சோழர் கால சமயம் பகுதி -3- வேத கால சபைகள்மரபு விக்கி இருந்துஎழுத்து: டாக்டர் பத்மாவதி
ஆரியர்களால் போற்றப் பட்ட தெய்வங்களுள் ஒன்று பிரஜாபதி என்பதை வேத, பிராம்மணங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அத்தெய்வத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும், அவசியம் பற்றியும் ஆராய்வது பல ஆய்வுகளுக்கு உதவும்.
விதாதா: கங்கை நதிப் பள்ளத்தாக்கில் குடியேறி வாழ்ந்த ஆரியர்கள் ஏற்படுத்திக் கொண்ட கூட்டமைப்பு விதாதா என்றழைக்கப் பட்டது. இந்த அமைப்பில் அவ்வின மக்களின் மூத்தவர்கள் இடம் பெற்றிருந்தனர். விதாதா என்ற இந்தச் சபை.
1. அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில் யாகம் செய்யும் பணியையும் 2. தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் பணியினையும், 3. அம்மக்களுக்கு அபயம் தரும் அமைப்பாகவும் 4. தங்கள் செல்வங்களைப் பங்கீடு செய்து கொள்ளும் இடமாகவும் செயல்பட்டு வந்தது.*1
அதாவது ஆரியர்களின் அருகாமையிலும் சுற்றிலும் பல்வேறு ஆரியரல்லாத இனக்குழு மக்களும் வாழ்ந்தனர்.இவ்வினக் குழுக்களிடையே நடந்த சண்டை, கொள்ளை போன்றவைகள் ஆரியர்களையும் பாதித்தன. ஆரியர்கள் அவ்வினக்குழு மக்களால் தோற்கடிக்கப் பட்டனர். இந்நிலையில் தஙகள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தேவைப்பட்ட போதுதான் அரசன் ஒருவனை நியமித்துத் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள் ஆரியர்கள். இந்த சம்பவத்தைத் தான் ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்ற பொருளில் கடவுள்கள் என்றும் பிற இனக்குழுக்கள் பேய்கள் என்றும் வர்ணிக்கிறது அய்த்ரேய பிராம்மணம்.
பிரஜாபதி:
சமிதி--சபா
சமிதி, சபா என்ற இரு அமைப்புக்களும் விதாதா என்ற மூல அமைப்பிலிருந்து தோன்றியது. ஆதலால் சமிதி, சபா இரண்டையும் விதாதா பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, பிரஜாபதியின் தலைமையில் ஆரியர்களாகிய கடவுள்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசன்-சமிதி, சபா இரண்டிற்கும் வணக்கம் செலுத்துவான். அப்போது, பிரஜாபதியின் இரு பெண்களாகிய சமிதியும், சபாவும் ஒற்றுமையுடன் எனக்கு உதவட்டும் என வேண்டிக் கொள்வான் என்கிறது சதபத பிரம்மாணம். சமிதி, சபா இரண்டையும் பிரஜாபதியின் இரு பெண்கள் என அதர்வ வேதமும் வர்ணிக்கிறது.
விதாதா என்ற தெய்வீக அமைப்பு, சமிதி, சபா என்ற இரண்டையும் பெற்றெடுத்ததாகக் கூறப்படுவதையும் பிரஜாபதியின் இரு பெண்களென சமிதி, சபா இரண்டும் வர்ணிக்கப் படுவதையும் ஒப்பு நோக்க வேண்டும்.
கடவுள்களாகிய ஆரியர்கள் ஒன்றிணைந்து யாகம் செய்து வழிபட்டது விதாதா என்ற சபையின் கீழ். ஆதலால் அந்த சபை தெய்வீகமாகக் கருதப் பட்டு, பிரஜாபதி என்னும் தெய்வமாக உருவகப் படுத்தப் பட்டிருக்கிறது.
