நடுகற்கள், கல்வெட்டு காட்டும் மக்கள் வரலாறு, மக்கள் மொழி பகுதி 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மடவாளம் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு இது. (தொல். வே. அர., பக்.146)


கோவிசைய ஈச்சுர பருமற்கி / பதிநொன்றாவது மைற்றம்பள் / ளிப் பசுக் கொண்ட ஞான்று / - - - - யார் சேவகர் வெள்ளை ஏறனார் தொறு இடுவித்துப் பட்ட / தொ - - - பா / ழ் ஆள்வார் / மக்கள்

சேவகர் - படைவீரன்; இடுவித்து - விடுவித்து; மக்கள் - மகன் எனும் பொறுப்பு உள்ள படைஅதிகாரி


பரமேச்சுர வர்மனாகலாம் இவர் எனக் கருதப்படும் ஈச்சுர வர்மனின் பதினொன்றாவது ஆட்சி ஆண்டில் மைற்றம்பள்ளி எனும் ஊரின் பசு நிரைகளைக் பகைவர் கவர்ந்த போது (பெயர் சிதைந்த) சிற்றரசரின் படைஆள் வெள்ளை ஏறன் என்பவன் பசுநிரைகளை மீட்டு விடுவித்து வீர சாவடைந்தான். அவனுக்கு தொ(க்கைப்) பாழ் ஆள்வான் என்பவனுடைய மகன் பொறுப்பு அதிகாரி இந்த நடுகல்லை நிறுத்தியவன். வேள் தொக்கை பாழ் ஆளவான் பெயர் சிதைந்த சிற்றரசனின் ஆளுகையை ஏற்றவன் ஆகலாம்.  தமிழின் நான்காம் வேற்றுமை ஆன 'கு' பருமன் என்ற சொல்லில் 'கி ' எனக் குறிக்கப்படுவது பண்டு மக்கள் வழக்கில் அது சில பகுதிகளில் 'கே' என்றும் 'கி' என்றும் சிறு அளவில் வழங்கி இருக்கலாம் என்ற ஊகத்திற்கு இடம் அளிக்கின்றது. மக்களின் இந்த கொச்சை வழக்கே கன்னடத்திலும் தெலுங்கிலும் செம்மை வழக்காக இன்று நான்காம் வேற்றுமைக்கு ஆளப்படுகின்றன என்பது நோக்கத்தக்கது. 


தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் அனுமந்தபுரம் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (தொல். வே. அர., பக். 147)


கோவிசைய ஈச்சுரபருமற்கி / யாண்டு பதினேழ்ழாவதன் / கட் காட்டிறைகள் செயிக்க வரசர் / மாற்றுடை சென்று தான் அறுபட்டான் / காட்டிறைகள்


மாற்றுடை - மாறு வேடம்; அறு - வெட்டுப்படு


ஈச்சுர வர்மனுடைய பதினேழாவது ஆட்சி ஆண்டில் பல்வனுக்குக் கீழ்ப்பட்ட அரசன் கள் காட்டிறைகள் போரில் ஈடுபட, தன் அரசனான கள் காட்டிறைகள் போரில் வெற்றி பெறுவதற்காக அவரைப் போல் மாறு வேடம் பூண்டு பகைவரால் போர்க் களத்தில் சூழப்பட்டு அவரால் வெட்டப்பட்டு வீர சாவடைந்தான் காட்டிறைகள் என்பவன். காடு + இறை என்பது காட்டை ஆண்ட அரசன் என்று பொருள் தருகின்றது. இந்த காட்டிறைகள் என்பவன் அரசன் கள் காட்டிறைகளின் தம்பியாவோ அல்லது உறவினனாகவோ இருக்கலாம். ஜயம் என்ற சமறகிருதச் சொல்லை மூலமாகக் கொண்டு உருவான ஆன செயிக்க என்ற சொல் வெல்ல என்ற தமிழ்ச் சொல்லுக்கு மாற்றாக இங்கு ஆளப்பட்டுள்ளது. இக்கலப்பு இவர்கள் அரச குடும்பத்தவர் என்பதால் ஆகலாம். ழகரம் இயல்புக்கு மாறாக இங்கு இரட்டித்து உள்ளது.  


தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் அனுமந்தபுரம் எனும் சிற்றூரில் மேல் உள்ள கல்வெட்டு நிகழ்வுடன் தொடர்புடையது இந் நடுகல் கல்வெட்டு உள்ளது. (தொல். வே. அர., பக். 147)


கோவிசைய / ஈச்சுர பரும / ற்கி யாண்டு பதினேழ்ழாவத / ன் கட் கணையூர் மாற்றுடைப / டத் தான் அறுபட்டான் காட்டிறைகள் சேவகன் பூதூர் சாத்தன்


படு(பட) - தோன்று; பட்டான் - வீர சாவடைந்தான்


ஈச்சுர வர்மனுடைய பதினேழாவது ஆட்சி ஆண்டில் கள் கணையூர் அரசர் போர்க்களத்தில் மாறுவேடத்தில் தோன்றவே காட்டிறைகளின் படை ஆள் பூதூர் சாத்தன் என்பவன் இதனால் மதிமயக்கமுற்று பகைவரால் சூழப்பட்டு வெட்டுண்டு வீர சாவடைந்தான்.  மேலுள்ள இரு கல்வெட்டுகளையும் ஒப்பு நோக்க கள் காட்டிறைகள் போல மாறுவேடத்தில் காட்டிறைகள் போர்க் களத்தில் போர் புரிந்தது போல் எதிரணியின் அரசன் கள் கணையூரனும் மாறுவேடத்தில் போர்க களத்தில் தோன்றியதால் அவனை எளிதில் அறிய முடியாமல் தேடித் தேடி அவனுடைய படை ஆள்களிடமே சிக்கிப் பூதூர் சாத்தனும் காட்டிறைகளும் வெட்டுப்பட்டு இறந்தனர் என ஒருவாறு ஊகிக்க முடிகின்றது. பண்டு மாறுவேடத்தில் போர்க்களம் செல்வது இயல்பாக நிகழ்ந்துள்ளது என்பதற்கு இக் கல்வெட்டுகள் சான்று ஆகின்றன.  துருக்கியை ஆண்ட மித்தானி அரசர்கள் சாத்த என்ற பெயரைக் கொண்டிருந்தனர் Sattuara I 1320 - 1300 BC > சாத்து அர; அவனுடைய மகன் Vashasatta 1300 - 1280 BC > வச சாத்த(ன்).  


வேலூர் மாவட்டம் வாணியம் பாடி வட்டம் ஆலாங்குப்பம் எனும் ஊரில் 9 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது. (ம. காந்தி, ஆவ. இதழ் 11, 2000, பக். 7)


ஸ்ரீ கோவிசைய தந்தி விக்கிரம பரு / மற்க்கு யாண்டு பதின் நா / ல்காவது அடையாறு நாடு ம /லையன்னாராள ஒருகில் மணற் / ச் சுனை மேற் படை வர ஊர் அழியா / மைய் காத்து பட்டான் சத்தி / ம வகிலவன் வீரையர்க் கல் / பென்னை

பல்லவன் தந்திவர்மனுடைய பதினான்காவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 810) அடையாறு நாட்டை மலையன் + ஆர் ஆண்டு கொண்டிருக்க அப்போது அதன் ஒரு பகுதியான ஒருகில் மணற்சுனை மீது பகைப் படை வந்தது. இந்த ஒருகில் மணற்சுனை எனும் ஊர் பகைப்படையால் அழிக்கபபடாமல் காத்துப் போரிட்டு வீர சாவடைந்தான் அவ்வூர் சத்திம வகிலவன் புதல்வன் வீரையன் என்பவன். அவன் நினைவில் பென்னை என்பவர் இந்நடுகல்லை நிறுத்தினார். ஸ்ரீ என்ற கிரந்த எழுத்து மங்கலச் சொல் தந்தி வர்மன் காலத்தில் பல்லவர் கல்வெட்டுகளில் நிரந்தமாக இடம் பிடிக்கத் தொடங்கியது.


வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் இந் நடுகல் கல்வெட்டு உள்ளது. (E.I. Vol - IV, Pg 182)


ஸ்ரீ கோ விசைய நிரு / ப தொங்க விக்கிரம பரு / மற்க்கு யாண்டிருபத்தாறாவ / து படுவூர்க் கோட்டத்து மே / ல் அடையறு நாட்டு ஆமையூர் / மேல் நுளம்பன் படை வந்து தொறுக் கொள்ள பிரு / தி கங்கரையர் சேவகர் பெரு / நகர் அகரக் கொண்டக் காவிதி அகலன் கட் / டுவராயர் மகன் சன்னன் தளரா வீழ்ந்து பட்டான்


காவிதி - படைத் தலைவருக்கு அரசன் தரும் ஒரு பட்டம்; தளரா - மனங்குலையாமல், இளைப்பாராது


