தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-2
முனைவர் க். லோகநாதன் 2012
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.6
C: பக்தி இலக்கியங்கள்.
16.0
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய கீழ்கணக்கு நூற்களுக்கு அடுத்தப்படியாகத் தோன்றியவையே மிகவும் பரவலாகவும் பல புரட்சிகரமான சிந்தனைகளை உள்ளடக்கியதாகவும் தேவரத் திருமுறைகளும் திவ்விய பிர்பந்தங்களுமாகிய பத்தி இலக்கியங்கள் திகழ்கின்றன. ஆயினும் தமிழிற்கு இறைவனை பலவாறு போற்றிப் புகழும் பக்தி இலக்கியங்கள் புதிதன்று, முதற் சங்க தமிழாகிய சுமேருத் தமிழிலேயே மிகவும் நன்றாக தோன்றிவிட்ட ஓர் இலக்கிய வகைதான் அது. கடைச் சங்க காலத்தும் அவை இசைப்பாடல்களாக இருந்திருப்பதை ‘பரிபாடல்’ எனும் தொகுப்பு நூல நமக்குக் காட்டி நிற்கின்றது. எட்டுத்தொகை போன்ற தொகுப்பு நூற்களிலும் மற்றும் கீழ்கணக்கு நூற்களிலும் இறைவாழ்த்துக்களாகப் பல பக்தி சான்ற பாடல்கள் உண்டு. ஆயினும் தேவாரம் திவ்விய பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களுக்கும் அவற்றிற்கு முன் தோன்றிவைகட்கும் பல வேறுபாடுகள் உண்டு. சுமேருத் தமிழ் பத்தி பாடல்களும் கடைச் சங்க பத்தி பாடல்களும் சமயத் பொது பாராட்ட, எல்லா தெய்வங்களும் ஒருங்கே அன்பினால் ஆர்வத்தோடு புகழ்ந்து போற்றி பாடப்பட, தேவார காலத்து பத்தி இலக்கியங்கள் சிவனை சார்ந்தவை என்றும் திருமாலைச் சார்ந்தவை என்றும், சைவ வைணவ பேதங்களோடு தோன்றுகின்றன.
16.1
இவை காட்டி நிற்கும் அறிமானங்களைக் காண அவை பொதுவாக ‘தெய்வப் பரமானங்கள்’ எனும் அன்பு மீதூர ஆர்வமும் அச்சமும் ஆழமான மெய்ஞானமும் கூடி வரும் வகையான சிந்தனை ஓட்டமெனக் காண்கின்றோம். நுதல் விழிப்பார்வையின் காணவரும் தெய்வத்தின் பால் முற்றாக கவரப்பட்டு, அத்தெய்ய்வமே காட்டியருளும் மெய்ஞானங்களை கண்டுணர்ந்து அவற்றைச் சொல்லாக வடிக்கும் வகையில் அறிவின் ஓட்டத்தை இந்தகைய பத்தி இலக்கியங்களில் காண்கின்றோம். இவையே தூய தனித்த மெய்ஞான விசாரனைக்கும் வித்திட்டுளதையும் வரலாற்றில் மிகத் தெளிவாகக் காண்கின்றோம்.
இவற்றை தெய்வங்கலின் தந்திரங்கள் என்றும் கூறலாம். ஆன்மாக்களை முற்றிலும் கவர்ந்து தன் ஆட்சிக்குக் கொண்டு வந்து தன் உருவில் புதைந்துள்ள ஆழ்ஞானங்களை ஒருவாறு உணருமா போதித்து அவற்றைச் சொல்லாக்குமா ஊக்குவித்தும் ஞானம் புகட்டும் திருவிளையாட்டை இத்தகைய பத்தி இலக்கிய்ங்களில் காண்கின்றோம். இங்கு விளங்கும் அறிமானங்கள் ‘திருவுருவ சிந்தனை’ (Icon Thinking)பபற்பட்டது என்பது தெளிவு.
சுமேருத் தமிழ் பத்திப் பாடல்கள்
17.0
வரலாற்று காலத்திற்கு முன்பே இறைவனைப் போற்றிப் புகழும் பத்திப் பாடல்கள் தோன்றி இருக்கவேண்டும் ஆயினும் எழுதப்பட்ட பத்திப் பாடல்கள் ‘ஏண் உடு அண்ணா’ எனும் அம்மையார் கி.மு 2300 வாக்கில் எழுதிய ‘ஈன்னன்னை சீர்பியம்” (The Exaltations of Innana) கேசி கோயில் பாட்டு (The Kes Temple Hymns) என்பவற்றொடு ஏறக்குறைய 42 பாடல்களை உள்ளடக்கிய அவரே தொகுத்த அளித்துள்ள ஓர் தொகுப்பும் ஆகும். எட்டுத்தொகை போன்ற தொலுப்பு நூற்களுக்கு முன்னோடியாக இந்த கோயில் பாட்டு தொகுப்பு நூல் விளங்குகின்றது. இந்த தொகுப்பின் தனி சிறப்பாவது அக்காலத்தில் விளங்கிய ஏண்கி (ஏண்சி : வேள் சிவன்?) ஏண்லீல் அல்லது சீர்மால்(>திருமால்) ஈன் அன்னா போன்ற தெய்வங்களுக்கும் இன்னும் பல தெய்வங்களுக்கும் இயற்றப்பட்ட போற்றிப் பாடல்கள் சமய பேதங்களைக் காட்டாது பொதுமை பாராட்டுவதாக அமைந்துள்ளன. ஒரே தெய்வம் பல வடிவங்களில் தோன்றி நல்லது செய்யும் என்ற கருத்து, இறைவன் ஏகன் - அநேகன் என்ற கருத்து பரவி இருந்ததுபோல் தெரிகின்றது.
17.1
ஈன் அன்னை சீர்பியம்
இது ‘ஏண் உடு அண்ணா’ எனும் அம்மையாரால் இயற்றப்பட்ட அற்புதமான சுமேருத் தமிழ் பத்தி நூலாகும். ‘சீர்பியம்’ என்ற அழகிய தமிழ் சொல் சுமேருத் தமிழ் இலக்கியத்தில் இருக்க, அதனைக் கொண்டு வந்து இவ்வாறு இப்போற்றிக்கு பெயரிட்டுள்ளேன், சுமேருத் தமிழ் அறிஞர்கள் இதனை ஆங்கிலத்தில் ‘The Exaltations of InAnna’ என்கின்றனர். கொற்றைவை என்றும் அம்பிகை என்றும் உமை என்றும் இன்னும் பலவாறும் அழைக்கப்பட்ட அம்மையை பற்றி மிக விரிவாக தெரிவிக்கும் பல கருத்துக்களை உள்ளடக்கி வரும் அற்புதமான போற்றி இதுவாகும். மிக அழகிய ஆழமான மெய்யறிவுச் சிந்தனைகள பல திறன்பட விளங்கும் கீழ்வரும் வரிகளோடு இந்நூல் தொடங்குகின்றது
>>>
1. nin-me-sar-ra u-dalla-e-a
Lady of all the me's resplendent light
நின் மெய் சர்வ உள் தெள்ளிய
2.mi-zi me-lam gur-ru ki-aga-an-uras-a
Righteous woman clothed in radiance, beloved of heaven and earth
மை-சீ மேலம் கூறு காங்க வான் ஊரஸ்ய
>>>
இவ்வரிகளில் வரும் ஆழமான மெய்ஞான கருத்துக்கள் --- எல்லா தத்துவங்களின் தலைவியாகிய ஈன் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினாள் என்றும் ஒளியையே தன் ஆடையாக கொண்டிருப்பவள் என்றும் அனைத்து உயிர்களாலும் காமிக்கப்படுகின்றவள் என்றும் கூறபப்டுவதைக் காண்க.
