திராவிட ஏரணவீயத்தின்(அளவையியலின்) வரலாறு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

திராவிட ஏரணவீயத்தின்(அளவையியலின்) வரலாறு

முனைவர் கி. லோகநாதன், 28-6-12

Email ulagankmy(at)yahoo.com


[அன்பர்களே

‘திராவிட மெய்யறிவு வரலாறு’ எனும் பெருநூலை சுமேருத் தமிழ் இலக்கியத்தை உட்படுத்தி தமிழ மெய்யறிவுச் சிந்தனை எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை எழுதி வருகின்றேன். அதில் ஆறாவது படலத்தின் முதற் பகுதியை தனியான ஓர் கட்டுரையாக இங்கே தருகின்றேன. வளர்ந்து வரும் அப்பெரும் நூலின் ஏனைய பகுதிகளை கீழ் வரும் வலைப் பக்கத்தில் காணலாம்.

https://sites.google.com/site/ulagansbooks/hist-of-drav-phil-tamil

உலகன்]

1.0

இதுவரை முதல் நாங்கு படலங்களில் ஆகமீயத்தை விளக்கி பின், மிகவும் நீண்ட ஐந்தாம் படலத்தில், அகத்தே எந்திரங்கள் முடுக்கி பல சிந்தனை ஓட்டங்களைத் தர, அத்தகைய அறிமானங்களை புரிந்துகொள்ளும் வகையில் அவற்றின் புறமாகிய இலக்கிய வகைகளைக் கண்டோம். இந்த இலக்கியங்கள் முதற் சங்க சுமேருத் தமிழ் காலத்திலிருந்து தொடங்கி மெய்கண்ட சாத்திரங்கள் தோன்றும் காலம் வரை உள்ள சிந்தனைப் போக்குகளை காட்டுவனவாக அமைந்தள்ளதையும் கண்டோம். உலகியல் நாட்டத்தின் மேற்கணக்கு நூற்கள், நய விசாரனையின் கீழ்கணக்கு நூற்கள். தெய்வஞ் சான்ற பத்தி இலக்கியங்கள், தலபுராணங்கள், தொண்டர் புராணங்கள், தெய்வ புராணங்கள், நுண்கலை இலக்கியங்கள், சித்தர்களின் தவயோக இலக்கியங்கள் என்றவாறு இலக்கியங்கள் பரந்து விரிந்துகிடப்பதைக் கண்டோம்.

1.1

இவற்றில் நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக இருப்பது, மெய்ஞான விசாரணையையே முதன்மைப் படுத்தி எழுந்த மெய்ஞான சாத்திரங்கள் மிகவும் பிற்காலத்தில், ஏறக்குறைய கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே தோன்றி இருப்பதைக் காண்கிறோம். இவ்வகையில் வாகீச முனிவரின் ‘ஞானாமிர்தம்’ எனும், மிகவும் பழங்காலத்து அகவல் யாப்பில் எழுதப்பட்ட நூல் தனி சிறப்புடையதாக விளங்குகின்றது. ஆயினும் வடமொழியையும் உட்படுத்திக் காணும்போது சாங்கீயம் நையாயிகம் வைசேடிகம் வேதாந்தம் போன்ற தரிசனங்கள் இருப்பதைக் காண்கின்றோம் மேலும் தமிழிலும் வடமொழி மரபு பற்றியே எழுந்துள்ள சாத்திரங்கள் தனிப்பட்ட சாத்திரங்களாக இல்லாது, மனிமேகலை போன்று கதைகள் தழுவிய சாத்திரங்களாகவே இருப்பதைக் காண்கின்றோம்

2.0

இதற்கு ஓர் முக்கியமான காரணமாக இருப்பது தமிழர்களின் பண்டைய மெய்யறிவு ஆய்வுகள் வாழ்வியலை மையமாகக் கொண்ட பொருளாய்வுகளாகவே இருந்ததுதான். இவையும் மொழியாய்வினை மையமாக் கொண்டே விளங்கி இருக்கின்றன. தொல்காப்பியமும் அதன் போக்கில் எழுந்த இறையனார் அகப்பொருள் செயிற்றியம் செம்பூட்சேயாரின் கூற்றியல் புறத்திணை ஆய்வாக அமைந்த பன்னிருபடலம் புறப்பொருள் வெண்பா மாலை போன்றவையும் இவற்றைபோல இன்னும் பல நூற்களுமே மெய்யறிவு விசாரனையாக அமைந்து ஞானப் பசியை ஒருவாறு தனிப்பதாக இருந்தன. ஆனால் இவை எல்லாம் உலகியல் ஆய்வுகளாகவே இருக்க, மெய்ஞான விராணையின் தொடக்கமாகவேதான் இருப்பதைக் காண்கின்றோம்

2.1

ஆயினும் இது இவ்வாறு இருப்பினும், மெய்யறிவு விசாரணைக்கு அடிப்படையான அளவையியல் அல்லது ஏரணவீயம் பண்டே தொடங்கிவிட்டதையும், அது தொல்காப்பியத்தில் பின்னிணைப்பாக வரும் மரபியலில் மிகவும் சிறப்புற்று முழுமை அடைந்திருப்பதும் வியப்பிற்குரிய ஒன்றே. சுமேருத் தமிழில் ‘சூருப்பாக்கின் நெறி’ எனும் நூலின் வரும் முதுமொழிகளில் தோன்றி தொல்காப்பியத்திற்கு முன்பே ‘ஏது நுதலிய முதுமொழி’ ஆகி, மரபியலில் முழுவடிவமாக சூத்திரம் ஏது எடுத்துக்காட்டு எனும் மூன்று உறுப்புக்களை அடக்கிய காண்டிகை உரை என்ற அளவிற்கு தெளிவுற்று இருப்பது வியப்பிற்குரிய ஒன்றே. இதனால் உலகிலேயே முதன் முதலில் ஏரணவீயத்தை( Logical Investigations)) வளர்த்து முறைப்படி மெய்ஞான விசாரணை செய்வதற்கு ஓர் அடிப்படையை அமைத்துத் தந்த பெருமை தொல்காப்பியத் தமிழர்கட்கு உண்டு. பிற்காத்தில் இதுவே பிறழ்ந்து நையாயிகமாகப் பரவ, தமிழர்களில் ஒரு சாரார், தொல்காப்பிய ஏரணீயத்தையே( Hermeneutic Logic) வளர்த்து அதன்வழியேதான் தமது மெய்ஞான தத்துவ கோட்பாடுகளை நிறுவினர். இதில் தலையாயவர் சிவஞானபோதம் எனும் மாபெரும் நூலை அருளிய நம் மெய்கண்டார்தான்

3,0

தமிழக வரலாற்றில் மாத்திரம் அன்று, மேலும் இந்திய வரலாற்றில் மாத்திரம் அன்று, உலக வரலாற்றிலேயே மெய்ஞான விசாரணையை, ஓர் அடிப்படையான வாய்மை விசாரனையாகக் கண்டு ஏரணவீயத்தின் அடிப்படையிலேயே ஆய்ந்து, திருமூலரால். கி.பி.6ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே பரிந்துரைக்கப்பட்டிருந்த முப்பொருள் உண்மையை, பதியினைப்போல் பசுவும் பாசமும் அநாதி எனும் அநாதிப் பொருளியத்தை யாரும் மறுக்க முடியா வகையில் ஏரண நியதி பிழையாது, முறைப்படி சிந்திப்பார் அனைவரும் உடன்படுமாறு விளக்கிய பெருமை மெய்கண்டாருக்கே உண்டு. இந்த மாபெரும் சிந்தனைப் புரட்சி இன்னும் தமிழர்களிடையேயும் உணரப்படவில்லை, அதனால் உலகளாவிய நிலையிலும் உணரப்படாதே இருக்கின்றது. மெய்கண்ட சாத்திரங்களை ஆய்வோர் அவற்றை மேற்குலகிலும் மற்றும், பிற பகுதிகளிலும் வளர்ந்துள்ள தத்துவ விசாரணைகளோடு ஒப்பிட்டு மெய்கண்ட சாத்திரங்களின் தனிப்பட்ட சிறப்புகளை தெள்ளிதின் உணர்ந்ததாகவும் தெரியவில்லை.

