சீக்கியருடன் என் சில நெருக்கங்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சீக்கியருடன் என் சில நெருக்கங்கள்



சீக்கியர்களுடன் எனக்கு மிகுந்த நெருக்கமும் அவர்களுடைய செயல்கள், குணங்கள் பற்றி எண்ணிப் பார்க்கும்போது அவர்களைப் பற்றிப் பெருமித உணர்வும் மிக உண்டு. மிக நல்ல நண்பர்கள். அத்தோடு மிகக் கொடிய பகைவர்களும் கூட. தம் பகைமையை மறைக்காதவர்கள். ஆகவே அவ்வகையிலும் நல்லவர்கள் தான். நண்பர்களாக நம்மை அண்டிப் பின் கெடுப்பது என்பதை இங்கும் எங்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் தான் நான் காண்கிறேன். சீக்கியர்களில் நண்பர் என்று சொல்லிக்கொள்ளும் நெருக்கத்துடன் அன்னியோன்னியத்துடன் பழகிய முதல் ஆள், என் ஞாபகத்தில் நான் தில்லி போய்ச் சேர்ந்ததும் கிடைத்தவர்தான். அதற்கு முன் ஹீராகுட்டிலும் புர்லாவிலும் ஆறு வருட காலம் இருந்த போது, அங்கு வேலைக்கு வந்திருந்த பஞ்சாபியர் பெரும்பாலோர் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் தான். ஸக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்த அனுபவங்களோடு வந்தவர்கள். ஆனால் சீக்கியர் யாரும் அதிக எண்ணிக்கையிலிருந்ததாகவோ, நான் நெருங்கிப் பழகியதாகவோ என் நினைவில் இல்லை. சீக்கியர் யாரையும் பார்த்ததாகக் கூட எனக்கு நினைவில் இல்லை. மிகத் திகைப்பாக இருக்கிறது, ஏன் அங்கு நான் சீக்கியர்களைக் காணவில்லை என்று.


என் நண்பர் தில்லியில் என்னுடன் நெருங்கியவர், 1956-57களில் சுமார் 15 பேர் வேலை செய்து கொண்டிருந்த அந்த பெரிய ஹாலில் பெரும்பாலோர் பஞ்சாபிகள், அவர்களில் நான் சொல்லும் நண்பர் தான் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுபவர். என்னிடம் அதிகம் நட்புணர்வு கொண்டவர். அந்த ஹாலில் இருந்த பஞ்சாபி அல்லாதவர்களிலேயே, ஏன் எங்கள் அலுவலகத்தின் அந்தக் கிளையில் வேலை பார்த்த பஞ்சாபி அல்லாதவர்களிலேயே முதலில் பஞ்சாபியில் பேசக் கற்றுக் கொண்டவன், இன்னமும் கடைசி வரை பஞ்சாபியில் பேசும் முதல் பஞ்சாபி அல்லாதவன் நான்தான். ஆரம்ப காலத்தில் என் பஞ்சாபி அவர்களுக்குக் கிளுகிளுப்பைத் தரும். கேலியாகவும் இருக்கும். அதுவும் என் சீக்கிய நண்பரின் நெருக்கத்திற்கு ஒரு காரணம். என்னுடன் ஒரிஸ்ஸாவிலிருந்து தில்லிக்குப் பரிட்சை எழுதி வேலையில் அமர்ந்தவர் இன்னும் இரண்டு மலையாளிகள். வேலையில் சேர்ந்ததும் உடனே சம்பளம் கிடைத்து விடாது. நாங்கள் முதல் சம்பளம் வாங்கியது மூன்று மாதங்கள் கழித்துத்தான். அது தில்லியின் கடுங்குளிர் காலம். 6 டிகிடி 4 டிகிரி செல்ஸியஸ் எனக் கீழிறங்கி விடும். எங்களுக்கெல்லாம் கம்பளி உடை தைத்துக் கொள்ள அந்த யூனிட்டில் உள்ள மற்றவர்களிடமிருந்து பணம் வசூலித்து எங்களுக்குக் கடனாகக் கொடுத்து உதவியது என் சீக்கிய நண்பன் தான். நெருக்கமான அன்றாட தொடர்பு என்பது சில வருடங்களே இருந்த போதிலும், எங்கு சென்றாலும் தொலைபேசி மூலமாவது தொடர்பு கொள்வது என்பது எண்பதுகள் வரை சாத்தியமாயிற்று. பின் தொடர்பும் செய்தியுமற்றுப் பிரிந்து விட்டோம். இப்போதும் பழம் நண்பர்கள் ஒரு சிலரை நினைத்து நான் மனம் சோகித்துப் போகிறேன் என்றால், அந்த புபீந்தர் சிங் அலுவாலியாவும் அந்த ஒரு சிலரில் ஒருவர்.