இந்த நெடிய பாடலிலிருந்து பழம்பெரும் போற்றி எனக் கருதத் தக்க கீழ் வரும் வரிகளை தருகின்றேன்;
>>>>
சீர்பியம்: பாடல் 15
122. he-su-he-za-a nanna li-bi-in-du-ga za-a-akam bi-in-du-ga
That one has not recited as "Known! Be it Known!" of Nanna , that one has recited as a "Tis Thine!"
ஏசு ஏசுவ நன்னா இலி பீயின் தூக்க, ஜாஅகம் பீயின் தூக்க
123. an-gim mah-a-za he-zu-am
That you are lofty as Heaven-- be it known!
வான் ஙிம் மாஹ்அ ஜா ஈ சூ ஆம்!
124 ki-gim dagal-la-za he-zu-am
That you are broad as the earth -- be it known!
கீழ்ஙிம் தகல்ல ஜாஅ ஈ சூ ஆம்!
125. ki-bala-gul-gul-lu-za he-zu-am
That you devastate the rebellious land- be it know !
கீழ்வல கொல்கொல்லு ஜாஅ ஈ சூ ஆம்!
125a kur-ra gu-de-za he-zu-am
That you roar at the land - be it known!
குன்ற கூயிடே ஜாஅ ஈ சூ ஆம்!
126 sag-gis-ra-ra-za he-zu-am
That you smite the heads- be it known!
சென்னியிசு அரிஅரி ஜாஅ ஈ சூ ஆம்!
127 ur-gim adda ku-za he-zu-am
That you devour cadavers like a dog -- be it known!
ஓரிஙிம் அட்ட கூழ் ஜாஅ ஈ சூ ஆம்!
128 igi-hus- a-za he-zu-am
That you glance is terrible - be it known!
இமை உஷ்ண ஜாஅ ஈ சூ ஆம்!
129 igi-hus-bi il-il(i)-za he-zu-am
That you lift your terrible glance -- be it known!
இஙி உஷ்ணபி இயல் இயலி ஜாஅ ஈ சூ ஆம்!
130 igi-gun-gun-na-za he-zu-am
That your glance s flashing -- be it known!
இஙி கன்கன்ன ஜாஅ ஈ சூ ஆம்!
131. en-na-nu-se-ga-za he-zu-am
That you are ill-disposed towards the .....-- be it known
ஈனனு செகு ஜாஅ ஈ சூ ஆம்!
132. u-ma gub-gub-bu-za he-zu-am
That you attain victory -- be it known!
ஊம்ம குப்குப்பு ஜாஅ ஈ சூ ஆம்!
133. nanna li-bi-in-du-ga za-a-kam bi-in-du-ga
That one has not recited (this) of Nanna, that one has recited it as "Tis thine!"--
நன்னா இலி பீயின் தூக்க ஜாஅகம் பீயின் தூக்க
134 nin-mu ib-gu-ul-en asa mah-me-en
(That) Oh my lady, has made you great, you alone are exalted
நின்மோ விப்பு கோலன் ஆசா மாஹ் மன்
135. nin-ki-aga-an-na-me-en mir-mir-zu ga-am-du
Oh my lady veloved of An, I have verily recited your fury!
நின் காங்க ஆண்ண மன் மீர் மீர்ஜு ஙாஅம் தூக்உ
>>>>
இந்த வரிகளைக் காணும் போது நிச்சயமாக நமக்கு கொற்றவைத் தாயின் நினைவுகள் வராது போகாது. கொல் அவ்வையாகிய கொற்றைவை எனும் சொல்லின் தோற்றத்தையும் இங்கே காண்கின்றோம். ‘கொல் கொல் அம்மா’ எனும் சொல்லே (வரி 125: -ki-bala-gul-gul-lu-za ) ‘கொற்றைவை’ என்று பிற்காலத்தில் மருவி இருக்க வேண்டும்.
இத்தகைய போற்றிகள் அல்லது நமாவளிகள் சுமேருத் தமிழ் காலத்திலிருந்து தமிழில் தோன்றியுள்ளன என்பதொடு அவை ஆழமான மெய்ஞான சிந்தனைகளின் கருவூலமாகவும் திகழ்ந்துள்ளன என்பதை எல்லாம் பிறகு காண விருக்கின்றோம்
தொடரும்
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.7
கடைச் சங்க பத்தி
18.0
இதுவரை நமக்குக் கிடைத்துள்ள கடைச் சங்க நூற்கள் பெரும் பாலும் காதலை அல்லது வீரத்தைப் பாடும் அகத்திணை புறத்திணை நூற்கள் என்றாலும், அன்றும் இன்றும் நிலவும் தெய்வங்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிய பத்திப் பாடல்கள் இல்லாமல் இல்லை. இதற்குச் சான்றாக இருப்பது ‘பரிபாடல்’ எனும் ஓர் தொகை நூல் தான், அதுவும் பகுதியே கிடைத்துள்ள அவல நிலை. சுமேருத் தமிழ் ‘கோயில் பாட்டுகள்’ (Temple Hymns) என்பது போல இதுவும் முருகன் திருமால் கொற்றவை சிவன் போன்ற தெய்வங்களை துதித்துப் பாடியுள்ள இசைப்பாடல்கள் என்பதொடு, வையை நதி மதுரை மாநகர் ஆகியவற்றைப் போற்றியும் பல பாடல்கள் உள்ளன. மேலும் பல தொகை நூற்களில் கடவுள் வாழ்த்தாக பல அழகிய மிக ஆழமான சிந்தனைகளோடு கூடிய பல துதிப் பாடல்களும் உண்டு.
18.1
பரிபாடல் எனும் தொகை நூல் கொண்டிருந்த பாடல்களை கீழ் வரும் பழம் பாடல் விளக்குகின்றது.
