சிவஞான கற்பம்-5

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 சிவஞானகற்பம்

ஐந்தாம் தந்திரம்: அறப்பார்வை

இதுவரை விளக்கப்பட்ட காண்டற்கலை வழி தனது பல்வேறு அனுபூதிகளைத்தான் அறியமுடியும். ஆயினும் எல்லாவகை அனுபூதிகளையும் தன்னுள் தான் ஒடுங்கிட , வாயிற்காட்சி போன்ற காட்சிகளின் அறியமுடியாது. தன்னின் பல கூறுகள் தன்னைப்போன்று பிற ஆன்மாக்களும் இருக்கின்றன அவற்றோடு தான் பந்தப்பட்டு இருக்கின்றேன் என்று அறியவருவதால்தான் அறியமுடியும். வாழ்க்கை என்பது குமுகாய வாழ்க்கையும் ஆகும். பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட அரசியல் வாழ்க்கை என்பதோடு தொண்டினை மையமாகக் கொண்ட சமய வாழ்க்கையும் குமுகாயவாழ்க்கையில் எழுபவைகளாகும். மேலும் இங்குதான் பக்குவ முதிர்ச்சிக்கு இன்றியமையாத அறப்பார்வை விளைகின்றது என்பதின், அறவுணர்வினை ஆயும் வகையில் இந்த தந்திரம் செல்லும்.

தன்னுள் தோன்றும் வாதனைகள் வழி தன்னைத்தான் அறிதலோடு, 'தான்' எனத் தன்னை தனிக்கும்போது 'பரன்" என்பான் ஒருவன் தனக்கு அயலாக, தன்னைக் காண்பானாக இஇருத்தலும் உண்டே? அது எவ்வாறென , அதனின் எவ்வாறு அறவுணர்வு எழுகின்றது என விளக்கத் தொடங்குகின்றார் ஆசிரியர்.

5.1

தானவனோடும் பரனோடும் தங்கியிருப்ப தறிதல்
தன்னறி விலோர்க் கூறு


தன்னுள் எழும் மெய்ப்பாடுகள் வழி தானிருப்பதையும் தன்னின் இருப்புநிலைகள் இப்படிப்பட்டன என்றும் அறியும் போது , "நான் - நீ" என்றோ " நான் - அவன்" என்றோ சுட்டுநிலையில் பேதப்படுத்தல் இல்லை. அவ்வாறு பேதப்படுத்தும் பொழுதே " நான் சுகித்தேன்" "நான் துன்புற்றேன்" என்றெல்லாம் மொழிபடுத்தவரும். "நான் --நீ" என்ற தன்மை முன்னிலையிலும் " நான் - அவன்" என்ற தன்மை படர்க்கை நிலையிலும் , "நான் - பரன்" என்ற பொதுமையிலும் எழூஉம் ஆன்ம அறிவெல்லாம் சுட்டுணர்வுபட்டதாம். இங்கு திகழும் எல்லா பேதங்களிலும் "அது' என்ற சுட்டு உண்டு. இவ்வாறு சுட்டுணர்வாய் எழுகின்றவற்றில் ஊடுறுவி பொதுவாக நிற்பதைக் வேறுபடுத்திக் காண அது பொழுது 'தான்" என்ற தனி ஆன்ம உணர்வு பிறக்கும், அதற்கேற்ற சொல்லாடலும் பிறக்கும். ( A kind of abstraction) இங்கு "ஒன்று" என்ற உணர்வு இருப்பதின் அதுவும் ஓர் வகை சுட்டுணர்வே என்பார் மெய்கண்டார். இனி இதனால் இவ்வறிவு தான் அவனோடும் பரனோடும் ஒரே உலகில் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நின்று பற்பல செய்கின்றோம் என்ற தெளிவினையும் தரும். இஇதுவே தொல்காப்பியர் அன்றே கண்ட "ஒன்றே வேறே என்றிரு பால்வயின்" பட்டு வாழ்வதாகும். "தான்" எனும் ஆன்மவறிவு தனித்துத் தோன்றாது; அதேப் போன்ற பிறவற்றையும் அறிந்த பிறகு ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டு பிரித்து ஒன்றுபடுத்தும் வேறுபடுத்தும் பொழுதே இவ்வறிவு பிறக்கும் என்பதால், இப்படிப்பட்ட அறிவு " தன்னலறிவிலோர்க் கூறு" என்றாயிற்று. தன்னைப் போன்று பிறன் இல்லையெனில், வெவ்வேறென சுட்டியறிதல் இல்லாது போக " தான் " என்ற அறிவும் அதன்வழி வரும் சொல்லாடலும் இல்லையென்றாயிற்று.