2.0 ஏரணவீயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

4,0

மெய்கண்டாரின் சிவஞானபோதம் ஓர் சாதாரண மெய்யறிவுப் பனுவல் அல்ல. அது உலக மாந்தரின் சிந்தனை வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும். கிரேக்கர்களாலும் பிறகாலத்து ஐரோப்பியர்களாலும் மேலும் பாரத கண்டத்து ஏனைய தத்துவ விசாரணை மரபுகளாலும் சாததிக்க முடியாத ஒன்றை மெய்கண்டார் தனது நூலில் சாதித்து உள்ளார். அதுதான் என்ன வெனில், தனித்தனி மரபுகளாக வளர்ந்து வந்த இறைஞான மரபுகளையும் முறையான மெய்நெறித்தாகிய ஏரண நெறியையும் ஒருங்கு கொண்டு வந்து இணைத்து, சிந்திப்பார் அனைவரும் ஏற்றுகொள்ளக் கூடிய முறையில் சமய வாழ்கைக்கு ஓர் அடிப்படயை அமைத்து தந்ததே யாகும். சுருதிகள் என்றும் அருளார்கள் வாக்கு என்றும் ஆப்தர்கள் மறைமொழி என்றும் இன்னும் பலவாறு இறைவனக்கு நெருங்கியவர்கள் என கூறிக்கொண்டு சமய வாழ்க்கையை ஓர் மூட நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக ஆக்கியவர்களை, அங்கு அதிகாரத்துவத்தை அறிமுகம் செய்யும் செயலை கண்டிக்கும் வகையில், முறைப்படி சிந்தித்துத் தெளிய வல்ல அனைவரும் உடன்பட்டு சமய வாழ்க்கையில் ஈடுபட்டு வீடுபேறு அடையும் வகையில் ஓர் வழியைக் காட்டிய பெருமை உலகத்தில் முதன் முதலில் மெய்கண்டாரையேச் சாரும். உண்மையான சமய வாழ்க்கைக்கு நம்பிகைக்கள் மாத்திரம் தேவையில்லை, முறையான சிந்தனை திறனும் தேவை என்று காட்டிய பெருமை மெய்கண்டாருக்கே உண்டு

4.1

ஏது நுதலிய முதுமொழி

தொல்காப்பியத்தில் முதுமொழி என்பது யாது எனும் விளக்கப்புகும் போதே ‘ஏது’ எனும் ஏரணவீயத்தின் முதல் கலைச் சொல் தோன்றுகின்றது. இச்சொல் அநேகமாக ‘எது, யாது’ எனும் தமிழ் வினாச் சொல்லின் திரிபாகவே தோன்றி இருக்கலாம். ‘எதன் காரணமாக?’ என்பதைக் குறிப்பதாக ‘ஏது’ எனும் கலைச் சொல் தோன்றி இருக்கலாம். தொல்காப்பிய மரபியலில்தான் இந்த முதுமொழி எனும் கருத்து முதன் முதலில் தோன்றுகின்றது. வடமொழி உட்பட ஏனைய இந்திய மொழிகளில் இத்தகைய முதுமொழிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இது தொல்காப்பிய செய்யுளியலில் முதன் முதழில் வருகின்றது.

அடிவரை இல்லாத செய்யுட்கள் யாவை என்று விரிக்கும்போது, இது அங்கு வருகின்றது.

1421

அவைதாம்

நூலினான உரையினான

நொடியொடு புணர்ந்த பிசியினான

ஏது நுதலிய முதுமொழி யான

மறைமொழி கிளந்த மந்திரத்தான

கூற்றிடை வைத்த குறிப்பினான


மேலும் அதே அதிகாரத்தில் இன்னும் விளக்கமாக கீழ்வரும் சூத்திரமும் வருகின்றது.

1438

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்

மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றி

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப


இச்சூத்திரம் ஆழச் சிந்தித்தற்கு உரியது. ஆழ்ந்த நுனுக்கமான சிந்தையை, மக்கட்கு ஞானத் தெளிவினை தரவல்ல ஒளியை உள்ளதாக, மிகச் சுருங்கிய வடிவில் கருத்தினை ஈர்க்கும் மென்மையான இனிமையான சொற்களோடு கூடியதாக, இதுவே நல்லது என்று கூறப்படும் ஓர் நற்சொல்லை அனைவரும் உடன்படுமாறு தக்க ஏதுவோடு தரப்படுவதே முதுமொழி என்று இங்கு அதற்கு இலக்கணம் கூறப்படுகின்றது.

இங்கு ஏது என்ற சொல்லாட்சியோடு வரும் ஏரணவீய அளவைச் சிந்தனை ஓரளவு நலமே உருவாகி இருப்பதைக் காண்க.


4.2

முதுமொழியின் சுமேருத் தமிழ் தோற்றம்

நமக்கு இடைச் சங்க நூற்கள் யாது இதுவரை கிடைக்கவில்லை. பெயரளவில் சில நூற்களை நாம் அறிந்திருந்தாலும் அவை முழுதாக கிடைக்குமா என்றும் தெரியவில்லை. ஆயினும் களிமண் வட்டுக்களில் எழுதப்பட்ட முதற் சங்க நூற்கள் இப்பொழுது கிடைக்கின்றன. அவற்றில் இந்த முதுமொழியின் தோற்றத்தை ஓரளவு காண முடிகின்றது.

இதில் மிகவும் சிறப்புடையதாக விளங்குவது சூருப்பாக்கின் நெறி (கி.மு. 3000) எனும் நூலாகும். பழமொழி என்பதோடு விரவி, முதுமொழிகளும் இந்நூலின் வந்திருப்பதைக் காண முடிகின்றது.

காட்டாக ஒன்று

வாய்மொழியாக ஆனால் ஏது காட்டாது வரும் ஓர் கிளவி கீழ் வருவது’

74. ur-sag dili na-nam dili-ni lu sar-ra-am ( The 'hero' , he alone, is absolutely unique, but men are many)

  • Ta. oorcaan tani nanam tani-nii aaLu sarvam aam)

ஓர்சான்(சான்றோன்) தனி நனம், தனி-நி உளு சர்வ ஆம்

இங்கு ஓர் ஆழமான கருத்து பதிவாகின்றது. மக்கள் என்பார் சர்வமாக, பலவாக இருக்க, சான்றோன் என்பான் தனித்து உயர்ந்து நிற்பான் என்பதே அது. ஏன் இப்படி என்று கேட்டால் அதற்கு ஏதுவாக, குறித்த பொருளை முடித்தற்கு வரும் ஏதுவாக யாதும் சொலப்படவில்லை,

இங்கு ‘சர்வம்’ எனும் சொல் தமிழில் வழக்கிழந்து போக வடமொழியில் நலமே பயில்வதைக் காண்க. இப்படி இன்னும் எத்தைனையோ சொற்கள்

இதற்கு மாறாக கீழ் வருவது.

61&62

uru.tus lu-ka na-ab-ta-bal-e-de ( Do not transgress people's dwelling places;)

si-du-un si-du-un si-me--si-ib-be-e-ne ( Go away! Go away! -- they will say to you)

  • Ta. uuru tunjcu aaLuakam naa av-at-tu paziyidee ( When among the people of the town who wants to sleep , do not continue speaking)
    celiduyen! celiduyen! ciimmee ceppinee ( they will tell you : Go away! Go away!)

61.ஊரு துஞ்சு உளுஅகம் நா அவ்வது பழியிடே(பால்யிடே)

62,சீடுவன் சீடுவன் சீயிம்மே செப்பியினே

இங்கு முதல் வரி ஒன்றினை பரிந்துரைக்க, இரண்டாம் வரி அதற்கோர் நல்ல காரணத்தை, ஏதுவைத் தருவதைக் காண்க.

‘ஊரு துஞ்சு’ என்பது இன்றும் நாம் புரிந்துகொளக்கூடியத் தமிழே: ஊரே உறங்கும் போது, ‘ளு,லு’ என்பது ‘உளு’ ஆக இருந்து உடு ஆடு ஆனதுபோல, ‘ஆளு’வாக திரிந்திருக்கவேண்டும் ‘bal’ என்பது பழித்தல் அல்லது பள்ளுதல் அதாவது சததமாக பேசுதலாக இருக்கலாம், ‘இடு’ என்பது இன்றும் உள்ளது போல் துணைவினை யாகும்--- வந்திடு சென்றிடு என்பதுபோல்.

