தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 19

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

முத்துக்குளித்துறையில் இயேசு சபையினர்


முனைவர் அ. பிரான்சிஸ்


முதல்வர், வ.உ.சி. கல்லூரி, தூத்துக்குடி


"இறை நம்பிக்கை ஒரு விடுதலை சக்தியாக மாறி மானிட விழுமியங்களையும், உரிமைகளையும் கடைப்பிடிக்கச் செய்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, நீதி, சகோதரத்துவம் எனும் குறிக்கோள்களின் அடிப்படையில் ஒரு புதிய சமூகத்தைக் கட்டியெழுப்ப முயலவேண்டும்."

1542--ஆம் ஆண்டு முதல் முத்துக்குளித்துறையில் பணி செய்த இயேசு சபையின் அருட்பணியாளர்களில் பலர்  இந்தக் குறிக்கோளைச் செயல்படுத்தும் வண்ணம் முத்துக்குளித்துறை மக்களின் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டதோடு அவர்களின் விடுதலையிலும் அக்கறை கொண்டனர்.  முத்துக்குளித்துறையில் இயேசு சபையினரின் பணிக்காலத்தை 1542 முதல் 1774 வரை முதல் கட்டமாகவும், 1774 முதல் 1833 வரை இரண்டாம் கட்டமாகவும், 1838 ஆம் ஆண்டு முதல் 1923 இல் தூத்துக்குடி மறை மாவட்டம் உருவாக்கப்படும் வரை மூன்றாம் கட்டமாகவும், அன்று முதல் இன்று வரை நான்காம் கட்டமாகவும் பிரித்துப் பார்க்கலாம்.  இதில் முதல் கட்டத்தில் பணியாற்றிய இயேசு சபையினரைப் பற்றி மட்டுமே இக்கட்டுரை விவரிக்கிறது.

போர்ச்சுக்கீசியர்களும், இயேசு சபையினரும்:

இயேசு சபையினர் போர்ச்சுக்கீசிய அரசின் அழைப்பின் பெயரிலேயே மறை பரப்புப் பணி செய்ய முத்துக்குளித்துறைக்கு வந்து சேர்ந்தனர்.  அவர்களின் பாதுகாப்பிலும், பொருளாதார உதவியுடனும் அப்பணி நடைபெற்று வந்தது.  எனினும் பல நேரங்களில் முத்துக்குளித்துறையில் இருந்த தங்களுடைய போர்ச்சுக்கீசிய அரசியல் எஜமானர்களோடு முரண்பட்டும், மோதிக்கொண்டும் இருந்தனர்.  ஏனெனில் போர்ச்சுக்கீசியர்கள் காலனி ஆதிக்கவாதிகளாகவும், மோசமான சுரண்டல்காரர்களாகவும், கீழ்த்தரமான வாழ்க்கை நடத்துபவர்களாகவும் இருந்தனர்.  போர்ச்சுக்கீசியர் இந்தியாவிற்கும், பிற கீழை நாடுகளுக்கும் வருகை புரிந்தது மறை பரப்புவதற்காக இல்லை.  அடிப்படையில் கீழை நாட்டு மக்களைச் சுரண்டவும், வியாபாரம் என்னும் போர்வையில் அவர்களுடைய செல்வங்களைக் கொள்ளையிடவுமே அவர்கள் வந்திருந்தனர்.  பொதுவாக நறுமணப் பொருட்களுக்காகவும், ஆன்மாக்களுக்காகவும் அவர்கள் வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுவதுண்டு.  உண்மை என்னவென்றால் வியாபாரமும் இலாபமும் தான் அவர்களுடைய முதல் மற்றும் கடைசி நோக்கமாக இருந்தது.  "ஆன்மாக்களின் அறுவடை" என்பது இந்நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் கடைப்பிடித்த தந்திரங்களில் ஒன்றாகும்.  போர்ச்சுக்கல்லிலும் வெளி உலகிலும் குறிப்பாகக் கிறிஸ்தவர்களிடமிருந்து கடல் பயணங்களுக்கும், காலனி ஆதிக்க நடவடிக்கைகளுக்கும் தேவையான அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவைப் பெறுவதற்கு அவர்கள் பயன்படுத்திய உத்தியே மறைபரப்புக்கு ஆதரவு என்பது.

