தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் 3மரபு விக்கி இருந்துஉலகம்மைக்குத் திருவிளையாடல் புரியும் எண்ணம் வந்துவிட்டது. நமசிவாயக் கவிராயரின் புகழையும் உலகோர் அறியச் செய்யவேண்டும். ஆகவே வெற்றிலைக் காவி எச்சில் பட்ட அந்த ஆடையுடனேயே அம்பாள் சென்று மறைந்தாள். மறுநாள் காலை அர்ச்சகர் கோயிலுக்கு வந்து அம்பாளின் முதல்நாள் அலங்காரத்தைக் களைய முற்படுகையில் ஆடையில் படிந்திருந்த வெற்றிலைக் காவி எச்சில் திவலைகளைக் கண்டு யாரோ, நாத்திகனோ என்னமோ இவ்வாறு செய்திருக்கின்றானே என மனம் வருந்தினார். மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் உடனே பிராயச் சித்தம் செய்ய அர்ச்சகருக்குக் கட்டளை இட்டுப் பின்னர் இந்தப் படுபாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிக்கவேண்டும் எனக் கூறி அவ்வாறே நாடெங்கும் தெரியப் படுத்தினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி நமசிவாயக் கவிராயரைப் பற்றிக் கூறி, இது அவரறியாமல் நடந்த ஒன்று என நடந்ததைக் கூற, மன்னன் மறுநாள் காலை கவிராயரை அவைக்கு வரவழைத்தான். என்னதான் அம்பிகையே கனவில் வந்து சொல்லி போயிருந்தாலும் மன்னன் கவிராயரின் பக்தியை அளவிட எண்ணினான். அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொற்கம்பிகளால் அதைச் சுற்றிக் கட்டினான். அந்தப் பூச்செண்டு சற்றும் அலுங்காமல் குலுங்காமல் அம்பாளின் கரத்திலிருந்து வருமாறு பாடல் பாடுமாறு கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி ஒன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கையில் இருந்த பூச்செண்டைச் சுற்றிக் கட்டியிருந்த கம்பிகள் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இத்தகைய சிறப்புக் கொண்ட தலம் பாபநாசம். நம் பாபங்களை எல்லாம் நாசம் செய்யும் பாபநாசரைத் தரிசனம் செய்து கொள்ளலாம். திருஞானசம்பந்தரும், அப்பரும் இந்தத் தலத்தைக் குறித்துப் பாடி இருக்கின்றனர். //பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப் திருஞானசம்பந்தர் பதிகம்
மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் இடம் பெற்றிருக்கின்றதாய்த் தெரிந்து கொள்கின்றோம். கோயில் மிகப் பெரிய கோயிலே. கோயிலின் முன் தாமிரபரணி ஆறைக் கண்டாலே மனம் சொல்லவொணா மகிழ்ச்சியில் குதிக்கின்றது. நீராடும் வசதிகளோடு அமைந்துள்ளது. நாங்கள் சென்ற நேரம் உச்சிக்கால வழிபாட்டு நேரம். குருக்கள் நன்றாய், நிதானமாய் வழிபாடுகளை நடத்துகின்றார். அங்கிருந்து மற்ற எந்தக் கோயில்கள் முக்கியம் , எப்போது தரிசனம் செய்யலாம் என்ற தகவல்களையும் தருகின்றார். கோயிலின் சுற்றுப் புறத்தையும், அமைதியையும் பார்த்தால் அங்கேயே ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொண்டுவிட்டால் நல்லா இருக்குமேனு மனதில் ஏக்கம் வருகின்றது. தாமிரபரணியின் புகழை விளக்கும் தாமிரபரணி மகாத்மியம் ஓலைச்சுவடியில், பகவானின் கடைசி முக்கிய அவதாரம் ஆன கல்கி அவதாரம் தாமிரபரணிக்கரையில் தான் ஏற்படப் போவதாய்ச் சொல்லுகின்றது எனக் கூறுகின்றனர். ஸ்ரீமத் பாகவதம் இதைக் கூறி உள்ளது. தமிழில் இந்த மகாத்மியத்தை மொழிபெயர்த்து வெளியிடப் பல்வேறு அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றது. எந்த அளவுக்கு வெற்றி கிட்டி உள்ளது எனத் தெரியவில்லை. தாமிரபரணிக்கரையில் விஷ்ணுவின் மஹிமையை விளக்கும் நவ திருப்பதிகளும், சிவனின் மஹிமையை விளக்கும் நவ கைலாயங்களும் அமைந்துள்ளன. ஒரு சில சிவாலயங்கள் மேற்கே பார்த்த வண்ணம் அமைந்துள்ளதாய்க் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. தாமிரபரணிக்கரையில் உள்ள திருக்கோளூரில் சேர, சோழ, பாண்டீஸ்வரர் ஆலயம் என்னும் மூவேந்தரையும் சிறப்பித்துக் கூறும் ஆலயம் உள்ளது. இங்கே உள்ள முப்பந்தல் என்னும் ஊரில், வருஷம் 365 நாட்களும் காற்றுக்குப் பஞ்சம் இருக்காது என்றும், சேர, சோழ, பாண்டியர்கள் இந்த முப்பந்தலிலேயே முக்கியமான விஷயங்களைக் கூடி விவாதித்து முடிவெடுப்பனர் என்றும் தெரிய வருகின்றது. புராணங்களின் கூற்றுப்படி பார்த்தால் குபேரன் இழந்த தன் செல்வத்தை இங்கே தான் அடைந்ததாகவும், தவிரவும் குபேரன் ராஜ ராஜ பதவி பெற்றதாயும், பிரும்மாவிற்கு சிருஷ்டி சாமர்த்தியம் இங்கே ஏற்பட்டதாயும், சிவனின் அம்சங்களில் ஒருவரான ருத்ரர் இங்கேயே சர்வக்ஞதா பிராப்தி அடைந்ததாகவும், வருணன் ஜலேசத்வ பதவி பெற்றதாயும், அஷ்டதிக்பாலர்கள் ஐஸ்வர்ய பதவி அடைந்ததாகவும், சோமன் என்னும் சந்திரனுக்கு ஏற்பட்டிருந்த க்ஷயரோகம் நாசம் அடைந்ததாயும், நந்திகேஸ்வரர் பிறப்பும், கபில ரிஷியின் பிறப்பும், சனகாதி முனிவர்களில் ஒருவரான சனகரின் பிறப்பும் தாமிரபரணியில் தவம் செய்தமையால் ஏற்பட்ட பெருமைகளாய்ச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றன. வேத வியாசர் வேதங்களைத் தொகுத்து கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றுக்கு உரை எழுதும் முன்னர் பிரம்மாவை வழிபட்டார். பிரம்மா நாதாம்புஜத்தில் தவம் செய்யச் சொல்லுகின்றார். அந்த நாதாம்புஜமே தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள சேர்மாதேவி எனப் படும் சேரன் மஹாதேவி. வியாசர் தாமிரபரணியை சாக்ஷாத் அந்த அம்பாளாகவே கருதி வழிபடுகின்றார். அன்னையே தாமிரபரணியாக உருவெடுத்து வந்ததாய் நினைத்து வழிபடும் அவருக்கு ஒருநாள் தாமிரபரணி நதியில் பிரகாசமான தாமரை தென்பட்டது. தாமரைக்கு மேலே அதன் நடுப்பாகத்தில் ஒரு அன்னப் பறவை காட்சி அளித்தது. அந்த அன்னப் பறவை வியாசருக்கு ஞானத்தை உபதேசம் செய்தது. வியாசர் ஞான உபதேசம் பெற்று ஞானோதயம் அடைந்தார். வேதங்கள் தொகுக்கப் பட்டு அனைத்துக்கும் உரையும் எழுதினார். தாமிரபரணி நதியைப் பூஜை செய்தால் ஸ்த்ரீஹத்தியும், மஹாபாதகங்களும், மாத்ரு ஹத்தி, பித்ரு சாபம் போன்றவை விலகவும் வழிசெய்கின்றது. இந்த நதியை வழிபட்டதின் மூலம் பகனுக்கு இழந்த கண்கள் திரும்பக் கிடைக்கின்றன. சுதர்சனச் சக்கரமும் விஸ்வே தேவர்களும் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளனர். மானசாக்கள் தங்கள் நோயையும், பாணாதை பிசாசுத் தன்மையையும், துர்வாச முனிவர் சாபத்தையும், சரஸ்வதி தேவி தன்னுடைய சாபத்தையும் இங்கே தான் போக்கிக் கொண்டனர். நம் ஜாதகங்களில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் 12 ராசிகளும், பாரதத்தின் முக்கியப் பனிரண்டு நதிகளின் அடிப்படையிலே ஏற்படுத்தப் பட்டுள்ளதாய்க் கூறுகின்றனர். இந்தப் பனிரண்டு ராசிகளில் குருபகவான் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயருவார். அப்போது குருவின் பார்வை ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு நதியின் மேல் ஏற்படும். இதுவே புஷ்கரம் எனச் சொல்லுகின்றனர். இந்த அடிப்படையில் குருபகவான் பனிரண்டு வருஷத்திற்கு ஒருமுறை விருச்சிக ராசிக்கு வரும்போது தாமிரபரணி புஷ்கரம் ஏற்படுகின்றது.
--Geetha Sambasivam 09:36, 2 ஏப்ரல் 2011 (UTC)
|