‘சீடுவன்’ என்பதில் ‘சீ’ நீடூதல் எனும் கருத்தது. இதிலிருந்தே ‘செல்’ என்ற சொல் பிறந்திருக்கலாம். ‘செப்பு’ இன்றும் பயிலும் ஓர் சொல்தான் --- பொருளிலும் பிறழ்ச்சி இல்லை.

இப்படிப்பட்ட முதுமொழிகளைக் காண, ஏது எனும் சொல் தொக்கு நின்றாலும், தோன்றாது கர்ந்து நின்றாலும். அது அங்கு இருப்பதை நம்மால் உணர முடிகின்றது,

இந்த முதற் சங்க கால்த்திற்குப் பிறகு, அநேகமாக இடைச் சங்க காலத்தில் இந்த தொக்கு நின்ற கருத்து ‘ஏது’ என்று சொல்லாக்கப்பட்டு, தொல்காப்பியத்தில் தோன்றும் ‘முதுமொழி’ இலக்கணம் தோன்றி இருக்க வேண்டும் என்பது தெளிவு.

4.3

தொல்காப்பியத்தில் காண்டிகை உரை

ஏது நுதலிய முதுமொழி எனும் தொல்கால ஏரணவீயத்தில் தொல்காப்பியக் காலத்தின் வளர்ச்சியாக மரபியலில் கீழ்வரும் சூத்திரங்களை ஆய்ந்துத் தெளிய வேண்டி இருக்கின்றது. இங்கு ஏரணவீயம் வேண்டப்படும் எல்லா உறுப்புகளையும் வெளிப்படக் கொண்டு முற்றாக வளர்ச்சி அடைந்துள்ள நந்நிலையைக் காண முடிகின்றது. இது பாரதத்திலும் சரி உலகளாவிய நிலையிலும் சரி, மாந்தர் தம் சிந்தனை வரலாற்றில் ஓர் அற்புதமான மைல் கல்லாகும்.

முதலில் சூத்திரம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு இரண்டு விளக்கங்கள் தொல்காப்பியத்திலேயே இருப்பதைக் காண்கின்றோம், செய்யுளியலில் ஒன்றும் மரபியலில் பிறிதொன்றுமாக.

செய்யுளியலில் இவ்வாறு விளக்கப்படுகின்றது.

1425

அவற்றுள்

சூத்திரந் தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடு தலின்றி பொருள்நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே

இங்கு வரும் சூத்திர இலக்கணம், பொருள் தெற்றென விளங்கும் வகையில் யாப்பது சூத்திரம் என்று கூறி, காண்டிகை உரைக்குன் னற்ரெந்த உரைக்கும் இடந்தராது போக, மரபியலில் வேறு வகையில் இலக்கணம் பகரப்படுகின்றது.

1600

மேற்கிளந்த யாப்பின் உட்பொருளொடு
சில்வகை எழுத்தின் செய்யுட் டாகி
சொல்லுங் காலை உரை அகத்து அடக்கி
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகித்
துளக்கல் ஆகாத் துணைமை எய்தி
அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப்
பலவகை யானும் பயன் தெரிபு உடையது
சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர்

இங்கு வரும் சூத்திர இலக்கணம் செய்யுளியலில் வருவதற்கு மாறாக இருப்பதைக் காணும் போது, மரபியல் ஓர் தனிப்பட்ட நூலென்றும், அது தொல்காப்பியத்தோடு பின்னிணைப்பாக சேர்க்கப்பட்ட ஓர் நூலென்றும் கருத இடம் உண்டு,

இது எவ்வாறு இருப்பினும், சூத்திரனம் என்பது மிகவும் நுண்மையான ஆழமான எளிதில் விளங்காவகையில் அதனால் நல்லவொரு உரை வேண்டப்படுவதாக விளங்கும் ஒன்று என்று நவிலப்படுவதைக் காண்க.

இங்கு குறிக்கப்படும் பல்வேறு உரை வகைகளில், காண்டிகை உரையே நாம் சிறப்பாகக் கருத வேண்டிய ஒன்றாகும். அதனைப் பற்றியும் விளக்கங்கள் உண்டு,

1601

பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின்
கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும்

ஓர் சூத்திரமாவது, அதன் பண்பின் காரணமாக கரப்பு உடையது, அதாவது தெளிவற்ற தன்மை மறைப்பு போன்ற பண்புகளை உடையதுவாகும். அந்த கரப்பினைப் போக்கி, சூத்திரத்தின் உட்பொருளை தெற்றென அறிய வரும் மாணறிவாக வாலறிவாக மாற்றி விடும் திறத்ததுவே காண்டிகை உரையாகும். அதனைப் பற்றி மேலும் விளம்புகையில்.

1602.

விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச்
சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா
ஏது நடையினும் எடுத்துக்காட்டினும்
மேவாங்கு அமைந்த மெய்நெறித்து அதுவே

இந்த சூத்திரதிலேதான், முதன் முதலாக சூத்திரம் ஏது எடுத்துக்காட்டு என்றவாறு அளவையியல் சிந்தனை ஓர் முழுமையை அடைந்திருப்பதைக் காண்கின்றோம். மேலும் “ மெய் நெறித்து’ என்று வருவதையும் காணும்போது, காண்டிகை உரை என்பது ஓர் சூத்திரத்தின் மெய்மையை நிறுத்துவது( Logical Demonstration) என்றும் தெளிவாகின்றது.

‘மெய் நெறித்து’ என்பதை இன்னும் சிறப்பாக விளக்குமுகத்தான் ‘சிதைவு’ அதாவது பொய்நெறி சிந்தனை ஓட்டங்கள் யாவை என்பதைப் பற்றியும் விரிவாக ஆராயப்படுள்ளதையும் காண்கின்றோம்

1605.

சொல்லப் பட்ட எல்லா மாண்பும்
மறுதலை யாயின் மற்று அது சிதைவே

1608.

சிதைவு எனப்படுபவை வசையற நாடின்
கூறியது கூறல், மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல், மிகைப்படக் கூறல்
பொருளில மொழிதல், மயங்கக் கூறல்
கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்
பழித்த மொழியான் இழுக்கங் கூறல்
தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனக்கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்று விரியாகும்

இவற்றில் கூறியது கூறல் (redundancy). மாறுகொளக் கூறல்(self condradiction) போன்றவை மொழி யாப்பு சார்ந்தவையாக இல்லாது சிந்தனை முறைமைச் சார்ந்ததாக இருப்பதைக் காண்க. இந்த நியதிகள் கிரேக்க ஐரோப்பிய அளவைச் சிந்தனையிலும் உண்டு. எங்கு அளவைச் சிந்தனைகள் உண்டோ அங்கு இவை வந்துவிடும்

4.4

காண்டிகை உரை எங்கே?

கடைச் சங்க காலத்திலோ அதற்கு பிறகு வந்த சங்கம் மருவிய காலத்திலோ காண்டிகை உரையை உள்ளடக்கிய எந்நூலும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஏரணவீயத்தின் ஓர் பிழை வடிவமாகிய நையாயிகம் பெரிதாக பயிலும் மணிமேகலை காலத்தும் இத்தகைய நூல்கள் இருந்ததா என்றும் தெரியவில்லை. நமக்குக் கிடைப்பதெல்லாம் பாடல் சான்ற பல மெய்யறிவுப் பனுவல்கள் தாம்.

