51. MIRROR தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல்கள் முகம் பார்க்கும் கண்ணாடி பற்றிக் குறிப்பிடுகின்றன.
52. ORNITHOLOGY வானத்திலுள்ள மழைத்துளிகளையே உணவாக உட்கொள்ளும் சாதகப்பறவைகள் பற்றி சங்க இலக்கியம் கூறுகிறது. பூமியில் இறங்காமல் பறந்து கொண்டே வாழ்க்கை நடத்தும் பறவைகள் பற்றி பறவையியல் வல்லுநர்கள் (ORNITHOLOGISTS) இப்பொழுது எழுதுகின்றனர்.
53. அ. BIOLOGY புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்பது பழமொழி. இவ்விரண்டும் ஒரே குடும்பத்தைச் (CAT FAMILY) சேர்ந்தவை என்பது நவீன விலங்கியலாரின் கூற்று. தமிழ்ப் பழமொழி இவ்விரண்டுக்கும் இடையேயுள்ள வேற்றுமைக்குணம் பற்றிப் பேசினாலும் இரண்டையும் இணைத்துப் பேசுவதிலிருந்து புலி-பூனை உறவினைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆ. மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்’ என்று வள்ளுவர் ஒரு அதிசயச் செய்தியைக் கூறுகிறார். கவரி (செளரி)மானின் மயிரை சாமரத்திற்காக வெட்டி விடுவார்கள் போலும். அப்படி வெட்டப்பட்டால் அது உயிர் வாழாது என்ற செய்தி ஆராய்ச்சிக்குரிய செய்தி.
இ. அன்னப்பறவையிடம் பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் அது பாலை மட்டும் குடித்துவிட்டுத் தண்ணீரை வைத்துவிடும் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இதையும் விஞ்ஞானமுறையில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
நாகப்பாம்புகளிடம் மாணிக்கமணி (GEM) இருக்கும் என்றும் இரவினில் இதை வெளியே கக்கி அதன் ஒளியில் பாம்புகள் இரை தேடும் என்றும் தமிழ் இலக்கியம் பாடுகிறது. சங்க இலக்கியமும் சமஸ்கிருத நூல்களும் பகரும் இச்செய்தி ஷேக்ஸ்பியர் நாடகத்தில் கூட உள்ளது. இந்தியர்களால் ஐரோப்பா வரை ஏற்றுமதி செய்யப்பட்ட இச்செய்தியையும் அறிவியல் முறையில் ஆராய்வது அவசியம்.
உ. இருதலைப்புள் (இரண்டு தலைகளுள்ள பறவை) பற்றியும் சங்க இலக்கியம் பேசுகிறது.
54. ARTIFICAL LIMB உடல் ஊனமடைந்தவர்களுக்கு ஆபரேஷன் செய்து செயற்கை உறுப்புகளைப் பொருத்துமளவுக்கு மருத்துவ அறிவு வளர்ச்சி பெற்றிருந்தது. தவறாக ஒரு வீட்டின் கதவைத் தட்டிய குற்றத்திற்காக தனக்குத் தானே கையை வெட்டிக்கொண்ட பாண்டிய மன்னனுக்குப் பொன்னாலான கை பொருத்தப்பட்ட செய்தியைத் தமிழ் இலக்கியத்திலிருந்து அறிகிறோம். சரகர், சுஸ்ருதர், போன்றோர் செயற்கை மூக்குப் பொருத்தும் முறையை வடமொழி நூல்களில் விளக்கியுள்ளனர். இன்றும் கூட ஜெய்ப்பூரில் தயாராகும் செயற்கைக்கால்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை பி.பி.சி. (Tomorrow’s World) நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்கள்.
55. MOON & EARTH தமிழில் சந்திரனுக்கு ‘நிலவு’ என்றும் பூமிக்கு ‘நிலவுலகம்’ என்றும் சொற்கள் உள்ளன. உண்மையில் பூமிக்கும், சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சூரிய மண்டலம் தோன்றிய பொழுது நிலவும் பூமியும் ஒரே நேரத்தில் தோன்றியது என்று ஒரு சாராரும், பூமியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியே நிலவு என்று ஒரு சாராரும் எங்கோ வானத்தில் திரிந்து கொண்டிருந்த ஒரு குட்டி கிரகத்தை பூமி கவர்ச்சி சக்தியால் இழுத்து நிலவாக்கி விட்டதென்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். எப்படியாகிலும், நிலவு—நிலவுலகம் என்ற சொற்கள் பூமி—சந்திரன் தொடர்பை வலியுறுத்துவதாக உள்ளன.
மேலும் சங்க இலக்கியத்தில் ஒரு உவமை வருகிறது. முழு நிலவு நாளன்று கடல் பொங்குவதை சங்கப் புலவர்கள் அடிக்கடி உவமையாகப் பயன்படுத்துவதால் அவர்கள் இவ்விஷயங்களை நன்கு கவனித்து வந்தனர் என்பது புலனாகிறது.
