நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! 17-A, தக்ஷிணாமூர்த்தி 2மரபு விக்கி இருந்துநமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!
ஞான தக்ஷிணாமூர்த்தி: நான்கு கரங்கள் கொண்ட இவரது பின் வலக்கையில் அட்ச மாலையும், பின் இடக்கரத்தில் தாமரை மலரும் விளங்கும். முன் வலக்கரம் சின் முத்திரை காட்ட இடக்கை அபயம் காட்டும். சில இடங்களில் தண்ட ஹஸ்தமாகவும் காணப்படும். மாயவரம் என்னும் மயிலாடுதுறைக் கோயிலிலும், சுநீந்திரம் கோயிலிலும் ஞான தக்ஷிணாமூர்த்தி வடிவத்தைக் காணலாம் என்று சொல்கின்றனர்.
யோக தக்ஷிணாமூர்த்தி: யோகக் கலையின் மூலமாகவே இறைவனை அடைதல், அந்தக் குறிக்கோளில் உறுதியாக நிற்பது போன்ற ஆற்றல் கிடைக்கிறது. அத்தகையதொரு ஆற்றலை யோக மார்க்கமே நமக்கு வழங்கும். யோகம் என்பது இங்கே வெறும் ஆசனங்களில் செய்யும் பயிற்சியைக் குறிப்பது அல்ல. உண்மையான யோகத்தை குரு மூலமாகவே செய்ய முடியும். அதற்கேற்ற மன ஆற்றலையும், உறுதியையும் நமக்குக் கிடைக்கச் செய்வதே இந்த தக்ஷிணாமூர்த்தியின் வடிவம் எனலாம். இந்த வடிவத்தில் யோகத்தின் ஆற்றலை விளக்கும் வடிவில் யோகப் பட்டையுடன் கூடிய ஸ்வஸ்திகாசனத்தில் தக்ஷிணாமூர்த்தி காட்சி கொடுப்பார். அட்சமாலையும், கமண்டலமும் பின்னிரு கரங்களில் காணப்படும். காஞ்சிபுரம், திருவொற்றியூர் போன்ற தலங்களில் யோக தக்ஷிணாமூர்த்தியின் வடிவைக் காணலாம். இவரே பிரம்மாவுக்கு அருளிச் செய்தார். ஆகவே பிரம்ம தக்ஷிணாமூர்த்தியும் இவரே என்றும் சொல்லப் படுகிறது.
வியாக்யான தக்ஷிணாமூர்த்தி: பெயரிலேயே அவரின் செயல் புரிந்துவிடுகிறது. சாத்திரங்களை விளக்குபவராக, ஆசானாக இமயமலையில் ஆலமரத்தின் கீழ் புலித்தோலாசனத்தில் அமர்ந்து இருப்பார் இவர். வலக்கால் கீழே தொங்கும். இடக்காலை மடித்து வலக்கால் தொடையின் அடியில் மடித்து வைத்திருப்பார். தொங்கும் வலக்காலின் கீழ் முயலகனைக் காணலாம். ஆலங்குடி என்னும் குரு பரிஹார க்ஷேத்திரத்தில் வியாக்யான தக்ஷிணாமூர்த்தியைத் தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது.
சித்ரம் வடதாரோர் மூலே வ்ருத்தா சிஷ்யா குரூர்யுவா! வீணாதர தக்ஷிணாமூர்த்தி: கைகளில் வீணை ஏந்தியவண்ணம் காட்சி அளிப்பார். ஈசன் சங்கீத ஸ்வரூபம். அவன் மீட்டுவது சாதாரண வீணை அல்ல. ஞாநவீணை. அதிலிருந்து எழும் கீதமும் ஞாநத்தை அளிக்கவல்லது. நமக்கு ஆத்ம ஞாநத்தை அளிக்கும் வல்லமை பெற்ற இனிய கீதத்தை ஈசன் இசைக்கிறான். முன் கரங்களிரண்டாலும் வீணையை மீட்டிக்கொண்டிருக்கும், ஈசனின் பின்னிரு கரங்அள் அக்ஷமாலையையும் நெருப்பையும் ஏந்திக் காட்சி அளிக்கின்றன. அமர்ந்த கோலத்திலேயும் காட்சி அளிப்பார், நின்ற வண்ணமும் காட்சி கொடுப்பார். முனிவர்கள் புடைசூழக் காட்சி தரும் இவரை வேதாரண்யம், திருப்புந்துருத்தி ஆகிய ஊர்களிலே காணலாம் என்று தெரியவருகிறது. இரண்டு ஊரும் பார்க்கலை இன்னமும். அதனால் நிச்சயமாய்த் தெரியவில்லை.
