தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நவகைலாயம் 2மரபு விக்கி இருந்துநவ கைலாயம் 3
அடுத்து கோடகநல்லூர். இதுக்குத் தான் முதல்லே போனோம். நாங்க போனபோது காலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அபிஷேஹம் முடிந்து, அலங்காரம் முடிந்து நைவேத்தியம் காட்டி தீப ஆராதனைகளும் பார்க்க முடிந்தது. தீப ஆராதனையின் போது அங்கே நின்றிருந்த ஓதுவார் நன்றாகப் பாடினார். கோயிலுக்கென நியமிக்கப் பட்ட ஓதுவார் அவர். பரம்பரையா என்னனு கேட்டுக்கலை. மிகவும் ஏழ்மை நிலைமையில் இருந்தார். கோயில் சுத்தமாக இருந்தது. ஆனாலும் ஏழைக் கோயில் தான். சேரன்மஹாதேவிக்குச் செல்லும்வழியிலேயே இருக்கிறது. நாங்க வாடகைக் காரில் போனதால் போக முடிந்தது. இந்தக் கோயிலுக்கு அதிகம் பேருந்து வசதி இல்லை. நடுக்கல்லூர் என்னும் ஊருக்கு அருகே நடுவழியில் இறக்கிவிட்டுடுவாங்க. அங்கிருந்து இந்த ஊருக்கு நடந்தே வரணும். அர்ச்சகர் இந்த ஊர்க்காரர். ஓதுவாரும் இதே ஊர். அதனால் வழிபாடுகள் நேரத்துக்கு நடக்கிறது. அரசின் கவனம் திரும்பினால் இன்னும் கொஞ்சம் வசதியாய் இருக்கும்னு குருக்களும், ஓதுவாரும் சொன்னார்கள். இனி கோயில் வரலாற்றைப் பார்ப்போம்.
நவ கைலாயக் கோயில்களிலேயே இந்தக் கோயிலின் மூர்த்திதான் மிகப் பெரிய திருவுருவம் கொண்டவர். இவருக்குக் கட்ட குறைந்த பட்சமாக எட்டு வேட்டிகளாவது தேவைப்படும் எனச் சொன்னார்கள். அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் வழிபட்ட தலம் இது என்பதால் செவ்வாய் தோஷத்துக்கான பரிகார தலமும் ஆகும். பல்லாண்டுகளுக்கு முன் இங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவர் மகனும் இருந்தான். ஒரு நாள் காட்டில் விறகு பொறுக்க மகன் காட்டினுள் செல்ல, அங்கே ஒரு ராஜகுமாரன் வந்தான். அவனுக்கு முனிவரைப் பார்த்ததும் தன் ராஜ்யத்தை விஸ்தரிக்க என்ன செய்யலாம்?? ஏதானும் யாகம் செய்யலாமா எனக் கேட்கத் தோன்றியது. ஆகவே முனிவரை எழுப்பிக் கேட்டான். ஆனால் பரிபூரண நிஷ்டையில் இருந்த அந்த முனிவரோ எவ்வளவு எழுப்பியும் எழவே இல்லை. கோபம் வந்த ராஜகுமாரன் ஒரு செத்த பாம்பை அவர் கழுத்தில் போட்டுவிட்டுப் போய் விட்டான். பாம்பு கழுத்தில் போடப் பட்டது கூடத் தெரியாமல் முனிவரோ நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார்.
