சேஷாத்ரி ஸ்வாமிகள் 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 சரீரத்தில் இருக்கையிலேயே யோகசித்தியுடன் வேறொரு உருவத்தையும் சேஷாத்ரி சுவாமிகள் எடுத்திருப்பதாயும் கூறப்படுகிறது. வள்ளிமலை சுவாமிகள் சேஷாத்ரி சுவாமிகளிடம் உபதேசம் பெற்றபின்னர் ஒருமுறை அவரைக் காண வந்தார். அப்போது அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு மறுநாள் வள்ளிமலை செல்லவேண்டும் என உத்தரவு கேட்க சேஷாத்ரி சுவாமிகள் தானும் வருவதாய்க் கூறவே சரி என மகிழ்வோடு ஒத்துக்கொண்டார் வள்ளிமலை சுவாமிகள். இருவரும் ரயிலில் கிளம்பினார்கள். ரயில் கிளம்பவும் சேஷாத்ரி சுவாமிகள் அதிலிருந்து குதித்துவிட்டார். வள்ளிமலை சுவாமிகள் ஏமாற்றத்துடன் வள்ளிமலை சென்றார். ஆனால் சேஷாத்ரி சுவாமிகளோ அவரைப் பார்த்து உரத்த குரலில், “நீ வள்ளிமலைக்குப் போ! பின்னாலேயே நானும் வருகிறேன்.” என்று கூற வள்ளிமலை சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. வள்ளிமலைக்கு வந்ததும் பொங்கித்தாய்க்கு வழிபாடுகளை முடித்துக்கொண்டு வந்த வள்ளிமலை சுவாமிகள் எதிரே சேஷாத்ரி சுவாமிகள் சிரித்த வண்ணம் நின்றார். உடனே கீழே விழுந்து வள்ளிமலை சுவாமிகள் வணங்கிவிட்டு எழுந்து பார்க்கையில் ஓர் அணில் பிள்ளை ஓடுவதைக் கண்டார். அணில் பிள்ளை உருவத்தில் சுவாமிகள் வந்திருப்பதை அறிந்து கொண்டார்.


வேறொரு சமயம் வள்ளிமலை சுவாமிகளிடம் வயதானவர் உருவில் வந்து பசிக்கு உணவு கேட்டார சேஷாத்ரி சுவாமிகள். உணவும் அளித்தார் சுவாமிகள். பசியால் வாடிய வயதானவர் ஒரே மூச்சில் மூன்றுபடிக் கஞ்சியையும் குடித்துவிட்டார். அன்றுமுதல் தினமும் பெரியவருக்காக உணவு காத்திருக்கும். ஆனால் அந்த உணவை ஒரு கீரிப்பிள்ளை வந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விடும். சில நாட்களில் கீரிப்பிள்ளையும், பெரியவர் உருவில் வந்தவரும் சேஷாத்ரி சுவாமிகள் எனப் புரிந்துகொண்டார் வள்ளிமலை சுவாமிகள். திருவண்ணாமலையில் இருந்தபோது மயானத்திலேயே பொழுதைக்கழிக்கும் வழக்கம் உள்ள சேஷாத்ரி சுவாமிகளுக்கு அங்கிருந்த வெட்டியான் பழக்கம் ஆனான். அவன் சுவாமிகளிடம் மிகவும் மரியாதை காட்டுவான். சுவாமிகளும் அவனிடம் அன்போடு இருப்பார். தனக்குக்கொடுக்கும் புதுத்துணிகளை வெட்டியானுக்குக் கொடுத்துவிட்டு அவனுடைய கந்தல் துணிகளைத் தான் அணிந்து செல்வார். சுவாமிகள் மகாசமாதியடைந்த போது பிரிவு தாங்காமல் துயரமடைந்த வெட்டியான் மிகவும் வருத்தமாய் இருந்தான்.


