சிவஞான கற்பம்-2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 
சிவஞானகற்பம்: இரண்டாம் தந்திரம் அறிவு வகையியல்


பாயிரப் படலத்தில் மெய்யறிவாய்வின் பல்வேறு கூறுகளை விளக்கியப் பின் அடுத்து மெய்யறிவு தரும் கலைகள் யாவை என்று விரித்துக் கூறுதற்கு முன், அறிவுகளை வகைப் படுத்திக் காட்டுகின்றார் இத்தந்திரத்தில். முதற் பொருட்களாகிய கால இஇட உணர்வுகளோடு வரும் அறிவு ஒர் வகையென்றும், புண்ணியப் பாவமென்னும் இருவினை சிந்தனையோடு வரும் வகை இன்னொன்றென்றும், அறிவுகள் பிறப்பின் வகை நோக்கி இருந்தறிவு எண்ணறிவு என்றும் வகுத்தும் தொகுத்தும் விரிக்கின்றார். மேலும் இவ்வகை அறிவுகள் தோன்றுதற்கு அடிப்படையாயுள்ள மூலகங்களையும் ஒருவாறு விளக்கப் புகுகின்றார்.

தொடக்கமாக இச்சையின்றி எந்த முயற்சியும் இல்லையென, இச்சைகட்கும் அறிவு வகைகட்கும் உள்ள தொடர்பினை விளக்கியவாறு.

2.1

எத்திற மிச்சை அத்திறமாகின்ற அறிவதனை
தத்திற னாக்கச்சமை யுமெய்

(இ-ள்)

கற்றல் என்ற வினையின் வழி அறியாமை, தெரியாமை , புரியாமை போன்ற அகத்து அப்பிரகாசங்கள் நீங்க, அதுபொழுது அறிவிலேத் தெளிவு பிறக்கின்றது. ஓர் வினையின் வழி கற்றல் என்பதாலும், இச்சையே எத்திறமானது வினை என்பதை நிறுத்துவதாலும், இச்சை எவ்வயிற்றதோ அதற்கொப்பவே அறிவும் எழும் என்பதாயிற்று. "தத்திறன் ஆக்கல்" : அதுவென்று அகத்தே நுதிக்கப்பட்டதை (projected as a possibility) பற்றி நின்று அது தானாக வேண்டும் என்ற நாட்டத்தோடு இருப்பதுவாகும். இதுவே வினைகளை மெய்யாக்கும் ஓர் உறிதியான குறிப்பிற்பட்டு வரும் இச்சையின் வடிவமாகும். இந்த வடிவற்ற இஇச்சை "அது தான் ஆக வேண்டும்" என்ற நாட்டவடிவம் (intention) பெறும்போது, வினைகள் மெய்யாகின்றன. நுதிப்புக்கள் இஇருக்க, அவற்றைப் பற்றி செயலில் முடியும் நாட்டங்கள் எழாபோது , அந்த நுதிப்புக்கள் வெற்று கற்பனைகளாக முடிகின்றன. அப்படியன்றி நாட்டங்கள் பிறக்க, செயல்களில் முடிய அறிவும் வெளிப்பட்டுப் பொருளாகின்றது என்றவாறு. இதுவே "தத் துவம் அசி" என்ற மகாவாக்கியப் பொருளுமாகும். குறிப்புக்கால உணர்வில் ஓர் ஆன்மாவைத் தள்ளும் இச்சையின் நாட்ட வடிவமே, இந்த மகாவாக்கியத்தின் பொருளாகும். "அது"வென்று ஒன்றினைப் பற்றி உறுதியாக நின்றாலே ஒழிய ஓர் செயல் மெய்யாகாது என்க. மேலும் அதுவென்று ஒன்றினைப் பற்றி அதுதானாகிட, இன்னொரு "அது" தோன்றி இன்னொரு புதிய நாட்டத்தைத் தோற்றுவித்தவாறு வாழையடி வாழையாகச் செல்லும். இச்சை பாற்பட்ட வினைகள் அனைத்தும் இத்தன்மையன என்றும் அறிக.

இனி அகத்தே எழும் நுதிப்புக்கள் (projections) அறிவினை எவ்வாறு சமைக்கும் என்று விளக்கியவாறு.

2.2

தானலா வொன்றினைத் தான்கண்டது தானிலாமையின்
தானதுவாக சமையும் அறிவு.

