சேஷாத்ரி ஸ்வாமிகள் - 3மரபு விக்கி இருந்துசேஷாத்ரி ஸ்வாமிகள் - 3
அவருடைய தவ வலிமை பிரபலமடைய நாளாவட்டத்தில் அக்கம்பக்கமிருந்து எல்லாம் மக்கள் தரிசிக்க வந்து கொண்டிருந்தனர். கூட்டம் அதிகரிக்கவே அங்கிருந்து ஒருவருக்கும் தெரியாமல் கிளம்பிவிட்டார். நாளவட்டத்தில் பேச்சையும் குறைத்துவிட்டார். முக்கியமான விஷயங்களாக இருந்தால் எழுதிக்காட்டுவார். மெளன சுவாமிகள் என்ற பெயரை மக்கள் சூட்டினார்கள். திண்டிவனம் கோயிலின் யாகசாலையில் தவம் இருக்கவேண்டும் என உள்ளே சென்று அமர்ந்து நான்கு நாட்களாகியும் வெளியே வராமல் போகவே குருக்கள் பயந்து போய்க் கதவைத் திறந்து பார்த்தார். குருக்களுக்கு அவர் கோயிலில் சமாதி நிலையில் தவம் இருந்தது பிடிக்காமல் சேஷாத்ரி சுவாமிகளை வேறெங்காவது போகச் சொன்னார். அங்கிருந்து கிளம்பிய சேஷாத்ரி தான் திருவண்ணாமலைக்குச் செல்வதாக எழுதிக்காட்டிவிட்டுக் கிளம்பி விட்டார். சில மாதங்கள் அங்கேயும் இங்கேயுமாகச் சுற்றினார். படவேடு ரேணுகாம்பாளைத் தரிசித்து அவள் அருளாட்சியில் மூழ்கித் திளைத்தார். வழியில் சந்நியாசிப்பாறையைத் தரிசித்துவிட்டு அருணையம்பதி வந்து சேர்ந்தார் சேஷாத்ரி சுவாமிகள்.
தாம் கடைசியில் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம் எனப் புரிந்து கொண்டார். தன்னிலை மறந்து தான் என்பது கரைந்து தானும் அதுவும் ஒன்றாகி அதில் கரைந்தார். இவ்வுலகைத் துறந்து, தன் உடலையும் மறந்து கிட்டத்தட்ட உன்மத்தராய், ஒரு பித்தராய்த் தெருக்களில் அலைந்து திரிந்தார். சித்தப்பா ராமசாமி ஜோசியருக்குத் திருவண்ணாமலையில் சேஷாத்ரி இருப்பது தெரிய வந்து கிளம்பி வந்தார். எப்படியேனும் பிள்ளையை அழைத்துப் போகவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருந்தார். இங்கு வந்து சேஷாத்ரி சுவாமிகள் ஒரு பிச்சைக்காரனைப் போல் பரட்டைத்தலையோடும், ஒட்டிய கன்னங்களோடும், குழி விழுந்த கண்களோடும், வாடிய வயிற்றோடு தனக்குத் தானே பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். அங்கேயே தங்கி சேஷாத்ரியைத் தன்னுடன் அழைத்துச் செல்லப் பலவகையிலும் முயன்றார். முடியவில்லை. கடைசியில் அங்கிருந்த அன்னச் சத்திரக்காரரிடம் சேஷாத்ரிக்கு வயிறு நிரம்பச் சாப்பாடு போடச் சொல்லி வேண்டுகோள் விடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
சேஷாத்ரி சுவாமிகள் கம்பத்து இளையனார் சந்நிதியிலோ, அல்லது திரெளபதி அம்மன் கோயிலிலோ அல்லது ஈசான்ய மடம், துர்கை அம்மன் கோயில் ஆகிய இடங்களிலேயே அமர்ந்து தவத்தில் ஈடுபடுவார். மலை மேல் ஏறிச் சென்று தவம் செய்யப் போனதில்லை. மலை அடிவாரத்திலேயோ பாதாள லிங்க சந்நிதியிலேயோ அமர்வார். தமது பத்தொன்பதாவது வயதில் 1889-ஆம் ஆண்டில் அருணாசலத்திற்கு வந்து சேர்ந்தார் சேஷாத்ரி சுவாமிகள். அருணாசல க்ஷேத்திரத்தைக் குறித்து சேஷாத்ரி சுவாமிகள் கூறுவதாவது, “இந்த க்ஷேத்திரத்தில் தான் அம்மையும், அப்பனும் இணைந்து இவ்வுலகத்து மாந்தர் அனைவரையும் அழைத்து முக்தி கொடுக்கின்றனர். அந்தக் கிருஷ்ணனோ தன் சுதர்சனச் சக்கரத்தைக் கூட வைத்துவிட்டுப் புல்லாங்குழலில் இசைக்கும் கீதங்களுக்கு ஈசன் வெளியே வந்து நடனமாடுகிறான்.” என்பாராம். சேஷாத்ரி சுவாமிகள் வந்து சேர்ந்து சரியாக ஆறு வருடங்களுக்குப் பின்னர் அங்கே இன்னொருவரும் வந்து சேர்ந்தார். அவர் ரமண மஹரிஷி. ரமண மஹரிஷியைப் பாதாள லிங்க சந்நிதி குகைகளில் தவம் செய்கையில் முதலில் கண்டவர் சேஷாத்ரி சுவாமியே தான். அவரைச் சின்ன சாமி என்று அழைப்பாராம். மேலும் ரமணரைக் குறித்து உலகுக்கு அறிவித்தவரும் சேஷாத்ரி சுவாமிகளே ஆகும்.
