திருமலைராயன்பட்டினத்தில் ஏடு தேடியது

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

--Dev 06:47, 7 ஏப்ரல் 2010 (UTC)எழுதியவர் : டாக்டர் உ.வே. சாமிநாதையர்
தட்டச்சியவர் : திருமதி ஸ்வர்ண லக்ஷ்மி அவர்கள்

_______________________________________________________________________________________________________


கும்பகோணத்தில் நான் இருந்த காலத்திலும் சென்னைக்கு வந்த பிறகும் விடுமுறை நாட்களில் வெளி யூர்களுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடி வருவது வழக்கம். கிராமங்களிலும் நகரங்களிலுமுள்ள வீடுகளுக்குச் சென்று, பல நாட்களாகப் புழுதியும் புகையும் படிந்த பல ஏட்டுச் சுவடிகளைப் பார்த்திருக்கி றேன். அக்காலங்களில் சிலறை தனியே செல்வேன். ஏடுகளைப் பார்க்க வேண்டுமென்ற ஒரே நோக்கத் தோடு செல்வேனாதலின், போகுமிடங்களில் உண்டாகும் அசௌகரியங்களையும் அகௌரவத்தையும் கருத்திற்கொள்வ தில்லை. என்னுடைய சௌகரியத்தையும் பெருமையையும் பாராட்டிக்கொண்டிருப் பின், தமிழ்த்தாயின் பெருமையை நிலை நிறுத்தும் நூற்செல்வங்களைப் பார்த்திருக்க முடியாது.


ஏறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன் திருவாரூர்ப் பக்கத்திலுள்ள ஊர்களுக்கு ஒருமுறை சென்றி ருந்தேன். அக்காலத்தில் எழுதுதல் ஒப்பிடுதல் முதலிய உதவிகளை எனக்குச் செய்துவந்த பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரென்பவர் என்னோடு வந்தார். அம்முறை திருவாரூர், கீழ்வேளூர், தேவூர், நாகப் பட்டினம், நாகூர் முதலிய ஊர்களுக்குப் போய் வந்தேன். நாகப்பட்டினம் போயிருந்தபோது அதற்கு வடக்கே கடற்கரையில் திருமலைராயன் பட்டினம் இருப்பதை அறிந்தேன். சிறந்த கவிஞராகிய காள மேகத்தின் பெருமையை உலகுக்கு விளக்கிய அந்நகரத்தைப்பற்றித் தமிழ்ச்செய்யுட்களால் ஒருவாறு அறிந்திருந்தேன். காளமேகம் வசைகவி பாட அந்நகரம் மண்மாரியால் அழிந்ததென்று சொல்வார்கள். இந்தச் செய்திகளை அறிந்த எனக்கு அவ்விடத்தைப் போய்ப் பார்த்து வர வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இரு்ந்தது. மண்மாரியால் அழிந்த பட்டினத்துக்கருகில் ஊரொன்று உள்ளது. அங்கே யாரேனும் புலவர் பரம்பரையினராக இருப்பாராயின் அவர்கள் வீட்டிலுள்ள ஏடுகளையும் பார்க்கலாமென்பது என் அவா.


காலையில் நாகப்பட்டினதிலிருந்து குதிரை வண்டியில் ஏறித் திருமலைராயன் பட்டினம் போய்ச் சேர்ந்தேன். அங்கே பழைய பட்டினம் அழிந்த பிறகு உண்டா கிய புதிய பட்டினம் அதன் கீழ்புறத்தில் அப்பெயரோடே இருக்கிறது. அப்பட்டினத்தில் பலவகைச் சாதியினரும் தொழிலாளிகளும் தனித்தனியே குடியிருந்த பரந்த வீதிகளும் வேறு பலவகை அமைப்புகளும் சிவவிஷ்ணு ஆலயங்களையும் பல குளங் களும் காணப்பட்டன. நகரத்தைச் சார்ந்து திருமலைராயனென்னும் ஆறு ஓடுகின்றது. அது பழைய காலத்தில் அப்பெயரை யுடைய அரசனால் காவிரியாற்றிலிருந்து ஒரு பிரிவாக வெட்டப் பெற்றது. அந்நதி அப்பட்டினத்திற்குக் கிழக்கே சென்று கடலோடு கலக்கிறது.


