சீனா! சில நாள் குறிப்புகள்... (பகுதி - 6)

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

நா.கண்ணன்

 

6. உயிரைக்குடிக்கும் அழகு!


ஜீவகோடிகளைக் கரைத்தேற்ற பல்வேறு வழிகளைக் கையாளுகிறானாம் இறைவன். முதலில் இப்பிரபஞ்சத்தைப் படைத்து, இவனுக்கு இருக்க இடம், குடிக்க நீர், சுவாசிக்க காற்று என்று எல்லாவற்றையும் கருணையால் தருகிறான். இவன் (ஜீவன்) எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு இவனே செயற்கையாகத் தோற்றுவித்த எத்தனையோ குழப்பங்களில் மூழ்கிப்போய் இறைவனை மறந்து விடுகிறான். சரி, இவன் வந்து சேவிக்கட்டுமென்று தன்னையே கீழே இறக்கிக் கொண்டு அர்ச்சையாக வந்து நிற்கிறான் இறைவன். இவன் கோயிலுக்கு போயிட்டுவரென்னு வீட்டிலே சொல்லிட்டு வர வழியில் இருக்கும் சினிமாக்கொட்டகைகுள் நுழைந்து விடுகிறான். ஆக, அதிலேயும் இறைவனுக்குத் தோல்வி! இவனுக்கு நல்ல புத்தி வர சாஸ்திரங்களையும், ஞானிகளையும் அனுப்பி வைக்கிறான். இவனுக்கோ ஞானி யார் அஞ்ஞானி யார் என்று இனம் காணத் தெரியாததால் நெல்லை விட்டுப் பதர்களின் காலில் போய் விழுந்து கிடக்கிறான். அங்கும் இறைவன் அவுட்டு! அடுத்து இசையென்னும் பேரின்பத்தை வைத்து, அதில் நாதப் பிரம்மமாக நின்று பார்க்கிறான். நம்மாளு அதையெல்லாம் விட்டு கும்மாக்குத்து பாட்டிலேயே மயங்கி நிற்கிறது. எல்லா முயற்சிகளிலும் தோற்றுப்போன இறைவன் இறுதியாக தன் சௌந்தர்யத்தை, அழகைக் காட்டி ஜீவனை மயக்குகிறான். அழகிற்கு மயங்காதோர் யாருளர்? பெண் யானையைக்காட்டி ஆண் யானையைப் பிடிப்பது போல், அழகைக் காட்டி இவனை மயக்குகிறான் இறைவன். இவன் அந்த அழகில் மயங்கி சில நிமிடங்கள் மதி மயங்கி நிற்கும் போது ஆழ்வாராதிகள், பாகவதர்களை அனுப்பி ஆளைக் கவுத்துப்போட்டுவிடுகிறான். அதன் பின் இவன் புலம்பல் எல்லாம், ‘என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாயே! என்பதே!


கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்தானை
அண்டா கோனணி அரங்கனென் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாயே

(திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான்)


ஆஸ்திரேலிய நீலமலை போன்ற அழகுடைய சீன மலை

Blue mount-1.jpg

காலை ஆறுமணிக்குக் கிளம்பி சில நிமிடங்களில் இயற்கை எங்களை வரவேற்கத் தொடங்கியது. வழியெல்லாம் பசுமை. கண்ணுக்கு விருந்து. சில நாடுகளுக்குத்தான் அந்த பிரம்மாண்டமுண்டு. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று. சீனாவில் நான் இயற்கை அழகை எதிர்பார்க்கவில்லை. 1 பில்லியனுக்கும் மேலுள்ள மக்கள். இவர்கள் எங்கே இயற்கையைப் பாதுகாக்கப் போகிறார்கள்? என்ற நினைப்பு. ஆனால், சங்க்பாய் மலைப்பகுதியை இவர்கள் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். இயற்கையை வழிபட வேண்டும்! ஏனெனில், புவன சுந்தரனாக அவனேதான் அப்படிக் காட்சி அளிப்பதும்!! இதற்காகப் பெரிய பூஜை, புனஸ்காரங்கள், அனுஷ்டானங்கள், ஜப, தபங்கள் செய்ய வேண்டியதில்லை. அவன் சும்மா அங்கே நின்று கொண்டு இருக்கிறான். போய் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். எவரெஸ்ட் உச்சிக்கு பலமுறை மலையேறிய ஒருவரைக் கேட்டார்களாம், ‘நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு, எங்கிருந்தோ வந்து இமயமலை உச்சிக்கு ஏற வேண்டுமென்று?’. சுருக்கமாக பதில் வந்ததாம், ஏனெனில் அது அங்கே நிற்கிறது! என்று.


