1.திருவரங்கம்
1.வண்டார்க்கும் சோலை வரிமதில்சூழ் திருவரங்கம்
கண்டார்கள் உய்திபெற அரவணைமேல் கண்வளர்வான்
கொண்டேத்தும் அடியவர்தம் குலங்காக்கும் நலமுடையான்
விண்தோயும் கோபுரம்சூழ் வித்தகனை வணங்குதுமே.
2.ஏழ்மதிலும் ஏழுலகாய் எண்திசையும் விரிந்திருக்கப்
பாழ்நரகில் அழுந்தாமல் காக்கின்ற பரம்பொருளாய்
வாழ்கின்ற பேரரங்கன் வளவயலும் பூங்காவும்
சூழ்கின்ற திருவரங்கச் சோதியினை வணங்குதுமே.
3.நவதீர்த்தம் உள்ளபதி ந்ம்பெருமான் நாமம்சொல்
தவத்தோர் பலருக்குத் தரிசனங்கள் தந்தபதி
பவவினைநோய் அகற்றுமொரு பரந்தாமன் திருவரங்கம்
உவகையுடன் வணங்குபவர் உலகேத்த விளங்குவரே.
4.புண்ணியர்கள் போற்றுமொரு பூலோக வைகுண்டம்
பண்ணியல்சேர் பிரபந்தம் பாடியவர் பதினொருவர்
விண்ணியல்வார் வந்துதொழ வியந்துருத்தி இடைத்துயிலும்
திண்ணியதோள் திருவரங்கன் திருவடிகள் பணிந்திடுமே.