தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நவ கைலாயம் 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
நவ கைலாயம் 5
Murappanadu.jpg

அடுத்ததாக நாம் காணப் போவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் கோயிலாகும். நவ கைலாயங்களில் இது ஐந்தாவது கோயில். குருபகவானுக்கான க்ஷேத்திரம் எனச் சொல்லப் படுகிறது. மற்ற நவகைலாயக் கோயில்களுக்கு நடுவே இது அமைந்திருப்பதால் இதை நடுக்கைலாயம் என்றும் அழைக்கின்றனர். மேலும் தாமிரபரணி நதி இங்கே வடக்கே இருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனாலும் இது சிறப்பாகக் கூடப் படுகிறது. இந்த இடத்தில் தாமிரபரணி நதியை தக்ஷிண கங்கை என்ற பெயரில் அழைக்கின்றனர். நதிகளிலேயே மூத்த நதியான தாமிரபரணி நதியின் இந்தக் கரையில் தீர்த்த யாத்திரை செய்வது மிகவும் புனிதமாய்க் கருதப் படுகிறது. இந்த ஊரின் இந்தக் கோயிலைக் கட்டியது வல்லாள மஹாராஜா எனச் சொல்லப் படுகிறது. ஆனால் சோழ மன்னன் ஒருவனே கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது. எது எப்படி எனச் சரியாக யாருக்கும் தெரியவில்லை என்றாலும் பின்வரும் தலவரலாறே கூறப்படுகிறது.

சோழமன்னன் ஒருவனுக்குப் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் முகம் குதிரை முகமாக இருந்தது. பெண்குழந்தைக்குக் குதிரை முகமா என வருந்திய மன்னன், முகம் மாறவேண்டி சிவனை எண்ணிப் பிரார்த்தித்தான். சிவபெருமான் மன்னன் கனவில் தோன்றி தாமிரபரணியின் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் நீராடி வழிபாடுகள் செய்யச் சொல்ல, மன்னனும் அவ்வாறே செய்து வந்தான். நாளா வட்டத்தில் குழந்தையின் முகமும் மனித முகமாக மாறியது. தான் வழிபட்ட உரோமச லிங்கரால் ஸ்தாபிக்கப் பட்ட லிங்கம் இருந்த இடத்தில் மன்னன் ஒரு கோயிலைக்கட்டியதாகவும், அதுவே இந்தக் கோயில் எனவும் கூறுகின்றனர். ஆச்சரியமான செய்தி என்னவெனில் இங்கே உள்ள நந்தியெம்பருமானுக்கும் குதிரை முகமாய் இருக்கிறது.

அதற்குக் காரணம் முன் பிறவியில் செய்த பாவத்தால் குதிரை முகத்தோடு பிறந்த மன்னன் மகளின் பாவத்தை ஈசன் நந்தியை ஏற்க வைத்ததாகவும், அதன் காரணமாகவே நந்திக்குக் குதிரை முகம் என்றும் சொல்லுகின்றனர். இந்தக் கோயிலின் காவலுக்கு இரு பைரவர்கள் இருக்கின்றனர். கால பைரவர் வழக்கமான நாய் வாகனத்தோடும், வீர பைரவர் வாகனம் இல்லாமலும் காட்சி அளிக்கின்றனர். கைலாய நாதர் இங்கே குரு அம்சமாக வழிபடப் படுகின்றார். அதனால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை நிவேதனம் செய்யப் படும் வழக்கம் இருக்கிறது. அம்பாள் பெயர் சிவகாமி அம்மை. அம்பாளுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மற்றப் பரிவார தேவதைகளில், இரட்டை விநாயகர்கள், சூரியன், அதிகார நந்தி, சப்தகன்னிமார், பஞ்ச லிங்கம், நாயன்மார்கள் வள்ளி, தெய்வானையோடு சுப்ரமணியர் போன்றவர்களும் உள்ளனர். சனீஸ்வரரும் தனியாக இருக்கிறார். இந்த ஊரில் தான் சூரனின் கொடுமை தாங்கமுடியாமல் ரிஷி முனிவர்கள் ஈசனிடம் முறையிட்டதாகவும் அதனாலேயே இந்த ஊருக்கு முறப்பநாடு எனப் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

இந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 20 கிமீட்டருக்குள் இருக்கும். பேருந்துகளில் சென்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிமீட்டருக்கு மேல் நடந்து தான் செல்லவேண்டும். காலை ஏழு மணிக்கு மேல் தான் கோயில் திறக்கப் படுகிறது. பனிரண்டு மணிக்கு நடை சாத்தினால் மாலை ஐந்து மணி அளவில் கோயில் திறந்து ஏழு மணிக்கெல்லாம் நடை சாத்துகிறார்கள். ஆகவே நேரத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு சென்றால் தான் தரிசனம் செய்ய முடியும்.

