சிவஞான கற்பம் -9(முற்றும்)

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

Civanjana KaRpam : Ninth Tantra : Samayaateetam

சிவஞான கற்பம் ஒன்பதாம் தந்திரம் : சமயாதீதம்

இனி இதுவரை துரியக் காட்சிக்கு இலக்காகுவது தூரநூலே என்றும் அதனது வாசிப்பே இத்தகு காட்சிகளில் அகப்படும் சிவஞானபோதம் என்றும், இந்த தூர நூலே மந்திரசொரூபமாக இருத்தலாலும் மொழிபடுத்த வாராதே சுத்த மோனத்தின் வழியேதான் உணரப் பட இருப்பதினாலும் அதுவே மெய்யான எழுதா மறை அல்லது வேதம் என்றும் விளக்கினோம். இதுவே திருமூலர் போன்ற ஞான சித்தர்களால் ‘ஈறில் உரை’ (அழியாத சொல்) ‘இறைவனார் ஒரு சொல்” என்றெல்லாம் பகரப்பட்டதென்றும் ஆங்கு சூக்கும பஞ்சகிருத்தியங்கள் நடைபெறுவதால், அதன் தலைவன் இறைவனேயாகிய பரசிவன் என்றும் இதன் வழி எல்லார் அகத்தும் சிவஞானம் புகட்டப்படுவதால் ஞானபோதகனாக விளங்குவது பரசிவனே என்றும் அவனே அனைவருக்கும் பொதுவாகிய எல்லார் அகத்தும் இருப்பவனாகிய பரமகுரு என்றும் தெளிவாக்கப்பட்டது.

கடப்புரு காண் திறத்தில் அமையும் துரியக் காட்சியை தூரநூற் றுன்னனலின் முன்பு விஞ்ஞானக் காட்சி என்றும் பிறகு அதற்கு அப்பால் அமையும் சிவஞானக் காட்சி உண்டென்றும் அதுவே காண்டற் கலையில் எல்லை என்பதால் இதற்கு மேல் வேறு எவ்வகை காட்சியும் இல்லை என்பதால் இதுவே துரியாதீத நிலை தலைப்படுதல் என்றும் எல்லா சமயங்களின் முடிந்த முடிபாக எல்லையாக இதுவே இருப்பதால் இதுவே ‘சமயாதீத’ நிலைக்கு எல்லா ஆன்மாக்களையும் கொண்டு செல்லும் சிறப்பிணது என்பதையும் இனி சுருக்கமாக விளக்குவம்

சூத்திரம் 9.1

தூதூரக்காட்சி யின்றிரிபுதிகழ் வாரக்காட்சி யதுவுயிரை
வரலாற்றுப் போக்கில் வடிக்கும்

தூரதூரக் காட்சி யாவது, தூரக் காட்சிகளின் வரும் சிவானுபவத்தைப் பெற்று மகிழ்ந்து இன்னும் விடாது பற்றிக் கொண்டிருக்க ஆணவ மலமும் திரோபவமும் நீங்க, அதன்வழி இறைவனது தற்சொரூபத்தை தெற்றென திரிபின்றி அறியத் தரும் காட்சியே தூய தூரக் காட்சி என்றவாறு. இது காலவுணர்வு முற்றிலும் தாக்குறாது நின்று பார்வையற்ற பார்வையின் மெய்கண்டார் கூறுவதுபோல நோக்காது நோக்கி அறியாதறிவதாலும் தூய்மையானது என்றது. இதனையே சிவஞானிகள் ‘துரியாதீதம்’ எனும் அவத்தை நிலை என்றும் பகர்ந்துள்ளனர். இந்த மேலான அவத்தை நிலையே சமயாதீத உணர்விக்கும் இட்டுச் செல்லும் ஒன்றாகும்.

வாரக் காட்சி என்பது, குறிப்புக் காலவுணர்வோடு இனி இதுவரும் அதுவரும் என்றவாறு நிகழ்ச்சிகளின் வருகைக்கு எதிர்ப்பார்த்து நிற்கின்ற நிலைக்கு ஆகவே ஆன்மாக்களை குறிப்புக்கால உணர்விற்குள் வீழ்த்தும் காட்சியாகும். மரபு வழிப்பட்ட வரலாற்று உணர்வு எனினும் அமையும்.

