தூத்துக்குடியின் சிறப்பு
ஜி. இருதய ராஜ், மதுரை
தலைமை ஆசிரியர், (ஓய்வு) பிரிட்டோ மேநிலைப்பள்ளி, மதுரை.
உன்னத தேவனும், நமது ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து, தந்தையாகிய இறைவனின் விருப்பத்தின் படி (எபே: 1: 21- 22) திருச்சபையை ஏற்படுத்தினார். அதுவே கத்தோலிக்கத் திருச்சபை. திருச்சபை என்பது கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே. இது இயேசுகிறிஸ்துவாகிய இறைவனால் உருவாக்கப்பட்டதாலும், இயேசுகிறிஸ்துவாக இருப்பதாலும் (பிலிப். 3:6, கண.1:13, தி.பா. 9:1--5, எபே 1:20--23, கொலோ. 1:17--18) கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே உலகம் நிறைந்த ஒரே திருச்சபையாக இருக்கிறது. சாத்தானின் எத்தகு முயற்சியும் இதனை வெற்றி கொள்ள இயலாது. (மத். 116:18). மனித ஞானத்தால், பலத்தால் உருவாக்கப்பட்ட சபைகள் (திருச்சபைகள் அல்ல) உடைந்து, சிதறி பல லட்சம் சபைகளாக உள்ளன. அதிலிருந்தே அவற்றில் யாதொன்றும் இறைவனின் சபை இல்லை என்பது வெள்ளிடைமலை. கத்தோலிக்க திருச்சபை மட்டுமே இறைவனின் உண்மையான ஒரே திருச்சபை.
அத்தகு திருச்சபையில் நாம் இணைந்திருப்பதும், அதிலே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து இறப்பதும் மாபெரும் பாக்கியம். அதில்தான் நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசு நிலைவாழ்வு தரும் வானக உணவாக, நற்கருணையாக நமக்குள்ளும், நமது மத்தியில் இம்மானுவேலனாகவும் வாழ்கிறார். (மத்.1:22--23) இந்த தெய்வீக உணவை உண்ணும் பாக்கியமும், அதனால் முடிவில்லாத நிலைவாழ்வைப் பெறும் பாக்கியமும் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்களாகிய கத்தோலிக்கர்களுக்கு (மத். 24:24) கிடைத்துள்ளது. அது எப்படிக் கூற இயலும்? 'இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட அனைவரும், அவர்களின் வீட்டாரும் நிலை பெறுவார்கள்' என்று வேதம் கூறுகிறதே என்று கூறுவது எனக்குக் கேட்கிறது.
இறை வார்த்தைகளின்படி இயேசுகிறிஸ்து கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்க மறுக்கிறவர்; இறைவனும் மறுக்கிறார். கத்தோலிக்கத் திருச்சபையை, அதன் போதனைகள் ஏற்காத இயேசுகிறிஸ்துவையும், தந்தையையும் புறக்கணிக்கிறவர்கள் (லூக்.10;16, மத். 10:40, 9:37, லூய்க். 9:48, யோ, 13:20). இதுவே பேருண்மை. அதனால் தான் அவரில் விசுவாசம் கொண்டு, அவர் பெயரால் இறைவாக்குப் பெற்று, அவர் பெயரால் பேய்களை ஓட்டி, நோய்களை அவர் பெயரால் அதிசயங்களும், அற்புதங்களும் செய்து வழிபட்டு வருகின்ற ஆவிக்குரியவர்கள் எனக் கூறும் மக்களை, ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறுதிநாளில், "நெறிகேடர்களே என்னை விட்டு அகன்று போங்கள், உங்களை எனக்குத் தெரியவே தெரியாது' என்று (மத். 7:22--23)இல் கூறுகிறார். இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையாகவே கத்தோலிக்கர்கள் மட்டுமே மீட்புப் பெற இயலும். ஏனெனில் திருச்சபை இயேசு கிறிஸ்துவோடு, கிறிஸ்துவாக இருக்கிறது. அவரன்றி மீட்பில்லை.
