திருக்கைலை யாத்திரைப் பயணம் 9

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஓம் நமச்சிவாயா-9

Streetsin kathmandu.jpg

5-9-06 செவ்வாய்க்கிழமை காலையில் நாங்கள் எல்லாரும் இரு குழுவாகப் பிரிந்து இரண்டு பஸ்ஸில் ஏறிக் கொண்டு கைலை யாத்திரையின் முதல் நாள் பயணத்தைத் துவங்கினோம். காட்மாண்டுவின் மலைப்பகுதிகளில் பிரயாணம் தொடர்ந்தது. உயர்ந்த மலைச் சிகரங்கள்,. கீழே , கீழே, கீழே, இந்திராவதி நதி வேகமாகப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. வெகு தூரத்துக்கு இது வருகிறது. காட்மாண்டு நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் வரை பாதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் அப்படி ஒன்றும் பாதை அகலம் இல்லை. இத்தனை பெரிய பஸ் வளைவுகளில் திரும்பும்போது சற்றுப் பயமாகத் தான் இருக்கிறது. என்றாலும் போகும்போது போகிற சந்தோஷத்திலும், ஆசையிலும், எதிர்பார்ப்பிலும் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. எல்லாரும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் பயணத்தைத் தொடர்ந்தோம். சற்றுக் குளிர் கூடிக் கொண்டே வந்தது. மலைப் பகுதிகளில் பசுமை தெரிந்தது. நடு நடுவே உருக்கி ஊற்றிய வெள்ளி போல அருவிகள், மிக மிக உயரத்தில் இருந்து கீழேஏஏஏஏ விழுந்து கொண்டிருந்தன. ஒன்றா, இரண்டா? 10 அடிக்கு ஒன்று இருக்கும் என நினைக்கிறேன். அத்தனை உயரத்தில் இருந்து அருவி விழும் வேகத்தில் பாதை சரிந்து நிலச் சரிவு ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்தது. மலைச் சரிவுகளில் பல இடங்களில் நெற்பயிரும் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் அதிகம் தெரிந்தது சோளம் தான். சோள மணிகள் காய வைக்கப் பட்டிருந்தன. ரொம்பவே உயரமான பகுதி. குறுகலான பாதை. ஒரு வண்டி எதிரே வந்தால் அது கடக்கும் வரையோ, நம் வண்டி கடக்கும் வரையோ மனசு திக் திக் என்று அடித்துக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு மயிரிழை நகர்ந்தாலும் அதோகதிதான். டிரைவர் மிகச் சாமர்த்தியமாக வண்டி ஓட்டினார்.
Kathmandu shop.jpg


