திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 13
தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-4
முனைவர் கி. லோகநாதன் 2012
25.0
சுமேருத் தமிழ் இலக்கியங்கள் முதற் சங்க இலக்கியங்களாகவே கொள்ளப்பட வேண்டும். சங்கக் குறிப்பு அங்கும் உண்டு. இதனால் இடைச் சங்கம் என்றோர் சங்கம் இருந்திருக்க வேண்டும் என்றும் அதனைப் பற்றிய இறையனார் களவியல் உரையிலும் இன்னும் பல பழம் நூற்களிலும் வருவது கொண்டு அது பல பிறழ்ச்சிகளை உடையதாக இருந்தாலும் உண்மையும் இருக்கவேண்டும் என்றும் தெரிகின்றது. கடைச் சங்க நூற்களின் செறிவும் நுட்பமும் இலக்கிய நயங்களும் சில நூற்றாண்டுகளில் வந்திருக்க முடியாது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வளர்ந்து வந்த ஓர் பழம்பெரும் மரபு வழியாகத்தான் இவையெல்லாம் வந்திருக்க வேண்டும். இது ஏன் இங்கு குறிக்கபடுகின்றது என்றால், கடைச் சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் மேற்கணக்கு நூற்களாகவே இருக்க புராண இலக்கியங்கள் இடைசங்க காலத்திலிருந்தோ கடைச் சங்க காலத்திலிருந்தோ வராதிருக்க, தமிழில் பிற்காலத்தில் மிக விரிவாக தோன்றிய புராண இலக்கியங்கள் வடமொழிச் சார்புடையவை என்ற ஓர் கருத்து தோன்றியுள்ளது, ஆயினும் வடமொழியில் உள்ள புராணங்கள் இடைச் சங்கத் தமிழிலும் இருந்திருக்கலாம் என்றும், கடைச் சங்க காலத்தில் பெரும்பாலும் உலகாயதஞ் சான்ற பூதவாதமே மேலோங்கி இருக்க, ஆழ்ஞானச் சிந்தையின் புராணங்கள் அவ்வளவாக போற்றப்படவில்லை என்றே தெரிகின்றது. ஆயினும் புராணங்களின் உடகிடைக்கையாக இருந்த பல கருத்துகளைப் பற்றிய குறிப்புக்கள் அங்குமிங்குமாக விரவி கிடக்கின்றதைக் காண்கின்றோம். மேலும் ‘பரிபாடல்’ என்னும் தொகை நூலில் திருமால் திருமுருகன் கொற்றைவைத் தாய் ஆகியோரைப் பற்றிய பல இசைப் பாடல்களிலும் புராணக் குறிப்புக்கள் பல உண்டு.
25.1
இவற்றையெல்லாம் நங்கு ஆய்ந்துள்ள பல அறிஞர்களும் உண்டு. அவர்களில் முனைவர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் ‘ தமிழ் இலக்கியங்களில் வைணவம்’ என்ற நூலும், முனைவர் வி. ஆர், மாதவன் என்பாரின் ‘தமிழில் தலபுராணங்கள்’ என்ற நூலும் என் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட துணை நூற்களாகும் இந்த அறிஞர்கட்கு சுமேருத் தமிழ் அறிவு இல்லாத போதிலும், விரிவான நல்ல ஆராய்ச்சியின் வழியும் கடுமையான உழைப்பின் வழியும் நமக்கு தேவையான பல விசயங்களைப் பற்றி அவர்கள் எழுதி இருக்க, அவர்களின் ஆய்வுகளைச் சார்ந்தே இந்தப் பகுதி எழுதப்படுகின்றது.
