தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 6 காணாமல் போன கல்லூரி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 காணாமல் போன கல்லூரி

நெய்தல் யூ. ஆன்டோ கர்டோசா

ஆசிரியர், தூய சவேரியார் மேநிலைப் பள்ளி, தூத்துக்குடி.



கடற்கரையோரங்களில் மீனவப் பரதவர்கள் வாழ்ந்தனர். மீனவப் பரதவர்கள் ஒரே  தலைமையின் கீழ் ஒன்றாய்க் கூடி வாழும் பண்புடையவராய்த் திகழ்ந்தனர்.

"நாள் மீன் விராய கோள் மீன் போல
மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழி இ" (68,69)

என்ற பட்டினப் பாலையின் வரிகள் அதனை உணர்த்துகிறது. பரதவர்கள் ஒரு  தலைமையின் கீழ்க் கூடி வாழ்ந்ததாலேயே ஒட்டுமொத்தமாகக் கிறித்தவராக  மாறியுள்ளனர்.


மறை திரு. ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகள் வெளியிட்ட "அடியார் வரலாறு" என்ற நூலில் "நம்முடைய நாயகன் சேசு கிறிஸ்த்து பிறந்த 1533-ஆம் ஆண்டு பரமென்ற சாதியில் உள்ளவர்கள் கிறிசித்தியானி மாற்கம் புகுந்தார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.


மதம் மாறிய மீனவப் பரதவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்களாக  இருந்தனர். இந்நிலையில் புனித பிரான்சிஸ் சவேரியார் கோவா வந்தடைந்தார். அன்று கோவா ஆளுநராக இருந்த மார்ட்டிம் டி. சூசா, சவேரியாரை முத்துக்குளித்துறைக்கு அனுப்பி வைத்தார். சவேரியார் முத்துக்குளித்துறைக்கு வரும்போது தமிழும் போர்ச்சுக்கீசியமும் தெரிந்த கோவாவிலுள்ள 'திருவிசுவாசம்' என்னும் குருத்துவக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த, பரத குல மாணவர்கள் மூவரைத் தன்னுடன் மறைபரப்புப் பணிக்கு
மொழி பெயர்ப்புக்கு உதவிட அழைத்து வந்தார்.


சவேரியார் முத்துக்குளித்துறையில் மறை பணியாற்றியபோது, மீனவர்களின் குழந்தைகள் கல்வி பெறும் வகையில், தூத்துக்குடியில் பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவினார். அப்பள்ளிக்கு ஆசிரியர்களையும் நியமித்தார். போர்ச்சுக்கல் அரசியோடு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு பரதவர்கள் அரசிக்குச் செலுத்திய வரிப்பணத்தை அப்பள்ளியில் பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்.  1644- இல் அருட்திரு ஆன்ட்ரூ லோப்பசின் தகவலின்படி தூத்துக்குடியில் போர்த்துக்கீசிய மொழிப் பள்ளியில் 25 குழந்தைகளும், தமிழ்ப் பள்ளியில் 55 குழந்தைகளும் கல்வி கற்க வந்துள்ளனர்.


முத்துக்குளித்துறையில் வாழ்ந்த மற்ற பரதகுல மக்களை இயேசு சபையினர் காத்து வந்தனர். தங்களின் முதல் இல்லத்தை அவர்கள் புன்னைக்காயலில் கட்டினர். அக்காலங்களில் கயத்தாறு குறுநிலமன்னனும் மதுரை நாயக்கரும் அடிக்கடி புன்னைக்காயலைத் தாக்கி வந்தனர். எனவே, இயேசு சபையினர் தங்களுடைய இல்லத்தை 1579-ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்கு மாற்றினர்.  இயேசு சபையினரின் (College) முதல் சம் பவுல் கல்லூரி ஆன்மீகப் பணியை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப் பட்டது. (இன்றைய பேச்சு வழக்கில் குறிப்பிடும் கல்லூரி போன்றதல்ல சம் பவுல் கல்லூரி) இக்கல்லூரியில் இயேசு சபையினர் ஆண்டுக்கு இருமுறை கூடவும் பொதுத் தொண்டுகள் செய்யவும் தங்களுடைய துறவற வழிபாடுகளைப் புதுப்பிக்கவும் தமிழ்மொழியின் மூலம் சம்
பவுல் கல்லூரியைப் பயன்படுத்தினர். அக்கல்லூரியின் செலவு முழுமையும் அன்றைய மக்கள் வழங்கிய அன்பளிப்பு மூலம் செய்யப் பட்டது.


