சோழர் காலத்திய சமயம்-- பகுதி 5 இராஜேந்திர சோழனும் காதல் பரவையும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எழுத்து: டாக்டர் பத்மா


இராஜேந்திர சோழனும் காதல் பரவையும்


ஒரு காலத்திலே, சோழ நாட்டிலே புகழ் மிக்க வணிகன் கோவலன் என்பவனுக்கும் நாட்டியப் பேரொளி மாதவி என்னும் ஆடலழகி மாதவிக்கும் இடையே உள்ள காதலைப் பாடுகிறது சிலப்பதிகாரமென்னும் மகாகாவியம். அவர்கள் காதலைப் போற்றிப் புகழாதார் இல்லை. பேசாதார் இல்லை. முழங்காத பட்டிமன்றங்களில்லை. இலக்கியத்தில் கூறப்படும் இக்காதலர்கள் உண்மையில் வாழ்ந்தனரா என்பது கேள்விக்குறியாகும். ஆனால் இதோ கி.பி. 11-ஆம் நூற்றாண்டிலே இடைக்காலச் சோழர் வரலாற்றிலே ஒரு மன்னனும் ஆடலழகி ஒருத்தியும் காதல் கொண்டு காதலுக்கோர் இலக்கணம் வகுத்திருக்கின்றனர்.


சிலப்பதிகார மாதவியோ ஆடலிலும் பாடலிலும் அழகிலும் சிறந்தவள். திருவாரூர் பரவையோ--ஆடல் பாடல் அழகு இவற்றில் மட்டுமின்றி திருப்பணிகள் பல செய்வதிலும் ஆலயங்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவதில் நிகரற்றவள். சிலப்பதிகாரத்தில் மணிமேகலை பிறந்தவுடன் தானம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது கோவலனின் கொடைத்தன்மையைப் புகழவே அன்றி மாதவியைப் புகழுவதற்கு அன்று. திருவாரூர் பரவை எடுத்த கற்றளிக்குக் குடமுழுக்கு விழா நடந்த போது அவள் காதலன் சோழ மன்னன் முதலாம் இராஜேந்திரன் அவளைத் தன் அருகில் வீற்றிருக்கச் செய்து தேரில் பவனி வந்தான். அக்காதலர்கள் இருவரும் இறைவனை தரிசித்த இடத்தில் அவர்கள் காதல் என்றென்றும் அமரஜோதியாக நின்று நிலவ மன்னன் குத்துவிளக்கு இரண்டினைக் காதல் தீபமாக எரிய வைத்தான்.


திருவாரூர் வீதிவிடங்கர் கோயிலக் கற்றறியாக்கி அக்கோயில் குடத்திலும் வாய்மடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன் வேய்ந்ததோடு நின்று விடவில்லை. கற்ப அறையின் கதவுகளுக்கும் மண்டபத் தூண்களுக்கும் 42000 பலம் எடையுள்ள செம்பினால் தகடு சாத்தி அழுகு படுத்தினான். 155579 பலம் எடையுள்ள பிரம்மாண்டமான 28 குத்து விளக்குகள் வைத்தான். ஏராளமான ஆயிரக்கணக்கான எடைகளுள்ள ஆபரணங்கள் 428 முத்துக்கள் 7 மாணிக்கக் கற்கள் 36 வைரக் கற்கள், எண்ணற்ற மரகதக் கற்கள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றைப் பரிசளித்தான். பாவை விளக்குகள்--ஒன்றின் பெயர் பச்சைப் பாவை உமை நங்கை என்றும் மற்றொன்றின் பெயர்--பாவை சரியா முலை நங்கை எனப் பெயர் கூறப்பட்டிருக்கிறது. அன்னதானத்திற்குப் பல வேலி நிலங்கள் அளித்தான். சிலப்பதிகார மாதவியோ மன்னன் முன் நடனமாடி தன் முத்துமாலையை விலைக்கு வாங்கிய கோவலனைக் காதலித்தாள். ஆனால் இராஜேந்திரன் பரவை ஆகியோர் காதலோ காதலிக்குக் கோயில் கட்டுமளவு உயர்ந்திருந்தது. விழுப்புரம் அருகே --பரவை ஈஸ்வரமுடையார் ஆலயம் அமைத்து அவ்வூருக்குப் பரவைபுரம் என்றும் பெயர் வைத்தான். இவர்கள் காதல் விலைக்கு வாங்கப் பட்டதல்லவே. அந்தோ! காதலின் மேன்மையைக் கூறுதற்குச் சிலப்பதிகாரம் வரைப் போகிறோம். வேண்டாம். பரவைபுரம் வரை சென்றாலே போதும்.