(இ-ள்)
ஆணவமலத்தின் தாக்கத்தால் அடங்கி ஒடுங்கி அணுத்துவப் பட்டு கிடக்கும் ஆன்மா, தன்னியல்புக்கேற்ற வகையில் முயற்சி யாதுமின்றி மடங்கியே கிடக்கும். அதுபொழுது, தான் அப்பொழுதில்லா ஆனால் ஆகக்கூடிய தன்னின் ஓர் நிலை அறிவிற்பட, ஓர் நுதிப்பாக அறிவிற் பட்டு உயிரை வெளியே இழுத்து நீட்டிட, விருப்பு வெறுப்பு என்று வரு உணர்வுகளோடு அந்த நுதிப்பினை காண்கின்றது. வெறுப்பு அதனை அழித்து ஒழித்து விடுதற்குக் காரணமாகிவிட, விருப்போ அதனை பற்றி அது தானாகவேண்டும் என்ற முனைப்பினைத் தருகின்றது. தானலா ஆனால் தான் ஆகக் கூடியவோர் இருப்புநிலையினை அதுதானாக செய்யப்படும் வினைகளே அறிவுகளை ஈட்டித்தரும் என்றவாறு. ஓர் ஊரில் இருப்போன், இன்னொரு ஊரில் தங்குபவனாக தான் ஆகவேண்டும் என்ற விருப்பொடு உறுதியாக நிற்கும்பொழுது, அதனை மெய்யாக்கும் முயற்சிகளும் வினைகளும் பிறக்கும். இத்தகைய வினைகள் வழியே பற்பல விசயங்கள் அறிவிற் பொருளாகப் படும் என்றவாறு.

இனி இத்தகைய நுதிப்புக்களை இறைவனேத் தருவான் என்றது.
2.3

தானிலா வொன்றைத் தருவான் இஇறைவன்
தானதுவே யாய்த்தயையி னின்றே

(இ-ள்)

ஓர் ஆன்மா தனக்கு அயலாகிய, பக்குவத்தில் தனக்கு மேலாக தன்னின் ஓர் நிலையை தானே சனிக்காது-- தன்னை மீறித் தான் செயல்பட முடியாது. தானே தன் தலை மயிரை இஇழுத்துக் கொண்டு மேலே ஏறமுடியாததுபோல் இது. ஆகவே தனக்கு மேலாகிய வொன்று, தன்னோடு பிரிப்பின்றி உடனாயும் வேறாயும் அநந்நியமாய் நின்று தன்னை அறிவதாயுமுள்ள ஓர் அறிவுப் பொருளே, பக்குவத்திற்கேற்ப, ஏற்படும் சூழ்நிலைகட்கு ஏற்ப, ஓர் நுதிப்பினை அறிவிலே புகுத்தும் என்றது. இஇவ்வாறு வரும் நுதிப்புக்களை மனோகரணங்களால் ஆகும் கற்பனை அல்லவென்றும் உணர்க. அப்படியே கற்பனை என்றாலும் அதனை நிறுத்துவது இறைவன் என்றே அறிக -- தனக்கு அயலாக அப்பாலாக தன்னின் ஓர் நிலையை தனக்கு காட்டுவதால் இவ்வாறு.


இனி இவ்வாறு வரும் கற்றலில் ஆன்ம வளர்ச்சி உண்டென்று கூறுகின்றார் அடுத்த சூத்திரத்தில்.

2.4

தருவதைத் தனதாக்கித் தாவித் தளையறுக்க
உருவாகு மங்குயுயிரி லறிவு

(இ-ள்)

இவ்வாறு தரப்படுவது தனக்கு அப்பாலாகிய (transcendent) தன்னின் ஓர் எதிர்நிலையென, அதனை தனதாக்கி தான் அதுவாய் ஆய் நிற்கின்றபோது, இருப்புநிலையில் (Being-State) ஓர் நிலையினின்று பிறிதோர் நிலைக்குத் தாவுதல் நடக்கின்றது. தாவுதலாவது தனக்கு அப்பாலாகிய ஓர் நிலைக்குப் பெயர்தலாகும். இந்த பெயர்ச்சியில் அதுவரை நின்ற பல்வேறு அகத்தளைகள் சற்றே தளர்க்கப்பட்டு நீக்கப்படுவதால், தளையறுத்தலும் ஆகவே கற்றலும் நடக்கின்றதாம். மலநீக்கம் கற்றலாயிற்று. இஇவ்வாறு தளைகள் அறுபட, அதேபொழுது ஐயம் திரிபு தெளிவின்மை தெரியாமை புரியாமை போன்றவற்றை நீக்கி ஓர் தெளிவு பிறக்க, உருவாகும் அங்கு உயிரில் அறிவு என்றது. தளை நீக்கி தெளிவு ஈட்ட அதன்வழி அறிவின் உதயமாம் என்றது.

