செவ்விலக்கியக் கோட்பாடும் திருமுருகாற்றுப்படையும் துரை.சீனிச்சாமி
பொதுவாக, உலக மனித வரலாற்றில், எழுத்தறிவு ஏற்பட்டு வளர்ச்சியுற்று வந்த தொல்காலத்தில், உருவான ஓர் இலக்கியப் பார்வையே செவ்விலக்கியக் கோட்பாடு. எழுத்தறிவு வளர்வதற்கு முன்னைய மொழி வெளிப்பாடுகள் யாவும் வாய்மொழியாகவே இருதன. எழுத்தறிவு வளர்ச்சிக்காலத்தில் உருவான ஓர் அறிவுக்குழு பழையவற்றிலிருந்து, எழுத்திலக்கிய முறைமையில், திட்டப்படுத்திய இலக்கிய முறைமையே செவ்வியம் யாப்புக்களை வரையறைப்படுத்தல், வகைகளை இலக்கணப்படுத்தல், மொழி அமைவை வரன்முறைப்படுத்தல் என அறிவுக்குழுவினர் திட்டஞ்செய்தனர். மேலும், அக்காலத்தில் அரசியல் பின்னணி அரசர்கள் மேலெழுந்து வந்த அரசுருவாக்கப் பின்னணியாகும் குடும்ப நிறுவனம் கெட்டியாக நிறுவப் பெற்று நாகரிக வளர்ச்சி பெற்றுவந்த காலமுமாகும். மறம், குடும்பநிலை உறுதி, பாலுறவு வரன்முறை போன்ற அக்காலத்திய சமூக-அரசியல் தேவைகளின் பின்னணியில் கருத்தியல் செயல்பட்டது. வாழ்வியலாக ஊடோடிய இக்கருத்தியல் தளத்தில் புதிதாகத் திட்டஞ் செய்யப் பெற்ற எழுத்திலக்கிய வரன்முறைகளும் இணைந்து உருவாகிய ஒரு பொதுமையாக்கப் பார்வையே செவ்விலக்கியக் கோட்பாடாகும். இக்கோட்பாட்டின் கருத்தியல் தளம் குறித்தும், எழுத்திலக்கிய அமைவு குறித்தும் தனிநாயக அடிகள் Tamil Culture and Civilisation என்ற ஆங்கில நூலில் விரிவாக விளக்கி உள்ளார். கீழ்க்கண்ட பண்புகளை அவர் எடுத்துக்காட்டி உள்ளார். தொல் தமிழ்க்கவிதைகளின் தொன்மைக்கூறுகளின் அடிப்படையில் இதனை விளக்கியுள்ளார். இக்கோட்பாட்டின் கருத்தியல் தளத்தை தமிழ் மனிதத்துவம் (Tamil Humanism) என அடையாளப்படுத்தி கீழ்க்கண்ட கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.*1
1.பொது நெறி (மதம் சாராதது. (secular)
2.சடங்கு ரீதியானதல்ல (not ritualistic)
3.பொது மனிதரின் வேட்கைகளும் உணர்வு வெளிப்பாடுகளும்
4.புரோகிதத் தன்மையற்ற பாணர்-புலவர் செயற்பாடுகள்
5.எல்லா வர்க்கம் சார்ந்த கவிஞர்கள் அமைதல்
6.குறிப்பாக, (வெளிப்படையின்றி) உணர்த்தும் காதல் பாடல்கள்.
7. கால-இடச்சூழல் சார்ந்த பாடல்கள் (situational poems)
8.நாடகத்தன்மை கொண்டமைதல் (Dramatic)
9.காதல் குறித்த அலசல் (Love analysis)
10. பாடாண்-கையறுநிலைகளாகவும் பாடலமைந்திருத்தல்
11. மறுமையில் ஆன்மிக நிறைவைத் தேடும் போக்கு இல்லாதிருத்தல்-இம்மையில் புகழ்-மானம் கருதுதல் (மறம் சார்ந்தது)
12. மனிதம் சார்ந்த உள் எழுச்சி நிலைகள் (inspirations)
இவற்றின் சாரத்தைக் கீழ்க்கண்டவாறு சுருக்கமாகக் கூறலாம்.