இனி தூதூரக் காட்சி காலங்கடந்த நிலையிற் படுவது என்றிருக்க, அனைவரும் அறிந்திருப்பதாக அதில் அழுந்தி வாழ்வதாக வாரக் காட்சி எங்ஙனம் எனின், அதன் திரிபாகவே இது அமைகின்றது என்பதாம். இங்கு திரிபாவது ஓர்வகைய பிறழ்ச்சியின் காரணமாக காலத்தாக்குறா நிலையிலிருந்து விலகி காலத் தாக்கம் உற்ற நிலைக்கு வீழ்வதின் காரணமாக எழும் திரிபாகும்.

இவ்வாறான பிறழ்ச்சியின் காரணமாக ஆன்மாக்கள் மரபு பட்டவையாக தன்னை உணருமாற்றால் இறந்தது நிகழ்வது எதிரது என்றும். முடிந்தது நடப்பது முடியாதிரூபது என்றும் , நிகழ்ச்சியாகி விட்டது, நிகழ்ச்சியாகிக் கொண்டிருப்பது நிகழ்ச்சியாக விருப்பது என்றும் சிந்திக்கச் செய்து மரபுகளில் பிணிக்கும் என்பது. மேலும் சமயாதீதமும் பிறழ்ச்சியுற வரலாற்றுப் போக்கின், மரபுவழிப்பட்டவையாகிய உலகியல் சமயச் சிந்தனைகளின் சிறைபட்டவையாக ஆன்மாக்கள் விழும் என்பது.

இவ்வாறான துரியாதீத அல்லது தூதுரியக் காட்சியினைத் தருவதும் அதன்வழி சமயாதீத உணர்வினைத் தேற்றுவதும் பற்பல சங்காரங்களில் ‘சுத்த சங்காரம்’ என்கின்றார் நம் திருமூலர், காண்க:

411

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்
சுத்தசங் காரஞ் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே

412

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
சுத்தசங் காரம் மனாதீத தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவனருள் உண்மையே

413

நித்தசங் காரங் கருவிடா நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துட் டோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே

414

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அநாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரனருள்
உய்த்தசங் காரமும் நாலாம் உதிக்கிலே


மேலே காட்டப்பட்ட திருமூலரின் நான்கு பாடல்களின் தொகுப்புரையாவது கீழ்வருமாறு.

சங்காரங்கள் உதித்து மெய்யாகும்போது அவை நித்த சங்காரம், வைத்த சங்காரம், சுத்த சங்காரம், உய்த்த சங்காரம் என்று நால்வகைப் படும். இவற்றில் நித்த சங்காரமாவது பிறந்து இறந்து வரும் நீண்ட உழற்சியினால் வரும் களைப்பினையும் இடர்களையும் நீக்கி ஆழமான உறக்கத்தையும், தூலவுடம்பு புரியட்டகாயம் என்னும் நுண்ண்டம்பு ஆகிய இரண்டினையும் கழற்றி மூடமாகிய நிலையில் இளைப்பாற்றலைத் தருவதாகும்.

வைத்த சங்காரமாவது சாக்கிரத்திற்கு அப்பாலாகிய சாக்கிராதீதக் காட்சிகளைத் தந்து, சத்திய உலகம் புகுமாறு அருளி அதன் வழி தற்போத கற்பனைகளைப் போக்கி பதியினைப் போல பாசுவும் பாசமும் அநாதி என்னும் முப்பொருள் உண்மையை அறியச் செய்வதாகும்.

சுத்த சங்காரமாவது தனக்கென்ற இச்சையாதுமின்றி இறைவனோடு முற்றிலும் ஒன்றித்து தொழிலற்ற கேவலத்தில் கிடத்தி, துரியாதீத அவத்தையைத் தந்து ஆகவே சமயாதீத உணர்வும் தலைப்படுமாறு அருளி காலத்தையும் கடந்து நிற்கின்ற நிலையை அருளுவதாகும்.

