தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் 7மரபு விக்கி இருந்துஇந்தக் கோயிலின் அமைப்பு ஓம் வடிவத்தினால் ஆனது என்று சொல்லுவார்கள். பிள்ளையார் சந்நதி, வள்ளி, தேவசேனா சந்நதி, திருமால் சந்நதி எல்லாம் சேர்ந்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்ற எழுத்தைப் போல் வரும் என்று சொல்கின்றனர். சூரனை சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர் எனப் படுகிறது. அதிக தெய்வபக்தி உள்ளவனே சூரபத்மன். பொதுவாக அரக்கர்கள் என இவர்களைக் குறிப்பிடுவதின் காரணமே, தம் தெய்வபக்தியையும், படித்திருக்கும் விசாலமான படிப்பையும், செய்திருக்கும் தவங்களையும், அதனால் அடைந்திருக்கும் அதி விசேஷமான வரங்களையும் ஆக்கபூர்வமாய்ப் பயன்படுத்தாமல், மக்களுக்குத் துன்பம் இழைக்கும் வழியிலேயே செலவிடுவதே காரணம். அதீதமான தெய்வசக்தியைப் பெற்ற சூரபத்மன் அந்தச் சக்தியின் உதவியால் மூன்று உலகையும் ஆண்டு வந்தான். ஆனால் ஆணவம் மிகக் கொண்டு அழிவுச் செயல்களைச் செய்ய ஆரம்பித்து மக்களைத் துன்புறுத்தினான். இந்தச் செயல்களை அழித்து சூரனை நல்வழிப்படுத்தவே கந்தன் திருஅவதாரம். சூரனின் சகோதரர்களை ஒழித்த முருகக் கடவுள் சூரனுடன் போர் செய்தார். முருகன் = அருள் என்றால் சூரன்= இருள், முருகன்= கருணை என்றால் சூரன்= கொடுமை, முருகன்= அறிவு என்றால் சூரன் = அறியாமை என்னும் மருள். சூரனின் ஒரு பாதி "நான்" மறுபாதி "எனது" இந்த இரண்டையும் கொண்ட சூரன் மாமரமாக மாறிக் கடலடியில் தலைகீழாக நின்று முருகனை ஏமாற்ற நினைத்தான். ஆனால் அவனால் முடியலை. கந்தனின் வெற்றிவேல், சொன்னதைச் செய்யும் தீரவேல் அந்த மரத்தை இருபகுதியாகப் பிளந்தது. ஒரு பாகம் ஆண்மயிலாகவும், மற்றொரு பாகம் சேவலாகவும் மாற்றி முருகன் ஆண்மயிலைத் தனக்கு வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் வைத்துக் கொண்டார். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கடலில் நீராடிவிட்டுப் பின்னர் அங்கே இருக்கும் நாழிக்கிணறு என்றழைக்கப் படும் ஒரு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். இந்த நாழிக்கிணறு ஏழு அடி ஆழமே உள்ளது எனவும், எப்போதும் இதில் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் எனவும் சொல்கின்றனர். சூரனோடு போரிட சுப்ரமணியர் வந்தபோது அவருடன் போரிட்ட படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக முருகன் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்தார் என்றும் அதனாலே இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருப்பதாகச் சொல்கின்றனர். இந்தக் கிணற்றுக்கு ஸ்கந்த புஷ்கரணி என்ற பெயரும் உண்டு.வள்ளி ஒளிந்திருந்ததாகச் சொல்லப் படும் வள்ளி குகையும் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. அதுக்குத் தனியாக் கட்டணம் செலுத்தணும். உள்ளே செல்லுவது கொஞ்சம் கஷ்டம் தான். மெதுவா உட்கார்ந்து உடலை வளைத்து நெளித்தே போகணும். கழுத்து பிரச்னை என் கணவருக்கு அதிகமா இருந்ததால் கொஞ்சம் யோசிச்சுட்டுப் போகவேண்டாம்னு முடிவெடுத்தோம். ஏற்கெனவே பார்த்தாலும் திரும்பிப் பார்க்க ஆசைதான். ஆனால் அந்தச் சமயம் அவருக்குப் பிரச்னை அதிகமா இருந்தது. நாழிக்கிணற்றின் அருகே நெருங்கவே முடியலை. கூட வந்தவர் கிட்டே சொல்லிக் கொஞ்சம் நீர் கொண்டுவரச் செய்து மேலே தெளித்துக் கொண்டோம். அவ்வளவே முடிந்தது. கோயிலுக்குள் நுழைய ஷண்முகவிலாசம் மண்டபத்தைக் கடந்தே செல்லவேண்டும். அங்கே வெகு தூரத்தில் இருந்தும் வந்த பயணிகள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக இருக்கும்.