செவ்வியக் கவிதைகளின் ஊடோடும் கருத்தியல் தளம் இவ்வுலக வாழ்வு இனிமையானது என்பதாகும் . வாழ்க்கையை விட்டோடுவதல்ல. புகழையும் மதிப்பையும் வீரத்தையும் நிலை நிறுத்துவதே வாழ்க்கை. மரணம் துன்பமானதுதான். மரணத்தின் பின் வரும் மகிழ்ச்சி என்பது நல்லவற்றின் விளைவு ஆகும். கீழோர்க்குத் துன்பமே நிலையானது. எதிர்கால சில மகிழ்ச்சி, பெருமை என்பன நற்செய்கை மூலமும் வீரச் செயல் மூலமுமே நிகழ்வன ஆகும். காதல், களவு, திருமணம், குழந்தைகள் மனித நிறைவிற்குத் தேவையானவை. ஆளுமையின் முழு நிறைவுக்கு உரியவை.*2
இதனால் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று பொருளல்ல. கடவுள் உட்பட யாவும் மனித மேம்பாட்டுக்கான பொது நெறிசார்ந்தவையே. கருப்பொருள்களில் ஒன்றாகவே கடவுள் கருதப்பட்டது. வீர ஆற்றலும் இன்ப நுகர்வும் கடமை உணர்வும் அற உணர்வுமே இம்மை வாழ்வின் அடிப்படை விதிகள். இவற்றிற்கான செயற்பாடுகளே வாழ்வுச் செயற்பாடுகள். தமிழ்ச் செவ்வியத்தின் கருத்தியல் தளம் இதுவே. இதன் மேலமையும் இலக்கிய வெளிப்பாடுகளின் புலன் நெறிசார்ந்த பொதுமையாக்க விதிகளே அகம்-புறம் என்ற கோட்பாட்டாக்கம். பொதுநெறிசார்ந்த இந்தக் கருத்தியல் தளத்தில் ஏற்பட்ட மாறுதல் நிலையைக் காட்டுவதே திருமுருகாற்றுப்படை. இம்மாறுதல் நிலை என்பது பழைய பொது நெறியை விட்டுவிட்ட நிலையல்ல. பழைய நெறியுடன் புதியவற்றை இணைக்கும் நிலையாகும். செவ்விலக்கியக் கோட்பாட்டின் அடிக்கருத்தியல் தளத்தில் ஏற்பட்ட மாறுதல் நிலையைத் திருமுருகாற்றுப்படை காட்டுகிறது. இம்மாறுதல் நிலை, தமிழர் சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல் நிலையுடன் இணைந்தது.
பாடாண் திணையும் ஆற்றுப்படையும்: சீறூர் மன்னர் மற்றும் வேந்தர்களின் வீரம், கொடை குறித்துப் புகழ்ந்து பாடுவது பாடாண்திணை. இத்திணையின் துறைகளை (situations)விளக்கும் நிலையில் உள்ள கீழ்க்கண்ட குறிப்பிலிருந்தே ஆற்றுப்படை என்ற இலக்கியம் குறித்து விளக்கப்படுகிறது.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக்காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்னபக்கமும் (புறத்திணையியல், 30)
ஆற்றுப்படை என்ற சொல் ஓர் இலக்கிய வகையாகத் தொல்காப்பியத்தில் எங்கும் குறிக்கப் பெறவில்லை. உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டியுள்ள புறநானூற்றுப்பாடல்கள் துறை என்று கருதத்தக்க அளவிலேயே உள்ளன இத்துறை சில கவிஞர்களால் வகையாக வளர்க்கப் பெற்றுள்ளது. இவ்வளர்ச்சியில் மூன்று நிலைகளை அடையாளம் காணலாம்.
1.துறையாக அமையும் நிலை
2.தனிவகையாக, வீரர் (மனிதர்)புகழ்பாடுதல்
3.மனிதருக்கு மேலான கடவுள் முதன்மைபாடுதல்
இம்மூன்றின் வரிசையைத் தொடர்கால வரிசையாகவும் கொள்ளலாம்.