அங்கே நாயன்மார்களிடத்தில் பக்தியுள்ள சிலர் சேர்ந்து பஜனை செய்து காலங்கழிக்கும் மடமொன்றிருந்தது. அதனுள்ளே சென்று அங்கிருந்தவர்களிடம் “இந்த ஊரில் யாரேனும் தமிழ் படித்தவர் இருக்கிறாரா?” என்று கேட்டேன். அவர்கள், “இந்த ஊர்ப் பள்ளிக்கூட உபாத்தியாயர் இராமசாமி பிள்ளையென்பவர் படித்தவர். செங்குந்தராகிய குமாரசாமி முதலியா ரென்று ஒருவர் இருக்கிறார்; அவரும் நன்றாகப் படித்தவர்” என்றார்கள்.


பள்ளிக்கூடத்து உபாத்தியாய்ர் அதிக வியாபகமுடையராக இருப்பராதலால் அவரைக்கொண்டு என் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமென்றெண்ணி நேரே பள்ளிக்கூடத்தை விசாரித்துக்கொண்டு சென்றேன்.


அந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பழைய கோலத்தோடு விளங்கியது. மேலே கீற்று வேயப்பட்டிருந்தது. எவ்வளவு வருஷங்களுக்கு முன் கீற்று வேய்ந்தோ மென்பது அதில் இருப்பவர்களுக்கே மறந்து போயிருக்கும். கூரையிலிருந்த இடைவெளிகளின் மூலமாகச் சூரியனுடைய கிரணங்கள் பள்ளிக்கூடத் திற்குள் நுழைந்தன. கீழே தளவரிசை, குறடுகளெல் லாம் செங்கல் பெயர்ந்தும் குழிந்தும் இருந்தன.


அங்கே, கீழே மணல் பரப்பப்பட்டிருந்தது. பிள்ளைகள் மிக்க பயபக்தியோடு தரையில் உட்கார்ந்தி ருந்தார்கள். பனையோலைச் சுவடிகளும் அச்சுப்புத்தகங் களும் அவர்கள் கைகளில் இருந்தன. சிலர் இசையோடு பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தனர். பழம் பொருள்களினிடையே நடுநாயகமாக ஒரு சாய்வு நாற்காலி போடப் பட்டிருந்தது. அதில் உள்ள பிரம்பு பல விடங்களில் பிய்ந்திருந்தது. மரச் சட்டங்கள் பொலி விழந்து காணப்பட்டன. அதன்மேல் ஒருவர் சாய்ந்த வண்ணமாக இருந்து அடிக்கடி பிள்ளைகளை அதட்டிக் கொண்டிருந்தார். ஒரு சிங்காதனத்தில் வீற்றிருக்கும் அரசனுடைய அதிகாரத் தொனி அவருடைய அதட்டலில் இருந்தது.


பள்ளிக்கூடத்தின் அமைப்பையும் பிள்ளைகளின் காட்சியையும் உபாத்தியாயரின் நிலையையும் பார்த்துக் கொண்டு நானும் என்னுடன் வந்த நாராயண சாமி ஐயரும் சிறிது நேரம் நின்றோம். உபாத்தியாயர் எங்களைக் கவனிக்கவில்லை. நாங்கள் வந்திருப்பதை உணர்த்துவதற்காகக் கனைத் தோம்; அப்பொழுதும் எங்களைக் கவனிக்கவில்லை. நாராயணசாமி ஐயருக் குச் சிறிது கோபம் உண்டாயிற்று; “இங்கே நமக்கு என்ன வேலை? மரியாதை தெரியாத மனுஷனிடம் என்ன இருக்கப் போகிறது?” என்று என்னை நோக்கிக் கூறினார். நான், “இருக்கட்டும்; நாம் மரியாதைக்காக இங்கு வரவில் லையே. அவசரப்படக் கூடாது” என்று கையமர்த்தி விட்டுச் சாய்வு நாற்காலியை நெருங்கினேன். நாற்காலியில் வீற்றிருந்த ஆசிரியர் அசைய வேயில்லை. “போதும்! போதும்! போகலாம்” என்று முணு முணுத்தார் நாராயணசாமி ஐயர். “எந்தப்புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ யாரறிவார்? இப்படியுள்ளவர் களிடமிருந்து எவ்வளவோ லாபம் அடைந்திருக் கிறேன். இங்கேதான் பண்டம் இருக்கும்” என்று சொல்லிவிட்டு அந்த உபாத்தியாயரைப் பார்த்து மெல்ல, “இந்தப் பள்ளிக்கூடத்துத் தலைவர் யாரோ?” என்று கேட்டேன். அந்த மனிதர் சாய்ந்தபடியே, “நான் தான்” என்றார். நாரயணசாமி ஐயர் கண்கள் சிவந்தன; கையைத் தட்டிப் போகலாமென்று குறிப்பித்தார். நான் உபாத்தி யாயரைப் பார்த்து, “இராமசாமி பிள்ளையவர்கள் தாங்களோ?” என்றேன்.