காண்டிகை உரை என்பது, ‘காண்டீக!’ என்ற பழந்தமிழ் சொல்லிலிருந்து வந்த ஓர் அழகியச் சொல்லாகும். தான் கண்ட ஓர் உண்மையை இன்னொருவனும் காண வைத்து அதனவழி அவனோடு ஓர் உடன்பாட்டை நிறுத்தி சூத்திரத்தின் மெய்மையை உலகறிய நிறுத்துவதாகும். எக்கருத்து பல்லோராலும் உடன்பட வருகின்றதோ, அது மெய்மை உடைத்தாகும் என்ற கருத்தில் இந்த காண்டிகை உரை விளங்கி வந்திருக்க வேண்டும். ஆக இதனை ‘ஒத்த காட்சி உத்தி’களில் ஒன்றாக நாம் எடுத்துக்கொள்ளலாம். இங்கு புதைந்து கிடக்கும் ‘காணவைப்பது’ என்ற கருத்தே திராவிட மெய்யறிவு வரலாற்றில் மிகவும் மையமான கருத்து என்பதை பிறகு மிகவும் விரிவாக காணவிருக்கின்றோம்.

4.5

காண்டிகை உரை என்பது தொல்காப்பியக் காலத்திற்குப் பிறகு தமிழ்ப் பெருங்குடியினர் மறந்துவிட்ட ஒன்று என்று தெரிகின்றது. மிகவும் பிற்காலத்தில் இலக்கண நூலாகிய ‘நன்னூல்’ என்ற நூலிற்கு காண்டிகை உரை என்றோர் உரை வழங்குகின்றது. ஆனால் இது தொல்காப்பியர் விளம்பிய காண்டிகை உரை( Logical Demonstration) அல்ல, மாறாக மிகவும் சுருக்கமாக விளக்கும் ஓர் உரை வகை என்ற கருத்திலேயே பயில்கின்றது.

இந்நிலையில் மெய்கண்டார் தம் சிவஞானபோதத்தில், இந்த காண்டிகை உரையை மிகத் தெளிவாக காண வருவதோடு, அதன் விருத்தியையும் காண வருவது, வியப்பிற்குரிய ஒன்றேயாம்.

அதனைப் பற்றி இன்னும் சற்று விரிவாக அடுத்து.

5.0

மெய்கண்டாரின் விருத்தி காண்டிகை உரை

இந்திய மெய்யறிவு வரலாற்றிலும் மற்றும் உலக மெய்யறிவு வரலாற்றிலும் ஓர் பெரும் புரட்சியை உண்டாக்கியுள்ள சிவஞான போதம், எவ்வித பிரமாணங்களுக்கும் உடன்படாது, உண்மை என்பது ஓர் சூத்ததிரதின் வழியாக மொழியப்பட்டு காண்டிகை உரை வழியாக அனைவரும் உடன்படுமாறு நிறுத்த வல்லது என்ற புரட்சி சிந்தையோடு யாக்கப்பட்ட பெருநூலாகும். இதனால சமய வாழ்க்கையை அறிவியல் துறையாக்கிய தனிப் பெரும் சிறப்பு இதற்கு உண்டு.

ஆரணம் என்பது ஆழமான மெய்யுணர்வாகும். அது அகத்தே ஒருவாறு உதிக்க அதனை காண்டிகை உரை வழி முதலில் தான் சிந்தித்துத் தெளிந்து உண்மை என்று உணர்ந்து பின் பரனையும் உடன்பட வைத்தலையே தன் முறையிலாகக் கொண்டதாகும்.

விருத்தி காண்டிகை உரையை சிவஞானபோதத்தில் செவ்வே காண்கின்றோம். இங்கு ஓர் சூத்திரம் நவிலும் ஆரணத்தை, அழிவிலுண்மையை பல அதிகரணங்கள் வழி அதாவது படிமெய்கள் வழியும் ஒவ்வொரு படிமெய்யையும் மேற்கோள் ஏது எடுத்துக்காட்டுகள் என்றவாறு காண்டிகைப் படுத்துவதை தன் முறையிலாகக் கொண்டுள்ளதை மிகத் தெளிவாகக் காண்கின்றோம்

இங்கு படிமெய் என்பதாவது, மேலான ஆழமான பேருண்மை ஒன்றை, சூத்திரத்தின் உட்பொருளை சிறிது சிறிதாக பைபையாக தெளிதற்கு வரும் உண்மைகள் என்றவாறு . குன்றுச்சி போல சூத்திரப் பொருளாகிய பேருண்மைகள், அதனை அடைவதற்கு உதவும் படிகளாக இம்மெய்கள் இருப்பதின், அவை படிமெய்கள் ஆகின்றன.

இனி இப்படிமெய்கள் அனைவராலும் உண்மையென மேற்கொளப்படும் வகையில் இருப்பதின் அவை மேற்கோள்கள் ஆகின்றன. எது உண்மையென்று மேற்கொள்ளப்படுகின்றதோ (presupoose) அதுவே மேற்கோள் ஆகின்றது. இனி சிவஞானபோதம் ஏரணவியல் வழி செல்வதின், மேலான உள்ளுணர்வுகளாக ஞானவுதிப்புகளாக இவை பகரப்படாது சிந்தித்துத் தெளிய வரும் உண்மைகளாகப் பகரப்படுவதின், ஒவ்வொன்றிற்கும் அவற்றை மெய்யென நிறுத்தும் ஏதுக்களும் மேலும் எவ்வாறு இவை ஏதுக்கள் ஆகின்றன வென்றும். இயைபு யாதென்றும் தக்க எடுத்துக்காட்டுகள் வழி விளக்கப்படுவதையும் காண்கின்றோம்

இனி இத்தகைய படிமெய்கள் பலவாக இருக்கவும் ஒன்றினைச் சார்ந்தே அடுத்தது வருவதாலும், அனைத்தும் முடிவில் ஒருங்கே சூத்திரத்தின் உட்பொருளை விளக்குவனவாகவும் அமையும் வகையில் ஓர் அதிகார முறைமையையும் அங்கு காண்கின்றோம்

இந்த அதிகார முறைமைதான் யாதெனின், முதற்படிமெய்யை அகப்படுத்தியே இரண்டாம் படிமெய்யும், இவ்விரண்டினையும் இம்முறையில் அகப்படுத்தியே மூன்றாம் படிமெய் என்றவாறு செல்வதே யாகும். முடிவில் எல்லா படிமெய்களையும் அகப்படுத்தித் தெளியும் போதே சூத்திரத்தின் உட்பொருள் பொழிப்பாகவன்றி மிகத் தெற்றென பிரகாசித்து ஏரணமாகவும் ஆரணமாகவும் விளங்கும் என்பதாம்.

இவ்வாறே ஓர் அதிகாரத்தில் அமையும் பல சூத்திரங்களின் அதிகார முறைமையையும், பல அதிகாரங்கள் விளங்கும் படலங்களின் முறைமையையும் பல படலங்களில் செல்லும் நூலின் அதிகார முறைமையும் என்றறிக.

இவ்வாறு செல்வதே ஏரணவீயம் சார்ந்த விருத்திக் காண்டிகை உரை காட்டும் முறையியல் ஆகும். அனைவர் உள்ளத்திலும் பேருண்மைகளாகிய சூத்திரப் பொருள் ஏற்கனவே இருக்கவே செய்கின்றன.ஆயினும் அவை புதைந்து கிடந்து தெளிவிலா வொன்றாகவும் மறையாகவும் கிடக்க, இத்தகைய ஏரணவியல் வழி செல்லும் சிந்தனை வேள்வி தேவையாகின்றது. இத்தகைய ஏரணவியல் புதைந்து கிடப்பதை வெளிப்படுத்தி அறிவினை நலமே சுடரும் ஒன்றாக ஆக்கும் வகையில் அறியாமை இருளைக் கடியும் என்பதாம்.

