தலைமுறைக்குப் போதும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

--Dev 08:33, 30 மார்ச் 2010 (UTC)எழுதியவர்: டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்

தட்டச்சு செய்து அளித்தவர்: திரு வடிவேலு கன்னியப்பன்

__________________________________________________________________________________________________________

தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்தில் பல வருஷங்களுக்கு முன்பு ஒரு தனவந்தர் இருந்தார். அவருக்கு மிக்க பணமும், பூஸ்திதியும் உண்டு. பொருளை விருத்தி செய்வதிலும், அதனைக் காப்பாற் றுவதிலும் நல்ல திறமை உள்ளவர். அவற்றிற்குரிய வழிகளையறிந்து அவ்வாறே மிக்க முயற்சியுடன் ஒழுகி வந்தார். தாமே நேரில் வயல்களுக்குச் சென்று வேலைக்காரர்களிடமிருந்து வேலை வாங்குவார். தாமே செய்து காட்டுவார். பயிர்த் தொழிலில் பேரூக் கமும் பயிற்சியும் உடையவர். தொழுதூண் சுவை யின் உழுதூணினிது என்பதை நன்கறிந்தவர். ஆனால் கல்வியில் அவருக்குப் பழக்கமே கிடையாது. மற்ற ஜனங்களோடு அதிகமாக நெருங்கிப் பழகுவதில்லை. யாவருக்கும் இன்பமளித்து மகிழ்விக்கும் சங்கீ தத்திலோ சிறிதேனும் அவருக்கு விருப்பமில்லை. வயல்களில் நிகழும் நிகழ்ச்சிகளும், உண்டாகும் ஓசைகளுமே அவருக்கு எல்லாவித இன்பத்தையும் அளித்தன.

இப்படியிருக்கையில் அந்தக் கனவானுடைய வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ்ந்தது. உறவினர்களும், பிறரும் அவருக்கு ஊக்கமூட்டி அக் கல்யாணத்தை மிகவும் பிரபலமாக நடத்த வேண்டுமென்று சொன் னார்கள். அவர்களுடைய வசமாயிருந்த அவர் அக்கல்யாணத்தில் அவர்கள் விருப்பத்தின்படியே ஒரு சிறந்த சங்கீதக் கச்சேரி நடத்த உடன்பட்டார். பெரிய பணக்காரர் ஆகையினால் எவரை வேண்டுமா னாலும் வரவழைக்கலாமல்லவா? நண்பர்களுடன் கலந்து யோசித்து அக் காலத்தில் தஞ்சாவூர் சமஸ் தானத்தில் பிரபல சங்கீத வித்வான்களாக இருந்த ஆனை, ஐயா என்பவர்களை வருவித்து அவர்களைக் கொண்டு சங்கீதக் கச்சேரியை நடத்த நிச்சயித்தார்.


ஆனை, ஐயா என்பவர்கள் சகோதரர்கள். இரட்டைப் பிள்ளைகளென்று வழங்கப்படுவார்கள். ஆனை என்பது ஒருவர் பெயர்; ஐயா என்பது மற்றொருவர் பெயர். இருவரும் சங்கீதத்தில் பயிற்சி உடையவர்கள். எக்காலத்திலும் பிரியாது உடனுறைபவர்கள். வையச்சேரி என்னும் ஊரில் பிறந்தவர்கள். சங்கீதத்தில் இணை யற்ற வித்வானாக விளங்கிய ஸ்ரீ மகாவைத்தியநாத சிவனவர்களுடைய தாய் வழியில் முன்னோர்கள். வடமொழி, தென்மொழி, தெலுங்கு என்னும் மூன்று மொழிகளிலும் சிறந்த பழக்கமும் அவற்றில் கீர்த்தனம் இயற்றும் வன்மையும் உடையவர்கள். அவர்கள் எப்பொழுதும் சேர்ந்தே சுரம், பல்லவி முதலிய வற்றைப் பாடுவார்கள். சிவபக்திச் செல்வம் வாய்ந்த வர்கள். விபூதி, ருத்ராக்ஷ தாரணத்தை மறவாது கொண்டவர்கள். திருவையாறு தர்மசம்வர்த்தனி விஷயமாகவும், பிரணதார்த்தி ஹரர் விஷயமாகவும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்கள்.

