சோழர் காலத்திய சமயம்-- பகுதி 2 கோயிலில் தமிழ் வழிபாடுமரபு விக்கி இருந்துசோழர் கால சமயம் டாக்டர் அ.பத்மாவதி கோயிலில் தமிழ் வழிபாடு
தமிழ் மக்களின் நாகரிகப் பண்பாட்டு வாழ்க்கை முறைகளை சங்க கால இலக்கியங்களிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
சங்க காலத்திற்குப் பின்னர் தமிழரின் சமய வாழ்வில் முக்கிய கால கட்டம் தேவார கால கட்டமே. இன்றைக்குத் தமிழ்நாட்டில் வழிபாடுகளில் இடம் பெற்றுள்ள கற்கோயில்கள் எல்லாம் இதன் அடிப்படையில் எழுந்தவைகளேயாகும். அதற்கு முன்னர் தமிழ்நாட்டுக் கோயில்கள் கூரைக்கோயில்களாகவும், செங்கற் கோயில்களாகவும், திறந்தவெளிக் கோயில்களாகவுமே இருந்தன. எனவே இன்றுள்ள கோயில்கள் பற்றிய வாதங்களை, "சைவ மறுமலர்ச்சிக் காலம்" எனக் கூறப்படும் கால கட்டத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்.
"செந்தமிழர், தெய்வமறை நாவர், செழுநற்கலை தெரிந்தவரோடு
என்று ஞானசம்பந்தர் பாடி இருக்கிறார். இவர் பாடியிருப்பதிலிருந்து செந்தமிழர் முதலிய நான்கு வகையினரும் அர்ச்சனை செய்தார்கள் என்றுதானே பொருள். இவர்களில் "தெய்வமறை நாவர்" என்பவர்கள் வேதம் பயின்ற தமிழர். எனவே வேதம் பயின்ற தமிழரும் அர்ச்சனை செய்திருக்கிறார்கள் என்று தான் பொருளே தவிர வேதம் பயின்றவர் மட்டுமே அர்ச்சனை செய்தார்கள் என்பது பொருளல்ல.
திருநாவுக்கரசர் என்ற அப்பரும், "....ஆரூர் இனிதமர்ந்தார் என்று தமிழில் பாட வேண்டும் என்று தானே கூறுகிறார். மாணிக்க வாசகரின் போற்றித் திருவகவலைப் புரட்டிப் பார்த்தால்,
"ஆடக மதுரை யரசே போற்றி என சிவனை அர்ச்சனைச் செய்வதற்கென்றே பாடிய பாடல் என்பது தெளிவாகப் புரிகிறதல்லவா?
இவ்வாறு நாயன்மார்கள், பாடிய காலத்திற்குப் பின்னர் கட்டப் பட்ட கோயில்கள் தாம் இன்று நாம் காணும் கோயில்கள் அனைத்தும் ஆகும். இக்கோயில்களிலெல்லாம் நாயன்மார்கள் கூறிய முறையிலேயே வழிபாடு செய்யப் பட்டதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. சில கல்வெட்டுச் சான்றுகளை இங்கு காணலாம்.
இந்தியாவிலுள்ள மிகப் பெரிய கோயில்களுள் முதலாம் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார்க் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் திருப்பதியம் எனக் கூறப்படும் தேவாரப் பாடல்கள் பாடப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்று இருப்பதைக் காண்பது சுவையான செய்தி.
"உடையார் ஶ்ரீ ராஜராஜீச்வரம் உடையார்க்குத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய உடையார் ஶ்ரீராஜ ராஜ தேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத் தெண்மரும், இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும், இவர்களிலே நிலையாய் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்மருக்குப் பேரால் நிசதம் நெல்லு முக்குறுணி..."