துறையாக அமையும் நிலை தொல்நிலை எனலாம். பின்னர், வைதிகர் தொடர்பு ஏற்பட்ட பிறகே தனிவகையாக ஆற்றுப்படை உருவாக்கப்பட்டிருக்கலாம். வைதிகர் தொடர்பு ஏற்பட்ட காலத்தில், தொடக்ககாலத்தில், பொருநர், சிறுபாண், பெரும்பாண் ஆற்றுப்படைகள் உருவாக்கப் பட்டிருக்கலாம். அடுத்த காலத்தில் திருமுருகாற்றுப்படை எழுதப்பட்டிருக்கலாம். காலத்தைத் துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால் வேத ஆதியர் தமிழர் தொடர்பு ஏற்பட்ட பிறகு விளைந்த தொல்கால நாகரிக இணைவுப் பின்னணியிலேயே திருமுருகாற்றுப்படை எழுதப்பட்டது எனலாம். பேராசிரியர் க.கைசாலபதி கூறியிருப்பது போல, முருகாற்றுப்படை என்பதே மூலப்பெயராகவும், திரு என்பது பிற்காலச் சைவர்களால் சேர்க்கப்பட்டது என்று கொள்வது சரியாகவே இருக்கும்.*3 திருமுருகாற்றுப்படை குறித்துப் பேராசிரியர் க.கைலாசபதி கூறியிருப்பது முக்கியமானது. அவர் கூறுகிறார்; ‘அது மறக்காலத்துக்கும் பின் வந்த காலப்(பின்னை மறக்கால: Post-Heroic)பண்புகளைக் கொண்டது. பிராமணிய ‘ஸ்கந்தா’கதை, தென் இந்திய சடங்கு சார்ந்த முருகக்கடவுள் கதையுடன் இணைவு பெற்ற ஒன்று*4 (The fusion in the lay of theBraninistic god skanda, with the essentially south Indian ritualistic god Murukan, It is a classic illustration of theoerassia)ஆக, மறவியல் முதன்மை கொண்ட செவ்விய இலக்கியக் கோட்பாடு சமயவியல் அல்லது ஆன்மிக முதன்மை கொண்டதாக மாறுதல் நிலை பெறுகிறது. இங்கே முக்கியமானது, செவ்விய இலக்கிய மரபுத்தடத்திலேயே இம்மாறுதல் நிலை ஏற்பட்டுள்ளது என்பதே ஆகும். பேராசிரியர் மொ.சு.துரை அரங்கனார் தனது ‘அன்பு நெறியே தமிழர் நெறி’ என்ற நூலில் இதனையே விரிவாக எடுத்து விளக்கி உள்ளார். அந்நூலில் அவர் இரண்டு முக்கியக் கருத்துக்களை எடுத்துக்காட்டி விளக்கி உள்ளார். 1.திருமுருகாற்றுப்படையும், நக்கீரரின் ஏனைய பாடல்களும் நடையில் வேறுபடவில்லை என்பது*5 2. அன்பின் ஐந்திணைப்பாடல்களில் காணும் அன்பின்விரிவே முருக அன்பு*6 கீழ்க்கண்டவாறு இதனை விளக்கி உள்ளார். இவ்வாற்றால், அன்பே சார்பாக இல்லறத்தில் இருந்து கொண்டே, சமநோக்குடன் எல்லோரிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் ஒழுகி அவ்வன்பே துணையாக யாண்டும் நீக்கமற நிறைந்திலங்கும் கடவுளைத் தாம் நினைத்த வடிவில் காட்டும் காட்சியைக் கண்டு அவனருளால் பிறவிப்பயனாம் பேரின்பம் எய்தலாம் என்ற தொன்று தொட்ட தமிழ் மரபினையும் போற்றி வந்தவர் நக்கீரர் எனலாம்.*7 சங்க இலக்கியங்களில் முருகன் பற்றிய செய்திகளை விரிவாக எடுத்துக்காட்டி, பழைய பரிசில் மரபு ‘விழுமிய பெறலரும் பரிசிலாக’ முருகன் அருள் திருமுருகாற்றுப்படையில் உயர்மை அமைவு பெற்றிருப்பதைப் பேராசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்கள், ‘சைவசித்தாந்தச் சாத்திர வரலாறு; என்ற நூலில் மிக விரிவாக விளக்கியுள்ளார். செவ்விய மரபுத் தடத்தில் முருகாற்றுப்படை இயங்குவதற்குக் க.வெள்ளைவாரணனார் காட்டும் சான்றுகளில் ஒரே ஒரு சான்று மட்டும் கீழே தரப்படுகிறது. வாகைத் திணை பற்றி செவ்விலக்கியக் கோட்பாட்டு நூலான தொல்காப்பியம் கூறுவது:
வாகைதானே
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை
பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப*8
இம்மொழி நடையில் நக்கீரனார் கூறுவது:
தாவில் கொள்கைத்தம் தொழில் முடிமார்
மனனேர் பெழுதருவாணிற முகனே*9
மாறுதல் நிலையின் உடன்தொடர்ச்சி நிலையை இங்கே காணமுடிகிறது. முருக வழிபாடு தமிழ்நாட்டுத் தொல்வழிபாடு என்பதற்குக் கீழ்க்கண்ட அகநானூற்றுச் சான்று ஒன்று போதும்.