“ஆமாம்” என்று சொல்லித் தம் முகத்தை நிமிர்ந்து எங்களைப் பார்த்தார் அவர்.

“உங்களோடு சில சமாசாரம் பேச வேண்டும்” என்றேன்.

“இப்பொழுது ஒன்றும் முடியாது. இரண்டு மணிக்கு மேல் வாருங்கள்; பார்த்துக் கொள்ளலாம்” என்று அவர் சொன்னார்.

சற்றுத் தூரத்தில் நின்றுகொண்டிருந்த நாராயணசாமி ஐயர் “அட கிரகசாரமே!” என்று தலையில் அடித்துக் கொண்டார்.

“உங்களைப்பற்றி இவ்வூரெல்லாம் சொல்லுகிறார்கள். அதனால் பார்த்துவிட்டுப்போக வந்தோம்” என்று நான் பணிவாகக் கூறினேன்.

உபாத்தியாயர் என்னை நன்றாக நிமிர்ந்து பார்த்தார்; “நீங்கள் யார்?” என்று கேட்டார். அவர் திருவுள்ளத்தில் அப்பொழுது தான் கிருபை உதயமாகிய தென்பதைக் கண்டு கொண்டேன்.

”நான் இருப்பது கும்பகோணம் பக்கம். இவ்வூரைப் பார்த்துப் போக வந்தேன். இங்கே தமிழ் படித்தவர்கள் யார் இருக்கிறார்களென்று விசாரித்ததில் எல்லோ ரும் உங்களைச் சொன்னார்கள்” என்றேன்.

“அப்படியா?” என்று அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்’ அவர் முகத்தில் புன்னகை அரும்பியது. “ அடே, ‘பெஞ்சை’க் கொண்டு வாடா” என்று தம் மாணாக்கர் ஒருவருக்குக் கட்டளையிட்டார். ஓர் உடைந்த ‘பெஞ்சு’ வந்தது. “நிற்கிறீர்களே; உட்காருங்கள்” என்று என்னையும் நாராயணசாமி ஐயரையும் பார்த்துச் சொன்னார். உட்காருவதற்கு எங்களால் என்ன தடை?

”யாரைக் கேட்டீர்கள்? என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார் இராமசாமி பிள்ளை. தம்முடைய புகழைப் பின்னும் விரிவாக என் வாயால் கேட்பதை அவர் விரும்புகிறாரென்பதை அறிந்தேன். இது மனித இயல்புதானே!

”பஜனை மடத்தில் விசாரித்தேன்; வேறு சிலரையும் விசாரித்தேன். தாங்களும் குமாரசாமி முதலியாரென்ற ஒருவரும் நன்றாகப் படித்தவர்களென்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.”

“ஆமாம்; அவரையும் சொல்வார்கள். இரண்டுபேரையும் ஒருவிதமாகவே சொன்னார்களோ?”

”இல்லை, இல்லை; முதலியார் சாதுவாம். சிவபூஜை செய்து கொண்டு சாந்தமாகப் படித்துக்கொண்டு வீட்டில் இருப்பாராம். உங்களைப்போல அவருக்கு வியாபகம் இல்லையாம். எல்லாரும் உங்களை ஒருபடி உயர்வா கவே சொல்லுகிறார்கள்.”

”சொல்வார்கள்” என்று புன்முறுவல் செய்தார் உபாத்தியாயர்.

“இந்த ஊரில் உங்களுக்குத் தெரிந்தவர் வீடுகளில் இருக்கும் ஏட்டுச் சுவடிகளைப் பார்க்க வேண்டும். அதற்குத்தான் உங்கள் உதவியை நாடி வந்தேன்” என்றேன்.