காதலின் சின்னமாகத் தாஜ்மஹாலைக் கூறுகிறோம். இறந்து போன தன் காதலிக்கு எழுப்பிய சமாதியல்ல--அவள் உயிருடன் இருக்கும்போதே தன் உண்மைக் காதலை அவள் கண்டு களிக்குமாறு அழியாக் கோயில் கட்டினான் இராஜேந்திரன்.


காதலுக்கோர் கோவில்--பரவை ஈஸ்வரமுடையார் கோயிலென்றான். சிலப்பதிகார மாதவிக்கு அவள் காதலன் கோயில் கட்டவில்லை. மாறாகக் கண்ணகிக்குத் தான் ஒரு சேர மன்னன் கோயில் கட்டினான்.ஆனால் திருவாரூர் மாதவிக்கோ (பரவை) அவள் காதலனே கோயில் கட்டிக் கும்பிட்டிருக்கின்றான். அது மட்டுமா இராஜேந்திரன் இறந்த பின்னர் அவன் பெயரில் திருவாரூர் ஆலயத்தில் 'இராஜேந்திர சோழன் திருமண்டபம்' அமைத்துப் பரவை தன் காதலனின் கற்பனையில் மிதந்தாள்.


இராஜேந்திரனும் பரவையும் மட்டும் தங்கள் காதலைப் பரிமாறி அழியாச் சின்னமாக ஆக்கவில்லை. இவனுக்குப் பின் வந்த மன்னர்கள் எல்லாம் இவர்கள் காதலைப் போற்றினர். புகழ்ந்தனர். அதனால் இவர்கள் காதல் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது என்பதை நன்குணர முடியும். தேவரடியார் பெண் ஒருத்தியிடம் மன்னன் கொண்ட காதலை அம்மன்னன் மட்டுமின்றி அவன் வழி வந்தோரெல்லாம் ஏற்றுக் கொண்டு வரலாற்றுச் சின்னமாக ஆக்க நினைத்திருக்கின்றனர் என்றால் இதை விடச் சிறந்ததோ சிலப்பதிகாரக் காதல்??


இராஜேந்திரனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவன் மகன் முதலாம் இராஜாதிராஜன் தன் தந்தைக்கும் அவர் காதலி பரவைக்கும், திருவாரூர் ஆலயத்தில் திருமேனிகள் எடுப்பித்துச் சிறப்பித்து வழிபாட்டிற்கு நிவந்தங்கள் அளித்தான். அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவன் தம்பி 2-ஆம் இராஜேந்திரனும் தன் தந்தைக்கும் பரவைக்கும் திருமேனிகள் எடுத்துப் பரவைபுரத்தில் பரவை ஈஸ்வரமுடையார் ஆலயத்தில் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கும் திருவிழாவிற்கும் நிவந்தங்கள் அளித்திருக்கின்றான் என்பதெல்லாம் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் அறிவர்.


இராஜேந்திரன், பரவை காதலுக்கோர் கோயிலாக -பரவை ஈஸ்வரமுடையார் கோயில் மட்டுமல்ல. அவர்கள் காதலைப் போற்றியவர்கள்--மதித்தவர்கள் இராஜேந்திரனின் மக்கள் இருவர் மட்டுமல்ல, இன்னும் சில கோயில்களுமுண்டு, மன்னர்களுமுண்டு என்பதைக் கூற விரும்புகிறார் இக்கட்டுரையாசிரியர்.


