தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்-ஸ்ரீவில்லிபுத்தூர் 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இரட்டைக் கோயில்களாக அமைந்துள்ள இந்தக் கோயில்களில் முதலில் நாம் காணப் போவது ஆண்டாள் கோயில். பெரியாழ்வாரும்,ஆண்டாளும் வாழ்ந்த வீட்டையே பின்னாட்களில் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவர் திருக்கோயிலாக மாற்றி உள்ளார். கல்வெட்டுத் தகவல் இதைத் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றனர். இரட்டைக் கோயிலாக அமைந்துள்ள இந்தக் கோயிலின் வட கிழக்கிலேதான் வடபத்ரசாயிக்குக் கோயில் உள்ளது. மேற்கே ஆண்டாள் கோயில், இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியிலே பெரியாழ்வாரின் நந்தவனம் இன்னும் மலர்கள் அளித்துவருகிறது. இங்கேயும் ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்று உள்ளது. இங்கே உள்ள துளசிமாடத்தில் ஆண்டாளின் சிற்பமும் வடித்திருக்கின்றனர். நந்தவனம் காலை வேளை சென்றால் மட்டுமே காணலாம் என எண்ணுகிறேன். முதலில் காணப்படுவதைப் பந்தல் மண்டபம் என்கின்றனர். அதைத் தாண்டிய கல்யாண மண்டபத்தில் நாயக்கர் காலத்திய ராமாயண ஓவியங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பார்க்கமுடியலை. ஓவியங்கள் அழியும் நிலைமையில் உள்ளன என்றும் கேள்விப் பட்டோம். மதுரைப் பொற்றாமரைக்கரையைச் சுற்றி இருந்த ஓவியங்களை அழித்தாற்போல் இவையும் அழியாமல் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. உள் பிரகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் காட்சி அளிப்பதே நம்ம மாதவிப்பந்தல்.(கேஆரெஸ்ஸோடது இல்லைங்க, நிஜமான ஆண்டாள் திருப்பாவையில் பாடின மாதவிப் பந்தல்) அடுத்து உள்ள மண்டபத்திலே தான் ஆண்டாள் முகம் பார்த்த தட்டொளி காணப்படுகிறது.

Srivilliputhur.jpg

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.


முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது. தான் அணிந்து கொண்ட பூமாலையுடன் ஆண்டாள் இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. கிணறை கண்ணாடிக் கிணறு என அழைக்கின்றனர்.


முதல் பிரகாரத்தைப் பெரியாழ்வாரின் நெஞ்சாகக் கருதினால் இரண்டாம் பிரகாரத்தில் சொர்க்க வாசல் உள்ளது. இங்கே மஹாலக்ஷ்மியும் அநுமனும், கலைமகளும் அருள் பாலிக்கின்றனர். வடக்கே உள்ள கோயிலுக்கும், நந்தவனத்துக்கும் இடையே சக்கரத்தாழ்வாரும் காணப்படுகிறார். சக்கரத்தாழ்வார் உக்கிரமாக இருந்ததாயும், ஆண்டாளால் சாந்தமடைந்ததாகவும் வரலாறு. இங்கே இருந்த ஆண்டாளும் அந்நியர் படை எடுப்பின் போது கேரளம் சென்று கொஞ்ச காலம் மறைந்து வாழ்ந்திருக்கிறாள். வடபத்ரசாயிக்கு ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமான் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயிலை எழுப்பியவர்கள் வில்லி என்பவனும்,கண்டன் என்பவனும் ஆவார்கள். இவர்கள் பெயராலேயே வில்லிபுத்தூர் என்னும் பெயரும் இந்த ஊருக்கு ஏற்பட்டது. இந்தத் திருக்கோயிலின் எதிரே நூபுரகங்கை உள்ளது. இதில் எந்தக் கோடையிலும் நீர் வற்றுவதில்லை என்பதோடு நீருக்கான ஆதாரமும் தெரியவில்லை.

--Geetha Sambasivam 11:15, 21 ஏப்ரல் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 23 ஏப்ரல் 2011, 08:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,491 முறைகள் அணுகப்பட்டது.