”நான் பேதிமருந்து சாப்பிட்டிருக்கிறேன். இரண்டு மணிக்கு மேல் வந்தால் பார்க்கலாம்; இப்போது முடியாது” என்று அவர் சொன்னார். நாங்கள் விடைபெற்றுக்கொண்டு சென்றோம்.


அவ்வூரில் உணவு கொள்வதற்கு ஏற்ற இடமில்லாமையால் பெருமாள் கோயிலுக்கு சென்று பிரசாதத் திற்கு ஏற்பாடு செய்துவிட்டுக் குமாரசாமி முதலியாரையும் பார்க்கலாமென்று சென்றோம். அவர் வீட்டில் இல்லை; ஸ்னானம் செய்யப் போயிருந்தார். அவ்விடத்திற்கே போகலாம் என்று புறப்பட்டோம். அவர் நீராடிவிட்டுக் கையில் தீர்த்த பார்த்திரத்தோடும் ஈர ஆடையோடும் எதிரே வந்துகொண்டிருந்தார். அவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர் களுடைய மாணக்கராகிய சாமிநாத கவிராயரிடம் பாடங்கேட்டவரென்றும் நல்ல படிப்பாளியென்றும் கேள்வியுற்றிருந்தேன். ஆதலின் அவரைக் கண்ட வுடன், “உங்களைப் பற்றி நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன். அவர் உடனே “நீங்கள் யார்?” என்று என்னை விசாரித்தார். நான் இன்னானென்பதையறிந்து மிக்க சந்தோஷத்தோடு விரைந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். நான் ஏடு தேட வந்திருப்பதைத் தெரிந்து அப்பொழுதே ஈர ஆடையோடு தம் வீட்டுப் பரண்மேலேறி அங்கிருந்த சுவடிகளை யெல்லாம் எடுத்தெடுத்து என்னிடம் கொடுத்தார். ஒவ்வொன்றாகப் பார்த்தேன். அவற்றிற் பெரும்பாலானவை அச்சிலுள்ள புத்தகங்களாகவே இருந்தன. எனக்கு வேண்டிய தாக ஒன்றும் கிடைக்கவில்லை. “தேவர் குறளும்” *என வரும் பாட்டிற் சொல்லப் பட்டுள்ள ‘முனிமொழி’ என்ற பெயரையுடைய பழைய சுவடி ஒன்று இருந்தது. அதிகப் பழக்கமில்லாதவர்களிடமிருந்து ஏட்டுச் சுவடிகளைக் கேட்டால் அவர்கள் கொடுக்கச் சிறிது யோசிப்பார்கள்; ஆதலால் நான் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.


அப்பால் குமாரசாமி முதலியார், “ஐயாவுக்குச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன். ஆலயத்திற் பிரசாதம் ஸித்தம் செய்யச் சொல்லுகிறேன்” என்று பேரன்போடு கூறினார். நான் முன்னமே ஏற்பாடு செய்துவந்த தைச் சொல்லிவிட்டுப் பெருமாள் கோயில் சென்று நாராயணசாமி ஐயருடன் ஒருவாறு உணவை முடித்துக் கொண்டேன்.



பிற்பகல் இரண்டு மணிக்கு இராமசாமி பிள்ளையிடம் சென்றோம். அவரை, “உங்களிடம் ஏடொன்றும் இல்லையோ?” என்று கேட்டேன்.

“என்னிடம் ஒன்றும் இல்லை. வேண்டுமானால் யாரிடமாவது வாங்கிப் படித்துத் திருப்பிக் கொடுத்து விடுவது வழக்கம்” என்றார் அவர்.

நான், “தாங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?” என்று வினவினேன்.

“மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களென்ற ஒரு பெரிய கவிஞரை நீங்கள் கேட்டிருக் கிறீர்களா?” என்று அவர் கேட்டார்.

நான் இன்னானென்பதை அவர் அறிந்துகொள்ள முயலவில்லை; நானும் சொல்லிக்கொள்ள விரும்ப வில்லை. ஆதலின் நான் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டதை அவர் அறிய வகையில்லையல்லவா?

“கேட்டிருக்கிறேன்” என்றேன்.