இதனை இன்னும் சிறிது அடுத்து விளக்குகின்றார் நம் ஆசிரியர்.

5.2

உணர்த்த வறிதல் உண்டாயுலகில் உண்டே
தானவ னெனும் பேதம்

இவ்வாறான சுட்டறிவுகள் எவ்வாறு எழுமென, அவை தோன்றும் சூழலை ஒருவாறு இங்கு விளக்கியவாறு. சடப்பொருட்கள் வாளே கிடக்குமே யொழிய, ஓர் குறிப்பினைத் தேற்றி மொழியாலோ அல்லது பிறவகையாலோ அதனை உணர்த்தாது. இஇவ்வாறு உணர்த்தலும், உணர்த்தப்பட்டதை உணர்த்தியாங்கு அறிதலும் எல்லா உயிர்களிடமும் ஏதாவதோர் முறையில் நடந்துகொண்டே இருக்கும் ஒன்றாகும். இதுவும் பற்பல கரணங்களால் எழுவதாகும். மானிடர்களிடையே இது பரக்க இலக்கணமுடைய வைகரிமொழியாலும் குறிப்புமொழியாலும் இன்னும் பிறவகையாலும் நடக்கும் ஒன்றாகும். இதனால் இவர்கட்கு சம்பிரதாயம் என்றும் பண்பாடென்றும் பல வரம்புகள் அமைகின்றன. வரலாறு பட்டதாக வாழ்க்கையும் அமைந்து விடுகின்றது. உடலின் வரு பல கன்மக் கூறுகளோடு, மரபு வழிப்பட்ட பல வரம்புகளும் தனது கூறாக அமைந்துவிடுகின்றது.

தான் என்றும் அவன் என்றும் பற்பல ஆன்மாக்கள் வெவ்வேறாய் இல்லையெனில் இவ்வாறான உணர்த்தல்-உணர்தல் நிகழ்ச்சிகள் மெய்ப்பட நிற்காதுபோம். இவற்றை அனுபவபூர்வமாக அனைவரும் காணக்கிடப்பதால், ஆன்மாக்கள் பலவென்றும் அவற்றை அவன் அவள் அது அவை என்று பேதப்படுத்திக் காண்பதுவும் நடக்கின்ற மெய்யானவொன்றே, திரிவல்ல, வெற்றுக் கற்பிதம் அல்ல; அத்தியாசம் ஆரோபிதம் போன்ற மித்தியாஞானமும் (illusions, delutions) அல்ல என்றவாறு.

இதனின் இவ்வாறு கூறும் மாயாவாத சங்கர வேதாந்திகளை மறுத்ததுமாகும்.


பல்வேறு குமுகாய உறவாடல்கள் வழியும் இவ்வறிவு பிறக்கும் என்கின்றார் அடுத்து.

5.3


இணங்குதல் பிணங்குதல் ஏதிலாளனாய் எதிரிட்டு
அணங்குதல் அருத்துமேயிவ் வறிவு

இணங்குதலாவது கருத்தொத்து உடன்பட்டு ஒன்றாய் நின்று இணக்கத்தோடு பற்பல செய்தல். பிணங்குதலாவது கருத்து வேறுபட்டு நோக்குடன்படாது ஆகவே ஒத்துநில்லாது வேறுவழி செல்லல். ஏதிலாளனாய் எதிரிடலாவது, இவ்வாறு பிணங்கி வேறுவழி செல்வதொடு, பகைமை பாராட்டி எதிராக நிற்கும் புறத்தவனாகி, அழிக்குங் கருத்தொடு அணங்காக மாறி பற்பல இன்னல்களை தரும் நிலையாகும். தானும் அவனும் ஒன்றே வேறல்லவெனில், இவ்வாறான குமுக்காய உறவுமுறைகள் மெய்யாகா தென்க. இவ்வகையான உறவுநிலைகள் ஒருவன் ஞானியாய ஆய்விட்ட பொழுதும் நடக்கும் ஒன்றாகும். ஞானியானவர் அருட்போர் செய்து அஞ்ஞானிகளை அடக்கி பரணிபாடற்குரி செம்மல் ஆவதும் உண்டே? இதனாலும் ஆன்மாக்கள் பற்பல, எண்ணிறந்தன என்றவறிவும் மெய்யான அறிவாகின்றது.