ஆரியர்களாகிய கடவுள்கள் இந்த விதாதா என்ற சபையின் கீழ் ஒன்றிணைந்து அரசனைத் தேர்ந்தெடுத்ததால் தான் பிரஜாபதியின் தலைமையில் அரசனை நியமித்ததாகக் கூறப்பட்டுள்ளது. எனவே விதாதாவாகிய பிரஜாபதியின் இரு பெண்களே சபா, சமிதி என்பது உறுதிப் படுகிறது.
விதாதா--என்ற சபையின் வளர்ச்சியே சமிதி, சபா ஆதலாலும், அதற்குக் கட்டுப்பட்டவன் அரசன் என்பதாலும் அதற்கு வணக்கம் செலுத்தினான். அரசனை நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் இந்த சபைகளுக்கே முழு உரிமை உண்டு. அரசன் கண்டிப்பாக சமிதி, சபா கூட்டங்களில் பங்கு பெறல் வேண்டும். இந்த அரசன் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவனேயொழிய அரசனுக்காக மக்களல்லர் என்பதும் பெறப்படுகிறது.
அப்பர் தேவாரத்தில் குடந்தைப் பதிகத்தில் விதாதாவின் தலையைச் சிவபெருமான் கிள்ளியது பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆகவே 'விதாதா' என்ற சபையை அப்பர் பிரம்மாவாகக் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது.*4 இதே விதாதாவை முந்தைய பிராமண நூல்கள் பிரஜாபதி என்கின்றன. விதாதா--என்ற சபையில் நடந்த யாகத்தின் மூலம் அக்னி வணங்கப் பட்டதால் வைதீகப் பிராமணர்கள் உருவ வழிபாட்டைக் கொண்டிருக்கவில்லை. உருவமில்லாத பிரம்மத்தையே (முழுமை) அவர்கள் அக்னியின் மூலம் வழிபட்டார்கள். இந்த பிரம்மம் பிரம்மாவாயிற்று. அதனால் தான் பிரம்மாவுக்கென்று தனிக் கோயில்கள் பரவலாக எடுக்கப் படுவதில்லை போலும்.
உயிரினங்களை யெல்லாம் காக்கும் இறைவன் என்ற பொருளில் பிரஜாபதி என உருவகப் படுத்தப்பட்ட விதாதா செல்வத்தின் அறிகுறியாகவும் கருதப் பட்டது. விதாதாவால் நியமிக்கப் பட்ட அரசன் வாஜபேயம், ராஜசூயம் போன்ற யாகங்கள் செய்வதன் மூலம் அவன் பிரஜாபதியாகிறான். அவன் ராஜசூய யாகம் செய்ய வேண்டுமாயின் அதற்கு முன்னர் நான்கு திசைகளிலும் போருக்குச் சென்று வெற்றி பெற்றவனாக இருத்தல் வேண்டும். அதன் பின்னர் செய்யப் படும் யாகமே ராஜசூய யாகமாகும். இதனைச் செய்துவிட்ட பின் மன்னன் பிரஜாபதியாக உயர்கிறான். ஏராளமான போர்களில் வெற்றி கொண்ட மன்னன், அங்கிருந்து கவர்ந்து வந்த ஏராளமான பொருட்களை சமிதி, சபா மூலம் பங்கீடு செய்வான்.இவ்வாறு செல்வத்திற்கும் வீரத்திற்கும் அதிபதியாக விளங்கிய அரசன் பிரஜாபதியாகவே கருதப் பட்டான். 'பிரஜாபதியின் வெளித்தோற்றமாக மன்னன் விளங்குகிறான்.' --- என்று சதபத பிரம்மாணம் கூறுகிறது. பிரஜாபதி என்றால் உயிர்களைக் காப்பவன் என்று பொருள். செல்வத்திற்கும் வீரத்திற்கும் அதிபதியாக விளங்கும் அரசன் அவற்றின் மூலம் உயிர்களைக் காப்பவனுமாவான்.
