நடுகற்கள், கல்வெட்டு காட்டும் மக்கள் வரலாறு, மக்கள் மொழி பகுதி 5

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கணப்பனூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள 8ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு உள்ளது. (தரும. கல். 47/1973, பக். 7)


ஸ்ரீ சிவமார / பருமற்கு யாண்டு நாற்பத்தேழாவது கந்தவாணதி அரைசரு புறமலை நாடா / ள அவர் மகனார் தெளிய நி(ஓர்)ஆர் சேவகர் வாணிக / ச் சடைனார் வெட்டக்கியார் கூடல் (வந்துவிட) அவர் / மே ஆனயாடி நின்று செ / ன்று பட்டார்


ஆனையாடி - யானை மேல் அமர்ந்து போரிட்டு; நின்று - இருந்து; சென்று – நீங்கி


கங்க மன்னன் முதலாம் சிவமாறனின் நாற்பத்தேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 726) அவருக்கு அடங்கிய கந்தவாண் அதிஅரைசர் புறமலை நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் அவருடைய மகன் தெளிய நிஓர்ஆர் உடைய படைத் தலைவர் வாணிகச் சடையன் என்பவன் கூடல் எனும் தீர்த்த மலையை ஆளும் வெட்டக்கி எனபவன் வேற்றிடம் சென்றுவிட்டுத் திரும்பி வந்து விட அவன் மேல் யானை மீது அமர்ந்து போர் புரிந்து (காயம் ஏற்பட்டதால்) போர்க் களத்திலிருந்து நீங்கி பின்பு வீரசாவடைந்தான்.  வெட்டக்கி வென்றான் வாணிகச் சடையன் தோற்றான். வேந்தன் ஆணையை ஏற்று சடையன் வெட்டக்கி மேல் போர்த் தொடுத்தான் போலும். யானைப் போர் குறித்த அரிய பதிவு இது எனலாம். 


கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள சந்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு தருமபுரி அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. (கிரு. மா. கல். 74/2005)


ஸ்வஸ்தி ஸ்ரீ / கட்டானை பருமற்கு யாண்டு முப்பதாவது பெரும் பாணி / ளவரைசர் எயிநாட்டு சந் / திரபுரம் எறிந்த ஞான்று ப / ட்டார் (மிணலூர்) சேட்டனார்


எறிந்த - அழித்த; ஞான்று - அப்போது; பட்டான் - வீர சாவடைந்தான்


கங்க மன்னன் ஸ்ரீ புருஷன் எனும் கட்டானை பருமருடைய முப்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 758) பெரும் பாண் இளவரைசர் எயில் நாட்டுப் பகுதியான சந்திரபுரம் எனும் சந்தூரை அழித்த போது ஏற்பட்ட போரில் மிணலூர் சேட்டன் வீர சாவடைந்தான். சேட்டன் என்ற பெயர் இகர ஈறு பெற்று சேட்டி எனவும், உகர ஈறு பெற்று சேட்டு எனவும் வழங்கும். சேட்டு என்ற பெயர் கொண்டோர் வட ஆர்க்காடு பகுதியில் இன்றும் உளர். தேனி அருகே உள்ள ஓர் ஊர் பழனிசேட்டி பள்ளி. எகிபதில் 6 ஆம் ஆள் குடியில் ஒரு வேந்தன் பெயர் Seti > சேட்டி என்பது. துருக்கியின் திராய் நகர அரச குடியில் ஒருவர் பெயர் Zetes > சேட்டி என்பது. 


கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டம் சந்தூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற நடுகல் கல்வெட்டு உள்ளது. (கிரு. மா. கல். 71/2005)


ஸ்வஸ்தி ஸ்ரீ கட்டானை பருமற்கி யாண்டு நாற்பத்தைந்தாவது பெரும் / பாணிளவரைசர் வேளால நாடாள பெருமுகை கலியட / க்கியார் சேவகன் கட்டிய விச்சன் / புலிக் குத்திப் பட்டான்


குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொன்று; பட்டான் - புலியிடம் காயம் பட்டு இறந்தான்


கங்க மன்னன் ஸ்ரீ புருஷன் எனும் கட்டாணை பருமனுடைய நாற்பத்தைந்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 773) அவருக்கு அடங்கிய பாணன் பெரும்பாண் இளவரைசர் வேளால நாட்டை ஆள அவருக்கும் அடங்கிய பெருமுகை ஆளும் வேள் கலியடக்கி என்பவருடைய படைஆள் கட்டிய விச்சன் என்பவன் ஊரில் புகுந்து அச்சுறுத்தி வந்த புலியை ஆய்தத்தால் குத்திக் கொன்று தானும் காயம் பட்டதால் வீர சாவடைந்தான். கலியடக்கி என்றால் போர் அடக்கி என்று பொருள்.


தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சின்னாங்குப்பம் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது.(தரும. கல். 18/1973)


ஸ்ரீ சிரீ புருச பருமற்கு - - - - / தாவது பிருணிதுவியார் புறமலை / நாடாள மழவூர்த் தொருக் கொண்ட ஞா / ன்று செருப்பச் சடையன் பட்டான்


கங்க மன்னன் ஸ்ரீ புருஷ பருமன் ஆட்சி ஆண்டு சிதைந்து உள்ளது. அவனுக்கு அடங்கிய பிருணிதுவி என்பவன் புறமலை நாட்டை ஆளும் காலத்தில் அவருடைய படையினர் மழவூர் ஆநிரைகளை கவர்ந்த போது அங்கத்து காவல் படையினரால் தாக்கப்பட்டு செருப்பச் சடையன் என்பவன் வீர சாவடைந்தான். கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்.


தருமபுரி அகழ் வைப்பகத்தில் படுத்தான்கொட்டாய் எனும் ஊரில் இருந்து கொண்டுவரப்பட்ட நடுகல் கல்வெட்டு. (தரும. நடு. அகழ். பக். 27)


சிரி பிரிதி கங்கதி கட்டாணை பரு / மற்கு யாண்டு பத்தாவது கோவூர் / சிங்க / வரும / ராள அவர் சே / வகர் கி / ளகன் பாடி / படை வாணிகத் தாழமர் / தொறு மீட்டுப் பட்டான்.


ஆள - ஆட்சி புரிய; சேவகர் - படைத் தலைவர், படைஆள்; தொறு - ஆநிரை; பட்டான் - வீர சாவடைந்தான்


கங்க மன்னன் ஸ்ரீ புருஷனூடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய கோவூர் நாட்டை சிங்க பருமன் என்பவன் ஆண்டு கொண்டிருக்க அவருடைய கிளகன் பாடிப் படையைச் சேர்ந்த வாணிகத் தாழமன் என்ற படைத் தலைவன் பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரையை மீட்டு வீர சாவடைந்தான். ஆட்சி ஆண்டை கல்வெட்டியலார் இரா. பூங்குன்றன் 26 என படித்து உள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி எனும் ஊரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (நடு. பக்.227)


ஸ்ரீ புருச பருமற்கு யா / ண்டு பத்தாவது பெரும்(பா) / ண முத்தரைசர் கங்கரை(சா)ள்ப் பாகற்றூர்த் தொறு அருங்கள்வர் கொண்ட ஞான் / று மீட்டுப் பட்டார் நொ / ச்சி சாத்தன் க(ல்)


கட்டாணை எனும் ஸ்ரீ புருசனுடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் முத்தரையரான பெரும் பாண கங்க அரைசர் ஆளும் பாகற்றூர் ஆநிரைகளை அருங்கள்வர் எனும் கூட்டத்தார் கவர்ந்து கொண்ட போது அவற்றை மீட்டு வீரசாவடைந்த நொச்சி சாத்தன் நினைவில் நட்ட நடுகல் இது. நொசசி சாத்தன் எவ் ஊரன், எந் நாடன், எவருடைய படைஆள் போன்ற செய்திகள் கல்வெட்டில் இல்லை.