இனி சாதன சதுட்டயங்களாகிய நித்திய அநித்திய விவேகம், நிராசை, வைராக்கியம், சமாதி போன்றவற்றில் தன்னை யொடுக்கி, தன்னின் தற்சொரூபம் பரப்பிரமம் என்று அறிவதே தன்னறிவு என்பதை மறுக்கின்றார் அடுத்து.

5.4.


தானென்று தனிப்பதும் பரனென்று விடுவதும்
தற்கல்வி பாற்பட்ட வை

இவ்வாறு சாதன சதுட்டயங்களால் தன்னுள் தானொடுங்கி பரனென்றும் பிறவென்றும் வரும் பேதங்களெல்லாம் தன் கற்பனா விசேடத்தால் இல்லையென்றாக்கி தன் தற்சொரூபம் பரப்பிரமம் என்றவாறு ஒரு சிலர் ஆடுவதும் மெய்யேயாகும். வேதாந்திகள் பலர் இவ்வாறு. ஆனால் இது யாதை உணர்த்துகின்றதோவெனின் தான் இவ்வாறு இச்சிக்க தான் இவ்வாறு ஆகக்கூடிய ஓர் சாத்தியத்தையே( a possibility, a potentiality) உணர்த்துகின்றதே தவிற, இதுதான் உண்மை என்பதை யல்ல. இவ்வாறு ஆடி ஒருவன் யாதை உணருகின்றானெனின் தன்னாலும் இவ்வாறு பயின்று மகிழ முடியும் என்பதை§ தவிர வேறொன்றுமல்ல. ஆதலின் இதுவும் தற்கல்விபாற் பட்டவொன்றாயிற்று. தன்னை இவ்வாறு காண்கின்றான் ஒருவன் இவ்வாறு இருப்பதற்குக் காரணமாக பிறவற்றைக் காணாதொழிய இத்தகைய அறிவு அப்பிரகாசத்தோடு கலந்த அறிவாயிற்று. இதனால் அனுபவிக்கின்ற இன்பமும் பொய்யின்பமாயிற்று.

இதுவொரு ஆன்மாவின் தற்காப்பு நிலையே (self-defence) ஆகும். வாழ்க்கை அளவிற்கு மீறிய துன்பமும் துக்கமும் உடைத்தாக, அதனின்று விடுபட விரும்புவான் தான் அழியாதுபோய்விட உலகம் பொய்யென்றும், மித்தை யென்றும் அதுவிதுவாய்க் காணப்படுவதெல்லாம் கற்பிதங்கள் என்றும் இன்னும் பலவாறு பிதற்றி அது தனக்கு இல்லாதாக்கி மகிழ்வதே இங்கு நடைபெறுவது. தானே கற்பிக்கின்ற மயக்கவின்பத்தை அனுபவிப்பதாகும்.

இப்படிப்பட்ட மயக்கவின்பங்கள் பல தூய்ப்பதுவும் தற்கல்விபாற் பட்டதேயாம். ஆயினும் இது தன்னைப் பற்றிய குறை அறிவே தவிர, முழுவறிவு அல்ல என்றவாறு. இதன் விரிவெலாம் பிறகு.

அடுத்து "தான்" என்றும் "நான்" என்றும் வரும் தன்னறிவிற்குள் புதைந்து கிடக்கின்ற அகங்கார கட்டமைப்புக்கூறுகளை தெள்ளிதின் எடுத்து விளம்புகிறார் ஆசிரியர்.

5.5


தனக்கென பிறர்க்கென தானுறுவிரு நிலையிற்
தள்ளாவிழுந் தானெனு மனைத்தும்

வாழ்க்கையில் தான் இருப்பதும், பற்றுற்று நிற்பதும், பற்பல ஆசைகளோடு உழல்வதும் போன்ற இவ்வறிவுகளோடும் குணங்களோடும் ஆன்மா தனித்து வாழ்வது இந்நிலையில் முடியாதவொன்றாகும். ஆன்மாவின் இப்படிப்பட்ட தன்மைகளை ஆழ நோக்க, அது தனக்கென வாழ்வதாகவும் அதேபொழுது பிறர்க்கென வாழ்வதாகவும் தள்ளிவிடா முறையில் இருக்கும் ஓர் பொருள் என்ற தெளிவும் வந்தமையும். இதனால் ஆன்மா என்பது யாண்டுமே குமுகாய உறவுகளில் பிரிக்க முடியாவகையில் கிடக்கும் ஒன்று என்பதுவும் தெளிவு.