இதற்கும் மேலான உய்த்த சங்காரமாக பரனருளே மெய்யாகிய நிலையில், அந்த அருட்புனலில் முற்றிலும் மூழ்கிடச் செய்து பேரின்பமே புசிக்கத் தருவதாகும்.

இவற்றில் சுத்த சங்காரத்தால் மெய்யாகும் தூதூரக்காட்சியே இக்குறட்பாவால் விளக்கப்ட்டு சமையாதீத உணர்வின் தோற்றம் தெளிவுறுத்தபடுகின்றது என்று அறிக.


தொடர்ந்து மேற்கூறியவற்றை இன்னும் விளக்குகின்றார்.

சூத்திரம் 9.2

வாரக்காட்சி யின்வருமே காலவுணர்வு குறிப்பின்
இறந்துபிறந் துழல்வதாகு முயிர்

தூரக்காட்சியின் பிறழ்ச்சியாகிய வாரக்காட்சியிலேயே ஆன்மா அடங்கினால், இறைவனது சுத்த சங்காரத்திற்கு ஆட்படாது ஆகவே துரியாதீத நிலைத் தலைப்படாது பிற சங்காரங்கட்கே ஆட்பட்டிருப்பர். இவற்றால் ‘தானலா அது தானாக வேண்டும்’ என்ற தத்துவமசிப் பொருளில் சிறைப்பட்டு நீங்கா நிற்கும் இருப்பு நிலைகளே மெய்யாகி வரும் என்பதால், இத்தகைய பரக்குறிப்பின் வயப்பட்டு மயங்கி அதன் வழி குறிப்புக்கால உணர்வில் அழுந்தி வெளிப்பட முடியாது சிறைப்பட்டு நிற்கும் என்றவாறு

காலங் கடந்தறி நிலை மெய்யாகாதுபோக ஆன்மா, இன்னும் ஆணவமலத் தொடக்கு அறாதே அதனை இதனை இச்சித்த வண்ணம இருக்கும் என்பதாலும், நித்த சங்காரம் படும் பொருளாய் பிறந்திறந்து உழன்றவாறே சம்சாரத் தளையில் கிடக்கும். வரலாற்றுப் போக்கிற்கு அப்பாலுள்ள இருப்புநிலைகள் இவர்கட்கு எட்டாது போக, சத்தறிவு அசத்தறிவு பேதங்களையும் காணாதவராய் அனைத்தும் சத்தென்றும் அனைத்தும் அசத்தென்றும் எல்லாமே கற்பிதங்கள் என்றும் பலவாறு புலம்பித் திரிவர் என்பதாம்.


இதன்வழி தூதூரக்காட்சி வீடுபேற்றுடன் தொடர்புடைய ஒன்று என்பதையும் அடுத்து விளக்குகின்றார்.

சூத்திரம் 9.3

தூதூரக்காட்சி தொலைக்குமே காலம் அதனின்
தொல்லிறை வனோடேத் தொடக்கு

வரலாற்று உணர்வின் வாரக்காட்சிக்கு அப்பால், அதன் மூலமாக நிற்கும் தூதூரக்காட்சி அல்லது துரியாதீதக் காட்சியின் (The absolutely transcendent) தனிப்பண்பாவது, எஞ்சி நிற்கின்ற ஆணவத் தொடக்கையும் போக்கி, ஆன்மாவை அதிசுத்தமாக்கி திரோபவமும் நீக்கி அதன்வழி எல்லா வேட்கை நிலைகளையும் அகற்றி காலவுணர்வு எழா நிலனாகிய திருசிற்றம்பலத்தில், மேலான ஈறிலா பெருந்தலமாகிய அச்சிவதலத்தில் இருக்கச் செய்யும் என்றவாறு. இதனால் பிறவற்றோடு தொடக்கற்று பண்டே தன் உள்ளத்தில் நீங்காது நிற்கின்ற இறைவனோடு முற்றிலும் கலந்து அன்னியமின்றி வேறற்ற உணர்வுடன் அத்துவிதமாக நிற்கும் என்றவாறு. இதனை பற்றி திருமூலர் இவ்வாறு கூறுகின்றார்.