இந்தக் கல்லூரியின் அருகே முத்துக்குளித்துறையின் மூன்றாவது இயேசு சபையின் அதிபராக இருந்த ஹென்றி ஹென்றிக்கஸ் குருக்கள் 1588-இல் குருமடம் ஒன்றை உருவாக்கினார். தமிழகத்தில் தோன்றிய முதல் குருமடம் அதுவே. அக்குரு மடத்தில் 30 மாணவர்கள் தங்கிப் பயிற்சி பெற்றுள்ளனர். அக்குரு மாணவர்களின் படிப்புச் செலவையும் பரதகுலச் சமுதாயமே ஏற்றுக் கொண்டது.  1603-ஆம் ஆண்டில் மதுரை நாயக்கரும் கயத்தாறு குறுநில மன்னனும் 18 கிராம பரதவர்களையும் தூத்துக்குடியையும் முற்றுகையிட்டு, பரதகுலத்தினர் அநியாய வரியைச் செலுத்துமாறு துன்புறுத்தி தூத்துக்குடியிலிருந்த இயேசு சபை  இல்லத்தையும் (இன்று கிரகோப் தெரு) சம் பவுல் கல்லூரியையும் இடித்துத் தள்ளினர். இயேசு சபைத் தலைமை இல்லத்தின் பொருளாளர் அருட்திரு கஸ்பார் தஸ்ரோவைப் பிணைக்கைதியாக மதுரைக்கு இழுத்துச் சென்றனர். பரத குல மக்களும் இயேசு சபையினரும் இராஜத் தீவில் (இன்று முயல் தீவு) குடியேறினர். அங்கே புதிய ஆலயமும் இயேசு சபை இல்லமும் புதிய சம் பவுல்
கல்லூரியும் கட்டப் பட்டன. இந்தக் குடியேற்றம் நீண்ட காலத்திற்கு  நீடித்து நிற்கவில்லை.  பிரான்சிஸ்கு சபையைச் சேர்ந்த கொச்சி ஆயர் அந்திரேயாஸ், பரத குல மக்கள்  தங்களின் கட்டுப்பாட்டை விட்டு முழுமையாக இயேசு சபையினர் பின்னே சென்று விட்டதாக எண்ணினார். இராஜத் தீவில் குடியேறிய அனைவரும் தூத்துக்குடி திரும்புமாறு ஆயர் ஆணை பிறப்பித்தார். தூத்துக்குடி திரும்பினால் கயத்தாறு மன்னனால் துன்பம் நேரிடும் என்பதால் பரத குல மக்கள் தூத்துக்குடிக்கு வர மறுத்தனர். ஆயரோ, தன் கட்டளையைப் பரதர்கள் ஏற்க மறுப்பதாகக் கருதினார். இராஜத் தீவை விட்டுக் கரைக்குத் திரும்ப  மறுத்த இயேசு சபையினரையும் கிறித்தவ மக்களையும் ஆயர் அந்திரேயாஸ்  திருச்சபையிலிருந்து விலக்கினார்.


ஆயர் அந்திரேயாஸ், கயத்தாறு குறுநில மன்னனோடு மதுரை நாயக்கனோடும் போர் ஒப்பந்தம் செய்தார். ஆயரின் படைகள் பரத குல மக்களைத் தாக்கியது. 22  நாட்கள் நடந்த போரில், ஆறு ஆண்டுகளாக இராஜத் தீவில் வாழ்ந்தபோது உருவாக்கப்பட்ட தேவ மாதாவின் ஆலயம், இயேசு சபையினர் இல்லம், சம் பவுல் கல்லூரி அனைத்தும் இடித்துத் தள்ளப்பட்டன. இயேசு சபை குருக்கள் பல  இடங்களுக்கும் சிதறி ஓடினர். பரத குல மக்கள் தூத்துக்குடிக்குத் திரும்பினார்கள்.  1614-ஆம் ஆண்டில் கோவா ஆளுநருக்கு மலபார் இயேசு சபையினர் அளித்த  அறிக்கையில், இராஜத் தீவில் இயேசு சபையினரின் கல்லூரியும் தலைமை இல்லமும்  இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த இல்லங்களின் செலவு முழுமையும்  முத்துக்குளிப்பின் போது பரதர்கள் தரும் நன்கொடை கொண்டே இயங்கி வந்துள்ளது. ஆயரால் இடிக்கப்பட்டவை பின்னாட்களில் புதுப்பிக்கப் பட்டிருக்க வேண்டும்.


