சீனா! சில நாள் குறிப்புகள்... (பகுதி - 10)

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

நா,கண்ணன் 


10 சீனாவில் தொழில் செய்!


மலையேறிக்கொண்டிருக்கும் போது சுற்றி வளைத்து (ஆங்கிலம் சரியாக வராததால்) பேரா.லீ என்னிடம் கேட்டார், ‘நீங்கள் அதிகமாக நம்புவதை எப்படி அழைப்பீர்கள்?’ என்று. அதாவது என் தனிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக் கணக்கிடும் போது என்னை ஒரு இந்து என்று சொல்லலாம் என்றேன். ஆ! அதுதான் என்று சிரித்தார். சரி உங்கள் நம்பிக்கைகள் எதைச் சார்ந்துள்ளன? எனக்கேட்டேன். ‘கம்யூனிச சித்தாந்ததைச் சார்ந்திருப்பதாகச் சொன்னார். அப்படியெனில் உங்களுக்கு மதம் என்பதே கம்யூனிசம்தானா? என்றேன். ஆம் என்றார். பின் பௌத்தம்? அதை நாங்கள் பின் பற்றுவதில்லை என்றார். இதுவும் சீனாவின் விசித்திரம். ஏறக்குறைய 2000 ஆண்டுப்பழமையுள்ள பௌத்தம் அவர்கள் தேசிய மதமல்ல 50 ஆண்டுப்பழமையுள்ள கம்யூனிசம் எமது மதம் என்கின்றனர்! ‘மதம் என்பது ஓபியம் போன்றது’ என்றார் மா சே துங். அதனால் எம்மதத்தையும் புறக்கணியுங்கள் என்றார். உடனே புறக்கணித்துவிட்டனர். நல்ல வேளை நம்ம தாலிபான் கடன்காரன் போல் பீரங்கி வைத்து கோயில்களை தகர்க்கவில்லை. ஷாவுலின் கோயிலெல்லாம் அப்படியே இருக்கிறது. தாலிபான்கள் தகர்த்த புத்தருக்கு அண்ணனெல்லாம் சீனாவில் இருக்கிறார்கள். மிகப்பெரிய மலைக்குடைவரை சிற்பமாக! இப்போது மெல்ல மெல்ல கிறிஸ்தவம் தலைகாட்டுகிறது. யாஞ்சி நகரில் ஒரு பெரிய சர்ச் பார்த்தேன். கொரியாவிற்கு வரும் ஆங்கில ஆசிரியர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவத்தால் இங்கு ஒன்றுபடுகின்றனர். அவர்கள் சீனாவில் போய் மதப்பிரச்சாரம் செய்கின்றனர். ஆயினும் அவர்கள் மிகக்கவனமாக கண்காணிக்கப்படுவதாக என்னிடம் சொல்லியுள்ளனர்!

மாசேதுங் வகுத்த நான்கு வர்க்கங்களும் நடுநாயகமாக இருக்கின்றது தேசிய கம்யூனிசக் கட்சி. பெரிய நட்சத்திரம் பார்ட்டி, சின்ன நட்சத்திரங்கள் வர்க்கங்கள். இப்படித்தான் அவர்கள் கொடியமைப்பு உள்ளது.

போகும் வழியெல்லாம் சோளப்பயிர். இதை யார், எப்படி விவசாயம் செய்கின்றனர் எனக்கேட்டேன்? சீனாவில் நிலம் யாருக்கும் உடைமை இல்லை. அரசிற்கே நிலம் சொந்தம். விவசாயிகள் நிலத்தை ஆண்டுக்குத்தகை எடுத்துக்கொள்ளலாம் என்றார். அவர்களது வருமானமெல்லாம் எப்படி என்று கேட்டேன். அவ்வளவு அதிகமில்லை. அவர்கள் நாட்டின் பொருளாதரப்படியில் கீழே இருக்கிறார்கள் என்றார்!. என்னடா இது! மாசேதுங் சீன சமுதாயத்தை தலைகீழாக மாற்றிப்போட்டார் என்று சொன்னீர் ஆனால் இருபது ஆண்டுகளுக்குள் மீண்டும் கல்விக்கு முதலிடம், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பெரும் வருமானத்தில் கால்வாசி கூட விவசாயிகள் பெறுவதில்லை என்றாகிவிட்டது! அதுதான் இன்றைய சைனா! இது மாசேதுங் சைனா அல்ல. மீண்டும் பூர்ஷ்வாக்கள் மேலெழுந்துவிட்டனர். நான் சிந்தாவு போயிருந்த போது கடற்கரையை ஒட்டிய மிக அழகான பங்களாக்கள். இங்கு யார் குடியிருக்கிறார்கள்? என்று கேட்டேன். மல்டி மில்லியனர் என்று பதில் வந்தது. ஏறக்குறைய இந்தியா போல்தான் இருக்கிறது சீனாவும். பெரும்தனக்காரர்கள் வளமாக உள்ளார்கள். கீழ்மட்டத்து விவசாயி, தொழிலாளி அப்படியேதான் உள்ளான். ஆனால் மாசேதுங் செய்த புரட்சியின் பலன், ஒரு விவசாயின் மகன் என்று தன்னை இனம் காட்டும் பேரா.லீ பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கமுடிகிறது. பயணத்தின் போது இங்குதான் நான் பிறந்தேன் என்றார். மொத்தம் 10 வீடுகள் உள்ள ஊர். வயல்களுக்கு நடுவே இவர் பிறந்த வீடு இருந்தது. பேரா.லீ சமீபத்தில் ஒரு நல்ல வீடு வாங்கிக் குடிபுகுந்திருப்பதாகச் சொன்னார்.