தனக்கென வாழ்வது காணவரும் அனைத்தையும் தற்கிழைமையாக்கிக் கொள்ளும் முனைப்பொடு " எனது" என்ற உரிமை பாராட்டும் வகையில் உழல்வதாகும். அதேபொழுது குடும்பமாய், குமுகாயமாய், நாடாய் வாழவேண்டிய இன்றியமையாமையை நோக்க, தன்னலம் ஒதுக்கி பிறர்நலம் பேணும் தன்மையும் இருப்பது உணரவருகின்றது. மாந்தர்கள் தனித்து வாழக்கூடியவர்கள் அல்ல. ஓர் இனமாக இணைந்தே வாழவேண்டியவர்கள். இதனால் ஒருவன் பிறரை நோக்குவதும், பிறர் அந்த ஒருவனை நோக்குவதுமாக , தொல்காப்பியர் கண்டவாறு "ஒன்றே வேறே என்றிருபால்வயின்" பட்டவகையில் உறவாடல்கள் செல்கின்றன. இதனால் தள்ளிவிட முடியா வகையில், பிறப்பொடு ஒர் குமுகாயத்தில் உறுப்பியம் பெற்றவனாகவும் ஒருவன் வாழத் தொடங்குகிறான்

இவற்றில் சமயம் பண்பாடு போற்றவற்றின் அடிப்படையாகிய "பிறருக்குத் தான்" எனும் பொதுநலப்போக்கின் வளர்ச்சி எவ்வாறு அமையும் என்பதை விளக்குகின்றார் அடுத்து. அறவுணர்வின் தோற்றத்திற்கு முன்னுரையாகவும் இது.

5.6


தனக்கேத் தான்தகிக்க பிறர்க்குத்தான் பிறக்கும்
தணிக்குந் தயைமீ துற

தன் குணத்தில் சாதாரண முறையில் வெளிபடாது கிடக்கும் அருட்பண்பு எவ்வாறு வெளிபடுகின்றது என்பதை விளக்கியவாறு. தனக்கேத் தான் என்று சுயநலமேக் கருதி பிறர் நலங் கருதாது வாழ்வானிற்கு தனிப்பட்ட முறையில் பல இன்னல்களும் இடர்பாடுகளும் வருவதொடு, பிறரால் வெறுத்து கண்டிக்கப்படுதலும் ஒதுக்கப்படுதலும் அவமானப்படுத்தப்படலும் இன்னும் இதுபோன்ற பிறவும் மெய்யாகும். பிறரால் இகண்டிக்படுதல், தூற்றப்படுதல், ஒதுக்கப்படுதல், விரட்டப்படுதல் வெறுக்கப்படுதல் போன்றவை அகத்திலே , குமுகாய உறுப்பியத்தை போக்க முடியாது கிடப்பதின், துக்கங்களும் துயரங்களும் கலக்கங்களும் எழுவதற்குக் காரணமாக, தனக்கேத் தான் என நிற்கும் சுயநலப் போக்கு தகிக்கும் ஒன்றாயிற்று. இதனால் அகத்திலே பற்பல மாற்றங்கள் வர, தன் சுயநலப் போக்கு விடுத்து பிறர் நலத்தையும் பேணுகின்ற தன்மை பிறக்கின்றது. அந்நிலை வளர, அதன்வழி தான் அவ்வமயம் இருக்கின்ற இருப்புநிலையை அலசி தெளிவாக்கும்போது, தண்மைகுணத்தை வெளிப்படுத்தும் அன்பு பாராட்டும் அருட்குணத்தின் போக்கினை மெய் நிறுத்தும் தயை சீவகாருண்யம் போன்றவை தனது சாத்தியங்களே என்றும் உணர்கின்றான். இந்த தெளிவு வலுவடைய அவனும் முற்றிலும் பொதுநலம் பேணும் மக்கட்தொண்டன் ஆகின்றான்.