எனவே தான், முத்துக்குளித்துறையில் பரவர்களின் மறை மாற்றத்திற்கு அவர்கள் கருவிகளாக இருந்திருந்தாலும், அவர்களின் செயல்பாடுகள் கிறிஸ்துவ வாழ்க்கைக்கும், மதிப்பீடுகளுக்கும் உகந்ததாக இருக்கவில்லை.  இயேசு சபையினர் வருவதற்கு முன்பே பரவர்களுக்குத் திரு நீராட்டு  வழங்கிய மைக்கல் வாஸ் முத்துக்குளித்துறை போர்ச்சுக்கீசியர் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

"தூத்துக்குடியில் வாழும் கிறிஸ்துவர்களைப் பெரும்பான்மையான படைத்தலைவர்களும் போர்ச்சுக்கீசியர்களும் சுரண்டியே வருகின்றனர்.  பேராசை அவர்களுடைய கண்களை மறைக்கிறது.  குற்ற உணர்வே இல்லாமல் இறைவனையும், அயலானையும் காயப்படுத்துகின்றனர்.  கடற்கரைக் கிராமங்களுக்குச் செல்லும் எல்லோருக்கும் ஒரே ஒரு இலட்சியமே உள்ளது;  அது என்னவென்றால் அங்கு வாழும் ஏழை மீனவர்களின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்களாவது."

எனவே பரவர்களின் மறை மாற்றம் அவர்களது துன்பத்திற்கும், சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.  மறைமாற்றத்திற்கு முன் உள்ளூர் ஆட்சியாளர்கள் சுரண்டினர்.  சுரண்டல் பரவர்களுக்குத் தொடர்கதையாகவே அமைந்தது.  போர்ச்சுக்கீசிய அரசர் மூன்றாம் ஜானுக்கு பரவர்கள் அனுப்பிய மனு ஒன்றில் பரவர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமையை இவ்வாறு கூறுகின்றனர்.

"நாங்கள் கடலுக்குச் செல்லாத நாட்களிலும் கூட போர்ச்சுக்கீசியப் படைத் தலைவன் வரி கட்டும்படி வற்புறுத்துகிறான்.  நாங்கள் பிழைப்பதற்காகப் பிடிக்கின்ற சிறிய மீன்களுக்குக் கூட ஒரு புதிய வரியை வசூலிக்கின்றான்.  பரவ வர்த்தகர்கள் ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்ற சங்குகள் மீது வரி விதிப்பதோடு, வெளிநாட்டு வர்த்தகர்கள் இச்சங்குகளுக்குத் தரும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையில் தங்களுக்கே அவற்றை விற்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர்.  மேலும் போர்ச்சுக்கீசிய அதிகாரிகள், அரிசி விற்பனையில் முற்றுரிமையை எடுத்துக் கொண்டு அநியாய விலையில் அதை உள்ளூர் மக்களுக்கு விற்பனை செய்கின்றனர்."

தங்களின் சுய லாபத்திற்காக இந்தக் கிறிஸ்தவ "பாதுகாவலர்கள்" இஸ்லாமிய, இந்து சுரண்டல்காரர்களோடும் கைகோர்த்துக் கொண்டனர்.  முத்துக்குளித்துறையில் இயங்கிய போர்ச்சுக்கீசியர்களின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நிர்வாக இயந்திரங்களில் பல உயர்ந்த பதவிகள், பெரும் தொகை கொடுத்த இஸ்லாமியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தன.  கிறிஸ்தவ பரவர்கள் பலர் தகுதியிருந்தும் ஏழ்மை காரணமாக இப்பதவிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர்.

இச்சூழலில் முத்துக்குளித்துறையில் இயேசு சபைக்குருக்கள் எவ்வாறு பணியாற்றினார்கள்?

போர்ச்சுக்கீசிய காலனி ஆதிக்கவாதிகள் மட்டில் இயேசு சபையினரின் அணுகுமுறையில் இரு போக்குகளைக் காணலாம்.  ஒன்று இயேசு சபை, சர்வதேச அளவில் காலனி ஆதிக்க விஸ்தரிப்பை நியாயப் படுத்தியதோடல்லாமால், தாயக மக்கள் அதை எதிர்த்தபோதும், எதிராகப் போராடியபோதும் காலனி ஆதிக்கத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டது. இரண்டாவது மறை தளங்களில் உள்ளூர் கிறிஸ்தவர்களைக் காலனியர் அளவுக்கதிகமாக நசுக்கியபோதும் சுரண்டிய போதும் மக்களுக்கு ஆதரவாக இருந்தனர்.  சுருங்கக் கூறினால் காலனி ஆதிக்கத்தையும், விரிவாக்கத்தையும் எதிர்க்காமல் காலனி ஆதிக்க விரிவாக்கத்தின் அத்து மீறல்களை எதிர்த்தனர்.  ஒரு வகையில் வர்ணாசிரமக் கோட்பாட்டை எதிர்க்காமல், தீண்டாமையை எதிர்த்த காந்திய நிலைப்பாட்டிற்கு இதை ஒப்பிடலாம்.