2589

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
அம்மான் அடிதந்து அருட்கடல் ஆடிற்றேல்
எம்மாயமும் விடுத்து எம்மைக் கர்ந்திட்டுக்
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே

2591

குறியாக் குறியினில் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ்
செறியாச் செறிவே சிவமென லாகும்


இங்கு ‘பேச்சற்ற பேரின்பம்” என்றதினால் காலங் கடந்தமை குறித்தாயிற்று. அதனால் எல்லா வகைக் கற்பிதங்களும் மறைந்துபோய்விட, அதனை எம்மாயமும் விடுத்து என்கின்றார் நம் மூலர். ‘எம்மைக் கரந்திட்டு, சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே’ என்பதினால், இறைவனோடு அறிவத்துவிதக் கலப்பினால் தற்போதமிழந்த தனக்கென்னும் தானென்னும் சிந்தனை யாதுமின்றி, திருந்திய இடமாகிய திருசிற்றம்பலத்தையே சோதிப்பதல்லால் வேறொன்றுமில்லை இம்மேலான நிலையில் என்கின்றார் மேலே காட்டப்பட்ட முதல் பாடலில்.

அடுத்தப் பாட்டில் இதனையே ஓர் புதிர்போன்று கூடாத கூட்டம் என்றும் , செறியாச் செறிவென்றும் கூறி பொருளத்துவிதமாகிய வேதாந்த அத்துவிதத்தை மறுத்து, அறிவத்துவிதமாகிய சித்தாந்த சுத்தாத்த்வத்தையே வற்புறுத்தி மொழிகின்றார். ‘அறியா அறிவில் அவழ்வதாவது’ இறைவனது அருட்புனலில் மூழ்கி, சிவஞானத்தையேப் பொருளாகப் பெற்று, குறியாதக் குறியாக இப்பொழுது ஞானக் கண்ணிற்கு இறைவன் உள்ளவாறு எவ்விதத் திரிபும் இன்றி தென்பட, அதனின் செறியாது செறிந்து கிடப்பதாம்.

இவ்வாறு இன்னும் பல சிவஞானிகளும் கூறியுள்ளனர். கண்டு தெளிக.


அடுத்து வேதாந்த பொருளத்துவிதத்தை மறுத்து இந்நிலையிலும் இறைதரிசனம் உண்டென்னும் உண்மையைக் கூறி சைவத்தின் அறிவத்துவிதத்தை நிறுத்துகின்றார்.

சூத்திரம் 9.4

அசலனசொரூ பியாய் அகண்ட பரிபூரணனாய்
அழியாநிற்கு மிறையையறி யுமுயிர்

மேற்கூறிய துரிய துரியாதீதக் காட்சிகளை ஆன்மாக்கள் கண்டு மகிழ, பல்வேறு சங்காரங்களை நிகழ்த்தி பரவிருத்தனாக பஞ்ச கிருத்தியனாக, சகள நிட்கள வடிவங்கள் எடுத்தும், தனது சொரூபம் அசலனமாதலால் அகண்ட பரிபூரணமாய் அகளமாய் காலத்தில் தாக்குறாது நிற்கும் நிலையே தன் நிலையாக இருப்பன் இறைவன் என்றவாறு. இப்படிப்பட்ட தற்சொரூப நிலையை ஆன்மாக்கள் முற்றிலும் சுத்தமாகி அதீத நிலையில் பொறிகரணங்கள் எல்லாம் ஒடுங்கிக் கிடக்க, வாரக் காட்சிக்கு இறங்காது தூதூரக் காட்சியிலேயே அழுந்திக் கிடக்க இறைவனை அநந்நியமாய் நின்றறிந்து ஆனந்திக்கும் என்றவாறு.

இதனைப் பற்றி இவ்வாறு கூகின்றார் உய்யவந்த தேவர் தம் திருவுந்தியார் எனும் நூலில்:

அகளமாய் யாரும் அறிவறி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றூந்திபற
தானாகத் தந்தென் றூந்திபற

சகளமாய் பல்வேறு வடிவங்களில் தோன்றி பல திருவிளையாடல்களை நடத்தி ஆன்மாக்களுக்கு பல்வேறு ஞானங்களையும் புகட்டி அருள்பாலிக்கும் இறைவன் தற்சொரூபம் நிட்களமாக இருக்க யாரும் தற்போத முனைப்பால் கணடறிய முடியாத ஒருவனாகும், அந்த தற்போத செருக்கிணை ஒழிக்கவேதான் தன்முன் தற்சொரூபத்தில் தோன்றாது தோன்றி குறியாது குறித்து தன்னை அறிவியாது அறிவிப்பன் என்றவாறு.