பாண்டியர் ஆட்சி நடுகல்


பாண்டியர் ஆட்சிக் கால நடுகற்கள் மிகக் குறைவாகவே கிட்டி உள்ளன. இது பாண்டிய நாட்டில் நடுகல் மரபு அருகியே வழங்கியதைக் காட்டுகின்றது. பாண்டிய நாட்டில் தலைப்பலி நடுகற்கள் கூடுதலாக இருப்பது நோக்கத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே உள்ள கழுகுமலை குசக்குடித் தெருவில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று காணப்படுகின்றது. (S. I. I. Vol. 14 No.31)


ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு யாண்டு இருபத்து மூன்று / அவ்வாண்டு மலை நாட்டு சடையங் கரு நந்தனார் / மேற் படை போய் அருவி ஊர்க் கோட்டை அழித்து / நன்று செய்து பட்டார் / பெரு நேச்சுறத்து எட்டி மண்ணனாயின மங்கல ஏனாதிகள் வீட்டு / கோயிற் சேவகரிருவர் அவனிலோருவன் / றொண்டை நாட்டு பூந்தண்மலி வினையந் தொழு சூரன் / ஒருவன் பேரேயிற் குடிச் சாத்தனக்கன்


நன்று - பெரிது, சிறப்பு, நல்லது; எட்டி - செட்டி(ச்+எட்டி), வணிகன், அரசன் வழங்கும் ஒரு பட்டம்; கோயில் – அரண்மனை


பாண்டியன் மாறன் சடையன் எனும் பராந்தக வீரநாராயணன் ( கி.பி. 866 - 911) உடைய இருபத்து மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 889) மலை நாட்டை ஆளுகின்ற சடையன் கருநந்தன் மீது படை கொண்டு போய் அவனது அருவி ஊர்க் கோட்டையை பெருநேச்சுரம் எனும் ஊரை ஆளும் செட்டி மன்னனான மங்கல ஏனாதி என்பவனுடைய அரண்மனையில் காவல்பணி செய்யும் படைத் தலைவர்களான தொண்டை நாட்டின் பூந்தண்மலியைச் சேர்ந்த வினையன் தொழு சூரன் என்பவனும் மற்றொருவன் பேர் எயில் குடியைச் சேர்ந்த சாத்த நக்கன் என்பவனும் ஆகிய இருவரும் சேர்ந்து அழித்து பெருஞ் செயல் புரிந்து வீர சாவு எய்தினர்.  சடையன் கருநந்தன் சேரநாட்டின் மலைநாட்டை ஆண்ட ஆய் மரபு மன்னன். மங்கல ஏனாதி பாண்டியனுக்குக் கீழ்ப்பட்டு பெரு நேச்சுரம் எனும் கழுகு மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். இவன் சார்பில் போரிட்டு மாண்ட இரு மறவர்களும் வட தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல்லவர் ஆட்சிப் பகுதி நடுகறகளில் உள்ள சொற்களும் பாண்டியர் நடுகல் சொற்களும் வேறுபட்டிருக்கின்றன. இக்கல்வெட்டில் உள்ள மொழி அமைப்பு இக்கால் உள்ள மொழிஅமைப்பு போலவே இருப்பது நோக்கத் தக்கது.


தமிழ முன்னோரே கொரிய நாகரிகத்தை அமைத்தனர் என்பதற்கு சான்றாக சூரன் என்ற தமிழ்ப் பெயரைக் கொண்டு ஒரு மன்னன் ஆண்டுள்ளான். தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Churo BC 1062 - 997 > சூர(ன்). அதே போல் தென் அமெரிக்கப் பெருவின் இன்கா நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Manco Ca'pac I 1200 AD > மங்க காப்பக்(கன்). மங்கன், மங்கலன் ஆகியன பண்டு வழங்கிய தமிழ்ப் பெயர்கள். ஒரு இரண்டாம் நிலை Chouchi அரசின் சீன வேந்தன் பெயர் Yang Nandang 429 -441 AD > யாண் நந்தன் என்பது. சீனத்தில் ன் > ங் எனத் திரியும். 


போசள ஆட்சி நடுகல்

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கொண்டம்பட்டி எனும் ஊரில் வட்டெழுத்துப் பொறிப்பில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (தரும. கல். 6/1972, பக். 78)


ஸ்வஸ்தி ஸ்ரீ சகரையாண் / டு நுளம்ப வீர சோழன் ஆளா நிற்க தள் / ளப்பாடி ஊர் ஏறிஞ்சு கன்று காலி கொண் / டு போகா நிற்க கொட்டு பூசல் சென்று பட்டான் / உதப்பியூர் உடைய னுங்கிலன் தொண் / டயன் மகன் மூக்கயன்


சகரயாண்டு - சக ஆண்டு; ஆளா நிற்க - ஆள; ஏறிஞ்சு - அழித்து; காலி - பசு, ஆநிரை; போகா நிற்க - போக, செல்ல; கொட்டு பூசல் - தெருச் சண்டை [street fight, skirmish], பூசலோடு


சக ஆண்டு எத்தனை என்று குறிப்பிட வில்லை. போசளனான நுளம்ப வீர சோழன் ஆண்டு கொண்டிருக்க அவன் ஆட்சிக்கு உட்பட்ட தள்ளப்பாடி எனும் ஊரை அழித்து அவ்வூர்க் கன்றுகளையும் ஆநிரைகளையும் பகைவர் கவர்ந்து கொண்டு போக அதைத் தடுக்க நிகழ்ந்த தெருச் சண்டையில், பூசலில் உதப்பியூரைச் சேர்ந்த நுங்கிலன் தொண்டயன் என்பவனுக்கு மகன் மூக்கய்யன் என்பவன் வீர சாவடைந்தான்.  வீர சோழனை தமிழ்நாடு தொல்லியல் துறை போசளன் எனக் குறிப்பிடுகின்றது. இதில் ஆளா நிற்க, போகா நிற்க ஆகிய சொற்றொடர்கள் எதிர்மறையான சொற்பொருளில் குறிக்கப்பட்டு உள்ளன. மெக்சிகோவின் மாயப்பன் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Mooch Cocom 1203 - 1211 AD > மூக்(அன்) கக்கம்.


சோழர் ஆட்சி நடுகல்


சோழர் கால நடுகற்களில் செய்திகள் நீண்டதாயும் வட்டெழுத்து ஒழிந்து தமிழ் எழுத்து பொறிப்பு பெற்றுதாயும் ஒப்பீட்டில் பல்லவர் கால எழுதும்முறை, சொல்லாட்சி ஆகியவற்றினின்று மாறுபட்டதாயும் உள்ளன. சோழர் ஆட்சியில் தமிழகத்தில் வட்டெழுத்து கைவிடப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கீழ் முட்டுகூர் எனும் ஊரில் தமிழ் எழுத்தில் 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு உள்ளது. (E. I. Vol 4, Pg. 179)


ஸ்ரீ மதிரை கொண் / ட கோப்பரகேசரி பன் / மர்கு யாண்ட் இருபத்தொ / ன்ப(தா)வது பெருமான / டிகளான் முக்கு / ட்டூர் தொறு / (கொள்)ள மீ(ட்டுப்) பட்டா / ன் வடு(ந) / (வா)ரண்ட (வா)ரதன் தா / ண்டன்


பாண்டியனை வென்று மதுரையைத் தன் ஆட்சியின் கீழ் கொண்ட கோப்பர கேசரியான முதலாம் பராந்தகச் சோழனின் இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 936) பெருமானடிகளால் முக்குட்டூர் ஆநிரைகள் கவரப்பட அவற்றை மீட்டு வீரசாவடைந்தான் வடுந வாரண்டன் மகன் வாரதன் தாண்டன் என்பவன். வடுந என்பது வடுக என்பதாக இருக்கலாம். வார, வாரத ஆகிய தமிழ்ப் பெயர்கள் எதியோபிய நாகரிகத்திலும் பரவி உள்ளன. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Tsawi Terhak Warada Nagash 730 - 681 BC > சவ்வி தேர்காக்(அன்) வாரதன் நக்க(ன்).