முனிகுமாரன் திரும்பி வந்து பார்த்தபோது தன் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பைக் கண்டான். யார் செய்தது என்பதும் தெரிய வந்தது. உடனேயே அரண்மனைக்குச் சென்று ராஜகுமாரனிடம் உன் தந்தை ஒரு பாம்பினாலேயே இறப்பார் என்ரு சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான். பயம் அடைந்த ராஜா தன் விதி என்னவெனத் தெரிந்து கொள்ள எண்ணி அரண்மனை ஜோதிடர்களை வரவழைத்துத் தன் ஜாதகத்தைப் பார்க்க, சர்ப்ப தோஷம் இருப்பது தெரிய வந்தது. ஆகவே பாம்பிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள எண்ணிய அரசன் ஒரு மறைவிடத்தில் சென்று ஒளிந்து வசிக்கலானான். எறும்பு கூடப் புகமுடியாதபடிக்குக் கட்டப் பட்டிருந்த அந்த மண்டபத்தில் வசித்த அரசன் ஒருநாள் மாம்பழம் சாப்பிட்டான். மாம்பழத்தில் இருந்த சிறு புழு ஒன்று பழத்திலிருந்து வெளிப்பட்டு பாம்பாக மாறி அரசனைத் தீண்டியது. அரசன் இறந்து போனான். தப்பு செய்த ராஜகுமாரனை விட்டுவிட்டு அரசனைத் தீண்டிய பாம்புக்குத் தோஷம் பீடிக்க அது தியானம் மூலம் பரம்பொருளைத் துதிப்போம் எனத் துதிக்க ஆரம்பித்தது. மஹாவிஷ்ணு அந்தப் பாம்பிடம் சிவபெருமானை வழிபடச் சொல்ல, அதுவும் மனமுருகிப் பிரார்த்திக்க கைலைமலை வாசனும் பாம்பிற்கு முக்தி கொடுத்தார். பரிக்ஷித்து மன்னனையும், நளனையும் தீண்டிய கார்க்கோடகன் என்னும் பாம்புக்கும் இங்கே முக்தி கிடைத்ததால் கோடகநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். இங்கே இப்போவும் கருநாகங்கள் அதிகம் உலாவும் எனவும் சொல்லுகின்றனர்.
இங்கே அம்பாள் பெயர் சிவகாமி அம்மன். இவளைத் தவிர அநந்த கெளரி என்ற பெயரில் ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி கொடுக்கும் அம்மனும் இருக்கிறாள். இவளைச் சர்ப்பயட்சி என்றும் நாகாம்பிகை என்றும் சொல்கின்றனர். ஈசனுக்குத் துவரம்பருப்பு நைவேத்யம் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சிவப்பு வஸ்திரமும் அணிவிக்கின்றனர். நந்திக்குத் தாலி கட்டும் அதிசய வழக்கமும் இங்கே உண்டு. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் இங்கே 58 விரலி மஞ்சளால் கோர்க்கப் பட்ட தாலியை நந்தியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கின்றனர். இப்படிச் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சிவராத்திரி, திருவாதிரை, போன்றநாட்களில் உற்சவம் உண்டு. மற்றபடி கொடிமரமோ, பலிபீடமோ, பரிவார மூர்த்திகளோ இந்தக் கோயிலில் காணமுடியாது.
நவ கைலாயம் 4 அடுத்துக் காண இருப்பது புதனுக்கான க்ஷேத்திரம். இது வேறே எங்கேயும் இல்லை. மகரநெடுங்குழைக்காதரைப் பார்த்தோமே, தென் திருப்பேரை, அங்கேயேதான் இந்தக் கோயிலும் உள்ளது. முதல்நாளே அது சரியாத் தெரியலை. அன்னிக்கே பார்த்திருந்தால், நவ கைலாயப் பயணத்தன்று வேறு சில கோயில்களைப் பார்த்திருக்கலாம். தெரியலை. அதோட பலரும் பிரம்மதேசம், திருப்புடை மருதூர், கடையம், கடையநல்லூர் போன்ற ஊர்கள் சென்றீர்களா என்றும் கேட்கின்றனர். கடையம், கடைய நல்லூர் வழியாத் தொட்டுக் கொண்டு சென்றோமே தவிர ஊர்களுக்குள் நுழையவில்லை. பிரம்மதேசம், திருப்புடை மருதூர் போகமுடியலை, நேரம் இல்லாமையால். இனி புதனுக்கான க்ஷேத்திரமான தென் திருப்பேரை கைலாசநாதரைக் காணலாம்.