நவ கைலாயம் 6


அடுத்ததாக நாம் பார்க்கப் போவது சுக்கிரனுக்கான தலம் ஆகும். சேர்ந்தபூ மங்கலம் என்னும் இது திருநெல்வேலியில் இருந்து ஆத்தூர் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து புன்னைக்காயல் என்னும் ஊர் செல்லும் பேருந்தில் சென்றால் நடுவில் இரண்டு அல்லது மூன்றாம் கிலோமீட்டரில் சேர்ந்தபூமங்கலம் என்னும் பெயருடைய இந்த ஊர் வரும். இந்த ஊரில் தான் ஆறாம் நவ கைலாயம் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து வந்தால் திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆத்தூரை அடைந்தும் இங்கே செல்லலாம். வழியை நன்கு தெரிந்தவர்கள் துணையோடு சென்றால் ஒரே நாளில் நவ திருப்பதிகளிலேயே அமைந்துள்ள நவ கைலாயங்களையும், நவதிருப்பதி/நவ கைலாயம் செல்லும் வழியில் உள்ள திருப்பதி/கைலாய தரிசனங்களையும் இரண்டு நாட்களில் தரிசிக்க முடியும். சிற்ப விநோதங்களையும் மற்ற இயற்கைக் காட்சிகளையும் காணவேண்டுமானால் நவ திருப்பதி இரு நாட்கள், நவ கைலாயம் தனியாக இரு நாட்கள் என வைத்துக் கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரின் சிற்ப விநோதங்களே பெருமளவு பேசப்படக் கூடியதாகவும், சிற்பக் கலை வல்லுநர்களுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும்படியாகவும் அமைந்துள்ளதாய்க் கூறுவார்கள். நாங்க கிருஷ்ணாபுரம் போகவில்லை. இன்னொரு முறைதான் போகணும்.


இப்போ சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதரைத் தரிசிக்கலாமா? இங்கே குபேரனுக்கு மூலவரின் கருவறை விமானத்தின் மேல் சிலை உள்ளது. இரு தேவியருடன் காட்சி அளிக்கின்றான் குபேரன். யானை வாகனத்தில் நடுவில் குபேரனும், இருபக்கமும் இரு தேவியரும் காட்சி அளிக்கின்றனர். இது தவிர சதுரமான பீடம் கொண்ட ஒரே லிங்கமும், தன்னுடன் ஒரு பக்கம் அம்பிகையும் இருவருக்கும் நடுவே விநாயகரும் இருக்கக் காட்சி கொடுக்கும் அற்புதமும் காணலாம். மூலவரின் பெயர் கைலாச நாதர். ரோமசமுனிவர் ஸ்தாபித்த கோயில்களுள் ஆறாவது கோயில் இது. இங்கே மூலவரே சுக்கிர அம்சத்தோடு காட்சி கொடுக்கிறார் என்பது ஐதீகம். அம்பாள் பெயர் அழகிய பொன்னம்மை தெற்கு நோக்கிக் காட்சி கொடுக்கிறாள். கைலாசநாதரை கருவறையில் வணங்கிய பின்னர் விமானத்தில் தரிசனம் கொடுக்கும் குபேரனையும் வணங்குவது மிகவும் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. சுக்கிரனின் தோஷம் உள்ளவர்களும், செல்வம் வேண்டும் என நினைப்பவர்களும் இங்கே வந்து சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சார்த்தி, மொச்சைப் பொடிசேர்த்த சாதமும், தயிர்சாதமும் நிவேதனம் பண்ணுகின்றனர். வெண்தாமரை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் சுக்கிர ஹோரை இருக்கும் நேரம் வழிபடவேண்டும் என்றும் சொல்கின்றனர்.


இரண்டு வாசல்களுடன் கூடிய இந்தக் கோயிலின் தல விருக்ஷம் வில்வம். இங்கே உள்ள பிரகாரத்தில் சொக்கநாதர், மீனாக்ஷி அம்மையுடனும், சனீஸ்வரர், பைரவர் போன்றோரும் பரிவார தேவதைகளாக இடம் பெற்றிருக்கின்றனர். முருகன் மட்டும் தன்னைத் தனியாய்க் கவனிக்கவேண்டுமென்றோ என்னமோ, ஒரு பக்கமாய்த் திரும்பி மயில் வாகனத்தில் நின்று கொண்டிருக்கிறார். வள்ளி, தெய்வானை கூட இருந்தாலும் மயில் வலப்புறம் திரும்பி இருப்பதன் காரணம் தெரியவில்லை. கந்தனுக்குரிய சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இந்தக் கோயில் பிற்காலப் பாண்டியர்களால் கட்டப் பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. மதுரைச் சொக்கநாதரும், மீனாக்ஷி அம்மையும் இடம் பெற்றிருப்பதால் பாண்டிய காலத்துக் கோயிலாக இருக்கலாமென்றே நம்பவேண்டி உள்ளது. தாமிரபரணிதான் இங்கே தீர்த்தம். மேலும் சிறப்பு என்னவென்றால் பொதிகை மலையில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி பாபநாசத்தில் தரை இறங்கி வந்து எல்லா ஊர்களையும் கடந்து இந்த ஊர் அருகே உள்ள புன்னைக்காயலில் தான் கடலில் சங்கமம் ஆகின்றாள். திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை செல்லும் முருகபக்தர்கள் இந்தப் புன்னைக்காயலின் தாமிரபரணியில் நீராடிச் சென்ற பின்னரே திருச்செந்தூரில் கடலாடுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றார்கள். இங்கேயும் மார்கழியில் திருவாதிரைத் திருநாளும், சித்திரை மாசம் பிரம்மோற்சவமும் சிறப்பாய்க் கொண்டாடப் படுகிறது. இந்தக் கோயிலும் குறிப்பிட்ட நேரமே திறந்திருக்குமென்பதால் காலை ஏழு மணியில் இருந்து பத்து மணிக்குள்ளாகவும், மாலை ஐந்தரை மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளாகவும் சென்று தரிசிப்பது நல்லது.


--Geetha Sambasivam 08:28, 14 ஏப்ரல் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 18 ஏப்ரல் 2011, 08:19 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,701 முறைகள் அணுகப்பட்டது.