பல்லவன் நிருபதுங்க வர்மனுடைய இருபத்தாறாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 895) படுவூர்க் கோட்டத்தில் அடங்கிய மேற்கு அடையறு நாட்டுப் பகுதியான ஆமையூர் எனும் இன்றைய ஆம்பூர் மீது நுளம்பன் படை வந்து ஆநிரைகளைக் கவர்ந்தது. அப்போது பல்லவனுக்கு கட்டுப்பட்ட பிருதி கங்க அரையரின் படைத் தலைவனான அகலன் கட்டுவராயன் என்பவனுக்கு மகன் பொறுப்பு படைஅதிகாரி சன்னன் என்பவன் மனங்குலையாமல் போரிட்டு வீழ்ந்து வீர சாவடைந்தான். பெருநகர் அகரக் கொண்டக் காவிதி அகலன் கட்டுவராயனின் தந்தை ஆகலாம். இக் கல்வெட்டில் குறிக்கப்படும் கங்க மன்னன் பிரிதி கங்க அரையன் என்பவன் கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி ஆவான். சன்ன்ன் என்ற பெயர் Silla வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயரில் வழங்கிகின்றது, Chungnyeol 1274 - 1308 AD > சன் நய்யல் > சன்(னன்) நய்யன். சீனத் தாக்கத்தால் கொரியத்தில் ன் > ங் எனத் திரியும். மேலே ஒரு கல்வெட்டில் நய்ய வடுகன் என்ற பெயரையும் நோக்குக. அகலன் என்ற பெயர் எதியோபிய நாகரிகத்திலும் உண்டு Agalbus Sepekos 500 - 478 BC > அகலவ(ன்) சிப்பிக(ன்); இன்னொருவன் பெயர் Agalbul 70 BC > அகலவல் என்பது.


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் ஆசனம்பட்டு எனும் ஊரில் 9 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது. (தொல். வே. அர., பக். 149)


ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப பருமருக்கு / இருபத்தொன்பதாவது படுவூர் கோட்டத்து பாலி / நாட் டொச்சூர் சந்திரசேகரராள குளைய மாரன் தொறு கொள்ள சிறுபாழ்நாட்டு அச் / சமங்கலமுடைய / வேட்டரடி வியம / ன் தொறு மீட்டுப் பட்டார்


அடி - சேவகன் எனும் படைஆள்


பல்லவன் கம்ப வர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 898) அவன் ஆளுமையை ஏற்ற படுவூர்க் கோட்டத்தில் அமைந்த பாலி நாட்டின் ஒச்சூரை சந்திரசேகரன் எனும் சிற்றரசன் ஆண்டு கொண்டிருந்தான். குளைய மாரன் என்பவன் ஒச்சூர் ஆநிரைகளைக் கவர்ந்து விட சிறுபாழ்நாட்டு அச்சமங்கலத்தைச் சேர்ந்த வேடனுக்கு அடியான் வியமன் எனபவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான். புராண கருத்துகள் குமுகத்தில் வேரூன்றியதற்கு சான்றாக சிற்றரசனுக்கு சந்திரசேகரன் என்ற சமற்கிருத பெயர் அமைந்து உள்ளது. வியமன் என்ற பெயர் இகர > எகரமாகத் திரிந்து வேமன் என ஆகி ஆந்திர நாட்டில் வழக்கூன்றியது.  தமிழில் பெயர் ஈறாக அன் மட்டும் அல்லாமல் அல், அம் ஈறுகளும் வழங்கின. அவ்வாறு வழங்கிய தங்கன் வழி வந்த ஒரு கொரிய வேந்தன் பெயர் Beoleum BC 1661 - 1610 > விய்யல் இயம் > விய்யன் இயன். வியமன் 'மன்' ஈறு பெற்ற விய்யன் ஆகும். 


விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் செஞ்சி செல்லும் சாலையில் விழுப்புரத்திற்கு 6 கி. மீ. வடக்கே அமைந்துள்ள ஏரியின் தலைமடைக்கு முன் நடப்பட்டுள்ள பலகைக் கல்லில் இந் நடுகல் வெட்டப்பட்டு உள்ளது. (நடு. பக்.470) / [விசய வேணுகோபால், பாண்டி, த. தொ. க. இதழ். பக். 15]


பிரையகம் யெறிந்த / க் கால்லப் போருட்ப / ட்டான் தெருக்கால்லா / ரு மகன் நீலகண்ட(ரைச) / ன் கல்


கால்லர் - காலாட்படை (Infantry); தெருக்கால்லார் - தெருக் காவல் மேற்கொள்ளும் காலாட்படை தலைவர்


