தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நவ கைலாயம் 1மரபு விக்கி இருந்துநவ கைலாயம்: கீழ்க்கண்ட ஒன்பது ஊர்கள் நவ கைலாயங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர நவ சமுத்திரம் என்று சமுத்திரம் என்ற பெயரில் அழைக்கப் படும் ஊர்களும் உள்ளன. அவற்றுக்கெல்லாம் போக முடியலை.
அம்பாசமுத்திரம்
இந்த நவ கைலாயங்களில் சில கோயில்கள் நவதிருப்பதிகள் இருக்கும் ஊரிலேயே இருக்கின்றன. அதை முன் கூட்டியே நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு செல்லவேண்டும். எங்களுக்குத் தெரிஞ்சும், ஓரிரண்டு கோயில்களுக்குச் செல்ல முடியவில்லை. நேரப் பற்றாக்குறைதான் காரணம். நவ திருப்பதிகளை ஒரே நாளிலேயே முடித்துவிடலாம். அப்போதே அங்கங்கே இருக்கும் நவ கைலாயக்கோயில்களையும் பார்த்திருக்க வேண்டும். முடியலை! மறுநாள் போக நினைச்சுப் போக முடியலை. நவ கைலாயங்கள் தனியாகப் பார்க்கணும்னா இரண்டு நாட்கள் தேவை. நாங்க அன்னிக்கே ஊர் திரும்ப முன்பதிவு செய்திருந்தபடியால் மத்தியானமே திருநெல்வேலி திரும்பவேண்டிய கட்டாயம். ஆகவே செல்ல நினைக்கிறவர்கள் நன்கு தெரிந்து கொண்டு செல்லவேண்டும். இப்போ முதலில் வருவது பாபநாசம் பாபநாசநாதர் கோயில் தான். சூரியனுக்கு உரிய பரிஹாரத் தலமாகச் சொல்லப் படுகிறது. தாமிரபரணி மலையில் இருந்து கீழே இறங்கியதும், இந்தக் கோயிலுக்கு எதிரே தான் ஊருக்குள்ளே நுழைகிறாள். மிகவும் அழகான சுற்றுச் சூழ்நிலை. இயற்கையின் அழகு கண்ணைப் பறிக்க எதிரே தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவநதியாகிய நதிகளுக்கெல்லாம் மூத்த தாமிரபரணி சமநிலைக்கு வந்து விட்டாள். அங்கே மதியம் உச்சிக்கால வழிபாட்டின்போது நதியின் மீன்களுக்குக் கூட உணவிடுகின்றனர். இந்த வழிபாடு வரையில் இருந்து நாங்கள் பார்க்கலை என்றாலும் சொன்னார்கள். திருநெல்வேலியில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது மைல் தூரத்தில் இருக்கும் பாபநாசத்துக்கு திருநெல்வேலியில் இருந்து பேருந்து செல்கிறது. என்றாலும் நாங்கள் வாடகைக்காரிலேயே பயணத்தைத் தொடர்ந்தோம். இந்தக் கோயிலின் சித்திரை விஷு மிகவும் பிரபலமானது. அன்று தான் அகத்தியருக்கு ஈசன் தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளினார் என்று சொல்கின்றனர். ஈசனின் திருக்கல்யாணத்தின்போது பூமிபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர, சமப்படுத்த வந்தார் அகத்தியர் பொதிகை மலைக்கு. இங்கே இருந்த அகத்தியருக்கு ஈசன் சித்திரை விஷு அன்று தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளியதாக ஐதீகம். மூலஸ்தான சந்நிதிக்குப் பின்னால் உள் பிரஹாரத்தில் அகத்தியருக்குக் கல்யாணக் கோலம் காட்டி அருளிய கல்யாண சுந்தரர், அம்பிகையுடன் ரிஷபாரூடராகக் காக்ஷி அளிக்கின்றார். அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் ஈசனை வணங்கிய கோலத்தில் காணப்படுவார். அகத்தியரின் சீடர் ஆன உரோமச முனிவர் ஈசனுக்கு தாமிரபரணிக்கரை ஓரம் கோயில்கள் எழுப்ப விரும்பி குருவை ஆலோசனை கேட்க, ஈசனுக்கு வழிபாடு செய்த தாமரை மலர்கள் ஒன்பதை உரோமசரிடம் கொடுத்து அவற்றை ஆற்றில் வீசி எறியும்படி அகத்தியர் சொல்ல அப்படியே செய்கின்றார் உரோமசர். அவை ஒதுங்கிய ஒன்பது இடங்களிலே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நவகிரஹப் ப்ரீதி ஸ்தலங்களாக ஆக்கினார்.