ரமணரைப் பலவிதங்களிலும் சேஷாத்ரி சுவாமிகள் பாதுகாத்து வந்ததைக் கண்ட மக்கள், சேஷாத்ரி சுவாமிகளை அம்பாள் எனவும், ரமணரை சுப்ரமணியர் அவதாரம் எனவும் அழைத்தனர். அல்லது சேஷாத்ரி சுவாமிகளைப் பெரிய சேஷாத்ரி எனவும், ரமணரைச் சின்ன சேஷாத்ரி எனவும் அழைத்தனர். சேஷாத்ரி சுவாமிகளை அனைவரும் பைத்தியம் எனச் சொல்வதைக் கேட்ட ரமணர் சிரித்துக்கொண்டே இந்த அருணாசலத்தில் மூன்று பைத்தியங்கள். ஒன்று இந்த அருணாசலேஸ்வரர், இரண்டாவது சேஷாத்ரி சுவாமிகள், மூன்றாவது தாம் என்று கூறுவாராம். சில பக்தர்களோ அருணாசலத்தில் மூன்று லிங்கங்கள். ஒன்று அருணாசலமலை, இன்னொன்று சேஷாத்ரி சுவாமிகள், மூன்றாவது ரமணர் என்பார்களாம்.
ஒரு முறை சேஷாத்ரி சுவாமிகளைப் பார்க்க சேலத்தில் இருந்து அன்பர் ஒருவர் நிறையப் பழங்கள், இனிப்புகள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். ஆனால் சுவாமிகளைக் காணமுடியவில்லை. சுவாமிகள் காஞ்சிபுரம் போயிருக்கலாமென எவரோ சொல்லக் கேட்டு அங்கு பயணம் ஆகவேண்டி வண்டியில் ஏறி அமர்ந்தார். அப்போது சுவாமிகள் எங்கிருந்தோ ஓடோடியும் வந்து, இந்த வண்டி காஞ்சிபுரத்துக்குப் போகுமா எனக் கேட்கவும் இருவரும் விதிர்விதிர்த்துப் போனார்களாம். பின்னர் கீழே இறங்கி சேஷாத்ரி சுவாமிகளை வணங்கினார்கள். அதே போல் படிக்கமுடியா ஏழைப்பையன் ஒருவன் சேஷாத்ரி சுவாமிகள் அருளால் தேர்வில் தேர்ச்சி அடைந்தான். ஆனால் சுவாமிகளோ பார்க்கப் பைத்தியம் போலவே இருப்பார். தன்னுடைய பெயரைக் கூட மறந்து, தனக்கெனத் தனியான பக்தர் கூட்டமும் இல்லாமல், இருக்க இடமில்லாமல், உண்ண உணவுக்கெனத் தனியாக எதுவும் இல்லாமல் கிடைப்பது போதும் என உண்டு கொண்டு, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பனியைப் பொறுத்துக்கொண்டு அண்ணாமலையில் அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்.
அவர் அங்கிருக்கும் கடைத்தெருவில் எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் கடைக்காரர்கள் தாங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணினார்கள். அவர் கைபட்டால் தங்கள் பணப்பெட்டி நிரம்பி வழியும் எனத் திட்டமாக நினைத்தார்கள். பணக்காரர்கள் அளிக்கும் எந்தப் பொருளையும் ஏற்றதில்லை. ஏழை அளிக்கும் பொருள் எளிமையாக இருந்தாலும் ஏற்பார். சில சமயம் பலநாட்கள் தொடர்ந்து உண்ண உணவு கிடைக்காது. சிலசமயம் உணவு நிறையக் கிடைக்கும். அதற்கேற்றாற்போல் அவரும் சில நாட்கள் சேர்ந்தாற்போல் சாப்பிடுவார். சில சமயம் எதுவும் சாப்பிடவே மாட்டார். அவருக்குக் கிடைக்கும் புதுத்துணிகளை ஏழை, பாழைகளுக்கு அளித்துவிடுவார். அப்படி ஏழை, பாழைகள் கிடைக்கவில்லை எனில் துணியைக் கிழித்துப் போட்டுவிடுவார். அவர் உடுத்தமாட்டார். கந்தல் துணிதான் கட்டி இருப்பார். எப்போது அமர்ந்தாலும் ஸ்வஸ்திக ஆசனத்திலேயே அமர்வார்.