மேலும் குருஞான சம்பந்தர் தமது ‘முத்தி நிச்சயம்’ எனும் நூலில் இவ்வாறுங் கூறுகின்றார்.

உன் உருவங் கண்டிருப்பதோ கெட்டேன்; முத்த சிவன்
தன்னுருவங் கண்டிருக்கத் தக்கதே – முன் அறிஞர்
ஓது சிவன் தோற்றம் ஒன்றுமே காண்பதெனும்
போதம் மறந்தாய் இப்போது

முத்தி என்பது ஆன்மா தன் சொரூபத்தைக் கண்டு மகிழ்வதல்ல என்ற ஆனந்தவாதத்தை மறுத்து, முத்தி என்பது மெய்யாக சிவனது தற்சொரூபத்தை காணாது கண்டு இன்புறுவதாம் அந்நிலையில் சிவனன்றி பிற அல்லவாம். இதுவே பண்டைய சிவஞானிகள் தம் சிவானுபவத்தின் அடிப்படையில் விரிக்கின்ற வீடுபேற்றின் பண்பாகும், வேறு பிறவல்ல என்றது.

இவையும் இன்னும் இதுபோன்ற பிற சிவஞானிகளின் கூற்றும் இறைவனை திரிபின்றி தற்சொரூபம் கண்டு அதில் அழுந்தி கிடப்பதே மெய்யான வீடுபேறு என்றாயிற்று.


இதனைப் பற்றி இன்னும் ஒன்று,

சூத்திரம் 9.5

முத்திவீடது காலத்தின் முடிவினைத் தருந்தூ
தூரக்காட்சி யின்றுன்னுவ தொன்று

இவ்வாறு பண்டைய மெய்ஞானிகள் கூறிச்சென்றுள்ள முத்தி எனும் வீடுபேறு இங்கு இன்னும் சிறிது விளக்கப்படுகின்றது. தூதூரக் காட்சியின் வழி ஆன்மாக்கள் துன்னுவது அல்லது பொருந்துவது என்றும் ஒரே படித்தாகிய இறைவனது தற்சொரூபமென, கடப்பதற்கு மிக அரிதாகிய காலவுணர்வினைக் கடந்து ஆன்மா முற்றிலும் தூய்தாக முடியும் என்றவாறு

திருமூலர் இதனைப் பற்றி பரக்கக் கூறியுள்ளார், காண்க:

2903

தற்பர மல்ல சதாசிவன் தானல்ல
நிட்கள மல்ல சகள நிலையல்ல
அற்புத மாகி அநுபோகக் காமம்போல்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே

2908

விதற படாவண்ணம் வேறிருந் தாய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்து அக்கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே

எவ்வித கற்பிதங்கட்கும் எட்டாது அவற்றிற்கு அப்பாலாய், அந்தக் கற்பனைகளை எல்லாம்---- தற்பரன் என்றும் சதாசிவன் என்றும் நிட்களம் என்றும் சகளம் என்றும் இவ்வாறான கற்பிதங்களை எல்லாம் --- கழன்று சுத்தப் பாழில் ஆகவே அதனைத் தரும் தூதூரக் காட்சியில் இறைவனோடு ஒன்றித்து உடங்கி பிரிப்பின்றி நல்லொருமை உணர்வோடு ஒடுங்கி கிடந்தேனே என்று அதனை அநுபவித்து உலகத்தார்க்கு உரைக்க மீள வந்து ஒருவாறு உரைக்கின்றார் திருமூலர் தம் முத்தி அனுபவத்தை.