தூத்துக்குடியின் பெருமை:
இத்தகு உன்னதமான கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகளை ஏற்று, தென் தமிழகத்தில், 16-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தங்களை, 'கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாக' ஆக்கிக் கொண்ட பெருமைக்குரியவர்கள், தூத்துக்குடி மற்றும் அதனோடு இணைந்த முத்துக்குளித்த 18 ஊர்களின் பரதவ மக்களையே சேரும். கிறிஸ்தவம் தென் தமிழகத்தில் தூத்துக்குடியில் பிறந்து, தமிழகத்தின் கடற்கரை, மற்றும் உட்பகுதியில் தவழ்ந்து, நடந்து வளர்ந்தது. இந்த 18 ஊர்களின் சாதித்தலைவர் தூத்துக்குடியில் வாழ்ந்து பரதவர் நலன் காத்து வந்த்தாகத் தெரிகிறது. அவர் வாழ்ந்த 'பாண்டியபதி' என்ற இல்லம் பனிமய மாதா கோவிலுக்கு அருகில் உள்ளது. இதற்கு முன்னர் இராஜா தெருவில் அவரது இல்லம் இருந்ததால் அத்தெரு, 'இராஜா தெரு' என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கி.பி. 52-ஆம் ஆண்டில் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரானபுனித தோமையார் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள மலபார் பகுதிக்கு வந்தார். அங்கு இயேசுவின் நற்செய்தியைப் போதித்துப் பல மக்களைக் கிறிஸ்தவர்களாக்கினார். அதன் பின்னர் கிழக்குக் கடற்கரை நகரான மயிலாப்பூர் (சென்னை) வந்து அங்கும் தனது பணியைத் தொடர்ந்தார். அவரது சமயப்பணியில் பொறாமையும் வெறுப்பும் கொண்ட பிராமணர்கள் அவரை ஈட்டியால் குத்திக் கொன்றனர். அவரது உடல் அவ்விடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. அவ்விடமே இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பேராலயம். தோமையாரின் பணி பற்றிய செய்திகளை "தோமையாரின் பணி" (Acts of Thomas) என்ற நூலில் காணலாம்.
தோமையாரின் பணி மலபார், மயிலாப்பூர் கடற்கரைகளோடு நின்று போயிற்று. பிற இடங்களுக்கும் உள்நாட்டுக்குள்ளும் அதிகமாகப் பரவவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் தென் தமிழகத்தில் போர்த்துக்கீசிய பதுரவாதோ குருக்களால் மீண்டும் புத்துயிர் பெற்றது கிறிஸ்தவ சமயம். அவ்வாறு கிறிஸ்தவ சமயம் மீண்டுமாக தென்னகத்தில் புத்துயிர் பெற்றப் புனித இடமே தூத்துக்குடிதான். இன்றைய தென் தமிழகக் கத்தோலிக்கர்களுக்குத் தூத்துக்குடி "துதிக்கும் குடி" என்று கூறலாமன்றோ! தூத்துக்குடியும் அதனோடு இணைந்திருந்த பல ஊர் பரதவர்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தை ஏற்று இன்று வரை வாழ்ந்து வருவது போற்றுதற்குரியது. இன்று யாராவது பிரிந்த சபையோடு மீண்டும் சேர்ந்திருந்தால், அவர்கள் அனைவரும் தந்தையால் நடப்படாத நாற்றுக்களாவார்கள். (,மத். 15) தூத்துக்குடிப் பகுதியில் கிறிஸ்தவம் தோன்றி வளர, அப்பகுதியில் நிலவிய வாணிக, அரச குலக் குழப்பங்களூம், ஆபத்துக்களுமே காரணம்.