புதிதாக வரும் எல்லாத் தென்னிந்தியர்களும் முதலில் குடி பெயர்வது தில்லியில் கரோல் பாகில் தான். அங்கு என் மிக ரம்மியமான நாடகள் கழிந்திருக்கின்றன. நாங்கள் குடியிருந்த சிறிய லாட்ஜாக மாற்றப்பட்டிருந்த வீடு ('மெஸ்' என்பார்கள்) ஹோட்டலிலிருந்து சுமார் ஒரு ஃபர்லாங்க் தூரத்தில் இருக்கும். அந்த மெஸ்ஸில் எல்லோரும் தமிழர்கள், பாலக்காட்டுத் தமிழரையும் சேர்த்து. மெஸ் பாலக்காட்டு அய்யர் ஒருவர் நடத்தியது. அந்தக் காலத்தில் அந்த தில்லிக் குளிரில் எல்லாமே சுவையாக இருக்கும். குறிப்பாக அந்தக் 'கான்பூரர் மெஸ்'ஸின் அடை. காரமாக சுவையாக இருக்கும். மற்ற இடங்களில் சாப்பிடும் என் நண்பர்கள் அடை போடும் நாட்களில் என்னுடன் ஒட்டிக்கொண்டு விடுவார்கள். மெஸ் அய்யரே என்னைக் கண்டிக்கும் அளவுக்கு என் செலவுக் கணக்கு ஏறிக்கொண்டிருக்கும். என்னைக் கண்டிக்கும் உரிமை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு நான் சிறியவன். அவர் வயதில் பெரியவர். வெகு ஆண்டுகள் கழித்து 1970களில் நான் ஜாம்பஜார் பைக்ராஃப்ட்ஸ் ரோடில் எழுத்து/கசடதபற நண்பர்களோடு பேசிக்கொண்டு செல்லும் போது "டேய் சாமிநாதா" என்று ஒரு பலத்த குரல் கேட்டது. ஜாம் பஜாரில் ரோட் எதிர் சாரியில் நடந்து கொண்டிருப்பவர்களுக்குக் கேட்கவேண்டுமானால் அது எவ்வளவு உரத்த குரலாக இருக்கும்! எங்களுக்குக் கேட்டது. குரல் வந்த திசையைப் பார்த்தால் ஒரு ஹோட்டலின் உள் முகப்பிலிருந்து கான்பூர் அய்யர்தான் தரிசனம் தருகிறார். என் நண்பர்களுக்கு ஆச்சரியம். சிம்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நம் சாமிநாதனையே "டேய் சாமிநாதா" என்று கூப்பிடக் கூடிய ஒரு சக்தி நம் அருகில் திருவல்லிக்கேணியிலேயே எங்கிருந்தோ ஆபத்பாந்தவராக எழுந்தருளி தரிசனமும் தந்து அருள் பாலிக்கிறது என்று அவர்களுக்குத் திகைப்பு.


