவிலின் கோபுரம் மிகச் சிறியதாக இருந்த காரணத்தினால் அதனை எடுத்து விட்டு பெரிய கோபுரமாக கட்டி குடமுழுக்குச் செய்யும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள், அக்கோபுரத்தின் அடியில் ‘விண்மறைக்கும் கோபுரம் வீதி மறைக்கும் ஆலயம் ‘ என்று எழுதி வைத்துப் பூரிப்படைவார்களாம். 1960 இல் இந்த கோபுரத் திருப்பணியும், குடமுழுக்கும் நடத்தப்பட்டுள்ளது. இதன் இடையில் பலப்பல திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி இரதம் செய்யும் பணியையும் நிறைவடையச் செய்துள்ளார்கள். ஐயாவிடம் ஒரு வழக்கம் இருந்தது. எந்தப்பணியை மேற்கொண்டாலும், விடாப்பிடியாக அக்காரியம் அழகுற முடியும் வரை நோன்பு எடுத்துக் கொண்டு, எடுத்த காரியம் நிறைவு பெரும் வரை, முடி வெட்டிக் கொள்ளாமல், சவரம் செய்து கொள்ளாமல், துறவுக் கோலம் பூண்டு விடுவார்கள். அந்த வகையில் தன் வாழ்நாள் முழுவதையுமே, இதே துறவுக் கோலத்தில் கழித்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. திருத்தொண்டீசுவர பெருமானின் குடமுழுக்கு திருப்பணி முடிந்தவுடன், 15/02/1960ல் திருக்கூட்டத்துடன் நடைப்பயணமாக திருவாரூர் சென்று பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டு அங்கு தன் விரதத்தை முடித்து முடி காணிக்கையும் கொடுத்தார்களாம்.


பத்தாம் நூற்றாண்டு சுதைத் திருப்பணி செய்யப்பட்ட ஈரோட்டின் நடுமையத்திலுள்ள இடத்தில் அமைந்திருக்கும் மகிமாலீசுவரர் சுவாமி திருக்கோவிலை, அப்பர் சுவாமி மடம், இராமலிங்க சுவாமிகள் மடம் என்றுதான் கூறுவார்களே தவிர, மகிமாலீசுவரர் கோவில் என்றே கூறுவார் இலர். அக்கோவிலை ஐயா தன் பெரும் முயற்சியால், சிறு சிறு திருப்பணியாகச் செய்து, வழிபாடுகளும் தொடங்கி, பிறகு இராஜ கோபுரமும் கட்டுவித்து, குடமுழுக்காட்டி சீரும்,சிறப்புமாக இருக்கும் மாமல்லேசுவரர் கோவில் தொண்டர் சீர் பரவுவார் சின்னமாக விளங்குவதாக அன்பர்கள் சொல்லுகின்றனர்.கம்பீரமாக வீற்றிருக்கும் மகிமாலீசுவரர் அறிவுருவத்த்திருமேனி லிங்கத்தின் பீடம் பழுதடைந்திருந்ததை மாற்றி, பன்னிரு ஜோதிலிங்கம், பஞ்ச பூதங்களை இத்திருக்கோவிலிலேயே நிறுவி பெருமைக்குப் பெருமை சேர்த்தார்கள்.பல சிவாலயங்கள் ஐயா தங்கவேலனாரால் திருப்பணி செய்யப்பட்டு அருள் வழங்கும் ஆலயங்களாக அமைந்தன.


ஆன்மீக வாழ்வு ஒன்றே துன்பம் துடைத்து இன்பம் பெருக்கும் என்ற ஏந்திள கொள்கையால் நாளும் மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு, திருமுறைத் திரட்டு, தமிழ் வழிபாட்டு நூல், தமிழில் திருமணம் செய்யும் முறை, தமிழ்நாட்டு வைப்புத்தலங்கள், பன்னிரு சோதிலிங்கம்,புனிதவதியார் போன்ற பல புத்தகங்கள் எழுதி உள்ளார். திருநாவுக்கரசர் மீது மாறாத பேரன்பு கொண்டவர், அவரைப் போலவே உழவாரப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பெரும்பாலும் தமிழ்நாட்டின் அனைத்துப் பாடல்பெற்ற தலங்களிலும் உழவாரப்பணிகள் மேற்கொண்டுள்ளார்கள். அண்டை மாநிலத்திலும் பல கோவில்களில் தம் உழவாரப்பணிகளைச் செய்துள்ளார்கள்.