தூத்துக்குடியின் பெயர்க்காரணம்:
தாலமியின் கூற்றுப்படி வளைகுடாவில் "கொசிக் கொரே"யும் "கொல்கை"யுமே சேரலன் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த துறைமுகத் தலங்கள் ஆகும். கொல்கை--கொற்கை, பாண்டிய மன்னர்கள் காலத்தில் புகழ்பெற்ற முத்துக்குளித்துறைமுகம். கொசிக்கோரே(தூத்துக்குடி) முத்துக்குளிப்பில் புகழ் பெற்றிருந்தாலும், கொற்கைத் துறைமுகமே புகழ் பெற்றிருந்தது. கொற்கையிலிருந்து கடல் பின் வாங்கியதால் அது அழிந்து காயல் துறைமுகம் உருவாகிப் புகழ் பெற்றது. பின்னர் காயலும் கடலிலிருந்து தொலைவாகிவிட்டதாக மார்கோபோலோ கூறுகின்றார். அதன் பின் தூத்துக்குடி முத்துக்குளிப்பில் துறைமுகமாக மாறி இன்று வரை பெருநகராக வளர்ந்து கொண்டே வருகிறது.
'கொசிக் கொரே' தான் தூத்துக்குடியாக மாறிற்று. 'கொசிக் கொரே' என்ற சொல் 'தொடி கொரே' என்றும், 'தூட்டிக்கொரே' என்றும் மாறி இன்றைய தூத்துக்குடி ஆயிற்று. ஆனால் 'தூத்துக்குடி' என்ற சொல் தாலமியால் உச்சரிக்க இயலாமல் 'கொசிக் கொரே' என்று எழுதியிருக்கலாம் என்று கருதுகின்றனர். மேலும் 'தூற்றுக்குடி' என்ற சொல்லே தூத்துக்குடி ஆயிற்று என்ற கருத்தும் வழங்குகின்றது. தூர்ந்து போகும் ஊற்றுக்கிணறுகளைக் கொண்ட நகரம் தூத்துக்குடி என்று சொல்லப்படுகிறது. தூத்துக்குடியில் பழைய ஊற்றுக்களைத் தூர்த்து புதியவற்றைத் தோண்டும் வழக்கம் அன்றாடம் நிகழ்வதாகும். இதுவும் பொருத்தமாக உள்ளது.
போர்த்துக்கீசியர் வருகை:
முத்துக்குளித்தலில் சிறந்து விளங்கி, வளர்ந்து செழித்திருந்த பரதவ மக்களுக்கு எதிராக நாட்டை ஆண்ட குறுநில மன்னர்களும், 'மூர்கள்' எனப்பட்ட அரேபிய முஸ்லீம்களும் எழுந்தனர். பாண்டிய நாட்டின் அரசியல் குழப்பத்தால் பாண்டிய நாட்டிற்குப் படையெடுத்து வந்து சேர்ந்தவர்களே மூர்கள் என்ற முஸ்லீம்கள். இந்த ஆபத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பரதவர்களுக்கு வழி இல்லை. இதனை அறிந்த 'ஜான் டி குருசு' என்ற போர்த்துகல் குதிரை வியாபாரி, பரதவர்களுக்குக் கை கொடுத்து உதவினார். கி.பி. 1535- இல் கிராமத் தலைவர்கள் பத்துப் பேரை, கொச்சியிலிருந்த போர்த்துக்கீசிய தளப்தி 'பெரோவாஸ்' என்பவரிடம் அழைத்துச் சென்று அவர்களுக்கு உதவ வேண்டினார். போர்த்துக்கிசியப் படைகள் மூர்களை ஒடுக்கினால் பரதவர்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவ வேண்டும் என்பதே நிபந்தனை. இந்த நிபந்தனையை பரதவர் ஏற்றனர். பெரோவாஸ் ஒரு பெரும்படையை 1536-இல் அனுப்பி முகமதியரை வென்றார். அதன் நன்றியாக 18 ஊர் பரதவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகத் திருமுழுக்குப் பெற்றனர்.
