சீனுவின் தாலாட்டுப் பாடல்கள் பகுதி 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
செட்டியார் தாலாட்டு - 2
ஆறாம் பெரியேரி
அக்கரையும் பொன்னேரி
பொன்னேரி போய் திரும்ப
பொழுது இல்லா புண்ணியராம்.
நல்ல மாங்கொல்லையிலே
புள்ளி மான் மேயுதடா,
புள்ளி மான் புடிச்சிக் கட்ட
புடி கவறு பொன்னாலே!
காசி யளப்பான் செட்டி மகன்
முத்தாளப்பன் வேவாரி,
வச்சியளக்கச் சொல்லி,
வரிசையிட்டான் தாய்மாமன்,
அஞ்சு கிளி மையெழுதி-உங்க
ஐயனார் பேர் போட்டு,
கொஞ்சுக் கிளி போகுதப்பா!
கோவக் கனி கொண்டுவர,
அன்னக் கிளி போகுதையா-உனக்குத்
தின்னுங்கனி கொண்டுவர,
தூங்கற கண்ணுக் கெல்லாம்
துரும்புகிள்ளி மையெழுத
கன்னான் மகனாம் நீ!
காசித் தட்டான் தன் மகனாம்!
செட்டி மகனாம் நீ!
சென்னு செட்டி பேரனாம், நீ!
மானத்து மீனாம் நீ!
மச்சி செட்டி தான் மகனாம்!
தோட்டத்து மீனோ நீ!
தொரைங்க கிளாமணியோ!
வண்டு கொடஞ்ச மரம்!
வாசலுக்கு ஏத்த மரம்!
தும்பி தொளச்ச மரம்!
தூணாகுமோ தொட்டிலுக்கு?
ஏறாத மலையேறி,
இளவாரை மூங்கைவெட்டி,
எட்டாத தொட்டிலிட்டு
எட்டாத தொட்டிலிலே,
தொட்டாடும் கண்மணியே!
தொட்டிலிட்ட நல்லம்மான்,
பட்டினியாய்ப் போராண்டா,
பட்டினியாய்ப் போன மாமன் - உனக்குப்
பரியங் கொண்டு வருவானோ?

வட்டார வழக்கு: வம்மிசம் - வம்சம்; பெத்த - பெற்ற; வேவாரி - வியாபாரி; 
கொறம் - குறம்; புடிச்சுக்கட்ட - பிடித்துக்கட்ட; 
மானத்து மீன் - வானத்துமீன்; 
தொளைச்ச - துளைத்த; தொரைங்க -துரைகள்; பரியம் - பரிசம்.
காசி அளப்பான் செட்டிமகன் - காசி பதம் என்ற குறிப்புரையில் காண்க.
துரைங்க கிளாமணியோ! - துரைகளது கிளர்மணியோ என்று படிக்கவும்.

குறிப்பு:  காசிபதம் - நாட்டுக் கோட்டைச் செட்டியர்களை நகரத்தார் என்று
அழைப்பது வழக்கம்.  பண்டைக் காலத்தில் கூட்டாக வாணிபம் செய்யும் 
குழுக்களுக்கு நகரம் என்று பெயர் உள்ளன.  இதனைச் சோழர் காலத்திய 
கல்வெட்டுக்களால் அறிகிறோம்.  வடநாட்டு நகரங்களால் காசியைத் தமிழர்
அறிந்திருந்தனர்.  அவ்வளவு தொலைவிலுள்ள நகரத்திற்குச் சென்று இக்
குழந்தை பெரியவனான பின்பு வியாபாரம் செய்வான் என்பது தாயின் கருத்து.


வண்டாளப் பட்சி,
வயலெறங்கி மேயுதிண்ணு
சிங்கார வில்லெடுத்து - நீ
சிற கொடிக்க வந்த வனோ? 
மதுரைப் பெரும்பாதை-ரெண்டு
மங்கை நிண்ணு கோலமிட,
குதிரைப் பதி போட்டு-சொக்கர்
கோல மழிச்சாரே. 
காடெல்லாம் ஓடி,
கதறி அலை மோதி,
காலெல்லாம் நோகுதையா,
கனியே உனைத் தேடி 
வண்டடையும் சோலை,
மயிலடையும் குற்றாலம்,
வண்டடைஞ்ச சோலையிலே-நீ
வந்தடைஞ்ச வான்மயிலே. 
ஊருணியும் வெட்டி,
உசந்த மடமும் கட்டி,
தாரணியார் பூசை செய்ய-நீ
தர்ம குல வம்முசமோ! 
கடலோரம் கோயில் கட்டி,
கந்த னென்று பேர் விளங்கி,
அலையடிக்கு நேரமெல்லாம்-வேலவர்
ஆண்டி வேஷம் கொண்டாரோ?

மாமன் பெருமை 
செக்கச் சிவப்பரோ-உங்க மாமா
சீமைக்கோர் அதிபதியோ
அழகு சிவப்பரோட-ஐயா நீ
அருமை மருமகனோ? 
சின்னக் கிணறு வெட்டி
சிங்கார கல் பரவி
துவை வேட்டி போட்டு வரும் 
துரை ராஜா உங்கள் மாமா 
ஏலக்காய் காய்க்கும்,
இலை நாலு பிஞ்கு வரும்
ஜாதிக்காய் காய்க்கும்
உன் தாய் மாமன் வாசலிலே
கல்லில் எலுமிச்சை காய்க்கும் 
கதலிப் பழம் பழுக்கும் 
முல்லைப் பூ பூக்குதில்ல
உன் தாய் மாமன் கொல்லையிலே 
தங்கக் குடை பிடிச்சு
தாசிமாரை முன்ன விட்டு-உன் மாமன்
தாசிக்கே விட்ட பணம்-ரெண்டு
தங்க மடம் கட்டலாமே 
வெள்ளிக் குடை பிடிச்சு
வேசிகளை முன்ன விட்டு-உன் மாமன்
வேசிக்கே விட்ட பணம்-ரெண்டு
வெள்ளி மடம் கட்டலாமே! 
முத்தளக்க நாழி
முதலளக்க பொன்னாழி
வச்சளக்கச் சொல்லி
வரிசை யிட்டார் தாய் மாமன். 


தாலாட்டுப்பாடல்கள் சேகரிப்பு திரு வெங்கட்ராம் ஶ்ரீநிவாஸ்

--Geetha Sambasivam (பேச்சு) 12:00, 29 செப்டெம்பர் 2015 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 29 செப்டெம்பர் 2015, 12:00 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,920 முறைகள் அணுகப்பட்டது.