தான் அவன் பரன் என்றெல்லாம் வரும் தற்பேதங்கள் (personal distinctions and differentiations) தோன்றாவாறு எப்படி உயர்வது என்று அடுத்து நவின்று தற்கல்வியின் இன்னொரு கூற்றினை விளக்குகின்றார் ஆசிரியர் .

5.7


சுட்டிமை யின்வருவது தொல்லைதற் பேதங்கள்
கட்டிமை விடக்காணா திவை

மேற்கூறிய தற்பேதங்களும் அதனால் வரும் எனது, எனக்கு, யான் எனும் செருக்கு நிலைகளும், ஆன்மா சுட்டிமையின் விழுந்து அதன்வழி காண்பதால் வரும் . இந்த சுட்டிமையே பரந்து விரிந்து எங்கும் வியாபித்து அனைத்தையும் அந்நியமாக காணும் திறத்தினை ஊட்டி ஆன்மாவைக் கட்டி அதனை சிற்றறிவினதாக்கலின், அதனை கட்டிமை என்றது, கட்டுப்படுத்துவதின். இது அகல இந்த தற்பேதங்கள் தோன்றாதொழியும் என்றவாறு. இவற்றைத் தொல்லைகள் என்பதின் கருத்து இவ்வாறு கட்டிமை நீங்காது பேதித்து பேதித்து ஒருவன் அந்நியமாக அனைத்தையும் கண்டுகொண்டே செல்ல, அதனின் இறையருள் அகத்தே பதியாது போக, மேலான சிவானந்தம் இல்லாதாகி பற்பல கிலேசங்கள் தோன்றி மனக் கலக்கங்களையும் இன்னும் இதனைப் போன்ற பிறவற்றையும் தரும் என்பதாம்.

இந்த சுட்டிமைப் பற்றிய விரிவான விளக்கங்களை எனது 'உயர்ஞானப் பனுவலில்" கண்டு கொள்க. ஒருவன் ஒரு பொருளைப் பற்றி எழும் அப்பிரகாசத்தை ஒருபுடை நீக்கி அதனை அறியவர, இவ்வாறான பொருளறிவுகள், தன் உடலை மையமாகக் கொண்ட தனி சுட்டறங்கு வழியும், பொது சுட்டரங்கு வழியும், பசுபொருட்களாக மன் சுட்டரங்கு வழியும் அதுவிது என்றும், ஒன்று வென்றும், அவனிவன் என்றும் சுட்டறியப் படுவதை மொழியின் இலக்கணக் கூறுகள் தெளிவாய் உணர்த்தும். இதன்வழி பெறப்படுவதே சுட்டறிவுகளாய் எழும் கால இட உணர்வுகளை முதலாகக் கொண்ட அறிவுகளாகும். இவ்வாறான சுட்டிமை ஆன்மாக்களுக்கு அமைவது அணுத்துவப் படுத்தும் ஆணவ மலத்தால் என்று ஓரளவு விளக்கப்பட்டுள்ளது. பிறகு இன்னும் விளக்கப்படும். இவ்வாறான சுட்டிமை கடந்தாலொழிய இதன்வழி வரும் கட்டிமை நீங்காதென்றும் ஆகவே தற்பேதங்கள் நீங்காதெனவும் கூறப்பட்டது. கட்டிமை நீக்கும் உபாயங்கள் பின் விளக்கப்படும்.

இன்பத் துன்ப நுகர்வுகளும் , அதற்கு அடிப்படையாக இருக்கின்ற சுட்டிமையும், அதனால் வரும் ஆன்மாக்களின் பண்ணை நிலையும் விளக்கப்பட்டது. பண்ணை நிலையாவது தனித்து இருப்பது ஒழித்து குடும்பமாய், குழுவாய், குமுகாயமாய், நாடாய் இணைந்து ஓர் கூட்டமாக நிற்பதுவாம் , (Social existence). அடுத்து இஇந்த குமுகாய வாழ்வின் ஓர் கூறாக தற்கல்வியின் பிறிதொரு பண்பாக பாவ புண்ணிய, நந்நியல் சார்பான அறிவுகளை எவ்வாறு காண்கின்றான் என்று விளக்கப்படுகின்றது. மேலது சத்தறிவு அசத்தறிவு எனும் அறிவு வகையினோடு தொடர்புடையதாய் இருக்க , இது தொடங்கி சுத்தவறிவு அசுத்தவறிவு என்று அறிவு சுத்தாசுத்தவிவேகமாய் சுடர்வதை விளக்கியவாறு. (Judgmental discriminations)