இவ்வாறு ஆரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், வீரத்துடன் அருகாமையிலுள்ள பிற இனக்குழுக்களிடமிருந்து அவர்களைக் காத்தும், பொருள்களைக்கவர்ந்தும் ஆரிய இனமக்களுக்கு அளித்துக் காத்தல் தொழில் புரிந்து வந்தான். வெற்றிக்கு மேல் வெற்றிகளைக் குவித்து வாஜபேய ராஜசூய யாகங்களையும் செய்து பிரஜாபதியின் மறுவுருவாகாவே கருதப்பட்டுவிட்டான் என்பது தெளிவாகிறது. சதபத பிரம்மாணம் கூறும் இக்கருத்து, "திருவுடை மன்னனைக் காணிற் திருமாலைக் கண்டேனே" என்ற ஆழ்வார் பாடல் வரியோடு ஒப்பு நோக்கத் தக்கதாக உள்ளது.
பிரஜாபதியின் பெண்கள்
சுபர்ணா; தொடர்ந்து நீரைப் பங்கிட்டு அளிப்பவள்
சாவித்ரி: செல்வத்தைப் பங்கீடு செய்து அளிப்பவள்
நிலமகளே நிலத்திற்குத் தொடர்ந்து நீரை அளித்துத் தானும் நீர்மயமாகத் திகழ்பவள். திருமால் வராக அவதாரம் எடுத்துக் கடலுக்கடியிலிருந்து நிலமகளை வெளிக்கொணர்ந்த கதையும் மாம்மல்லபுரச் சிற்பமும் நாமறிந்ததுதான்.
செல்வத்தைக் காப்பவளும் அளிப்பவளும் செல்வமகளாகிய லட்சுமியே..
எனவே சுபர்ணா, சாவித்ரி இருவரும் நிலமகளும் செல்வமகளுமேயாவர். இவர்களையே பூதேவி, ஸ்ரீதேவி என்றழைக்கிறோம். ஆக, நிலத்தைப் பங்கீடு செய்த சபையாகிய சமிதியும், செல்வத்தைப் பங்கீடு செய்த சபையுமே பூதேவி, ஸ்ரீதேவி என்று உருவகப் படுத்தப் பட்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆரியர்களால் நியமிக்கப் பட்டு, போரில் சிறந்து விளங்கி, செல்வத்திற்கும், வீரத்திற்கும் அதிபதியாகி, வாஜபேய, ராஜசூய யாகங்கள் செய்து பிரஜாபதியான அரசன், தான் வெற்றி பெற்று அடைந்த செல்வங்களையெல்லாம் ஆரியர்களுக்கு சமிதி--சபா மூலம் பங்கிட்டு அளிக்க வேண்டும் என்னும் அரச தர்மம் நிலை நாட்டப் பட்டிருந்ததை முன்னரே கூறினோம். ஆகவே அவன் போரின் போது கவர்ந்த செல்வங்களும் நிலங்களும் அவனுக்கே சொந்தமாவது முறையல்ல என்பதும் பெறப்படுகிறது. அவனால் கவரப்பட்ட பொருட்செல்வங்களும் வெற்றி கொள்ளப் பட்ட நிலங்களும் சமிதி, சபா மூலம் பங்கீடு செய்யப் பட்டதால் அவை இரண்டையும் சுபர்ணா, சாவித்ரி என உருவகப் படுத்தி அவனால் அனுபவிக்க முடியாத அவனது பெண்களாகக் கூறினர் போலும்.
பிரஜாபதியின் முறையற்ற செயல்
இதே கதை சதபத பிரம்மாணத்தில் சற்று வித்யாசமாகக் கூறப்பட்டிருக்கிறது. பிரஜாபதியின் முறையற்ற செயலைக் கண்டிக்கும்படி மிருகங்களின் தலைவனான ருத்ரனை அனுப்பினார்கள். ருத்ரன் தனது அம்பால் பிரஜாபதியைத் தண்டித்த பின்னர் கடவுள்களின் கோபம் தணிந்தது. பிரஜாபதியைக் குணப்படுத்தினார்கள்.
பிரஜாபதியைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசிய அதே பிரம்மாணங்கள், இவ்வாறு இழிவாகக் கூறும் காரணமும் மிக முக்கியமானதாக இருத்தல் வேண்டும்.
