தாய் தன் மகனது வருங்காலப் புகழில் ஈடுபடுகிறாள். இவன் வருங்காலத்தில் துரைமகனாவானோ? கைநிறைந்த புத்தகத்தைக் கையில் எடுத்துப் போதிக்கும் ஆசிரியனாவானோ? எப்படியாவது புகழ் பெற்று வாழப் போகும் இவனுக்கு பால் கொடுக்கும் பசுவிற்கும் பெருமை உண்டல்லவா? அப்பெருமையைத் தேடிக்கொள்ள பொழுதிறங்க ஒடிவாவென்று தாய் பசுவை அழைக்கிறாள;¢ முதற் பாடல் நெல்லை மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடல் சேலம் மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடலில் மருமகன் பால்குடிக்க மாமன் தங்கச் சங்கு செய்தளித்த விவரம் கூறப்படுகிறது. இப்பொருள் பரவலாக பாடப்படுகிறது.
கண்ணே கண்மணியே
கண்ணுறங் காயோ!
காரவீடோ கச்சேரியோ,
கைநிறைந்த புத்தகமோ!
ஸ்ரீ வில்லிபுத்தூர் கச்சேரியோ,
செல்லத் துரைமகனோ!
மானுறங்கும் மெத்தை, நீ
மயில் உறங்கும் பஞ்சுமெத்தை
தான் உறங்கா என் கண்ணே
தவம் பெற்று வந்தவனோ!
பட்டால தொட்டில்,
பவளக் கிலுகிலுப்பை
முத்தாலா பரணம்
முடியப் பிறந்தவனோ!
மலையேறிப் பசுமேய
மலைக்கெல்லாம் ஓசையிட
பொழுதிறங்க வா பசுவே என்
பொன்னு மகன் பால்குடிக்க
மலை மேலே பசு மேயும்
மலைமுடியும் ஓசை விடும்
காலையிலே வா பசுவே
கண்ணு மகன் பால் குடிக்க
பொழுதுறங்க வா பசுவே என்
பொன்னு மகன் பால் குடிக்க
மாட்டுப் பால் போட்டால்
மறுவழிஞ்சு போகுமின்னு
ஆட்டுப்பால் போட்டா
அறிவழிஞ்சு போகுமின்னு
கலையம் கழுவி
காராம் பசுக் கறந்து
அடுப்பு மொழுவி
அரும்பரும்பாக் கோலமிட்டு
செம்பு வெளக்கி
சிறு உமி பரப்பி
தங்க வெற கொடிச்சு
வெங்கலத்தால் பால் காச்சி
பொன்னு சங்கெடுத்து
போட்டாராம் உன் மாமன்
இத்தனையும் செய்வதற்கு
என்ன வெகுமதியோ
கிண்ணத்திலே சந்தனமாம்
கிளிமூக்கு வெத்திலையாம்
சருகைத் தலைப்பாவாம்
ஜாடை செய்யும் சால்வையாம்
வட்டார வழக்கு: மொழுவி-மெழுகு;
போட்டா-புகட்டினால்.
தலாட்டுபாடல் 13
பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !
வட்டார வழக்கு: கன்னாரே, பின்னாரே-
பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்).
இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச்
செய்யாவிட்டால் மாமியார் முகம்
கோணலாகிவிடும்.
எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு
விடாமல் சொல்லி வரும். வங்காளத்தில்
“பாரோ மாசி” என்ற நாடோடிப் பாடல்
வகை உள்ளது. அதில் பன்னிரெண்டு
மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும்
உழவு வேலைகளையும் ஒரு கதையோடு
தொடர்புபடுத்திப் பாடுவார்கள். இவற்றுள்
எல்லா வகைகளைப் பற்றியும் “தூசன்ஸ்பக்விட்டல்
” என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர்
ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். அவற்றுள்
ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம்
செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக்
கூறப்படுகின்றன. உதாரணமாக எந்த மாதத்தில்
ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த்
தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும்
என்பனவெல்லாம் வரிசைக்கிரமமாகக் கூறப்படும்.
பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக
இருக்கும். உழவர் ‘பாரோ மாசி’ தான் இவ்வகைப்
பாடல்களிலேயே புராதனமானது. அவற்றிலிருந்து
கதைப் பாடல்களும், பக்திப் பாடல்களும்
தோன்றியிருக்கின்றன. வங்காளத்துப் ‘பாரோ
மாசி’யைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில்
தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய
கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள்.இவ்வறிவுரை
மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்.
தாலாட்டுப்பாடல்கள் சேகரிப்பு திருவெங்கட்ராம் ஶ்ரீநிவாஸ்