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கீழ் முட்டுகூர் எனும் ஊரில் தமிழ் எழுத்தில் 10 ஆம் நூற்றாண்டு நடுகல் இன்னொன்று உள்ளது. (E. I. Vol 4, Pg. 179)


ஸ்ரீ / மதிரை கொ / ண்ட கோப்பர / கேசரி வந்மற்கு யா / ண்டு முப்பத்து இர(ண்)டாவது வடகரை முக்குட்டூர் கு / மார நந்தை புழ / (ல)ப்பன் பு / லி குத்தி / ன கரைனா / டு


குமாரன் - மைந்தன் (son of the soil), குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொன்று; கரைநாடு - ஆற்றங்கரை ஊர்


முதலாம் பராந்தக சோழனுடைய முப்பத்து இரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 939) பாலாற்றின் வடகரையில் அமைந்த முக்குட்டூர் எனும் ஊரில் புகுந்த புலியை அவ்வூரின் மைந்தன் (குமாரன்) அந்தை புழலப்பன் என்பவன் அப் புலியை ஆய்தத்தால் குத்திக் கொன்ற ஆற்றங்கரையில் அமைந்த ஊர் இது. அவன் இறந்தது பற்றி கல்வெட்டில் குறிப்பு இல்லை. அவன் வீரம் மட்டும் மெச்சிக் கூறப்பட்டு உள்ளது. அத்தகையோன் ஊர் இது என ஊர்ப பெருமையே கல்வெட்டில் விஞ்சி நிற்கின்றது.

நாமக்கல் மாவட்டம் கூளிப்பட்டி பெருமாள் கோவில் அருகே கிணற்றோரம் உள்ள 10 ஆம் நூற்றாண்டு நடுகல். (ஆவ. இதழ் 7, 1996, பக். 29)


மதிரை கொண்ட கோப்பர - - - - / கொடுக்க / மங்கலத் / தூராழ்வான் / சடையமரைய / ன் காலி கொ/ ள்ள மகனை / ச் சேமஞ் செய்து / எதிரே / ய் நட / ந்து / சென் / று பட்டா / ன் ச / டை / ய மரை / யன் மகன் / ஆரை / யன் / ஆயி / ரவன் / கல் பொ / றிப் / பிச் / சான் / தந் / தையா / ரைச் / சாத்தி


ஆழ்வான் - ஆள்பவன்; காலி - பசு, ஆநிரை; கொள்ள - கவர; சேமம் - ஏமம் [ச் + ஏமம்], காப்பு; கல் பொறிப்பி - நடுகல் நிறுத்தி கல்வெட்டு பொறித்து; சாத்தி - ஒருவர் பெயர் நிலைத்திருக்கும் நோக்கில் அவர் நினைவாக ஒன்றைச் செய்தல் (செ. சொ. பி)


முதலாம் பராந்தகனின் (907 - 953) ஆட்சி ஆண்டு சிதைந்து உள்ளது. கொடுக்க மங்கலத்து ஊரை ஆளும் சடையமரையன் என்பவன் பகைவர் ஆநிரைகளைக் கவரும் போது அதைத் தடுக்க ஏற்பட்ட போரில் தன் மகன் மேல் நிகழ இருந்த தாக்குதலில் இருந்து அவனைப் பாதுகாப்பாக அனுப்பி அவன் உயிர் காத்து தான் பகைவர்க்கு முன்னே சென்று போரிட்டு அதில் தாக்கப்பட்டு வீர சாவடைந்தான். தன்னைக் காக்கத் தன்னுடைய இன்னுயிரையும் ஈகம் செய்த தந்தையின் பெயரை நிலைக்க வைக்கும் நோக்கில் மகன் ஆரைய்யன் ஆயிரவன் நடுகல் நிறுத்து தந்தையின் ஈகத்தை அதில் எழுத்தில் பொறித்தான்.  


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வெங்கட்டூரில் தமிழ் எழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. (ஆவ. இதழ் 5,1995, பக். 16/17)


வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி / பன்மற்கு யாண்டு மூன்றாவது செங்குன்றத்து / தூம்படைப்பூர் சாத்தயன் திருவூறல் சோள / நூர் ஊரழிஞ்சி தொறுக் கொள்ள கொட்டுப் பூ / சல் போய் தொறு மீட்டுப் பட்டான்


தூம்பு அடைப்பு - வாயில் [gateway] அடைப்பு, கொட்டு பூசல் - தெருச் சண்டை, பறை அடித்து போருக்குச் செல்வது


வீரபாண்டியனின் தலைகொண்ட கோப்பர கேசரியான ஆதித்த கரிகாலச் சோழனுடைய மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 953) செங்குன்றத்தில் அடங்கிய தூம்படைப்பூரில் வாழும் சாத்தய்யன் திருவூறல் என்பவன் சோழனூரை அழித்து ஆநிரைகளைப் பகைவர் கவர்ந்து விட அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பூசலில் பங்குகொண்டு ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்.


திருவூறல் உடன் பட்டான் / முத்தரையன் தும்பன்


அதே தொறுப் பூசலில் திருவூறல் என்பானுடன் சேர்ந்து போரிட்டு முத்தரையன் தும்பன் என்பவன் வீர சாவடைந்தான்


வீர பாண்டியனைத் தலைகொண்ட கோப்பர கேசரி / பன்மற்கு யாண்டு மூன்றாவது செங்குன்றத்து தூம்ப / டைப்பூர் விக்கிரமாதித்தனாகிய தின்ம செட்டி மகன் / சாத்தயன் சோளனூர் ஊரழிஞ்சு தொறுக் கொ / ள்ளக் கொட்டுபூசல் போய்த் தொறு மீ / ட்டுப் பட்டார்


சோழன் ஆதித்த கரிகாலனுடைய மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 953) செங்குன்றத்தில் அடங்கிய தூம்படைப்பூரில் வாழும் விக்கிரமாதித்தனாகிய தி(ன்)ம்ம செட்டி என்பவனுடைய மகன் சாத்தய்யன் என்பவன் சோழனூரை அழித்து ஆநிரைகளைப் பகைவர் கவர்ந்து விட அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பூசலில் பங்கு கொண்டு ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்


சாத்தயன் உடன் பட்டான் அடியா / ன் ஊர் பேர(ய)ன் முத்தரை(ய)ன் காரி


அதே தொறுப் பூசலில் சாத்தய்யன் உடன் அவனுடைய படைஆள் ஊர்ப்பேரயன் முத்தரைய்யன் காரி என்பவன் வீர சாவு அடைந்தான். ஒரே பூசலில் ஆநிரைகளை மீட்க நால்வர் மடிந்த செய்தி தனித் தனியே வெட்டப்ப்டுள்ளது என்பது அந் நால்வருக்கும் தனித் தனியே மதிப்பு செய்யப்பட்டதைக் குறிக்கின்றது. திருவூறல் பெயர் முத்தரையன் தும்பன் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பதில் இருந்து அவன் திருவூறலுக்கு அடியான் என்பது புலனாகின்றது.  ஒரு சப்பானிய வேந்தனின் ஈமப் பெயர் Korei 290 -215 BC > காரி என்பது தமிழாகும். 


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் காட்டேரி என்ற ஊரில் அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல் இக்கால் வேலூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. (நடு. பக். 245)


ஸ்வஸ்தி ஸ்ரீ கோவீர பாண்டியனை / முடித்தலை கொண்ட / கோப்பரகேசரி பருமற்கு / யாண்டு நாலாவது பானைச் சுணையைப் பூத்து வாண்டை வந்தழித்த விடத்து ஒந் / டப்படுத்து எதிரே பத்தரம் மு / ருவிப் பட்டினத்துப் பட்டா / ன் தோவி டென்.


ஒண்ட - பதுங்கி, மறைந்து,ஒளிந்து; பத்திரம் - குற்றுவாள், அம்பு; பட்டினம் - கடற்கரை ஊர், காவிரிப் பூம்பட்டினம்.


சோழன் ஆதித்த கரிகாலன் உடைய நான்காம் ஆட்சி ஆண்டில் (கி.பி.954) சோழனுக்குப் படைத் தலைவனாய் இருந்த பூத்து வாண்டை என்பவன் பானைச் சுணை எனும் ஊர் மேல் படை கொண்டு வந்து அழித்த இடத்தில் மண்ணோடு மண்ணாகப் பதுங்கிப்படுத்து கொண்டிருந்த தோவிடன் என்ற படைஆள் வாண்டைப் படை தனக்கு அருகே வந்ததும் திடீரென்று எழுந்து திகைப்புற எதிரே தோன்றி குற்றுவாளை உருவிப் போரிட்டு கடற்கரை ஊரான காவிரிப்பூம்பட்டினத்தில் வீர சாவடைந்தான். வாண்டையார் என்ற பெயருடையோர் இன்றும் உள்ளனர். இவர்களுடைய முன்னோர் சோழப் பேரரசில் படைத்தலைவராய் பொறுப்பில் இருந்து உள்ளனர். காவிரி கடலில் கலக்கும் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை ஊரான காவிரிப் பூம்பட்டினம். அத்து என்ற சாரியை பூம்புகாரில் என்று பொருள் தருவதால் கடல் கொண்ட பின் சிற்றூராகிப் போன புகாரின் ஒரு அண்டைப் பகுதியில் பானைச் சுணை என்ற ஊர் இருந்து உள்ளது எனலாம். எனவே போர் சோழ நாட்டில் நடைபெற்று உள்ளது. ஆனால் மாண்ட தோவிடன் வாணியம்பாடி வட்டம் காட்டேரி ஊரைச் சேர்ந்தவன் என்பதால் அவன் நினைவில் இந் நடுகல் அவன் உறவினரால் அங்கு நடப்பட்டது. எனினும் தோவிடன் யார் சார்பில் போரிட்டான் என்ற செய்தி கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.


தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கெரஹோடஹள்ளி எனும் ஊரில் தமிழ் எழுத்து பொறிப்பில் ஒரு நடுகல் கல்வெட்டு அறியப்பட்டுள்ளது. (தரும. கல். 139/1974)


ஸ்வஸ்தி ஸ்ரீ பூர்வ தேசமும் கங் / கையும் கிடாரமும் கொ / ண்ட கோப்பர கேசரி பந் / மரான உடையார் ஸ்ரீ ரா / ஜேந்திர சோழ தேவற்கு / யாண்டு 20 ஆவது நுளம் / ப பாடியாகிய நிகரிலி / சோழ மண்டலத்து / புறமலை நாட்டுப் / பாகலப்பள்ளி ஊர் அ / ழிய எதிரே எறிஞ்சு /


பட்டான் வேசாலிப் பேர / ரையர் மருகன் அண்ணயன் மக / ன் பப்பையன் இவன் மகன் / பாலிதேவன் இக்கல் நிறுத்தி / னான்


எறிஞ்சு - அழித்து; மருகன் - மருமகன்; நிறுத்தினான் - நட்டுவித்தான்


முதலாம் இராஜேந்திரச் சோழனின் 20 ஆவது ஆட்சி ஆண்டு (கி.பி. 1032) நிகழ்வை ஒட்டி எழுந்த இக்கல்வெட்டு அவன் பூர்வ தேசத்தையும் கங்கையையும் கிடாரத்தையும் வென்று கைப்பற்றிய வெற்றிச் சிற்ப்புகளைக் முதலில் கூறத் தொடங்குகிறது. (இராசராசன் காலத்தில்) நிகரிலிச் சோழ மண்டலமாக நுளம்பப்பாடி மாற்றப்பட்டதையும் சுட்டுகின்றது. அந்த நுளம்பப்பாடியில் அடங்கிய புறமலை நாட்டின் பாகலப்பள்ளி எனும் ஊர் அழிப்பில் நிகழ்ந்த ஆநிரைப் போரில் ஆநிரைகளை மீட்க பகைவர் படையை எதிர்த்து அழித்து வீர சாவடைந்தான் வேசாலிப் பேரரையரின் மருமகனும் அண்ணயனின் மகனுமான பப்பைய்யன் என்பவன். இதை நினைவு கூறும் வகையில் பப்பைய்யன் மகன் பாலிதேவன் என்பவன் இந்த நடுகல்லை நட்டுவித்தான். அண்ணய்யன், பப்பைய்யன், பாலிதேவன் ஆகியோர் நுளம்ப மரபு அரசர்கள். நுளம்பன் ஐய்யப்ப தேவனின் இரு புதல்வருள் ஒருவன் இந்த அண்ணய்யன் இவனுடைய தமபி திலீப்பரசன் என்பவன்.  

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் பட்டாலிக் கிராமம் எனும் ஊரில் கொங்கு சோழ அரசன் ஆட்சியில் இந்நடுகல் கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது.(ஆவ. இதழ் 7, 1996, பக். 31)


ஸ்வஸ்தி ஸ்ரீ / கோ அபி / மான சோ / ழ ஸ்ரீ ராஜாத் ராஜ தேவ / ற்குத் திரு / வெழுத்திட்டு / ச் செல்லா நின்ற திரு / நாளி யாண் / டு பத்தாவ / து நாயக / விச்சி நாக / ந் சிலம்பி / யேந் குறும் / புள்ளரில் எ / ந் மணவாள / ந் காவன் அ / ரையனைச் / சாத்தி எடுப் / பிச்ச பிடாரி / கோயில் இ / து ரக்ஷிப்பா / ந் காலிற் பொடி / எந் தலை மேலிது


திரு எழுத்திட்டு - கோரிக்கை மடல் எழுதி; செல்லா நின்ற - நடக்க, நடக்கின்ற; நாயகன் - தலைவன், சிற்றரசன்; மணவாளன் - கணவன்; சாத்தி - ஒருவர் பெயர் நிலைத்திருக்கும் நோக்கில் அவர் நினைவாக ஒன்றைச் செய்தல்; எடுப்பித்த - கட்டிய; ரக்ஷிப்பான் - காப்பவன்; பொடி – தூசு


கொங்குப் பகுதியை ஆண்ட சோழருள் அபிமான சோழ இராசராசனுக்கு கோரிக்கை மடல் எழுதி நடக்கின்ற திரு நாளி பத்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1090) குறும் பிள்ளர் தலைவன் விச்சி நாகன் என்பவனுக்கு மகளான சிலம்பி எனும் நான் என் கணவன் காவன் அரையன் என்பவன் பெயர் நிலைத்து இருக்கும் பொருட்டு கட்டிய பிடாரிக் கோயில் இது. இதை அழியாமல் காப்பவனுடைய கால் தூசியை என் தலை மேல் இட்டு பூசை செய்வேன்.   குறும் பிள்ளர் வேட்டுவ இனத்தவர் ஆவர். மனைவி ஒருத்தி தன் கணவனுக்காக எடுப்பித்த நடுகல் இது. அரையன் என்ற பெயர் எதியோபிய நாகரித்திலும் உள்ளது. ஒரு மன்னன் பெயர் El Aryan 3914 - 3836 BC > எல் அரையன். ஒரு சப்பானிய வேந்தனின் ஈமப் பெயர் Kobun 672 AD > காபன் > காவன் என்பது. இவனுடைய இயற்பெயர் Otomo > ஓடம(ன்). 


சித்தூர் மாவட்டம் புங்கனூர் வட்டம் நெலப்பள்ளி எனும் ஊரில் 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது.(ஆவ. இதழ் 12, 2001, பக். 2)


ஸ்ரீ மாவலிவாண விச்சாதிரரான / புழலம் மரையர் மகன் ஸ்ரீ கண் / டைய்யன் முகப்பு வேட்டையில் சேதட்டியார் / மகன் இந்தப்பன் அவர் கோயிற்றமன் புலி குத்தி / ய்ப் புலியுந் தானுமுடனேய் பட்டான் இதுக்குக் கு / டுத்த மண்ணழித்தான் க(ங்)கை யொ - / (டுகு)மரியிடை (ய்) ச் செய்த பாவங் கொள்வான்


முகப்பு - முதன்முதல், தொடக்க, முன்; கோயிற்றமன் - கண்காணிப்பில், கண்முன்னே; குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொனறு


வாண மரபு அரசருள் சில நடுகல் கல்வெட்டில் மாவலி வாண அரையன் என்ற இவன் பெயர் இடம் பெறுகின்றது. குடியாத்தம் வட்டம் கொண்டத்தூர் நடுகல் கல்வெட்டில் சக ஆண்டு 932 என குறிக்கப்படுவதால் இவன் கி.பி. 1010 இல் ஆட்சி செய்தவன் என அறிய முடிகின்றது. இவனுக்கு விச்சாதிரராய் விளங்கும் புழலம்ம(ன்) அரையன் என்பவனுடைய மகன் ஸ்ரீ கண்டைய்யன் என்பவன் முதன்முதலாக வேட்டைப் பழகும் போது அவனுடன் வேட்டைக்கு சேதட்டி என்பவனுடைய படைஆள் இந்தப்பன் என்பவன் சென்றான். அப்போது திடீரென்று ஸ்ரீ கண்டைய்யன் கண்காணிப்பில் அல்லது கண்முன்னே ஒரு புலி இந்தப்பனை தாக்கி அழிக்க உடனே இந்தப்பன் ஆய்தத்தால் அதைக் குத்திக் கொல்ல புலியும் அவனும் என இருவரும் அதே இடத்தில் இறந்தனர். இதற்காக இந்தப்பனுக்கு நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வழங்கப்பட்டது. இந்தக் கொடை மண்ணை அழித்தவன் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழ்வோர் செய்த பாவத்தை அனுபவிப்பான் என சாவிக்கப்பட்டுள்ளது.  Vicchad (विच्छद) என்பதற்கு மானியர் உவில்லியம்சின் ஆங்கில சமற்கிருத அகராதியுள் uncover, unclothe ஆகிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாவலி வாணராயனுக்குப் போர்ப் பயிற்சியின் போதும், போரின் போதும் அணிவிக்கும் காப்புக்கவச ஆடையைக் களைய உதவுபவன் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. புழலம்ம(ன்) அரையன் ஒரு சிற்றரசனாகவோ அல்லது படைத் தலைவனாகவோ மாவலிவாணராயனிடத்து பணி செய்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. 