முத்துக்குளித்துறையைப் பொறுத்த அளவில் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில், அந்நியர்களாலும் உள்ளூர் கொடுங்கோல் ஆட்சியாளர்களாலும் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்த பரவ மக்களுக்கு பல நேரங்களில் இயேசு சபையினர் ஆதரவாக இருந்தனர்.

1542-இல் முத்துக்குளித்துறைக்கு வந்த பிரான்சிஸ் சேவியர் பல சந்தர்ப்பங்களில் போர்ச்சுக்கீசியரின் அடாவடித்தனங்களைக் கண்டு பொருமினார்.  முத்துக்குளித் துறையில் போர்ச்சுக்கீசிய அதிகாரி கோஸ்மா டா பாய்வா கயத்தாறை ஆண்ட வெட்டும் பெருமாள் என்னும் ஆட்சியாளரோடு சேர்ந்து கொண்டு பரவர்களுக்கு எதிராக இழைத்த துரோகத்தைக் கண்ட சேவியர், அவர் தம்முடைய (பாய்வா) கொடுங்கோல் ஆட்சியை நிறுத்தாவிட்டால் முத்துக்குளித்துறையை விட்டுச் சென்றுவிடுவதாக அச்சுறுத்தியதோடு, போர்ச்சுக்கீசிய மன்னருக்கு எழுதிய மடல் ஒன்றில் "அத்தகைய நீசர்கள் நாடு திரும்பும்போது அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவற்றை விற்றுக் கிடைக்கும் பணத்தை அறச்செயல்களுக்காகச் செலவிட வேண்டும்." எனப் பரிந்துரைத்தார்.

இதனால் கோபமடைந்த போர்ச்ந்சுக்கீசியர்கள் இயேசு சபையினருக்குப் பல துன்பங்களை இழைத்தனர்.  அவர்களுக்குத் தர வேண்டிய மான்யங்களை நிறுத்தியதோடு அவர்களின் பராமரிப்புக்காகக் கொடுக்க வேண்டிய படிகளையும் நிறுத்தி வைத்தனர்.  அத்தகைய நேரங்களிலெல்லாம் பரவமக்களே இயேசு சபை குருக்களைப் பராமரித்து வந்தனர்.  இயேசு சபையினர் மீது போர்ச்சுக்கீசியர்   கொண்டிருந்த கோபத்தை அருட் தந்தை பெஸ் இவ்வாறு கூறுகிறார்:

"தங்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு, கிறிஸ்தவ மக்களின் நலனைப் புறக்கணித்த போர்ச்சுக்கீசிய அதிகாரிகள் இயேசு சபையினரை வெறுத்தார்கள்.  தந்தையர்கள் முத்துக்குளித்துறையை விட்டு வெளியேறினால், பரவர்களைத் தங்கள் இஷ்டப்படிக் கொள்ளையிடவும், அவர்களின் பணத்தைச் சூறையாடவும் செய்யலாம் என எண்ணினர்."

இது போன்ற சூழ்நிலைகளில் போர்ச்சுக்கீசியர், தங்களின் நலனைக் காத்துக் கொள்ளவும், அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் மக்களைப் பிளவு படுத்தினர்.  "பிளவு படுத்து, ஆட்சி செய்!" என்ற ஏகாதிபத்திய உத்தியையே அவர்கள் கையாண்டனர். பரவர்களின் தலைவர்களாக்க இருந்த பட்டங்கட்டிகளும், சாதித் தலைவர்களும் கூட காலனி ஆதிக்கவாதிகளின் வலைகளில் வீழ்ந்தனர்..  தங்களுக்குக் கிடைத்த சில பொருளாதார சலுகைகளுக்காகவும், போலித்தனமான மரியாதைகளுக்காகவும் அவர்கள் "விலை போயினர்".  இதைப் பயன்படுத்தி சுவாரஸ் எனும் போர்ச்சுக்கீச்சியர் முத்துக்குளித்துறையின் அதிகாரியாக இருந்த போது 1636 இல் போர்ச்சுக்கீசியப் படையினர் 12 கப்ப்பல்களில் வந்து தூத்துக்குடியையும், அருகாமையில் உள்ள கிராமஙக்ளையும் தாக்கி இயேசு சபையினரின் தங்குமிடங்களையும் தீக்கிரையாக்கினர்.