‘ திருமாலிற்கு இருநாங்கு; செவ்வேட்கு முப்பத்
தொரு பாட்டு; காடுகாட்கு ஒன்று; மருவினிய
வையை இருபத்தாறு; மா மதுரை நாங்கு என்ப
செய்ய பரிபாடல் திறம்’
இதன் பொருள் வெளிப்படை. மதுரையைச் சார்ந்த ஒருவரால் தொகுக்கப்பட்ட ஓர் தொகை நூல் இது என்பதொடு, திருமால் திருமுருகன் கொற்றவை ஆகிய சைவ வைணவ தெய்வகங்களைப் போற்றிப் பாடும் பாடல்களையும் உள்ளடக்கி செல்வது பேதங்கள் பாராட்டாத நல்லவோர் காலத்தை அங்கு காண்கின்றோம். தேவார திவ்விய பிரபந்த காலத்தில் இந்த பொதுமை நல்லுணர்வு இல்லாமற்போய் விட்டது.
18,2
மேலே காட்டப்பட்ட சுமேருத் தமிழ் போற்றியை இங்குள்ள பாடல்கள் பலவற்றிலும் காண்கின்றோம். காட்டாக திருமாலைப் போற்றிப் புகழும் முதற்பாடலில் கீழ்வரும் போற்றி வரிகளைக் காண்கிறோம்.
"விறன் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ!
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும், மற்றவர்க்கு அணங்கும் நீ!
அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும் தெரு கதிர்க் கனலியும் நீ!
ஐந்தலை உயிரிய அணங்குடை அருந்திறல்
மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ!
நலம் முழுது அனைஇய புகர் அறு காட்சிப்
புலமும் பூவனும் நாற்றமும் நீ!"
என்றவாறு இப்பாடல் செல்கின்றது. திருமால் எனும் தெய்வத்தைத் போற்றும் வகையில் அத்தெய்வம் காட்டியருளும் மெய்ஞானங்களும் நலமே வெளிப்பாடிருப்பதைக் காண்க.
செவ்வேள் எனும் திருமுருகனைப் போற்றிப் புகழும் ஐந்தாம் பாடலில் கீழ்வரும் உண்மையான பத்தியின் வெளிப்பாடுகளாக விளங்கும் வரிகளையும் காண்கின்றோம்
“ அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல, நின்பால
அருளும் அன்பும் அறனும் மூன்றும் –
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! “
அறம் பொருள் இன்பம் என்னும் புருஷார்த்தங்கள் இங்கு அருள் இன்பம் அறன் என்றாகி நிற்கின்றன. இந்த ‘அருள்’ எனும் சொல் திராவிட மெய்யறிவு வரலாற்றில் பத்தி இலக்கியங்களில் மாத்திரம் அன்று, அவற்றைச் சார்ந்தெழுந்த மெய்யறிவு நூற்களிலும் சிறந்த ஓர் இடத்தை பெற்று திராவிட மெய்யறிவுச் சிந்தனைக்கு ஓர் தனித் தன்மைய சேர்த்துள்ளதை பிறகு காண்போம்
18.3
‘பரிபாடல்’ எனும் தொகை நூலில் சிவபெருமானைப் பற்றி பல குறிப்புகள் உண்டெனினும் தனியாக அவனைப் புகழ்ந்து எப்பாடலும் இல்லை. ஆயினும் கடைச் சங்க இலக்கியங்களில் பரசிவன் பலவாறு குறிக்கப்பட்டுள்ளான். ஆயினும் கீழே வரும் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியருளிய கடவுள் வாழ்த்து மிகவும் ஆழமான மெய்ஞானங்களைக் கொண்டுள்ளதாக பிற்காலத்து பத்தி இலக்கியங்கள் மிகவும் பரவலாக விரிவாக தோன்றுதற்கு வழிகாட்டியாக விளங்கியுள்ள்து வெளிப்படை.“
"கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பிற் றாருங் கொன்றை
ஊர்தி வல்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப
கறைமிடற் றணியலும் அணிந்தன்று அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலமும் படுமே
பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்
பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
பதிணென் கணனும் ஏத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏம மாகிய
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடை பொலிந்த அருந்தவத் தோர்க்கே”
19.0
இந்த 13 வரிப் பாடலில் மிகவும் பழமையான சிவபரம்பொருளின் குணாதிசயங்கள் மிகவும் தெளிவாக கூறப்படுவதைக் காண்க. பிறகாலத்தில் தேவாரத் திருமுறைகள் சிவபக்தி பாடல்களாகவே மிளிர்ந்து இத்தகைய தத்துவ ஞானங்களை இன்னும் இன்னும் வளர்த்து சென்றுள்ளதை விரைவில் காணவிருக்கின்றோம்.
தொடரும்
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.8
திருமாலிய பத்தி இலக்கியங்கள்19.0
தமிழ் இலக்கிய வரலாற்றில் பத்தி இலக்கியங்கள் எனப்படுபவை தேவாரத் திருமுறைகளும் நாலாயிர திவ்விய பிரபந்தங்களுமே யாம். பிற்காலத்தில் 14ஆம் நூற்றாண்டு அருணகிரி நாதரால் இயற்றப்பட்ட ‘திருப்புகழ்’ ‘கந்தர அனுபூதி’ போன்ற நூற்களையும் இதில் அடக்கிக் கொள்ளலாம். ஆயின் இது பல தனித்தன்மைகள் கொண்டிருப்பதால் தனியாகவே ஆராயப்படும். இந்த பத்தி இலக்கியங்களில் சைவ வைணவ பேதங்கள் வெகுவாகத் தோன்றி பல வகையான சமயப் பூசல்களுக்குக் காரண்மாக இருந்ததொடு தத்துவக் கோட்பாடுகள் அடிப்படையிலும் வெவ்வேறு வகையான அறிமானங்களை. சிந்தனை ஓட்டங்களை தூண்டியுள்ளன. இறைவன் திருமால் வடிவத்தில் தோன்றி ஆன்மாக்களை ஆட்கொண்டு அந்த வடிவில் புதைந்துள்ள ஞானங்களை ஒருவாறு வெளிப்படுத்த அதன் வழி எழுந்தவையே திருமாலிய பத்தி இலக்கியங்கள் எனலாம். இதேப் போல இறைவன் சிவ மூர்த்தங்களாக வெளிப்பட்டு ஆன்மாக்களை ஆட்கொண்டு சைவ வடிவத்து ஞானங்களை அருள்பாலிக்க ஆங்கு எழுந்தவையே தேவாரத் திருமுறை பாடல்கள் எனலாம். இவ்விரண்டு இறைவனின் வடிவங்கள் உருவிலும் இயல்பிலும் பல வேறுபாடுகளைக் கொண்டிருக்க பாடல்களின் கருத்தோட்டங்களும் வேறுபடுகின்றன. ஆயினும் இவர்களில் மிகச் சிறந்தோரும் பிற்காலத்தில் தாயுமானவர் இரமலிங்க சுவாமிகள போன்றோரும் சமயாதீத கருத்துக்களை வற்புறுத்தி இந்த சமய பேதங்களை கண்டித்டுள்ளதையும் காண விருக்கின்றோம். இந்த மூன்று வகைச் சிந்தனை ஓட்டங்களும் பத்தி இலக்கியங்களின் உள்ளீடாக பண்டு தொட்டே வந்துள்ளது தமிழர்களின் மெய்யறிவுச் சிந்தனைக்கு சிறப்பு சேர்க்கும் ஓர் விசயமாகும்.
