தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 புனித இராயப்பரின் ஆலயம்:

இந்த நிகழ்வுகளையெல்லாம் அறிந்த மதுரை நாயக்கனும், கயத்தாறு மன்னனும் ஒன்று சேர்ந்து புன்னைக்காயல் மீது படையெடுத்து வந்து அங்கு மக்களின் வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைத்து அழித்தனர். இதனால் போர்த்துக்கீசிய படையினரும், இயேசு சபைக் குருக்களும் புன்னைக்காயலிலிருந்து வெளியேறி, தூத்துக்குடியில் குடியேறினர். இது நடந்தது. 1579-ஆம் ஆண்டில். இயேசு சபைக் குருக்கள் தூத்துக்குடியில் ஐந்து அறைகளைக் கொண்ட ஒரு புதிய தலைமை இல்லத்தைக் கட்டியெழுப்பினார்.

தூத்துக்குடியில் ஏற்கெனவே புதிய இராயப்பருக்கு (பேதுரு)அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்று இருந்தது. இந்த ஆலயத்தைப் பரத குல மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கிய குருக்களில் ஒருவரன சுவாமி பேதுரு கொன்சால்வஸ் என்பவர் 1538-ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். இவ்வாலயம் அன்று கொச்சி மறைமாவட்டம் 1600-ஆம் ஆண்டில் உருவாகும்வரை, கோவா மறைமாவட்ட ஆயரின் ஆளுகையின் கீழ் இருந்தது. புனித இராயப்பர் ஆலயமே தூத்துக்குடி வாழ் கிறிஸ்துவ மக்களுக்கெல்லாம் முதல் பங்கு ஆலயமாக விளங்கிற்று. சுவாமி பேதுரு கொன்சால்வஸ்தான் இந்த ஆலயத்தின் முதல் பங்குக் குருவாக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு அவர் கொச்சிக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார்.

அன்னையின் முதல் ஆலயம்:


ஆரம்பத்தில் இயேசு சபைக்குருக்கள் புனித இராயப்பர் ஆலயத்தின் பங்குப் பொறுப்பில் இருக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் தங்களின் சொந்த வழிபாடு மற்றும் ஆன்மீகக் காரியங்களுக்கென தங்களுக்கென்றே தங்களின் தலைமை இல்லத்தோடு இணைந்தபடி ஓர் அழகிய ஆலயத்தை உருவாக்கினர். இவ்வாலயம் ஆரம்பத்தில் “இரக்கத்தின் மாதா” (Senhora da Piedade) ஆலயம் என்று அழைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இயேசு சபைக்குருக்கள் எழுப்பிய முதல் மாதா ஆலயத்தை மக்கள் “சம்பவுல் கோவில்” என்றும் அழைத்தனர். அதற்குக் காரணம் உண்டு. இயேசு சபைக் குருக்கள் கோவாவில் அமைத்த தங்களின் நிவாகத் தலைமைச் செயலகத்தை சம்பவுல் என்னும் சின்னப்பருக்கு அர்ப்பணித்திருந்தனர். இதனால் மக்கள் அவர்களை சம்பவுல் குரு என்றும் அழைப்பதுண்டு. தூத்துக்குடியில் ஆரம்பத்தில் இயேசு சபைக்குருக்களை சம்பவுல் குருக்கள் என்றுதான் அழைத்தனர் மேலும் தூத்துக்குடியில் இயேசு சபைக் குருக்கள் அமைத்த தங்களின் முதல் தலைமை இல்லத்தைச் சின்னப்பருக்கே அர்ப்பணித்தனர். அதனால் சம்பவுல் கல்லூரி (St. Pauls’ College) என வழங்கலாயிற்று. அத்துடன் இணைந்திருந்த இரக்கத்தின் பனிமய மாதா ஆலயத்தை மக்கள் தவறுதலாக சம்பவுல் கோயில் என அழைக்கலாயினர். (அதனால் அக்காலத்தில் புனித சின்னப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் எதுவும் தூத்துக்குடியில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.)