இயேசு சபையினரும் திருமறை அதிகாரிகளும்:

பரவர்களின் நலனுக்காக போர்ச்சுக்கீசிய அதிகாரிகள், உள்ளூர் ஆட்சியாளர்கள் ஆகியோரிடம் மட்டுமல்லாமல், திருச்சபையின் அதிகாரிகளோடும் கூட சில நேரங்களில் இயேசு சபையினர் மோத வேண்டியதாயிற்று.

மதுரையை ஆண்ட நாயக்கர்களும், கயத்தாறு ஆட்சியாளர் வெட்டும் பெருமாளும் தூத்துக்குடியை அடிக்கடி தாக்க வந்ததால் பரவர்கள் அருகாமையில் உள்ள தீவு ஒன்றில் தாற்காலிகமாகக் குடியேறினர். இதைக் கண்ட கொச்சியின் திருச்சபை அதிகாரிகள் "தங்களின் ஞான ஆளுகையில் இருந்து தப்பிக்கவே அங்கு சென்றுள்ளனர் என்றும் இதற்கு இயேசு சபையினரே காரணம்" எனக் கருதி முத்துக்குளித்துறை மக்கள் மீதும் அங்கிருந்த ஆலயங்கள் மீதும் இயேசு சபையினருக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்தனர்.  இது மக்களின் பக்கமாக நின்றமைக்காக இயேசு சபையினருக்குக் கொச்சியிலிருந்து ஞான ஆளுகை செய்த ஆட்சியாளர்கள் தந்த வெகுமதி.


மறை மாற்றத்திற்கு முன் உள்ளூர் ஆட்சியாளர்களாலும், பின் கிறிஸ்தவ போர்ச்சுக்கீசியர்களாலும், சில வேளைகளில் தங்களின் ஞான அதிகாரிகளாலும் பரவர்கள் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். கடலில் மட்டுமல்ல, கரையிலும் அவர்களின் வாழ்க்கை தொடர் போராட்டமாகவே இருந்தது.  ஒவ்வொருவரும், தங்களின் பங்கிற்கு அவர்களைக் கொள்ளையிடவும், ஏமாற்றவும், சுரண்டவும் செய்தனர். 1606-இல் நடைபெற்ற சம்பவம் ஒன்று அதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

1606 மே 21 ஆம் நாள் தூத்துக்குடியை ஒட்டிக் கடலில் போர்ச்சுக்கீசியக் கப்பல் ஒன்று தரை தட்டி, ஏற்றி வந்த பொருள்களோடு மூழ்கியது.  மூழ்கிய பொருட்களை மீட்டுத்தரப் போர்ச்சுக்கீசியர் இயேசு சபையினர் மூலமாகப் பரவர்களை அணுகினர்.  குளியோடுவதில் வல்லவரான பரவர்களும் மூழ்கிய பொருட்களை மீட்டுத்தர இணங்கினர்.  இதற்குப் பிரதிபலனாக மீட்கப்படும் பொருள் மதிப்பில் 25 விழுக்காட்டைத் தரப் போர்ச்சுக்கீசியர் சம்மதித்தனர்.  பொருட்களும் மீட்கப் பட்டன.  இதற்கிடையில் இந்த "பேரத்தை"க் கேள்வியுற்ற மதுரை நாயக்கன் தனக்கு 5 லட்சம் 'குரு சோடஸ்' பணம் தரவில்லை என்றால் "பரவ இனத்தையே அழித்துவிடுவேன்"  என்று பயமுறுத்தினான்.  கடலில் மூழ்கிய கப்பலும், அதில் உள்ள பொருட்களும் அந்தப் பகுதி அரசனுக்கே சொந்தம் என்பது அவனுடைய வாதம். இதற்கிடையில் மீட்டெடுத்த பொருள் மதிப்பில் கால் பங்கைத் தருவதாகக் கூறிய போர்ச்சுக்கீசியரும் பணத்தைக் கொடுக்க மறுத்தனர்.  இப்பேரத்தின் ஒரு பங்காளராகிய இயேசு சபை குருக்கள் பரவர்களுக்குரிய பணத்தைக் கொடுக்க போர்ச்சுக்கிசியரை வற்புறுத்தியதால், அவர்களையும் போர்ச்சுக்கீசியர் துன்புறுத்த ஆரம்பித்தனர்.  நீண்ட இழுபறிக்குப் பின் போர்ச்சுக்கீசியர் பரதவர்களுக்குப் பொருள் மதிப்பில் 3 விழுக்காடு (25 விழுக்காட்டிற்குப் பதிலாக) மட்டுமே தர முன் வந்தனர்.  ஆனால் அந்தத் தொகையின் ஒரு பகுதி மீதும் கோவாவின் ஆளுநராகவும், பேராயராகவும் இருந்த மென்சஸ் கண் வைத்தார். போர்ச்சுக்கீசியர் இதில் செலவுக்கென்று ஒரு தொகையைப் பறித்துக் கொண்டார். இந்த நியாயமற்ற பேரத்திலும் இயேசு சபையினரே 'மத்தியஸ்தர்களாக' இருந்து முடித்துக் கொடுத்தனர். மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து ஏழை மீனவ பரவர்களை வழக்கம் போல் கைவிட்டனர்.  அவர்களின் வயிற்றில் அடித்தனர்.