உரோமச முனிவர் மிதக்கவிட்ட தாமரை மலர்களில் ஏழாவது மலர் ஒதுங்கிய இடமாய்க் கூறப்படும் இந்தத் தலத்தில் கைலாசநாதர் லிங்க வடிவில் தாமரை பீடத்தின் மேல் காட்சி கொடுக்கிறார். தாமரை போன்ற வடிவமைப்புடன் கூடிய பீடம். அம்பிகையின் பெயர் அழகிய பொன்னம்மை. அம்மன் சந்நிதி தனியாக இருக்கிறது. வள்ளி, தெய்வானையோடு கூடிய சுப்ரமணியரும் இங்கே காட்சி கொடுக்கிறார். நவகிரஹங்கள் வாகனங்களில் காட்சி கொடுக்கின்றனர். சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரஹங்கள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் காட்சியைக் காணலாம். இந்தக் கோயிலுக்கு ஒரு முறை ஆங்கிலேயே கலெக்டர் துரை என்பவர் இப்பகுதிக்கு வந்து தங்கி இருந்தார். இங்கே உள்ள சாவடியில் தங்கி இருந்த அவர் தாகம் தீர்க்க ஒரு இளநீர் கொண்டுவரச் சொல்லுமாறு சேவகனைப் பணித்தார். அருகிலுள்ள தென்னந்தோப்பிற்குச் சென்று கலெக்டருக்காக இளநீர் கேட்ட சேவகனிடம் அங்கிருந்த விவசாயி, கைலாசநாதருக்காக வளர்க்கப் படும் தென்னை மரங்கள் இவை. இந்த இளநீரை ஸ்வாமியின் அபிஷேஹத்துக்குப் பயன்படுத்துவதால் மனிதர் குடிக்கக் கொடுக்கமுடியாது என மறுத்துவிட்டார். துரையிடம் வந்து நடந்ததைச் சொன்ன சேவகனையும் அழைத்துக் கொண்டு தோப்பிற்குச் சென்ற கலெக்டர், விவசாயியிடம், “இந்தத் தோப்பிலுள்ள தென்னை மரத்தின் தேங்காய்களுக்கெல்லாம் என்ன கொம்பா முளைச்சிருக்கு?? சும்மாப் பறிச்சுப் போடு!” என்று கடுமையாக உத்தரவிட, பணிய நேர்ந்தது விவசாயிக்கு. ஒரு இளநீரைப் பறித்துக் கொடுக்க யத்தனித்த போது என்ன ஆச்சரியம்??? உண்மையாகவே அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. கலெக்டரிடம் அதை நீட்டப் பயந்து போனார் கலெக்டர். உடனேயே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, தினசரி வழிபாட்டுக்காக அப்போது இருந்த பண மதிப்பில் ஆறரை துட்டு காணிக்கையாக வழங்கினார். இந்தத் தேங்காய் இப்போதும் உடைந்த ஒரு கொம்பு தவிர மற்ற இரு கொம்புகளோடு இந்தக் கோயிலில் காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள். நந்திக்குத் தலைப்பாகை கட்டி அலங்கரிப்பது இங்கே விசேஷமாய்ச் சொல்கின்றனர். இவ்வூரில் உள்ள நவதிருப்பதிக் கோயிலான மகரநெடுங்குழைக்காதர் சுக்கிர தோஷத்தை நிவர்த்தி செய்பவர் என்பார்கள். இந்தக் கைலாச நாதரோ புத தோஷத்துக்கு நிவர்த்தி செய்பவர். ஆகவே மாணாக்கர்கள் பெருமாளையும், ஈசனையும் ஒருசேர இங்கே வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இங்கே உள்ள பைரவர் ஆறு கைகளோடு காணப்படுகிறார். வேதத்தின் அம்சம் எனச் சொல்லப் படுகிறார். ஆகையால் இங்கே நாய் வாகனம் இல்லாமலேயே பைரவர் காட்சி அளிக்கிறார். எல்லாச் சிவன் கோயில்களையும் போல் இங்கேயும் மார்கழி திருவாதிரையும், சிவராத்திரியும் சிறப்பாக நடைபெறும். படம் நன்றி:http://www.shaivam.org
--Geetha Sambasivam 08:24, 14 ஏப்ரல் 2011 (UTC)
|

