நன்னியல் -1
அன்பர்களே
எனது எழுத்துகளில் இரண்டு வகையான நூற்கள் உண்டு- சிறுநூற்கள் என்றும் பெருநூற்கள் என்றும். பெருநூற்களாக நான் 90-களில் எழுதியவை அருட்குறள் திருநெறித் தெளிவு சிவஞான கற்பம் அழிவில் உண்மை போன்றவை யாகும். இவற்றிற்கு மூலமாக இருந்தவை 80-களில் நான் எழுதிய பல சிறு நூற்கள் - சித்தாந்தத் திருநெறி உயர்ஞானப் பனுவல் சித்தியல் போன்றவை. அவற்றில் ஒன்றே ‘நந்நியல்’ எனப்படும் ஒன்று, நந்நயம் என்றால் அழகானது இன்பத்தைத் தரவல்லது என்றெல்லாம் பொருள்படும்படியாக எழுதப்பட்ட சிறுநூல் இதுவாகும். அதனையும் அன்பர்கட்கு விருந்தாகப் படைப்பதில் மகிழ்ச்சி யடைகின்றேன்.
உலகன் எனும் முனைவர் கி, லோகநாதன் ( 30-3-12)
நந்நியல்
ஆக்கம்: முனைவர் கி. லோகநாதன் 1989
படலம் ஒன்று : நந்நயப் பொருள்
சூத்திரம் 1
நந்நய மனைத்தும் நந்திதன் வடிவு
அமலத்திரு அவன்தன் பாலே யாதலின்
விளக்கம்:
இச்சூத்திரம் நயப்பொருள் இலக்கணம் நவில்கின்றது. எல்லா நற்பண்புகட்கும் அழகிற்கும் சிறப்பிற்கும் ஆதார நிலனாக விளங்கும் நந்தியாகிய சிவபரம் பொருளே நயம் என்று நல்லோர் போற்றும் அனைத்திற்கும் மூலமாம் என்றது.
சூத்திரம் 2
நயப்பொருள் நல்கிடும் நற்கலை யாவுமே
விளக்கம்:
என்றும் அழியாக் கலைகள் உன்னதக் கலைகள். மேல்நோக்கிச் சிந்தனையைச் செலுத்தி நந்தி தன் தரிசனம் கிட்டுமாறு ஊக்கும் வன்மை உடைமையே நற்கலைகள் யாண்டும் போற்றப்படுவதற்குக் காரணம்
சூத்திரம் 3
பரநாத விந்துவின் பன்னிறத் தொழிலே
திறமியா வுந்தரும் செம்பொருட் டுணிவே
விளக்கம்:
சிவப்பரம் பொருள் பரநாதவிந்துக்களால் உலகினை செலுத்டுவதோடு உயிர்களின் அறிவையும் உணர்வையும் ஆக்குகின்றது அல்லது சமைக்கின்றது. இந்தத் தொழிற்பாடே ஆன்மாக்களுக்கு எல்லாத் திறமைகளையும் கொடுத்து அதன்வழி உன்னத கலைகள் போன்ற பற்பல சாதனங்கள் கண்டு அவற்றை இலக்கணப் பிழையின்றி பயின்று அதன் வழி மறைவாகவே நின்று செலுத்தி தமக்கு இந்த நற்பேற்றினை அருளுவது சிவப்பரம் பொருளின் துணிவுதான் வேறல்ல என்றுணர்வதே நந்நயப் பொருளறிவு
தொடரும்
நன்னியல்- 2
சூத்திரம் 4
உன்னதம் உத்தமம் உய்ர்வு ஒண்மை
நித்தியம் சத்தியம் நீமை நியாயம்
எனுமிவ் வெழிலெல் லாமேநந் நயம்
விளக்கம்:
நந்நயம் எனப்படும் பொருட்களை எவ்வாறு காண்பது என்பதற்கு அடையாளம் கூறுகின்றது. எழில் எனும் உணர்வு யாங்கு யாங்கு எவ்வெவ் வுருவில் தோன்றுகின்றதோ ஆங்கெல்லாம் நந்நயப் பொருள் உண்டு என நவில்கின்றது. என்றும் அழியாத் தன்மையொடு உண்மையின் உணர்வாகவும் நேரிது நியாயம் என்பதை எல்லாம் உணர்த்துவதாகவும் அஃதிருக்கும்.