5.1

அளவையியல் கூறுகள்

இம் முறையியலில் எடுத்துக்காட்டுகட்கு தனி சிறப்பிடம் உண்டு. ஏதுக்களாகத் தரப்படுவதிலிருந்து எவ்வாறு அவ்வேது உண்மையென்று அதனின்று மேற்கோளென உறுத்தப்படுவது மெய்யாகின்றது என்பதை விளக்கியருள்வனவே எடுத்துக்காட்டுகள் ஆகும். இவ்வியைபினை தெற்றென எடுத்து அனைவரும் கானுமாறு காட்டுதலால், இவை எடுத்துக்காட்டுகள் ஆகின்றன. ஏதுக்கள் இன்றியும் எடுத்துக்காட்டுகள் இன்றியும் ஏரணவீயத்தின் காண்டிகை செல்லாது

இவ்வாறு செல்லும் ஏரணவீயக் காண்டிகை இயலிய நூனெறி பாற்பட்டதாகவே அமையும் என்பது பின் விளக்கப்படும். கற்பனா சேட்டைகளை ஒதுக்கி, ஆயப்படும் பொருள் எவ்வாறு தன்னை தன்னுள் இருந்தவாறே காட்டி அருளுகின்றதோ அவ்வாறே காண்பது இயலியமாகும். இது தற்போத சேட்டைகளையும் அதனால் வரும் கற்பனைகளையும் ஒடுக்கி உள்ளதை உள்ளவாறேக் கண்டு உண்மையையே அறியும் திறனாகும். நூனெறி என்பது அறிவினிலே கிடக்கும் அறியாமை இருளைக் கடிந்து ஞானப்பிரகாசம் பெற்றுய்யும் கருத்தொடு செல்லுமாய்வு நெறியாகும். இத்தகைய ஞானபிரகாசங்களே ஏரணங்கள் ஆகின்றன. இவற்றை ஈட்டித் தரும் ஆய்வுநெறி ஏரணவீயம் என, அது இயலியநூனெறி பிழையாது செல்லும் கருத்தது என்றறிக. காட்டப்படுவதைக் கற்பனைகள் போக்கி காட்டப்படுவாறே காண்பதால் உண்மையறிவு சனிக்கும் என்றவாறு.

இனி இவ்வாறு உண்மை என்றறிதற்கு தனிப்பட்ட இலக்கணங்கள் உண்டோவென, இல்லை என்றவாறு. எவ்வாறு இருளைக் கடியும் தன்மையால் ஒளியின் ஒண்மை தெளிவாகிறதோ, அவ்வாறே அறியாமை இருளைக் கடியும் பண்பால் ஓர் உணமை உண்மையென உணரப்படுகின்றது. மறுத்து மறுத்து எறிந்தும் மரியாவகை ஒளிர்ந்து உறுத்தி நிற்பதே உணமையென, எவ்வாறு மறுத்து நோக்கினும் வீழ்த்தப்பட முடியாது நின்றிலங்குவது யாதோ அதுவே உண்மையாம் என்றது. சூத்திரங்களின் உண்மையை, அவற்றை மறுக்க முடியாமையே ஒருவன் மாட்டு தெளிவுறுத்தும் என்றவாறு. இதனால் உண்மைக்கு பிரமாணங்களாக பிரத்தியட்சம் அனுமானம் ஆகமம் என்றெல்லாம் தேவை யில்லை. மெய்கண்டாரும் தமது நூலில் இவ்வாறான எந்த பிரமாணத்தையும் தரவில்லை.

ஆழ் உண்மைகளைக் கண்டு இணங்காமை இரண்டு காரணங்களால் வரும். கண்டுங் காணாதது போல நடிப்பாரும், பக்குவக் குறைவின் காரணமாக காணமுடியாது திகைப்பாரும் இணங்காது போவர். இவற்றில் முன்னது ஆணவச் செருக்கினால் வருவது என்பதால் ஏரணவியலிற்குப் புறம்பானது. பின்னது தகுந்த போதனாவழி போக்கப்படும் பண்பிற்று. இவ்வாறு இணங்காரை ஏரணவழி படுத்தியும் போதனை வழி படுத்தியும் இணங்குமாறு செய்வது கூடும் என்பதாம். அனைவரின் இணக்கத்துடனேயே செல்லும் இயல்பிற்று உண்மையையேக் கண்டு செல்லும் ஏரணவியலாகும். உண்மையைத் தவிர்த்து பிற அனைவரின் இணக்கத்தை பெற்றுச் செல்லா என்பதுவும் அறியப்பாற்று.

இதனால் ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் இயங்கும் உரை, தொல்காப்பியர் தம் மரபியலில் கூறும் காண்டிகை உரை என்பதொடு அதன் பிற்கால வளர்ச்சியே மெய்கண்டாரின் விருத்தி காண்டிகை உரை ஆகின்றது. தான் கண்டு பிறர் காணாது திகழும் பேருண்மைகளை மொழிப்படுத்தி பிறரும் கண்டு மகிழுமாறு போதித்து விளக்கும் பண்பிற்று இக்காண்டிகை உரை. காண வைப்பதாவது, அகத்தே காணவொட்டாது தடைசெய்து நிற்கும் மலமாசுக்களைத் துடைத்துப் போக்கி ஞானக் கண்ணை சுடர வைப்பதாகும்.

5.2

சிவஞானபோதத்தில் விருத்தி காண்டிகை உரை

இனி சிவஞானபோத்தத்தைக் காண, எழுதப்பட்ட 12 சூதிரங்கட்கும் மெய்கண்டாரே விருத்திக் காண்டிகை உரை எழுதியிருப்பதையும் காண முடிகின்றது. இத்னால பிறகாலத்தில் எழுந்த பாண்டிப் பெருமள் உரை, சிவஞான யோகிகளின் சிற்றுரை பேருரை போன்றவை உரைக்கு உரை என்றே கொள்ளவேண்டும். மெய்கண்டாரின் விருத்திக் காண்டிகை உரையை விளக்குவனவாகவே இவை அமைகின்றன. ஆயினும் ஓர் வேதனை என்னவென்றால், இதுவரை தோன்றியுள்ள எல்லா உரைகளுமே மெய்கண்டார் எழுதியது தொகாப்பியக் காண்டிகை உரை விருத்தி என்று அவர்கள உணராது போய், ஏரணவீயத்தை பிழையாக நையாயிகக் கண்ணோடு கண்டு போதத்தின் மெய்ப்பொருளை காணாது உரை எழுதிச் சென்றுள்லதே யாகும். இதனைக் களையவே அடியேன் சிவ்ஞானபோதத்திற்கு நூலிய அறிவியல் உரை என்றவாறு ஒர் உரையை எழுதியுள்ளேன்

மெய்கண்டரின் விருத்திக் காண்டிகை உரைதான் என்ன ?. இதனை ஓர் சிறிது விளக்குவம். முதல் சூத்திரம் இவ்வாறு செல்லும்:

>>>>

முதல் சூத்திரம்

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து, உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்

என்பது சூத்திரம்.

இதன் உண்மையை காண்டிகைப் படுத்த மூன்று அதிகரணக்களை(படிமெய்களை) உபகரித்து, ஒவ்வொரு படிமெய்க்கும் மேற்கோள் ஏது எடுத்துக் காட்டு என்றவாறு அவர் ஏரண முயற்சி செல்கின்றது. மிகவும் சுருக்கமான முதல் படிமெய் இவ்வாறு செல்லும்.

முதற் படிமெய்:

மேற்கோள்: ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என்றது


ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின்.

எடுத்துக்காட்டு 1.1


பூதாதி ஈறும் முதலுந் துணையாக
பேதாய் திதியாகும் பெற்றிமையின் -- ஓதாரோ
ஒன்று ஒன்றில் தோன்றி உளதாய் இறக்கண்டும்
அன்று என்றும் உண்டென ஆய்ந்து?

>>>>

இவ்வாறே ஏனைய இரண்டு படிமெய்களும் செல்லும். இதற்கு உரை என்பது இப்படிப்பட்ட காண்டிகைகளை தெற்றென புலப்படுமாறு விளக்குவதேயாகும்

இவ்வாறு மெய்கண்டார் தமது விருத்தி காண்டிகை உரையை வளர்க்கும்போது, நையாயிகத்தின் பிரத்தியட்சம் அனுமானம் ஆகமம் என்ற பிரமாணங்கள யாதும் பரிந்துரைக்கப்டவில்லை என்பதையும் காண்க. ஓர் சூத்திரத்திரத்தை காண்டிகை படுத்தும்போது ( bringing into logical demonstration) உண்மைக்கு அதிகாரத்துவம் (authority) பகரும் பிரமாணங்கள் தேவை இல்லை என்பதொடு முரண்பாடான ஒன்றும் ஆகும்.

