செஞ்சொற்கவி - செஞ்சொற் கவியின்பம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

செ.வைத்தியலிங்கன்


 

தமிழ்நாட்டுச் சமய ஞான அருளாளர்கள் திருவாக்கிலே செஞ்சொற்கவி - செஞ்சொற் கவியின்பம் ஆகியவை எத்தகைய சமய ஞானக் கருவூலங்களாக அமைந்துள்ளன என்பதை ஓரளவு சிந்தித்து மகிழ்வோம்.


செந்தமிழ்ப் புலமை நலம் வாய்க்கப்பெற்றவர்கள் அருளிய பாடல்கள் "கவிகள்" எனப்படும்; அத்தகைய கவிகளைப் பாடுபவர்களும் "கவிகள்" ஆவர்.


தேர்ந்தெடுத்த செந்தமிழ்ச் சொற்களால் பாடியருளிய அருளாளர்களாகிய நம்மாழ்வாரும், கம்பநாட்டாழ்வாரும் செஞ்சொற் கவிகளால் மெஞ்ஞான விருந்தளித்துள்ளனர்.


முதலில் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரத்தைக் காண்போம்.


"செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட்
செய்ம்மின் திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்துஎன்
நெஞ்சும் உயிரும் உள்கலந்து
நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவைஉண்டு
தானே யாகி நிறைந்தானே.
(7:1)

என ஆழ்வார் பாடுகையில், செஞ்சொற்கவி பாடவல்ல கவிஞர்களை நோக்கி எச்சரிக்கிறார்.


அவரே தம் அனுபவத்தைக் கூறுகையில், திருமாலிருஞ்சோலையில் உள்ள மாதவத்திருமால், வஞ்சகக் கள்வனாக மாயம்புரி கவிஞனாக வந்தருளித் தம் நெஞ்சத்தையும் உயிரையும் ஒருமைப்படுத்தி, அவற்றைக் கபளீகரம் செய்து இரண்டறக் கலந்துவிட்டான் என விண்டுரைக்கிறார்.


இதனால், செஞ்சொற் கவிஞர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமெனில், திருமாலிருஞ்சோலை பக்கம் தலைகாட்ட வேண்டாம் என எச்சரிப்பது தெரிகிறது.


வியத்தகு ஞானக் குறிப்புப் பொருள் யாதெனின், அருட்பாசுரமாகவே - பாசுரம் பாடவல்ல கவியாகவே தம்மை ஒருமுகப்படுத்திக் கொள்ளுதலும், திருமாலின் திருவருள் நிலையாகும்; அஃதாவது, அடியார்க்கு எளியனாகும் தன்மையாகும்.


நம்மாழ்வாரின் இத்திருவாய்மொழிப் பாசுரம் கம்பநாட்டாழ்வாரை மிகமிகக் கவர்ந்துள்ளது.


திருமாலை செஞ்சொற்கவியாக - மாயக்கவியாக மாறும்போது, அவரே இராமாவதாரம் எடுக்கையில், அவருக்குத் தேவியாக சீதை அமைவதும், கம்பரைக் கற்பனை உலகுக்குக் கொண்டுசெல்கிறது. கம்பராமாயணத்தில் மதிலைக் காட்சிப் படலத்தில் இராமன் சீதையைக் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.


அப்போது சீதையை வர்ணிக்கும் பாங்கு, செஞ்சொற் கவியின்பமாக அமைகிறது; அவளே செஞ்சொற் கவியின்பமாக வடிவெடுக்கிறாள்.


அந்தக் கம்பச்சித்திரம் வருமாறு:-

"பொன்னின் ஜோதி போதினில், நாற்றம் பொலிவே போல்
தென்னுண் தேனில் தீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத் தும்பரின் மாடே கனிபே டொடு
அன்னம் ஆடும் முன்றுறை கண்டு ஆங்கு அயல்நின்றார்.
(28)

சிந்தனைக்கு விருந்தளிக்கும் இப்பாடலை ஒரு திருக்குறள் வெண்பாவை அடியொற்றிச் சிந்தித்தால் கற்பனைத்திறம் புலனாகும்.

"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும்; ஐம்புலனும்,
ஒண்தொடி கண்ணே உள.
(குறள் - 1101)

என்பதில், காட்சிப் புலனாகிய "பொன்னின்சோதி", உயிர்த்தல் புலனாகிய "போதினில் நாற்றம்",வாய்ச்சுவைப் புலனாகிய "தென்னுண் தேனின் தீஞ்சுவை", கேட்டல் புலனாகிய "செஞ்சொற் கவியின்பம்", மெய்யுறு புணர்ச்சிக்கு முன்னதாகிய காதலுக்கு "கனிபே டொடு அன்னம் ஆடும் முன்றுறை" ஆகியவை இயைந்துள்ளமை காணலாம்.


நம்மாழ்வார் குறிப்பிட்ட "செஞ்சொற்கவி" செளந்தர்ய ஆராதனைக்குரிய குறிப்பாகவும், கம்பர் குறிப்பிட்ட "செஞ்சொற் கவியின்பம்" செளந்தர்ய ஆராதனையாகவும் சிந்திக்க வேண்டும்.


அருளாளர்கள் இருவருமே கேள்விச்செல்வம் வாயிலாக அழகனுபவ அணுகுமுறையை வழங்கியுள்ளனர்.


நன்றி:- தினமணி

--Ksubashini 07:54, 26 ஜூன் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 26 ஜூன் 2011, 07:54 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,941 முறைகள் அணுகப்பட்டது.