சூத்திரம் 5:
நந்நயப் பண்பின்றி நாதனார் திருவுரு
எந்நிலை யினுயாவன் மாட்டிலும் ஆகா
விளக்கம்:
யாங்கு இறைவனது வெளிப்பாடு உண்டோ ஆங்கு யாதாவதோர் முறையில் நந்நயப் பெருட்களின் பண்பும் உணர்த்தப் படுகின்றது. இறைவன் திருவடிவு கொள்ளாவிட்டால் நந்நயப் பொருள் அறிவும் இல்லாது போய்விடும் என்றும் உணர்த்தியது.
சூத்திரம் 6:
நந்நயப் பொருள்தெரி நற்கலைகள் யாவுமே
தெய்வத் திருநிறை திவ்வியத் தொழிலே
நற்கலைகள் யாவும் தெய்வ சம்பந்தத்தோடு கூடி திவ்வியப் பண்பினதாக நிற்பதினாலேயே அவை நந்நயப் பொருளை ஆன்மாக்கள் மாட்டு வெளிப்படுத்தி அருளுகின்றன.
சூத்திரம் 7
அருளது வீழ்ச்சியின் ஆகும் நந்நயம்
தெருளரு சிறப்பின் செம்மார்ந்த காட்சி
விளக்கம்
அருளது வீழ்ச்சியாகிய சக்திநிபாதத்தின் வழி எழுவதே நந்நயம் என்பதெல்லம். அது மெய்யாகும் போது அகத்திலே செறிந்திருக்கின்ற மயக்கமாகிய இருள் இல்லாது போக்கும் செம்மார்ந்த ஞானக் காட்சி மெய்யாகும் என்றது.
சூத்திரம் 8
நந்நய மெனவரும் நயமிகு வனைத்தும்
தன்வய மாக்கி தானது வாக்கும்
விளக்கம்:
நந்நயம் என வரும் எல்லா பொருள்கட்கும் ஓர் தற்பண்பு உண்டு. அதனைக் காண்பார் யாராயினும் அவரை வசித்து ஈர்த்து கவனம் சிதறாது பிடித்திழுத்து நிறுத்தி அதனையே ஆழ சிந்திக்குமாறு செய்து அதன் வழி அந்த நற்புண்புகள் அவன் மாட்டும் படருமாறு அவனையும் திரிக்கும் என்றவாறு.
தொடரும்
நன்னியல்- 3
சூத்திரம் 9
உழற்சி கெடுத்து கழற்சி நிகழ்த்தி
ஊழ்ச்சி யருளு முயர்நந் நயம்
விளக்கம்:
உழற்சி வினைகள் ஆற்றுவது என்பது ஆணவ மலப் பிணிப்பில் தனக்கே எனும் ஆங்காரத்தின் பல விணைகள் புரிந்து ஆகாமிய கன்மம் ஈட்டி மீண்டும் மீண்டும் பிறந்து உலகில் உழல்வதாகும். கழற்சி என்பது ஞானத் தெளிவு பல அடைந்து ஆணவ மலத்தொடக்கிலிருந்து கழன்றும் மேலும் பல தத்துவங்களைலிருந்தும் கழன்றும் சிறிது சுத்தமாகுவதாம். ஊழ்ச்சி வினகள் என்பன இறையருளை ஈட்டி அதன் வழி திரோதாயி சக்தியாகிய இறைவனது மறைப்பை ஒரு சிறிது நீக்கி இறைவனை இன்னும் நெருங்குவதாகும் இங்கு நந்நயப் பொருட்கள் அனைத்தும், ஊழ்ச்சி விணைகளை ஊக்குவித்து ஆன்மாக்களை சுத்தமாக்கி இறைவனை இன்னும் இன்னும் நெருங்கத் தருவன வாகும்.