இதனை எல்லாம் அடுத்தடுத்து வரவிருக்கும் படலங்களில் விரிவாக விளக்குவம்

6.0
மெய்கண்டாரும் தொல்காப்பியமும்

முதற் சங்க காலத்து நூலாகிய சூருப்பாக்கின் நெறி எனும் நூலில் ஏது நுதலிய முதுமொழியில் ஏது எனும் கருத்து வித்தாக இருந்து இரண்டாம் அல்லது மூன்றாம் சங்கத்து நூலாகிய தொல்காப்பிய செய்யுளியலில் ஏது நுதலிய முதுமொழி வளர்ந்து விளக்கம் பெற மரபியலில் காண்டிகை உரை வளர்ந்து ஏரணவீயம் முழுமை அடைந்து விட்டட நிலையைக் கண்டோம். அதன் இன்னுமொரு அழகிய வளர்ச்சி நிலையே மெய்கண்டார் தம் சிவஞானபோதத்தில் காட்டும் விருத்தி காண்டிகை உரையாகும். மிக ஆழமான தொல்காப்பியப் புலமை மெய்கண்டாருக்கு இல்லாது போய்விட்டால் இவ்வாறான முறையில் நையாயிகத்தை ஒதுக்கி தொல்காப்பிய ஏரணவீயத்தை வளர்த்து வழிமொழிந்து மெய்கண்டார் சென்றிருக்க மாட்டார். ஆனால் இதுவரை ஆய்வாளர்கள் யாரும் மெய்கண்டாரின் தொல்காப்பியப் புலமையைப் பற்றி பேசவில்லை. அகச் சந்தானம் புறச் சந்தானம் என்றெல்லாம் கதை கட்டி விட்டார்களேத் தவிற, உண்மையான வரலாற்றை குறிப்பிடவில்லை.

ஆக மெய்கண்டாரின் தொல்காப்பியப் புலமைக்கு சான்றுகள் யாவை?

தக்கச் சான்றுகள் சிவஞானபோத்ததிலேயே கிடப்பதை இனி சிறிது விளக்குவம்.

6.1

சைவத்தை தொல்காப்பியம் செய்தல்


தமிழப் புலவர்களிடையே ஓர் பெருங்குறை உண்டு. அது யாதெனில் வரலாற்றையும் புராணத்தையும் பிரித்து அறியாது ஒன்றை பிறிதொன்றோடு மயங்கவிட்டு உண்மையை அறியாது இடர்படுவதுதான். வரலாற்றை அதற்கு¡¢ய இலக்கணங்களோடு, வரலாறாகக் காணமுடியாது போய்விட பொய்க் கதைகள் பல சொல்லி ஒர் குழப்பத்தை உண்டாக்க, வரலாற்று உண்மைகளை திரித்து சொல்வது எளிதாகிவிட்டது. சிவஞானபோதம் இரெளரவ ஆகமத்தில் வரும் பன்னிரண்டு சூத்திரங்களின் மொழி பெயர்ப்பு என்பது போன்ற பொய்க் கதைகளையும் பிறவற்றையும் மெய்யான வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து பி¡¢த்தறிவது சிற்சில சமயங்களில் மிகவும் சிரமமான ஒன்றுமாகும். வரலாற்று சிறப்புமிக்க யாரையோ எதனையோ எடுத்துக் கொண்டாலும் புனைக்கதைகளாகப் பல பயில்கின்றனவேத் தவிர மெய்யான வரலாற்றுக் குறிப்புக்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. கல்வெட்டுகள் இவ்வகையில் பேருதவி என்ற போதிலும் எல்லாவற்றிற்கும் அவை கிடைப்பதில்லை. இவ்வகையில் வரலாற்று சிறப்புமிக்க மெய்கண்டார் விசயத்திலும் இதனையேக் காண்கின்றோம். சில வரலாற்றுக் குறிப்புக்கள் பல புராணக் கதைகளோடும் புனைகதைகளோடும் கலந்தே வர உண்மையைப் பி¡¢த்தறிய பல சங்கடங்கள். ஆயினும் சிவஞானபோதம் தன் அகத்தே கொண்டிருக்கின்ற குறிப்புகள் வழி அவரைப் பற்றி இதுவரை கூறப்படாத ஓர் உண்மையை தக்கச் சான்றுகளோடு எடுத்துக்கூறுவதே இந்தப் பகுதியின் நோக்கமாகும். சைவ சமய வளர்ச்சியில் மாபெரும் திருப்புமுனையாகிவிட்ட சிவஞானபோதத்தை உலகிற்களித்த மெய்கண்டார் உண்மையில் ஓர் பெரும் இலக்கணப் புலவராக வாழ்ந்தே, அதிலும் பெரும் தொல்காப்பிய புலவராக வாழ்ந்தே சைவ சமய சிந்தனைக்கு வந்திருக்கவேண்டும். இந்த தொல்காப்பியப் புலமையே, சைவ சமய வரலாற்றில் ஓர் பெரும் புரட்சி செய்யவுங் காரணமாகவும் இருந்திருக்கின்றது. அகச் சந்தானத்து பரஞ்சோதி முனிவர் மெய்கண்டார் அகத்தெழுந்து சிவஞானம் புகட்டியிருக்கலாம். ஆயினும் இவ்வாறான இறையருளைப் பெறுவதற்கும், பொ¢தும் பிரபலமாக இருந்த ஆதிசங்கரது மாயாவாதத்தை வீழ்த்துவதற்கும் வேண்டிய ஆழ்நுழைவுகளை இவரது தொல்காப்பிய பயிற்சியே கொடுத்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பியத்தை சிவமயம் படுத்தியவாராக 16ஆம் நூற்றாண்டு பெரும் புலவராகிய கண்கட்டி மறைஞான சம்பந்தர் குறிக்கப்படுகின்றார். இவ்வாறு காணும் போது, சைவத்தையே தொல்காப்பியம் படுத்தியவராக நாம் மெய்கண்டாரைக் குறிப்பிடலாம். இதுவே இவர் செய்த மகத்தான புரட்சி என்று தொ¢கின்றது. இதுவும் ஓர் சாதாரண புரட்சி அல்ல. சமயத்தையே ஓர் அறிவியல் துறையாக்கி அதன்வழி சமயாதீத சைவம் தமிழச் சிந்தனையில் தழைத்தெழுந்து சுடர அடிகோலியவருமாகின்றார்.

இதற்கான சான்றுகள் என்ன?

6.2

சூத்திர யாப்பு

நெடிய சைவ வரலாற்றில் சைவ சித்தாந்தம் தொடர்பாக பன்னூறு நூற்கள் எழுதப்பட்டன வெனினும், சூத்திர யாப்பில் இரண்டே இரண்டு நூற்கள் தாம்: மெய்கண்டாரின் சிவஞானபோதமும் 15ஆம் நூற்றாண்டு சிவஞானவள்ளலின் சத்தியஞானபோதமும். இதில் முன்னதாகத் தோன்றியது சிவஞானபோதம் என்பது மாத்திரம் அல்ல, இதனைத் தழுவியே வள்ளலின் நூலும் செல்கின்றது என்பதின், இந்த யாப்பு புரட்சிற்கு உரியவராக நாம் மெய்கண்டாரையே கொள்ளவேண்டும். திருமுறைகளும் திருமந்திரமும் இந்த யாப்பில் அமைந்தவை அல்ல. மேலும் மெய்கண்டாருக்கு முந்தியதாக விளங்கும் தத்துவநூலாகிய ஞானார்மிதம் சங்ககாலத்து அகவல் யாப்பில் பிழையாது செல்வது.