போர்த்துக்கீசிய தளபதி, "பதுரவாதோ" குருக்களை அனுப்பி சில மாதங்களில் 20,000 பேருக்குத் திருமுழுக்குப் பெறச் செய்தார். மீனவர்களின் கடற்கரைப் பகுதியில், அன்று முதல் இன்று வரை கத்தோலிக்கக் கிறிஸ்தவம் நிலைத்து வளர்ந்து வருகிறது. அங்கிருந்து தான் தென் தமிழகமெங்கும் பரவிற்று. காலம் செல்லச் செல்ல "முத்து" என்ற செல்வத்தினால் போர்த்துக்கீசியர்களும் பரதவரைச் சுரண்டத் துவங்கினர். போர்த்துக்கீசிய பதுரவாதோ குருக்களால் திருமுழுக்குப் பெற்ற மக்கள், அதன் பின் வருகை தந்த இயேசு சபை குருக்களால் கிறிஸ்தவ விசுவாசத்தில் வலிமை பெற்றனர். போர்த்துக்கீசிய வணிக அதிகாரிகள் கொண்டு வந்த வரியின் பெயரால் மக்களைச் சுரண்டத் துவங்கினர். பதுரவாதோ தலைமை குருவான மிக்கேல் வாஸ் மக்களுக்குத் துணை நின்றார். கி.பி. 1542-இல் "மார்டீன் அயன்சோ" போர்த்துகலின் புதிய ஆளுநராக இந்தியா வந்தார். அருட்தந்தை மிக்கேல் வாஸ் அவரிடம், போர்த்துக்கீசிய அதிகாரிகள், தளபதிகளால் மக்கள் துன்புறுத்தப் படுவதை எடுத்துக் கூறினார். அயன்சோ பரதவர்களின் வரிச்சுமையைக் குறைத்தார். தவறு செய்த அதிகாரிகளைக் கைது செய்து பரதவர்களின் நலன் காத்தார். (கி.பி. 1660-இல் காமநாயக்கன் பட்டியில் கிறிஸ்தவம் தழுவப்பட்டதாகக் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.)
புனித சவேரியாரின் வருகையும், பணிகளும்:
கிறிஸ்தவர்களாக மாறிய மக்கள் சமயக் கோட்பாடு அறியாது, சமய வாழ்வின்றிப் பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தனர். போர்த்துக்கல் மன்னன் 3-ஆம் ஜான் முயற்சியால் கி.பி. 1542 அக்டோபரில் "பிரான்சிஸ் சேவியர்" என்ற இயேசு சபைத் துறவி மணப்பாடு வந்தார். சவேரியார் இருந்த காலத்தில் தூத்துக்குடியில் புனித ராயப்பர் கோயில் வழிபாடுகளை நடத்தினார். தமிழகத்து மாணவர்கள் உதவியால் பரலோகத்து மந்திரம், அருள்நிறை மந்திரம், பத்துக்கட்டளைகள், விசுவாசப்பிரமாணம், இவற்றைத் தமிழில் போதித்தார் பக்திப்பாடல்கள் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். பத்து மாதங்கள் இப்பகுதியில் தங்கியிருந்தார். முத்துக்குளித்துறை ஏறத்தாழ முப்பத்து நான்கு மைல் தூரம். மொத்தம் 18 ஊர்கள். அவற்றிற்குத் தூத்துக்குடி தலைமையான் ஊர். தூத்துக்குடியில் மொத்த மக்கள் தொகையில் 4000 பேர் கிறிஸ்தவர் என்று ரோமாபுரியில் இருக்கும் அவருடைய முதல்வருக்கு அவரே கடிதமெழுதியுள்ளார். கிறிஸ்தவம் வாழும் ஊர்களில் தூத்துக்குடிக்கு அடுத்துச் சிறந்து விளங்கியது மணப்பாடு. அங்கு சவேரியார் பல மாதங்கள் தங்கியிருந்தார். கடற்கரைக்கு அருகிலிருக்கும் கோயிலிலேயே தங்கி இருந்து நாற்பதுக்கும் அதிகமான கூரைக்கோவில்களைக் கட்டினார். குருசடி அமைத்த பெருமையும் அவரைச் சாரும்.
