இது மணமகன் காசி யாத்திரை செல்லும் போது எடுத்த படம். காசி யாத்திரை என்பது அனைத்துத் தரப்பு இந்துத் திருமணங்களிலும் பொதுவான ஒன்று. காசி யாத்திரை, சப்தபதி, மணமகளின் சகோதரன் கையால் பொரி வாங்கி இடுவது போன்றவையும் அம்மி மிதித்தலும் எல்லாத் திருமணங்களிலும் உண்டு. முக்கியமாய்த் தாலி கட்டினாலும் திருமணம் முடிந்ததாய் அர்த்தம் இல்லை. சப்தபதி முடிந்தால் தான் திருமணம் முடிந்ததாய்ச் சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் அர்த்தம். அதுவரை திருமணம் ஆனதாய்க் கணக்கே இல்லை.
இடப்பக்கம் இருக்கும் இந்தப் படம் ஊஞ்சல் ஆடும்போது எடுத்தது. ஊஞ்சலில் பெண்ணையும், மாப்பிள்ளையையும் அமர வைத்து ஊஞ்சல் பாட்டுகள் பாடிப் பின்னர் சமைத்த சாதத்தில் குங்குமம், மஞ்சள் கலந்த உருண்டைகளால் இருவருக்கும் திருஷ்டி கழிப்பார்கள். பின்னர் பெண்ணின் தாயார் குடம்/சொம்பு எதிலாவது ஒன்றில் நீரை நிரப்பி அதை ஊற்றிக்கொண்டே சுற்றிவர, ஒரு அடுக்கினுள் அரிசியை நிரப்பி அதில் குத்துவிளக்கை ஏற்றித் தன் புடவைத் தலைப்பால் மூடியவண்ணம் மணமகனின் தாய் சுற்றி வருவார். பின்னர் பெண்ணின் கையில் அவள் மாமியாரும், பையனின் கையில் அவர் மாமியாரும் தேங்காய் வெற்றிலை, பாக்கு, பணம் கொடுத்ததும் இருவரும் வலக்காலை எடுத்து வைத்து மண மேடைக்கு வருவார்கள். மணமேடைக்கு வரும் முன்னர் தாங்கள் வாங்கிய வெற்றிலை, பாக்கை நாதஸ்வரக் காரர்களிடம் கொடுப்பார்கள்.

இது திருமணத்தில் தாலி கட்டிய பின்னர் மணமகளும் மணமகனும் சேர்ந்து செய்யும் சடங்கிலே எடுக்கப் பட்ட புகைப்படம். இதோடு சேர்ந்த இன்னொரு படத்தை நாளை சேர்க்கிறேன். இன்னிக்குச் சரியா வரலை. மணமகள் அருகே அமர்ந்திருக்கும் சிறுமிகள் அனைவரும் இன்று திருமணமாகி அவங்க அவங்க வாழ்க்கையிலே செட்டில் ஆகிவிட்டார்கள். கல்யாணப் பெண்ணை யார்னு கண்டு பிடிக்கிறவங்களுக்கு இங்கே வந்து பார்க்கச் சுட்டி தனி மடலில். :D
இடப்பக்கம் இருக்கும் இந்தப் படம் திருமணப்பெண்ணைச் சிரிக்க வைக்க அவள் தாய் மாமன் போட்ட பந்தயத்தில் தன்னை அறியாமல் பெண் தோற்றதைக் காட்டும் நிகழ்வு. போட்டோகிராபரும் மிகவும் நண்பர் என்பதால் உடனே க்ளிக்!

அதே பெண், அதே மாப்பிள்ளை. அப்போதெல்லாம், (எங்க வீடுகளில் இப்போவும் தான்) திருமணம் முடிந்து மாலைதான் வரவேற்பு நிகழ்ச்சி. திருமண மந்திரங்களிலும் சடங்குகளிலும் களைத்திருக்கும் மணமக்கள் இந்த வரவேற்புக்கு உட்காருவது இப்போ மாதிரி இரவு எட்டு மணிக்கெல்லாம் இல்லை. மாலை ஐந்து மணிக்கே. நலுங்கு முடிந்து உடனே வரவேற்புக்குத் தயாராகணும். அதுக்கப்புறம் இரவு சடங்குகள் இருக்கின்றன. இப்போ மாதிரிக் காலம்பரவே புரோகிதர் அருந்ததியைக் காட்டிட்டு ஓட மாட்டார். இரவு சடங்கின் போது வெளியே அழைத்துச் சென்று விண்ணில் சப்த ரிஷி மண்டலத்தையும், அவற்றினுள் வசிஷ்டருக்கு அருகே மட்டும் காணப்படும் அருந்ததியைக் காட்டி அது தெரிகிறதா? என்று நிச்சயம் செய்து கொண்டே மற்றச் சடங்குகள் செய்ய உள்ளே வர முடியும். இங்கே மணப்பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் குளிர்பானம் எடுத்து வருவது மணமகளின் தம்பி. மற்றப் படங்களையும் வலை ஏற்றினதும் இந்தப் பக்கம் நிறைவடையும். நன்றி.
--Geetha Sambasivam 09:12, 15 டிசம்பர் 2010 (UTC)