தென்னிந்திய வீரக் கற்கள் எனும் நூலுள், 2008, வெ. கேசவராஜ் மேற்கோல் காட்டி உள்ளது, தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் குரும்பட்டி எனும் ஊரில் உள்ள நடுகல் கல்வெட்டு. ( தரு. கல்.1974 / 66)


ஸ்ரீ மாவலி வாண கொட்டி வேங்கை மீடிந்த / ஞான்று புலய மன்னர் புறமலை நாடாள / அவர் அடியான் இநொட்டைப் பெருவணயன் மகன் மகன் பட்டான் தாழன் அவர்க்கு / நெற்றமை பட்டி தீர ஏரிக் கீழ் அறு செறுவு / பேர் ஏரிக் கீழ் கருமீன் விற்று மணட்டி / இது அரமழித்தான் பாதகன்


கொட்டி - அடித்து; வேங்கை - வங்கத்து பெரும் புலி வகை; மடிந்த - செத்த; அடியான் - சேவகன், படைஆள்; மகன் - படைஆள்; கீழ் - கிழக்கே; செறுவு - வயல், அரசன் வழங்கும் நிலக் கொடை; மணட்டி(மணை + அட்டி) - தாழ்வான மண் தடுப்பு மேடை, மண் தடுப்பு; பாதகன் - துரோகி.


மாவலிவாண ராயனுக்குக் கீழ்ப்படிந்து புறமலை நாட்டை புலைய மன்னன் ஒருவன் ஆண்டு வரும் போது அவனுக்கு படைத் தலைவனாக விளங்கும் இநொட்டைப் பெருவணயன் என்பவனுடைய படைஆள் ஒருவனது மகன் தாழன் என்பவன். மாவலி வாணராயன் வேட்டையில் இருக்கும் போது தாழனை ஒரு வேங்கைப் புலி தாக்கிவிட அவன் வீர சாவு எய்துகிறான். அதே வேளையில் மாவலி வாண ராயன் அந்த வேங்கை மீது அம்படிக்க அது செத்துப் போகின்றது. மாவலிவாண அரையன் கண்முன்னே தாழன் இறந்ததால் அவனுக்கு நெய்த்தோர் பட்டி நிலமாக தீர ஏரிக்குக் கிழக்கே ஆறு அளவை வயலும், பேர் ஏரிக்குக் கிழக்கே கருமீன் விற்பதற்கு மண்தடுப்பு மேடையும் தானமாக வழங்கப்பட்டது. இந்த அறம் அழித்தவன் ஒரு பாதகன் என சுட்டப்பட்டு உள்ளது. அல்லது மிடிந்த (மிடுக்கு) என்பது விரைந்த என்று பொருள்படுமானால். மாவலி அடித்த அம்பிற்கு மிரண்டு விரைந்து ஓடிய வேங்கை எதிரே மறித்த தாழனைக் கொன்றது அதனால் அவனுக்கு நிலக் கொடை வழங்கப்பட்டது எனக் கொள்ளலாம்.  இக்கல்வெட்டின் வாயிலாக 10 ஆம் நூற்றாண்டில் புலையரும் நாடாண்டு உள்ளனர் எனத் தெரிகின்றது. மதம் நன்கு வேரூன்றியதற்கு அடையாளமாக பாதகன் என்ற சமற்கிருத சொல் ஆளப்பட்டு உள்ளது. ஈரானின் எலாம் நாகரிகத்தில் Simashki ஆள்குடியில் ஒரு மன்னன் பெயர் Tazitta I 2040 - 2037 BC > தாழித்தன் [தாழ்(அன்) + இத்தன்]


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் - ஊத்தங்கரை சாலையில் கொரட்டி எனும் ஊரில் தமிழ் எழுத்தில் அமைந்த 9 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது.(ம. காந்தி & ப. வெங்கடேசன் ஆவ. இதழ் 12, பக் 5)


ஸ்வஸ்தி ஸ்ரீ வலியடக்கியார்க் கேழாவது / வலியடக்கியார் போவூர் நாடைந்நூறு பூமி / யுமாள காடு வெட்டிப் படை ஆறு (கு)ழுகூர் மேல் / வந்தெறிந்த ஞான்று வலியடக்கியார் கோ / யிற்றமன் வாணிக வாணிளவரையன் இரண்டு / குதிரையும் மேலரையும் குத்திப் பட்டான் நெ / த்தோர் பட்டி


எறிந்த - அழித்த; ஞான்று - அது போது; கோயிற்றமன் - கண்காணிப்பில், கண்முன்னே; மேலர் - மேல் அமர்ந்தோர்


வலியடக்கியார் எனும் சிற்றரசருக்கு ஏழாவது ஆட்சி ஆண்டில் வலியடக்கியார் போவூர் நாட்டு ஐநூற்று நிலத்தை ஆண்டு கொண்டிருந்த போது பல்லவக் கிளை மரபினனான காடு வெட்டியின் படை ஆறு குழுகூர் மீது வந்து ஊரழித்த போது நடந்த போரில் வலியடக்கியார் கண்முன்னே வாணிகனான வாண் இளவரையன் காடு வெட்டிப் படையின் இரு குதிரைகளையும் அதன் மேல் அமர்ந்துள்ள வீரர்களையும் ஆய்தத்தால் குத்திக் கொன்று வீர சாவடைந்தான். அதற்கு போரில் குருதி சிந்தியமைக்கு அரசனால் வழங்கப்படும் நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வாணிக வாண் இளவரையனுக்கு வழங்கப்பட்டது.  வலியடக்கியார் எந்த வேந்தனுக்குக் கீழ் ஆண்டார் என்ற செய்தி குறிக்கப்பட இல்லை. ஒருகால் பல்லவர் ஆட்சி சிலகாலம் குலைந்திருக்கலாம். அப்போது இவர் தனி ஆட்சி செலுத்தியவராகலாம்.  


கன்னட நடுகல் ஓர் ஒப்பீடு


தமிழ் நாட்டு நடுகல் மரபு போன்றே கருநாடகத்திலும் போரிலும், தொறுப் பூசலிலும் வீர சாவடைந்த மறவர் நினைவில் நடுகல் நிறுத்தும் மரபு பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ்நாட்டை விட கருநாடகத்தில் தான் அதிக அளவான வீரக்கற்கள் எனும் நடுகற்கள் நிறுவப்பட்டு உள்ளன. 20 வகைத்தான சற்றொப்ப 2,650 நினைவுக் கற்கள் கருநாடகத்தில் கண்டறியப்பட்டு உள்ளன என Memorial stones என்ற தம் நூலுள் S. Settar குறித்துள்ளார். மிகப் பழைமை வாய்ந்த கன்னட நடுகல் கல்வெட்டு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழ் நடுகல் கல்வெட்டு போலவே கன்னட நடுகல் கல்வெட்டிலும் வேந்தன் அல்லது மன்னன் பெயர், அவன் ஆட்சி ஆண்டு, அவன் கீழ் உள்ள படைத் தலைவர் பெயர், போர் பற்றிய செய்தி, அதில் மாண்ட மறவர் ஆகியன குறித்த செய்திகள் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழ்கக் கல்வெட்டில் இல்லாத சக ஆண்டு, நாள், நட்சத்திரம் ஆகியனவும் குறிக்கப்படுவது அதன் சிறப்பு ஆகும். இனி, கன்னட கல்வெட்டு செய்தி:


கோலார் மாவட்டம் முல்பகல் வட்டம் பைராகூர் எனும் ஊரில் 10 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி பொறிப்பு கொண்ட நடுகல் கல்வெட்டு. (கல்லெழுத்தில் காலச் சுவடுகள் எனும் நூல் Dr. சூ. சுவாமிநாதன், E.C., Vol. 10 ,Mulpagal No.23) )


சுவத்தி ஸ்ரீ மதிரை கொண்ட கொப்பரகெசரி / வர்ம்மகெ வரிஷம் இருபத்தொன்பத்துள் / பைய்தாகூர் ரவி நாடா மாரயம்மா மம்மா / கணிபராமன் துறவந் இக்கிசி அழகி சத்தான் / கல்நாடு பெர்ம்மாடிய சாமந்தப்பந் கொட்ட கழநி / ஒக் கண்டுகம் கெறைய கிழகெ


வர்ம்மகெ - வர்மர்க்கு; பைய்தாகூர் - இன்றைய பைராகூர்; மம்மா - மருமான்; துறவந் - தொறு எனும் ஆநிரையை; இக்கிசி - மீட்டு; அழகி - குலைதல், பதனழிதல் எனும் பொருளுடைய அழுகி எனும் செப்பச் சொல்; சத்தான் - பட்டான், வீர சாவடைந்தான்; கொட்ட - கொடுத்த என்பதன் கருநாடக வட்டார வழக்கு; கழநி - வயல், உழவு நிலம்; ஒக் - ஒரு என்பதன் தெலுங்கு வழக்கு; கண்டுகம் - ஓர் அளவு; கெறைய - கரை உடைய, கரையின்; கிழகெ – கிழக்கே


பாண்டியனை வென்று மதுரையைக் கைப்பற்றிய முதல் பராந்தகச் சோழனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.936) பைய்தாகூர் எனும் இனறைய பைராகூரில் இரவி நாட்டைச் சேர்ந்த மார அம்ம(ன்) என்பவனுக்கு மருமகன் எனும் படைஅதிகாரியான கணிபராமன் என்பவன் பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டபோதும் பகைவர் தாக்குதலில் உடல் உருக்குலைந்து வீர சாவு அடைந்தான். இதற்காக கல்நாட்டை ஆளும் பெருமானடி சாமந்தப்பன் என்பவன் நெய்த்தோர்ப் பட்டியாக கொடுத்த கழனி ஒரு கண்டுகம் அளவாகும். அது கரைக்கு (ஆற்றுங் கரையா அல்லது ஏரிக் கரையா என்று குறிக்கப்படவில்லை) கிழக்கே உள்ளது.  கோலார் அன்று சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கல்நாடு ஆண்ட பெருமானடி சாமந்தப்பன் என்பவன் அவனுக்கு அடங்கிய சிற்றரசன் ஆகலாம். மாரயம்மன் சாமந்தப்பனின் ஆட்சியை ஏற்ற ஊர்த் தலைவன் அல்லது வேள் எனலாம்.


யாழ்ப்பாண அகராதி இக்கு என்பதற்கு ஆபத்து என்றும் இசி என்பதற்கு இழு, வலி என்றும் பொருள் தருகின்றது. ஆக இக்கு+ இசி = இக்கிசி என்பதை இடரிலிருந்து இழுத்தல், விடுவித்தல் இதாவது, மீட்டல் என பொருள் கொள்வது சரியானதே. தமிழுக்கே சிறப்பாக உரிய ழகரம் இக் கல்வெட்டில் அழகி, கழனி ஆகிய இரு சொற்களில் பதிவாகி உள்ளது. வருஷம் என்ற சொல்லுக்குப் பின் வரும் சொற்கள் எவையும் சமற்கிருத வழிவந்தவை அல்ல யாவும் தமிழே. ஆனால் செப்பமான வழக்காக அல்லாமல் சிதைந்து வழங்குகின்றன. இதைத் தமிழ் என ஏற்பது இகழ்ச்சி. இதன் மூலம் 10 ஆம் நூற்றாண்டு வரை கருநாடக மக்களுடைய பேச்சு வழக்கு மொழி தமிழின் கொச்சைத் திரிபான அரைத் தமிழ் என முடிபு கொள்ளலாம். இதை மூல கன்னடம் (proto kannada) என்று கூறுவதும் தவறு. கன்னடத்தில் கெரை எனப்படும் கரை எனும் சொல்லை தமிழக ஊர்ப்புற மக்கள் இன்றும் கெர எனறே வழங்குகின்றனர். செத்தான் என்பது சத்தான் என எ > அ திரிபில் வழங்குகின்றது. தமிழின் தொறு துற என திரிந்துள்ளது. 'கு' எனும் தமிழின் நான்காம் வேற்றுமை கன்னடத்தில் 'கே' என வழங்கின்றது. சில தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிலும் 'கு' என்பது 'கே' எனப் பதிவாகி உள்ளது என்பது தமிழக மக்கள் வழக்கிலும் சிறு அளவில் 'கே' நான்காம் வேற்றுமையாக வழங்கியது என்பதைக் காட்டுகிறது.


தென்னிந்திய வீரக்கற்கள் எனும் நூலில் வெ. கேசவராஜ் மேற்கோல் காட்டிய ஒரு கன்னட நடுகல் கல்வெட்டு. (E.C., Vol. X, Cm. no. 69)


Svasti sri kolattura toru gole / sevaga Mudude toruva Ikkisi Sattan / idak amange kottodu ay-gole-kalani

ஸ்வஸ்தி ஸ்ரீ கொளத்தூர தொறு கொளி / சேவக முதுடே தொறுவ இக்கிசி சத்தன் / அமங்கே கொட்டொடு ஐ கொளி களநி


தொறு - ஆநிரை; கொளி - கொளில், கவர்வில்; சேவக - சேவகன் எனும் படைஆள்; தொறுவ - தொறுவை, ஆநிரையை; இக்கிசி - மீட்டு; சத்தன் - பட்டான், செத்தான்; இதக் - இதற்கு; அமங்கே - அவன்கே > அவனுக்கு; கொட்டொடு - கொடுத்தனர்; ஐ - ஐந்து; களநி - வயல், உழவு நிலம்.


இந்த நடுகல் கல்வெட்டில் அரசர் பெயரோ ஆட்சி ஆண்டோ குறிக்கப்படவில்லை. கொளத்தூர் ஆநிரைகளை பகைவர் கவர்ந்து விட்டனர். அதை அடுத்து நிகழ்ந்த மீட்புப் பூசலில் அவ்வூரின் படைஆள் முதுடை என்பவன் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான். அதற்காக அவனுக்கு (ஊரார்) ஐந்து அளவான கழனியைக் தொறுப்பட்டியாகக் கொடுத்தனர். அரசர், ஆட்சி ஆண்டு, போர்க் காரணம் முதலான செய்திகள் குறிக்கப்படவில்லை.  இதில் உள்ள அரைத் தமிழ்ச் சொற்கள் மேலும் சிதைவுறுவது சேவகன் > சேவகா, கழநி > களநி ஆகிய சொற்களில் விளம்பத் தோன்றுகின்றது. இது கன்னடம் மெல்லத் தனித் தன்மை பெற்றுவருதை சுட்டுகின்றது. தமிழின் உடைய எனும் ஆறாம் வேற்றுமைச் சொல்லின் உடை என்ற முன் இரண்டு ஒலிகள் கெட்டு ய = ய்+அ என்ற இறுதி ஒலியில் உள்ள அகரம் மட்டும் தங்கி நிலைத்து கன்னடத்தில் ஆறாம் வேற்றுமை ஆனது எனலாம். எனவே கன்னடம் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னீடேயே ஒரு முழு வளர்ச்சி பெற்ற தனி மொழியாக உருவானது என்று கொள்வதில் தவறு இல்லை. அதற்கு முன் கருநாடகத்தில் அது அரைத் தமிழாய் (Demi Tamil) இருந்துள்ளது என்பதே உண்மை.