5.8

நின்றிருக்குந் நிமலன் நிறுத்துகின்றா னறிவில்
நன்றெனுந் தீதெனுந் நயம்

இன்பதுன்பங்கட்கு வேறதாக, அருணந்தியார் கூறுவது போன்று கணத்திடை அழியாததாக, உயிருக்கு உறுதியாக பக்குவ முதிர்ச்சிக்கு ஏதுவாக நிற்பது இதமகித உணர்வுகளோடு புண்ணியம் பாவம் எனும் இறைவுணர்வோடு வரும் மதிப்பீடுகளாம் (ethical judgments). இவை எவ்வாறு தன் அகத்துள் இருக்கின்ற பொருளாக உணரப்படுகின்றதெனின், ஆன்மாக்களோடு அவையேத் தானேயாய் நின்று, தனது ஆணையை இருத்தி ஓர் அரசன் தன் நாட்டிற்கு சட்டதிட்டங்கள் இயற்றி அதன்வழி அதனை செலுத்துவது போன்று உலகினை செலுத்துவதால் என்க. இந்த ஆணை உலகில் இல்லையெனில், ஒருவனது உள்ளத்தில் யாதாவதோர் வகையில் வெளிப்படாது நின்றதெனில், இருவினை உணர்வு எழாது போம் என்பதாம். ஒன்றினை நன்றென்றும் தீதென்று விவேகித்து அறிதலாலேயே நந்நயம் என்றும் அந்நயம் என்றும் வரும் பொருளறிவு ஆன்மாக்கள் மாட்டு மெய்ப்பட நிற்கின்றது. இந்த நந்நயத்திறன் இச்சைபால் எழுகின்ற இன்பத்துன்ப வேதனை அல்ல, இறைவனால் தன் ஆணைவழி


இதனோடு தொடர்புடைய அறநெறி அறிவின் தோற்றத்தை அடுத்து விளக்குகின்றார் நம் ஆசிரியர்

5.9


இறையாணை இயங்க வெழூஉமங் கறத்தின்
நெறியீதென்று மலவென்றும் அறிவு

புண்ணிய பாவ அறிவின் அடிப்படையில் எழுதுவதே செல்கின்ற நெறி அறனுடையது அல்லது அறனில்லாதது என்று அறிந்து குருடுபோக்கி செந்நெறி செல்வதாகும். இதுவும் நின்றிலங்கு இறையாணை வழியே தெளிவுபடும் ஒன்றாகும். ஒருவன் நெறிகளை இவ்வாறு அறம் மறம் என்ற வகையில் பகுத்துணர்வது, அவனுக்கு அப்பாலாகி அனைவரையும் ஊடுறுவி அகத்தில் விடாது நின்று ஆட்சிசெய்யும் இறையாணையினால் ஆவது என்றவாறு.

இவ்வாறு இறையாணையின் வழி அற மற வுணர்வு என்பது எவ்வாறு மெய்யாகுமெனில், இருபா இருபது உரையில் வரும் ஓர் மேற்கோள் பாடல் விளக்கம் தந்து உதவுகின்றது.

செய்வான் வினையறியான் செய்தவினை தானறியா
எய்யா தவனாலும் எல்லையறச் -- செய்தவினை
எங்கோனுஞ் செய்தனவும் எவ்வெவர்க்கும் வெவ்வேறாம்
அங்கே யறிவான் அரன்

பொதுவாக ஓர் வினையினை ஒருவன் செய்கின்றபோது அது அறமென்றும் மறமென்றும் தெரியாத நிலையிற் செய்வதுண்டு. அது புண்ணியமென்றும் பாவமென்றும் அறிதற்கு குறிகள் யாதுமில்லை. எல்லாருக்கும் சுத்தாசுத்த விவேகத்திறன் இருப்பதற்கும் , அதே பொழுது அவை வெவ்வேறாக அமைவதற்கும்ம் காரணம், ஒவ்வொருவருக்கும் அவரவர் பக்குவத்திற்கேற்ற முறையில் இறைவனே கண்டு உணர்த்தியருளுவதால்தான். இப்பண்பொடு இறைவன் நிற்கின்ற நிலை ஓர் அரசாணை போல இருப்பதால் இதனை ஒப்புமை நோக்கி இறையாணை என்றதுமாம். இதுவும் மெய்கண்டார் உணர்த்தி யருளியதை பின்பற்றி வருமொன்று:

அவ்வினையைச் செய்வதனில் அவ்வினைஞர் தாஞ்சென்றங்கு
அவ்வினையைக் காந்த பசாசம்போல் -- அவ்வினையை
பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்
ஆர்தாம் அறிந்தணைப்பார் ஆங்கு

(சிவஞானபோதம் -சூ.2)

ஓர் இரும்புத்துண்டினை சரியாக பிடித்தவழி தன்பால் இழுத்துக் கொள்கிற காந்தத்தைப் போல, ஒருவன் ஓர் வினையை சரியாகச் செய்ய, அதன்காரணமாக அந்த வினைஞனை தன்பால் ஈர்த்து அதன்வழி அறமென்னும் உணர்வை பேராமல் நிற்கும் இஇறைவன் ஊட்டானேல், ஆன்மாக்கள் அறமென்ற நுகர்வினைப் பெறா. புண்ணிய மூர்த்தியாகிய இறைவன் இவ்வாறு செய்யானெனில் வேறு யார்தான் செய்யவல்லார்? யாருமில்லை என்றவாறு.

இதன்வழி இன்பதுன்ப உணர்வுகட்கு வேறாகிய, அறநெறிபால் படுத்தி ஆன்மாக்கள் ஊய்ந்து செந்நெறி செல்லவுதவும் புண்ணியபாவ அறிவு, கற்பிதங்கள் அல்ல, புந்தியின் வெற்று விகற்பங்கள் அல்ல, தனக்கப்பாலாய் அதேபொழுது அநந்நியமாய் நின்று பேராமல் ஊட்டும் பிரானின் ஊட்டப்படும் அறிவு என்றாயிற்று. இதன்வழி வழி அனைத்தும் கற்பிதங்களே என்ற வேதாந்திகளின் அடங்காக் கோட்பாடு மறுக்கப்பட்டது எனலுமாம்.

  • அறவுணர்வெலாம் முடிவில் அருளன்பில் முடிபவை. இது அடுத்து விளக்கப்படுகின்றது

5.10

இன்பதுன்பங் கடந்ததாய் யாவருக்கும் உரித்ததாய்
அன்பினரு ளோடுவரும் அறம்

  • அறச் செய்கையினால் வரும் நிறைவும் மறச்செய்கையால் வரும் குறைவும், பற்பல ஆசைகளால் எழும் இன்பதுன்ப நுகர்ச்சிகளுக்கு வேறதாய், அப்பாலதாய் ஆழமானதாய் யாண்டும் மாறாவகையில் இருப்பதாகும். தொல்காப்பியர் கூறியது போன்று "இன்பம் என்பது தாம்தாம் மேவற்று" என்பதாக, ஒருவனுக்கு ஒன்று இஇன்பமாக அல்லது துன்பமாக அமைவது அவனது விருப்பினை ஒட்டி அமைவதாகும். ஆயின் அறமென்ற உணர்வு, துன்பமாக இருந்தாலும் அதேபொழுது ஓர் நிறைவினையும் தரும் பண்பிற்றாக இருப்பதோடு அனைவருக்கும் பொதுப்படையாக உண்மையெனப்படுவதாகவும் ஆகவே அனைவருக்கும் உரித்தாகவும் விளங்குவது. "நன்றி மறப்பது நன்றன்று" என்பது சமய இன மொழி பேதங்களோடு ஆண்பெண் என்ற பேதங்களையும் காலத்தால் வரும் பேதங்களையும் கடந்து உண்மையாக ஒளிர்வதைக் காண்க. இப்படிப்பட்டவற்றின் மனநிறைவு தரும் பண்பினை நோக்கின், நல்வினை செய்யும்போது, இறைவன் தன்பால் இரும்பைக் காந்தம் வலித்துக் கொள்வது போல வலித்துக்கொள்ள, அதுபொழுது இறைவனை நெருங்க அதன்வழி ஆணவமல நீக்கமும் அதேபொழுது அருட்பதிவும் நடைபெறுகின்றது-- ஒளி படர அதற்கேற்ப இருள் அகல்வதுபோல. தானறியாது நடைபெறும் அருட்பதிவு, அகத்திலே சுயநலங் கெடுத்து பிறர் நலம் பேணும் அன்புணர்வாக வெளிப்படும் என்றவாறு. அன்பே வடிவாக இறைவன் இருப்பதால் அவனை நெருங்க ஆன்மாக்களும் அன்பு வடிவினதாக மாறும் என்றவாறு. அன்பே சிவம் என்ற திருமூலர் வாக்கினைக் கருதுக. அறத்தொடு அன்பும் வரும் என்றாயிற்று. மேலும்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனு மது