எதற்குச் சொல்ல வந்தேனென்றால் அவர் மிகவும் பாப்புலர். அரட்டை. தம் அருமை பெருமைகள் அசகாய செயல்களையெல்லாம் கதை கதையாகச் சொல்வார். அந்த சுவாரஸ்யங்கள் எல்லாம் பின்னர் வேறு ஒரு சமயம் சொல்லலாம். இப்போதைக்கு சீக்கியர்களைப் பற்றி அதுவும் அறிமுகமில்லாத சீக்கியர்களுடனான என் அனுபவங்களைச் சொல்லவேண்டும். அந்த கான்பூர் மெஸ் உணவகத்தின் நுழைவாயில் ஒரு வீட்டின் நுழைவாயில் போல்தான் இருக்கும். ஏனெனில் அது ஒரு வீடு. அதில் ஹோட்டல் நடத்தப்படுகிறது. நாங்கள் காத்திருக்கவேண்டும். வெளியில் தான் காத்திருப்போம். வெளியே ரோட்டில் ஒரு பெரும் கூட்டம் எப்போதும் எப்போது சாப்பாட்டுக்கு இடம் கிடைக்கும் என்று காத்திருக்கும். -பக்கத்தில் பத்திரிகைகளும் வெற்றிலை பாக்கும் சிகரெட்டும் விற்கும் கடை ஒரு புறம். மறுபுறம் ஒரு வீடு. ஒரு சீக்கியக் குடும்பம் வசிக்கும் வீடு. அந்த வீட்டுப் பெண்களோ அல்லது சிறுவர்களோ, சமயத்தைப் பொறுத்து வெளியே நின்று பேசிக்கொண்டு, சிறுவர்களானால் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். எங்கள் காத்திருப்பு பத்திரிகைக் கடையின் முன் இருக்கும். எங்களில் துணிவும் வாயளப்பும் கொண்டவர்கள், அந்த சீக்கிய குடும்பத்துச் சிறுவர்களோடு வம்பளந்து கொண்டிருப்பார்கள். அந்த மாதிரியான வாயாடிகளில் எனக்கு நல்ல நினைவிருப்பவன் ஒரு பாலக்காட்டுக்காரன். ஆஜானுபாவன். நல்ல சிகப்பு நிறத்தில் பஞ்சாபிபோல இருப்பான். நல்ல உயரம். சிரித்துப் பேசுவான். அவனுடைய முகம் மலர்ந்த சிரிப்பில்லாது நான் பார்த்த ஞாபகம் இல்லை. அவன் பெயர் மறந்து விட்டது. இவனைப் பற்றி நிறையப் பேசவேண்டியிருக்கிறது. பெயரில்லாது காரியம் நடக்காது. பாலகிருஷ்ணன் என்று இப்போதைக்கு அவனைக் குறிப்பிடலாம். கான்பூர் மெஸ்ஸூக்கு எதிராக சாப்பாட்டுக்குக் காத்திருக்கும் கூட்டத்தில் நடு நாயகமாக இருப்பது, எப்போதுமே பாலகிருஷ்ணன் தான். யாரும் பொறாமைப்பட்டுப் பயனில்லை. அவனைச் சுற்றி கொண்டாட்டமும் கொம்மாளமுமாக இருக்கும் கூட்டத்தில் பக்கத்து வீட்டு சர்தார்ஜியின் 12-13 வயசுப் பையனும், கூட்டத்தின் பின்னால் வீட்டு கதவோரத்தில் நின்று வேடிக்கை பார்த்து இருக்கும் சர்தார்ஜியின் பெண்டாட்டி, அம்மா முதலியோரும் தான். பின் என்ன, பாலகிருஷ்ணனின் குஷிக்கு கேட்கவேண்டாம். இப்படி ஏற்பட்ட பழக்கத்தில் அந்த சர்தார் பையன் எங்கள் தங்குமிடத்துக்கும் வந்து போவான்.

ஒரு ஃபர்லாங்கு தூரத்தில் எங்கள் தங்குமிடம் என்று சொன்னேனே. அதில் நாலைந்து அறைகள். ஒவ்வொன்றிலும் மூன்று அல்லது நான்கு கட்டில்கள் இருக்கும். முன் அறை வராந்தாவையும் ரோடையும் நோக்கிய அறை என்னது. என்னுடன் புத்தனாம்பட்டியிலிருந்து திராவிடக் கழக சிந்தனைகளோடு வந்து சேர்ந்த ஒருவன், என் மிக நல்ல நண்பன். இன்னொருவர், ஸ்வாமி சிவானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து இங்கு வேலைக்கு வந்தவர். ஸ்வாமி சிவானந்தாவுக்கு மிக பழக்கமானவர். "என்னய்யா யோகேஷ், ஒரே கொய்யாப் பழமா வாங்கீண்டு வந்திருக்கீர்? என்று ஸ்வாமி சிவானந்தா கிண்டல் செய்யும் அளவுக்குப் பழக்கமானவர். அதற்கு அடுத்த உள் அறையில், சற்றுப் பெரியது, நான்கு பேருக்கான படுக்கை வசதி இருக்கும். அங்கு தான் பாலகிருஷ்ணன் இருக்கை. மற்ற அறைகளில், சங்கீத ரசிகர்கள், இலக்கிய ஜாம்பவான்கள் (மதுரை காமராஜ் பல்கலைக் கழக, சித்தலிங்கையா, அவரைப் பார்க்க அடிக்கடி வருகை தரும் வன்மீகிநாதன் என்னும் தமிழறிஞர், இவர்கள் இருவரது தமிழ் இலக்கிய உரையாடல்கள் மிகுந்த உயர்ந்த தளத்தில் இருப்பதாக நாங்கள் நினைத்ததால், சற்று விலகி தூர நின்று கேட்டுக் கொண்டிருப்போம்) எம்.