1614- இல் போர்ச்சுக்கல் மன்னர் மூன்றாம் பிலிப்பு  முத்துக்குளித்துறையிலுள்ள கோயில்களை எல்லாம் மீண்டும் இயேசு சபையினரிடம்  ஒப்படைக்கும்படி ஆணை பிறப்பித்தார். ஆயரோ மன்னனின் ஆணையை ஏற்று, இயேசு சபையினரிடம் கோயில்களை ஒப்படைப்பது, தன் ஆயர் பதவிக்கு ஏற்படும்  அவமானமென்று கருதினார். எனவே, ஆயர் பதவியை விட்டு விலகினார்.  1621-இல் முத்துக்குளித்துறைக்கு இயேசு சபையினர் திரும்பினர்.  தூத்துக்குடியில் பழுதடைந்து இருந்த, தங்களின் தலைமை இல்லத்தையும்
சம்பவுல் கல்லூரியையும் மீண்டும் கட்டினர்.  இக்காலத்தில் பரத குல மக்களின் சாதித்தலைவர் யாரென்ற குழப்பம் உருவானது.  1625 இல் இது முடிவுக்கு வந்தது. கொச்சி ஆயரால் முத்துக்குளித்துறையின்  தலைமைக் குருவாக கத்தனார் நியமிக்கப்பட்டார். அவர் இயேசு சபையினரைத் தூத்துக்குடியை விட்டு வெளியேற்றினார். இயேசு சபையின் இல்லத்தையும்  கோயிலையும் தன் நிர்வாகத்திற்குள் கொண்டு வந்தார். இயேசு சபையினர்  புன்னைக்காயலில் குடியேறினர்.  1629- இல் கோவாவின் புதிய போர்ச்சுக்கீசிய ஆளுநராக கொம்தே தீ லீனாரஸ்  பொறுப்பேற்றார். 1631-இல் முத்துக்குளித்துறையின் தலைமைக் குருவாக  இருந்த சிரியன் குரு ஜார்ஜ் டி. சில்வா இயேசு சபையினரிடம் இருந்த  ஆலயங்களைத் தன் பொறுப்பில் கொண்டு வர முனைந்தார். இயேசு சபையினர்
இல்லமும் சம் பவுல் கல்லூரியும் சூரையாடப் பட்டன. இயேசு சபையினர் பலர்  இலங்கைக்குச் சென்றனர். மீண்டும் 1632- இல் போர்ச்சுக்கல்--இஸ்பானியக்  கூட்டாட்சியின் மன்னன் பிலிப்புவின் ஆணையால், இயேசு சபையினர்  முத்துக்குளித்துறைக்குத் திரும்பினர்.


1635--இல் கோவா ஆளுநர் கொம் தே திலீனாரஸ் அதிகார வேட்கை கொண்டார்.  கொச்சி மறை மாநில அதிபரும் கொச்சியின் தளபதியும் தொமினிக்கு சபைக் குருக்களும் இயேசு சபையினர் குறித்துப் பல குற்றச்சாட்டுகளை கோவா ஆளுநருக்கு அனுப்பினர். ஆளுநர் உண்மை என்னவென்று அறியாமல் 12 கப்பல்களை அனுப்பித் தூத்துக்குடியையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களையும் நெருப்பிலிட்டு அழிக்கச் செய்தார்.  இயேசு சபையினர், முகமதியரிடமிருந்து பரதகுல மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்ததன் மூலம் பரதர்களின் இதயத்தில் இடம் பிடித்தனர். இதற்கு நன்றிக்கடனாக முத்துக்குளிப்பில் கிடைக்கும் வருமானத்தில் பெருந்தொகையை  அன்பளிப்பாகக் கொடுத்து வந்தனர். ஆனால், மற்ற சபையின் குருக்களிடத்தில்  பரதகுல மக்களுக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை.  முத்துக்குளித்துறையிலிருந்து அதிகமான வருமானம் இயேசு சபையினருக்குக்  கிடைப்பதைத் தடுக்க இயலாத மற்ற சபையினர் (பிரான்சிஸ் சபை, தொமினிக்கு  சபை) எவ்வகையிலாவது இயேசு சபையினரைத் தூத்துக்குடியிலிருந்து வெளியேற்றி
விட முடிவு செய்தனர்.  1602--இல் உருவான கிழக்கிந்திய வர்த்தக நிறுவனம், 1648-இல்  காயல்பட்டினத்தில் வணிகச் சாவடி ஒன்றை உருவாக்கினர். அப்போது மதுரை  நாயக்கன் படையோடு பரதர்களும் சேர்ந்து டச்சுக்காரர்களை விரட்டி அடித்தனர். அதே ஆண்டு டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தைக் கைப்பற்றினர். 1649-இல் டச்சுக்காரர்கள் தூத்துக்குடிக்குள் நுழைந்தனர். காயல்பட்டினத்திலிருந்து விரட்டியடித்த பரதவர்களைப் பழிவாங்கும்  எண்ணத்தோடு பரதவர்களின் வீடுகளையும் உடைமைகளையும் தீக்கிரையாக்கினர்.  1658-இல் முத்துக்குளித்துறை முழுமையும் டச்சுக்காரர்களின் ஆளுமைக்குள்  வந்தது.