தெலுங்கு நடுகல் ஓர் ஒப்பீடு


தமிழ்நாட்டு நடுகல் மரபு போன்றே ஆந்திரத்திலும் தெலுங்கு நடுகல் மரபு வழங்கி வந்துள்ளது. மொழி வேறுபாடு தவிர மற்ற எல்லாவற்றிலும் தமிழ்நாடு, கருநாடக நடுகற்களை முழுவதும் ஒத்ததாக உள்ளது. Heroes, Cults and Memorials - Andhra Pradesh 300 - 1600 AD, 1994, என்ற தம் நூலில் சந்திர சேகர ரெட்டி என்பவர் இது குறித்து விரிவாக எழுதி உள்ளார். ஆந்திரத்தில் மொத்தம் 476 நடுகற்கள் அறியப்படுள்ளன. இது தமிழ்நாட்டை விட எண்ணிக்கையில் அதிகம். என்றாலும் இவை பெரும்பாலும் இராயலசீமைப் பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. இனி, Inscriptions of Andhra Pradesh , Cuddapah District, Vol - 1, 1977, P V Para Bhrama Sastry, எனும் நூலில் இடம் பெறும் சில நடுகல் கல்வெட்டுகளை ஆய்வோம். கடப்பை மாவட்டம் இராயசோடி வட்டம் குருகுபள்ளி எனும் ஊரில் 10 நூற்றாண்டைச் சேர்ந்த பழைய தெலுங்கு எழுத்து பொறிப்பில் உள்ள நடுகல் இது. (165 / No. 492 of 1968)


Svasti Sri Kadasanditallu magaanru / e(npuna) kaala prayiti singhabupule / podichi chadi podichi / padiyen

ஸ்வஸ்தி ஸ்ரீ கடஸந்திதல்லு மகான்று / எ(ன்புன) கால ப்ரய்தி ஸிங்கbuபுலி / பொடிசி சடி பொடிசி / படியேன்


மகான்று - மகன் எனும் படைஆள்; கால - காலை; ப்ரய்தி(சமற்) - முன் இழுத்து செல்; ஸிங்கbuபுலி -probably a tiger என விளக்குகிறார் பரப்பிரம்ம சாத்திரி; பொடிசி > தமிழில் பொடித்து > பொடிச்சு > பொடிச்சி < பொடி - அழித்து , கெடுத்து ( to destroy); சடி > தமிழில் சடிலம் - அரிமா, நெருங்கிய பிடரி மயிர்(சடை) உள்ள சிங்கம் (செ.சொ.பி); படியேன் - பட்டான், வீர சாவடைந்தான், தமிழில் வீழ்தல் எனும் பொருளுடைய படு என்பது தெலுங்கில் படி எனத் திரியும்


வேட்டையின் போது எதிர்பாராத வகையில் ஒரு புலி கடஸந்திதல்லு என்பவனுடைய மகன் எனும் அதிகாரப் பொறுப்புள்ள படைஆள் என்பு உடைய காலைக் கவவி முன்னோக்கி தொலைவாக இழுத்துச் சென்று அவனை அழித்தது. சாகும் முன் அவன் அந்த சிங்கத்தை அழித்து வீர சாவடைந்தான்.  தமிழில் எறிந்து பட்டான் என்பதே தெலுங்கில் பொடிசி படியேன் என்று வழங்குகின்றது என்பது தமிழ் நடுகற்களை படிப்பவர் புரிந்து கொள்ள முடியும். தமிழில் பண்டு றகரம் டகரமாக ஒலித்ததை கருத மகான்று என்பது மகான்டு என்றே பலுக்கப்படவேண்டும். இதற்கு தெலுங்கில் வாடு, வீடு, எவடு என ஆண் பால் ஒருமை ஈறாய் இன்றும் வழங்குவது நோக்கத்தக்கது. சிங்கம் புலி ஆகிய இரு சொல்லும் ஒருசேரக் குறிக்கப்படுவதால் புலியாக இருக்கலாம் என்று ஐயப்படுகின்றார் பரப்பிரம்ம சாத்திரி. இதில் ஆளப்படும் சடி என்ற சொல் சிங்கத்தைக் குறிப்பதால் அது தவறு என்று உணரலாம். பொடித்து என்பது தமிழில் அழித்து என்று பொருள்படும். அதன் பேச்சு வழக்கு சொல் தான் இங்கு ஆளப்படும் > பொடிச்சு > பொடிச்சி > பொடிசி என்பது. prayata என்ற சமற்கிருத சொல்லுக்கு Monier Wiliams உடைய சமற்கிருத ஆங்கில அகராதியில் far extended என பொருள் கூறப்பட்டுள்ளது. இச்சொல்லைத் திரித்து ப்ரய்தி என்ற சொல்லை முன்னே தொலைவாக இழுத்துச் செல் என்பதற்கு உருவாக்கி இருக்கலாம். கன்னடத்தில் போல உடைய்+அ என்ற ஆறாம் வேற்றுமை உருபுச் சொல்லில் ஈற்றில் உள்ள அகரம் மட்டும் நிலைத்து முன் உள்ள பிற எழுத்துகள் கெட்டன. ஆதலால் என்பு உடைய என்பது என்புன என இங்கு குறிக்கப்படுகின்றது. வீழ்ந்தான் என்பதை இக்கால் தெலுங்கில் படேடு என வழங்குவர் ஆனால் இங்கு படியேன் என அன் ஈறு இட்டு குறிப்பிடுவது இதை தமிழோடு நெருக்கமாக வைக்கின்றது. இதனால் தான் பல கல்வெட்டு சொற்களுக்குப் பொருள் விளங்கவில்லை என்று குறிக்கின்றார் பரப்பிரம்ம சாத்திரி. இதில் சிதைந்த தமிழ்ச் சொற்கள் வழங்குவதால் இதை அரைத்தமிழ் என்று கூறலாமே அன்றி தெலுங்கு என்றோ, மூல (proto) தெலுங்கு என்றோ உரைப்பது தவறு. ஆக 10 ஆம் நூற்றாண்டு வரை ஆந்திர நாட்டு மக்கள் மொழி அரைத் தமிழாய் இருந்தது என்பதே உண்மை நிலை.


கடப்பா மாவட்டம் புலிவேண்டுல வட்டம் சகலேரு எனும் ஊரில் சிவன் கோயில் முன் உள்ள மேடையில் பொறிக்கப்பட்டு உள்ள நடுகல் கல்வெட்டு (34 / No. 239 of 1968)


Svasti Sri (Anna - - - ma) / gaanthru ( -) ddi (- - - -) / gambu cheng(leru) / toru dinina / peddini po / dichi padiye

ஸ்வஸ்தி ஸ்ரீ (அண்ண - - - ம) / கான்று ( - ) த்தி ( - - - ) / gaம்பு செங்க(லேரு) / தொறு தினின / பெத்தினி பொ / டிசி படியே


தொறு - ஆநிரை; தினின - தின்ற; பெத்தினி - ஒரு பேருரு கொண்ட விலங்கை; பொடிசி < பொடித்து - அழித்து; படியே < பட்டான் - வீர சாவடைந்தன்.


அண்ண - - - என்பவனுடைய மகன் எனும் படைஆள் - - - த்தி கம்பு எனபவன் செங்கலேரு ஆநிரைகளைத் தின்ற பெத்தியை அழித்துத் தானும் இறந்தான்.


பெத்தினி என்ற சொல்லில் உள்ள 'னி' என்ற தெலுங்கின் இரண்டாம் வேற்றுமை இதில் வருவது அம்மொழி தனித் தன்மை பெற்று வருவதைக் காட்டுகிறது. யாழ்பாண அகராதி பெந்தை < பெத்தை என்பதற்கு அருவருப்பாய் பருத்த (Monstrosity) எனப் பொருள் தருகின்றது. எனவே ஊருள் புகுந்து விலங்குகளை உண்பது புலி, சிறுத்தை என அறியப்படுவதால் பெருத்த என்ற இதன் விளக்கத்தை இதனோடு பொருத்திப் பார்த்தால் அது பெரும் புலியான வேங்கை என்பது தெளிவு. பெருத்த > பெத்த எனத் திரியும். தெலுங்கில் பெத்த என்றால் பெரிய எனப் பொருள். கடப்பா மாவட்டம் இராயச்சோடி வட்டம் இராயவரம் எனும் ஊரில் 9 அம் நூற்றாண்டு தெலுங்கு எழுத்தமைதியில் நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது.(31 / No. 358 of 1968)


Svasti sri nidla kaama / raajula urelki klo / kila adiyamma / nadarura toru / gona jachchen

ஸ்வஸ்தி ஸ்ரீ நிட்லகாம / ராஜுல ஊரெள்கி க்ழோ / கில அடியம்ம / நதரூர தொறு / கொண ஜச்சென்