கிரகணம் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியத்தில் உள்ளன. பாமர மக்களுக்குப் புரிவதற்காக நிலவைப் பாம்பு விழுங்குவதாகக் கூறுவது இலக்கிய மரபு. ஆனால் பாம்பு எனப்படும் ராகு, கேது ஆகிய கிரகங்கள் இரண்டும் நிழல்கள் என்பதை சோதிட நூல்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
56. GERONTOLOGY ஒரு மனிதனுக்கு நரையும், மூப்பும் ஏன் வருகின்றது? நீண்ட காலம் உயிர் வாழ்வது எப்படி போன்றவற்றையும் தமிழன் சிந்தித்து எழுதி வைத்துள்ளான். பிசிராந்தையார் என்ற புலவர் (புறம் 191) தனது தலைமுடி வயதான காலத்திலும் நரைக்காததற்குக் காரணம் கூறுகின்றார். கவலையற்ற வாழ்வு, நரையையும், மூப்பையும் தவிர்க்கும் என்பது நம் முன்னோர் கண்ட முடிவு. இன்று கவலையே(Stress) பல நோய்களுக்குக் காரணம் என்பதை மருத்துவ நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
இன்றைய அறிவியல் புத்தகத்தைப் புரட்டினால் நீண்ட காலம் உயிர்வாழக்கூடிய பிராணி ஆமை என்பதை அறிய முடியும். சுமார் 300 ஆண்டு காலம் உயிர் வாழும் ஆமை. இதை அறிந்து தானோ என்னவோ திருவள்ளுவர், ‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து’, என்று பாடினார். ஆமை தனது ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வது போல ஒருவன் புலன்களை அடக்கினால் அது அவனுக்கு இனி வரும் பிறவிகளுக்கெல்லாம் பாதுகாப்பாக அமையும் (குறள் 126) என்பது இதன் பொருள். ஐம்பொறிகளை அடக்கினால் அது நீண்டகாலம் (ஏழு பிறவிகள்) வாழ உதவும் என்பதற்கு ஆமையை உவமையாகத் தேர்ந்தெடுத்தது என்ன பொருத்தம். இதே கருத்து பகவத் கீதை, திருமந்திரம், மனுதர்ம சாஸ்திரம் ஆகியவற்றிலும் உள்ளது.
57. SUBMARINE FIRE கடலுக்கடியில் தீ இருப்பதாகவும் உலகம் அழியும் ஊழியக்காலத்தில் இந்தத் தீ கடலுடன் பொங்கி எழும் என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன. இன்றைய தினம் கடலுக்கடியில் எரிமலைகள், வெப்ப நீரூற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகளைப் பார்க்கிறோம். ஆந்திரத்தில் புயல் வீசி, 10,000 பேர் இறந்த போது பேரலைகளுடன் தீயும் எழுந்து வந்து மரங்களையும் மனிதர்களையும் கருக்கியதாகப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இது பற்றிப் பல கொள்கைகள் வெளியாகின. பேரலைகள் வரும்போது மின்சக்தி உண்டாகி ஒளியும் வெப்பமும் எழும் என்று கூறப்படுகிறது. ஆகவே, கடலுக்கடியிலுள்ள எரிமலைகளையோ கடல் அலையில் எழுந்த தீயையோ தமிழர்கள் ஊழித்தீ என்று குறிப்பிட்டதாகக் கருதலாம்.
58. TOAD IN THE STONE கல்லுக்குள் தேரை (தவளை) இருப்பதாகத் தமிழ் இலக்கியத்தில் உவமைகள் உள்ளன. இப்படி இருப்பது உண்மையே என்றும் ஆனால் இவை அபூர்வமானவை என்றும் ஆர்தர்.சி.கிளார்க் எழுதிய மர்மச் செய்திகள் என்ற புத்தகத்திலிருந்து (Chronicles of the strange and mysterious by Arthur C. Clarke) அறியலாம்.