ஆலயத் திறப்பு விழா:


தூத்துக்குடியின் இந்த முதல் மரியன்னை ஆலயமானது 1582-ஆம் ஆண்டு உரோமையிலுள்ள பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா தினமான ஆகஸ்டு 5-ஆம் தேதி வெகு ஆடம்பரச் சிறப்புடன் திறந்து வைக்கப்பட்டது. அன்றையத் தினமே பனிமய மாதாவின் முதல் திருவிழா திருப்பலியும் நிறைவேறியது. அன்று முதல் மக்கள் இந்த ஆலயத்தைப் “பனிமய மாதா ஆலயம்”, என்று அழைக்கலாயினர். முத்துக்குளித்துறையிலிருந்தும் உள்நாட்டு ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் இந்த முதல் பனிமய மாதா ஆலய்த்தின் திருவிழாவில் மகிழ்ச்சிப் பெருக்கோடு பங்கேற்றனர். அற்புத அழகோவியமான புனித மரியன்னையின் சுருபம் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்த நாள் முதல் அதனை இயேசு சபைக்குருக்கள் தங்களின் தலைமை இல்லத்தின் ஆலயத்தில் மக்களின் வழிபாட்டுக்காக வைத்திருந்தனர். அன்னையின் வருகையைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பல அற்புதங்கள் நிகழத் தொடங்கின. சிறப்பாக, அதுவரை வறட்சியுற்றிருந்த முத்துக்குளிப்புத் தொழிலானது வளம் பெற்று பரதவர்கள் செழிப்போடு வாழத் தொடங்கினர். அதனால் மக்கள் பனிமயத் தாய்க்குத் தங்களின் நன்றிக்கு அடையாளமாக விலையுயர்ந்த பெரிய முத்துக்களைத் தேர்ந்தெடுத்து, இரு அழகிய செபமாலைகள் செய்து ஒன்றை அன்னையின் கரத்திலும், மற்றதை அந்தத் திருக்கரம் ஏந்தி நிற்கும் குழந்தை இயேசுவின் திருக்கரத்திலும் தொங்கவிட்டு அழகு பார்த்தனர்.

ஆலயத்தின் அழிவு:


பனிமயத்தாயின் ஆலயத்திற்கு அடுத்தடுத்து சோதனைகளும் வரத் தொடங்கின. 1603-ஆம் ஆண்டில் மதுரை நாயக்கன் தனது ஆளுகைக்கு உட்பட்டிருந்த முத்துக்குளித்துறையின் மக்கள் மீது அநியாய வரி ஒன்று விதித்தான். அதனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த முடியாமல் மக்கள் திணறினர். அதனால் மதுரை நாயக்கன் தனது குறுநில மன்னனாக இருந்த கயத்தாறு மன்னன் வெட்டும் பெருமாளோடு சேர்ந்து, 3000 குதிரை, யானைப்படை வீரர்களோடு சேர்ந்து படையெடுத்து வந்து தூத்துக்குடியைத் தாக்கினான். அங்கிருந்த இயேசு சபையினரின் தலைமை இல்லத்தையும் அதனுடன் இணைந்திருந்த பனிமய மாதாவின் முதல் ஆலயத்தையும் இடித்து நெருப்பு வைத்தான். அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களையும் சூறையாடினான். புனித இராயப்பர் ஆலயத்தையும் இடித்துத் தகர்த்தான். அவனை எதிர்த்துப் போராடும் அளவுக்கு போர்த்துக்கீசியப் படை வீரர்களும் போதிய அளவில் இல்லை.