சூத்திரம் 10
தானே என்னும் தயவிற் சிந்தை
வீணே யாய்விழ வித்தைசெய் தேநயம்
கோனே யெலாமெனுங் கோதிலறிவு நல்கும்
விளக்கம்:
தான் தான் என்று ஆணவச் செருக்கு மிக தந்நலமேப் பாராட்டும் அவல நிலை ஆணவ மலமறைப்பால் வரும் ஓர் பொல்லாத நிலையாகும். இஃது கேவலாவத்தைகளாகிய கடுமை கயமை கொடுமை கீழ்மை போன்ற இழிநிலைப் பண்புகளின் பிறபகம். இத்தகைய இழி குணங்கள் வீடுபேற்றிற்கு பகை என்ற உணரவும், வீடுபேறே வேண்டப்படுவது என்ற உறுதியும் பிறக்க, இந்த கேவலங்களும் அகலும். இத்தகைய மேலான ஞான விருப்புகளைத் தந்து ஆன்மாவை மூமுட்சுவாக்குவன நந்நயப் பொருட்களாம். ஆணவங் கழல செம்மார்ந்த அறிவொடு சிவ உணர்வும் கைவரப் பெற்று அன்பும் அடக்கமும் பணியும் கனிவும் வந்தணையும்.
சூத்திரம் 11
தனக்கே வுலகு என்றிய வான்மா
உலகிற் கேத்தான் என்றோங் கிவளர்
உணர்விற்கு வித்திடும் ஒண்மை நந்நயம்
விளக்கம்:
எனக்கே உலகு என்று கருதுவான் சுயநலம் மிக்கவன். இவன் மாட்டு பொதுநலச் சிந்தையும் தொண்டு மனப்பான்மையும் முகிழா. வித்தை எனும் ஞானத் தெளிவு தந்து நற்பண்பினை வளர்ப்பதால் நந்நயப் பொருள் ஒளி மிக்கதாகின்றது. இதனால் அருள் சுரப்பு மெய்யாக அருளுள்ளம் வந்தமையும்.
சூத்திரம் 12:
ஐயமு மருட்கையு மவலமுங் கெடுத்தே
உண்மையுந் திணமியுந் தெளிவும் தரும்
ஒண்மை அதாவது வித்தை எனும் ஞானத் தெளிவு தந்து நந்நயப் பொருட்கள் அகத்திலே ஒளியாகிய அருட்பெருஞ் சோதி சுடரத் தரும். இதனால் அகத்திலே விளங்கும் ஐயங்கள் மருட்கைகள் மயக்கங்கள் அவற்றால் வரும் அவலங்கள் போன்றவை கெட்டு இல்லாது போகம்.
சூத்திரம் 13
இயற்கையோ செயற்கையோ எத்திறத் தவோ
மாணலங் காட்டும் மாட்சி நந்நயம்
ஆயிற்று வாங்கே எனவதுவே தெய்வீகம்
விளக்கம்:
தான் பற்பல சாதனங்களைப் பழகுவதினாலோ அல்லது இறையருளின் வெளிபாட்டினாலோ குற்றமற்ற அறிவினைத் தந்து அகத்துச் செறி மலத்தை போக்கவல்ல மாட்சிமை உடைய நந்நயப் பொருள் காட்சி வந்ததெனின் ஆங்கே தெய்வீகம் வந்தமைகிறது எனப்படும். இதனால் மறைபொருளாகிய தெய்வீகத்தை வெளிப்படுத்தும் திறன் நந்நயப் பொருட்களுக்கு உண்டென்றது.
சூத்திரம் 14
விட்டேகு வீரம் வித்திய நந்நயம்
விட்டேக லில்லா வேந்தனடி சேர்க்கும்
விளக்கம்:
நந்நயப் பொருள் சுவைத்தோன் பிறவற்றை அற்பம் எனத் தள்ளி ஒதுக்குவன். இவ்வாறு ஒதுக்கி ஒதுக்கி உயர்ந்து உயர்ந்து சென்று சிவதரிசனம் பெற்று சிவானந்தம் தூய்த்து மகிழும் அவன் அச்சுவையினின்று அகல முடியாத் தன்மை எய்தி அதில் கட்டுண்டு நிற்பன் என்றவாறு.
சூத்திரம் 15
நந்நயப் பொருட்களை நட்டே விளையாடி
உயிர்கள் யாவையும் உய்விப்பான் நந்தி
விளக்கம்
நந்நயப் பொருட்களின் நயத்தை உயிர்கள் காண உலகில் அவற்றை நட்டு விளையாடுவான் இறைவன். இதுவும் அவன் உயிர்கள் மேல் வைத்த கருணையின் வெளிப்பாடே. வேறு காரணம் இல்லை. அழகுகளை இன்ப எழில்களை தன்னிடமிருந்து வெளிபடுத்தி உயிர்களை ஈர்த்து வசித்து தன்னை சார்ந்து நின்று உய்விக்கும் அருளோனாய் இறைவன் திகழ்கின்றான்.