26.0
தொல்காப்பியத்தில் பூத வாதம்
தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் பெரும்பாலும் உலகியல் நாட்டங்களைப் பாடும் அகத்திணை புறத்திணை இலக்கியங்களையே ஆய்ந்து அவற்றின் இலக்கணங்களை செவ்வே கூறியுள்ளன. திணைகட்கு தெய்வங்களை வகுத்த சிறப்பினும் இறைக்காதல் காமம் என்றெல்லாம் கூறியுள்ள சிறப்பினாலும் ஆங்கு நிலவியுள்ள தத்துவக் கோட்பாடு முற்றாக உலகாயதம் என்படும் பூதவாதம் அல்லையெனினும், இதன் தாக்கம் பேரளவில் இருந்திருப்பதும் உண்மையே. காண்க மரபியல் சூத்திரம்:
1589
நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல் நெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்
இங்கு ஐம்பூதங்களாகிய நிலம் தீ நீர் காற்று வெளி எனும் ஐம்பூதங்கள் தாமே கலந்து ஒன்றோடொன்று விரவி இந்த உலகமாக நிற்பதின், ஆங்குள்ள பொருட்களை மலைவு தோன்றாவகையில் அவற்றின் இயல்பு பிழையா வகையில் இருதிணை ஐம்பால் எனும் இலக்கணக் கூறுகள் திரிவுபடா வகையில் பெயரிட்டு அழைக்கவேண்டும் என்று ஓர் மொழியியல் கோட்ப்பாடு நிறுத்தப்படுகின்றது.
இங்கு உலகம் தெய்வத்தால் தோற்றப்பட்டு இருத்தப்பட்டு பின் அழிக்கப்படுகின்றது என்றும் பிறகு மீண்டும் படைக்கப்படுகின்றது என்றும் இவ்வாறு தொடர்ந்து செல்லும் பண்பிற்று என்றெல்லாம் கூறாதிருப்பதைக் காண்க. இது தத்தவ விசாரணையில், பூதவாதம் எனப்படும் ஓர் திரிபாகும். இதுவே தனித் தமிழ் புராண இலக்கியங்கள் சங்க காலத்தில் தோன்றாதிருப்பதற்கும் தோன்றி இருந்தாலும் அவை போற்றப்படாது போய்விட்டதற்கும் ஒர் காரணமாக இருக்கலாம்.
26.1
கடைச்சங்க காலத்தில் தொண்டர் புராணத் திரிபு
சுமேருத் தமிழில் மூன்றாம் ஊர் பரம்பரையை (Third Ur Dynasty) நிறுவிய ‘உது ஏகள்’ எனும் ஓர் மாபெரும் வீரனின் கதையில் எவ்வாறு ஏன்லீல் எனும் திருமாலும் ஈன் அன்னா எனும் கொற்றவையும் அருள்பாலிக்கவேதான் பெரும்படை திரட்டி குமரி நாட்டை மீட்டான் என்ற கதையைப் பார்த்தோம். இறையருள் வெளிப்படுமாறு இவனது அருஞ்செயல் விளங்க, அவனது கதை ஓர் தொண்டர் புராணமாகவே விளங்குவதையும் கண்டோம். இதற்கு மாறாக சங்க இலக்கியத்தில் அரசர்களின் போராட்டங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் செயல்களாகவே மதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். கடை சங்கக் காலத்தில் இப்படிப்பட்ட வீரதீரச் செயல்கள் தெய்வ அருளால் நடப்பதல்ல ஒருவனின் தனி முயற்சியால் விளைவது என்று கொளப்பட்டும் பெரும் புலவர்களால் பரிசு பெறுவதற்காக அவர்களை புகழ்ந்து பாடப்பட்டுள்ளதையும் காண்கின்றோம். காட்டாக பதிற்றுபத்திலிருந்து ஓர் பாடல்:
இரண்டாம் பத்து குமட்டூர் கண்ணனார் பாடிய ‘புண்ணுமிழ் குருதி’ எனும் பாடல்;
வரைமருள் புணரி வான் பிசிர் உடைய
வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்
நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை யவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச்
செவ்வா யெஃகம் விலங்குனர் அறுப்ப
அருநிறந் திறந்து புண்ணுமிழ் குருதியின்
மணிநிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண் கொன்று
முரண்மிகு சிறப்பின் உயர்ந்து ஊக்கலை;
பலர்மொசிந் திரல்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரரி நறவின் ஆர மார்பிற்
போரடு தானைச் சேரலாத!
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்
பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்த
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே
கவிர்தகை சிலம்பிற் றுஞ்சுங் கவரி
பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்
தென்னங் குமரியொ டாயிடை
மன்மீக் கூறுநர் மறந்த்பக் கடந்தே
இங்கு முருகவேள் கருங்கடலின் நடுவே ஓர் மாமரத்தை தனது வேலியாககொண்ட அவுணர்களின் தலைவனாகிய சூரபத்மனை வீழ்த்தும் பொருட்டு அந்த மாமரதின் முதலை, அடியை பிணிமுகம் என்ற யானைமீதேறி சென்று வெட்டினான். அந்தத் திருமுருகனைப் போன்று இந்த சேரலாதன் பகைவர்களை வென்று இமயம் முதல் தென்குமரி வரை செங்கோல் ஒச்சினான் என்று கூறுகிறது இப்பாடல்.
