ச.சுவாமிநாதன், எம்.ஏ., (பிரித்தானியா)
தலைமுடியைக் கறுப்பாக வைத்திருப்பது எப்படி?
'மனிதனை என்றும் இளமையாக இருக்கச் செய்ய முடியுமா? மனிதன் ஏன் மூப்பு அடைகிறான்?' இவ்வாறு எவ்வளவோ ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதை மூப்பியல் (GERONTOLOGY)என்பார்கள். தமிழ்நாட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன், ஒரு மூப்பியல் நிபுணர் இருந்ந்தார். அவருடைய பெயர் பிசிராந்தையார். அவர் தொண்டுக் கிழவராகியும், தலைமுடி மட்டும் நரைக்கவில்லை. கண், காது, மூக்கு முதலிய ஐம்புலன்களும் வலுவிழக்கவில்லை. அனைவரும் அவருடைய இளமையின் இரகசியத்தை அறிய, ஆவலுடன் அவரை அணுகினர். அவர் அழகான கவிதை வடிவில், தனது பதிலை அளித்தார். இது புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
"யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதி ஆயின்
மாண்ட என்ன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"
(புறம் 191)
"இவ்வளவு வயதாகியும் தலை ஏன் நரைக்கவில்லை" என்று கேட்கிறீர்களா?
"என் மனைவி எனக்கு அனுசரணையாக நடக்கும் பண்புடையவள். எனது குழந்தைகளோ அறிவாளிகள். வேலையாட்களோ எனக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து தாமாக செயல்படுவர். ஆட்சியாளர்களோவெனில், அறநெறி தவறாது ஆளுபவர்கள். கல்வி, கேள்விகளில் சிறந்த புலனடக்கம் மிக்க அறிவாளிகள் எங்கள் ஊரில் வாழ்கின்றனர்." இதுதான் பிசிராந்தையாரின் பதில்.
அருமையான, பெரிய கருத்தை மிக அழகாக, எளிமையாகக் கூறிவிட்டார்.
மனக்கவலை தான் நோய்களுக்கும் முதுமைக்கும் காரணம் என்பதை, இன்றைய மருத்துவ விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்ளுகின்றனர். மனக்கவலை, நோய்களைத் தூண்டிவிடும் (TRIGGER)என்றும், அதிகப்படுத்தும் என்றும் இன்று கூறப்படுகிறது. இதைத்தான் பிசிராந்தையாரும் வேறுவிதமாகக் கூறுகிறார்.
எங்கு சாந்தி நிலவுகிறதோ அங்கு உடல், உள்ளம், சுற்றுப்புறம் மூன்றிலும் இன்பம் நிலவும். மன அமைதி காரணமாக முதுமையடையும் வேகம் தடைபடும். தலைமுடி கூட நரைக்காது. பிசிராந்தையார் தனது வீட்டில் நிலவிய சாந்திக்கு காரணம் மனைவி, மக்கள், வேலையாட்கள் ஆகியோரின் நற்பண்பு என்கிறார். நாட்டில் நிலவிய சாந்திக்குக் காரணம், அறிஞர்களின் தொடர்பு என்கிறார். எப்போதும் படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு, அறிவு கூர்மை மழுங்காது. உள்ளத்திலும் உடலிலும் இளமை ததும்பும். நாமும் மனக்கவலையை விட்டால், நமது வீட்டிலும், நாட்டிலும் நல்ல சூழ்நிலை நிலவினால் ஆரோக்கியம் நீடிக்கும்.
எண்ணத்தின் சக்தி
பிசிராந்தையார் பற்றிய இன்னுமொரு சுவையான செய்தியும் உள்ளது. அவரும் சோழமன்னன் கோப்பெருஞ்சோழனும் 'நெருங்கிய' நண்பர்கள். ஆனால், ,ஒருவரை ஒருவர் சந்தித்ததேயில்லை! கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. ஆன்றோர்களின் அறிவுரைப்படி ஆட்சியை மகன்களுக்கு விட்டுக் கொடுத்து உண்ணா நோன்பிருந்து உயிர்விடத் துணிந்தான் சோழன். அவ்வாறு இருந்தபோது ஆருயிர்த் தோழர் பிசிராந்தையாரைக் காணாதது கண்டு அனைவரும் வினவினார். ஆனால், "பிசிராந்தையார் நிச்சயமாக வருவார்" என்று கோப்பெருஞ்சோழன் கூறினான். அவன் கூறியபடியே பிசிராந்தையார் வந்தார். அவனுடன் வடக்கு திசை நோக்கி உண்ணாநோன்பிருந்து உயிரும் துறந்தார். ஒருவர் எண்ணும் எண்ணத்தின் சக்தி பலமானது. அதுவும் நெருங்கிய நண்பர்கள்- உறவினர்களிடையே எண்ண அலைகள் விரைவில் பரவும். அண்மைக்காலத்தில் புலன்கடந்த (PARA NORMAL) சக்திகள் குறித்து, நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. சில நேரங்களில் நாம் கூட, இதை உணருகிறோம். "நான் நினைத்ததை சொல் மாறாமல் அப்படியே கூறிவிட்டான்." என்றும் "இப்பொழுதுதான் உங்களை நினைத்தேன். என்ன அதிசயம்! நீங்கள் நேரில் வந்துவிட்டீர்களே" என்றும் நாம்கூடக் கூறுகிறோம்.
ஒருவருக்கு விக்கல், புரை ஏறுதல், தும்மல் ஏதேனும் ஏற்பட்டால், "யாரோ உங்களை நினைக்கிறார்கள்" என்றும் கூறுகிறோம். திருவள்ளுவர்கூட காமத்துப்பாலில் தும்மலின் விளைவு பற்றிப் பேசுகிறார். ஒரு காதலி கூறுகிறாள்:"என்ன இது தும்மல் வருவது போல இருந்து, வராமல் போய்விட்டதே. என் காதலன் என்னை நினைப்பதற்குள் மனம் மாறிவிட்டதோ."
"நினைப்பவர் போன்று நினையார் சொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்
(குறள்: 1203)
இதே கருத்து தமிழ் இலக்கியத்தில் வேறு இடங்களிலும் வருகிறது. எண்ணத்தின் அபூர்வ சக்தியை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
--Geetha Sambasivam 20:47, 9 நவம்பர் 2011 (UTC)