19.1
தெய்வத்தின் ஆட்சி சுயத்தின் இழப்பு
ஆன்மாக்கள் தம் சுயத்தை இழந்து, அந்த சூன்யத்தில் ஓர் இறைவடிவை இருத்தி அந்த வடிவத்தின் ஆட்சிக்கு தானே முன்வந்து ஆளாகுவதே பத்தி இலக்கிய்ங்களின் தோற்றுவாய் ஆகும். பண்டைய பத்தி இலக்கிய்ங்களில் இது அவ்வளவாக வெளிப்பட்டு நிற்காது போக. பார்வைகளையே பெரிதும் ஆய்ந்த கடைச் சங்க இலக்கியங்களின் தாக்கத்தின் காரணமாக ஓர் இறைவடிவத்தின் பார்வையே அல்லது அத்தெய்வம் இருத்தும் பார்வையையே தன் பார்வையாகக் கொண்டு உலகத்தைக் கண்டு உவந்தவர்களே ஆழ்வார்கள் ஆகும். இதனை நன்றாகவே ஆழ்வார்கள் உணர்ந்திருந்தனர்.
காட்டாக நம்மாழ்வாரின் ஓர் பாடல்:
2995
கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்
காண்பன் அவன் கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும்
ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி -- தன்னைக்
கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தொடு உலகம்
ஆக்கி என் நெற்றி உளானே
நம்மாழ்வர் தன் சுய கணகளை இழந்து கமலக் கண்ணனாகிய திருமாலின் கண்களையே தன் கண்களாகக் கொண்டு பல உண்மைகளைக் கண்டு உணர்ந்து மலம் போக்கிய சிறப்பினை விதந்தெடுத்து ஓதுன்கின்றார் இங்கு. அத்தோடு இவ்வடிவின் தாக்கத்தால் தன்னைத் தோற்றுவார் யருமின்றிய அந்தமாதியாகிய கண்ணுதல் கடவுளாகிய சிவப்ரம்பொருளை திருமாலே அயனொடு தோற்றுவித்தான் எனும் பொழுது, சமயப் பேதங்கள் இங்கு தோன்றுவதையும் காண்கின்றோம். இது திருமாலிய பத்திப் பாடல்களில் பரவலாகக் காணப்படும் ஓர் கூறாகும்
இதனை கீழ்வரும் பொய்கை ஆழ்வார் பாடலிலும் காண்கின்றோம்
2092
வாய் அவனை அல்லது வாழ்த்தாது; கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா; பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணாக் கண் கேளாச் செவி
இங்கு ‘காணாக் கண் கேளாச் செவி’ எனும் சொற்றொடர் ஆழ்வாரை திருமால் மிகவும் வன்மையாக ஆட்கொண்டுள்ளதை மிகத் தெளிவாகக் காண்கின்றோம். இப்படி ஆட்கொண்டே ஆழ்மான மெய்ஞானங்களை காணும்படிச் செய்து அதனை பாடவும் வைத்துள்ளான் இறைவன்
காட்டாக நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து, இராமாநுசரின் விசிட்டாத்வைதத்திற்கு அடிகோலிய திருப்பாடல்கள் இரண்டு
2899
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வு அற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வு அறும் அமரகள் அதிபதி எவன் அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
2903
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறைவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறைவர் குறைவு இலர்; இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
இங்கு ‘உயர்வு அற உயர் நலம் உடையவன்’ என்ற வரியே திருமாலிய மெய்யறிவுச் சிந்தனைக்கு ஆதாரமாகத் திகழ்ந்தது என்பதொடு இராமானுஜரின் விசிட்டாத்வைத வேதாந்த கோட்பாட்டிற்கு வித்திட்டது என்பார் அறிஞர்கள். ஆயினும் இறைவன் என்பான் ‘எல்லா நலங்களையும் தன்னுள் கொண்டிருப்பவன்’ எனில், மலங்கள் என்கிருந்து வருகின்றன என்ற கேள்வியையும் எழுப்பி, ஓர் மெய்யறிவு விசாரனைக்கு வித்திடுவதைக் காண்க
அடுத்து ‘அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை’ எனும் போது, கமலக் கண்ணனாகிய திருமால் அத்தோடு நில்லாது இன்னும் பல வகையான பார்வைகளை அதன் வழி அறிவுகளை நல்கி ஆன்மாக்கள் தனை அறிந்து உய்யுமாறு அருள்பாலிக்கின்றான் என்ற கருத்து மேலோங்கி நிற்பதைக் காண்க.
இதனை இன்னும் விளக்குவதாக இன்னும் சில பாடல்கள்
19.2
பெரியாழ்வாரின் தாய்மைப் பார்வை.
தாய்மையின் அன்பிற்கு இணையானது வேறொன்றும் இல்லை. இப்படிப்பட்ட அன்பினை வளர்க்கும் வகையில் திருமால் தன்னையே ஓர் குழந்தையாக்கி பெரியாழ்வார் அதனைக் காணச் செய்து அதன் வழி அவரை ஓர் தாயாக்கி தாய்மையின் அன்பினை அறியவைத்து அதன்வழி இறைவன் உயிர்கள் பால் கொண்டுள்ள அன்பினை அறிய வைக்கின்றான கமலக் கண்ணனாகியத் திருமால். இவ்வகையில் தோன்றிய பிறகாலத்தில் பெரிதும் வளர்ந்துள்ளது ‘பிள்ளைத் தமிழ்’ என்னும் சிற்றிலக்கிய வகையாகும்,
இறப்பிலி பிறப்பிலியாகிய இறைவன் கண்ணணாக திருவதாரம் செய்கின்றான், திருக்கோட்டியூரின் பிறக்கின்றான் என்று பாடி அவனது திருமேனி அழகினை மகிழும் வகையில் வரும் பாடல்கள் கீழே வருபவை.
23.
சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போதந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே
பவள வாயீர் வந்து காணீரே!
24
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைபெய்தாற்போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவா காணீரே
ஒண்ணுதலீர் வந்து காணீரே!