பதினாங்கு மெய்கண்ட சாத்திரங்களில் போதத்திற்கு காலத்தால் முற்பட்ட திருவுந்தியார் திருகளிற்றுப்படியார் என்பவை சூத்திரயாப்பில் அமைந்தவை அல்ல. இனி எத்தகைய நூற்கள் போதத்திற்கு முன் சூத்திரயாப்பில் இயங்கினவெனின் எல்லாமே இலக்கண நூற்களாக இருக்கின்றன. இவற்றில் காலத்தால் மிகப் பழைமையானது தொல்காப்பியமே. அதற்கடுத்தாற்போல் இருப்பது இறையனார் அகப்பொருளே. யாப்பருங்கல விருத்தியில் இன்னும் பல வழக்கிழந்த பெரும் பெரும் நூற்கள் சில சூத்திரங்களோடு சுட்டப்படுகின்றன. காக்கைபாடினியம், மயேச்சுரம், அவினயம், பல்காயம் என்றவாறு பல. பெரும்பாலானவை சூத்திரயாப்பிலேயே எழுதப்பட்டிருப்பதை காண்கின்றோம். பதிணென் கீழ்கணக்கு நூற்கள் யாதுமே சூத்திரப்பாவில் எழுதப்படவில்லை. இவ்வாறு இலக்கண நூற்களுக்கே உரித்தாக நின்ற ஓர் யாப்பு வகையை தம் நூலிற்கு மெய்கண்டார் தேர்ந்தெடுத்தார் என்னின் நிச்சயமாக அவர் ஓர் பெரும் இலக்கணப் புலவராக இருந்திருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக தொல்காப்பியப் பெரும் புலவராக இருந்திருக்கவேண்டும். தம் இளமை காலத்தில் இளைஞர்களுக்கு இலக்கணத்தோடு தமிழை போதித்த ஓர் நல்லாசிரியனாக இவர் வாழ்ந்திருக்கவேண்டும் எனத் தெரிகின்றது. அவர் காலத்தில், இளம்பூரணர் தம் உரையோடு தொல்காப்பியம் தமிழகத்தில் மிக விரிவாகப் பயிலப்பட்டது என்பது ஓர் வரலாற்று உண்மையாகும். சேனாவரையர் பேராசிரியர் போன்றோரின் உரைகள் இவ்வாறு இல்லையெனில் தோன்றியிருக்க முடியாது என்பதைக் காண்க. குட்டித் தொல்காப்பியம் என்று போற்றப்படும் 'இலக்கணவிளக்கம்' எழுதிய வைத்தியநாத தேசிகர் இவ்வாறான ஓர் ஆசி¡¢யப் பெருந்தகைதான்; சிவஞானியுங் கூட, பல புராணங்கள் பாடியிருக்கின்றார். இதனால் ஞானாமிர்த வாகீச பண்டிதர் போலன்றி, மெய்கண்டார் எந்தவொரு ஆதீனத்தையும் சாராது சுயமாக வாழ்ந்தவோர் தமிழாசி¡¢யர் என்று தொ¢கின்றது. திருமுறைகளின் பெருந்தாக்கத்தால்தான் இலக்கணப்புலவராக வாழ்ந்தவர் சைவப் புலவராக உயர்ந்தார் என்றும் ஊகிக்கலாம். காலத்தால் திருமுறைகண்ட இராஜராஜ சோழனிற்குப் பிறகு சோழ நாட்டிலேயே வாழ்ந்தவர் என்பதால் திருமுறைகளின் தாக்கத்திற்கும் ஆளாகியிருக்கக்கூடும் என்பது ஏற்கக் கூடியவொன்றே.


6.3

மெய்கண்டாரின் தொல்காப்பியப் புலமை

ஓர் நூலினை ஆழ ஆழக் கற்க, அதன் கருத்துக்கள் சிந்தனையில் வெகுவாகக் கலப்பதோடு, அதன் நடையும் தனக்கு¡¢ய ஒன்றாகின்றது. மெய்கண்டார் சூத்திர யாப்பை மாத்திரம் தேர்ந்தெடுக்கவில்லை, தான் யாத்த பல சூத்திரங்களில், தொல்காப்பியச் சூத்திரங்களில் வெகுவாகப் பயிலும் சில அடிப்படைக் கிளவிகளையும் அப்படியே எடுத்துக் கையாள்கின்றார். இதன் வழி தனது ஆழ்ந்த தொல்காப்பியப் புலைமையையும் வெளிபடுத்துகின்றார்.

இவற்றை இப்பொழுது காண்போம்.

1. என்மனார் புலவர்

இத்தொடர் போதத்தில் முதல் சூத்திரத்திலேயே வருகின்றது.


சூ. அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்

தோற்றியத் திதியே யொடுங்கி மலத்துளதாம்

அந்த மாதி என்மனார் புலவர்.

இதே சொற்றொடர் தொல்காப்பியத்திலும் பல இடங்களில் பயில்கின்றது.காட்டாக:

எழுத்ததிகாரம்


6.நீட்டம் வேண்டின் அவ்வள புடைய

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்


33. அளபிறந் து¡¢த்தலும் ஒற்றிசை நீடலும்

உளவென மொழிப இசையொடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர்


146. ண ந வென் புள்ளிமுன் யாவும் ஞாவும்

வினையோ ரனைய என்மனார் புலவர்


222. செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்

அவ்வியல் தி¡¢யாது என்மனார் புலவர்


483. கிளந்த அல்ல செய்யுளில் தி¡¢நவும்

வழங்கியல் மருங்கின் மருவொடு தி¡¢நவும்

விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்

வழங்கியல் மருங்கில் உணர்ந்தனர் ஒழுக்கல்

நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்


இவை எழுத்ததிகாரத்தில் சில இடங்கள். இதேப்போன்று சொல்லதிகாரத்திலும் பொருளதிகாரத்திலும். மூலத்தைப்
பார்த்து கண்டு கொள்க.

திராவிட மெய்யறிவு வரலாறு 6.6


2. இரண்டு வகையின் இசைக்கு மன் உலகே


இதுவும் தொல்காப்பியத்தில் பயிலும் ஓர் சொற்றொடர்தான். இது ஆறாம் சூத்திரத்தில் இவ்வாறு பயில்கின்றது:

6. உணருரு வசத்தெனின் உணரா தின்மையின்

இருதிறன் அல்லது சிவசத் தாமென

இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே


இதேப் போன்ற சொல்லாட்சியை கீழ்வரும் சொல்லதிகார முதற் சூத்திரத்திலும் காண்கிறோம், ஓர் சில வேறுபாடுகளுடன்:

சொல்லதிகாரம்

484: உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே

அ·றிணை யென்மனார் அவரல பிறவே

ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே


இச்சொற்றொடா¢ல் முக்கியமான "இசைக்கும்" என்ற சொல் தொல்காப்பியத்தில் இன்னும் பல இடங்களில் பயிலும் ஒன்றாகும். காட்டாக:

541..............................


ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்

பால்பி¡¢ந் திசையா உயர்திணை மேன


542. நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே


543. இசைத்தலும் உ¡¢ய வேறிடத் தான


3. ஆணை

இங்கு இச்சொல்லாட்சியோடு ஏறக்குறைய அதேக் கருத்துக்களும் தழுவப்பட்டும் இன்னும் ஆழமுஞ் சென்றுள்ள ஓர் நிலமையை இரண்டாவது சூத்திரத்தில் காண்கின்றோம்.

சூத்திரம் 2.

அவையே தானேயாய் இரு வினையின்

போக்கு வரவு புரிய ஆணையின்

நீக்கமின்றி நிற்கு மன்றே


இதனை கீழ்வருங் களவியல் சூத்திரத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்:


1039. ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப

மிக்கோன் ஆயினுங் கடிவரை இன்றே


இங்கு "ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்" என்ற கருத்தே இந்த இரண்டாம் சூத்திரத்தின் அடிப்படைக் கருத்து என்பதைக் காண்க. தொல்காப்பியர் எவ்வாறு பொருந்திய ஓர் ஆணும் பெண்ணும் கண்டு திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்பதை விளக்க, மெய்கண்டாரோ அதனையே பொதுவாக்கி, எல்லா ஆன்மாக்களோடும் அவையேத் தானேயாய் ஒன்றி உயர்ந்து நிற்கும் பாலாகிய சிவபரம்பொருளின் ஆணையின் போ¢லேயே இருவினை வயப்பட்டு பிறந்தும் இறந்தும் உழல்கின்றன என்கின்றார்.