முத்துக்குளித்துறையின் கடந்த ஐந்நூறு ஆண்டு வரலாற்றில் மாறாமல் தொடரும் ஒரு அம்சம் என்னவென்றால் பரவர்கள் எப்போழுதுமே ஒடுக்கப்பட்டும், கைவிடப்பட்டும், சுரண்டப்பட்டும் வந்திருக்கின்றனர் என்பதுவே. அரசியல் எஜமானர்கள் உள்ளூர்க்காரராக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, அவர்களால் பரவர்களின் உரிமைகள் பறிக்கப்படன, செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன, அதிகாரக் கட்டமைப்பில் எப்பொழுதுமே விளிம்பு நிலையிலேயே வைக்கப்பட்டனர்.  அவர்களின் ஞான அதிகாரிகளில் பெரும்பான்மையோரும் ஏறக்குறைய இதே விதமாகவே நடந்து கொண்டனர்.  ஊர்த் தலைவர்களாகவும், சாதித் தலைவர்களாகவும் இருந்த பரதவர்களில் பலர் இந்தச் சுரண்டல் வரலாற்றில் சுய விருப்பத்தோடு சிறிய மற்றும் பெரிய பங்குதாரர்களாக இருந்தனர்.  எப்பொழுதெல்லாம் தங்கள் மேலாண்மைக்கும், சுரண்டலுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதோ அப்போதெல்லாம் ஊர் மக்களை இரண்டு கட்சிகளாக ஆக்கினர்.  அந்தச் சண்டையில் தங்களுடைய அதிகாரங்களையும், இலாபங்களையும் தக்க வைத்துக் கொண்டனர்.  பரவர்களின் கடந்த கால வரலாறு செந்நீரும், வியர்வையும் படிந்த சுரண்டல் வரலாறாகவே இருக்கிறது.  செந்நீரும், வியர்வையும் அடித்தள பரவர்கள் சிந்தியதாகவும், சுரண்டல் ஆண்டான்களுக்குரியதாகவும் ஆயின.

வரலாறு முடிந்து போன விஷயமல்ல.  அது ஒரு தொடர்.  பரவர்களிடம் இன்று பரவலாகக் காணப்படும் ஏழ்மைக்கும், அறியாமைக்கும் தொடர்ந்து அனுபவிக்கும் துன்பங்களூக்கும் அவர்களை ஆண்ட காலனி ஆதிக்கவாதிகளும் ஞான மேய்ப்பர்களும் உள்ளூர் ஆட்சியாளர்களும் போலி சாதித் தலைவர்களுமே காரணம்.  கடந்த காலங்களில் தவறிழைத்தவர்கள், மற்றவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் நிகழ்காலத்தில் பரிகாரம் செய்யும் மரபு வரலாற்றில் உள்ளது.  காலனி ஆதிக்கவாதிகள் போய்விட்டனர்.  அவர்களிடம் பரிகாரம் கோர முடியாது.  ஆனால் மற்றவர்கள் இம்மக்களிடையே இன்னும் இருக்கிறார்கள்.  இவர்கள் பரவ மக்களுக்கு இழைத்த பிழைகளுக்காகவும், இழப்புகளுக்காகவும் பரிகாரம் செய்ய வேண்டுமெனப் பரவர் எதிர்பார்த்தால் அது நியாயமும், தர்மமும் ஆகும்,  நியாயம் கிடைக்குமா?


--Geetha Sambasivam (பேச்சு) 13:33, 6 டிசம்பர் 2013 (GMT)

 

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 25 டிசம்பர் 2013, 10:07 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,962 முறைகள் அணுகப்பட்டது.