நச்சினார்க்கினியரின் நகைச்சுவை விருந்து

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சு.தி.சங்கரநாராயணன்



இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களை ஒருங்கிணைத்தும், புதுமைக்கு வித்திட்டும் எதிர்காலத்தவருக்கு வழிகாட்டியாகத் தோன்றியது தொல்காப்பியம்.

தொல்காப்பியம் முழுமைக்கும் இளம்பூரணருக்குப் பின்னர், உரை வகுத்து, விளக்கம் தந்தவர் என்ற பெருமை நச்சினார்க்கினியருக்கு உண்டு.

இலக்கண நூல்களில் தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியம் கற்றுத் தேர்வது சற்றுக் கடினம் என்பர் தொடக்கநிலைக் கல்வியாளர். ஆனால் ஆழ்ந்து கற்கும் கல்விவல்லார்க்கு நச்சினார்க்கினியம் - எழுத்ததிகாரம், களிப்பு ஊட்டும் தன்மையது.

தமிழ்+கட்டுரை=தமிழ்க்கட்டுரை,
சொல்+ பொழிவு = சொற்பொழிவு

இவ்வாறு நிலைமொழியில் உள்ள மெய் எழுத்து, வருமொழியுடன் இணைந்து (புணர்ந்து) ஒலிக்கும்போது மாற்றங்கள் ஏற்படும்.


இதனை விரிவாக எழுத்ததிகாரம் - புள்ளி மயங்கியலில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இறுதியாக,

"உணரக் கூறிய புணரியல் மருங்கின்
கண்டுசெயற்கு உரியவை கண்ணினர் கொளலே."

என்னும் நூற்பாவைப் புறனடையாக அமைத்தும் உள்ளார்.


புணரியலில் இதுவரை கூறிய வரையறைகளுடன் அதற்கு மேலும் கண்ணியமுள்ள நூலறிஞர்கள் கூறும் விதிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்த நூற்பாவின் கருத்தாகும்.



பல், சொல், நெல் என்னும் சொற்களுக்கு "கு" என்னும் நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது, பற்கு, சொற்கு, நெற்கு என்றுதான் வரவேண்டும். ஆனால் உலக வழக்கில் கூடுதலாக ஒரு, "உ"கரம் சேர்த்து பல்லுக்கு, சொல்லுக்கு, நெல்லுக்கு என்று பேசுகிறார்கள். இதை - இந்தப் புறனடை நூற்பாவால் ஏற்கச்செய்ய வேண்டுமென நச்சினார்க்கினியர் விரும்பினார். அதற்கு எடுத்துக்காட்டாக பாடல் ஒன்றும் தந்துள்ளார்.

மதுரை மாநகர வீதியில் மங்கை ஒருத்தி பண்டமாற்று முறையில் நெல்லுக்கு ஈடாக நெல் அரிசிமாவு (பச்சரிசி மாவு) விற்றுச்செல்கிறாள். "நெல்லுக்கு நூறோ ஓ நூறு...!" (நூறு - நொறுங்கல், மாவு) என்று கூவுகிறாள். வீதியில் நின்ற இளைஞன் மாவு விற்கும் மங்கையின் தோற்றத்தில் மயங்கினான். மாவு விற்கும் மங்கையின் பல்லுக்கு முல்லை மொட்டுகள் தோற்றன. அவளுடைய சொல்லுக்குக் கிளிகள் மிழற்றும் மழலை மொழிகள் தோற்றன. அம்மங்கை நல்லாளின் மெல்லிய இடையழகுக்கும் மென்முலைக்கும் போட்டியாக வந்து நின்று தோற்று ஓடும் பொருள்கள் ஏதேனும் உண்டோ என்று மதுரை மாநகரின் வீதியில் நின்ற இளைஞன் சிந்தித்தான். சிந்தனை வளர்ந்தது; வெண்பா ஒன்று உதித்தது.


"பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்று இன்னும் தோற்றிலமால் - நெல்லுக்கு
நூறோஓ நூறென்பாள் நுடங்கு இடைக்கும் மென்முலைக்கும்
மாறோ? மால் அன்றளந்த மண்."


வாமன அவதாரத்தில் - மாவலிச் சக்ரவர்த்தியிடம் திருமால் மூன்றடி நிலம் யாசித்தார். மாவலி தந்த மண்ணுலகம் முழுமையையும் முதலடியிலேயே அளந்து நின்றார் நெடுமால். பெரும்புகழுடைய அந்த மால் கொண்ட மண்ணுலகம் இன்றும் இருக்கிறது. குன்றுகளும் மலைகளும் அவற்றிலிருந்து பிறந்தும், நெளிந்தும், வளைந்தும் செல்லும் ஆற்று நீர்ப்போக்கும், வளம்மிகுந்த பள்ளத்தாக்குகளும் இருக்கின்றன. அசைந்து, ஒசிந்து நிற்கும் மெல்லிடைக்கும், கோடுயர்ந்து எழுந்து நிற்கும் மென்முலைக்கும் போட்டியாக மால் அன்றளந்த மண்ணுலகம் முழுமையும் இன்று நிற்கலாம். அவ்வாறு நின்றால்... பிரமதேவன் படைப்பான இம்மங்கை நல்லாளே வெற்றி பெறுவாள்...என எண்ணினான் அந்த இளைஞன்.

மதுரை மாநகர வீதியில் நின்ற இளைஞன் பெருமூச்செறிந்தான்.

பூவுலகத்தையும் புத்தேள் நாட்டையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். மறுதட்டில் குறுமகள் தோள்மாறும் போது பெறும் இன்பத்தை வைக்க வேண்டும். தூக்கிச் சீர்பார்க்க வேண்டும். அப்பொழுது பூவுலகு, புத்தேள் நாடு ஆகிய இரண்டும் சேர்ந்த தட்டே குறைவுபட்டுத் தோற்றுப்போகும் - என்பது இப்பாடலின் பொருள்.

மதுரை வீதியில் நின்ற இளைஞன் மாவு விற்கும் மங்கை நல்லாளின் நுடங்கிடைக்கும், மென்முலைக்கும் அன்று திருமால் அளந்த மண்ணுலகம் தோற்கும் என்ற கருத்து ஏற்புடையது ஆகும் என நினைத்தான். நினைவைச் செயலாக்கி, "பல்லுக்கும்..." என்ற வெண்பாவை இசைத்துள்ளான். இதைக் கேட்ட நச்சினார்க்கினியரும் இந்த வெண்பாவையே உலக வழக்காக ஏற்று "உணரக் கூறிய" என்ற தொல் - எழுத்து - புள்ளி மயங்கியல் நூற்பாவுக்கு மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

நச்சினார்க்கினியர் வழங்கிய தமிழ் விருந்து உண்டு மகிழத்தக்கதல்லவா?


நன்றி:- தினமணி

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2010, 17:11 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,817 முறைகள் அணுகப்பட்டது.