7.0

நையாயிக பிரமாணம் மெய்கண்டாரில் இல்லை

நையாயிகத்தின் அடிப்படையே ‘பிரமா கரணம் பிரமாணம்’ அதாவது , யாது மெய்ய்றிவை பயப்பிக்கின்றதோ அதுவே பிரமாணம் என்று கூறி அவற்றை பித்தியட்சம் அனுமானம் ஆகமம் என்று வகைப் படுத்தி, இதன்வழி உண்மைக்கு அத்காரத்துவம் வரவழைக்கப்பட்டு அதன் வழியாக காண்டிகை முறையியல் கொல்லப்பட்டது என்று தெரிகின்றது. ஆயினும் பண்டைய வழக்குப்படி வடமொழி பிரமாணம் என்பது தமிழின் ‘மாணறிவு’ என்றே தெரிகின்றது. காண்க:

"பிரமாணம்" என்ற சொல்லிற்கு இப்படிப்பட்ட ஓர்பொருள், அதாவது "நுண்மையொடு புணர்ந்த ஒண்மை" அல்லது ‘மாணறிவு” என்றவாறு பண்டே இருந்ததை கீழ் வரும் திரிகடுகம் எனும் கீழ்கணக்கு நூல் விளக்குகின்றது.


37. குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய

சால்பினில் தோன்றும் குடிமையும்; பால் போலும்

தூய்மையில் தோன்றும் பிரமாணம்:--- இம் மூன்றும்

வாய்மை உடையார் வழக்கு


இங்கு பிரமாணம் என்பது அளவை என்றல்லாது அதாவது நையாயிகத்தின் "பிரமா கரணம் பிரமாணம்" என்றல்லாது, அகத்தூய்மையின் காரணமாக உள்ளத்தில் எழும் ஆழமான ஞான வெடிப்பு என்று கூறப்படுவதைக் காண்க. இப்படிப்பட்ட ஞானத்தெளிவுகளைத்தான் முதற்கண் உத்தேசமாக மொழிந்து பிறகு தக்க ஏதுக்களையும் எடுத்துக்காட்டுகளையும் தந்து பிறரையும் அதன் உண்மையைக் காணவைத்து அதன்வழி உடன்படுமாறு செய்யமுடியும். அவ்வாறு செய்யப்பட அது நிகமனமாகின்றது; ஞானக் குருடாக இருக்கும் ஒருவனது ஞானக் கண்களைத் திறந்து விட்டு அவன் இதுவரைக் கண்டறியாவொன்றைக் காணத்தருவதாகும். இவ்வாறு உத்தேசமாக மொழியப்படும் ஓர் சூத்திரத்து உட்பொருளை காணத்தரும் வகையில் தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழி நிகமனமாக்குவதே காண்டிகை உரையின் பண்பாகும் என்று மரபியல் விளக்குகின்றது என்பதை மேலேக் கண்டோம்


7.1

சிவஞானபோதத்தின் காண்டிகை உரை

சிவஞானபோதத்தின் தனிச் சிறப்பாவது, தான் யாத்த சூத்திரங்கட்கு தானே மிகச் செறிவான சுருக்கமான ஓர் உரையும் எழுதி உபகா¢த்ததாகும். இவ்வகையில், தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவோர் புரட்சியாகும். தான் யாத்த நூலிற்கு தானே உரை எழுதியமை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதற்கு முன் நடந்ததில்லை. போதத்திற்கு பாண்டிப்பெருமாள் உரைதொடங்கி எழுந்த உரைகளெல்லாம், மெய்கண்டாரே யாத்த உரைக்கு உரை எழுதுவதாகவே அமைந்துவிட்டன. இனி இவ்வுரை வடமொழி மதம் பற்றி வார்த்திகம் எனப்படுமாயினும், மேலே காட்டிய காண்டிகை உரை விளக்கத்தின்வழி காணும் போது அது மரபியலில் தெளிவாக்கப் படும் காண்டிகை உரை வகை என்பதொடு அதன் இன்னொரு வளர்ச்சியாகிய ‘விருத்தி காண்டிகை’ என்றும் தெரிகின்றது

ஆக இவ்வாறான ஓர் உரையை எழுதி தொல்காப்பிய மரபியல் வழக்கிற்கு மெய்கண்டார் புத்துயிர் ஊட்டுகின்றார் என்பதோடு சைவத்தையும் தொல்காப்பியம் படுத்துகின்றார் என்பது தெளிவு.

7.2

பிற பண்டைய உரைகள்

பண்டைய உரையோடு வரும் சூத்திர யாப்பில் அமைந்த ஓர் நூல் இறையனார் அகப்பொருள் ஆகும். மூல நூல் சங்ககாலத்து அல்லது சங்கம் மருவிய காலத்து நூலாக இருக்கலாம். ஆனால் அதன் உரை பரம்பரையாக உரைக்கப்பட்டு பிறகு ஒன்பதாவது நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டவொன்று என்று தொ¢கின்றது. எடுத்துக்காட்டுக்களாகத் தரப்படும் கோவை இலக்கியப் பாடல்களே இவ்வுரையும் பரம்பரையாக வந்து வளர்ந்து ஒன்பதாவது நூற்றாண்டு வாக்கில் இப்பொழுது இருக்கின்ற வடிவத்தைப் பெற்றது எனத் தொ¢கின்றது. காட்டாக 8வது சூத்திரத்தையும் அதற்கு எழுந்த உரையும் காண்போம். அளவில் சுருக்கமாக இருப்பதால் இது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

>>>>>>>>>>>>>
சூ.8 ஆங்குணர்ந் தல்லது கிழவோள் தேஎத்துக்

தான்குறை உறுதல் தோழிக் கில்லை

என்பது என்னுதலிற்றோ எனின், இதுவும் தோழிக்கு¡¢யதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்: ஆங்கு உணர்ந்தல்லது என்பது-- அங்ஙனம் அறிந்த பின்றை யல்லது என்றவாறு; கிழவோள் தேஎத்து என்பது-- தலைமகள் மாட்டு என்றவாறு: தான் குறை உறுதல் தோழிக்கு இல்லை என்பது--- தான் குறையுற்று முடிப்பல் என்னுஞ்சொல் தோழிக்கு இல்லை என்றவாறு.

எனவே, என்சொல்லப்பட்டதாம் எனின், கரவுநாட்டம் வேண்டுவாரையும் மறுக்கப்பட்டதாம். அ·தே யெனின் " குறையுறுதல் தோழிக்கு இல்லை" என அமையாதோ, "தான்" என்றது எற்றிற்கோ எனின், பின்னையும் தான் அல்லள் குறை நயப்புக் கூறுவாள், அவனது ஆற்றாமையைத் தன்கட்கொண்டு நின்றமையால் அவனே யெனப்படும்.
>>>>>>

ஏனைய சூத்திரங்கட்கும் இவ்வாறே உரை செல்கின்றது. வேண்டிய இடங்களில் இலக்கிய உதாதரணங்களும் தரப்படுகின்ன்றன. பொதுவாக இவற்றின் அமைப்பைக் காணும் போது அருஞ்சொல் விளக்கம், கிளவித்தொடர் விளக்கம் என்றும், நுதலியது விளக்கல் என்றும் இன்னும் சுட்டிய பொருளை தெளிவாக்கும் வகையில் தக்க இலக்கிய உதாரணங்களைத் தருவதுமாக செல்கின்றதைக் காணலாம். பொதுவாகக் காணும்போது மெய்நெறித்ததுவாக அன்றி, உலகத்து உண்மை இதுதான் என்று மெய்மை விசாரணை செய்யாது, ஓர் சூத்திரம் யாதுதான் சொல்ல வருகின்றது என்பதை ஓர் அகராதியைப் போன்று விளக்கிச் செல்வதாகவே அமைவதைக் காண்கிறோம்.

முடிவுரை

சிவஞானபோதத்திற்கு மெய்கண்டார் யாத்த உரை இப்படிப்பட்டதன்று, மரபியல் கூறும் மெய்நெறித்ததுவாகிய காண்டிகை உரை வகையாகும். காண்டிகயாவது மெய்நிறுத்தல் (Logical Demonstration). பதி பசு பாசம் எனும் முப்பொருள் உண்மையை, இறையுண்மையை காண்டிகை உலக்லிலேயே முதல் மாந்தன் நம் மெய்கண்டார்தான். ஏறகுறைய 5000 ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள இந்த ஏரணவீயத்தை நாம் இப்போது மறந்துள்ளது ஓர் சாபக் கேடுதான்.

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 30 ஜூன் 2012, 03:16 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,889 முறைகள் அணுகப்பட்டது.