எனக்கு வழியெல்லாம் கேள்விகள்? சீனாவின் இறையாண்மை எப்படி நிகழ்கிறது? 50 வருடங்களுக்கு முன் வீச்சருவாளுக்குப் பலியான கல்லூரிப் பேராசிரியர்கள் மீண்டும் தலைதூக்கிவிட்டனர். ஷாங்காய் பல்கலைக்கழகத்தில் கலாச்சார புரட்சியின் கொடுமையைக் காட்ட சின்ன மியூசியம் வைத்திருக்கிறார்கள். அறிவை அடக்கி வைக்க முடியாது என்று தோன்றுகிறது. மனித இனத்திற்குப் பெயர் வைத்தவர்கள், ஹோமோ செபியன்ஸ் என்றனர். இவனது அறிவே இவனை மற்ற விலங்கிலிருந்து பிரித்துக்காட்டுகிறது. என்னதான் புரட்சிகள் நடந்தாலும் இறுதியில் ஒரு சமுதாயத்தை அறிவே முன்னெடுத்திச் செல்ல வேண்டியுள்ளதற்கு சாட்சி, மாசேதுங்கின் புரட்சியும், வீழ்ச்சியும்.

ஆயினும் சீன அரசு மிகக்கவனமாக உள்ளது. ஜிமெயில் வாசிக்க முடிகிறது, ஆனால் பிகாசாவில் அப்லோடு பண்ண முடியவில்லை. ஸ்கைப்பில் என் பெண்ணோடு பேசமுடிகிறது. ஃபேஸ்புக் வேலை செய்யவில்லை. புளோகரில் படம் போடலாமென்றால் அது வேலை செய்வதில்லை. இக்கட்டுரைத்தொடரை சீனாவில் என்னால் செய்திருக்கமுடியுமா? என்ற சந்தேகம் எனக்குள் உண்டு! யாரோ கவனிப்பது உள்ளுணர்வாகத்தெரிந்தது. மின்தமிழ் 5 நிமிட இடைவெளிக்குப்பின்தான் வந்தது! தமிழ் தெரிந்த சீனர்கள் என் மின்னஞ்சலை வாசித்து இருக்கலாம்?

ஆயினும் இவையெல்லாம் விரைவில் மாறிவிடும் என்று நம்பலாம். 2004-5ல் ஷாங்காய் போயிருந்த போது எனது சகா கொரிய ஆய்வகத்தின் மின்னஞ்சல் சேவையை அணுகமுடியவில்லை. இப்போது என்னால் முடிந்தது. கூகுள் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் சில வருடங்களுக்கு முன் கூகுள் மேப்பில் போய் சீனாவைப் பார்க்கமுடியாது! அது தடைசெய்யப்பட்டிருந்தது. இன்று நான் யாஞ்சி நகரை இங்கிருந்து கூகுள் மேப்பில் பார்த்தேன். பிரச்சனை இல்லை.

நான் முதன்முறையாக வெளிநாடு போகும் போது அந்நியச்செலாவணி மிகவும் தட்டுப்பாட்டில் இருந்தது. அல்பம் 20 டாலர் பெறுவதற்கு அலைந்தொழிய வேண்டியிருந்தது. அதன் பின் ஒவ்வொருமுறையும் இந்தியா போகும் போது இந்தியாவின் பொருளாதாரத்தடை மெல்ல மெல்ல விலகுவதைக் கண்டேன். போன மாதம் என் பெண்ணிற்கு அவள் பாட்டி 5000 பவுன் டிடி அனுப்பினாள். இது இப்போது சாத்யமாகிறது. அது போல்தான் சீனாவும் என்று கொள்ள வேண்டியதுதான்.