திருமுருகணின் புராணம், இங்கு ஓர் உவமையாகத்தான் கொளப்படுகின்றது. அவனது அருளாலோ அல்லது வேறு தெய்வங்களின் அருளாலோ சேரலாதன் அகில பாரதத்தையே ஆண்டான் என்று கூறப்படவில்லை. தனது அளப்பரிய வீரத்தாலேயே இதனை சாதித்தான் என்று புகழ்ந்து பாடி, அவனது ஆணவச் செருக்கினைத் தூண்டி பெரும் பரிசிலைப் பெற்றார் குமுட்டூர் கண்ணனார் என்று தெரிகின்றது.
இது பூதவாதம் மேம்பட்டிருந்ததால் வந்த ஓர் திரிபு என்றே தெரிகின்றது. பத்தி காலத்தில் பல்லவ மன்னர்களும் பிறரும் இதேப் போன்ற செருக்காட, அப்பர் பெருமான் அவர்களோடு அகிம்சா முறையில் போராட வேண்டியிருந்தது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும்
அதனைப் பற்றிய விசாரண எல்லாம் பிறகு.
தொடரும்
திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 14
27.0
திருமாலியத்தில் தொண்டர் புராணம் இல்லையா?
பத்தி காலத்திலும் அதன் பின்னும் திருமாலிய மரபில் திருத் தொண்டர்களாக யாரும் பாடப்பெறவில்லை. ஆழ்வார்கள் பன்னிருவரும் பலவகையில் சிறப்பிக்கப்ட்டார்கள் என்பது உண்மை எனினும், சைவத்தின் ‘கண்ணப்பர் மறம்’ போன்றும் பிறகு எழுந்த ‘திருத்தொண்டர் தொகை’ ‘பெரிய புராணம்’ போன்றும் ஆழ்வார்கள் பற்றிய புராணங்கள் எதுவும் பாடப்பட்டதாகத் தெரியவில்லை. மூனைவர் வி,ஆர் மாதவன் அவர்கள் தமது சிறப்பான “தமிழில் தலபுராணங்கள்’ எனும் நூலில் ‘சேக்கிழார் புராணம்’ ‘திருவாதவூர் அடிகள் புராணம்’ என்றவாறு வந்துள்ள சைவ புராணங்கள் போல வைணவத்தில் ‘ அரிசமய தீபம், குருபரம்பராப் பிர்பாவம், திவ்விய சூரி சரித்திரம் போன்ற நூல்கள் இறையடியார்கள் பற்றிக் கூறும் வரலாறுகளாக எழுந்துள்ளன” என்கின்றார் (பக்கம் 26). ஆயினும் இப்படிபட்ட வரலாறுகள் தெய்வங்கள் ஆட்கொண்டு அவர்களைப் பல செய்யவைத்தார்கள் என்ற தத்துவக் கருத்து பத்தி காலத்து திருமாலியத்தில் இல்லாமையின் இப்படிப்பட்ட திருத் தொண்டர் புரரணங்கள் எழாது போயிருக்கலாம் என்று நினைக்க இடம் உண்டு. வர்லாறுகள் தொண்டர் புராணக்கள் ஆகா. இறைவன் பல அவதாரங்களில் தோன்றி மக்கட்கு அருள்பாலிக்கின்றான் என்ற கருத்தே மேலோங்கி நிற்க, தெய்வ புராணங்களும் தல புராணங்களும் எழுந்ததேத் தவிர வன்தொண்டர் மென்தொண்டர் என்றெல்லாம் வகைப்படுத்தப் பட்ட திருத்தொண்டு மக்களைப் பற்றிய கதைகள் யாதும் எழவில்லை என்றே தோன்றுகிறது..