முதற் படலம் முற்றும்
நன்னியல்- 4
படலம் 2: நந்நயப் பொருள்: தத்துவ விளக்கம்
மேலே இதுவரை நந்நயப் பொருட்களின் இலக்கணங்கள் உணர்த்தப்பட்டன. இனி அவற்றின் தத்துவ விளக்கம் தரப்படும்.
சூத்திரம் 16
பொருதல் வினையிற் புரியவரும் தானது
நானென்றும் நீயென்றும் அவளென்றும் அவனென்றும்
நவில வருமுயிர் களிடப் பேதங்கள்
விளக்கம்
ஒன்றோடொன்று பொருதுதலே உயிர்களின் தனிச் சிறப்பு. புணர்தலும் பிரிதலும் போராடலும் அதில் வெற்றியும் தோல்வியும் வருவதெல்லாம் இந்தப் பொருதுதல் காரணமாகவே. ‘நான்’ ‘நீ’ என்று தனிப்பதும் , ‘நான்’ ‘அவன்’ என்று வேறுபடுத்துவதும் அதேப் போன்று ‘அவன்’ அவள்’ என்று பால் பாகுபாடு செய்வதும் இந்த பொருதுதல் வினையாலேயே உதிக்கின்றன. ஆனால் இதற்கெல்லாம் ஆதாரமாய், நிலைக்களனாய் ‘தான்’ என்னும் தன்னுணர்வோடு உயிர் நிற்பதுதான். ஆயினும் உயிர் இதனை புத்திப் பூர்வமாக உணராதே இருக்கின்றது. உறவுப்படாது தொடர்வின்றி தனித்தனி நிற்கின்ற தான் எனும் ஆன்மாக்கள் பொருதுதல் எனும் விணையால் அல்லது முயற்சியால் பேதப்பட்டு மேற்கண்டவாறு தன்மை முன்னிலை படர்க்கை எனும் மூவிட நிலைகளில் தம்மை உணர்கின்றன. உணரப்படா நிலையினின்று ஒருவாறு உணரும் நிலைக்குப் பெயர்வது இந்தப் பொருதல் வினையால்தான்.
தொல்காப்பியர் கண்டவாறு இந்தப் பொருதுதலே உயிரின் இயற்கைப் பண்பாய் அமைந்து அகத்தினை புறத்திணை என்று வேறுபடுத்தி அறியவரும் ஒழுக்கங்களை உருவாக்குகின்றது.
சூத்திரம் 17
பொருதல் முயற்சி பூப்பதுப்பர நாதவிந்து
குண்டனிக் குமரி கூத்தினால் ஆமே
விளக்கம்:
தூய சிவத்தத்துவங்களாகிய பரநாதவிந்துக்கள் மாயையில் பதியும்போது அபரநாதவிந்துக்கள் ஆகின்றன. இவையே இடகலை பிங்கலை சுழிமுனை போன்ற நாடிகளை பதிவித்து பல நாட்டங்களை எழுப்பி ஆன்மாக்களை ஒன்றோடொன்று பொருத வைக்கின்றன. உடலில் உறைந்து கிடக்கும் குண்டலினி சக்தி தூண்டப்பட்டு பல செயல்களில் விழவும் அதுவும் குறிப்பாக பொருதல் வினையில் இறங்கவும் தூண்டுகின்றன.
சூத்திரம் 18
உலகுடன் பொருத உழைக்கும் உழற்சி
வினைகளில் இன்பமும் தருமபர நாதவிந்து
விளக்கும்:
இந்த அபரநாத விந்துக்கள் உடலில் ஆட, அதன் வழி உண்டாகும் நாடிகளின் காரணமாக பல ஊக்கங்கள் வர அவை உழற்சி வினைகளில் முடியுமெனின், அற்ப சிற்றின்பங்களே பெருகும் என்றது.
சூத்திரம் 19
அவனென அவளென அதுவென பொருளெல்லாம்
சுட்டறியப் படுவதாய் சுயம்பு இலதாய்
பொருதற் முயற்சியில் புலனாகும் உலகே
விளக்கம்:
இனி சிற்றின்பத்தோடு அகத்தே மலமறைப்பு இருக்க, அதனால் தோன்றும் அறிவெல்லாம் சுட்டறிவாகவே ஆகவே அணுத்துவப்பட்ட அறிவாகவே இருப்பதை விளக்கியது.
