தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-5

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 Chap 5c


திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 15

தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-5

முனைவர் கி. லோகநாதன் 2012


29.0


சைவ இலக்கியங்களில் புராணங்கள்


பண்டை காலந்தொட்டே தமிழில் புராணங்களே மிகவும் அதிகமாக பாடப்பட்டுள்ளன. இவற்றை பல்வகையாகப் பகுக்கலாம் இதனை திறம்பட முனைவர் வி, ஆர். மாதவன் அவர்க்ள நாம் மேலே குறிப்பிட்டுள்ள தமது ஆய்வு நூலில் விளக்கியுள்ளார். கோயிற் புராணங்கள் அல்லது தல புராணங்கள் என்றும் தெய்வ புராணங்கள் என்றும் தொண்டர் புராணங்கள் என்றும் இன்னும் பலவாறும் புராண இலக்கிய்ங்கள் பல்கியுள்ளன. இவற்றில் முதலாவதாக இங்கு சிறிது விளக்க இருப்பது கோயில் அல்லது தல புராணங்களேயாகும். இவை எல்லாம் மிகச் சிறப்பாக முனைவர் வி.ஆர் மாதவன் அவர்கள் நூலில் விளக்கப் ப்ட்டிருக்க, இங்கு ‘கோயில்’ என்றே சிறப்பாக அழைக்கப்படும் சிதம்பரம் அல்லது தில்லை திருசிற்றம்பலமாகிய நடராசப் பெருமானது கோயிலைப் பற்றியே சிறிது.


29.1


ஆடவல்லாகாக இறைவனைக் கண்டு அவனுக்கே பொன்வேய்ந்த சிற்சபை எழுவிக்கப்பட்ட பெருமையுடையது இக்கோயில். இந்த ஆடவால்லான் கருத்து சுமேருத் தமிழில் Paradise Hymn’ எனப்படும் சுவர்க்கபுரி பாட்டிலேயே காணப்படும் ஒன்றாகும். கீழே சில வரிகள். இதுவும் C.J Gadd அவர்களின் ‘ A Sumerian Reading Book” என்பதிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.


>>>>



7. as-ni-ne (alone) dilmun (KI)-a (in Dilmun) u-ne-in-nad (they lay)

8. ki (The place) *en-ki (where Enki) dam-an-ni-da (with his wife) ba-an-da-nad-a-ba (laid himself down)

9. ki-bi (that place) sikil-am (is clean) ki-bi (that place) za(lag)-zalag-ga-am (is bright)

10. ki (the place) *en-ki (where Enki) nin-sikil-la (with Ninsikilla) ba-an-da-nad-a-ba (laid himself down)

7. ஆஸ்நினே தில்முன் ஊனே நடியின்

8. கீழ் ஏண்கீழ் தாரம்- ஆனித்த பண்ணிடு நட அப்ப

9. கீழ் சுக்கில் ஆம் கீழ்பி சலங்குசலங்கு ஆம்

10. கீழ் ஏண்கீழ் நின்சுக்கில்ல பண்ணிடு நட அப்ப


>>>>

இங்கு ‘nad’ என்னும் சொல்லைத் தவறாக புரிந்துகொண்டு ‘படு’ என்று மொழிபெயர்த்துள்ளதைக் காண்க. தமிழ் அறிவோடு காணும்போது இது ‘நடம்’ என்றாகி கூத்தாடுதல் என்று பொருள்படும். இங்கு சிவபெருமானே ( ஏண்சீ> ஏண்கீ) நின் சுக்கில்லா (தூயவள், நித்தியக் கன்னி) என்னும் தன் துணையோடு ஆனந்தக் கூத்தாடுவதாக கூறப்படுவதைக் காண்க. இந்த சொர்க்கபுரி ‘தில்முன்” அதாவது ‘தில்லை மன்று’ என்றே கூறப்படுகின்றது மேலே வரி 7-யிலும் இன்னும் பல சுமேருத் தமிழ் இலக்கியக்கியங்களிலும்.