“அவர்களிடம் படித்தவர்களுள் சவேரினாதபிள்ளை யென்ற ஒருவர் காரைக்காலில் இருந்தார். அவர் பிள்ளையவர்களோடு ஒரு கணமும் இடைவிடாமல் இருந்து பல வருஷம் படித்தவர். அவரிடம் நான் பாடங் கேட்டேன்.” என்றார் அவர்.


சவேரிநாத பிள்ளை என்னுடைய நண்பர். அவரைப்பற்றி நான் அறிந்த அளவு இராமசாமி பிள்ளை அறிந்திருக்க முடியாது. ஆயினும் ஒன்றும் எதிர்பேசாமல் அவர் சொன்னதையேல்லாம் மௌனமாகக் கேட்டு வந்தேன். நாராயணசாமி ஐயருக்கோ சிரிப்பும் கோபமும் மாறி மாறி உண்டாயின.


நாங்கள் முதலில் பழைய பட்டினத்தைப் பார்க்கப் புறப்பட்டோம். அதற்குள் குமாரசாமி முதலியார் மூலமாக என்னைப் பற்றிப் பலர் அறிந்து கொண்டனர். பல நாட்களாக என்னைக்காண வேண்டுமென்ற அன்போடு சிலர் இருந்தனர். நாங்கள் போகும் வழியில் ஒருவர் பின் ஒருவராகச் சற்றேறக்குறைய ஐம்பது பேர்கள் வந்து கூடிவிட்டார்கள். எல்லாரோடும் சென்று பழைய பட்டினம் முழுவதையும் பார்த்தேன். பல விஷயங்களையறிந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.


உடன்வந்த இராமசாமி பிள்ளை என்னைப்பற்றி மெல்ல அறிந்து கொண்டார். பழைய முறுக்கு அகன்றது; பணிவு உண்டாயிற்று. அவருடைய முகம், “தவறு செய்து விட்டோமே!” என்ற அவரது எண்ணத்தைப் புலப்படுத்தியது.


பழைய பட்டினத்தைப் பார்த்தபிறகு பல வீடுகளுக்குச் சென்று ஏடுகள் பார்த்தேன். ஒரு குளக்கரையி லிருந்த நந்தவனத்தினிடையே செங்குந்தர் மடமொன்றிருந்தது. அதில் இருந்த முதியவர் ஒருவர் தம்மிட முள்ள ஏட்டுச் சுவடிகளைக் காட்டினார். அங்கும் முனிமொழியென்ற நூல் இருந்தது. நான் ஒன்றும் பெற்றுக் கொள்ளவில்லை. அங்கே ஒட்டக்கூத்தரைப் பற்றிய பேச்சு வந்தது; ”அவர் அம்பர் நாட்டு முதலியார்” என்று அவர் கூறினார். செங்குந்தர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர். ஒட்டக்கூத்தர் அம்பர் நாட்டினரென்பதை அன்று அவரால் அறிந்தேன்.


அன்றிரவு திருமலைராயன்பட்டினத்தில் தங்கியிருந் தோம்.ஊரிலுள்ள அன்பர்கள் எங்களை ஆலயங் களுக்கு அழைத்துச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்வித் தார்கள்; பிரஸாதங்களும் கிடைத்தன. காலையில் அவர்களுடைய முயற்சியால் எங்களுக்காக இரண்டு மரக்கால் பால் வந்தது. நாங்கள் அவர்கள் அன்பால் அளித்த அவ்வினிய ஆன்பாலை இயன்றளவு உண்டு மகிழ்ந்தோம்.


பிறகு ஜட்காவில் ஏறிக்கொண்டு நாகப்பட்டினம் பிரயாணமானோம். அன்பர்கள் பலர் வண்டியைத் தொடர்ந்து வந்து வழியனுப்பினார்கள். இராமசாமி பிள்ளை, அவர்கள் நின்ற பிறகும் தொடர்ந்து வந்தார். பலமுறை நிற்கச்சொல்லியும் நிற்கவில்லை. நெடுந்தூரம் வந்தபின்பு, “ நான் தங்களை முதலில் தெரிந்து கொள்ளாமல் அபசாரம் செய்துவிட்டேன். பிறகு தெரிந்து கொண்டேன். நான் செய்த குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்” என்று நயந்த குரலோடு கூறினார்.