ஒரு சமயம் தஞ்சாவூர் ஸமஸ்தானத்திற்கு ஹைதராபாத்திலிருந்து பல விருதுகள் பெற்ற ஒரு முகமதிய சங்கீத வித்வான் வந்திருந்தார். அவ்ர் ஹிந்துஸ்தானி சங்கீதம் பாடி அரசரையும், பிறரையும் உவப் பித்தார். அரசர் மிக்க மகிழ்ச்சியை அடைந்து, “இந்த ஹிந்துஸ்தானி சங்கீதத்தை யாரேனும் இங்கே கற்றுக் கொண்டு பாட முடியுமா?” என்று சபையிலுள்ள சங்கீத வித்துவான்களைக் கேட்டபோது அங்கு வீற்றிருந்த ஆனை, ஐயா இருவரும், “இரண்டு மாதம் அவகாசம் கொடுத்தால் நாங்கள் முயற்சிசெய்து பார்ப்போம்” என்றார்கள். அவ்வாறே இரண்டுமாதம் அப்பியாசம் செய்து அந்தச் சங்கீதத்தைத் தவறின்றி அரசருக்குப் பாடிக் காட்டினார்கள். அதுவரை தஞ்சையிலே இருந்த முகமதிய வித்துவான் கேட்டு வியப்புற்று, “நாங்கள் எவ்வளவோ சிரமப்பட்டு தக்க ஆசிரியரிடம் பல வருடங்கள் பயின்று கற்றுக் கொண்ட இந்த அருமை யான வித்தையைக் கேள்வியினாலேயே இவ்வளவு விரைவில் இவர்கள் கற்றுக் கொண்டார்களே! இவர் களால் அறிய முடியாதது ஒன்றுமில்லை போலிருக் கிறது!” என்று சொல்லிப் பாராட்டினாரென்று சொல்லு வார்கள்.

இத்தகைய வித்வான்கள் மேற்கூறிய கனவான் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்க ளுடைய வரவை அறிந்த ஜனங்கள் யாவரும் அவர்களுடைய பாட்டைக் கேட்க ஆவல் கொண்டு, வந்து கூடினார்கள். வெளியூர்களிலிருந்தும் பலர் வந்தனர். அவர்களுடைய பெருமை எங்கும் பரவியிருந் ததாலின் அவர்கள் பாட்டைக் கேளாவிடினும் அவர்களைப் பார்த்து விட்டாவது போகலாமென்று பலர் வந்திருந்தனர். இவ்வளவு கூட்டத்தையும் கண்ட தனவந்தருக்கு உள்ளுக்குள்ளே மிக்க சந்தோஷம் உண்டாயிற்று. எல்லோரும் தம்மை உத்தேசித்து வந்திருக்கிறார்கள் என்பது அவருடைய நினைவு.

முகூர்த்த தினத்து மாலையில் பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஆனை ஐயாவைச் சுற்றிலும் பிரபலர் களான வித்வான்கள் பலர் உட்கார்ந்து இருந்தார்கள். கூட்டம் அமைதியாகவிருந்து கேட்டுக் கொண்டி ருந்தது. வீட்டு எஜமான் அந்த சமயத்தில்தான் தமது கௌரவத் தைக் காட்டவேண்டுமென்று சுறுசுறுப்பாகப் பலகாரியங்களைக் கவனித்து வந்தார். உணவுக்கு வேண்டியவற்றையும், பிற உபசாரங் களுக்குரியன வற்றையும் செவ்வனே அமைக்குமாறு அங்கே உள்ளவர்களை ஏவிக்கொண்டும், அடிக் கொருதரம் சங்கீதக் கச்சேரி நடக்குமிடத்திற்கு வந்து கூட்டத்தையும் பாடுபவர்களையும் சுற்றிப்பார்த்துக் கனைத் துக் கொண்டும் காற்றாடிபோல் சுழன்று கொண்டி ருந்தார். உண்மையில் அவருக்கு சங்கீதம் என்பது இன்னதென்று தெரியாதாதலின் அதில் அவருக்குப் புத்தி செல்லவில்லை.


ஆனை ஐயா ஒரு பல்லவி பாட ஆரம்பித்தனர். பலபல சங்கதிகளையும் கற்பனச்சுரங்களையும் போட்டுப் பாடத் தொடங்கினர். அங்கிருந்தோர்கள், ’இது வரையில் இவ்வாறு கேட்டதே இல்லை’ என்று கூறி அதில் ஈடுபட்டனர். அதனால் ஊக்கம் மிக்க பாடகர்கள் இருவரும் தங்கள் மனோபாவ விரிவுக்கேற்பப் பாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த யாவரும் ஒரே நோக்கமாக ஆனந்தக் கடலில் மூழ்கியிருந்தனர். அப்பொழுது ஒரு தூணருகில் எஜமான் நின்று கொண்டு கவனித்தார். அவர் மூக்கின்மேல் விரல் வைப்பதும் அடிக்கடி முகத்தைச் சுளிப்பது வாயினால் வெறுப்பிற்குரிய ஒலியை உண்டாக்குவதும் அவருக்கு ஏதோ மனத்தில் ஒருவித வருத்தம் இருப்பதை வெளிக் காட்டின. வரவரக் கண்கள் சிவந்தன. இரண்டு தடவை தூணில் தட்டினார். அவருக்கு கோபம் வந்த காரணம் ஒருவருக்கும் தெரிய வில்லை. திடீரென்று பலத்த குரலில், “வித்வான்களே, நிறுத்துங்கள் உங்கள் சங்கீதத்தை. இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாதென்று நினைத்து விட்டீர்களோ! நானும் ஒரு நாழிகையாக எல்லா வேலையையும் விட்டுவிட்டு கவனித்துக் கொண்டிருக்கிறேன். திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக் கிறீர்களே! அதற்கென்ன அர்த்தமென்று நான் கேட்கிறேன்” என்று கர்ஜித்தார். யாவருக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊசியால் குத்தினதுபோல் இருந்தது. “இவர்களைப் பெரிய சங்கீத வித்வான்களென்று பொறுக்கியெடுத்தார்கள். இதற்குத் தான் முதலிலேயே கல்யாணத் துக்குப் பாட்டுக் கச்சேரி வேண்டாமென்று சொன்னேன். இருக்கிறவர்களல்லவா பிடுங்கி எடுத்து விட்டார்கள். இவர்களுக்குக் கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு வேளாண்மையை விருத்தி செய்யலாமே!” என்று மேலும் கத்திக் கொண்டிருந்தார்.