களம் நன்கிழைந்து கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப்பலி கொடுத்து
உருவச் செந்திணை குருதியொடு தூஉய்
முருகாற்றுப்படுத்த உருகெழு நெடுநாள்*10
மற்றும் வேலன், வெறியாடல், குரவை, மயில்கொடி, யானை ஊர்தி போன்ற பல செய்திகள் யாவரும் அறிந்தவை. முருகன் வள்ளி புணர்ச்சி உறவு, சூரபத்மனை அழித்த செய்தி ஆகியன முக்கியமானவை. மேலே எடுத்துக்காட்டிய அகநானூற்று வரிகளில் காணப்படும் ‘முருகாற்றுப்படுத்த’ என்ற தொடர், திருமுருகாற்றுப்படையிலேயே உள்ளது.*11 மேலும், வேந்தரின் வீரமும் சினமும் முருகனின் சீற்றத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ள செய்தியும் சங்கப்பாடல்களில் உண்டு.*12 இந்த வீரமரபு மற்றும் தொல் தெய்வமரபு புதிய பக்திமரபாக மாறுவதைக் கீழ்க்கண்ட பாடல்வரிகள் மூலம் பேராசிரியர் வெள்ளை வாரணனார் விளக்கி உள்ளார்.
நின்னளந்தறிதல் மன்னுயிர்க்கருமையின்
நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய்*13
இந்த வரிகள் பழைய செவ்விலக்கிய மொழி பக்திமொழியாக மாறுவதைக் காட்டுகின்றன. (பொதுநெறி சார்ந்த செவ்வியல்மரபு ஆன்மிக நெறியாக வகை மாற்றம் பெறுகிறது.) இம்மாறுதல் நிலையையும் உடன் தொடர்ச்சி நிலையாகவே காண முடிகிறது.
இப்பக்தியின் அல்லது புதிய கருத்தியலின் பதிவுகள் திருமுருகாற்றுப்படையில் அமைந்துள்ள பாங்கு பற்றி விரிவாகக் காணலாம். பக்தி ஆன்மா என்ற புதிய குரல் முருகாற்றுப்படையில் கேட்டாலும் அது, தொல்மரபு உள்ளிணைந்த தமிழ்-ஆரியக் கருத்திணைப்புடன் அமைந்துள்ளது என்பதை விளக்கமாகக் காணலாம்.
கருத்தியல் இணைவு:
திருமுருகாற்றுப்படை குறித்து பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கூறியுள்ள ஒரு கருத்து இங்கே கருதத்தக்கது.
‘உலகத்தில் எல்லோர் அறிவையும் மயக்கிக் குழப்புவது, நன்மை தீமைகளும் இன்பதுன்பங்களும் உலகில் சிக்கிக்கிடக்கின்ற நிலையேயாம். தீமையினை விளக்குவதே தத்துவ சாஸ்திரங்களின் பெருமுயற்சி, கடவுள் புலவர்களின் பேரவா. நக்கீரரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுப் பாடுகிறார்.*14
ஆன்மா சேற்றில் அழுந்தி விடுபட்டு உயர்நிலை அடைவது பற்றிய விளக்கமாக முருகாற்றுப்படையை தெ.பொ.மீ. பார்க்கிறார். சேற்றில் அழுந்தி உயர்நிலை பெறுதல் என்பதே தொல் தமிழ்க்கருத்தியலுக்கு முரணானது. இவ்வாறு தனி நபர் அனுபவம் சார்ந்த எழுத்தே பக்தி இலக்கியக் காலப்பாடல்கள். பிற்காலப் பக்தி உணர்வின் வெளிப்பாடாகத் திருமுருகாற்றுப்படையை அப்படியே இவ்வாறு பார்க்க முடியுமா என்பது ஆய்விற்குரியதே. இறைவனைச் சரணடைதல் என்ற கருத்தாக்கம் இருந்தாலும் கூட திருமுருகாற்றுப்படை பிற்காலப் பக்தி இலக்கியங்களில் இல்லாத தொல்மரபையும் உட்கொண்டுள்ளது எனலாம். இங்கே கருத்தியல் வேறுபட்டும் அமைந்துள்ளது.