இனி மேற்கூறியவாறு அறிவோதயம் விளக்கிய பின்றை, காலவுணர்வோடு வரும் அறிவு வகைகளாகிய சத்தறிவு அசத்தறிவு வகைகளை விளக்குகின்றார்.

2.5

சத்தென்றும் அசத்தென்றும் சனிக்கு மறிவு
வித்தைபல விரும்பியுழை பார்க்கு

(இ-ள்)

உண்டுபோல் இன்றாவது அசத்தறிவு. யாண்டும் அழியாது மாறாது நிலைத்து நிற்பது சத்தறிவு. எல்லா அறிவுகளும் - மெய்யென்று தோன்றும் எல்லா அறிவுகளும் -- சத்தென்றும் அசத்தென்றும் உருவாகும்; பற்பல கலைகளைப் பயின்று அறிவினைத் தேடி அயராது உழைப்பார்க்கு என்றாயிற்று. மெய் பொய் என்ற பேதங்கள் வேறு; சத்து அசத்து என்ற பேதங்கள் வேறு. சத்தறிவும் அசத்தறிவும் மெய்யேயாம். இவற்றில் சத்தறிவு காலவுணர்வின்றி ஆகவே அழியாது நிற்க, அசத்தறிவு காலவுணர்வோடு முகிழ்ந்து அதனின் தோன்றி நின்று அழிந்துபோம் இயல்புடையதாம்.

இனி இவ்வேறுபாடுகளை மேலும் தெளிவாக்கியவாறு.

2.6

காலயிடக் கட்டுகட் கழன்ற வதீதத்திற்
சாலமியா திமிற்சத் தறிவு

(இ-ள்)

சிற்றறிவின் காரணமாக உடலெடுத்து அதனை மையமாகக்கொண்டு இடத்தையும் காலத்தையும் படுத்து சுட்டி அதன்வழி அறிகின்ற அறிவெலாம் அசத்தறிவாம். இவ்வாறு கட்டுகளையும் அத்தோடு இதற்கு அடிப்படையாக இருக்கின்ற குறிப்புக்காலவுணர்வும் தோன்றிடாததோர் பெருநிலைக்கு உயர்ந்து இவற்றைக் கழற்றி போக்கி, அதீத நிலையடைந்து நிற்கின்றபோது ஆகின்ற அறிவெல்லாம் சிவசத்தறிவு என்றவாறு. "சாலம் யாதுமில்" என்றது இந்நிலையில் தற்போதவாதனை ஓர் சிறிதும் இல்லாதுபோக பிழையறிவு யாண்டும் எழாதென்பது. இவ்வறிவே அனைத்தையும் அநந்நியமாக நின்று அறிதலால் ஆகும் அறிவும் என்றாயிற்று. இவற்றின் விரிவை அடியேனது திருநெறித் தெளிவிலும் காலதந்திரம் என்ற நூலிலும் கண்டு கொள்க. "அழிவில் உண்மை " எனும் அடியேனது பெருநூலில் இதன் விரிவு.
இத்தகைய சத்தறிவு கடப்புரு காண் திறன் வளர வளர அதன் முடிபில் ஆகும் ஒன்று என்றுமறிக.

இனி இச்சத்தறிவே சிவஞானம் என்று தெளிவாக்கி அதனோடு வரும் வேறு சில பண்புகளை கூறுகின்றார்.