இங்கு கூறப்படுவது நாதாந்தம் என்றும் இதுவே சமயாதீத உணர்வினைத் தருவது என்றும் தாயுமானவர் போன்ற சிவஞானிகளும் கூறியுள்ளனர். துரியாதீதக் காட்சி உண்மையே சமயாதீத உணர்விற்கு அடிப்படையாகும்


மேலே சொல்லப்பட்ட கற்பனை உதறிய ஆகவே மெய்யுணர்வைத் தவிற வேறு உணர்வுகள் தோன்றா சுத்தப் பாழ் இடமே திருசிற்றம்ப்லம் என்றும் சிதம்பரம் என்றும் கூறி அதனை இன்னும் விளக்குகின்றார் ஆசிரியர்.

சூத்திரம் 9.6

ஓங்காரத்தின் உட்புகும் உயிருணருமே வொடுங்கி
ஆங்கார மழிக்குமம் பலம்

ஓங்காரமொழியாகிய ஓரெழுத்து மொழியிலிருந்து எழும் 51 அக்கரங்களும் அசபா மந்திரங்களும் நமசிவாய எனும் பஞ்சாக்கரமும் அக்கரங்களால் எழும் அக்கரசக்கரங்களும் ஆகவே யந்திரங்களும் இறைவடிவங்களும் இன்னும் இதனோடொத்த பிறவும் கண்டு கடந்து நாதாந்த முடிவிற்கே சென்று, தற்போத முனைப்பெல்லாம் இழந்து ஆகவே கற்பனைகளை எல்லாம் உதறி சுத்தப்பாழில் சுத்தப் பரவெளியில் ஒடுங்கிட, அதுவே தானெனும் முனைப்பை ஆங்காரத்தை தோன்றவிடாது கரந்துவிடும் திருசிற்றம்ம்பலம் என்பது.

திருசிற்றம்பலமாகிய சுத்தப் பாழில் ஏகதேசமாகவின்றி நிர்த்தேசமாக முற்றிலும் படர்ந்து பரந்து இறைவனது வியாபகத்தோடு வியாபகமாய் --- எங்கே இறைவனோ அங்கே தானுமாய், பிறிது வேறு என்ற அந்நியவுணர்வுகள் யாதும் தோன்றா வண்ணம் இருக்க ஆங்காரம் முற்றிலும் அழிந்துவிடும் என்பதாம்.

திருமூலரும் இதனை இவ்வாறு கூறுகின்றார்.

923

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓமென் றெழுப்பே

924

ஓமென்று எழுப்பித் தன் உத்தம நந்தியை
நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே

அனைத்தும் மந்திரங்களால் அமைகின்றன என்பதாலும், பற்பல வரங்களைத் தரும் மந்திரங்களாகத் தேர்ந்து அவற்றின் வழி சூழ்கின்ற --- அறிவிற்கும் சிவஞானத்திற்கும் --- பகையாகிய அணைத்தையும் போக்கி ஓம் என்ற மந்திரத்தை, பெரும் வரமாகிய சிவஞானத்தத் தருகின்ற அம் மந்திரத்தை எழுப்பி அதனோடு ஒடுங்க வேண்டும்.

அதன் வழி இறைவனது கற்பனைக் கடந்த தற்சொரூபத்தைக் கண்டு கண்டு அது தானாக வேண்டும் என்றவாறு முயல, அகத்தின் நடுவே ஞானக் கதிரவனாக எழுகின்ற இறைவனை தரிசித்து அதன் கதிர் கொண்டு அகத்திருளைப் போக்கிப் போக்கி ஓங்கார வட்டத்தையும் கடக்க, மாமன்றாகிய திருசிற்றம்பலம் அடைந்து மேலான சிவானந்தப் பேறு அடைவார்கள் என்பதாம்


அடுத்து திருசிற்றம்பலம் புகுந்து மேலான சிவானந்தம் புசித்து வீடுபேறு மகிழும் முத்தான்மாக்களின் இயல்புகளை சிறிது விளக்குகின்றார்,