இங்கே உள்ள ஈசனுக்கு முக்களா நாதர் என்ற பெயரும் உண்டு. மூன்று வேதங்களும் மூன்று களா மரங்கள் உருவில் ஈசனை வழிபட்டதாகவும் அதர்வ வேதம் ஆகாய ரூபத்தில் வழிபட்டதாகவும் சொல்கின்றனர். கருவறையில் ருத்ராக்ஷ வடிவில் ஈசன் காணப்படுவார். ப்ராஹாரத்தில் முக்களா மரத்தின் கீழ் காணப்படுகின்றார். அசுர குருவான சுக்ராசாரியாரின் மகன் துவஷ்டாவை ஒரு சமயம் குருவாக ஏற்கவேண்டி வந்தது இந்திரனுக்கு. துவஷ்டாவோ அசுரர்களுக்கே நன்மை செய்யும் வண்ணம் யாகங்கள் செய்தான். இது அறிந்த இந்திரன், துவஷ்டாவைத் தன் குரு என்றும் பாராமல், கொல்ல, பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது இந்திரனுக்கு. தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள எல்லா இடங்களுக்கு அலைந்துவிட்டுக் கடைசியாக பாபநாசம் வந்து இங்கே உள்ள இறைவனை வழிபட்டுத் தன் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்கிறது தல வரலாறு.
அம்பாள் பெயர் உலகம்மை. இவள் சந்நிதி முன்பு உரல் ஒன்றும், உலக்கையும் உள்ளது. கோயிலிலேயே விரலி மஞ்சள் கொடுக்கின்றனர். அதை இந்த உரலில் இட்டு இடித்துவிட்டு அதையே பிரசாதமாக எடுத்துக் கொண்டு வரலாம். நல்லவேளையா இதுக்குக் காசு எதுவும் வாங்கலை! இந்த மஞ்சள் பொடியினாலேயே அன்னைக்கு அபிஷேஹமும் நடக்கும் எனச் சொல்கின்றனர். இந்த அபிஷேஹ தீர்த்தமும் அருந்தினால் புத்திர பாக்கியம், திருமண பாக்கியம், தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம். இங்கே தைப்பூசத்தன்று நந்திக்குச் சிறப்பு வழிபாடு சந்தனக்காப்போடு நடக்கிறது. வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் தைப்பூசத்தன்று நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் ஆநந்த தாண்டவம் ஆடிய வண்ணம் ஈசன் காக்ஷி அளித்ததால் தைப்பூசத்துக்கு நந்திக்குச் சிறப்பு வழிபாடு. நடராஜர் தனி சந்நிதியில் ஆநந்த தாண்டவக் கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார். இவருக்குப் புனுகு மட்டுமே சார்த்தப் படுகிறது. இவரைப் புனுகு சபாபதி என்று அழைக்கின்றனர்.
நவ கைலாயம் 2
அடுத்து, சந்திரனுக்குரிய தலம். சேர்மாதேவி, சேரன்மஹாதேவி என்றெல்லாம் சொல்லப் படும் ஊர். திருநெல்வேலியில் இருந்து 25 அல்லது 30 கி.மீ தூரத்தில் உள்ளது. இப்போ சொல்லும் வரிசையிலே நாங்க போகலை. நாங்க போனது முதலில் கோடகநல்லூர் தான். அது செவ்வாய்க்கான தலம்னு குறிச்சு வச்சிருக்கேன். பாபநாசம் கடைசியிலே தான் போனோம். மேலே ஏறிச் செல்லவேண்டும், அங்கேயும் பார்க்கக் கோயில்கள், தீர்த்தம், அருவி இருக்குனு தெரியலை. அதனால் போயிட்டுக் கீழே இறங்க நேரம் இன்மையால் தவற விட்டோம். மீண்டும் ஒருமுறை போகணும். பார்ப்போம். சேர்மாதேவியில் சீக்கிரமாய்ப் போனால் தான் ஸ்வாமி தரிசனம் செய்யமுடியும். கோயிலைச் சீக்கிரமே சாத்திடறாங்க. நல்லவேளையா நாங்க சீக்கிரமே போனோம். ஒன்பது மணிக்குப் போயிருந்தால் கூடப் பார்க்கிறது சிரமம் தான்.