நாங்கள் போன இடமும் ஏதோவொருவகையில் எவரெஸ்ட் போலத்தான். உலகிலேயே மிக உயரமான எரிமலைப் பொய்கையைக் காணப் போய்க்கொண்டு இருந்தோம். இந்த எரிமலை கடைசியாக செங்கிஸ்கான் சீனாவை ஆண்டபோது குமுறி இருக்கிறது. நாங்கள் போனபோது சாதுவாகத்தான் கிடந்தது. எவரெஸ்ட் சிகரத்திற்கு என்று தனி சுற்றுச்சூழல் உண்டாம். நினைத்தால் சிரிக்கும், நினைத்தால் குமுறும், நினைத்தால் முகத்தை மூடிக்கொண்டுவிடும். இந்த சங்க்பாய் மலைப்பொய்கையும் அப்படித்தானாம்! சீனாவின் தலைமைப்பீடமே போன போது முகத்தை மூடிக்கொண்டுவிட்டதாம். வருடத்தின் சராசரி உஷ்ணநிலை மைனஸ்7.3 டிகிரி செல்சிஸியஸ். சொல்ல வேண்டாம். இங்குதான் நான் சீனாக்காரன் ஆனேன்! அதாவது Base campல் வெறும் டி ஷர்ட்டோடு நின்று கொண்டிருந்த என்னை இந்த உடை போதுமா? மேலே குளிரும் என்கிறார்களே என்று ஒரு சீன மாது என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறாள். அவளுக்குத் தெரியாது ஜெர்மன் ஸ்டைல். பாம்பு சட்டையை உரிப்பது போல் ஜெர்மானியர் குளிரக்குளிர சட்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். நான் என் சாக்குப்பையில் மேற்சட்டைகள் தயாராக வைத்திருந்தது அவளுக்குத் தெரியாது :-)


மூன்றில் இரண்டு பங்கு வடகொரியாவிலிருக்கும் பிரம்மாண்ட பொய்கை

Blue mount-Changbai-Lake 4.jpg

எல்லோரும் ஏதோ ஆர்டிக், அண்டார்டிக் போவது போல பெருத்த உடைகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டிருக்கும் போது, அந்தக் காலத்து, புராண சீனப்படங்களில் வருவது போல ஒரு அழகி அங்கே நின்று கொண்டிருந்தாள். மற்ற சீனர்களும் அவளை அதிசயமாகப் பார்த்துப் படமெடுத்துக் கொண்டிருந்தனர். நானும் விடவில்லை. அவர்கள்தான் அப்பிரதேசத்தின் பூர்வகுடிகளாம். மஞ்சூர் இன மக்கள். இந்த மலைக்கு நேர்த்திக்கடன் எடுத்து கையில் ஒரு விளக்கோடு போகிறார்கள். அந்த விளக்கை மலை உச்சியில் உள்ள எரிமலையில் வைத்து வழிபடுவார்களாம். ஒருவர் நம்மவூர் திரிதண்டி ஸ்வாமிகள் போல் சில குச்சிகளை கையில் வைத்திருந்தார். அது எதற்கு என்று ஒருவருக்கும் தெரியவில்லை.சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் தீபம் இம்மலை உச்சியிலிருந்து வந்தாம்.


மஞ்சூர் அழகியும், தொலைக்காட்சிக் குழுவினரும்

Blue mount-manchur 3.jpg


நான் எரிமலைப் பொய்கையைக் காண்பது இது முதல் தடவை அல்ல. கொரியாவிலுள்ள ஜேஜூ தீவில் இப்படியொரு பொய்கையுண்டு. இரண்டு வருடத்திற்கு முன் ஸ்வேதா கோடை விடுமுறைக்கு என்னிடம் வந்த போது அவளை அழைத்துக்கொண்டு ஜப்பானிலிலுள்ள எரிமலைப் பொய்கைக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். 2006 ஆண்டு பிலிப்பைன்ஸ் போன போது வேறு வகையான ஒரு எரிமலைப் பொய்கையைக் கண்டதுண்டு. மேலும் ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைப் பொய்கைகளையும், கனடா ராக்கிமலைத்தொடரிலும் இம்மாதிரி அழகிய பொய்கைகளைக் கண்டதுண்டு. ஆனால் இது உயிரை வாங்கும் அழகுடைய பொய்கை என்பது போய்ப் பார்த்த போதுதான் தெரிந்தது! பொய்கை என்றவுடன் அப்பர் அடிகள்தான் நினைவிற்கு வருவார். அவர்தான் மாசில் வீணையும், மாலை மதியமும்..மூசுறை வண்டுப் பொய்கையும் போன்றது இறைவன் திருவடி நிழல் என்றார்.








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:05, 15 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2011, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,027 முறைகள் அணுகப்பட்டது.