இங்கு தாய்மையின் அன்பு கண்ணன் ஓர் குழந்தையாக திருவவதாரம் செய்வது வழியாக, ஒவ்வொரு மானிட சிசுவிலும் மற்ற உயிர்களின் சிசுக்களிலும் தோன்றும் தாய்மை அன்பினை வெளிப்படுத்தி பாடுகின்றார் பெரியாழ்வார். இறைவன் தன்னையே கண்ணனாகச் சிசுவாகக் காட்டி அருளி பெரியாழ்வார் பால் தாய்மைக் கண்ணினை எழச் செய்து இந்த திருவிளையாட்டை விளையாடுவதைக் காண்க
19.3
ஆண்டாளின் மணாளப் பார்வை
தமிழ் பத்தி இலக்கியங்கட்கே உரியதாக விளங்குவது சங்காலத்திலும் ‘இறைக் காமம்’ என்று ஓதப்பட்ட ஒர் போக்கு ஆகும். தெய்வத்தையே மணாளனாக வரித்து பாடுவது இங்கு பயிலும் ஓர் இயலபு ஆகும். சைவத்தில் மாணிக்கவாசகரின் ‘திருக்கோவையார்” இறைவனோடு சேர்வதை வீடுபேறு அடைவதை திருமணம் என்றே கொண்டு பாட, அந்த சேர்க்கைக்கு ஆழ விரும்புவதை, வேடுபேற்றையே ஆழ விரும்புவதை, இறைவனையே மணாளனாக வரித்து அவனைக் கலந்து இன்பம் தூய்ப்பதாக ஆண்டாளின் பார்வையை மயக்கி கீழ் வரும் பாடல்களைப் போன்ற காமப் பாடல்களை பாட வைத்துள்ளான் வேங்கடவன் எனும் வடிவ இறைவன்
மிகவும் புகழ்பெற்ற ஆண்டாளின் திருமணக் கனவுப் பாடல் கீழே
556
வாரணம் ஆயிரம் சூழ வலஞ் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்டுப் புறம் எங்கும்
தோரணம் கட்டக் கனாக் கண்டேன் தோழீ!
இங்கு நாரணனையே திருமணம் செய்து கொள்ளும் ஆழ்விருப்பு நல்லவோர் கனாவாக வெளிப்பட்டு ஆண்டாளின் உள்ளத்தில் உள்ள வேட்கை நிறுத்தும் பார்வையைக் காட்டுகின்றது.
இதே நாச்சியார் திருமொழியில், தான் நாரணனுக்கே மணவாட்டியாக விதிக்கப்பட்டிருக்க, மானிடன் ஒருவன் தன்னை கைப்ப்டிக்க நினைப்பது மறையவர் வேள்வியில் வகுத்த அவியை ஒர் காட்டு நரி உண்ண முயல்வது போல்வது என்று சாதாரண திருமணத்தை இகழ்கின்றார், அல்லது திருமாலால் இகழும்படியான ஓர் பார்வையை மகிழ்கின்றாள்
508
வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்ர்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடர்க்கு என்ற பேச்சுப் படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே
இவ்வாறு சங்க இலக்கியத்தில் தலைவி கூற்று தலைவன் கூற்று தோழி கூற்று பாங்கண் கூற்று கண்டோர் கூற்று என்றெலாம் வந்த பார்வைகள் இங்கு திருமாலால் பல்வேறு தெய்வப் பார்வைகளாக திரிக்கப்பட்டு ஆன்மாக்கள் சுயத்தை இழந்த நிலையில் அவற்றிற்கு ஆழ்ஞான போதகங்களாக விளங்குவதை இந்த திருமாலிய பத்தி இலக்கியங்களில் பரக்கப் பரக்கக் காண்கின்றோம்.
தொடரும்
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.9
20.0
சிவபத்தி இலக்கியங்கள்
திருமாலிய பத்தி இலக்கியங்களை விட மிகவும் விரிவானதாக பலதிறப்பட்டனவாக பண்ணோடு வரும் பாடல்களாக பெரும்பாலும் பத்து பத்தாக தொகுக்கப்பட்ட பதிகங்களாக விளங்குகின்றன தேவாரத் த்ரிருப்பதிகங்கள். முதல் ஏழு தொகுதிகள் தேவார அடங்கண் முறை என, எட்டு மானிக்கவாசகரின் திருவாசகம் திருக்கோவையார் என ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பலாண்டு என பத்தாம் திருமுறை திருமூலரின் திருமந்திரமாக தொகுக்கப்பட்டுள்ளது. பதினோராம் திருமுறை சங்ககாலத்து திருமுருகாற்றுப்படை புனிதவதியாரின் அற்புதத் திருவந்தாதி போன்ற பாடல்களை உள்ளடக்கியதாக தொகுக்கப்பட, பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணமாக விளங்குகின்றது. இராசராச சோழன் காலத்தில் நம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டதாகவும் பிறகு பெரியபுராணமும் சேர்க்கப்பட்டதாகவும் கூறுவர். இங்கு நம் ஆராய்ச்சி இந்த தேவராத் திருமுறைகளில் அடங்கியுள்ள சிறப்பான அறிமானங்களை, அறிகரணங்களை சுருக்கமாக அறிந்து தெளிவதற்கே யாம்.
20.1
சுயத்தின் மீட்சியும் சிவபத்தியும்
கமலக் கண்ணனாகிய திருமால் ஆன்மாக்களை ஆட்கொண்டு தம் சுயத்தை இழக்குமா மயக்கி தன் வடிவம் ஒன்ரை புகுத்தி அது தானாகவே நின்று அசையாது வாழ்ந்து அதன்வழி வரும் ஞானவுதிப்புக்களை தெய்வீக உணர்வுகளை தூய்த்து பாடல்களாக புனைந்து ஞானம் வளர்ந்தனர். இந்தப் போக்கே பரபத்தி என்ப்பட்டது இதற்கு மாறாக சிவபத்தர்கள் தம் சுயத்தை இழக்காததோடு மட்டுமிலாது இறைவன் காட்ட தான் கண்டு சிவஞானம் வளர்த்து சுயத்தையும் தன்னறிவும் பெற்று மகிழ்ந்துள்ளனர் என்பதையும் காண்கின்றோம். ஆன்மாவின் சுயமாவது ‘தான் யார்க்கும் குடி அல்லோம்’ என்பது. தான் யார்க்கும் குடி அல்லா சங்கரணைச் சாரச்சாரத் தான், ஆன்மா இதுவரை இழந்தும் மறந்தும் இருந்த சுயத்தை அடைந்து தன்னறிவு பெற்று அதன் வழி வீடுபேறும் அடையும் என்ற அற்புதமான கருத்து கீழ்வரும் அப்பர் பெருமான் பாடலில் மிகத் தெளிவாக சுடர்கின்றது.
ஆறாம் திருமுறை தனித் திருதாண்டகம்
961.