இப்பாடலில் பக்தர்களின் வகைகள், வழிபாட்டு வகைகள், வழிபாட்டு இடங்கள், முருகனின் வடிவக் குறியிட்டுப் பொருள், முருகனின் அருட்செயல் ஆகியன விளக்கப்பட்டுள்ளன. எதிர் எதிரான பண்பு கொண்ட பக்தர்களைக் காண்கிறோம். செந்துகிலில் கைபுனைந்தியற்றாக் கவின் பெறுவனப்புடன் சூர அரமகளிர் வருகின்றனர். இதற்கெதிராகக் கண்ணைத் தோண்டி எடுத்து உண்ணப்பட்ட தலையை ஏந்தியவாறு அச்சந்தரும் பேய்மகள் வருகிறாள். கந்தர்வ மகளிர் வருகின்றனர். அகத்தூய்மையும் புறத்தூய்மையும் கொண்ட முனிவர் வருகின்றனர். 46 ஆண்டுகள் பிரமசரியம் காத்து மெலிந்த தோற்றத்துடன் இருபிறப்பாளர் முத்தீ அந்தணர் வருகின்றனர். அந்தணர் பற்றிய இலட்சியக் கருத்தாக்கமே இது. கிடாய்ப்பலி இட்டு அரிசி தூவி குறிஞ்சிப்பண்பாடி குறவர் வருகின்றனர். நன்மை-தீமை, அழகானது-அழகற்றது என்ற உலகியல் உண்மைக்கு மேலும் ஓர் உண்மையாக முருகன் ஒளியாகிறான். இது அகஒளி என்பதில் ஐயமில்லை. தமிழ்மரபின் தொல் ஆவிச்சக்தி வழிபாட்டுக்குரிய நிலையிலிருந்த முருகனிலிருந்து, ஆரிய வேதக்கருத்துக்களுடன் ஏற்பட்ட உறவின் மூலமான புராணிக வழிபாட்டுக்குரிய முருகன் வரை இங்கே காணமுடிகிறது. இயற்கையில் கண்ட ஆவிச்சக்தி மனித இதயத்துக்கு மாற்றப்படுகிறது. இதில் ஒரு பண்பாட்டு இணைவு இலட்சியம் தெரிகிறது. இப்பாடல் வெறுமனே பக்திப்பாடல் என்பது குன்றக்கூறலாகும்.
முருகனை விளித்துக்கூறும் முறையிலும் இந்த இணைப்பை நக்கீரர் மிகக்கவனமாக தொல்வரலாற்று ஊர்வோடு கூறுகிறார்.
ஆல்கெழு கடவுள் புதல்வ
மால்வரை மலைமகள் மகனே
வெற்றி கொற்றவை சிறுவ
பழையோள் குழவி
அந்தணர் வெறுக்கை
அறிந்தோர் சொல்மலை
மாலை மார்ப
புலவர் ஏறு
குறிஞ்சிக்கிழவ
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர்க்கடவுள்
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக
பரிசிலர் தாங்கும் உருகெழு நெடுவேள்
நூலறி புலவர்*15
இவ்விளிகள் அனைத்தும் அலங்காரத்தன்மை கொண்டவை அல்ல. தமிழ்நாட்டுத் தொல்மரபு சார்ந்த வழிபாடு புதிய பரிமாணம் பெற்றதைக் காட்டுவது. கொற்றவைக்கும் முந்திய தாய்த் தெய்வம் பழையோள் ஆக, ஆதி நாளிலிருந்து தன் காலம் வரை இருந்து வரும் தமிழ்சார்ந்த அரும்பெறல் மரபின் மீது புதிய முருக தத்துவத்தை நக்கீரர் காட்டுகிறார்.
இந்தத் தொன்மை புதுமை இணைப்பை முருகனின் ஆறுமுகங்களிலும் நக்கீரர் காட்டுகிறார். ஆறுமுகங்களில் ஒன்று தொல் வீர மரபில் செறுநர்த் தேய்த்து களவேள்வி வேட்டது ஒரு முகம். குறமகள் வள்ளியுடன் மகிழ்ச்சிபொருந்தியது. இவை இரண்டும் தமிழ் வேர்கள். மூன்றாவது ஒருமுகம் வரங்கொடுப்பது. இன்னொரு முகம் அந்தணரின் மந்திர வேள்வியை ஓர்ப்பது. இன்னொரு முகம் நூல்களை ஆராய்வது. இவை மூன்றும் வேத-புராணிகப் பண்பு கொண்டது. நக்கீரர் காலப் புதிய பார்வை நூல்களை ஆராய்வது என்பது வேத உபநிடதங்கள் மற்றும் பிற தத்துவ நூல்கள் எனக்கூறலாம். கடைசியாக ஆறாவது முகமே இருளை நீக்கும் கதிர் ஒளி விரிப்பது. இது மட்டுமே ஆன்மாவுக்கான தனிநபர் தத்துவ விளக்கம். பிறமுகங்கள் ஆரிய-தமிழ் இணைவு சார்ந்த இலட்சியமே ஆகும்.