29.2


சிதம்பரத்து கோயிலின் தனிச் சிறப்பு.


சித்- அம்பரமாகிய சிதம்பரம். தில்லை மன்றுமாகும் திருச்சிற்றம்பலமுமாகும். இதனால் இக்கோயில் சாதாரண ஓர் கோயில் அல்ல, அது இறைவனாலேயே இறக்கப்பட்டதெனினும். சிதம்பரக் கோயில் சிவபெருமானே தன் துணையோடு ஆனந்தக் கூத்தாடும் தில்லையம்பத்தையையே பூலோகத்தில் இறக்கிவைத்த அருட்செயலைக் காட்டும் ஒன்றாகும். எப்படி தில்லையம்பதி ஓவ்வொரு உயிரின் சிரசில் கீழ் பகுதி மூளையில், திருமூலர் கூறுவது போல தென்பொதுவில் இருக்கின்றதோ அதேப் போல, சிதம்பரம் என்னும் திருத்தலம், சிவபெருமான் விடாது தன் துணையோடு ஆனந்தக் கூத்தாடும் தில்லையம் பதியை இறக்கிவைத்துள்ள இடமாகும். ஆக இங்கு சென்று அக்கோயிலில் நுழைந்து அது காட்டும் பொருளோடு ஐக்கியமாகி விட்டால், சிவலோகத்தில் புகுந்து விட்ட அனுபூதியையே பெறலாம் என்றும் தெரிகின்றது. இதனால் தான் போலும் அங்கு பொன்வேயப்பட்டது, சிவஞானிகள அனைவராலும் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்ட பெருமை உடையதுமாக இது திகழ்கின்றது.


30.0


அப்பர் பெருமானின் கோயில் திருப்பதிகம்


தில்லையைப் பாடாத பாடவல்ல சிவனடியார் யாரும் இல்லை. இன்றும் அது பாடப்படும் தலமாக இருந்துதான் வருகின்றது. அப்பாடல்களை எல்லாம் சிலவரிகளில் குறிப்பிடுவது கூட அரிதாக இருக்க, இங்கு நாம் அப்பர் பெருமானின் ஓர் திருபதிகத்தை மாத்திரம் உரையோடும் ஆங்கில மொழிப்பெயர்ப்போடும் தருகின்றோம்


The Temple Hymns of Appar 1-1

The Fifth TirumuRai 1: Koyil


1.

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்புவி மிசை
என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ மேலும் இப்பிறவியே

உரை;

ஆன்மா உடலைவிட்டு நீங்கிடச் செய்து தெய்வங்களோடு கூடிய வானுலகாகிய அன்னம் பாலிக்கும் பெருமையை உடையது தில்லைச் சிற்றம்பலமாகிய இத் திருக்கோயில் இங்கு வந்து இங்குள்ள பொன்மேனியனாகிய சிவ நடராசப் பெருமானைக் கண்டு தொழுவார்க்கெல்லாம் பொன் போலும் உள்ளமும் உடலும் உள்ள வாழ்க்கையை இந்த இப்புவியில் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கும் போதே அருள்பாலிக்கக் கூடியது ஆகும். இவ்வாறான நன்மைகள் எனக்கு இறைவன் அருளுமாறு கண்டு கண்டு இன்புற, மீண்டும் மீண்டும் இந்த மானிடப் பிறவி அருளப்படாதோ என ஏங்குகின்றேன் காண்

அன்னம் : அன், ஆன் : வானம் ‘ அன்னம் : வானுலக வாழ்க்கை. பாலித்தல் : அருளப்படல்

1

2.

அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டு நீர்
சுரும்பு அற்றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே

உரை:

அகத்தே எல்லா உலகியல் வேட்கைளுக்கும் காரணமாகிய கரும்பாகிய காமவேட்கையை தமது கரும்பு வில்லெறிந்து ஊட்டும் காமனை தனது நுதல்விழி சிவஞானத்தின் காய்ந்து இல்லாதாக்கி அதனால் காமவேட்கையை கடவுள் வேட்கையாகத் திரித்து இறைவன் பால் பெரும் பற்றை , பக்தியை எழுப்பவல்ல புலியூர் எனப்படும் இந்த திருத்தில்லை முதல்வனாகிய என் பிரானை வணங்குவது எப்படி எனில் கூறுதும். அரும்புகள் நீக்கி நலமே மலர்ந்த மலர்களையேத் தேர்ந்து தூய நீருடன், வண்டுகள் வந்து மொய்க்கா வண்ணம் இறைவனது திருவடித் தூவி தொழுமின். இதுவே ஏன்ற முறையாகும்

குறிப்பு : மலர் வழிபாடே இறைவனுக்கு ஏற்றது - உயிர்பலி கொடுத்து இறைவனைத் தொழுவது கீழான வழிபாட்டு முறை என்றது. அது அகத்தே இருக்கும் காமத்தை போக்கவல்லது அல்ல என்றது.


3.

அரிச் சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
எரிச்சுற்றக் கிடந்தார் என அயலவர்
சிரிப்புற்றுப் பல பேசப்படா முன்னம்
திருச்சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே

உரை:

பல வகையாக குற்றங்களை செய்ய அதனால் வரும் வினைகள் சுற்றி அகத்தே நின்றவாறு தாக்கி நோய்களையும் அற்ப மரணத்தையும் தர, நெருப்பு சுற்ற பிணமாகக கிடந்தார் என்று அயலவர்கள் , இந்த வீணான மரணத்தைக் கண்டு நகையாட பல பேசி இகழா முன்னம், இப்படிப்பட்ட மரணத்தையே தவிர்க்கத் தரும் தில்லைக் கூத்தனை அகத்தே தரிசித்து திருசிற்றம்பலத்தை அடைந்து உய்மின் நீரே

குறிப்பு :

தூய ஞானம் சுடரும் திருத்தலமாகிய திருசிற்றலம் மரணத்தை வெல்லத்தரும் இடமாகும். அது அகத்தே மூளையின் ஓர் பகுதியாக இருக்கின்றது. புறத்தே தில்லை சென்று கூத்த பிரானை வழிபட, அகத்தே ஞானக்கண் திறக்கும், திருசிற்றம்பலம் உண்டென்று அறிதலும் பின் புகுதலு மெய்யாகும். அதுபொழுது மரணத்தின் மூலமாகிய ஆணவ மலம் முற்றும் கழற, மரணமில்லா பெருவாழ்க்கை வந்தமையும்


4.

அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என் செயும்
தில்லை மாநகர் சிற்றம் பலவனார்க்கு
எல்லை இலதோர் அடிமை பூண்டேனுக்கே

உரை:

எவ்வித ஐயப்பாடும் கட்டுப்பாடும் இல்லாத வகையில் முற்றிலும் என்னை சிவனது அருளாட்சிக்கே விட்டு விட்டு மனமுவந்து தில்லைத் திருக் கோயிலில் திருசிற்றம்பலமே தன் இடமாக செங்கோல் ஓச்சும் சிவபெருமானுக்கே அடிமை பூண்டு வாழ்க்கின்றேன். இந்நிலையில், உலக வாழ்க்கையில் மலரும் அல்லல்கள் தான் என் செய்யும், அறியாது செய்யக் கூடிய பாவங்கள் தான் என்ன செய்யும்? ஒன்றும் செய்யாது என்றவாறு. அதே போல முற்பிறவிகளில் பாவகருமங்களைச் செய்து பொல்லா பிராப்த கர்மங்களாக இன்று விளைந்து பல வேதனைகளைத் தரும் கர்ம தொந்தனைதான் என் செய்யும்? அவையும் ஒன்றும் செய்யாது என்றவாறு

குறிப்பு

திருசிற்றம்பலம் புகுந்து ஆங்கேயே ஆழ அழுந்தி வாழும்போது ஆன்மா கடுஞ்சுத்தமாக இறைவனோடு முற்றிலும் ஒத்துபோய் எவ்வித பின்னமுமின்றி வாழும் என்பதின் பாவகர்மங்கள் ஈட்டுவது இல்லாது போவதோடு, முன்பே ஈட்டிய கன்மத் தொந்தனைகளும் வலுவிழுந்து போய்விடும் என்றவாறு


5.