என்ற வள்ளுவர் வாக்கையும் கருதுக. அன்பும் அறனும் ஒன்றினையொன்று பற்றிவரும் என்றாயிற்று இஇங்கு. இவ்வாறே அருட்குறளிலும்:

அறநெறி யென்பது அன்பினோ டழியாவகை
மெய்மை யும்பயப் பது

என்றும்

அறத்தா றிதுவென லருமை அனைத்துயிர்க்கும்
இதத்தால் உணர்த்துவா னிறைவன்

என்றும் இன்னும் பலவாறும் விரித்துக் கூறப்பட்டிருக்கின்றது. கண்டு ஆய்ந்துத் தெளிக

  • அறப்பார்வையின் நுட்பங்கள தொகுத்து இனிதே ஓரளவு எடுத்துரைத்தபின் , அதனால் ஆக்கூடிய ஒர் பெரிய நன்மையை அடுத்து விளம்புகிறார் ஆசிரியர்.

5.11


அறவழிப்பட் டார்க்காண்பர் அறிதற் கரிதாய
மறைகட் பலமன்னுவ துலகில்

  • அறவழி என்பதும் ஞானவழி என்பதும் ஒன்றேயாயிற்று. இவ்வழி பட்டார் அற வினைகளையேச் செய்ய, இறைவனால் தன்பால் ஈர்க்கப்பட்டு அதன்வழி சலோகம் சாமீப்பியம் சாரூப்பியம் சாயுச்சியம் என்றவாறு பதவிகளைப் பெற்று இறைவனோடு அணுக்கமாகி வரும் பல இருப்புநிலகளை அடுத்தடுத்துப் பெறுவர். ஞானமே தன்வடிவாக, ஞானமயனாகவே இருக்கின்ற இறைவனை நெருங்க நெருங்க, கட்டிமை அகல சுட்டிமை நீங்க அதன்வழி அதுவரை அறிவுக்கு ஆகாதிருந்த மறையான பல வெளிப்பட்டு அறிவாகும் என்றவாறு. இவற்றின் விரிவெல்லாம் திருமூலரின் ஐந்தாம் தந்திரத்திலும் ஆறாம் தந்திரத்திலும் கண்டு கொள்க.

ஞானி புவியெழு நன்னூல் அனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணென் சித்தியும்
ஏனை நிலமும் எழுதாமறை யீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே

அறநெறி பிழையாது செல்லும் ஞானியானவன் புவியில் எழுந்து நிற்கின்ற ஞானநூற்கள் அனைத்தையும் எளிதே அறிந்தவனாய், மேலான மோனத்தை தரும் சிவஞாத்தை நோக்கி செல்பவனாக, அதுபொழுது முழுமையாக அணிமா மகிமாவாதி சித்திகளை இறையருளால் அடைந்தவனாக, அதனால் அதுவரை மறையா நின்ற ஞான நிலங்களிற் புகுந்து வழங்குபவனாக அதனால் உபநிடதங்களின் மெய்ப்பொருளை ஆசின்றி அறிந்தவனாக அதனால் இறைவனையும் தன்னையும் மெய்யே அறிந்தனாகவும் இருப்பன் என்பதாம்.

இங்கு குறிக்கப்படும் எண்ணெண் சித்திகளில் ஒன்றாயது, கனவுகட்கு மேலான அறிதுயில் காட்சிகளைப் பெற்று அதன்வழி கடப்புரு காண் திறனடைந்து அதன்வழி மந்திரவுலகினைக் கண்டு அதன்வழி சிவனார் நடத்தும் ஞாலக் கூத்தினையும் ஞானக் கூத்தினையும் கண்டு உவப்பதாகும். அறநெறிப் பட்டார்க்கே இத்திருவெலாம் என்றவாறு.

சிவஞானகற்பம் ஐந்தாம் தந்திரம் முற்றும்





பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=சிவஞான_கற்பம்-5&oldid=10956" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 23 மே 2012, 08:06 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,525 முறைகள் அணுகப்பட்டது.