சங்கீதம் நின்றுவிட்டது. அப்போது ஆனை ஐயாவின் மன நிலையை யாரால் சொல்ல முடியும்? அங்கிருந் தவர்களிற் பெரிய வித்வான்க ளெல்லாம் கண்ணில் நீர்ததும்ப அவ்விருவருக்கும் சமாதானம் சொன்னார் கள். அவர்கள் கல்யாண வீட்டினின்றும் வெளியே போனார்கள். கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது. அவ்விருவரும் ஒரு வார்த்தையும் பேச வில்லை. அளவற்ற வருத்தத்தை அடக்கிக் கொண்ட வர்களென்பதை அவர்கள் முகங்கள் காட்டின. அப்பால் அவ்வூரிலுள்ள வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு நேராக வந்து பெருமாளைத் தரிசித்தவுடன் ஓவென்று கதறிவிட்டார்கள். உடன் வந்தவர்க ளெல்லாம் ஸ்தம்பித்து நின்றனர். ஆனை என்பவர் தம்மு டைய வருத்த மிகுதியினால் அடியிற்கண்ட கீர்த்தனத்தைப் பாடத் தொடங்கினார்:

                                                       கீர்த்தனம்

                                இராகம்: புன்னாக வராளி - தாளம் : ஆதி

                                                       பல்லவி

போதும் போதும் ஐயா தலைமுறைக்கும்(போதும்)

                                                       அநுபல்லவி

மாதுவளர்வர காபுரி தனில் விளங்கிய
மங்கை யலர்மேலுமிக மகிழ் வேங்க டாசலனே (போதும்)


                                                       சரணங்கள்

1. அரியென் றெழுத்தையறி யாத மூடன்றன்னை
ஆதி சேஷ னென்றும்
ஆயுத மொன்று மறியா தவன்றனை
அரிய விஜய னென்றும்
அரிந்து மரைக்காசுக் குதவாத லோபியைத்
தான கர்னனென்றும்
அழகற்ற வெகுகோரத் தோனை யேமிகு
அங்கஜனே யென்று புகழ்ந்தலைந்தது (போதும்)

2. காசுக் காசைகொண் டுலுத்தனைச் சபைநடுவில்
கற்பகத் தருவென்றும்
கண்தெரி யாக்குருட னென்றறிந்துஞ் சிவந்த
கமலக் கண்ண னென்றும்
பேசுத லெல்லாம் பொய்யா மொருவனைப்
புகழரிச் சந்த்ர னென்றும்
பெற்ற தாய்தனக்கு மன்னமிடான் றன்னைப்
பெரிய தர்மனென்றும் புகழ்ந்தலைந்தது (போதும்)


3 அறிவில் லாதபெரு மடையர்த மருகினை
அல்லும் பகலும் நாடி
அன்னை *உமாதாச னுரைக்கும் பதங்களை
அவரிடத்திற் பாடி
அறிவரோ வறியா ரோவென் றேமிக
அஞ்சி மனது வாடி
ஆசை யென்னும்பேய்க் காளா யுலகினில்
அற்பரைக்கொண் டாடித் திரிந்தலைந்தது (போதும்)

இந்தப்பாட்டைப் பாடி மேலுஞ்சில ஸ்தோத்திரங்களைச் செய்துவிட்டு அவ்வூராரிடத்தில் விடைபெற்றுக் கொண்டு தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள் அவ்வித்வான்கள் இருவரும். அதற்குப்பின் தெய்வ ஸந்நிதானத்தில் அன்றி வேறொருவரிடமும் அவர்கள் சென்று பாடிய தில்லையென்பர்.

இந்தக் கீர்த்தனத்தையும் வரலாற்றையும் எனக்குச் சொன்னவர்கள் மேற்கூறிய ஸ்ரீ மகா வைத்திய நாதையரவர்கள்.

                                                  ***********************

*உமாதாச ரென்பது ஆனையென்பவர் முத்திரை. அதனைத் தாம் இயற்றும் ஒவ்வொரு கீர்த்தனத்திலும் அமைத்துப் பாடுவது அவர் வழக்கம்.


பங்களிப்பாளர்கள்

Dev

"https://marabuwiki.org/index.php?title=தலைமுறைக்குப்_போதும்&oldid=2019" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 30 மார்ச் 2010, 08:33 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,536 முறைகள் அணுகப்பட்டது.