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம் பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே

உரை:

பரகாய வெளியில் உடம்பின்றி திரிந்த பிறகு, ஓர் உடம்பு அமைய அதில் நின்று ஓர் உயிராக உயிர்த்து ஓர் சீவனாக வாழும் பொழுதெல்லாம், என் நாதனை யாண்டும் மறவாதே அவனது சிந்தையில் ஆழ அழுந்தி வாழ்வேன். இவ்வாறு நான் இருப்பதால், இன்பச் சுவையை தவிர்த்து வேறு எவ்வித அவலச் சுவையையும் தராது சிற்றம்பலத்தில் யாண்டும் இருந்தவாறு அம்மையோடு அயராது ஆனந்த நடம் ஆடிகொண்டிருக்கும் இறைவன், என்னை இந்த பூதவுடல் விட்டு நீங்கி தெய்வ உலகாகிய வானுலகம் நிலாவி இருக்கவும் வைப்பர் கண்டாய்!


6.

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டர் சேவடி கைதொழச் செல்லும் அச்
சிட்டர் பால் அணுகான் செறு காலனே

உரை:

யாண்டும் அழியாத ஞானமாகிய சத்துசித்தினை அறியலுற்ற சிட்டர்களாக ஞான அறிவர்களும் , இயல்பாகவே இந்தத் தெளிவு கைவரப்பேற்ற வானவர்ளும் சென்று தில்லைச் சிற்றம்பலத் துறை மேவி வாழ்ந்து யாண்டும் அழியாத ஞானத்தை வரமாகப் பெறுகின்றனர். அப்படிப்பட்ட சிட்டர்களை சென்று கண்டு அவர்கள் தம் சேவடி தொழச் செல்லும் மக்கள் அந்த சிட்டர்க்ளைப் போன்று ஆதலின், அவர்கள் பால் மரணத்தையும் வேறு பல இன்னல்களையும் தந்து தண்டிக்கும் காலன் அணுகான் காண்க.

குறிப்பு:

மரண பயமின்றியும் மற்றும் உடம்போடு கூடிய வாழ்க்கையில் உடல் வழி வரக்கூடிய ஏனைய இன்னல்களும் காலனால், ஆணவ மலமே தன் உருவமாகக் கொண்டு அந்த எருமைமேல் வரும் எமனால் ஆன்மாக்களை தண்டிக்கும் வகையில் உறுத்தப்படுபவை யாகும். யார் தில்லை வாழ் ஞானச் சுடர்களாகிய சிட்டர்களை தியானித்து வணங்குகின்றார்களோ, அவர்கள் உள்ளத்தும் சிவஞானம் கொழுந்து விட்டெரியும் என்பதின் காலன் அணுகாதே போவான் என்பதாம்.


7.

ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்
திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்
விருத்தனார் இளையார் விடமுண்ட எம்
அருத்தனார் அடியாரை அறிவரே

உரை:

எம் இறைவன் தானே தனக்குத் தலைவனாக ஏகனாக இருக்கும் அதேபொழுது அநேகனுமாம். உலக மக்கள் தத்தமது பக்குவங்களுக்கு ஏற்ற முறையில் வேறுபட்டிருந்தாலும், அனைவர் உள்ளத்தும் ஆழத்தில் என்றும் அழியாத சிவஞானச் செஞ்சுடராக நின்று ஒருமை உணர்வினை தோற்றுவிப்பவனும் ஆகும். எல்லாம் தோன்றும் இடமாகிய தில்லைச் சிற்றம்பலத்தில் பொன்மேனியில் உமையம்மையோடு ஆடிக்கொண்டே இருந்தவாறு பல நாடகங்கள் நடத்தி ஆன்மாக்களின் மலமாசுகள் போக்கி திருத்தி அமைத்து உபகரிக்கின்ற திருத்தனும் அவனே தான். உலக உயிர்கள் முதுமை அடைந்து மரணத்தைத் தழுவுகின்றனர். அந்த முதுமை போக்கி அதே பிறப்பிலோ அல்லது மறு பிறப்பிலோ இளமைப் பொலிவினை மீண்டும் உலக உயிர்கள் அனுபவிக்குமா, மரணத்தை முதுமையைத் தரும் நஞ்சினை உண்கின்றவனும் அவன் தான். மேலும் வாழ்க்கையில் பொருளின்மையால் வரக் கூடிய விரக்தி நிலையை போக்குமா அர்த்தம் அர்த்தங்களாகத் தந்து ஊக்கிகொண்டே இருக்கும் அருத்தனும் அவன் தான். இப்படிப்பட்ட இறைவன், அற்ப மானிடர்கள் நல்ல அடியார்கள் ஆகும் போது அவர்களது இன்னல்களை அறிந்து தக்க முறையில் உதவுகின்ற கருணை வள்ளலுமாம்.


8.

விண் நிறைந்தோர் வெவ்வழிலின் இன்னுரு
எண் நிறைந்த இருவருக்கு அறி வொணாக்
கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்துள்
உள் நிறைந்து நின்றாடும் ஒருவனே

உரை.

ஆழ ஆழச் சென்று அறியவரும் எல்லையாகிய பரகாயப் பெருவெளியில் அங்கிங்கெணாது எங்குமாய் மிகவும் கடுமையான அழல் ஆனாலும் மிக அழகிய வடிவில் இறைவன் சிந்தனைக்கெல்லாம் அப்பாற்பட்ட தூய சோதியாக விளங்குகின்றான். சாத்திரங்களை தீர ஓதுவதால் அறிய முடியும் என்னும் அயனும், அறிதுயில் போன்ற ஞானதிருட்டியால் அனைத்தையும் அகழ்ந்து ஊடுறுவி கண்டு செல்லும் திருமாலும் அறிய வொணாத படி தன்னைத் தானே மறைத்து அருளூள்ளார்க்கே தனைக் காட்டுவன் இறைவன். சிவஞானமே (கண்) நிறைந்து அதனால் புதுமை சிறக்கும் பொழில் போன்று விளங்கும் திருசிற்றம்பலத்துள், எங்கும் தானேயாகி உள் நிறைந்து இவ்வாறான ஆட்டங்களை ஆடிகொண்டு, தான் ஒருவனே, ஏகனே அயன் திருமால் போன்ற வடிவங்களில் தோன்றினும் என்று இருக்கின்றான் இறைவன்.


9.

வில்லை வட்டப்பட வாங்கி யவுணர்தம்
வல்லை வட்ட மதில் மூன்று உடன் மாய்த்தவன்
தில்லை வட்டந் திசை கைதொழுவார் வினை
ஒல்லை வட்டங் கடந்து ஓடுதல் உண்மையே

உரை:

சிவஞானத்தின் ஓர் வடிவாகிய மேரு மலையை வில்லாக வளைத்து , அதிலிருந்து ஞானக்கணைகளாக வீசி அஞ்ஞான அரக்கர்கள் தாம் மிக உறுதியாக கட்டி வைத்த உயர்ந்த மதில்களின் கோட்டைகள் மூன்றினையும் உடன் மாய்த்து இல்லாது போக்கினான் எம் இறைவன. அப்படிப்பட்ட ஞானச்சுடராகிய சிவபெருமான் யாண்டும் நின்று ஆடிக்கொண்டே இருக்கும் திருத்தில்லை வட்டத்திசை நோக்கி , அவனது அருளைப் பெறுவான் வேண்டி யார் கைதொழுது நின்றாலும் அவர்களை ஆட்டிப்படைக்கும் அவுணர்களைப் போன்ற தொல்வினைகள் அழியாது போனாலும் தொல்லைகள் தரும் ஓர் வட்டத்திலிருந்து அகன்று எட்டாத தூரம் ஓடிவிடும், இது என் அனுபவ பூர்வமாகக் கண்ட உண்மை யாகும்


10.