பிரையகம் என்ற இடத்தை அழித்த காலாட்படையின் போரில் தெருக்காவல் மேற்கொள்ளும் காலாட்படைத் தலைவரின் மகன் நீலகண்ட அரைசன் வீரசாவடைந்தான். அவன் நினைவில் நட்ட நடுகல் இது. பண்டு நகரங்களின் தெருக்காவலுக்கு காலாட்படையே ஈடுபடுத்தப்பட்டது. அவ்வாறான ஒரு படை பிரையகம் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டு அதை அழித்து உள்ளது. இது நகர் முற்றுகைப் போர் ஆகலாம். அப்போரில் அப்படையின் ஒரு ஆள், இதாவது, அரைசர் பொறுப்பில் இருந்த நீலகண்டன், படைத் தலைவரின் மகன் இறந்துள்ளான். எளியோரும் அரைசர் ஆகி உள்ளனர் என்பதற்கு நீலகண்டன் ஒரு சான்று. கல்வெட்டில் அரசன் பெயர், ஆட்சி ஆண்டு குறிப்பிடாமல் உள்ளது. இக்கல்வெட்டு தமிழ் பிராமியில் இருந்து வட்டெழுத்து பிரியும் காலகட்டத்து எழுத்து பொறிப்பில் உள்ளது, மெய்எழுத்து புள்ளிகளுடன் உள்ளது. எனவே விஷ்ணு வர்மனின் இருளப்பட்டி கல்வெட்டிற்கும் முந்தையது இது எனலாம். இதை 3 - 4 ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம்.


தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் கொளகத்தூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. (கிரு.மா. கல். 86/1974)


மாந்த பருமற்கு இரபத்திரண்டா / வது வரி ஊரி நாட்டுவர் கரு இரும்புரை / சாத்தன்னோ / டு கற்றொறு / கொள்ளுட் ப / ட்டாரு கல்


கற் - கன்று; கொள்ளுட் - கவர்தலில்; கல் – நடுகல்


யாருக்கும் அடங்காமல் தனி ஆட்சி செலுத்திய மாந்த வர்மனுககு இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 728) வரி ஊர் நாட்டவரான கரு இரும்பொறை சாத்தன் என்பவனோடு சேர்ந்து கன்றையும் ஆநிரையையும் கவரும் போது எதிரணிப் படை நடத்திய காப்புப் போர் தாக்குதலில் வீர சாவடைந்தான் பெயர் குறிக்கப்படாத படைவீரன்.  இதில் இடம்பெறும் ஆள் பெயர்களை நோக்க இவர்கள் சேர மரபினரோ என ஐயம் ஏற்படுகின்றது. ஒரு சப்பானிய வேந்தன் ஈமப் (Posthumous) பெயர் Montoku 850- 858 CE > மாந்தக்கு (மாந்த + அக்கு) எனும் தமிழ்ப் பெயர்


கங்கர் ஆட்சி நடுகல்


கங்கர் முதலில் பல்லவருக்குக் கட்டுப்பட்ட மன்னர்களாயும், பின்பு பேரரசுச் சோழருக்குக் கட்டுப்பட்டவராயும் இருந்துள்ளனர். இவர்கள் சில போது பல்லவருடனும் பெரும்பாலும் பாணர் நுளம்பருடனும் போரிட்டும் உள்ளனர்.தருமபுரியின் தகடூர், செங்கம் பகுதிகளில் ஆட்சி செலுத்தி உள்ளனர். இவர்களுடைய நடுகற்கள் இருபத்து ஐந்திற்கு மேல் கண்டறியப்பட்டு உள்ளன. தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நவலை எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற நடுகல் கல்வெட்டு உள்ளது (தரும. கல். 1974/61)


ஸ்ரீ சிவமார பருமற்கி யாண்டு மூன்றாவது / கந்தவாண்ணாதியரையர் புறமலை நாடாள / வாண பெருமன் கூடல்லெறிந்த ஞான்று சாத / வப்பன் / னார் படை / த்தன் கொட் / டி உண்ணி / பட்டான்


தன் - தன்னை; கொட்டி - அடித்து


கங்க மன்னன் முதலாம் சிவமாறனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 682) அவனுக்கு அடங்கிய சிற்றரசன் கந்தவாண் அதிஅரையன் புறமலை நாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது வாணபெருமன் கூடல் எனும் தீர்த்தமலையை அழித்த போது சாதவப்பன் என்பவனுடைய படை தன்னை அடித்து வீழத்த உண்ணி என்பவன் வீர சாவடைந்தான். வாண பெருமன் வாண மன்னனாக இருக்கலாம். உண்ணி என்ற பெயர் எகிபதிலும் வழங்கி உள்ளது. அங்கு ஐந்தாம் ஆள் குடியில் ஒரு மன்னன் பெயர் Unas also refered as unis > உண்ணி.



--Geetha Sambasivam 11:56, 9 ஜூலை 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 27 ஜூலை 2012, 09:32 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,836 முறைகள் அணுகப்பட்டது.