திருக்குளந்தை செல்ல உண்மையாகவே பெருங்குளம் என்னப்படும் ஊரின் பெரிய குளத்தைச் சுற்றிக் கொண்டுதான் போகணும், திருக்குளந்தைக்கு. வழி நெடுக வாழைத் தோப்புகள். விதவிதமாய் வாழை பயிரிடப் பட்டுள்ளது. நல்ல பசுமை! குளிர்ச்சியாகவும் இருந்தது கண்ணுக்கும், மனதுக்கும். நாம் போய் தரிசிக்கப் போவதும் அந்தப் பச்சை மாமலைபோல் மேனியானைத் தானே! இந்தக் கோயிலின் மூர்த்திக்கு மாயக் கூத்தன் என்ற பெயர். இவரைப் பற்றி நம்மாழ்வார் பாடி இருப்பதாவது: “கூடச் சென்றேன், இனி என் கொடுக்கேன்? “மாயக் கூத்தா வாமனா வினையோன் கண்ணா கண்கை கால் மாயக் கூத்தன் என அழைக்கின்றார் கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக் காணவேண்டும், அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை அழைக்கின்றார். மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும் மலர்களால் ஆனவையோ, உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப் பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே? இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில் வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல் உள்ளாய்! உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும் பாடுகின்றார். அத்தகைய மாயக் கூத்தன் தான் இங்கே மூலஸ்தானத்தில் கிழக்கே பார்த்து நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். தாயார் பெயர் அலமேலு மங்கை என்றும், திருக்குளந்தை வல்லி என்றும் அழைக்கப் படுகின்றது. தேவகுருவான பிரஹஸ்பதிக்குப் பிரத்யட்சமாய்க் காக்ஷி கொடுத்தார் எனவும் சொல்லப் படுகின்றது. பெருங்குளமே இந்தக் கோயிலின் தீர்த்தமும் ஆகும். இந்தக் கோயிலின் தல வரலாறு பின்வரும்படி அமைந்துள்ளது. விப்ர குலத்தைச் சேர்ந்த அந்தணர் வேதசாரன் என்பவர் அல்லும் பகலும் வேங்கடவாணனை வழிபட்டு அவன் பாதாரவிந்தமே கதியென இருந்து வந்தார். பேரழகு வாய்ந்த குமுதவதி என்னும் பெண்ணை மனைவியாகப் பெற்றிருந்த அவருக்கு, குமுதவதி கமலாவதி என்னும் அழகிய பெண்ணைப் பெற்றுக் கொடுத்தாள். இந்தக் கமலாவதி இவர்கள் இருவரும் செய்த மாதவத்தால், அலர்மேல் மங்கைத் தாயாரே இவர்கள் பெண்ணாக விரும்பி வந்து தோன்றி வளர்ந்து வந்தாள். இவள் ஆண்டாளைப் போல் அரங்கன் ஒருவனையே தன் மணாளனாக ஏற்றாள். அதற்கெனவே வழிபட்டும் வந்தாள். அந்தக் காலகட்டட்தில் சிலவசாரன் என்னும் அரக்கன் ஒருவன் இமயமலையில் வாழ்ந்து வந்தான். பெண்களிடம் அதீத ஆசை கொண்ட இவன் பேரழகு வாய்ந்த ஆயிரம் பெண்களை ஒரே சமயம் மணக்கவேண்டும் என்ற ஆசையில் உலகிலுள்ள அழகான பெண்களை எல்லாம் கவர்ந்து சென்று இமயமலையில் சிறை வைத்திருந்தான். இவ்விதம் 998 அழகிகளைச் சிறை வைத்திருந்த இவன் இன்னும் இரண்டு பெண்கள் வேண்டும் என்று அவர்களைத் தேடி அலைந்து திரிந்து விண்ணில் வந்து கொண்டிருந்தான். இவன் கண்களில் வேதசாரன் மனைவி குமுதவதி கண்ணில் பட அவளைக் கவர்ந்து சென்று சிறை வைத்துவிட்டு ஆயிரமாவது பெண்ணைத் தேடிக் கிளம்பிச் சென்றான். மனைவியைப் பிரிந்த வேதசாரன் துன்பத்துடன் வந்து பெருமாளைத் தான் எங்கனம் வழிபடுவது என எண்ணிக் கொண்டு இறைவனையே மனைவியை மீட்டுத் தரவேண்டி வழிபட்டான். விடாமுயற்சியுடன் பக்தி செலுத்திய அவன் பக்திக்கு இரங்கிய பரந்தாமனும் பக்கத்தில் இருந்த கருடாழ்வாரைப் பார்க்க, அப்போது பார்த்து