ரமணரைச் சந்தித்து உபதேசம் பெற வேண்டித் திருவண்ணாமலைக்கு வந்த மைசூர் சுவாமிகள் என ஆரம்பகாலத்தில் அழைக்கப்பட்ட வள்ளிமலை சுவாமிகள் ரமணரிடம் உபதேசம் கிட்டாமல் வடநாடெல்லாம் சென்று திரும்பி வந்து ரமணரிடம்சென்றபோது ரமணரோ அவரைக் கண்டு ஒருநாள், “போ, போ, இங்கே நிற்காதே, கீழே போ” என்று விரட்டிவிட, திருப்புகழ் ஸ்வாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தான் மனதால் குருவாக வரித்தவர், குருவின் வார்த்தையை மீறுவது எப்படி? மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டார். என்ன ஆச்சரியம்?? அங்கே இவரை வரவேற்று அழைத்தவரோ ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். ரமணரின் தீர்க்க தரிசனம் அப்போது தான் புரிந்தது ஸ்ரீவள்ளிமலை ஸ்வாமிகளுக்கு. திருப்புகழ் ஸ்வாமிகளைத் தன்னருகே அழைத்து அமர வைத்துக்கொண்டு அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். சிவமானஸ ஸ்தோத்திரத்தின் நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கிச் சொன்னார். அதற்கு ஈடான திருப்புகழை வள்ளிமலை ஸ்வாமிகளைக் கூறச் சொல்லிக் கேட்டுத் தானும் மகிழ்ந்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். பின்னர் அவரிடம், “திருப்புகழே உனக்குத் தாரக மந்திரம். உன் சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் இந்தத் திருப்புகழுக்கே அர்ப்பணம் செய்து தவ வாழ்க்கை வாழவேண்டும் நீ. வேறு எந்தவிதமான மந்திரங்களோ நூல்களோ உனக்குத் தேவையில்லை. திருப்புகழ்தான் உனக்கு மகாமந்திரம். நீ செல்லுமிடமெல்லாம் இனி திருப்புகழ் ஒலிக்கட்டும். இப்போது நீ வள்ளிமலைக்குச் சென்று தவம் மேற்கொள்வாயாக. விரைவில் நாமும் அங்கே வருவோம்.” என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.
தன்னை நாடி வரும் பக்தர்களின் உடல்நிலைக்கு ஏற்றபடி தன் ஸ்பரிசத்தால் குணப்படுத்திக்காட்டியதும் உண்டு. ஒரு நாள் காலை ஆறு மணிக்கு ஆகாயத்தைப் பார்த்த சுவாமிகள், “அதோ, விட்டோபா! விட்டோபா போகிறார்!” என்று கூறச் சுற்றிலும் இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. சற்று நேரத்தில் போளூரில் இருந்த விட்டோபா சுவாமிகள் மஹாசமாதி அடைந்த தகவல் கிட்டிற்று. சுவாமிகளின் சூக்ஷ்ம திருஷ்டி இதிலிருந்து புலனாயிற்று. வேறொரு நாள் ஒரு பதினைந்து வயதுப் பையனுக்குக் கம்பத்து இளையனார் சந்நிதியில் அம்பாள் உண்ணாமுலை அம்மனின் தரிசனத்தைச் செய்துவைத்துப் பின்னர் அம்மன் சந்நிதிக்குச் சென்று பார்த்த அந்தச் சிறுவன் தனக்கு சேஷாத்ரி சுவாமிகள் காட்டிய அதே கோலத்தில் அம்பாள் அதே புடைவை, அதே மாலைகள் போன்ற அலங்காரத்தில் காட்சி கொடுப்பதைக் கண்டு வியந்து போனான். சாக்தரான சேஷாத்ரி சுவாமிகளுக்கு இதை நிகழ்த்துவது ஒன்றும் அதிசயமல்லவே! இன்னொரு பக்தரின் மகனுக்கு வந்த ஜுரத்தில் அவன் கண்கள் தெரியாமல் போனது. பக்தர் மகனை அழைத்துக்கொண்டு சேஷாத்ரி சுவாமிகளைச் சரணடைந்தார். சுவாமிகள் அவரை மகனைத் தன்னிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லச் சொன்னார். அப்படியே பக்தர் சுவாமிகளிடம் மகனை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அன்றிரவு அந்தப் பையனை சுவாமிகள் அம்பாளின் சந்நிதியில் சென்று படுக்கச் சொன்னார். பையன் தயங்கிக்கொண்டே கோயிலுக்குச் சென்று குருக்களிடம் சொல்ல அவர்களும் சுவாமிகள் பேச்சைத் தட்டக்கூடாதென்று அப்படியே அவனை சந்நிதியில் விட்டுப் பூட்டிச் சென்றனர். மறுநாள் காலையில் கோயில் கதவைத் திறந்த போது அந்தப் பையன் தானாகவே உள்ளே இருந்து ஓடி வந்தான். கண்கள் தெரிய ஆரம்பித்தன. அருணாசலம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.
--Geetha Sambasivam 21:03, 15 டிசம்பர் 2011 (UTC) |