காடுங்காவும் கவின்பெறு துருத்தியும்
யாருங்குளனும் வேறுபல்வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங்கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்*16
எனத் தொல்காலமுதல் வணங்கப்பட்டவனே இப்போது அகஒளியாக மாறுகிறான். முரண்பாடுகளை மீறிய ஒரு சக்தி, அது உலகிருளை நீக்கும் ஒளியாக நிற்கிறது. இப்பாடலில் இடம்பெறும்,
இருஞ்சேற்றகல வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி ஏற்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்*16
என்ற பகுதியையே ஆன்மாவின் உயிர்ப்பாகத் தெ.பொ.மீ. விளக்குகிறார். இது ஒரு புதிய ஆன்மிக உள்ளுறை உவமமாகிறது. உள்ளுறை உத்தியில் ஆன்மிகப் பொருள் ஆக்கப்படுகிறது.
தொல்கடவுள் மரபும் செவ்விலக்கியமரபும் புதிய நவிற்சியுடன் இணைகின்றன.
மேலும் பரிசிலர் தாங்குபவனாக முருகன் கூறப்படும்போது தொல்மரபின்கொடை அறத்தைப் பாதுகாப்பவனாகிறான். மாலைமார்ப என்னும்போது போக நுகர்ச்சிக்குரியவனாகிறான். எனவே, காலங்காலமாக இருந்து வரும் உலகிய இன்பவாழ்வின் பிரதிநிதியாகவும் முருகன் உள்ளான். அதே சமயம் முரண்கள் மிக்க வாழ்வில் அகஒளியாகவும் இருக்கின்றான். இங்கே ஆன்மா-பரமான்மா என்ற வேறுபாடு உள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பரமான்மா அல்லது பிரம்மம் மட்டுமே உண்மை என்ற பிரம்மவாதம் வைக்கப்படவில்லை. உலகிய வாழ்வில் இன்பதுன்பங்கள் இயல்பானவை. அகஒளியில் அவற்றின் இருள் நீங்கும். தொன்று தொட்டு வரும் அறவாழ்வு தொடரும். இத்தொடர்ச்சியின் கூறாகவே அகஒளியும் இடம்பிடிப்பதால் இது தமிழ்மரபின் தொல்காலப் பொது நெறியின் புதிய வடிவமே எனலாம். புராணிகம் சார்ந்த கடவுளியல் இங்கே தொல்பொது நெறியுடன் இணைவு பெற்றுள்ளது. எனவே, இது தமிழ் மெய்யியலின் புதிய கூறாக அமைகிறது எனலாம். இதனை, திருமுருகாற்றுப்படையே இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது.
தெய்வஞ்சான்ற திறல் விளங்குருவின்
வான்தோய் நிவப்பின் தான் வந்தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீ பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்தின் நலங்காட்டி
‘உலகம் உவப்ப’*17 என்று தொடங்குவதற்கேற்ப, உலகியம் சார்ந்த கடவுளியலாக நக்கீரரின் மெய்யியல் அமைகிறது. இது தமிழ் மெய்யியலாக அடையாளம் காட்டி அமைவதென்பதில் ஐயமில்லை. உலகாயதமாகவோ பிரம்மவாதமாகவோ, தனித்தனியாக இது அமையவில்லை. ஆனால் உலக உவப்பும் கொடை அறமும் உள்ளொளியுமாக தனிமனிதன்-- சமூக ஆரோக்கியம் சார்ந்த ஒரு மெல்லிணைவு இலட்சியமாக நக்கீரரின் மெய்யியல் அமைந்துள்ளது. ஒளியும் இருக புனைந்தியற்றாக் கவினுமாக இம்மெய்யியல் தமிழ்ப் புராதன இலட்சியமரபிலேயே வேர் கொண்டுள்ளது.