ஜி. சாமிநாதன் என்று நினைவு, அவரும் பாடகர், சங்கீத விமர்சகர். ஹிந்துவின் தில்லிப் பதிப்புக்கு சங்கீத விமர்சனங்கள் எழுதுவார். பின் திருநெல்வேலிக்காரர் ஒருவர் நினைவிலிருக்கிறார். அநியாயக் கிண்டல் அவருடன் பிறந்தது. அவர் செல்லுமிடமெல்லாம் அவர் கிண்டலும் உடன் செல்லும். எல்லாம் சுவாரஸ்யமும் இனிமையும் நிறைந்த நாட்கள் அவை. எங்கள் அறை சன்னலிலிருந்து நிறையப் பேர் பாலகிருஷ்ணனைப் பார்க்க பேச வந்து போவதைப் பார்த்திருப்போம். ஒரே கும்மாளமாக இருக்கும் அந்த அறை. சில சமயங்களில் அந்த சர்தார் பையனும் வந்து போவான். பாலகிருஷ்ணனுடன் நிறைய நேரம் என்னவோ பேசிக்கொண்டிருப்பான். அந்த மாதிரி சமயங்கள் அறையில் கூட்டம் நிறைந்த சமயங்களாக இராது. என்னதான் பேசுவார்களோ! அப்படி என்னதான் ஒட்டுதலோ! பையனுக்கு மதராஸி அங்கிளை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது என்று நினைத்துக் கொள்வோம்.


ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியதும் சட்டையைக் கழற்றிக்கொண்டிருந்தேன். கழற்றிவிட்டு முகம் கழுவிக்கொள்ள வேண்டும். தட தடவென்று சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக, மெஸ்ஸின் உணவகத்திற்குப் பக்கத்து வீட்டு சர்தாரும் அவன் கூட்டாளிகள் சிலரும் உள்ளே விரைவது தெரிந்தது. அந்த சர்தார் பையனும் அவர்களுடன் போவது தெரிந்தது. 'கோன் ஹை பதா, யெஹ் ஹை?, மாரோ சாலே கோ, "( யார் சொல்லு, இவனா? அடிடா அவனை, கொல்லு) என்று ஒரே சத்தம். யாரோ அடிபடும் சத்தமும், கூச்சலும். அடுத்த அறையில் தான். அவ்வளவு சர்தார்களும் சேர்ந்து பாலகிருஷ்ணனை மொத்திக் கொண்டிருந்தார்கள். பாலகிருஷ்ணன் அடி வாங்கிக் கொண்டிருந்தானே ஒழிய எதிர்த்துச் சண்டையிடவோ தன்னைக் காத்துக்கொள்ளவோ முடியவில்லை. பக்கத்தில் அவனது அறை நண்பன் தள்ளி நின்றவன் பயத்தில் உறைந்து போனான் என்று தோன்றிற்று. 'சர்தார்ஜி யெ க்யா கர் ரஹே ஹோ, பாத் க்யா ஹை" ( இது என்ன? என்ன நடந்து விட்டது? ஏன் இப்படி அடிக்கிறீர்கள்?) என்று நான் தடுக்கப் போனேன். "தூ பரே ஹட் சாலே, க்காம்கா து பீ மரேகா" (நீ ஒதுங்கிப் போ, இல்லையானால் வீணா நீயும் அடி வாங்கிச் சாவாய்), என்ற குரல் கேட்டது அதோடு பலமாக முதுகில் ஒரு சாத்து. நான் வராண்டாவில் போய் விழுந்தேன். கஷ்டப்பட்டு எழுந்து நின்றால், அங்கு இருக்கும் ஸ்டூல், நாற்காலி எல்லாம் பால கிருஷ்ணன் முதுகில் விழுந்து கொண்டிருந்தன.  திரும்பத் திரும்ப. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மெதுவாக வராண்டாவிலிருந்து மேலே செல்லும் படியேறி மாடிக்குச் சென்றேன். அங்கு அந்த வீட்டுச் சொந்தக்காரர் தன் குடும்பத்தோடு இருந்தார். அவரைக் கூப்பிட்டேன். உள்ளிருந்து வந்தவரிடம் கீழே பக்கத்து அறையில் அடி தடி நடக்கிறது. நீங்கள் வந்து முதலில் அடியை நிறுத்துங்கள். அது நிற்காவிட்டால் ஆபத்து போலீஸ் கேஸாகிவிடும்" என்றேன். மனிதர் உடனே கீழே விரைந்தார். அறுபது வயது இருக்கும் அவருக்கு. எல்லோருக்கும் மூத்தவர். அவர் கீழே இறங்கி சத்தம் போட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்ததும், அவர்கள் எல்லோரும் அடிப்பதை நிறுத்தினார்கள்.