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்
கொய்ம்மலர் சேவடி இணையே குறுகி னோமே
உரை:
ஓர் சிறிய நாட்டின் தலைவனாக இருக்கும் யாருக்கும் அடிபணிந்து அந்நாட்டின் குடியாக இருக்கமாட்டோம். அவ்வாறு செய்யுங்கால் தண்டித்து கொலை நோக்கோடு வந்தாலும் நமனை அஞ்சோம்; பலவித தண்டனைகள் கொடுத்து வாழ்க்கையை நரகமாக்கினாலும் இடர்படோம் , நடுங்கவுஞ் செய்யோம்; எச்சூழ்நிலையிலும் மனங்குழையாது ஏமாப்புடனேயே இருப்போம், எவ்வகையான பிணியும் அறியோம் என்பதின் பணிவோம் அல்லோம்; யாது நடந்தாலும் அது இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இவ்வாறு நாம் இருப்பதற்கு காரணம் தாம் யார்க்கும் குடியல்லாத சர்வ சுதந்திரத் தன்மையான அர்த்தநாரீ வடிவத்து வெண்குழையோர் காதில் அணிந்திருக்கும் சங்கரனை நம் தலைவராய்க் கொண்டு, அவனுக்கே மீளா ஆளாய் நின்று அவனது மலர்களைப் போன்ற சேவடிகளைத் தொழுவதற்கே நாம் குறுகினோம் என்பதால் என்றறிக
இப்படிப்பட்ட சுயத்தை போற்றிப்பாடும் பத்தி பாடல்களை திவ்விய பிரபந்தகளில் காணபதரிது. இதனால் ஏன் இப்படி, வைணவ பத்திக்கும் சிவபத்திக்கும் என்ன வேறுபாடு? என்ற கேள்வியும் எழுகின்றது
20.2
புனிதவதியார்: அருளே எல்லாம்
அருள் வேட்டலென்பது கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும், தமிழ தெய்வச் சிந்தனையில், மெய்ய்றிவு விசாரனையில் மையமான ஓர் கருத்தாகும். ‘அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி’ என்று தொல்காப்பியத்திலேயே வருகின்றது. திருவள்ளுவுவர் அருள் வேறு பொருள் வேறு என்று கொண்டு அருளிலார்க்கு வானுலக தெய்வ உலக வாழ்க்கை இல்லை என்கின்றார். ஆயினும் பத்திகால சைவ சமய எழுச்சிக்கு வித்திட்ட காரைக்கால் பேயார் எனும் புனிதவதிவார் ‘அருளே உலகெல்லாம் ஆள்விப்பது’ என்ற முழக்கத்தோடு அருள் ஈட்டலுக்கு முதன்மை தந்து சைவ சமய எழுச்சிக்கிக்கு வித்திடுகின்றார். அற்புதமான அப்பாடல் உரையுடன் கீழே:
9
அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பு அறுப்பதானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு
(அ-ரை திரு வி.க)
(ஈசன் அருளே -- ஈசன் அருளால்) எப்பொருளும் எனக்கு ஆவது என்றபடி. எல்லாவற்றையுந் திருவருட் கண்கொண்டு நோக்குவோர்க்கு எல்லாம் ஆவனவேயாகும். அவர்கட்கு ஆகாதது ஒன்றுமில்லை.
உரை (உலகன்)
உயர்ந்ததென்றும் தாழ்ந்ததென்றும் நல்லதென்றும் தீயதென்றும் சித்தென்றும் அசித்தென்றும் விண்ணென்றும் மண்ணென்றும் இன்னும் பலவாறும் பேதப்படுத்தவரும் இப்பேருலகையெல்லாம் அசைத்து இயங்குமா ஆள்விப்பது ஈசனது அருளேயாம். எல்லா ஆன்மாக்களுக்கும் இவ்வாறு மீண்டும் பிறந்துழலத் தந்து அஞ்ஞானம் போக்கும் அந்த அருளே, சிவஞானம் புணர்த்தி அஞ்ஞானம் போக்கி மீண்டும் பிறவாதிருக்குமா பிறப்பினை அறுப்பதுமாகும். அது எப்படியோவெனில் அந்த அருளாலேதான் பொய்ப்பொருளை விட்டு முத்திக்கு வித்தாகிய மெய்ப்பொருளை நோக்கி அதனையேப் பற்றிக்கொள்ளும் வாழ்க்கை விதியுடையவளும் ஆகினேன். இப்படிப்பட்ட மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையவளாக வளர்ந்துவிட்ட எனக்கு, வேண்டாவென எப்பொருளையும் தள்ளிவைக்கும் மனம் ஓர் சிறிதும் இல்லை என்பதைக் காண்க -- எல்லா பொருளும் இறைவனது அருளேயென எனக்கு ஆவதேயாம்.
இங்கு அனைத்தையும் ஆட்சி செய்யும் இறைவனது அருளே ஞானம்புணர்த்தி மீண்டும் பிறவாமையைத் தந்து பிறப்பு அறுக்கும் என்று கூறும் பேயார் இறைவனது அருளாலேயே மெய்யறிவு விசாரணையின் வீழ்ந்து ஞானத்தில் உயர்ந்தேன் எனும் பொழுது. மற்ற வழிகளில் ஞானம் பெற்று பிறப்பறுக்க முடியாதா என்ற கேள்வி எழுகின்றது. இறைவனை அடைய ஒரே ஒரு வழி அல்லது சில வழிகள் தான் உண்டோ என்ற கேள்வி எழ, அதற்கு விடையாக அமைவது திருஞான சமபந்தரின் கீழ்வரும் அழகிய பாடல்.
20.3
அளவில்லா அருள் விளையாட்டு
சிவ பக்தி அறிவினை ஓர் வட்டத்திற்குள் அடைக்கும் பத்தி அல்ல. மாறாக காணாததை எல்லாம் காணத்தரும் கண் விழிப்பிக்கும் ஒன்றாகும். பொய்கையார் ‘காணாக் கண் கேளாச் செவி’ என்று பாடியதுபோல நாயன்மார்கள் யாரும் பாடவில்லை. திருமூலர் ‘களிம்பு அறுத்தான் கண்ணுதல் நந்தி, கண் விழிப்பித்து’ என்றுதான் பாடுகின்றார்.
இறைவனது அருள் விளையாட்டிற்கு ஆகவே ஞானம் புகட்டும் வழிகட்கு வரம்பில்ல, வேண்டுவதெல்லாம் இறைவனோடு ஒன்றித்து நிற்பதே என்று பாடுகின்றார் சம்பந்தர் கீழ் வரும் பாட்டில்:
திருமுறை 3:54
4.
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா
கோட்பாலனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலை நின்று இவை கேட்கத் தக்கார்
உரை:
ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அவ்வவர் பக்குவத்திற்கு ஏற்ற முறையில் ஞானம் அருளும் வண்ணமும், ஏன் இவ்வாறு செய்கின்றான் என்று இறைவனது ஆதி மாண்பும் , யாதென்று கேட்டு சிந்தித்துத் தெளியப் புகின், அவற்றிற்கு அளவில்லை என்பதின் சிந்தித்து இதுவே உண்மை என்று கிளக்க வேண்டாம், அது முடியாத ஒன்று. இவன் அருளிற்கு பாத்திரமாக வேண்டுமே அல்லாது வேறொன்றும் தேவை இல்லை. இனி யாவைதாம் கேட்கத் தக்கது எனின் , ஆன்மாவின் உள்ளத்தைத் திரித்து கோடு உற்றதாக்கியும் மும்மல தாக்கத்தின் அறமற்றது செய்து தீயவினைகள் குறுகாதும் காத்தருளுமா இறைவனையே தந்தை என்று கருதி செருக்கெல்லாம் போக்கி அவன் திருத்தாள்கள் வணங்கி இறையருளை ஈட்டுவதே வேண்டத்தக்கதுவாம்.