27.1
அவதார புராணங்கள்
சுமேருத் தமிழில் உலகளந்த பெருமாளாகவும் இன்னும் பல வடிவங்களிலும் தோன்றிய ஏண்லீல் சீர்மால் என்றெல்லாம் பகரப்பட்ட திருமால் இடைச் சங்க கடைச் சங்க காலத்தில் பல்வேறு அவதாரங்களாகவே காணப்படுகின்றான். இடைச் சங்க நூற்கள் யாதும் இதுவரை கிட்டவில்லை எனினும் அவற்றின் உட்கிடக்கைகள் வடமொழி இலக்கியங்களில் பாதுகாக்கப்பட்டிருகின்றன என்று தெரிகின்றது. இவை பிறகு தமிழில் மீண்டும் நுழைந்து தழைத்தோங்கி இருக்கின்றன என்றும் தெரிகின்றது. இந்திரா பார்த்தசாரதி மேலே குறிக்கப்பட்ட தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார் (பக்கம் 10)
“ அவதாரக் கொள்கைகளைப் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டவை புராணங்கள். இவை எழுதப்பட்டதும் தொகுக்க்ப்பட்டதும் தென்னிந்தியாவிலே. டாக்டர் சிராதர் என்பார் கருத்தின்படி பாஞ்சராத்திரி ஆகமத்திற்குத் தோற்றுவாய் தென்னிந்தியாதான், கடவுளை மனித வடிவில் விளக்கியதின் மூலம், கடவுளை அனைவரும் எளிதில் அடைய முடியும்; அதற்குச் சாதி உள்ளிட்ட எத்தடையும் இல்லை என்ற கருத்தை இதனால் அறிவுறுத்தினர்.”
இது திருமாலியத்தின் அவதார புராணங்களுக்கே பொருந்தும், திருத்தொண்டர் புராணம் போன்ற சைவ புராணங்களுக்குப் பொருந்தாது.
27.2
இந்த அவதாரங்கள் மகாபாரத்தில் பல இடங்களில் வருவதை மேலே குறிக்கப்பட்ட நூலில் காணலாம் (பக்கம் 28-29). மேலும் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் அவற்றின் குறிப்புகள் தென்படுவதையும் காணாலம். (பக்கம் 35-36). சங்கம் மருவிய காலத்திலும் அவதாரக் கோட்பாடு பெரிதும் வளர்ந்திருந்தையும் குறித்துள்ளார் (பக்கம் 42). மேலும் முதல் ஆழ்வார்கள் தொடங்கி பிற ஆழ்வார்கள் எந்தெந்த அவதாரங்களை எந்தெந்த பாடல்களில் பாடியுள்ளனர் என்ற செய்திகளை எல்லாம் திரட்டி, இறைவன் எவ்வாறு பல அவதாரங்களாக வெளிப்பட்டு தெய்வச் சிந்தனைகளை வளர்த்துள்ளான் என்பதை எல்லாம் பட்டியலிட்டும் தருகின்றார். (பக்கம் 109-111) இந்த தொகுப்பில் நரசிம்ம அவதாரம் சிறப்புற்று இருப்பதையும் அது கடைச் சங்க இலக்கியத்திலும் குறிக்க்பட்டுள்ளதைக் கூறுகின்றார். பரிபாடலில் நரசிம்ம அவதாரம் வர்ணிக்கப்படுவதை கீழ் வரும் பாட்டு வரிகளின் வழி காட்டுகின்றார்,
‘
செயிர் தீர் செங் கட் செல்வ- நிற் புகழ்
பகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணிபட
வலந்துழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன் தாதை ஆகலின்
இகழ்வோன் இகழா நெஞ்சினாக நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி
ஒன்றா நாட்டவன் உறுவரை மார்பின்
படிமதம் சாம்பு ஒதுங்கி
இன்னல் இன்னரொடு இடிமுரசு இயம்ப
வெடிபடா ஒடி தூண் தடியொடு
தடிதடி பல பட – வகிர் வாய்ந்த உகிரினை’
உண்மையில் இந்த நரசிம்ம அவதாரமும் அதனைப் போன்ற பாதி மிருகம் பாதி மனிதன் திகழும் இறைவடிவங்களும் பண்டைய எகிப்தியர்கள் சுமேரியர்கள் நூபியர்கள் போன்ற மக்களிடையேயும் பெரிதும் போற்றப்பட்ட வடிவங்கள் ஆகும்.