சூத்திரம் 20
பொருதுதல் வழிவரு புலன்களில் மேவரும்
புனிதமில் லறிவினை போக்கிடும் நந்நயம்
பரநாத விந்துவின் பாலறிவுத் தந்தே
விளக்கம்:
அபரநாத விந்துவின் தொழிற்பாட்டால் வரும் அறிவெல்லாம் புனிதமானது புனிதமற்றது என்று இருதிறத்தாய் இருக்க, அவற்றுள் தோன்றும் நந்நயப் பொருளுணர்வு. புனிதமற்றதை வேறுபடுத்தி கீழ்படுத்தி அற்பமாக்கி. மேலே உயிரை உய்வித்து இறைவனோடு கலந்த பரநாத விந்துக்களின் தெளிவான அறிவினைத் தந்து புனிதத்தையே தேடும் மனப்போக்கினை ஆழ மிகவுறுதியாக நிறுத்தும்.
சூத்திரம் 21
நந்நயம் விளைநிலன் நாதனார் திருநடம்
விளக்கம்:
பரநாத விந்துக்களின் என்றுங் கெடாத் தெள்ளிய அறிவு, நாதனார் அம்மையோடு ஆடும் திருநடனக் காட்சியே யாகும். அதனால் அத்திருநடமே எல்லா நந்நயங்களையும் தோற்றுவிக்கும் இறைவனது அருள் என்றது.
சூத்திரம் 22
உயிரின் போக்கை உணர்வு தெரிக்கும்
உணர்வின் போக்கை உயிரு மறியும்
உடன்நின்று அருளால் ஊழ்விப்பான பதியே
உணர்ந்து உணர்ந்து உயிரோங்கி வளரவே
உண்மைகட் கண்டு தன்னையும் காணவே
விளக்கம்:
உலகில் மன்னி நிற்கும் உண்மைகளைக் கண்டால்தான், உண்மையேத் தானாக சத்திய நித்தியப் பொருளாக நிற்கும் இறைவனை உள்ளுணர்வாகவாவது காணமுடியும். இஃது உயிருக்கு உணர்வினைத் தந்து, அந்த உணர்வினையும் தன ஒழுக்கங்களால் அறியுமாறு செய்து, உடன் நின்று உண்மையறிவு வளர்ச்சிற்கு ஏற்ப தன்னைக் காட்டியருளி முடிவில் வீடுபேற்றை நல்கி இறைவன் ஆன்மாக்களை தன்னடிகீழ் சேர்ப்பான்.
இரண்டாம் படலம் முற்றும்
நன்னியல்- 5
படலம் 3: நந்நயமும் பரவாணையும்
சூத்திரம் 23:
ஆணையின் விளக்கம் அவனிதரு நாதம்
அருளுதல் நோக்கின் அரனது வாக்கம்
விளக்கம்
பரநாத விந்துக்களை அசைத்து இறைவன் உலகினை தொழிற்படுத்தி, அங்கு நீதி என்றும் நேர்மை என்றும் இன்னும் பல நயங்களும் தோன்றுமாறு செய்கின்றான். நல்லதின் ஆட்சியைக் காட்டும் நாதம் இறைவனது அருளின் வெளிப்பாடாகும்.