இங்கு ‘ கோட்பாலனவும் விணையும் குறுகாமை’ என்றவாறு மும்மலத் தாக்கத்தையும் அதற்கு ஆளாகாது இருப்பதற்கு இறையருளே துணை என்றவாறு, வேதாந்த வைணவ இலக்கியங்களில் கூறப்படாத மும்மலக் கருத்துக்கள் விளம்பப்பட்டு அநாதிப்பொருளியற்கு இப்பாடல் அடிகோலியிருப்பதைக் காண்க
இனி ‘ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணம்’ தான் யாது என, அதற்கு விளக்கம் தருவதாக கீழ்வரும் அப்பர் பெருமான் பாடல் அமைகின்றது.
20.4
ஆட்டுவிக்கும் ஆடவல்லான்
இறைவனை கூத்தபிரானாகக் காண்பது சைவத்திற்கே உள்ள தனிச் சிறப்பு. அம்மையோடு இறைவன் அயராது ஆனந்தத் தாண்டவம் ஆடிகொண்டே இருக்கின்றான் என்ற கருத்து சுமேருத் தமிழ் இலக்கியத்திலும் காணப்படும் ஒன்றாகும். அங்கு ‘தில்முன்’ (Tilmun) என்று அழைக்கப்பட்ட தில்லை மன்றில் இந்த ஆனந்தக் கூத்தை ஏண்கி-நின் சுகில்லா என்ற சிவசக்தி வடிவங்களில் ஆடுவதாக ஓர் குறிப்பு வருகின்றது. இதனையே அப்பர் பெருமான் கீழ்வரும் பாடலில் இன்னும் பல புதிய ஆழங்களோடு பாடியருளுகின்றார்.
திருமுறை 6:95
3.
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே
காண்பார் ஆர் கண்ணுதாலாய் காட்டாக்காலே
உரை:
நெற்றியில் ஓர் கண்ணோடு முக்கண்ணனாக உள்ளும் புறமும் அதுதானாக நின்று அனைத்தையும் உள்ளவாக் கண்டு மகிழும் எம்பெருமானே! உள்நின்று பல வேட்கைகளை எழுப்பி பற்பல செய்யுமாறு ஆட்டுவித்தால், ஆர்தான் அதனை மறுத்தும் மீறியும் அவ்வாறு ஆடாதிருக்க முடியும்? இனி செயல்கள் வேண்டாம் என ஊக்கங்களை எல்லாம் உள்ளிழுத்துக் கொண்டு அடக்குவித்தால் ஆர்தான் அடங்காது செயல்பட முடியும்? இனி வாழ்ந்தது போதும் இந்த நைந்து போன உடலைவிட்டு ஓடு என்று ஓச்சினால் யார் தான் இவ்வாறு ஓடாதிருக்க முடியும்? கல்மனத்து அற்பனாய் வாழ்வது பொருந்துவதல்ல நெஞ்சம் நெக்குருக வாழவேண்டும் என்று நீ உருகிவித்தால் அதனை மீறுவார் யாருண்டு? இனி அளவை முறையில் சிந்தித்து முடித்து பின் கடந்து நெஞ்சமெலாம் கனிய பண்னோடு பாடுவதே சிறப்பென நீ பாடவைத்தால், யார்தான் பாடாதிருக்க முடியும்? இனி சிவஞானம் பெருக்கி செருக்கெல்லாம் அழித்து பணிவோடு வாழ் என்று பணித்தால் ஆர் தான் இவ்வாறு பணிவின்றி வாழமுடியும்? அதேப் போன்று இதைக்காண் அதைக்காண் என்று பற்பல அவத்தை நிலைகளில் நீயே காட்டிக் காட்டி ஞானம் புகட்டும் போது, ஆர் ஒருவர் இவற்றையெல்லாம் காணாது போவார்? மேலும் அய்யனே ஞானக்குருட்டினை அழிக்கும் வகையில் இவர்களெல்லாம் செயல்படுவது, நீ காட்டுவதால் அன்றோ? நீயே அருளின் காட்டாக்கால் யார் தான் அரியக் கண்டு ஞானம் பெற்று விளங்குவர்? யாரும் இல்லை என்றவாறு.
இங்கு இறைவன் அருள் விளையாட்டிற்கு ஆளாகாது யாருமில்லை என்பதொடு மிகவும் பொருளுள்ள கருத்தாக ‘காண்பார் ஆர் கண்ண்ணுதல் காட்டாக்காலே’ என்றவாறு இறைவன் காட்டவே ஆன்மாக்கள் காண்கின்றன, பற்பபல செயல்களில் ஈடுபட்டு கற்கின்றன என்ற கருத்து மேலோங்கி நிற்பதைக் காண்க.
இயற்கையில், மானிடர்களின் வாழ்க்கையில் ‘இறைவன் காட்ட ஆன்மாக்கள் காணுதல்’ என்றவாறு ஓர் அருளாட்டம் நடந்துகொண்டே இருக்கின்றது. அதனால் தான் ஆன்மாக்கள் பற்பல செய்து கற்று ஞானம் வளர்த்து மும்மலம் போக்கி சுத்தமாகி மீண்டும் பிறவாமை எய்துகின்றனர் என்றவாறு பிற்காலத்தில் பெரிதும் வளர்க்கப்பட்ட சைவசித்தாந்த கோட்பாட்டிற்கு வழிகோலுவதை இப்பாடலில் காண்கின்றோம்
அடுத்த கேள்வி: எபடித்தான் இறைவன் ஆன்மாக்களை ஆட்டுகின்றான், காட்டிக் காண வைத்து ஞானம் புகட்டுகின்றான்? என்ற கேள்வி எழ அதற்கு விடைகளாக கீழே வரும் பாடல்கள் விளங்குகின்றன.
21,0காட்டி கண் விழிப்பித்தல்
இறைவனது ஞான போதகம் பலதறப்பட்டது, மிகவும் விரிவானது என்றும் நில்லாது தொடர்வது. ஆன்மாக்கள் அனைத்தும் மும்மலத் தாக்கத்தல் ஞானக் குருடுகளாக இருக்க காணவைக்கும் காட்டு விளயாட்டு பல வடிவங்களில் நடக்கின்றது. இவற்றில் சிலவற்றைக் இங்கு காண்போம்
21.1
திருவுருவச் சிந்தனை(Icon Thinking)
இறைவன் தன்னை பல்வேறு வடிவங்களில் காட்டி அந்த வடிவங்களில் புதைந்து கிடக்கின்ற ஆழுண்மைகளை காணவைத்து அதன் வழி பதிகல்வி தேற்றி ஞானம் புகட்டுகின்றான். இதனை மிக விரிவாகவும் பரவலாகவும் காரைக்கால் பேயாரின் அற்புதத் திருவந்தாயில் காண்கின்றாம்.