இராஜேந்திரனின் மற்றொரு மகனான அதிராஜேந்திரனின் கல்வெட்டு இவ்வூரில் சிவதர்ம மடம் ஏற்படுத்தி, அபூர்விகளும் மஹான்களும் உணவுண்ண நிவந்தங்கள் அளித்ததைக் கூறுகிறது. அச்சிதைந்த கல்வெட்டில் இராஜேந்திர சோழ விண்ணகராழ்வார் கோயிலிலும் குறிக்கப் பட்டிருக்கிறது. எனவே பரவைபுரத்தில் இராஜேந்திர சோழனால் எடுக்கப் பட்ட பரவை ஈஸ்வரமுடையார் கோயில் மட்டுமல்ல, இராஜேந்திர சோழனுக்காக எடுக்கப் பட்ட கோயிலும் பரவைபுரத்தில் இருந்திருக்கிறது. இக்கோயில் அதிராஜேந்திரன் காலத்தில், அவனாலோ--அவ்வூர் நகரத்தாராலோ எடுக்கப் பட்டிருக்கலாம்.


எனவே இராஜேந்திர சோழனின் மக்கள் நால்வரும் தன் தந்தை ராஜேந்திர சோழன்,--பரவை காதலை ஆதரித்ததோடு மட்டுமின்றி வரலாற்றிலும் நின்று நிலவும்படி செய்திருக்கின்றனர்.


அவர்கள் நால்வருக்குப் பின் பட்டத்திற்கு வந்தவன் முதலாம் குலோத்துங்கன். இராஜேந்திரனின் மகள் வயிற்றுப் பேரன். இவன் கீழைச் சாளுக்கிய மன்னன் மகன் என்றாலும் வளர்ந்தது சோழ நாட்டில் தன் தாய்வழிப் பாட்டன் அரண்மனையில் தான் என கலிங்கத்துப் பரணி மூலம் தெரிய வருகிறது. இவனுக்கும் தன் தாய்வழிப்பாட்டனின் பெயரான இராஜேந்திரன் என்ற பெயர் உண்டு என்பதைப் பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவனும் இராஜேந்திரன் --பரவை--காதலைப் போற்றினான்--மதித்தான் என்பதற்குத் தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளன.


தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் திருப்பனையூர். இவ்வூர்க் கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் எடுக்கப் பட்டது. அதுவும் இராஜேந்திரன் --பரவை காதலின் நினைவாக எடுக்கப்பட்டதே எனக் கட்டுரையாசிரியரால் கருதப் படுகிறது. இவ்வூர்க் கல்வெட்டுக்களில் முக்கியமானதும் பெரும்பாலானதும் காலத்தால் முந்தியதுமான கல்வெட்டுக்கள் முதலாம் குலோத்துங்கனுடையதே. மேலும் வளநாட்டுப் பிரிவு இவன் பெயரால் குலோத்துங்க சோழ வளநாடு என அமைந்திருத்தலும் இவ்வூர் ஆறு குலோத்துங்க சோழப் பேராறு என அழைக்கப்பட்டிருப்பதும் இவ்வூர் முதலாம் குலோத்துங்கனால் சிறப்பிக்கப் பட்டது என்பதை உறுதிப் படுத்துகிறது.


திருப்பனையூர் என்ற இவ்வூர், கங்கை கொண்ட சோழப் பனையூர் எனக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது, விக்ரம சோழன் குற்றாலம் என்பது போல.


இவ்வூர்க் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெறும் நாட்டுப் பிரிவு இராஜேந்திர சோழப் பனையூர் நாடு என்று வழங்கப் பெற்றிருந்தது. இவ்வூர் வாய்க்கால்களின் பெயர்கள் கூட இராஜேந்திர சோழன் வாய்க்கால் என்றும், கங்கை கொண்ட சோழன் வாய்க்கால் என்றும் தான் அழைக்கப்பட்டன. இவ்வூர்க் கல்வெட்டுக்கள் அனைத்தும் இவ்வூர் உடையார் அழகிய தேவர் கோயிலில் காணப்படுகின்றன. அழகிய சோழன் என்பது முதலாம் இராஜேந்திர சோழனின் பெயர்.