சூத்திரம் 24
உயர்த்திடு ஆணையொடு ஒத்து ஒடுங்கி
உண்மையது கண்டு உறுதி எய்தி
உன்னதஞ் செய்யும் உணர்ந்த ஆன்மா
விளக்கம்:
இறைவனது ஆணையே எல்லா உயிர்களையும் உயர்த்தி உய்விக்கும். அதனை உணர்ந்து அதனோடு ஒத்து அதில் முற்றிலும் ஒடுங்கி வாழ, அது செய்யும் நன்மைகளை எல்லாம் ஆன்மா அறிய வந்து சஅதனால் மனத்திண்மை அடைந்து, அவலமும் அற்பமும் அநியாயமும் போக்கி, நந்நயம் கண்டு உன்னதமே செய்யும் உறுதித் தலைப்பட்டு பக்குவத்தில் உயர்ந்து நிற்கும்
சூத்திரம் 25
ஊழ்விக்கு மாணை உணர்த்திடு மன்பு
விளக்கம்:
ஆணைவழி பிழையாது செல்வோருக்கு திரோதாயி குறையும். அதனால் ஆன்மாக்கள் இறைவனது தற்சொரூபம் கண்டு சாயுச்சியம் அடைய ஊழும் அதாவது மலரும். அதுபொழுது அருளது பாய்வால் உயிர் அன்பே தானாகும் வகையில் பக்குவத்தில் தெய்வீகத் தனமையில் உயரும்
சூத்திரம் 26
நாதத்து வாணை நளின விந்துவொடு
பூரிக்கும் பொழுதே புலர்ந்திடும் உருவே
விளக்கம்
நாதம் இங்கு தலைமைத்தும் -- உயர்ந்து நின்று வழிகாட்டி நிற்கும் பண்பு. ஆழத்தில் இருக்கும் இறைவனது சங்கற்பம் எனும் ஆணையின் ஊந்தலாலும் வழிகாட்டும் தன்மையாலும் நந்நயமெல்லாம் தன்னுள் கொண்டுள்ள விந்துவொடு புணர்ந்து கலந்தாடும் பொழுதே நல்லுருவாகி ஒன்று தோன்றுகின்றது. தாரகம் விந்து, வெளிப்படுத்தும் ஆற்றல் ஆணையின் வழி வரும் நாதத்தின் ஆட்சி.
தொடரும்
நன்னியல்- 6
சூத்திரம் 27
ஆகிய உருவே அவனியில் பொருளாய்
ஆகிடும் மாயையுட னணைந்த காலே
விளக்கம்:
மேற்கூறிய வகையில் தோன்றிடும் உரு, மந்திர சொரூபமானது, கட்புலனிற்கு வாராதது. அஃது மாயையுடன் கலந்து அதனைத் திரிக்கவே அறியவரும் பொருளென ஒன்று உருவாகின்றது
சூத்திரம் 28
தூவின் மாயை துயர்தீர் விந்து
துளக்கமில் விளக்கம் சோதிச் செஞ்சுடர்
விளக்கம்:
விந்துவின் தற்சொரூபம் விளக்கியது, விந்துவாவது தூமாயையாய் விளங்கி, யாண்டும் அசையாத அழியாத தன்மையுடன் வெள்ளொளி உமிழ்ந்தவண்ணம் நிலைக்கும் பரஞ்சோதியாம் என்றது.
சூத்திரம் 29
ஆணை நடனம் ஆடுமே சிவசக்தி
ஆக்கமு மருளும் அகன்றிடா இயல்பொடு
விளக்கம்:
ஆக்கமும் அறிவும் சிவம், அருளும் அன்பும் சக்தி. பரசிவ ஆணையின் நின்று சிவசக்தி யாண்டும் பிரியா வகையில் தில்லை மன்றில் நர்த்தன்ம் ஆடிக்கொண்டே இருப்பர்.
சூத்திரம் 30
அருளொடு புணர்ந்த ஆக்க வாணை
இருளில் கிடக்கும் இன்பமில் ஆன்மாக்கள்
அனைத்தும் தன்பால் அழகின் ஈர்க்கும்
விளக்கம்
இவ்வாறான சிவசக்தி ஆணவ இருளில் சிக்குண்டு தவிக்கும் ஆன்மாக்களை இரட்சிக்கும் பொருட்டு, அந்த ஆணவம் மிக்கிருக்கும் பொருட்களை அழித்து அழித்து வென்று அழகும் அருளும் மிக்க பொருட்க்களைத் தேற்றி ஆன்மாக்களை தன்பக்கம் ஈர்த்து இன்பமே தூய்க்க வைக்கும்.
சூத்திரம் 31
ஆக்கஞ் சிவன் அருளே சத்தி
அகன்றிடா நிலையில் அவனி புரக்கும்
அணைதல் நீங்கின் அகிலஞ் சூனியம்
விளக்கம்:
சூனியத்தைக் கொண்டு வருவது பிரளயம் அல்லது மகாசங்காரம். ஆனால் இது இறைவனது சங்கரிக்கும் தொழிலால் வருவதன்று. யாண்டும் பிரியாது இணைந்தே ஆடும் சிவசத்தி, தனித்தனியாகப் பிரிய ஒரு பொருளும் உருப்பெற்று நிலவாது போக, ஒன்றுமே இல்லா சூன்யம் பிறக்கும் என்றது
மூன்றாம் படலம் முற்றும்