41
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவமாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவம் மின்னுருவோ நேர்ந்து
(அ-ரை திரு.வி.க)
இருபாலும் நீல உருவமாக நேர்ந்து (நெருங்கி) நிறந்தெரிய மாட்டோம். இரண்டு நீலமேக உருவிடைத் தோன்றும் மின்னுருவோ உன்னுடையது என்றபடி. இறைவன் மின்னுருவம் உடையவன் என்றவாறு
உரை(உலகன்)
பல்வேறு வடிவங்களில் தன்னைக் காட்டி அருளும்போது, ஒருபால் உலகளந்த திருமாலையும் மற்றொருபால் உமையம்மையையும் அடக்கி நீலவண்ணத்தில் தானேயாய் வெளிப்பட்டு நீலசிவனாக நிற்க ,எந்த வடிவம் நின் வடிவம் என்று தெளிந்தறிய முடியாது தடுமாறுகின்றேன் ஐயனே! நின் மெய் உருவந்தான் எது? கருமேகங்களிடையே வெடிக்கும் மின் உருவமோ நின் உருவம?
இங்கு இறைவனது தற்சொரூபம் தான் யாது? என்ற தத்துவக் கேள்வியை எழச்செய்து அது உருவமற்ற அரு வடிமாகிய ஒளி வடிவம் என்று அறியச் செய்வதைக் காண்க
சுந்தரரின் கீழ் வரும் பாட்டிலும் இன்னொருவகையான திருவுருnaச் சிந்தனையைக் காண்கின்றோம்
7:4
1.
தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே
சடைமேற் கங்கை வெள்ளந் தரித்ததென்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைந்ததென்னே
அதன்மேற் கத நாகங் கச்சார்ந்ததென்னே
மலைக்குந் நிகர் ஒப்பன வன் திரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிக் கொண்டு
அலைக்குங் கடலங்கரை மேல் மாகோதை
அணியார் பொழில் அஞ்சைக் களத்து அப்பனே
உரை:
மலைகளூக்கு நிகர் ஒப்பான வலிய பெரிய அலைகள் வலிந்து தாக்கி, வலம்புரிச் சங்கு கொண்டு இசைப்பது போல் மாகோதை எனும் கடலங்கரை மேல் இருக்கும் அழகுகள் நிறைந்த பொழில் சூழ நிற்கும் திருவாஞ்சைக் களம் எனும் திருக்கோயிலில் குடிகொண்டு அருள் பாலிக்கும் அப்பனே ! நீ எந்த ஆழமான உன் அருள் விளையாட்டுகளை விளக்குவான் வேண்டி, தலைக்கு கபால மாலை அணிகின்றாய், நீண்ட உன் சடை மேல் ஆகாய கங்கையை தரிக்கின்றாய்? மேலும் கடுங்சினப் புலியின் தோலை உரித்து இடையில் உடுத்தி ஆடுவதோடு ஆங்கே கடுஞ் சின பாம்பையும் கச்சையாகக் கொண்டிருப்பதென்ன? யாதை உணர்த்த நீ இவ்வாறான வேடங்களை தரித்து மக்கள் காண வெளிப்படுகின்றாய்?
இங்கு பல சிவ வேடங்களின் உட்பொருள் யாது என்று வினாவப்படுவதைக் காண்க, இத்தகைய பொருளாய்வுகள், ஆழ்வுளக் கனா ஆய்வு (Hermeneutic Semiotics) போன்றவை. தலைக்குத் தலைமாலை அணிதல் இறைவன் ஆணவத் திமிரின் மக்களுக்கு ப்ல சோதனைகளைத் தந்து செருக்கின் சிரசினைக் கொய்து போக்கி தன் தலை,ஆலையாக அணிந்து அடக்கத்தின் புதிய சிரிசினை மகிழச் செய்வதாகும்;
இயற்கையிலும் சிவபோதகம் உண்டு-- ஆங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைக் ஞானப்பார்வையாகிய நுதல்விழிப்பார்வையில் காண, ஆங்கு சிவக் கூத்து நடந்துகொண்டிருப்பதை அனைவரும் காணலாம. இவ்வாறு கண்டு மகிழ்ந்தவர் அப்பர் பெருமான். கீழ்வரும் பாட்டில் அது நலமே வெளிப்படுகின்றது.
4:25
1.
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது
காதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.
உரை:
அழகிய இளம்பிறையை தலைமாலையாக அணிந்து சந்திரசேகரனாக தன்னை வெளிபடுத்தி அருளும் சிவபெருமான் அவனது இடப்பாதியாக இருக்கும் மலையமான் மகளாகிய பார்வதியோடு இணந்திருப்பதை ஞானக் கண்ணில் கண்டு பாடியவாறு , அர்ச்சனைக்கு வேண்டியது பூக்களும் சுத்த நீராகிய தீர்த்தமுமே என்று கொண்டு அவற்றை சுமந்தவாறு செல்லும் நல்ல அடியார் கூட்டத்தையேப் பின்தொடர்ந்து அவர்கட்கு பின்னேயே செல்வேன். இப்படி அடியார்களுள் ஒருவனாக, அகம்பாவத்து எவ்வித சேட்டையுமின்றி, நான் இருக்கின்றேன் எனக் காட்டும் சுவடுகள் யாதும் விடாது ஐயாறு எனும் சிவத்தலத்தை அடைகின்ற போது வழியில் ஓர் இளம் பெண்யானைமேல் காதல் கொண்டதாய் ஓர் களிறு வருவதைக் கண்டேன். அதுபொழுது ஊனக் கண்ணால் காண்டற்கு அரிதாகிய சிவபெருமான் நாதவிந்துக்களை பெண்னென ஆணென உயிரினங்கள் எழுமாறு அசைத்தாடும் ஆனந்தத் தாண்டவத்து திருப்பாதங்களை ஞானக்கண்ணிற் கண்டேன்; அதுவரையிலும் நான் கண்டறியாதிருந்த ஆழ் உண்மைகளைக் கண்டு மகிழ்ந்தேன்.
இங்கு இயற்கை நிகழ்ச்சிகளின் ஆழத்தில் புதையுருவாக சிவசக்தி ஆனந்தத் தாண்டவம் நடப்பதை முதலில் காணாதிருந்து பின் இறையருளால் கணடுவந்து வியந்து பாடுகின்றார் அப்பர் பெருமான்.
இவ்வாறு இன்னும் பல. வரும் படலங்களில் மேலும் பல கூறுகளைக் காண்போம்.
தொடரும்