"என்ன ஆயிற்று? ஏன் இப்படி அவ்வளவு பேரும் சேர்ந்து அடிக்கிறீர்கள்?" என்று அவர் கோபமாகக் கேட்டுக் கொண்டிருந்த போதே, சற்று நிறுத்திப் பெற்ற ஆசுவாசத்தில் ஒருவன் ஆத்திரம் மீண்டெழ மறுபடியும் ஸ்டூலால் பாலகிருஷ்ணன் முதுகில் இன்னொரு சாத்து சாத்தினான். பெரியவருக்குக் கோபம் பொங்கியது. "நிறுத்தப் போறியா இல்லியா, அவன் செத்துப் போவான். நீங்கள் கம்பி எண்ணுவீங்க,பின் தூக்கிலே தொங்கணும், தெரியுமா தெரியாதா?" என்று கத்தினார். "கோயி ஃபிகர் நஹி பாதுஷாவ், வஹ் ஸ்ப் பாத் விச் வேக் லாங்கே. ஃபாஸி ஹோ ஜாய் தோ ஹோனே தோ, இஜ்ஜத் தா சவால் ஹைகா. பூச்சோ இஸ் ஹராம் ஜாதேனே க்யா கியா, பூச்சோ, பூச்சோ நா பிட்டுனு, மார் மார்கே ஸாலே கா டாங் நா தோடூம், ஜிந்தா ந சட்னா சாஹிதா ஹராம் ஜாதே நு" (உயிர் போனா என்ன? தூக்கிலே தொங்கினாத்தான் என்ன? மானம் பெரிசு. இவனை உயிரோட விட்டு வைக்கவா? கேளுங்க பிட்டுவை இந்த தேவடியா மகன் என்னா பண்ணினான்னு?)என்று கத்திக் கொண்டிருந்தான். பொறி பறந்தது. "பிட்டு" என்று அந்த சர்தார் பையன் பேரைச் சொன்னதும், பெரியவருக்குப் புரிந்து விட்டது. அந்த பையன் அந்த அறைக்கு வந்து போவதையும் மாடி வராண்டாவிலிருந்து அவர் பார்த்திருக்கக் கூடும். "போதும். அவனுக்கு தண்டனை கொடுத்தாய் விட்டது. இனிமேலும் அடித்தால் அவன் செத்து விடுவான். " என்று சொல்லி அவர்கள் அடிப்பதை நிறுத்தினார். பின் பால கிருஷ்ணனைப் பார்த்து, "இந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப் போய்விடு. இனி நீ இங்கு இருக்கக் கூடாது. எங்கோ தூரத்திலிருந்து பிழைக்க வந்திருக்கிறாய். ஒழுங்கா இருக்கக் கூடாதா? வேறு இடத்துக்குப் போய்விடு. " என்றார். எல்லோரும் கலைந்து சென்றனர். அன்று இரவு எல்லோரும் சுற்றி யிருக்க, பால கிருஷ்ணன் சிரித்துச் கொண்டே, " நல்லா செம அடி அடிசுட்டான்யா. நல்ல வேளை உடம்பு தாங்கித்தே" என்று சொல்லிக்கொண்டிருந்தான். பாலகிருஷ்ணன் அதிக நாள் அங்கு இருக்கவில்லை. அடுத்த மாத ஆரம்பத்தில் அவன் வேறு இடத்துக்கு போயிருப்பான் என்று நினைத்துக்கொண்டேன். அதன் பின் அவனைப் பார்த்ததாக எனக்கு நினைவில்லை.