59. OCEONOGRAPHY கடல் நீர் தான் ஆவியாகி மழையாகப் பெய்கிறது—இதற்கு சூரிய ஒளி துணை செய்கிறது என்ற விஞ்ஞான உண்மை தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற இடங்களில் வருகின்றது. ஆனால் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று பரணரும் (பதிற்றுப்பத்து 45-19) மாங்குடி மருதனும் (மதுரைக் காஞ்சி) கடல் பற்றிய மேலும் ஒரு உண்மையையும் கூறுகின்றனர். எவ்வளவு கடல்நீர் ஆவியாகி மழையாகக் கொட்டினாலும் அவைகள் நதிகளாக ஓடி இறுதியில் கடலையே அடைகின்றன. இப்படி எவ்வளவு நதிகள் நீரைக்கொட்டினாலும் கடல் நிறைவதில்லை---அதாவது எல்லை தாண்டாமல் ஒரே அளவில் தண்ணீர் உள்ளது. இதை ‘மழை கொளக்குறையாத, புனல் புக நிறையாதது’ என்ற ஒரே வரியில் அழகாகக் கூறுகிறார் பரணர். கடலின் எல்லை தாண்டாத் தன்மை, கடலிலுள்ள முத்து, பவளம் போன்ற மணிகள், கடலுக்கடியில் தீ, கடல் காற்றினால் கப்பல் செலுத்தல், கடலில் கடக்கும் ஆறுகள் (ஆயிரம் முக கங்கை பற்றி மாங்குடி மருதனும், அப்பரும் குறிப்பிடுகின்றனர்.) கப்பலைக் கவிழ்க்கும் மீன்கள், பிராணிகள்—ஆக இப்படி எத்தனையோ செய்திகளைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வைத்துப்பார்க்கையில்தான் அவர்களுடைய விஞ்ஞான அறிவைச் சரியாக எடை போட முடிகிறது.
60. DECIMAL SYSTEM நீட்டல் அளவை, முகத்தல் அளவை, ஆகியவற்றில் பத்தின் மடங்குகளைப் பயன்படுத்தும் முறை இந்தியாவில் தான் முதலில் தோன்றியது. நூறாயிரம் (One hundred thousand—lakh) என்னும் சொல் சங்க இலக்கியங்களிலும் உள்ளன. பரிபாடலில் (3:34—40) 1,10,100,10,000 என்று எண்கள் உயர்வதைக் காணலாம். பிறகு எண் வரம்பறியா என்று Infinity பற்றியும் கூறுகிறார். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் மொழி, இலக்கணம், சமய சிந்தனை, அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் ஒரு சமுதாயம் இந்த அளவு முன்னேறியிருக்க வேண்டுமானால் அது ஓரிரு நாட்களிலோ, ஒரு நூறு, இருநூறு ஆண்டுகளிலோ நடைபெறக்கூடியதல்ல. மானுட சிந்தனையின் வளர்ச்சி பற்றிக் கற்போர் இதை நன்கறிவர். ஆகவே கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்பது மிகையல்ல “உண்மை இது வெறும் புகழ்ச்சியிலை” (புறம் 18-லும் “ஒன்று அடுக்கிய கோடி” என்ற வரி உள்ளது. குறளும் அடுக்கிய கோடி என்று குறிப்பிடுகிறது.)
61. GEOLOGY & GEOGRAPHY தமிழர்களின் புவியியல் அறிவு வியத்தற்குரியது. வட இமயம், தென்குமரி, கங்கை, பாடலிபுத்திரம், மதுராபுரி, கங்கை சங்கமம் ஆகும் வங்காளம், மற்றும் வடபகுதியை ஆண்ட மெளரியர்கள் (மோரியர்கள்) நந்தர்கள் ஆகியன பற்றி சங்கப்புலவர்கள் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். நாட்டின் முப்புறமுள்ள கடல்கள் பற்றியும் கடல் கடந்த தீவுகள், அங்கிருந்து வரும் கப்பல்கள், சரக்குகள் பற்றியும் குறிப்பிடுகின்றனர். ஒரு காலத்தில் குமரிக்கோடும் மலைத்தொடரும், பஃறுளி என்னும் ஆறும் கடலில் மூழ்கியதையும் அப்பொழுது தென்மதுரை, கபாடபுரம் முதலிய நகரங்கள் அழிந்ததையும் (Geological changes) குறிப்பிடத் தவறவில்லை.
62. அணுசக்தி சங்க இலக்கியத்தில் அணுசக்தி பற்றிய குறிப்பு இல்லாவிடினும் திருக்குறளைப் பாராட்டும் திருவள்ளுவமாலையில் ‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ என்ற வரிகளும் ‘அணுவைத்துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ என்ற வரிகளும் அணுசக்தி பற்றிய அறிவு தமிழர்களிடம் இருந்ததைக் காட்டுகிறது. திருமூலரும் கூட ஒரு தலைமுடியைப் பல்லாயிரம் கூறிடும் விஷயம் குறித்துப் பாடுகிறார். அணுவைத் துளைத்தால் அதில் ஏழ்கடல் அளவுக்கு சக்தி கிடைக்குமென்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றனர்.
இதுபோல் எத்தனையோ செய்திகள் அத்தனையும் எழுத இடம் போதாது. விரிவஞ்சி விடுக்கிறேன்.
எழுதியவர் ச.சுவாமிநாதன்.
--Geetha Sambasivam 00:09, 19 டிசம்பர் 2011 (UTC)