இவ்வூர் குலோத்துங்கன் கல்வெட்டுகள் அனைத்தும் ஊராரும் சபையாரும் இறையிலியாக நிலம் கொடுக்கப் பட்ட செய்திகளைக் கூறுகின்றன. எனவே ஊராரும் சபையாரும் இத்தனை முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்றால் அது ஒரு மன்னனால் இன்னொரு மன்னனுக்காக எடுக்கப் பட்ட கோயில் என்பதால் இருக்கலாம்.


இவ்வூரில் உள்ள விக்ரம பாண்டியன் கல்வெட்டொன்று உடையார் ஶ்ரீ அணுக்கீஸ்வர முடையார் திருநாமத்துக்காணியைக் குறிப்பிடுகிறது. எனவே அவ்வூரில் ஶ்ரீ அணுக்கீஸ்வரமுடையார் கோயிலும் இருந்தது. அணுக்கி-பரவையாராக இருத்தல் வேண்டும். கங்கை கொண்ட சோழப் பனையூரிலே உடையார் அழகிய தேவராகிய--இராஜேந்திர சோழனுக்கும்-- அணுக்கி பரவையாருக்கும் தான் முதலாம் குலோத்துங்க சோழனால் கோயில் எடுக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டில் கிடைக்காமல் விக்ரம பாண்டியன் கல்வெட்டில் ஶ்ரீ அணுக்கிஸ்வரமுடையார் பற்றித் தெரிந்து கொள்ளக் காரணம் இவ்வூரில் சிதைந்த கல்வெட்டுகள் ஏராளம். அவற்றில் அணுக்கீஸ்வர முடையார் குறிக்கப் பட்டுக் கிடைக்காமல் போயிருக்கலாம்.


ஊரின் பெயர் கங்கை கொண்ட சோழப் பனையூர் என வழங்கப் பட்டிருத்தலாலும், அங்கு ஶ்ரீ அணுக்கீஸ்வர முடையார் கோயில் அமைந்திருத்தலாலும், பரவைபுர இறைவன் பெயராகிய பனை மரத்தின் பெயரால் ஊர் அமைந்திருத்தலாலும் இவ்வூர்க் கோயில்கள் இராஜேந்திர சோழன், அணுக்கி பரவையார் நினைவாக அவர்கள் காதலின் சின்னமாக ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம். எனவே தஞ்சை மாவட்ட திருப்பனையூர்--முதலாம் குலோத்துங்கனால் முதலாம் இராஜேந்திர சோழன்-பரவை நினவாக அமைக்கப்பட்ட ஊராக இருக்கலாம்.


வட ஆற்காடு மாவட்டத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஊர் திருப்பனங்காடு. இவ்வூர் இறைவன் பெயரும், திருபனங்காடுடையார் என்பதே ஆகும். இவ்வூர் கல்வெட்டுக்களுள் காலத்தால் முந்தியது முதலாம் இராஜேந்திர சோழனுடையதே. இவ்வூர்க் கல்வெட்டொன்றில் நீட்டலளவை ஒன்றின் நீளம் குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. அதன் இரு ஓரங்களிலும் பனைமரம் வரையப் பட்டுள்ளது. இன்னொரு கல்வெட்டில், உயிருள்ள பனைமரத்தை வெட்டுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற அரச ஆணையைக் குறிப்பிடுகிறது. மேற்கூறிய இரு கல்வெட்டுகளும், எவர் காலத்தில் பொறிக்கப்பட்டதெனத் தெரியவில்லை.


இம்மூன்று ஊர்களிலும் பனை மரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாலும், பனைமரத்தை வெட்டுதல் கூடாது என அரச ஆணை பிறப்பித்திருப்பதாலும் திருப்பனங்காடு என்ற இந்த ஊரும் இராஜேந்திரன் பரவை நினவாக இராஜேந்திரனாலோ, அவன் காலத்தில் பிறராலோ ஏற்படுத்தப்பட்ட ஊராக இருக்கலாம். மேற்கூறிய இம்மூன்று ஊர்களிலும் பனைமரம் முக்கியப் பங்கு வகிப்பதும் அம்மரத்தை வெட்டுதல் கூடாது என அரச ஆணை பிறப்பித்திருப்பதும் எக்காரணத்தால் என்பது தெரியவில்லை. காதலுக்கும் பனைமரத்திற்கும் அல்லது இராஜேந்திரன் பரவைக்கும்--பனை மரத்திற்கும் ஏதோ தொடர்பிருத்தல் வேண்டும்.