நாற்பது ஓதுவார்கள் பாட, அவர்களுக்குப் பக்க வாத்தியமாக உடுக்கையும் கொட்டி மத்தளமும் வாசிக்கப் பட்டது என்பதை அறிய முடிகிறது. தேவாரம் பாடிய மூவருக்கும், அதாவது, அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோருக்குப் பெரிய கோயிலில் சிலைகள் எடுத்து வழிபட்டான். தேவாரத்தைக் கண்டு பிடித்துத் தொகுத்து உலகிற்கு அளித்தான். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகைக்கு இணங்க சுந்தரர் வரலாற்றையும், சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றையும் தஞ்சைக் கோயிலில் வரைந்து இன்புற்றவனும் இராஜராஜன் தான். திருப்பதியங்களைத் தேவாரம் என அழைத்து, தான் வணங்கிய சந்திரசேகரர் திருமேனியை, "தேவார தேவர்" என அழைத்தான் என்பதும் எண்ணி மகிழத்தக்கது. இது போன்று கோயில்களில் எல்லாம் ராஜராஜன் திருப்பதியம் பாடிய நாயன்மார்களுக்குச் சிலை எடுத்தும் அவர்கள் தேவாரப் பாடல்களைப் பாடச் செய்தும் வந்ததை ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.
வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063--1070) உடல் நலம் குன்றியிருந்த போது அவன் உடல் நலம் பெறவும் தனது மகனுக்கு வாரிசு உருவாக வேண்டும் என்றும், தன் மாங்கல்ய பாக்யத்திற்காகவும் சோழ அரசி திருவொற்றியூர் கோயிலுக்கு நிவந்தமளித்தாள். அக்கோயிலில் "திருப்பள்ளி எழுச்சியும் திருவாதிரை நாளில் திருவெம்பாவையும் தேவாரமும் பதினாறு பெண்களால் பாடப்பட வேண்டும் என்றும் அப்போது இருபது பெண்கள் ஆடவேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன்படியே ஆடலும் பாடலும், தேவார, திருவெம்பாவைப் பாடல்கள் இசையுடன் நிகழ்த்தப் பெற்றதை அக்கோயில் கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.
திருவொற்றியூர் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா சிறப்பாக நடைபெறுவதை,
"ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்தமாக வொளி என அப்பர் பாடியுள்ளார்.
அதே விழா தொடர்ந்து நடைபெற்று வந்ததை இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் (கி.பி. 1166--1181) கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது பங்குனி உத்திரத் திருவிழாவின் போது அக்கோயிலில் உள்ள மடத்தின் மடாதிபதியாகிய வாகீஸ்வர பண்டிதர் என்பவர் ஆளுடை நம்பியாகிய சுந்தரரின் ஶ்ரீபுராணத்தை (பெரிய புராணம்) வாசித்தார். அப்போது அக்கோயில் இறைவன் மகிழ மரத்தின் கீழ் எழுந்தருளியிருந்து கேட்டார் என்கிறது அக்கல்வெட்டு. அந்த மகிழ மரத்தீனடியில் தான் சுந்தரர் சங்கிலி நாச்சியாரை மணம் முடித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அதே மகிழ மரத்தடியில் சுந்தரர் கதை படிக்கப் பட்டது எனத் தெரிகிறது. அப்பர் பாடிய "வடிவுடை மங்கை" என்ற பெயரைத் தான் திருவொற்றியூர் இறைவிக்குச் சூட்டிக் கோயிலெடுத்தான் இரண்டாம் குலோத்துங்க சோழன். (1133--1150)
நரலோக வீரன் என்றொரு சிற்றரசன், சிதம்பரம் கோயிலில் மூவரும் பாடிய தேவாரப் பாடல்களை செப்பேட்டில் எழுதி வைத்தான். சிதம்பரம் கோயிலில் இருந்துதான் ராஜராஜன் தேவாரப் பாடல்களை எடுத்துத் தொகுத்தான். ஏராளமான பாடல்கள் செல்லரித்து அழிந்து விட்டன. இனியும் அது போல ஒரு கொடிய சம்பவம் நிகழாதிருக்க வேண்டுமென்றுதான் அவ்வாறு செப்பேட்டில் எழுதி வைக்கப் பட்டிருத்தல் வேண்டும். இது போல நெல்லை மாவட்டத்து ஆத்தூரிலும் தேவாரப் பாடல்கள் செப்பேட்டில் எழுதி வைக்கப் பட்டிருந்தன என்று கூறுகிறது அங்குள்ள கல்வெட்டு ஒன்று.