27.3
இங்கு நரசிம்ம அவதாரத்தை விட இன்னும் புகழ் பெற்றதாக விளங்குவது இராமாவதாரம் ஆகும். இதிகாச புருடனாகவே இரமபிரான் விளங்க, அவன் கதையைப் பாடாத இந்திய மொழிகள் இல்லை என்பதொடு, தென்கிழக்காசிய தாய்லாந்து இந்தோநேசிய போன்ற நாடுகளிலும் கிழக்காசிய நாடுகளாகிய சைனா ஜப்பான் கொரியா கம்போடியா போன்ற நாடுகளிலும் பெரிதும் பரவி பல மாற்றங்களையும் பெற்றுள்ள சிறப்பு அதற்குண்டு. மேலும் தமிழில் பண்டு தொட்டே இராமாயணமும் மாபாரதமும் பாடல் வடிவில் பல இருந்தாலும் கம்பனின் இராமாவதாரம் போன்று ஓர் மாபெரும் காப்பியமாக எழுந்துள்ளது தமிழிற்கே பெருமை சேர்ப்பதாகும். இன்றளவு இந்த கமபராமாயணத்தை கருத்தூன்றி படிக்கும் அறிஞர் கூட்டம் பேரளவில் தமிழகத்தில் உண்டு.
27.4
இங்கு ஓர் சிறு கருத்து. சுமேருத் தமிழர்களிடையே திங்கிர்(>தெய்வம்) லாமா என்றும் தெய்வம் லகாமா என்றும் ஓர் தெய்வம் வீரர்களின் தெய்வமாகவும் நீதியைக் காக்கும் ஓர் தெய்வமாகவும் போற்றப்பட்டுள்ளது. இது பல சிறுதெய்வங்களில் ஒன்றாக ஆனால் சூல்கி போற பெரும் அரசர்களாலும் தொழப்பட்ட ஓர் தெய்வமாக காணப்படுகின்றது. இங்கு ‘லாமா’ என்ற சொல் மிக எளிதாக ‘ராமா’ என்று மாறக்கூடியது என்பதால், தெய்வம் லாமாவே தெய்வம் ராமாவாக மாறி, அவன் கதையே பிறகாலத்தில் இராமாயணமாக வளர்ச்சி பெற்றிருக்கலாம் என்பதைக் காண்க. இன்னும் ஆழ ஆய்வு செய்ய வேண்டிய ஓர் கருத்தாக இதனை முன்வைக்கின்றேன்.
28.0
அவதாரங்கள் பல எனினும் அவற்றில் பத்து அவதாரங்கள் மிகவும் சிறப்புடையவை. சைவர்கள் அவற்றை ஓம்பாது போக, வைணவர்கள் அவற்றை இறைவனே என்று தொழுதும் போற்றியும், அந்தப் புராணங்கள் வழி உணர்த்தப்படும் ஆழுண்மைகளையும் விசாரித்து பல மெய்யறிவு பனுவல்களை எழுதியுள்ளனர். அவற்றை நாம் பிறகு அலசுவோம். இடையே இந்த அவதாரங்களைத் தொகுத்து மணவாள தாசர் என்பார் 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதிய ‘திருவரங்கத்து மாலை’ எனும் நூலிலிருந்து சில குறிப்புக்கள்.
28.1
முதலில் அம்சாவதாரம்(1) பாடப்படுகின்றது. ‘ எம்பெருமான் பிரமனுக்கு வேதங்களை உபதேசிக்கும் பரமகுரு ஆவதற்கு அன்னப்பறவை உருவத்தை ஏற்ற வடிவமாகக் கொண்டனன் எனலாம். உருண்டை வடிவமான முட்டையில் அன்னப்பறவை வளர்ந்து எழுமாறு போல, திருமாலில் அம்சரூபம் அண்ட கோலத்தில் வளர்ந்து தோன்றிற்று என ஒப்புமை அமையும்’ என்றோர் உரையாசிரியர் குறிப்பும் உண்டு, பிறகு ‘மச்சாவதாரம்’ (2) ‘கூர்மவதாரம்’ (3) ‘வராகவதாரம்’ (4) ‘நரசிம்ம அவதாரம்’ (5) ‘வாமன அவதாரம்’ (6)‘பரசுராம அவதாரம்’ (7) ‘இராமாவதாரம்( 8) ‘கிருஷ்ணாவதாரம்(9) ‘வேதவியாச அவதாரம்’ (10) ‘கல்கி அவதாரம்’ (11) என்றவாறு வேதவியாச அவதாரம் தவிர்த்து பத்து அவதார்கங்கள் புகழ்ந்து பாடப்படுகின்றன. இங்கு கிருஷ்ண அவதாரம் மிக விரிவாக 25 கவிகளில் பாடப்படுகின்றது. அனைத்தும் ஆழ்வார்களின் பாசுரங்களில் பாடப்பட்ட கண்ணனின் லீலா வினோங்களாகவேத் திகழ்கின்றன. காட்டாக ஒரு சில.