கடைசிநாள் ஒரு பெர்த்டே பார்ட்டி

Party.jpg

கிளம்பும் முன்னிரவு. முழு நிலா. மாணவர்கள் ஒரு விருந்து கொடுத்தனர். யூலியா என்று என்னால் பெயரிடப்பட்ட அந்தப் பெண்ணின் பிறந்த நாள். சீனாவில் சைவ உணவுக்காரர்கள் பயப்பட வேண்டியதில்லை. பொதுவாக சீன உணவில் பல்வேறு வகை காய்கறிகள் வருகின்றன. அவித்த கடலையிலிருந்து கொழுக்கட்டை, உருளைக்கிழங்கு தோசை, சோயா பன்னீர், சோறு என்று ஏதாவதொன்று வந்து கொண்டிருக்கும். எனவே சமாளித்துவிடலாம். ஆயினும் தனியாகப்போகும் போது மொழி தெரியாததால் அவதிதான். தாய்பெய் (தைவான்) நகரில் இப்பிரச்சனை இல்லை. ஏனெனில் நமக்கு வேண்டியதை சுட்டிக்காட்டி ஆர்டர் செய்ய முடிகிறது. ஹாங்காங்கில் ஆங்கிலம் பேசுவதாலும் நிறைய இந்தியர்கள் இருப்பதாலும் பிரச்சனை இல்லை.

சீனா மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை அந்த மாணவச் செல்வங்களிடமிருந்து எனக்குக்கிடைத்தது. கடைசி நாள் விருந்தில் கூட ஒரே கேள்விகள்தான். எப்படி நினைவில் வைத்துக் கேள்வி கேட்கிறார்கள் என்று எனக்கு மிகப்பெருமிதமாக இருந்தது! இன்னொரு வித்தியாசத்தையும் நான் சீனாவில் கண்டேன். ஜப்பான், கொரியாவில் நாம் கொஞ்சம் கருப்பாக, வித்தியாசமாக இருந்தால் தனித்து கையாளப்படுவோம். ஜப்பான் மொழியில் கைஜின் (Gaijin) என்பார்கள். இதற்கு Alien என்று பொருள். ஆனால் சீனாவில் யாரும் இது பற்றிக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் பேராசிரியன் என்று அறிமுகப்படுத்தப்பட்டதாலோ? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சூப்பர் மார்க்கெட்டிலும் யாரும் தனியாக இனம் பிரிக்கவில்லை. மிக, மிக அதிசயமாக என் வாழ்வில் நடந்த ஒரே தீண்டாமை அமெரிக்க டென்னிசி மாநிலத்தில் நடந்தது. கிராமத்து இசை (country music-Kenny Jones) சிடி வாங்கிவிட்டு நிற்கிறேன், நிற்கிறேன் அவன் என்னை ஒரு மனிதனாகவே கண்டுகொள்ளவில்லை! பிறகுதான் என் தோலின் நிறத்தைப் பார்த்தேன். ஓ! நான் வெள்ளைக்காரன் அல்ல. பளுப்பு இந்தியன் என்று. நிறவேற்றுமை இன்றும் அமெரிக்காவில் இருக்கிறது. குறிப்பாக தென்மாநிலங்களில். அங்குதான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது.

சீனா இந்தியச் சந்தையில் குறிவைத்து முதலீடு செய்கிறது. நாமும் சீனச்சந்தையைக் குறி வைக்க வேண்டும். தமிழர்களுக்குத் தங்கள் ஆங்கிலத்தின் மீது அதீதப்பெருமை உண்டு. இவர்கள் சீனாவில் மொழிக்கல்வியகங்கள் அமைக்கலாம். நன்றாக ஓடும். இந்தியாவிலேயே கல்வி ஒரு லாபகரமான தொழில் என்று காண்கிறேன். இதைச் சீனாவில் செய்யலாம். இது பற்றி மீதமிருக்கும் நேரத்தில் யோசிப்போம்.


சீனப்பயணக் குறிப்புகள் இத்துடன் முடிகின்றன.








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:15, 17 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 17 நவம்பர் 2011, 11:37 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,028 முறைகள் அணுகப்பட்டது.