இவ்வாறு தமிழ்நாட்டுக் கோயில்களிலும் பிற இடங்களிலும் கிடைக்கும் கல்வெட்டுக்களில் 95 விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்க் கல்வெட்டுக்களேயாகும். இக்கல்வெட்டுகள் மூலம் கோயில்களின் பெயர்களை அறிய முடிகிறது. அப்பெயர்கள் தூய தமிழிலேயே அமைந்திருந்தன. ஆனால் அப்பெயர்கள் பிற்காலத்தில் வடமொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டன. சான்றாக,
வெள்ளானை விடங்கர்--- ஐராவதேஸ்வரர் திருமுதுகுன்றமுடையார்--- விருத்தகிரீஸ்வரர் மாம்பழமுடையார்----ஆமரவனேஸ்வரர் திருமறைக்காடுடையார்---வேதாரண்யேஸ்வரர் திருவையாறுடையார்---பஞ்சநதீஸ்வரர் சொன்ன வாறறிவார்---யதோத்காரி திருவருட்துறை ஆழ்வார்--- கிருபாபுரீஸ்வரர்
என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டிருப்பதைக் காணலாம்.
நடராஜருக்குப் பெயர், 'கொட்டமைந்த ஆடலான்", கேள்விப் பட்டிருக்கின்றோமா? திருக்கோடிக்கா கல்வெட்டில் கண்டு வியந்தேன். தேவாரத்தைப் புரட்டியபோது, ஞானசம்பந்தர்,.
"தட்டொடு தழை மயிற்பீலி கொள் சமணரும்
என்று கெட்டு என்ற தாளவிசைக் கருவிக்கேற்ப ஆடவல்லவர் ஆடவல்லார் என்பதை எவ்வளவு அழகாகக் கூறி இருக்கிறார்.
அதே போல, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அம்மனின் பெயர் தேவாரத்திலும் கல்வெட்டிலும், "கதிர்நிலா" என்று அழைக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்றோ, "காந்திமதி"யாகிவிட்டது.திருக்காட்டுப்பள்ளிக் கோயில் இறைவியின் பெயர், "அழகர் மங்கை." ஆனால் இன்றோ செளந்தரநாயகி. இது போல அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவ்வாறு தமிழ்ப் பெயர்களும் தமிழ் வழிபாடும் வடமொழிமயமாக்கப் பட்ட காலம், தமிழரல்லாத மன்னர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலமாக இருக்கலாம். சேக்கிழாரின் பெரிய புராணம் தெலுங்கில் மொழி பெயர்க்கப் பட்ட கல்வெட்டுச் செய்தியை காஞ்சிபுரத்திலுள்ள சர்வதீர்த்தேஸ்வரர் கோயிலில் காணமுடியும். பழனி முருகன் கோயிலில் தமிழ் அர்ச்சனை மாற்றப் பட்டு வடமொழி ஓதப்பட்ட வரலாற்றை நாடறியும். வழிபாட்டுத் துறையில் மட்டுமின்றி பிற துறைகளிலும் இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக, தமிழிசையில், இருந்த "பாலை" அடிப்படையிலான இசையிலக்கணம் வழக்கொழிந்து வடமொழியிலான 'மேளகர்த்தா" முறை அரங்கேறியதும் இவ்வகையில் தான்.
எனவே, தேவாரத் தமிழ்ப் பாடல்களின் அடிப்படையில் அமைந்த கோயில்களும், அதில் தேவார திருவாசகங்களின் பங்கும், இறைவன் இறைவியர் பெயர்களும், கோயில்கள் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல விதங்களிலும் பின்னிப் பிணைக்கப் பட்டிருந்த வரலாற்றுச் செய்திகளையும் காண்கின்ற போது, தேவார, திருவாசகங்களின் வெளித்தோற்றமே மன்னர்கள் எழுப்பிய கோயில்கள் என்பது புரிகிறதல்லவா?
"மறை இலங்கு தமிழ்"
என்று சம்பந்தர் பாடிய தமிழில் தான் அவர் கூறியபடி செந்தமிழர் அர்ச்சனை செய்தனர் என்ற அகச்சான்று உள்ளதையும் மக்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதைக் கடமை என எண்ணுகிறேன்.
உதவிய நூல்கள்:
2. S.I.I. Vol. II 3. ARE 1912 4. ARE 1911 5. S.I.I. Vol. V 6.திருக்கோடிக்கா கல்வெட்டுக்கள்--த.நா.அ. தொல்லியல் துறை வெளியீடு
|