புற நானூற்றில் நக்கண்ணையார் என்றவொரு பெண்பாற்புலவரால் பாடப்பட்ட பாடல்கள் காணப்படுகின்றன. இவர் அதன் தலைவன் மல்யுத்தமிடுவதைக் கண்டு ரசிப்பதாக ஒரு பாடல் அமைந்திருக்கிறது. அதில்,


"அஞ்சிலம் பொலிப்ப எம்மில்
முழாவரைப் போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனனே அவன் ஆடாகுதலே!*1


என முடிகிறது, அப்பாடல்.புறநானூற்றுப் பாடல் என்றாலும் தன் தலைவன் மல்லிடுவதைக் காதலுடன் நின்று ரசிக்கிறாள் தலைவி.


தனிப்பாடல் ஒன்று திருப்பனங்காட்டம்மைச்சி பற்றிக் கூறுகிறது.


"கலைமகளு நாணி நின்று கைகட்டிப் போற்றச்
சிலை மதவேள் முன் கணையே தாங்கக் குலமருவு
கொம்மைச் சிங்கார முலைக் கோதிறிருப்பனங்காட்
டம்மைச்சி வந்தாளதோ.*2

எனப்பாடப்பட்டிருக்கும் இப்பெண் பரவையாகவே இருத்தல் வேண்டும். திருப்பனங்காட்டுக் கோயிலில் பரவைக்கு மற்ற ஊர்களில் சிலை எடுத்திருப்பதைப் போல எடுக்கப் பட்டிருத்தல் வேண்டும். அச்சிலையைப் பற்றிய பாடலாகவே மேற்கூறிய இப்பாடல் அமைந்திருத்தல் வேண்டும்.


ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை*3 ஒரு தனிப்பாடல் வில்லிப்புத்தூரம்மை எனக் கூறி வர்ணித்திருப்பது போலப் பனங்காட்டில் கோயில் கொண்டிருக்கும் பரவையை ஏன் அத்தனிப்பாடல் வர்ணித்திருத்தல் கூடாது. அப்படியாயின் கலைமகளும் நாணி நின்று போற்றும்படியும், சிலை மதவேள் இவள் முன் கணையைத் தாங்குமளவும் அழகிய உருவம் பொருந்திய திருபனங்காட்டம்மைச்சியை வர்ணித்திருப்பதிலிருந்து தெய்வமாகிவிட்ட ஒரு மானிடப் பெண்ணைத்தான் எனத் தெரிய வருகிறது.


எனவே--திருப்பனங்காட்டம்மைச்சி--கல்வி கேள்விகளில் சிறந்த காதலின் மேன்மையை உணர்ந்த அழகிய பரவையாக இருக்கலாம்.


பரவைபுரம் என்ற பனயாவரத்தைப் போலவே திருப்பனையூர், திருப்பனங்காடு ஆகிய ஊர்களும் இராஜேந்திரன் --பரவை காதலின் நினைவாக--காதல் சின்னமாக அமைக்கப்பட்ட ஊர்களாக இருக்கலாம்.



அடிக்குறிப்புகள்:


1. புறநானூறு பாடல் எண்; 85


2. பெருந்தொகை பக். 387 பாடல் எண்: 1685


3. மெல்லிய பஞ்சவடியுந் துவராடையும் மேகலையும்
வல்லியை வென்ற மருங்கு முத்தார வன முலையும்
சொல்லியல் வன்மையும் வில்லிப் புத்தூரம்மை தோளழகும்
முல்லை வென்ற நாகையுமெல்லா மென்றன் முன்னிற்குமே.

பெருந்தொகை பக். 430 பாடல் எண்: 1884


--Geetha Sambasivam 01:56, 3 ஜூன் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 3 ஜூன் 2012, 01:56 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,757 முறைகள் அணுகப்பட்டது.