அடுத்தவர் சக்தி தக்ஷிணாமூர்த்தி: இவரை நாம் ஏற்கெனவே சுருட்டப்பள்ளியில் பார்த்திருக்கோம். அம்பிகையை அணைத்தவண்ணம் வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி அளிப்பார் இவர். திருமணப் பேறு வேண்டி இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் அங்கே செய்யப் படுகின்றன. மான், மழுவோடு, சின் முத்திரை திகழ, அன்னை ஈசனைத் தழுவிய வண்ணம் காட்சி கொடுக்கிறார்கள்.
மேதா தக்ஷிணாமூர்த்தி: ரிஷப வாஹனராய்க் காணப்படும் தக்ஷிணாமூர்த்தியை மேதா தக்ஷிணாமூர்த்தி எனத் தெரிந்து கொள்கிறோம். ரிஷபத்தின் மீது அமர்ந்த வண்ணம் ஞாந உபதேசம் செய்கிறார். ரிஷபம் தர்மத்தின் வடிவம். ஆகவே நமக்கு தர்மத்தையும், ஞாநத்தையும் உபதேசிக்கும் தக்ஷிணாமூர்த்தியோடு ரிஷபத்தையும் சேர்த்து வழிபடுவது நலம் பயக்கும்.
இவற்றைத் தவிர பசுபத சைவர்கள் வழிபடும் லகுளீசர் கூட தக்ஷிணாமூர்த்தி வடிவமே எனத் தெரிய வருகிறது. மதுரைக்கு அருகே அரிக்கம்பட்டு என்னும் ஊரில் லகுளீசர் சந்நிதி உள்ளது. திருவொற்றியூரிலும், திருவையாறிலும் சடையை எடுத்துக்கட்டியவண்ணக் காட்சி அளிப்பார். கரங்களில் சூலம், கபாலம், வலக்கரம் சின் முத்திரையோடும், இடக்கரம், தியான முத்திரையோடும் காட்சி அளிக்கும். திருவையாறுக் கோயிலில் பிராஹாரம் சுற்றும்போது ஈசன் சடை பரந்து விரிந்து இருப்பதால் அதைத் தாண்டிச் செல்லக் கூடாது என்பதால் பிராஹாரவலம் முதல் சுற்று ஆரம்பித்துப் பின்னர் திரும்பி வந்த வழியே வந்து அப்பிரதக்ஷிணமாய்ச் சென்று தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கவேண்டும்.
தக்ஷிணாமூர்த்தி தென்முகம் காட்டி அமர்ந்திருப்பதன் காரணம் தெரியுமா? பொதுவாய் வடக்கு வாழ வைக்கும் என்று சொல்வது உண்டு அல்லவா?? எந்த ஒரு நல்ல காரியத்தையும் தென்பக்கம் பார்த்துச் செய்யக் கூடாது என்றும் கூறுவார்கள். தென் திசை அழிவைக்குறிக்கும். ஆகவே அழிவைக்குறிக்கும் திசையை நோக்கி அமர்ந்திருக்கும் ஈசனின் திருவுருவைக் காண நாம் வாழ வைக்கும் வடதிசை நோக்கி அமர்வோம் அன்றோ?? நம் ஆன்மாக்கள் உய்வுறவேண்டி ஈசனே அங்ஙனம் அமர்ந்திருக்கிறார். இது தவிர த+க்ஷி+ணா என்பது நமது மும்மலங்களான ஆணவம்,கன்மம், மாயை ஆகியவற்றையும் குறிக்கும் என்றும் திரு நடராஜ தீக்ஷிதர் அவர்கள் தெரிவிக்கிறார். ஆணவன், கன்மம், மாயை அகல மோனத்தின் மூலம் ஞாநத்தை உணர்த்தியஞாநகுருவான தக்ஷிணாமூர்த்தியை வழிபடுதல் சிறப்பு என்றும் கூறுகிறார்.