கருடனுக்குத் தான் பெருமாளுக்குத் துணையாகச் செல்வது குறித்து மமதை உண்டாயிற்று. கருடனின் மமதையைப் புரிந்து கொண்ட பரந்தாமன் கருடனைத் தன் கால் இடுக்கில் வைத்துக் கொண்டு மனோவேகத்தில் இமயத்தை அடைந்தார். சிறைப்பட்டிருந்த குமுதவதியை மீட்டுக் கொண்டு வந்து திருக்குளந்தை வந்தடைந்தார். சிலவசாரன் இதை அறிந்து திருக்குளந்தை வந்து வேங்கடவாணனைப் போருக்கு அழைக்க இருவருக்கும் கடும் யுத்தம் மூள்கிறது. தண்பொருநை நதிக்கரையில் அரக்கனைக் கொன்று வீழ்த்திய பரந்தாமன் அரக்கன் தலையின் மேலேறி, ஆனந்தக் கூத்தாட, அன்றிலிருந்து சோரநாட்டியன், மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றான். அரக்கனுக்குத் தன் தலையில் பரம்பொருளின் திருவடி பெற்றதும் உண்மை உணர, சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனாகி இறைவனை வணங்கி விடைபெற்றான். கமலாவதியின் பக்திக்கும், தவத்திற்கும் இரங்கிய பரம்பொருள் அவளை தை மாதம் சுக்லபக்ஷ துவாதசியில் பூச நக்ஷத்திரத்தில் மணந்து கொண்டு கல்யாணக் கோலமும் காட்டி அருளினார். ஆணவம் நீங்கிய கருடனுக்குத் தனக்குச் சமமான இடம் தந்து தன் அருகிலேயே எழுந்தருளச் செய்தார். கருடன் இங்கே பறக்கும் கோலத்தில் சிறகுகளை உயரே தூக்கிய வண்ணம் ஆடல் பறவையாகக் காக்ஷி அளிக்கின்றார். இந்தத் திருக்கோயிலின் மதிலின் ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய பூச்சட்டையை மறுநாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யப் படும். நம்மாழ்வாரின் திரு அவதாரப் பெருவிழாவின் ஐந்தாம் நாளில் நவதிருப்பதிப் பெருமாள்களில் ஒருவராக ஆழ்வார் திருநகரிக்கு இந்த மாயக் கூத்தர் எழுந்தருளும் சமயம் நம்மாழ்வாரின், “மாயக் கூத்தா வாமனா!” என்ற பாசுரம் பாடி வரவேற்பதும், மறுநாள் “கூடச் சென்றேன்” என்ற பாசுரத்தைப் பாடி வழியனுப்புவதும் நடந்து வருகிறது. பெருங்குளம் என்னும் பெயருக்கேற்ற இந்த ஊர்க்குளத்திலிருந்து பார்த்தால் ஒரே சமயம் சூரியன், பராசக்தி, திருமால், விநாயகர், சிவன் ஆகியோரைத் தரிசிக்க முடியும். இந்த மாயக் கூத்தருக்குத் திருமஞ்சனம் கிடையாது. திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளின் மேனியைப் போன்ற இவரின் திருமேனியில் பூச்சட்டை சாற்றும்போது காணவேண்டும் என்றும், அப்போது இவரின் மேனி அழகு கண்ணையும் கருத்தையும் கவர்ந்துவிடும் என்றும் சொல்கின்றனர். இந்த மாயக் கூத்தர் மேல் பிள்ளைத் தமிழ், ஊஞ்சல், நலுங்கு, கலித்துறை போன்ற பாடல்களை ஜெகன்வாத கவிராயர் என்பவர் பாடியுள்ளார். மாயக் கூத்தரின் பிரதம அடியாராகக் கழுநீர்த் தொட்டியான் என்பவர் கருதப் படுகின்றார். இவரே யக்ஞ நாராயணன் என்ற பெயரிலும் உற்சவருக்கும், மூலவருக்கும் நடுவில் உள்ள கூடத்தில் வழிபடப் பெறுகின்றார். கழுநீர்த்தொட்டியான் சந்நிதியில் மடைப்பள்ளிச் சாம்பலே பிரசாதமாகவும், யக்ஞ நாராயணன் சந்நிதியின் பிரம்பும், பாதுகையும் காணக் கிடைப்பது ஓர் சிறப்பாகவும் சொல்லப் படுகிறது. ஸ்ரீயக்ஞநாராயணனுக்கு மாயக் கூத்தருக்குச் சாற்றிய நிர்மால்யம் மட்டுமே சாத்தப் படுகிறது என்பதும் இங்கே விசேஷமாய்ச் சொல்கின்றனர். மேலும் குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர் அமராமல் பக்தர்களைக் காக்கவேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பதாகவும் ஐதீகம். --Geetha Sambasivam 09:52, 2 ஏப்ரல் 2011 (UTC)
|