சிவனின் மகன், மலைமகள் மகன், கொற்றவை சிறுவன், பழையோள் குழவி என்று வரிசையாகத் தொல்காலத்திலிருந்து ஆரிய-வைதிக இணைப்பு வரையிலான மாற்றங்களை நக்கீரர் பட்டியலிட்டுக் காட்டுகிறார். வேள்விப்பலிகளை விட்டுவிட்டுத் தமிழரின் கருத்தியலை ஏற்றுப் புதிய புராணங்கள் மூலமாக இணைவு செய்து கொண்டனர், வேத வேள்வி அந்தணர்கள். அந்தச் சுமுகமான உறவு என்பது சமண-பெளத்த எதிர்ப்பு என்ற சூழலில் உருவானது எனலாம். பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் இதனை இவ்வாறு விளக்குகிறார்:’வேத வழிப்பட்ட வேள்விச் சடங்குகளையே வற்புறுத்தி வந்த வைதிக சமயத்தார், தமது கொள்கை, நாட்டில் தனித்து நிலை பெறுதற்குரிய வன்மையில்லாதது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு நெடுங்காலமாக இந்நாட்டு மக்கள் உள்ளத்திலே நிலைபெற்று வளர்ந்துள்ள சைவம், வைணவம் முதலிய தெய்வக்கொள்கைகளின் சார்பினைப் பெற்று நாட்டில் நிலையாக வேரூன்றி நிலை பெறுவாராயினர். *19
வைதீகப் புராணிக மரபையும், ஆரியர் கதை மரபையும் அந்தணர் தமிழகத்தில் குடிபெயர்ந்த நிலையையும் பிற ஆற்றுப்படைகளே பதிவு செய்து உள்ளன. தொல்தமிழரின் கொடைமரபு, அந்தணர்களுக்கு இடம், குடி, நிலம் வழங்கியதோடு ஒத்ததே. நிலம் வேளாண்மைத் தொழில் என்ற பின்புலத்திலேயே வைதிகமும் பழைய தெய்வமரபும் இணைந்தன. சமண பெளத்தமோ வணிகம், தெய்வமறுப்பு ஆகியவற்றுடன் இணைந்திருந்தன. ஆயினும் முருக வழிபாடு தமிழ்நாடு முழுமைக்கும் உரியதா என்ற ஐயம் உள்ளது. தொல்காலத்திலேயே முருகன் துணங்கைச் செவ்வியின் மகனாக மாறுதல் பெற்றமையைப் பெரும்பாணாற்றுப்படை பதிவு செய்து உள்ளது. இதில் புராணிகமும் இணைந்துள்ளது.
வெண்திரைப்பரப்பின் கருஞ்சூர் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்த மாமோட்டுத்
துணங்கை அம்செல் விக்கு அணங்கு நொடித்தாங்கு”*20
என்ற வரிகளில் இப்பதிவைக்காணலாம். திருமால் புராணம்*21 பாரதக்கதை*22 அந்தணர் குடியிருப்பு*23 ஆகியன பற்றிய பதிவுகளும் ஆற்றுப்படைகளில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு-வடநாடு தொடர்பு என்பது கடல் வணிகம் மூலமாகப் பெருகியது என்பதை பெரும்பாணாற்றுப்படையின் ஒரு பதிவு காட்டுகிறது. மகாபலிபுரக் கடற்கரைக் காட்சி, அந்தணர் இருக்கை, கலங்கரை விளக்கம், மாடம் மலிந்த தெருக்கள் நிறைந்த நகர வாழ்வையும் காண்கிறோம். சமண, பெளத்த உறவுப் பின்னணி முரணிய சூழல் இந்தப் பின்னணியில் தெளிவாக உய்த்துணர்ந்து கொள்ளலாம்.
‘கள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித்தானத்து அசை இயவனர் ஓதிம விளக்கின் உயர்மிசைக்கொண்ட வைகுறுமீனின் பையத்தோன்றும் நீர்ப்பெயற்று எல்லைப் போகிப் பாற்கேழ் வாலுனைப் புரவியொடு வடவளம் தரூஉம் நாவாய் சூழ்ந்த நனிநீர்ப்படப்பை மாடம் ஓங்கிய மணல் மலிமறுகின் பரதர் மலிந்த பல்வேறு தெருவின்.’*24
தொல்காலம் முதல் நிகழ்ந்த மாறுதல் நிலைகளில் தொல்பாணர்-பொருநர், அரசுருவாக்கக் காலத்தின் புலவர், அதன்பின் வந்த அந்தணர் ஆகிய மூன்று நிலையினர்க்கும் பரிசில் தந்தமையைச் சிறுபாணாற்றுப்படையின் ஒரு பதிவின் மூலம் ஊகித்தறியலாம். ‘நீறடங்கு தெருவின் அவன் சாறயர் மூதூர் சேய்த்தும் அன்று சிறிது நணியதே பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் கடவுள் மால்வரை கண்விருத்தன் அடையாவாயில் அருங்கடை குறுகி.*25
தொல்தமிழர் பரிசில்-கொடைமரபுச் சூழலில் வேத அந்தணரின் குடி அமர்பு மிக இயல்பாக நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. ஆனால், ‘அக ஒளி’ பற்றிய ஆன்மிகக் கருத்தியல் உருவானது, வணிக வளர்ச்சியும் நகர வளர்ச்சியும் பெருகிய மாறுதல்காலப் பின்னணியிலேயே எனலாம். மோதல்கள், முரண்கள், (conflicts) பெருகிய காலத்திலேயே உள்முகப்பார்வை வளர்ந்தது. சமூக முரண்களுக்கான விடையாக இலட்சியக்கனவு ஒரு புறம் ஏற்பட்டது. மறுபுறம் இறைமையில் சரணடைந்து அகஒளி பெற்று அனைத்தும் பெறலாம் விடுதலையும் பெறலாம் என்ற நோக்குகள் உருவாயின. பெரும்பாணாற்றுப்படையில் இலட்சிய நாடு பற்றி பகற்கனவு பதிவாகி உள்ளது.