சவேரியார் வந்தபோது (1542) தூத்துக்குடியில் பிற இடங்களில் கோயில்கள் இல்லை. சவேரியார் கடற்கரை கிராமங்களில் மர நிழல்களில் வழிபாடுகளை நடத்தி, சமய நெறிகளைப் பரப்பி வந்தார். அவரது தூண்டுதலால் மண் சுவர்களோடு கூடிய கூரைக்கோவில்கள் கட்டப்பட்டன. ஆங்காங்கே மரச் சிலுவைகளை நட்டு அவை "குருசடி" எனப்பட்டன. கோவில்களிலும், குருசடிகளிலும் மக்கள் அனைவரும் கூடி இருந்து வழிபாடு நடத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை அனைவரும் கண்டிப்பாகக் கோவிலுக்குச் சென்று திருப்பலி காண வேண்டும் என்றார். இதனால் மக்கள் சமயப் பற்றுடன் வாழ்ந்தனர். குருக்களுக்கு உதவியாக "கணக்குப் பிள்ளைகளை" (Catechist) நியமித்தார். அவர்கள் குழந்தைகளுக்குக் காலையிலும், மாலையிலும் சில மணி நேரம் கிறிஸ்தவக் கோட்பாடுகளைப் போதித்தனர், இதே போல் சனிக்கிழமைகளில் பெண்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்களும் மத போதனை பெற்று சமயப்பற்றில் உறுதியுடன் வளர்ந்தனர். போர்த்துக்கீசிய கவர்னர் மாடீன் அசன்சோ சவேரியாருக்குக் கொடுத்து வந்த உதவித் தொகை 4000 பணத்தை கணக்குப்பிள்ளைகளுக்கு ஊதியமாகக் கொடுத்து வந்தார். இப்பணம் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார்.
டச்சுக்காரர்களின் ஆதிக்கம்:
கி.பி. 1652 முதல் 1782 வரை 130 ஆண்டுகள் மாறி, மாறி தூத்துக்குடி டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் வீழ்ந்திருந்தது. இவர்கள் தூத்துக்குடியில் பெரிய கோட்டை ஒன்றை அமைத்து வாழ்ந்தனர். கன்னியாகுமரி முதல் பாம்பன் வரை ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்களைக் கடலில் நிறுத்தினர். தூத்துக்குடியிலிருந்து நல்ல வருமானம் பெற்றனர். கி.பி. 1658-இல் போர்த்துக்கீசியரை விரட்டி விட்டு ஆட்சியைத் துவக்கினர். இவர்கள் மக்கள் மத்தியில் தாங்கள் பின்பற்றி வந்த பிரிவினைக் கொள்கை கால்வினிசத்தைப் பரப்ப முயன்று தோற்றனர். இன்றும் மக்கள் மனத்தைத் திருப்பத் தவறான பிரிவினைக் கொள்கைகள் சாத்தானின் முயற்சியால் போதிக்கப்பட்டுத் தோற்றுக் கொண்டிருக்கின்றன.
சாதித்தலைவர் பதவிகளைப் பணம் பெற்றுக் கொண்டு அவர்களே விற்றனர். மக்கள் நலமும், ஒற்றுமையும் பேணப்படவில்லை. இயேசு சபை மாநிலத் தலைவர் ஜான் அந்துனஸ் கூற்றுப்படி ஜாதித்தலைவர் பதவி வீண் கெளரவப் பதவியாகவே இருந்தது. கி.பி. 1782-இல் டச்சு, ஆங்கிலச் சண்டை ஐரோப்பாவில் எழுந்தது. இங்கும் திருநெல்வேலியிலிருந்த ஆங்கிலேயர் டச்சுக்காரரோடு போரிட்டனர். 1783 உடன்படிக்கையின்படி 1785-இல் தூத்துக்குடி டச்சுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர் 1792- முதல் 1818 வரை ஆங்கிலேயர் வசம் இருந்தது. ஒப்பந்தங்களினால் அதிகாரம் மாறி, மாறி இறுதியில் 1824-இல் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் முழுமையாக முடிந்தது.