அவன் கனவில் ஒருநாள் சுவாமிகள் தோன்றி வள்ளிமலைக்குச் செல்லுமாறும் அங்கே தான் தரிசனம் தருவதாகவும் கூறினார். வெட்டியானும் வள்ளிமலை கிளம்பிச் சென்று வள்ளிமலை சுவாமிகளிடம் தான் வந்த காரியத்தைச் சொன்னான். சேஷாத்ரி சுவாமிகளுக்காகக் காத்திருந்தான். மாலையில் பாறையின் மீது பெரியவருக்கு உணவு வைப்பதைப் பார்த்தான். அப்போது அங்கே வந்த ஒரு கீரிப் பிள்ளை அந்த அன்னத்தை ருசித்துச் சாப்பிட்டது. அடுத்த கணம் வெட்டியான் கண்களில் கீரிப்பிள்ளை மறைந்து சேஷாத்ரி சுவாமிகள் காட்சி அளித்தார். வெட்டியான் பக்திப் பரவசத்தில் உடல் நடுங்க அவரை வழிபட்டுத் தனக்காக அவர் தரிசனம் கொடுத்ததை நினைத்து நினைத்து பூரித்துப் போனான். சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலை வந்துகிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிவிட்டன. சுவாமிகளுக்குத் தான் வந்த வேலை முடிந்துவிட்டது எனத் தோன்றியது போலும். 1928-ஆம் வருடம் கார்த்திகை மாதம் ஒருநாள் தன் பக்தையான சுப்பலக்ஷ்மியிடம் “இந்த வீட்டை விட்டுவிட்டுப் புதியதோர் வீட்டிற்குப் போக நினைக்கிறேன்,” என்று கூறினாராம். அந்த அம்மா முதலில்மிகவும் குழம்பிப் போய்விட்டார். சுவாமிகள் ஏதோ விளையாட்டாய்ப் பேசுவதாய் நினைத்துள்ளார். ஆனால் திரும்பத் திரும்ப சுவாமிகள் இந்தக் கேள்வியையே கேட்கவும், “ஆம், புதியதோர் வீடுகட்டி அங்கே யோகப் பயிற்சிகள் செய்யலாம்.” என்றாராம். சுப்புலக்ஷ்மி அம்மாவின் வார்த்தைகளைப் பராசக்தியின் கட்டளையாக ஏற்றார் சுவாமிகள். “சரி. சரி, அப்படியே செய்வோம்.” என்றார். சில நாட்களில் அவரின் சில பக்தர்களுக்கு சேஷாத்ரி சுவாமிகளை ஃபோட்டோப் படம் பிடித்து வைக்கவேண்டும் எனத் தோன்றியது. ஆகவே துணி மாற்றாமல், குளிக்காமல் அழுக்கோடு இருந்த சுவாமிகளை எப்பாடு பட்டாவது குளிக்க வைத்துப் புதுத்துணி உடுத்த வைக்கவேண்டும் என அவருடைய சில சீடர்கள் நினைத்தனர். தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் குளிப்பாட்டினார்கள்.


சுவாமிகள் வேண்டாம் என மறுத்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. எண்ணெய் தேய்த்துக்குளிப்பாட்டி, புதுத் துணி அணிவித்து, மாலைகள் போட்டுப் படமும் பிடித்தார்கள். ஆனால் சேஷாத்ரி சுவாமிகளுக்கு அதன் பின்னர் உடல்நலம் மொத்தமாய்க் கெட்டுப் போய் நல்ல காய்ச்சல் வந்துவிட்டது. கிட்டத்தட்ட 40 நாட்கள் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்தது. 41-ஆம் நாள் அருணாசலேஸ்வரரைத் தரிசிக்கச் சென்றார் சுவாமிகள். அதுவே அவருடைய கடைசி தரிசனமாகும். திரும்பும்போது தேங்கி இருந்த நீரில் அப்படியே உட்கார்ந்து கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தார். மெல்ல மெல்ல உடல்நிலை மேலும் மோசமாகி 1929-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி சேஷாத்ரி சுவாமிகளின் உடலில் இருந்து உயிர்ப்பறவை பறந்து சென்றது. திருவண்ணாமலையே சோகத்தில் ஆழ்ந்தது. மக்கள் கூட்டம் தாங்கமுடியாமல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. திருவண்ணாமலைக் கடைகளில் இருந்த கற்பூரம் அனைத்தும் வாங்கப்பட்டு எரிக்கப்பட்டுக் காணக்கிடைத்த ஜோதியில் இரவே பகலாய் மாறிவிட்டது. வெளியூர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் கடைசி தரிசனத்திற்கு வந்து குவிந்தார்கள்.


அனைவரும் ஸ்லோகங்களைப் பாடிக்கொண்டும், பஜனைப்பாடல்களைப் பாடிக்கொண்டும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அக்னி தீர்த்தக்கரையில் ஶ்ரீரமண பகவானும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். சிறிது தூரத்தில் ஒரு சமாதிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதிக்கோயிலும் கட்டப்பட்டு, திருவண்ணாமலை, செங்கம் ரோடில் தற்போது சேஷாத்ரி சுவாமிகளின் ஆசிரமமாக நிலவி வருகிறது. அருணாசல மலையை அவர் எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதும், அதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டார் என்பதும் கீழ்க்கண்ட வரிகளின் மூலம் தெரிய வருகிறது.


“ஏ, ஜீவன்களே, இந்த மலையின் காந்த சக்தியைப் புரிந்துகொள்ளுங்கள். இது இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளையும் கவர்ந்து இழுக்கிறது. இதை நினைக்கும் அந்தக் கணத்திலேயே நம்முடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, காம, க்ரோத, மத, மாச்சரியங்களை வெல்லும் வல்லமை ஒருவனுக்கு வருகிறது. இந்த மலையை நோக்கி அவன் இழுக்கப்படுகிறான். இது மனிதனைத் தன் பக்கம் இழுப்பது மட்டுமில்லை; அவனை நிர்குணம் படைத்தவனாகவும் ஆக்குகிறது. இதனுடைய சக்தி அளப்பரியது. இது யுகம் யுகமாக இங்கே நின்று கொண்டு பலருடைய ஒப்பற்ற தியாகங்களையும் பார்த்துக்கொண்டு ஒரு மெளன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. ஏ, மானுடர்களே, இதன் உண்மையான தத்துவத்தைப் புரிந்து கொண்டு இதனோடு ஐக்கியமாகி விடுதலை பெறுங்கள்."

--Geetha Sambasivam 00:40, 21 டிசம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=சேஷாத்ரி_ஸ்வாமிகள்_4&oldid=9052" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 21 டிசம்பர் 2011, 00:40 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,824 முறைகள் அணுகப்பட்டது.