விதாதா--சமிதி, சபா ஆகிய சபைகளுக்குக் கட்டுப்பட்டிருந்த அரசன் தன் வீரத்தையும் செல்வத்தையும் அவர்களுக்கே அளித்தான். அவர்களால் நியமிக்கப் பட்டிருந்த காரணத்தினால், ஆனால் காலப் போக்கில் மன்னனின் புகழும் பெருமையும் ஓங்க ஆரம்பித்த பின்னர், அவனது வீரத்தின் இன்றியமையாத் தன்மை ஏற்பட்டு விட்ட பின்னர் மேற்கூறிய சபைகள், தாங்கள் நினைத்தாலும் அவனைத் தூக்கியெறிந்துவிட முடியாது என்ற நிலையில் தன் மேலாதிக்கத்தை அச்சபைகளின் மேல் புகுத்தித் தன் வெற்றியின் பயன்களாகிய செல்வங்களையும் நிலங்களையும் தன் புகழுக்காகவும் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த ஆரம்பித்தான். அதாவது சுபர்ணா, சாவித்ரியாகிய பூமிதேவி, ஸ்ரீதேவி ஆகியவர்களைத் தனக்கே உரிமை கொண்டாடியபோது தான் மேற்கூறிய கதைகள் தோன்றியிருத்தல் வேண்டும். தன் மகளைத் தானே அடைந்தது முறையற்ற செயல் என்று கூறப்பட்டது. அவனது இந்த மனமாற்றத்தைத் தான் அவனது உருவ மாற்றமாகக் கூறப்பட்டது. இதன் பின்னர்தான் க்ஷத்திரியக் கடவுளாகிய விஷ்ணுவுக்கு ஸ்ரீதேவியும், பூதேவியும் இரு மனைவிகளாக ஆக்கப் பட்டிருக்கின்றனர்.
இங்கு நாம் இன்னொரு கருத்தையும் கவனிக்க வேண்டும். பிரஜாபதியின் மகள் தன் உருவத்தை மாற்றிக் கொண்டதைப் பார்த்த பின்னரே, பிரஜாபதியும் தன் உருவத்தை மாற்றிக் கொண்டான். எனவே, சபா, சமிதியின் போக்கு, மாறுபட ஆரம்பிக்கும்போது தான் பிரஜாபதியாகிய மன்னன் தன் போக்கை மாற்றிக் கொண்டான் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.*6
சற்றேறக் குறைய இக்கால கட்டத்தில் தோன்றியவை தமிழக சங்கப்ப்பாடல்கள். ஆரிய இனக்குழுக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசனைப் போலல்லாது, தமிழ் இனக்குழு மக்களிடையே தன் வீரத்தால் வீரயுகத்தில் குறுநிலத் தலைவர்களாகி, அரசர்களாயினர். இவர்கள் ஓரிருவர் மத்தியில் வேத உபநிஷதங்களின் தாக்கம் இருந்திருக்கிறது. உதாரணமாக ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆகியோர் பல வேள்விகளைச் செய்திருக்கிறார்கள். அத்தகைய யாகங்கள் செய்தால் மேன்மையடையலாம் என்ற ஆரியர்களின் நம்பிக்கைக்கு இவர்களும் ஆளானார்கள் என்பது தெரிகிறது.
(இதன் காரணமாகவே பிற்காலத்திலும் கூட மன்னர்கள் தங்களது ஒவ்வொரு வெற்றியின் போதும் அந்தணர்களுக்குப் பழைய மரபின் அடிப்படையில் நிலக் கொடைகள் அளித்தனர்.)
அடிக்குறிப்புகள் 1.Self Government in India--N.B. Pavgee(1980) 2. I bid. p. 45--51 3. I bid. p. 99, 109, etc. 4.அப்பர் தேவாரம், குடந்தைப் பதிகம் 5.I bid p. 127 6. The Vedic Age p. 448 gen. editor R.C. Majumdar, Bharadiya Vidya Bhavan, (1988)
|