திருத்தந்தையின் ஆணையும், மறைமாவட்டப் பிறப்பும்:
திருத்தந்தை 13-ஆம் சிங்கராயர் 1887- ஆம் ஆண்டின் சமய சாசனத்தின்படி மறை மாவட்டங்களைக் கண்காணித்தவர்கள் ஆயர்களாக, பேராயர்களாக பதவி உயர்த்தினார். இந்த சாசனம் தென்னிந்திய ஆயர்கள் குழுவால் பெங்களூரில் பிரகடனப் படுத்தப் பட்டது. திருச்சி மறை மாவட்டமாக உயர்த்தப் பட்டு பம்பாய் மறைமாநிலத்தோடு இணைக்கப்பட்டது. அதன் முதல் ஆயர், "அலெக்சிஸ் கானோஸ்" 1888 இல் அவருக்குப் பின் "ஜான் பார்த்தே", 1914-இல் பெசசந்தியர், 1923--இல் திருச்சியிலிருந்து தூத்துக்குடி பிரிக்கப்பட்டு தனி மறை மாவட்டமாக உயர்த்தப்பட்டது. தன் முதல் ஆயர் வணக்கத்திற்குரிய "பிரான்சிஸ் திபூர்சிஸ் ரோச்" நியமிக்கப்பட்டார். இவரே முதலில் ஆயரான இந்தியர் என்பது பெருமைக்குரியது. தூத்துக்குடியின் கிறிஸ்தவப் பழமையும் நன்கு புரியும். மயிலாப்பூர் மறை மாவட்டப் பங்குகளை தூத்துக்குடி பனிமய மாதா கோயில், புன்னை தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், வைப்பாடு அன்னை ஆலயம், மணப்பாடு தூய ஆவி ஆலயம், கூடுதாழை புனித மரியன்னை ஆலயம் போன்றவற்றின் பங்குகள் தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு 1940-இல் போர்த்துக்கல் அரசு அதிகாரத்திலிருந்து அனைத்துக் கோவில்கள், பங்குகள் திருச்சபையில் முறையாக ஒப்படைக்கப்பட்டன. சுதந்தரத்தோடு போர்த்துக்கீசிய பதுரவாதோ அமைப்பும் தென்னகத் திருச்சபையிலிருந்து தன் செல்வாக்கை விட்டு அகன்றன. 1950 ஜூலை மாதம் போப் 12-ஆம் பத்திநாதரின் ஆணைப்படி நீங்கலாக இந்தியா முழுவதும் பதுரவாதோ அமைப்பு நீங்கியது. பின்னர் 1974-இல் இந்தியாவோடு போர்த்துக்கல் செய்த ஒப்பந்தப்படி பதுரவாதோ அங்கிருந்தும் இந்தியாவிலிருந்து ஒழிந்தது.
பனிமய மாதா கோவில்:
இக்கோவில் நானூறு ஆண்டுகளுக்குப் பழமை மிக்கது. கி.பி. 1582-இல் கட்டப்பட்டது. கத்தோலிக்கக் கிறிஸ்தவ ஆலயமாக இருந்ததை எல்லா சமயத்தவரும் ஜாதியினரும் வந்து வழிபட்டுச் சிறப்புமிக்கப் புனிதத் தலமாக விளங்குகிறது. தூத்துக்குடி மக்களால் பெருமையோடு, "பெரிய கோயில்" என அழைக்கப்படுகிறது. தூத்துக்குடியில் முதலில் கட்டப்பட்டது புனித பேதுரு கோவில். கொச்சிப் பங்குத் தந்தை பேதுரு கொன்சல்வாஸ் இதனைக் கட்டினார். இது கோவா மறைமாவட்ட ஆட்சிக்குட்பட்டது. அவ்வாயரின் கட்டுமானப்படி பேது கொன்சல்வாஸ் இதன் முதல் பங்குத் தந்தையானார். கி.பி. 1542-இல் புனித சவேரியார் வரும்போது இக்கோவில் இருந்தது. 1543-இல் அக்கோவில் பொறுப்பை அவர் ஏற்றார். அதன் பின்னர் கொச்சியிலிருந்த போர்த்துக்கீசிய பதுரவாதோ பிரிவின் ஆயருக்கும், இயேசு சபைக்கும் அதிகாரக் குழப்பம் ஏற்பட்டது. இராயப்பர் கோவில் பொறுப்பு சில உள்நாட்டுக் குழுக்கள் வசம் சென்றது.