ஆனால், அன்றைய சம்பவத்திலேயே, "தூக்கிலே தொங்கிறதெல்லாம் பின்னாலே பாத்துக்கலாம். இப்போ இவனைக் கவனித்தாகணும்" என்ற அப்போதைய ஆத்திரமும், பேச்சும் அவர்களைப் பற்றிய ஒரு வலுவான சித்திரத்தைத் தீட்டியது அன்று. இது நடந்தது 1957 ஆரம்ப வருடங்களில். இது நான் சாட்சியாக தள்ளி நின்று பார்த்த சம்பவம். நானே சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம், 35 வருடங்கள் கழித்து நடந்தது. அது சீக்கியர்களின் இன்னொரு சித்திரத்தைக் காட்டும். 1992 டிஸம்பர் மாதத்தில் ஒரு நாள் மாலை. அரசு ஊழியத்திலிருந்து ஓய்வு பெற்று ஒன்றரை வருடம் ஆகியிருக்கும். தில்லியின் வடமேற்குமூலையின் புற நகரமொன்றில் குடி பெயர்ந்து இரண்டு மாதங்களோ என்னவோ ஆகியிருக்கும். முன்னூறு வீடுகள் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு. ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழக ஊழியர்களின் குடியிருப்பு அது. அடுத்து காம்பவுண்டில் ராஜ்ய சபா ஊழியர்களின் அடுக்கு மாடி குடியிருப்பு. அதற்குச் சற்றுத் தள்ளி லோக் சபா ஊழியர்களின் குடியிருப்பு. இப்படிப் போகும். கடைசி வரிசை வீடுகளில் மூன்றாவது மாடியில் நான் இருந்தேன்.


மனைவி, மகன் கணேசனுடன் முன்னிருந்த ராமகிருஷ்ணபுரம் பகுதிக்குப் போயிருந்தாள். அவள் திரும்புவதற்குள், காய்கறிகள் வாங்கி வரலாம் என்று கொஞ்சம் தூரத்திலிருக்கும் மார்க்கெட்டுக்குச் சென்றேன். இரவு நேரம். காய்கறிகள் இன்னும் கொஞ்சம் வாங்கினால் முடிந்தது போலத்தான். ஆனால் திடீரென்று தலை சுற்ற ஆரம்பித்தது. சரி போதும் என்று எழுந்து நின்றேன். தள்ளாடாது நிற்க முடிவில்லை. தள்ளாடி நடந்து நடைபாதையில் காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்தேன். சற்று இளைப்பாறிய பிறகு தலை சுற்றல் நின்று விட்டது போலிருந்தது. எங்கள் குடியிருப்பு அதிக தூரத்தில் இல்லை. சுமார் ஒரு ஃபர்லாங்கு தூரமே இருக்கும். மெதுவாக நடந்து எங்கள் குடியிருப்பு கேட்டை அடைந்து விட்டேன். இனி நடக்க முடியாது என்று தோன்றிற்று. அப்படித் தோன்றியதற்கு கேட்டருகில் சௌகிதார் உட்கார்ந்திருந்ததும், நான் இன்னும் 100-150 அடி தூரமாவது நடந்து மூன்றாவது மாடிக்குப் படி ஏறிப் போக வேண்டிருந்ததும் காரணங்களாக இருக்கலாம். நான் சௌகிதாரிடம் என் நிலையைச் சொல்லி சற்று அவன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு, எங்கள் குடியிருப்பிலேயே இருக்கும் ஒரு லேடி டாக்டரிடம் அழைத்துப் போகச் சொன்னேன். நல்ல வேளையாக அவள் கீழ் வீட்டில் தான் இருந்தாள். என் பைகளை எடுத்துக் கொண்டு என்னையும் கைத்தாங்கலாக டாக்டர் வீட்டுக்கு இட்டுச் சென்றான். என் மனைவியும் மகனும் வந்தால் நான் இங்கு இருப்பதாகச் சொல் என்று சௌகிதாரிடம் சொல்லிவிட்டு டாக்டர் என்னைக் கவனிக்கக் காத்திருந்தேன். அங்கு எனக்கு முன்னால் ஏற்கனவே ஒரு சர்தார் இளைஞனும் அவனுக்குச் சற்று மூத்த வயதுடைய ஒரு பெண்மணியும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் பார்த்த முகமாக இல்லை. ஒரு நோயாளியைப் பார்த்து முடித்த பின் என் பக்கம் திரும்பினாள் லேடி டாக்டர்.