நாடி நாரணன் நான்முகன் என்றிவர்
தேடியுந் திரிந்துங் காண வல்லரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதமென் நெஞ்சுள் இருக்கவே

உரை:

ஒருவனாகிய இறைவனே நாரணன் வடிவெடுத்து ஆன்மாக்களை ஆழுள்ளம் அறியும் வகையில் ஊக்கியும், நான்முகன் வடிவெடுத்து சாத்திரங்களை திறம்படி ஓதுமா தூண்டி ஞானம் புகட்ட முயல்கின்றான். ஆனால் இவ்வாறு அகழ்ந்து சென்றும் உயர்ந்து சென்றும் இறைவணை ஆடவல்லான் என்று அறியாது தேடியும் திரிந்தும் சென்றால், இறைவனை மெய்யாகக் காணவல்லார் ஆதல் முடியாது, சிவஞானக் கண் திறக்காது போம். இவ்வாறு புறப்பயணங்கள் தவிர்த்து நெஞ்சுளே நீங்காது அம்பலத்தில் அயராது அம்மையோடு அயராது ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கும் அவனைக் காண , மாட மாளிகள் சூழ் திருத்தில்லை கோயில் அடைந்து , ஆங்குள்ள சிதமபர இரகசியம் நினைத்து அவனை வணங்குவதே உரிய வழியாகும்


11.

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத்தான் முடிபத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந்து உய்மினே

உரை:

உலகில் எல்லா ஆடவர்களுக்கும் இனிமையான மொழிபேசி குண்டலினி எழுந்தோடச் செய்து உதவும் மங்கையர்களின் மூலவடிவாகிய உமை அம்மையை தனது சரிபாதியாகக் கொண்ருக்கின்றான் இறைவன். எல்லாத் திறமைகளை சதுரப்பாடுகளை உடையவனாக ஆகவே எல்லா தீய சக்திகளையும் வெல்பவனாகவும் யாண்டும் தூய்மையின் தூய்மையாக திரு சிற்றம்பலத்தில் உமை அம்மையோடு ஆனந்த நடனம் ஆடிக்கொண்டே இருக்கின்றான். இதைக் கண்டு பொறுக்காது இறைவனை விஞ்ச இந்த சிற்றம்பலத்தைக் கொண்டுள்ள திருகயிலையை ஆணவச் செருக்கின் இராவணன் ஆர்ப்பட்டெழுந்து அசைக்க, இறைவன் தன் கால் விரலினை சிறிதே ஊன்றி, அந்த இராவணனது முடி பத்தும் கதறி அழுமாறு தண்டித்தான். அப்பேற்பட்ட, எல்லாவகை ஆணவச் செருக்கின் அசுரர்களை எல்லாம் எளிதில் வெற்றிகொள்ளும் அந்த திருவடிகளை இந்தக் கோயிலினை அடைந்து கண்டு போற்றி இந்த உலகபந்தங்களிலிருந்து உய்ந்து மகிழுங்கள்.


30.1


மேலே காட்டப்பட்ட திருப்பதிகம் பொதுவாக மக்களால் சற்றுப் பிழையாகவே புரிந்துகொளப்பட்டு வருகின்றது. ‘அன்னம் பாலிக்கும்’ என்ற தொடர் ‘உணவு தரும்’ என்று பொருள் கொளப்படுவது தவறு என்றேத் தோன்றுகின்றது. இதன் வேர் சுமேருத் தமிழின் ‘அன், ஆன்’ என்று கொண்டு அதுவே ‘வான்’ என்று திரிந்துள்லது என்று கொண்டால். ‘அன்னம்’ என்பது ‘வானுலகம் என்றாகி, உண்மையான தில்லை மன்று என்றும் பொருள்படுகின்றது.


தொடரும்

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 28 பெப்ரவரி 2013, 02:41 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,776 முறைகள் அணுகப்பட்டது.