ஊரெள்கி < ஊர் எல்கி - ஊர் எல்லைக் காவலன்; தொறு - ஆநிரை; கொண - கொணர (மீட்டு); ஜச்சென் < சச்சென் < சத்தென் < சத்தான் - பட்டான், வீர சாவடைந்தான்

நிட்ல காமராஜுல் உடைய ஊர் எல்லைக் காவலன் கூழ் ஓகில(ன்) அடியம்ம(ன்) என்பவன் நதரூர் உடைய ஆநிரையை பகைவரிடம் இருந்து கொணர (மீட்டு) வீர சாவடைந்தான். ராஜுல மற்றும் நதரூர ஆகிய பெயர்ச் சொற்களில் ஈறாக வரும் அகரம் உடைய்+அ என்ற தமிழின் ஆறாம் வேற்றுமை உருபுச் சொல்லின் ஈற்றொலி ஆகும். முன் உள்ள மற்ற ஒலிகள் கெட்டு அகரம் மட்டும் தங்கி அதன் பொருளான உடைய என்பதையே கன்னடத்தில் குறிக்கின்றது. அந்த கன்னட வேற்றுமை உருபு தெலுங்கில் பயன்படுத்தப்பட்டிருப்பது இவ் இரு மொழிகளும் தொடக்கத்தில் ஒரே மூலத்தைக் கொண்டிருந்ததை இக்கல்வெட்டு சுட்டுகின்றது.


எல்லை என்ற சொல்லுக்கு எல்கை என்ற மற்றொரு திரிபுச் சொல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் குறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த எல்கை என்ற சொல்லில் இருந்தே எல்கி என்ற சொல் எல்லைக் காவலனைக் குறிக்க உருவாகியது எனலாம். கொணர என்பது தெலுங்கிலும் கன்னடத்திலும் Gona என்று திரிந்து மீட்பு என்னும் பொருளைக் குறித்தன. சச்சன் என்பது கொடுங் கொச்சையாக ஜச்சன் எனத் திரிந்து உள்ளது. ஆயினும் அன் என்ற தமிழ் ஆண் பால் ஒருமை ஈறைக் கொண்டுள்ளது. கன்னடம் போல் தெலுங்கிலும் 10 ஆம் நூற்றாண்டு வரை தமிழுக்கே சிறப்பாக உரிய ழகரம் வழங்கி இருப்பதையும் இத் திரிபுகளையும் கருத்தில் கொண்டு பார்த்தால் ஆந்திரத்தில் 10 ஆம் நூற்றாண்டு வரை அரைத் தமிழே மக்கள் பேச்சு மொழியாக இருந்தது என்று எண்ணத் தோன்றுகின்றது. ழகரம் அரசர் வெளியிட்ட கல்வெட்டுகளிலும் பயில்கின்றது.


ஆந்திர கருநாடக வடபகுதிகள் மௌரியர் ஆட்சிக்கு முன்னீடேயே நந்தர் ஆட்சியில் மகதத்திற்கு கட்டுப்பட்ட பகுதியாக ஆகிவிட்டன. எனவே அங்கு அரசு மொழியாக பிராகிருதம் நிலை பெற்றுவிட்டது. அதோடு வடநாட்டைச் சேர்ந்த சமண பௌத்த வேத நெறிகள் தக்காணத்தின் இப்பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியதன் காரணமாக பிராகிருதமே சமய மொழியாகவும் அப்பகுதிகளில் திணிக்கப்பட்டதால் அங்கு வழங்கிய தமிழ் மொழி சில நூற்றாண்டுகளில் மக்கள் பேச்சு வழக்கில் சிதைந்து விட்டதோடு இலக்கிய வழக்குத் தமிழ் முற்றாக அரசு சமய தளங்களில் போற்றுவாரின்றி ஒழிந்ததால் அங்கு தமிழ் அரைத் தமிழ் நிலையை அடைந்தது என ஊகிக்க முடிகின்றது. எனினும் சாதவாகனர் ஆட்சி வரையில் அங்கு செப்பமான தமிழ் ஒரளவிற்கேனும் வழங்கி இருத்தல் வேண்டும். அல்லாக்கால், வசிட்டி மகன் திரு சதகணி என்றும், அரசனுக்கு கவுதமி புதக்கு என்றும் தமிழில் சாதவாகனர் காசு வெளியிட்டு இருக்கமாட்டார்கள். இவர்கள் ஆட்சி கிருஷணா ஆற்றோடு முடிந்து விட்டது என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. பின் ஏன் இவர்கள் தமிழில் காசு வெளியிட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அங்கு மக்கள் மொழியாய் தமிழ் இருந்தது என்பதே இதற்கு விடை ஆகும்.  இவ்வாறு மக்கள் பேச்சு வழக்கில் சிதைவும், பிராகிருத சமற்கிருத சொற்கலப்பும் நேர்ந்ததால் அரைத் தமிழாகிப் போன மக்கள் மொழி 10 ஆம் நூற்றாண்டு வரை அவ்வாறே வழங்கிப் பின் தெலுங்காகவும், கன்னடமாகவும் தனித் தனியே பிரிந்து முழுவளர்ச்சி பெற்ற மொழிகள் ஆயின என்பதற்கு மேலே படிக்கப்பட்ட நடுகற் கல்வெட்டுகளே நேர்ச் சான்று. அரசர் மதத்துறையோர் வெளியிட்ட செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் அரை சமற்கிருத பயன்பாடு அதிகம் இருப்பதால் 10 ஆம் நூற்றாண்டுக்கு முன் மக்கள் பேசிய மொழி குறித்து அவற்றில் துலக்கமாக அறிய முடியாது. ஆனால் அறிஞர் பலரும் அவற்றைத் தான் தம் ஆய்விற்கு துணையாகக் கொண்டு அவர் முடிவுகளை வெளியிடுகின்றனர். திரு பிரபாத் ரஞ்சன் சர்க்கார் மட்டுமே இதில் தெளிவான கருத்தை வெளியிட்டு உள்ளார் அவரது கருத்துகள் கீழே:


Tamil is one of the oldest languages of India. It is more than four thousand years old. Tamil had two daughters: Northern Demi - Tamil and southern demi - Tamil. There are two languages in the Northern Demi - Tamil group - Telegu and kannad. Southern Demi - Tamil also has two languages - Tamil and Malayalam. In addition there is the Tulu language which is a mixture of Northern Demi - Tamil and Southern Demi - Tamil

by Prabhat Ranjan Sarkar on 24 July 1963, Calcutta. Published in Varna Vijinana, Chapter: More on Suffixes and Prefixes (Discourse - 6)

Regarding the five Dravidian languages, including kannada, Tamil, Malayalam and Telugu, their pronouns, verb endings and case endings are of old Dravidoid tongue, but their vocabularies are demi - sanskritic. These languages use old Dravidoid and Sanskritic vocabularies. But the percentage of Samskrta words varies from 3% in Tamil to 74% in Malayalam. Old Tamil is 5,000 years old. It is very old language.

by Prabhat Ranjan Sarkar on 25 september 1990, calcutta. Published in: Prout in a Nutshell Part 17 The Evolution of Indian Languages


பார்வை நூல்கள்

Inscriptions of Andhra Pradesh, Cuddapah Dist. Vol I, Para Brahma Sastry, 1977

South Indian Memorial Stones - Rajan .K, 2000

செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1972

தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி I, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1975

தொல்குடி - வேளிர் - அரசியல் (செங்கம் நடுகற்கள் ஓர் ஆய்வு), பூங்குன்றன் . ஆர், 2001 தமிழோசை பதிப்பகம்

நடுகற்கள், கிருஷ்ணமூர்த்தி .ச, 2004, மணிவாசகம் பதிப்பகம்

கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2007

கல்லெழுத்தில் காலச் சுவடுகள், Dr. சூ. சுவாமிநாதன்

தென்னிந்திய வீரக்கற்கள், கேசவராஜ் .வெ, 2008, காவ்யா வெளியீடு

ஆவணம் இதழ் 1991 - 2011, தொல்லியல் ஆய்வுக் கழகம் வெளியீடு, தஞ்சாவூர்


சேசாத்திரி.


Kasu2.jpg

--Geetha Sambasivam 12:00, 9 ஜூலை 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஆகஸ்ட் 2012, 11:28 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,654 முறைகள் அணுகப்பட்டது.