நான் வந்ததையும் சௌகிதாரிடம் பேசியதையும் அவள் கவனித்திருந்தாள். நான் நடந்ததைச் சொன்னேன். சொல்வதைக் கேட்டிருந்து என் இருதயத் துடிப்பையும் பார்த்துவிட்டு, "'நான் பார்ப்பது போதாது. உடனே பக்கத்திலிருக்கும் பெரிய ஆஸ்பத்திரிக்குச் சென்று ECG எடுத்து வரவேண்டும். அதைப் பார்த்துவிட்டுத் தான் மேற்கொண்டு ஏதும் சொல்ல முடியும். ஆனால் உடனே செய்தாக வேண்டும்" என்றாள் அந்த லேடி டாக்டர். இப்போது தலை சுற்றல் இல்லை என்றாலும் என்னால் ஆஸ்பத்திரிக்குப் போகமுடியாது. என் மனைவி வந்த பிறகு அவள் மேலேறி வீட்டுக்குச் சென்று பணம் எடுத்து வரவேண்டும். அவளும் கூட துணைக்கு வரவேண்டும். வந்த பிறகு போகிறேன். அதுவரை அங்கேயே காத்திருக்கிறேன். மனைவி வந்த பிறகு தான் அவளுக்கும் ஃபீஸ் தரமுடியும்" என்றேன். அது வரை காத்திருப்பது நல்லதல்ல. உடனே போனால் நல்லது என்றாள் அவள். "நான் சொன்னேனே. நான் தனியாகவும் போக முடியாது. பணமும் இங்கு என்னிடம் இல்லை. மூன்றாவது மாடியில் இருக்கும் என் வீட்டுக்கும் நான் போகமுடியாது. எல்லாம் மனைவி வந்ததும் பிரச்சினை தீர்ந்துவிடும் அது வரை காத்திருக்கிறேன்" என்றேன். "உடனே போவது நல்லது" என்றாள் மறுபடியும். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த சர்தார் இளைஞன், 20 வயதே இருக்கும். எழுந்து நின்று தன் அக்காவிடம், "நீ இங்கேயே காத்திரு. நான் இதோ வந்துவிட்டேன்." என்று சொல்லி என் பக்கம் திரும்பி "வாருங்கள் நான் உங்களை என் காரில் அழைத்துச் செல்கிறேன்" என்று கையைப் பிடித்து அழைத்தான். "இதோ 10 நிமிடத்தில் வந்துவிடுவோம்" என்று டாக்டரிடம் சொல்லி, என்னை அழைத்துச் சென்றான் அவன் காரில். காரில் போகும் போது அவன் வீடு எங்கே என்று கேட்டேன். இங்கே தான் பக்கத்தில் தான் என்று சொன்னது மேலும் பேச்சைத் தவிர்க்கவோ என்று பட்டது எனக்கு. ஒன்றரை அல்லது இரண்டு மைல் தூரத்தில் இருந்த பாலாஜி ஹாஸ்பிடல் என்று நினைவு, அங்கு போய் பணம் கட்டி ரசீது வாங்கி (மேலே போர்டில் ECG-க்கு ருபாய் 75 என்று எழுதியிருந்தது) என்னை ஸ்டிரெச்சரில் படுக்க வைத்து உள்ளே தள்ளிச்சென்றான். கூட நர்ஸும் ஓடி வந்தாள். பத்து பதினைந்து நிமிடங்களில் ECG சார்ட்டையும் வாங்கிக்கொண்டு திரும்பி விட்டோம். திரும்பி எங்கள் காம்ப்ளெக்ஸ் டாக்டரிடம் வந்தபோது அங்கு என் மனைவியும் மகனும் காத்திருந்தனர். ECG சார்ட்டைப் பார்த்த டாக்டர், நீங்கள் உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகவேண்டும். நான் எழுதித்தருகிறேன். இரவு பூராவும் நீங்கள் டாக்டரின் கவனிப்பில் இருக்க வேண்டி வரும். உடனே போங்கள் என்றாள். நாங்கள் எழுந்து நின்றோம். நான் வீட்டுக்குப் போய் பணம் எடுத்து வருகிறேன் என்று மனைவி சொல்லிப் போனாள்.