தமிழ் வாழ, தமிழ் வளரத் தன்னுடைய ஆயுள் முழுவதையும் அர்ப்பணித்தவர் என்றால் அது மிகையாகாது. வழிபாட்டில் மனம் ஒன்ற, தாய்மொழியில் பெருமானை எத்தல் இன்றியமையாதது என்ற கொள்கையில் வேரூன்றி அதில் வெற்றியும் கண்டார். மாற்று மொழியில் வழிபாடு செய்வது ஒரு சடங்காக முடியுமே தவிர உள்ளம் கசிந்துருக வாய்ப்பில்லை என்று மெய்ப்பித்தார்கள். அதன் பயனாக விளைந்ததுதான் சிவவழிபாடு. அந்நாளில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திருவாளர் எம்.பக்தவச்சலம் அவர்களிடம் எடுத்துக் கூறி வாதிட்டு , அரசு ஒத்துக் கொள்ளச் செய்தார்.


முதன் முதலாக தமிழ் அர்ச்சனை பேரூர் திருக்கோவிலிலும், பின்னர் மதுரை ஆல்வாய் அண்ணல் திருக்கோவிலிலும் அரசின் இசைவோடு நடந்தது. ஈரோட்டில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அனைத்து ஆலயங்களிலும் இன்று வரை தமிழ் அர்ச்சனை ந்டந்து வருகிறது. அரசே முன்வந்து சட்டமாக்கியது பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது.தமிழ் வழிபாட்டு நூல், இந்தியா மட்டுமன்றி இலங்கை, மலேயா முதலிய இடங்களிலும் சிறப்பாக மக்களிடையே பரவி பெருத்த ஆதரவும் உண்டாயிற்று.


சிவதீக்கை, சிறப்பு தீக்கை, நிர்வான தீக்கை, ஆச்சார்ய அபிசேகம் முதலியனவும், எளிமைப்படுத்தினார்.தீக்கைப் பெறுவதற்கு வடமொழியில் சொல்லி இடர்படுவது மட்டுமின்றி, பணச்செலவும் ஆவதை அறிந்து சாதாரண மக்களும் அந்நெறி பெற வழிவகுத்தார். முறையான சிவ பூசை செய்யும் அன்பர்கள், பிறருக்கு சமய தீக்கை வைக்கலாம் என்ற நெறி வகுத்து, சிவநெறியைப் பரவலாக்கினார்.


சமயக் கூட்டங்களும், மாநாடுகளும், அடிக்கடி தவறாது நடத்தி வந்ததோடு,சமய வகுப்புக்களும் நடத்தி வந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அன்பர்களைக் கூட்டி, திருமுறை, திருக்குறள், மற்றும் பிற இலக்கியங்களை 62 ஆண்டுகளுக்கும் மேலாக வகுப்புகள் நடத்தி வந்தது அவரது அளவற்ற தொண்டினைக் காட்டுவதாகும். 'மிண்டு மனத்தவர் போமின் : மெய்யடியார்கள் விரைந்து வம்மின்!’ என்று அடியார்களுக்கு அழைப்பு கொடுத்த வண்ணம் இருப்பவர். சிவ சிந்தனை இல்லா அன்பர்களைக் கண்டு, ஈசனை நண்ணறியாமல் நழுவுகின்றாரே என்று வேதனைப் படுபவர்.


மருந்து ஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான் கண்படின்.


என்ற ஐயன் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தம் கல்வி அறிவு அனைத்தும் பிறர்க்குப் பயன்படும் வண்ணம் வாழ்ந்தவர் ஐயா திரு தங்கவேலனார் அவர்கள்.


திருப்பயணம் தொடரும்.








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:24, 9 ஜூலை 2011 (UTC)









பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=நவரத்தின_மாலை_-_பகுதி_-_3&oldid=7335" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 9 ஜூலை 2011, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,783 முறைகள் அணுகப்பட்டது.