சூத்திரம் 9.7

ஆங்கார மழிக்குமான்மா அருளொடு புணர்ந்து
அன்பேதா னேயாயவனி புரக்கும்

ஆங்காரம் அழிக்கும் ஆன்மாவாவது தன்முனைப்புக் கெடுத்து தான் தனது என்ற அகந்தையும் செற்றவராம். இவர்கட்கு இருப்பு நிலன் திருசிற்றம்பலமேயாக அங்கு இறையருளில் முற்றிலும் அழுந்தி ஆனந்திப்பது அன்றி வேறு இல்லை. அந்த ஆனந்தமும் பராபரையாகிய ஒங்கு தூய ஒளியாகத் தோன்றும் அம்மையுடன் இரண்டறக் கலந்து நடராச பெருமானாக சிவபெருமான் தோன்றி திருக்கூத்து உதைக்க அதனைக் கண்டவாறு பேரின்பத்தில் மூழ்கி கிடப்பதாம். அருளே வடிவாகிய அம்மையுடன் முற்றிலும் கலந்து உள் கரந்துவிட, அந்த அருளின் மேலீட்டால் அன்பேத் தானாகி பிறர் நலம் பேணும் திருத்தொண்டனாகி தொண்டே வாழ்க்கையாகக் கொண்டு எஞ்சிய உலக வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் என்றவாறு.

இவ்வாறே சான்றோர் பலரும் கூறிச் சென்றுள்ளனர்.

திருமூலர் இவ்வாறு கூறுவார்.

2917

மலமில்லை மாசில்லை மானாபி மானங்
குலமில்லை கொள்ளூங் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பிற் பதித்து வைப்போர்க்கே

வேறு யாதையும் இச்சியாது தானெனும் செருக்கினால் வரும் மானாபிமானங்கள் போன்றவற்றை எல்லாம் அறப்போக்கி சிவஞானத்தாலே நந்தியை திரிபின்றி கண்டு இடையறாது தொழுவார்க்கு மலமாசுக்கள் இல்லாது போம் என்றவாறு. அன்பிற் பதிதல், அன்பேத் தானாகி நிற்றலாகும்.

2928

சித்தஞ் சிவமாய் மலமூன்றும் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தங்
கத்துஞ் சிலகுங் கலகமுங் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம் என்று எண்னியே

மூவகை மலமும் செற்று ஆங்காரம் எழாது நிற்போர் மலபந்தங்கள் யாதும் தோயாது நிற்பர். சினமுங் சிறுமைகுணத்தால் வரும் கலகங்களும் காணார். ஓங்காரமாய் அம்மை பரவிந்துவில் வியாபித்து தூய ஒளி வடிவ பராபரையாக நிற்க, அதனோடு ஒன்றாகி அது தானாம் என்று நிற்க சித்தத்தில் சிவத்தை அன்றி வேறு இல்லாது போம் சிவபோக நிலைத் தலைப்பட தானும் சுத்தச் சிவமாகி நிற்பர் என்பதாம்


இங்கு பரவிந்துவாக விரிந்து நிற்கும் அம்மையின் அருளின்றி அதனையும் கடந்து நிற்கும் பரசிவனை சித்தத்தில் தேற்றல் வெளிப்பட்டு நிற்கச் செய்தல் இயலாதென்பதாம். இவ்வாறு கூறுவார் நம் திருமூலர்.

2938

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருவ இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே

அகங்காரம் செற்று அருளுடன் புணர்ந்த பின் அடியார்கட்கு ஆகும் செயல்களை இப்பாடலில் விளக்குகின்றார் திருமூலர்.

அருள் மேலீட்டல் வரும் தூய அன்பினுள் உருகி உருகி கசிந்து அழுதும் அரற்றியும் நாள் தொறும் இறைவனைத் தொழுது துதித்துப் போற்றிப் போற்றி அவனை களிகூர கண்டு கண்டு புணர்ந்து நுகர்ந்து உண்டு மகிழ்வன் என்பதாம்.

மேலும் உய்யவந்த தேவரின் திருக்களிற்றுப்படியாரிலும் இவ்வாறு கூறப்படுகின்றது.