2.7

சத்தின் சிவஞானம் சமைந்திட்ட நல்லார்க்கெலாம்
அத்தின் மேலொருவாசை யில்லை


(இ-ள்)

எல்லா வித்தை முயற்சிகளின் முடிவு சத்தறிவு என்பதாகும். இதற்கு மேம்பட்ட அறிவு இல்லை என்பதால் இதுவே சிவஞானம் என்பது. இந்த அறிவே அறிவாகப் பெற்ற நல்லார்க்கெலாம், கட்டுகள் அனைத்தும் நீக்கி பொருளைப் பொருளாய் அநந்நியமாய் நின்றறிதலே கூடுமென, இது வேட்கையெலாம் விட்ட நிலையும் ஆயிற்று. எல்லா அறிவுகளும் ஓர் இச்சையால் எழுந்தவையாயிருக்க அதனின் அவை அசத்தறிவாய் விழ, எல்லா இச்சைகளையும் போக்கிய பண்பின் எழுவது சிவஞானம் என்பதால், யாருக்கு சிவஞானம் சித்திக்கின்றதோ அவருக்கு அதற்கு மேலொரு ஆசை இல்லாதுபோம் என்றது. ஆசைகள் செற்று அகலிடம் பரந்த மெய் அனுபூதியின் ஆவது இச்சிவஞானம் என்று அருட்குறளும் விளக்கும்.

இனி இதற்கு வேறாகிய அசத்தறிவினை விளக்கியவாறு.

2.8

காலத்தொடு வரூஉங்கட் டறிவெலா மசத்தாம்
காட்டியொன்று சத்தைக்கருத வைத்தலின்

(இ-ள்)

திசைகட்கு ஆட்படும் இடவறிவோடு முக்கால பகுப்பாகும் சுட்டுக்காலம், குறிப்புக்காலமென்ற இவ்விரு முதற்பொருள் உணர்வினொடு, ஐயம் திரிபின்றி, விபரீத பிராந்தி ஞானமுமின்றி (illusions and hallucinations) , ஆரோபிதங்கள் அத்தியாசங்கள் இன்றி ( delusions, projections etc) , சித்தப் பிரமையின்றி (cognitive aberrations) தெள்ளிதாய் யாது விளங்கின்றதோ, அதுவே அசத்தறிவு என்றது. இத்தகையவை ஏன் அசத்து எனப்படுகின்றதெனில், மெய்யாக ஒன்றைக் காட்டியபொழுதும் அவ்வறிவு கழன்று பிறிதொன்று வந்து அப்பொருளை வேறொரு வகையில் காட்டிட, இவ்வாறு உறுதியாக, யாண்டும் கழறாது நிற்கின்ற இயல்பு இல்லையென்பதால் அது அசத்தறிவாகின்றது. இதன்வழி அதனை உள்குவான் ஒருவன் மாட்டு யாண்டும் மாறாவியல்பிற்றாகிய சத்தறிவை நாடி உழைக்கும் வேட்கையை எழுப்புகின்றது என்பதுவாம்.

ஓர் படியைத் தொட்டான் ஒருவன் அடுத்த படிக்கு ஏகும்போது, நின்றிருந்த படியை விட்டு நீங்க, அது அவன் பற்றி நிற்காவொன்றாயிற்று. ஓர் வேடத்தைத் தரிப்பான் ஒருவன் வேறொரு வேடத்தை தரிக்குங்கால், முன்பிருந்த உடைகளயும் பிற அணிகலன்களையும் கழற்றி வைத்துவிட்டு புதிதாக வேறொரு உடையினையும் வேறு பல அணிகலன்களையும் தரிக்கவேண்டும். தரித்திருந்த வேடம் பழையதாகி கழற்றி வைக்கப்பட்டதாயிற்று. இவ்வாறே அசத்தறிவுகள் எல்லாம் என்க. தரிக்குங்கால் மெய்யாக, பெயர்க்குங்கால் இலாதாகி நிற்றலின் அசத்தாம் என்றது. ஆயினும் இத்தகைய அறிவுகள் இலாதாகி சூன்யமாகி விடுவனவல்ல என்பதையும் ஓர்க. மீண்டும் வேறொருவன் தரிக்க அவை யாண்டும் உண்டு. தரித்தபின் கழற்றி வைத்தல், அதனை எரித்து சூனியமாக்கி விடுதல் அல்ல. இதனால் அசத்தறிவுகள் ஆரோபிதங்கள் போன்றவை அல்ல என்றுமாயிற்று. கயிற்றினை பாம்பாக கண்டபோது எழும் அறிவு, கயிற்றினை கயிறாக கண்டபோது இலாதாகி விடுகின்றது. இத்தகைய ஆரோபிதங்கள் கழற்றி வைக்கப்படுபவை அல்ல; இல்லாப் போகுபவை-- ஒளிவர இஇருள் போமாறு போகிடுபவை. இங்கு ஓர் கயிற்றினைச் சுட்டி அது கயிறு என்று பிறவற்றினின்று வேறுபடுத்தி சுட்டிட காலவுணர்வோடு அறிவதே சுட்டறிவாகிய அசத்தறிவு என்றது.