ஒரு சமயம் பிரம்மாவிற்குப் படைப்பில் ஆர்வம் இல்லாமல் போக, நான்கு குமாரர்களைப் படைத்து அவர்களிடம் தன்பொறுப்பை ஒப்படைக்க எண்ணுகிறார் பிரம்மகுமாரர்களாகிய சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர் ஆகிய நால்வரும் பிறவி ஞாநம் பெற்றுத் திகழ்ந்தார்கள். பிரம்மா தன் மக்களிடம்பொறுப்பை ஒப்படைக்க எண்ணியபோது, நாரதருக்கு அதுகுறித்துத்தெரிய வந்தது. தன் சகோதரர்கள் பிரம்ம ஞாநத்தை அறிந்தவர்கள் என்பதும், தாங்கள் யார் என்ற ஞாநம் பெற்றவர்கள் என்பதும் தெரிந்ததால் நாரதர் சகோதரர்களை எச்சரிக்கிறார். அவர்களும் இம்மாதிரியான சிருஷ்டிப்பொறுப்பை ஏற்க மனமின்றித் தங்களுக்கேற்ற குருவை நாடி ஒவ்வொரு இடமாய்த் தேடிச்செல்கின்றனர். தங்கள் தந்தை சிருஷ்டியில் மூழ்கி இருப்பதும் அது குறித்த பிரச்னைகளையும் அறிந்த அவர்கள் தங்களால் அது இயலாது என்று வைகுண்டத்தில் மஹாவிஷ்ணுவை நாடிச் செல்கின்றனர். அவரோ அங்கு ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி உடனிருக்கப் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கக் காண்கின்றனர். ஆஹா, இவரும் குடும்பஸ்தராகவே இருக்கிறாரே என எண்ணிக்கொண்டு, கைலை நோக்கிச் செல்கின்றனர்.
சநத்குமாரர்கள் தன்னை நாடி வருவதைத் தெரிந்து கொண்ட ஈசன் இங்கேயும் தான் தன் மனைவியோடு இருப்பதை அறிந்துகொண்டால் சநத்குமாரர்கள் ஏமாந்து போய்விடுவார்கள் என்பதோடு அவர்களுக்கு முக்திக்கு வழியும் காட்ட முடியாது என்பதையும் புரிந்து கொண்டு, தான் ஒரு பதினாறு வயதுப்பால யோகியாக மாறி, மானசரோவர் ஏரியின் வடகரையில் ஒரு வடவிருட்சத்தின் கீழ் தென் முகம் நோக்கி அமர்கின்றார்.
கைலை வரும் வழியில் வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்த தவம் செய்யும் யோகியைக் கண்ட சநத்குமாரர்கள் இவரே தங்களுக்கு ஏற்ற குரு எனத் தெளிந்து அவரிடம் வந்து அமர்கின்றனர். பாலயோகியும் சீடர்களை வரவேற்கிறார். சநத்குமாரர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்க யோகியும் அதற்கேற்ற பதில்களைக் கொடுக்கிறார். இவர்கள் சந்தேகங்கள் மேன்மேலும் எழும்புகின்றன. யோகியும் அசராமல் பதில் கொடுக்கிறார். கடைசியில் இந்த சந்தேகங்களும், அவற்றுக்குப் பதில் கொடுப்பதும் ஒரு வருஷம் தொடர்ந்து நடைபெற்று வர, ஈசன் இனி இது ஒன்றே அனைத்திற்கும் ஒரே பதில் எனக் கூறுவது போல் சின்முத்திரை காட்டி நீடித்த மெளனத்தில் சமாதி நிலையில் அமர்கிறார். ஈசன் சமாதி நிலையில் அமர்ந்ததுமே சநத்குமாரர்கள் மனதிலும் இனம் காணா அமைதி, ஆநந்தம். ஈசனுடைய சமாதிநிலையின் சர்வத்துவம் அவர்களிடமும் வந்து அடைய அவர்களும் சச்சிதாநந்தப் பெரு வெள்ளத்தில் மூழ்கி அமைதி அடைகின்றனர். இதுவே சத்தியம், இதுவே நித்தியம், இதுவே அநந்தம் என்று தெளிவும் அடைகின்றனர்
--Geetha Sambasivam 07:56, 3 ஆகஸ்ட் 2011 (UTC) |