”நீங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லையே. உங்களால்தானே எனக்கு இவ்வளவு பேர்களும் பழக்க மானார்கள்? நீங்கள் நிற்க வேண்டும்” என்றேன்.

”ஐயா, என் பேதைமையை மறந்துவிட வேண்டும். எளியேனை மறக்கக் கூடாது” என்று பணிவோடு சொல்லி அவர் விடைபெற்றுக்கொண்டார்.


அவர் சென்ற பிறகு நாராயணசாமி ஐயரைப்பார்த்து, “பார்த்தீரா? நேற்று அவரிடம் இருந்த முறுக்கு என்ன? இன்று இருக்கும் பணிவு என்ன? நாமாக நம்மைத் தெரிவித்துக் கொள்வதை விட அவர்களாக அறிந்து கொண்டால்தான் அதிக அன்பு உண்டாகும். நாம் முதலிலேயே சொல்லியிருந்தால் பயந்து கொண்டு நம்மோடு வந்திருக்க மாட்டார். தெரியாமல் இருந்த தினால்தான் புகழுரையில் மயங்கிப்போய் நமக்கு உதவிபுரிய வந்தார். நல்ல மனிதர். ஆனாலும் உபாத்தியாயரென்ற நினைவினால் அவரிடம் சிறிது அதிகார தோரணையிருந்தது” என்றேன்.


இந்த நிகழ்ச்சி நடந்து 40 வருஷங்கள் ஆயின. சென்ற வருஷம் (1936), திருப்பனந்தாட் காசி மடத்தில் நடைபெற்ற ஆதி குமரகுருபர சுவாமிகள் தின விசேஷத்துக்கு நான் சென்றிருந்தேன். வெளியூர்களி லிருந்து பல வித்து வான்களும் சைவர்களும் வந்திருந்தனர். வந்திருந்தவர்களிற் பெரும்பாலோர் எனக்கு பழக்கமானவர்கள். அவர்களுள் ஒருவர் விபூதி ருத்திரா‌க்ஷ தாரணம் செய்துகொண் டிருந்தார். பற்க ளெல்லாம் விழுந்திருந்தன. அவர் என்னைப் பார்த்து அஞ்சலி செய்தார். அவரை இன்னாரென்று தெரிந்து கொள்ளா மையால். “நீங்கள் எந்த ஊர்?” என்று விசாரித்தேன். “திருமலை ராயன் பட்டினம்” என்றார் அவர். “அங்கே பள்ளிக்கூட உபாத்தியாயர் இராமசாமிபிள்ளை யென்பவர் எனக்குத் தெரிந்தவர். அவர் சவுக்கிய மாக இருக்கிறாரா ?” என்று கேட்டேன். “நான் தான்” என்று சொல்லி அவர் சிரித்தார். உடனே பழைய ஞாபகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக என் மனத்தில் தோன்றின.

”அந்தச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு பேசினவர்கள் நீங்களா?” என்று அவரைக்கேட்டேன்.

“ஆமாம்” என்று சிரித்தார் அவர்.

“அந்தப் பழைய முடுக்கெல்லாம் இப்பொழுது காணோமே; இப்படி ஆய்விட்டீர்களே! என்றேன். அவருடைய பழைய கதையை அங்கே உடனிருந்தவர் களுக்குச் சொன்னேன். அவரும் அதை ஒப்புக்கொண் டார். அப்பால் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவர் தாம் இயற்றிய சில தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லிக்காட்டினார். பிறகு விடைபெற்றுச் சென்றார்.
________________________________________________________________________________________________________
* “தேவர் குறளுந் திரு நான் மறைமுடிவும்,
   மூவர் தமிழு முனிமொழியும் - கோவை
   திருவா சகமும் திருமூலர் சொல்லும்
   ஒருவா சகமென் றுணர்” (மூதுரை)

--Dev 06:46, 7 ஏப்ரல் 2010 (UTC)--Dev 06:46, 7 ஏப்ரல் 2010 (UTC)

முனிமொழியென்பதொரு நூலென்று தெரியாமல் ‘பிரம்ம சூத்திரம்’ என்று சிலரும் வேறு நூலென்று சிலரும் கூறி வந்தனர்.


பங்களிப்பாளர்கள்

Dev

இப்பக்கம் கடைசியாக 7 ஏப்ரல் 2010, 06:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,755 முறைகள் அணுகப்பட்டது.