அவள் போனதும், அந்த லேடி டாக்டர் என்னவோ நினைத்துக் கொண்டு, "நீங்கள் ராம் மனோஹர் லோஹியா ஹாஸ்பிடலுக்குப் போவது நல்லது. இங்கு பணமும் வாங்கிக் கொள்வார்கள். இரவு பூராவும் கவனிப்பு என்பது நடக்காது. ஆகவே ராம் மனோஹர் லோஹியாவுக்குப் போவது நல்லது" என்றாள். என் மனைவி திரும்பி வந்ததும், டாக்டருக்கும் அந்த சர்தார் பையன் எனக்கு உதவியதைச் சொல்லி அவனுக்கு 75 ருபாயும் கொடுக்கச் சொன்னேன். சர்தார் ஒரே வார்த்தையில் தீர்மானமாக பணம் வாங்க மறுத்து விட்டான். "இன்சானியத் கி பாத் ஹை பைசா க்யா லேனா" (இந்த வார்த்தைகள் அலங்கார வார்த்தைகள் அல்ல. சாதாரண புழக்கத்தில் உள்ள வார்த்தைகள்: 'மனிதாபிமானத்தில் செய்ததற்கு எப்படி பணம் வாங்குவது?) பின் தன் அக்காவிடம் திரும்பி, நீ வீட்டுக்குப் போய்க்கொள்ளேன். நான் இவர்களை ராம் மனோஹர் லோஹியா ஹாஸ்பிடலில் விட்டு வருகிறேன்" என்றான். அவள் சரி என்று சொல்வதும், நான், " என் மனைவி, பையன் எல்லோரும் வந்துவிட்டார்களே, பணமும் கொண்டு வந்துவிடுவாள். இது வரைக்கும் செய்தது பெரிய விஷயம் சமயத்தில் தானே முன் வந்து உதவியிருக்கிறீர்கள் இருவரும். இனி நாங்களே பார்த்துக் கொள்வோம். இதற்கு மேல் உங்களைச் சிரமப் படுத்தக் கூடாது." என்றேன். உங்களை டாக்ஸி ஸ்டாண்ட் வரைக்குமாவது கொண்டு விடுகிறேன். அவ்வளவு தூரம் நீங்கள் நடந்து செல்லக் கூடாது" என்று சொல்லிக் கொண்டே எங்களை பலவந்தமாக அவன் காருக்கு இழுத்துச் சென்றான்.


ராம் மனோஹர் லோஹியாவில் ஆச்சரியகரமாக உடனே என்னைக் கவனித்தார் இரவு ட்யூடியில் இருந்த டாக்டர். இரண்டு பேர் படுத்திருந்த படுக்கையைக் காலி செய்யச் சொல்லி உடனே DC மின்சார அதிர்ச்சி கொடுத்து, இரவு பன்னிரண்டு மணிக்கே வீட்டுக்குத் திரும்பச் சொல்லி விட்டார்கள். "இந்த மருந்து எழுதிக்கொடுக்கிறேன். இனி வாழ்நாள் முழுதும் இந்த மருந்தைச் சாப்பிட்டு வரவேண்டும். புகைப்பதை நிறுத்த வேண்டும். "என்ற ரகத்தில் இன்னும் சில மருத்துவ ஆலோசனைகள். அவை இன்னமும் தொடர்கின்றன. புகைப் பழக்கமும் அன்றைய இரவு எட்டு மணியிலிருந்து நின்றது தான். அந்த சர்தார் பையனையும் நான் பின் பார்க்கவில்லை. அவன் பெயரோ, அவன் விலாசமோ எனக்குத் தெரியாது. அதற்குப் பின்னும் அவன் அந்தப் பகுதியில் தென்பட்டிருக்கக் கூடும். நான் பார்க்க நேரிடவில்லை, அங்கு நான் குடி இருந்த 1999 வருடக் கடைசி மாதம் வரை.


வெங்கட் சாமிநாதன்/10.1.07


பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 28 பெப்ரவரி 2012, 21:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,393 முறைகள் அணுகப்பட்டது.