கண்ணனது சர்வ வியாபகத்துவம்
160.
கடிக்கும் கரளப் பிறைவாள்
எயிற்றுவெங் காளியன் மேல்
நடிக்கும் பெரிய பெருமாள்
அரங்கர் நிறைகமழ்பால்
குடிக்கும் களவுக்கு மாறுகொண்
டேயொரு கோபிபற்றி
அடிக்கும் பொழுதில் பதினால்
உலகம் அடிபட்டவே
உரை:
கடும் விசத்தையுடைய கூரிய பற்களை உடைய காளியன் எனும் பாம்பின்மேல் கூத்தாடுகின்ற அரங்கநாதன், வாசனை கமழ்கின்ற பாலை குடிக்கின்ற திருட்டிற்காக கோபங்கொண்டு ஓர் இடைச்சி அந்தக் கண்ணனைப் பிடித்து அடிக்கும் பொழுதில், பதினாங்கு உலகங்களில் உள்ளவான அனைத்தும் அடிபட்டன
கண்ணனது மயக்கும் குழலிசை
166.
கூனந்து உலாவயற் கோயிலுள்
ளேபள்ளி கொள்ளும் எங்கள்
ஆனந்த வாரி திருக்குழல்
ஊத அறத்தடித்த
கானம் தழைத்தன கால்வரை
நெக்கள கார்முகில்தோய்
வானம் அயர்ந்தன வையமெல்
லாம் மெய்ம்மறந்தனவே
உரை:
திருவரங்கப் பெருங்கோயிலில் ஆதிசேடன் மீது அறிதுயில் கொள்ளும் எங்களது பேரின்பக் கடவுளாகிய கண்ணபிரான், அழகிய வேய்ங்குழலை ஊதும்போது, முற்றவும் வேரொடு உலர்ந்த காடுகள் தழைத்தன; சாரல்களை உடைய மலைகள் உருகின; கரிய மேகங்கள உலாவுகின்ற வானுலகம் சோர்ந்தன; நிலவுலகம் முழுவதும் பரசவப் பட்டு மகிழ்ந்தன.
கண்ணன் கோபியர்கள் களிக்க குரவையாடல்
167
ஊரும் திரைப் பொன்னி
அரங்க உருப்பலவாய்
காரும் தடித்தும் கலந்தது
போல் இடைக் கன்னியர்கள்
யாரும் களிக்க இடையிடை
யேகலந்து இன்ப நலம்
கூரும் திருத்டம் ஆடிய
மாயமென்? கூறுகவே
உரை:
மேன்மேல் வருகின்ற அலைகளையுடைய காவேரியினது நல்ல நீரால் சூழப்பட்ட திருவரங்க நாதனே! நீ கண்ணவதாரத்தில் இளமையான இடைப்பெண்கள் யாவரும் மகிழும் வண்ணம் பல திருவுருவங் கொண்டு அவர்களது நடுநடுவே மேகமும் மின்னலும் ஒரு சேரக் கலந்து தோன்றியது போலக் கலந்து சிறந்த இன்பம் மிகுகின்ற திருநடனத்தை ஆடிய மாயையை என்ன வென்று சொல்லுக!
28.2
ஏன் திருமாலியத்தில் இவ்வாறு இறைவனது அவதாரங்களே சிறப்பிக்கப்படுகின்றன, இதற்கும் பரபத்திக்கும் பிற தத்துவ வேறுபாடுகட்கும் உள்ள தொடர்புகள் எல்லாம் என்ன என்பதை பிறகு ஆராயவிருக்கின்றோம். சங்கத் தமிழின் அகத்திணை மரபு பெரியவோர் தாக்கத்தினை உண்டுபண்ணி இருக்கத்தான் இப்படிப்பட்ட மரபுகள் என்பதை பிறகு விளக்கவோம்.
தொடரும்