ஏற்கெனவே சொன்ன உரோமசர் தாமரைப் பூக்களை இட்ட கதையைத் தவிர இங்கே சொல்லும் மற்றொரு கதை இரு சகோதரிகளைப் பற்றியது. உரோமசருக்குப் பின்னர் கோயில் இருந்த இடம் தெரியாமல் லிங்கம் மட்டுமே ஒரு அரசமரத்தடியில் இருக்க, அங்கே வாழ்ந்து வந்த இரு சகோதரிகள், சிவ பக்தைகள். வீட்டிலேயே நெல் குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்த அவர்கள், தினமும் இந்த லிங்கத்துக்கு வழிபாடுகள் செய்த பின்னரே தங்கள் வேலையைத் தொடங்குவார்கள். அவர்கள் லட்சியமே இந்த லிங்கம் மரத்தடியில் கவனிப்பாரின்றி இருக்கிறது. ஒரு அழகான கோயில் கட்டி அங்கே இவரைப் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று நினைத்தனர். தங்களது உழைப்பின் பயனில் வரும் லாபத்தைச் சிவன் கோயில் கட்டவெனச் சேர்த்து வைத்தனர். அவர்களைச் சோதிக்க எண்ணிய ஈசன் ஒரு சிவனடியார் உருவில் அவர்கள் வீடு வந்தார்.
வந்தவர் மிகுந்த பசியோடு இருப்பதாய்ச் சொல்ல, சகோதரிகள் அவரை வரவேற்று, பாதபூஜை செய்து, உணவு அருந்த வருமாறு அழைத்தனர். வீட்டில் விளக்கு எரியவில்லை. உடனேயே அதைச் சுட்டிக் காட்டிய சிவனடியார், வீட்டில் விளக்கு எரியவில்லை எனில் எவ்வாறு வெளிச்சம் இருக்கும்? அது போலவே மங்களமும், செல்வமும் தங்காது. எனவே இந்த வீட்டில் உணவருந்த மாட்டேன், என்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டார். பதறிய சகோதரிகள் விளக்கைத் தேடியும் கிடைக்காமல், ஒரு தேங்காயை எடுத்து உடைத்து, அதிலே நெய்யை ஊற்றி, விளக்கு ஏற்றி வைத்தனர். சிவனடியாரும் சாப்பிட்டுவிட்டுத் தன் சுயவுருவில் காட்சி அளித்தார். சிவனடியாரின் அருளால் செல்வமும் பெருகவே, சகோதரிகள் நினைத்த வண்ணமே கோயிலை எழுப்பினார்கள்.
ஈசன் பெயர் அம்மநாதர். தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது இந்தத் தலம், அம்மையப்பர் என்றும் சொல்லுகின்றனர். அம்மன் வலப்பக்கமாய்க் காட்சி கொடுக்கிறாள். அதாவது அம்மன் சந்நிதி அம்மநாதரின் சந்நதிக்கு வலப்புறமாய்க் காணப்படுகிறது. கோமதி அம்மன், ஆவுடைநாயகி என்ற பெயரில் அழைக்கப் படுகிறாள். இந்தக் கோயிலில் ஸ்வாமிக்கும், அம்மனுக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுக்கும் கோயில் என்று சொல்லுகின்றனர். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக சிதம்பரத்து நந்தனார் இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்திருக்கிறார் போலும். கொடிமரத்துக்குக் கீழே உள்ள பீடத்தில் நந்தனார்(??) சிற்பம் காட்சி கொடுக்கிறது. நந்தியாரும் சற்றே விலகி இருக்கிறார். அதனாலேயே நந்தனார் எனத் தோன்றுகிறது.
அரிசி வியாபாரிகள் அனைவருமே இந்தக் கோயிலில் தங்கள் வியாபாரம் செழிக்கப் பிரார்த்தனை செய்து கொள்வதுண்டு என்று சொல்கின்றனர். திருமண தோஷமும் நீக்கப் படும் பரிஹார தலமாய்ச் சொல்லுகின்றனர். அம்மன் சந்நிதியில் ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, உடைத்த தேங்காயில் நெய் விட்டு விளக்கு ஏற்றி வைக்கின்றனர். அம்மனுக்கு மாதுளம்பழச் சாறினால் அபிஷேஹம். நவகிரஹங்கள் இங்கே காணப்படவில்லை. வழக்கம்போல் நடராஜர் இருக்கிறார். பைரவருக்கு இங்கே நாய் இல்லாமல் தனியாகக் காட்சி கொடுக்கிறார். தல விருக்ஷம் பலா. கோயிலைக் கட்டிய சகோதரிகள் சிற்பம் இருக்குனு சொன்னாங்க. தேடிப் பார்க்க முடியலை. பாண்டியர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். படம் போடமுடியலை. மன்னிக்கவும்.
--Geetha Sambasivam 08:21, 14 ஏப்ரல் 2011 (UTC) |