‘அத்தம்செல்வோர் அலறத்தாக்கி, கைப்பொருள் வெளவும் கடைவேர் வாழ்க்கை, கொடியோர் இன்று அவன் கடியுடைவியன் புலம், உருமும் உராது அரவும் தப்பா, காட்டுமாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு, அடைவுழி தசைஇ அடைவழி தசைஇ நசைவுழித் தாங்கிச் சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம்.’
இந்த இலட்சியக் கனவின் மறுபக்க நிலையாகவே அகஒளி நாரும் திருமுருகாற்றுப்படை தோன்றியது எனலாம். இதன் கவிதை மொழி, கருத்தியல் பதிவுகள், புராணப்பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் உறுதியாக இது மறக்கால (Heroic)இலக்கிய ஆக்கம் என்று கூற முடியாது. ஆனால் தொல் செவ்விலக்கியக் கோட்பாட்டுத் தடத்தில் மறக்காலத்தை அடுத்துப் பக்திக்காலத்தின் உடன் முன்காலத்தில் (immediate past) வேத அந்தணர் உறவுச் சேர்க்கை ஏற்பட்டு வந்த காலத்தில் தோன்றியது எனலாம். கி.பி.600ஆம் காலத்திற்கு முன் கி.பி. 4 அல்லதுகி.பி 5-ல் எழுதப் பட்டிருக்கலாம். காலத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாது. ஆனால், தொல்தமிழ் பாடல்மரபு, கருத்தியல்மரபு, கடவுள்மரபு ஆகியனவற்றுடன் வைதிகப் புராணிக மரபு இணைவு பெற்ற புதிய கோட்பாடே திருமுருகாற்றுப்படை எனலாம். வணிகவேளாண் தொழில்முரணிய , நகரவாழ்வுச் சூழலின் பின்னணியே இதன் உந்து சக்தி.
அடிக்குறிப்புகள்.
1.X.S. Thani Nayagam, Tamil Culture and Civilization, pp. 787
2.I bid, pp. 82-83 (These poems are again very human and humanistic and in order to assess this Tamil Humanism, are has to Consider the entire complex of attitudes puvalent and tottered in Tamil Society, and the obstructions and Universals which comprise the conscious and unconscious metaphysics of the age as expressed in the anthologies. Life is Considered pleasant and joyful and death sad ending. There is no attempt to obtain release from life excewpt to vindicate honors and peavey and the love for a husband who has passed away……….. Happiness in the future world is conceded only to those who by their bravery and altruism have established their glory in this world; love and courtship, marriage, and children are considered necessary modes of human fulfillment and perfection of personality.)
3. K. Kailasapathy, Tamil Heroic Poetry, P. 36.,
4. bid p 35-36
5. மொ.சு.துரையரங்கனார், அன்புநெறியே தமிழர் நெறி, பக். 285
6.மேலது பக். 283-270
7.மேலது பக். 269-270
8.தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், சூத். 15
9. திருமுருகாற்றுப்படை
10.அகம் 22 :8-11
11.திருமுருகாற்றுப்படை 89-90
12.மேலது 278-280
13.தெ.பொ.மீனாட்சி சுந்தரன், தமிழ்க்களஞ்சியம், பக். 237
14.திருமுருகாற்றுப்படை 255-269
15.மேலது 223-226
16.மேலது 72-76
17.மேலது 287-290
18.க.வெள்ளைவாரணனார், சைவசித்தாந்த சாத்திர வரலாறு, பக். 27-28
19.பெரும்பாணாற்றுப்படை, 457-459
20.மேலது 402-404
21.மேலது, 440-448
22.சிறுபாணாற்றுப்படை186-188
23.பெரும்பாணாற்றுப்படை315-323
24.சிறுபாணாற்றுப்படை201-206
25.பெரும்பாணாற்றுப்படை, 39-45
அரிமா நோக்கு 2:2 சூலை 2008
'--Geetha Sambasivam 12:45, 26 ஆகஸ்ட் 2011 (UTC)'