அதனால் இயேசு சபையினர் தங்களுக்கென்று தனியாக ஒரு கோவிலும் தங்கும் இல்லமும் கட்டினர். இதனை சவேரியாரே செய்தார். அந்த ஆலயம் புனித பவுலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதுவே தூத்துக்குடி கிரகோப் தெருவில் அமைந்திருந்த புனித சின்னப்பர் ஆலயம். இதனை மக்கள் சம் பவுல் (St.Paul) என்றழைத்தனர். இக்கோவிலைச் சார்ந்த கிரகோப் மரச்சிலுவை இன்றளவும் கிரகோப் தெருவின் ஓரத்தில் இருப்பதை நாம் காணலாம். 1658--இல் டச்சுக்காரர்களின் ஆணவத்தால் இக்கோவில் இடிக்கப்பட்டு அவர்களுக்கான கல்லறைத்தோட்டமாக மாற்றப்பட்டது. இதுவே டச்சு மொழியில், 'கிரகோப்" என வழங்கலாயிற்று. வரலாற்றுச் சான்றுப் படி இங்கு இயேசு சபையினரின் தங்கும் விடுதி இருந்தது. அதுவே சம்பவுல் என்று கூறப்படுகிறது.
புனித சவேரியார் திருவிதாங்கூர் மன்னனிடம் அன்பளிப்பாகப் பெற்ற இடத்தில் இயேசு சபையினர் தங்கும் இடத்திற்கு அருகில் ஒரு கோவில் கட்டினார். 1582-இல் கட்டி முடிக்கப்பட்ட அக்கோவிலே "இரக்கத்தின் மாதா" கோவிலாகும். அது ஆகஸ்ட் திங்கள் 5 ஆம் நாள் ரோம் நகரப் பனிமய மாதா கோவில் திருநாளன்று திறக்கப்பட்டது, அந்த நாள் ஆண்டுதோறும் பனிமய மாதா நினைவாகக் கொண்டாடப் பட்டதால், பிற்காலத்தில் இரக்கத்தின் மாதா கோவில் என்ற பெயர் மாறி பனிமய மாதா கோவில் என்றாயிற்று. பின்னர் கொச்சி ஆயருக்கும் இயேசு சபையாருக்கும் இடையே ஏற்பட்ட ஆன்மீக அதிகார வரம்பு பற்றிய மோதலில் இக்கோவில் கி.பி. 1600--இல் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1627-- இல் இயேசுசபையார் ஏற்று ஆலயத்தைப் புதுப்பித்தார்கள். கி.பி. 1658--இல் டச்சுக்காரர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றினர். இயேசு சபை இல்லத்தைத் தங்கள் விடுதியாகவும், பனிமய மாதா ஆலயத்தைத் தங்களின் ஆயுதக் கிடங்காகவும் மாற்றினர். டச்சுக்காரகள் பிரிவினை சபையில் கால்வின் சபையினராக இருந்ததால் இவ்வாறு செய்தனர். பனிமய மாதா சுருபம் பரதவ குலத்தலைவர்களால் மிகுந்த சிரமத்துடன் காப்பாற்றப்பட்டது.