கால்வீனியப் பதிதக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட டச்சுக்காரர்கள்,  கத்தோலிக்க மதத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள். தூத்துக்குடியைக் கைப்பற்றிய டச்சுக்காரர்கள் நம் கோயிலை ஆயுதக் கிடங்காக மாற்றினர். சம் பவுல் கல்லூரி இடித்துத் தள்ளப்பட்டது. கல்லூரி இருந்த இடமும் ஆலயமும் டச்சுக்காரர்களின் கல்லறைத் தோட்டமாக மாற்றப் பட்டது. இன்று அந்த இடத்தில் மரத்தினாலான சிலுவை மட்டும் குருசடியாக நிற்கிறது. அப்பகுதியைக் "கிரகோப் தெரு" என்று அழைத்து வருகின்றனர்.  டச்சுக்காரர்கள் பரத குல மக்களை, தங்களின் மதத்திற்கு மாற்ற எடுத்த பல முயற்சிகளும் தோல்வி அடைந்தன. வியாபார நோக்கத்தின் பொருட்டு,  (காலப்போக்கில்) தங்களுடைய மதவெறியை மாற்றிக் கொன்டனர். 1699-இல் புதிதாகத் தூத்துக்குடிக்கு வந்த டச்சுத் தளபதி இயேசு சபையினரை முன்பு போல் மறைபணிச் செய்ய அனுமதி அளித்தார். அப்போது இயேசு சபை அருட்தந்தை விஜில் மான்சி தூத்துக்குடியில் இருந்தார்.  இயேசு சபையினரின் பரிசுத்தப் பனிமய மாதா ஆலயம் தூத்துக்குடி மக்களுடைய பங்குக் கோயிலாக உயர்ந்தது. டச்சுக்காரர் வருகையினால் சுமார் ஐம்பது ஆண்டுகளாகத் தடைப்பட்டிருந்த பனிமய மாதா திருவிழா மீண்டும் சிறப்போடு  கொண்டாடப் பட்டது. விஜில் மான்சி டச்சுக்காரர்களின் அநுமதி பெற்றுப் பாழடைந்த புனித இராயப்பர் கோயிலைப் புதுப்பித்தார். இன்று இது தெல்சால் சகோதர் இல்லமாகவும் பள்ளியாகவும் மாறி நிற்கிறது.  டச்சுக்காரர்கள் தூத்துக்குடியில் ஆட்சி செலுத்திய காலத்தில் இயேசு  சபையினர் தங்கள் தலைமை இல்லத்தைக் கொற்கைக்கு மாற்றினர். கொற்கையை ஒரு சமயம் முகமதியர் தாக்கினர். எனவே இயேசு சபையின் இல்லம் மணப்பாடுக்கு  மாறியது. இங்கிருந்து 1743-இல் பெரிய தாழைக்கு மாறியது. மூன்று  ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இவ்வில்லம் மணப்பாடுக்குத் திரும்பியது.


பரத குல மக்களின் ஞானத் தந்தை புனித சவேரியாரின் ஆசியால் உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரி, மதுரை நாயக்கன், கயத்தாறு குறுநில மன்னன், முகமதியர், டச்சுக்காரர்களின் தளபதியர் ஆகியோரால் அடிக்கடி தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதோடு அடிக்கடி இடம் மாறிக் கொண்டே இருந்தது. பின்னர் சம் பவுல் கல்லூரி காணாமலேயே போய்விட்டது.  இயேசு சபையினர் முத்துக்குளித்துறைக்கு வந்து மறை பரப்பிய  பல்லாண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் பல இடங்களில் தங்கி பணி செய்தனர். அப்பகுதிகளில் உருவாக்கிய ஞானக் கல்லூரிகள் எல்லாம் இன்று பட்டம் வழங்கும் கல்லூரிகளாக மாறி மக்களுக்குப் பயன்படுகின்றன. ஆனால் இயேசு சபைக்கு வாரி வாரி வழங்கிய பரத குலத்துக்குப் பயன்படுமாறு தூத்துக்குடியில் கல்லூரியே உருவாகாமல் போனது நமக்கேற்பட்ட பேரிழப்பாகும். சவேரியாரின் ஆசியால் உருவாகிய அந்தக் கல்லூரியைப்  போன்றதொரு கல்லூரியை என்று உருவாக்குகிறோமோ அந்நாளே நாம் சவேரியாரை நினைவு கொள்ளும் நாளாகும். அதுவே நம் தந்தையின் ஆவலாகவும் இருக்கும்.


--Geetha Sambasivam 07:33, 21 ஆகஸ்ட் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 21 ஆகஸ்ட் 2012, 07:33 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,423 முறைகள் அணுகப்பட்டது.