சற்று தூரம் போனதும் சுமார் 8-30 மணி அளவில் ஒரு பள்ளத்தாக்கு ஊர் வந்ததும் காலை உணவு ஏற்கெனவே தயார் செய்து பெட்டியில் அடைக்கப் பட்டது கொடுக்கப் பட்டது. ஒரு டீக்கடையில் உட்கார்ந்து காலை உணவைச் சாப்பிட்டு விட்டு அங்கேயே டீயும் குடித்தோம். வரும் வழியில் தென்பட்ட "அன்னபூர்ணா மலைத் தொடர்ப் பகுதிகள்" பற்றியும், எவரெஸ்ட்டின் மறுபக்கச் சிகரம் தெரிந்தது பற்றியும் எல்லாரும் பேசிக் கொண்டோம். வழி எல்லாம் ராணுவ சோதனை. உள்நாட்டில் இன்னும் நிலைமை சீராகாத காரணத்தால் நேபாளம் எங்குமே இந்த சோதனை நடக்கிறது. நாங்கள் அரசு அனுமதி பெற்றிருப்பதால் அதிகம் சோதனை இல்லை. காட்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் பயணித்துப் பின் நேபாள எல்லையான கோடரி-தொட்டபாணி என்ற கிராமத்தை அடைந்தோம். அங்கே இந்த பஸ் நின்று விடும். அங்கிருந்து சீனாவிற்குள் அதாவது திபெத் பள்ளத்தாக்கில் நுழைய நடந்தே கடக்க வேண்டும்.. இது சுமார் 2 அல்லது 3 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். அதே போல் சீன எல்லையில் இருந்தும் நேபாளத்திற்குள் நுழைய நடந்தே வருகிறார்கள். இந்த இடத்தில் எல்லாரும் இறங்கிக் கொண்டு கையில் கொண்டு வரும் சாமான்களைத் தவிர மற்றவை இருந்தால் ட்ராவல்ஸ்காரரிடம் ஒப்படைக்க வேண்டும். எல்லாரும் ஏற்கெனவே அதற்குத் தகுந்தாற்போல் பாக் செய்து வந்திருந்ததால் கைப்பையைத் தூக்கிக் கொண்டு நடந்தோம். அங்கிருந்து "ஹோட்டல் லாசா" என்ற இடத்துக்குப் போய் மதிய உணவை முடித்துக் கொண்டு அங்கே இருந்து எல்லாரும் நேபாள,சீன எல்லையில் இருக்கும் "நட்புப் பாலம்" (friendship bridge) போக வேண்டும். "லாசா" ஹோட்டலில் சாப்பாடு என்ற பெயரில் இரண்டு கருகிய ரொட்டி, ஒரு ஸ்பூன் சாதம், அதே மாதிரி ஒரு ஸ்பூன் தால், சப்ஜி என்ற பெயரில் இரண்டு உருளைக்கிழங்குத் துண்டங்கள் கொடுத்தார்கள். சிலருக்கு அது போதவே இல்லை. ரொம்பக் கேட்டதுக்கு அப்புறம் தயிர் என்ற பெயரில் ஒரு திரவம் வந்தது. சாப்பிட்டு விட்டு நட்புப் பாலத்தை நோக்கி நடந்தோம். வெயில் சுட்டெரித்தது. ஒரே வியர்த்துக் கொட்டியது. நட்புப் பாலம் வரை ஏராளமான வீடுகள், கடைத் தெருக்கள், சுமை தூக்குபவர்கள் சுமைகளைத் தூக்கிக் கொண்டு நேபாளத்தில் இருந்து சீன எல்லைக்குள் அவரவர் அனுமதிச் சீட்டைக் காட்டி விட்டு நுழைந்து கொண்டிருந்தார்கள். சுமை தூக்குபவர்களில் சிறு பையன்கள், பெண்கள், மற்றும் பெண்கள் தான் அதிகம் காணப்பட்டனர். எங்கள் ட்ரக்கில் இருந்து நாங்கள் உபயோகிக்கும் பொருட்கள் அடங்கிய சிவப்புப் பைகள், மற்றும் சாப்பாட்டுப் பொருட்கள், காஸ் சிலிண்டர்கள்,அடுப்புகள் முதலியன சுமை தூக்குபவர்களால் ஏற்றப்பட்டு சீன எல்லைக்குள் நுழைந்து கொண்டிருந்தன. நாங்கள் நட்புப் பாலத்தை அடந்தோம். நேபாள அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை ட்ராவல்ஸ் காரர்களே செய்து வெளியே போகும் அனுமதி வாங்கி விட்டதால் நாங்கள் இனிமேல் சீன அரசின் அலுவலகத்திலே தான் தனித் தனியாக ஒவ்வொருவராக அனுமதி பெற வேண்டும்.
Friendship bridge.jpg


இந்த நட்புப் பாலம் "1985-ல் " கட்டப்பட்டிருக்கிறது. நட்புப்பாலத்தின் இருபக்கமும் இமயமலைத் தொடரின் ரம்மியமான காட்சிகள். மலை மேல் உயரத்தில் சில வீடுகள்,அதில் பயமில்லாமல் ஏறி விளையாடும் குழந்தைகள். பாலத்துக்குக் கீழே ஆர்ப்பரித்து ஓடும் நதி. "போடேகுயிச்சி" என்று சொல்கிறார்கள். மிக வேகம், சத்தமும் கூட. அதைப் படம் பிடிக்கலாம் என்று எங்களில் சிலர் முயலச் சீன அரசாங்கக் காவலாளியால் எச்சரிக்கப் பட்டோம். படம் எடுக்கக் கூடாதாம். விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து கையில் வைத்திருந்தோம்.எங்களுக்கு ட்ராவல்ஸ்காரரால் நம்பர்கள் அளிக்கப் பட்டிருந்தன. அதன்படி என் நம்பர் 12, என் கணவர் நம்பர் 13. எல்லாரும் நம்பர் படி வரிசையில் நின்று கொண்டோம். சீன அரசின் அலுவலருக்கு எங்களைப்பற்றி எடுத்துச் சொல்லி எங்களுக்கு உதவ வேண்டிய உதவியாளர் வந்ததும் தான் நாங்கள் போகமுடியும்.அது வரை காத்திருந்தோம். அவர் வந்து எங்கள் குழு விசாவைக் காட்டிக் கிட்டே நின்று கொண்டிருக்க ஒவ்வொரு நபராகப் போய் அனுமதி பெற்றுச் சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்தில் நுழைந்தோம்.
Bridge2.jpg


--Geetha Sambasivam 10:26, 13 டிசம்பர் 2010 (UTC)




பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 14 டிசம்பர் 2010, 11:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,988 முறைகள் அணுகப்பட்டது.