புனித இராயப்பர் கோவிலும் இவர்களால் ஆயுதக் கிடங்காயிற்று. அதன் பின்னர் இவ்வாலயம் பங்கு கோவில் என்ற தகுதியை இழந்தது. அவர்களின் கால்வின் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை. எனவே மீண்டும் இயேசு சபையினரைப் பணியாற்ற அனுமதித்தனர். 1708--இல் மீண்டும் பனிமய மாதா கோவிலைப் பெற்று அதனைப் பங்குக் கோவிலாக மாற்றியவர் விஜிலியுஸ் மான்சி என்ற இயேசு சபை குரு ஆவார். 1712--இல் அவரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1714--இல் முடிக்கப்பட்ட் மாதா சுருபம் வைக்கப்பட்டது. அது முதல் இதுவே தூத்துக்குடியின் பங்குக்கோயில் ஆயிற்று. அங்கு வைக்கப்பட்டுள்ள பனிமயா மாதா சுருபம் பற்றிய சுவையான செய்திகள் இன்றும் மக்களால் இனிமையாகப் பேசப்படுகின்றன.
கி.பி. 1773 முதல் 1930 வரை குருக்கள் பணியாற்றினார். தூத்துக்குடி மறைமாவட்டத்தோடு பனிமய மாதா கோவில் இணைக்கப்பட்ட போது அருட்திரு அம்புரோஸ் பங்கு குருவாக இருந்தார். அவருக்குப் பின்னர் பதினான்கு பேர் பங்குத் த்ந்தையாகப் பணியாற்றியுள்ளனர். அருட்தந்தை மோனிக் (1922) பங்கு குருவாக இருந்தபோது கோவிலின் தென்புறம் பெரிய கோபுரம் கட்ட ஆரம்பித்தார். இது 1929-இல் முடிவடைந்தது. இக்கோபுரத்தின் உள்ள கல் ஒன்றில் "விசுவாசிகளின் விசுவாசம் இதனைக் கட்டியது" என்ற விசுவாச வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மக்களின் உழைப்பாலும், ஆர்வத்தாலும் அன்னையின் ஆலயம் யாவரும் போற்றும் அற்புத ஆலயமாகத் தூத்துக்குடி நகரை அலங்கரித்துக்கொண்டு நிற்கிறது. அதன் தோற்றமும், அழகும், பொலிவும் காண்போர் மனதை வியக்கச் செய்கின்றன. 1982--இல் அருட் தந்தை லாம்பர்ட் மிரான்டா அடிகளார் காலத்தில் மாதாவின் ஆலயம் 400-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இதே ஆண்டில் இவ்வாலயம் "பசிலிக்கா" நிலைக்கு உயர்த்தப்பட்டது.
அன்னையின் புகழுக்கு இன்னும் பெருமை சேர்ப்பது அன்னைக்கு மக்கள் காணிக்கையாகத் தந்துள்ள உலகம் புகழும், "தங்கத்தேர்" இவ்வாலயத்தின் அன்னையின் தங்கத்தேர் அகிலத்தின் மக்களைத் தன்பால் ஈர்க்கும் புகழ் நிறைந்தது. அன்னையின் புகழை எழுத இயலாது.
இன்றைய தூத்துக்குடி
இன்று தூத்துக்குடி நகரில் 21 கத்தோலிக்கப் பங்குக் கோயில்களும் பல சிற்றாலயங்களும் குருசடிகளும் உள்ளன. இவற்றில் பழமையும், புகழும் மிக்கது பனிமய மாதா ஆலயமாகும். இது கத்தோலிக்க மறை மாவட்டம். 4 மறை மாவட்டங்களும், 105 பங்குத் தளங்களில் நூற்று நாற்பது குருக்களின் பணிகள் நடைபெறுகின்றன. கிறிஸ்தவர்களால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்கள், அறப்பணி நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றின் மகுடமாக நம் பனிமய மாதா ஆலயம் உயர்ந்து நிற்கும் என்பது உறுதி.
--Geetha Sambasivam 09:31, 28 ஜூலை 2012 (UTC)