ராஜத் தீவில் புதிய ஆலயம்


மதுரை நாயக்கனின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக, பரதகுலத் தலைவர்கள் புன்னைக்காயலில் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். இறுதியில் ஒரு முக்கிய தீர்மானம் எடுத்தனர். அதன்படி தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு போன்ற ஊர்களில் வாழ்ந்த பரத மக்களும், சில இந்து மா மக்களும், இயேசு சபையினரும் 1604-ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்கு எதிரேயுள்ள ராஜ தீவில் (இன்றைய முயல் தீவில்) குடியேறினர். அங்கு இல்லங்கள் அமைத்து வாழ்ந்தனர். இயேசு சபையினர் ராஜ தீவில் புதியதோர் தலைமை இல்லத்தை நிறுவினர். மேலும் பனிமய அன்னைக்கும் புதிய ஆலயம் ஒன்றைக் கட்டியெழுப்பினர். இவ்வாலயத்திற்கு இயேசு சபையின் கொச்சி மாநிலத் தலைவர் சுவாமி ஆல்பர்ட் லெர்சியோ 1604—ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இவ்வாலயம் 1606-ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றது. பரத மக்கள் தங்களோடு ராஜத் தீவுக்குப் பத்திரமாக எடுத்து வந்த பனிமய மாதாவின் அற்புத சுருபத்தை இப்புதிய ஆலயத்தில் ஆடம்பரச் சிறப்போடு கொலுவேற்றி வைத்தனர். இவ்வாலயம் ராஜத் தீவில் குடியேறிய மக்களுக்கெல்லாம் பங்கு ஆலயமாக விளங்கிற்று. ஆனால் ராஜத் தீவு குடியேற்றம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அக்காலத்தில் கொச்சி மறைமாவட்ட ஆயராக இருந்த அந்திரேயாஸ் இயேசு சபையினரையும் பரத குல மக்களையும் ராஜத் தீவிலிருந்து வெளியேறி நிலப்பகுதிக்குத் திரும்புமாறு ஆணை பிறப்பித்தார். அதன்படி ராஜத்தீவில் வாழ்ந்த அனைவரும் 1609- ஆம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறி மீண்டும் நிலப்பகுதில் தங்கள் தங்கள் சொந்த ஊர்களில் குடியேறினர்.

இடிந்து பாழாகக் கிடந்த புனித இராயப்பர் ஆலயத்தை இயேசு சபையினர் உடனடியாகப் புதுப்பித்து பனிமய மாதாவின் அற்புத சுருபத்தை மக்களின் வணக்கத்திற்காக அங்கே நிறுவினர். மதுரை நாயக்கனால் அழிக்கப்பட்ட தங்களின் தலைமை இல்லத்தையும், அத்துடன் இணைந்தபடி பனிமய மாதா ஆலயத்தையும் 1621-ஆம் ஆண்டில் எளிய முறையில் மீண்டும் கட்டியெழுப்பினர். பனிமய மாதாவின் சுருபத்தைப் புனித இராயப்பர் ஆலயத்திலிருந்து எடுத்து வந்து இப்புதிய ஆலயத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தனர்.

முத்துக்குளித்துறையில் டச்சுக்காரர்கள்
ஹாலந்து நாட்டில் “கிழக்கிந்திய வர்த்தகக் கழகம்”, உருவானது. இந்த வர்த்தகக் கழகத்தின் ஆதரவில் இந்தியாவுடனும், அதன் அண்டை நாடுகளுடனும் வணிகம் செய்வதற்காக ஹாலந்து நாட்டிலிருந்து டச்சுக்காரர்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் பீரங்கிகளோடும், துப்பாக்கிகளோடும் வந்தார்கள். டச்சுக்காரர்கள் கால்வீனியம் என்னும் புரட்சி கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள். கத்தோலிக்கத் திருமறையின் கொள்கைகளான நற்கருணை, ஒப்புரவு அருட்சாதனம், திருத்தந்தையின் தலைமைப் பதவி, உத்தரிக்கும் தலம், மாதா பக்தி, சுருப வணக்கம் ஆகியவற்றை வன்மையாகக் கண்டனம் செய்தனர். அவர்கள் முதல் முறையாக 1649-ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்கு வந்து, அங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலவரங்களை உளவு பார்த்துச் சென்றனர். பின்னர் 1655—ஆம் ஆண்டில் இலங்கைத் தீவைக் கைப்பற்றினர். இலங்கையிலுள்ள கொழும்பு நகரைத் தங்களின் வணிகத் தலைமைச் செயலகமாக்கி அங்கு கோட்டையும் கட்டினர். டச்சு ஆளுநரும், மற்றும் டச்சு உயர் அதிகாரிகளும் அங்கு நிரந்தரமாகத் தங்கினர்.


--Geetha Sambasivam 09:22, 24 ஜூலை 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 ஜூலை 2012, 09:26 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,675 முறைகள் அணுகப்பட்டது.