துரியங் கடந்த சுடர்த்தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் ---- துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான் செய்யுந் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பருக்கு அவன்

இங்கு துரியங் கடந்த சுடர்த்தோகை என்பது தூதூரக் காட்சியிலே காணவரும் பராபரையாம். இந்த பராபரையோடு யாண்டும் பிரியாது நிற்கின்ற பெம்மான் இங்கு அருளோடு புணர்ந்து சத்யுத்தனாக நிற்க, விழித்திருக்கும்போது தூதூரக் காட்சியில் தன்னைக் காட்டி அருளி தன் தன்மைகளை ஆன்மாக்களுக்கு வந்தடையுமாறு செய்து தன்னோடு முற்றிலும் ஒத்துப்போகும் பண்பினைத் தரும் அறிவத்துவித நிலையை அருளுவன் என்பதாம்.

அருளாகிய பராபரையின் வழியே இறைவன் வீடுபேறு அருளுகின்றான் என்பதையும் திருக்கடவூர் உய்யவந்த தேவர் கீழ்வரும் பாட்டில் விளக்குகின்றார்.

78

நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும் --- நங்கையினும்
நம்பியாய்த் தான் நடுவே நாட்டப் பெறும் இதுதான்
எம்பெருமான் தம் இயல்பு

இதன் பொருள்:

ஆடவர்களாகிய நாம் ஓர் நங்கையை மணந்து இன்பம் தூய்ப்பது, குழந்தைகளைப் பெற்று மகிழ்வது மேலும் உணவு உறையுள் எல்லாம் அவளைப் பணித்து செய்யவைத்து பெற்று மகிழ்வது போன்று, இறைவனும் பராபரையாகிய நங்கையை ஏவி இந்த பெரும் உலகினை தன் பஞ்சகிருத்தியங்களால் நடாத்தி உயிர்கட்கும் நல்லது செய்கின்றான். கற்று மேம்பட்டு அகங்காரம் செற்ற நல்லான்மாக்கள் இந்த பராபரையாகிய அருட்புனலில் முற்றிலும் அழுந்தி மூழ்க, அங்கு அதன் நடுவே நாயகனாக தான் இருப்பதை உணர்த்துவன் இறைவன் என்றவாறு.

இதனையே பொய்யாப் பெரும்புகழ் மெய்கண்டாரும் தமது சிவஞானபோதத்தில் இவ்வாறு கூறுவர்:

78

அது இது என்றது அது அல்லாற் கண்டார்க்கு
அது இது என்றதையும் அல்லான் --- பொது அதனில்
அத்துவிதன் ஆதல் அகண்டமும் தெய்வமே
அத்துவிதி அன்பின் தொழு

இதன் பொருள்:

அது இது என்ற சுட்டறிவிற்கு எட்டாதவன், அது இது என்று சுட்டறியும் அறிவிற்கும் எட்டாதபடி மறையாக நிற்பவன். இந்த சுட்டு நீங்கி காலவுணர்வைக் கடந்து சுட்டிகந்தாரே புகத் தக்க திருசிற்றம்பலமாகிய பொது மன்றில் புகுந்து அதனோடு கரந்து வேறற நிற்க, அகண்டமாக சர்வ வியாபியாய் நிற்கும் பரசிவன் வெளிப்பட்டு அந்தப் பொது மன்றின் நாயகனாக நிற்பன். அவனோடு முற்றிலும் ஒத்துப்போக வேண்டுமெனில் அன்பேத் தானாகி எவ்வுயிரோடும் அந்நியம் பாராட்டாது அத்துவிதி அன்பின் தொழ வேண்டும் என்பதாம்.

இங்கு இப்படிப்பட்ட அத்துவிதி அன்பே சமயாதீத உணர்விற்கும் அடிப்படை என்பதைக் காண்க. முற்றிலும் சுத்தமாகி எல்லாக் கற்பனைகளையும் கற்பிதங்களையும் போக்கிய ஆன்மாக்களுக்கு சமயப் பற்றுகள் யாது இராது என்பதொடு அவற்றிற்கு மேலே சென்று சமயாதீத நிலையிலேயே சுத்தமாக வாழும் என்றது.

சிவஞான கற்பம் ஒன்பதாம் தந்திரம் முற்றும்

சிவஞானகற்பம் முற்றும்










































பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 23 மே 2012, 08:23 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,561 முறைகள் அணுகப்பட்டது.