இனி இவ்வாறு சத்தறிவு அசத்தறிவு என்பவற்றை விளக்கியப்பின், அடுத்து புண்ணிய பாவ அறிவுகட்கு ஏதுவாகிய சுத்தம் அசுத்தம் என்ற அறிவு வகைகளை விளக்கப் புகுகின்றார்.

2.9

சுத்தமசுத் தமெனவுளம் சுடர்கின்ற அறிவெலாம்
நித்தநிமலன் நிறுத்துவனென நினை

(இ-ள்)

ஆன்மாக்களின் உணர்வுகளையெல்லாம் ஓர்கின்ற பொழுது, ஓர் பொருளின் உருவினையொட்டி அழகிது அழகற்றது என்றும், ஓர் கலையை சுவைக்கும்ப்ழொது இனியது இன்னா என்றும், ஓர் குணநிலையை உன்னும்போது இன்னிலை இன்னானிலை யென்றும், ஓர் செயலைக் கருதும்போது புண்ணியமென்றும் பாவமென்றும் துணிதலெல்லாம் சுத்தாசுத்த விவேகத்தின் வெளிப்பாடுகள் என்றவாறு. யாது சுத்தம் யாது அசுத்தம் என்றவாறு அறிவாய்வு நந்நயவகமாக (ethical reasoning) செல்கிறது காணக்கிடக்கின்றது. இந்த சுத்தாசுத்த விவேகத்திற்கு நிலனாக நிற்பவன் நித்தநிமலாகிய இறைவனே என்றும், எல்லா ஆன்மாக்களோடும் பிறிவற உடன்நின்று இத்தகைய கூறுபாடுகளை உணர்த்தியருளுவன் என்றும் விளக்கியவாறு.

"நயமெனு அனைத்தும் நந்திதன் வடிவே
அமலத்திரு அவன்தன் பாலே யாதலின்"
என்கின்றது (அடியேனது) நந்நியல். மேலும் அதே நூல் சுத்தமாகிய நந்நயத்தை:

" உன்னதம் உத்தமம் உயர்வு ஒண்மை
நித்தியம் சத்தியம் நீர்மை நியாயம்
எனுமிவ் வெழிலெல் லாமேநந் நயம்"

என்று அதனை வகைப்படுத்தி விளக்குகின்றது. மேலும் இவ்வுணர்வினை அருளது வீழ்ச்சியின் எழுவது என்றும் பகர்கின்றது:

" அருளது வீழ்ச்சியின் ஆங்கே நந்நயம்
தெருளரு சிறப்பின் செம்மார்ந்த காட்சி"

மேலும் (அடியேனது) "அருள் விளக்கக் கட்டளை" எனும் சிறு நூலிலும் கீழ்கண்டவாறு விளக்கப்படுகின்றது:

1.0 அருள் முந்துறுத்திய நிலையிலே ஒருவன் செய்யும் காரியங்களே புண்ணிய காரியங்கள்; அருள் முந்துறுத்துவதை தடுப்பவனவே பாவ காரியங்கள்.

1.01 அருளொடு தொடக்குற்ற செயல்களின் பண்பே புண்ணியம். அருளொடு தொடக்குறாது முரண்பட்டு நிற்கும் செயல்களின் பண்பே பாவம்.

3.0 இறைவன் மக்களது அறிவில் நின்று புண்ணியபாவ அறிவினை அருளுகின்றான். இறைவனது அருட்பாய்வு பெருகப் பெருக புண்ணிய காரியங்களில் ஈடுபாடு மிகுகின்றது. ஒருவன் அருளேயாய் நிற்குங்கால் புண்ணியமில்லா பிறவற்றில் நாட்டம் ஒழிகின்றான்.

இதுபோன்று "திருநெறித்தெளிவு" எனும் நூலிலும் இதன் விளக்கம் உண்டு. கண்டு தெளிக. நந்நயம் என்பது சாதாரண இன்பங்களைத் தரும் நலன்களுக்கு வேறாக, நித்திய சிவானந்தப் பேற்றை நல்கும் நலன்களாம்.


இனி அடுத்து சுத்தாசுத்த விவேகத்திற்கும் சத்து அசத்தென வரும் அறிவு பாகுபாட்டிற்கும் உள்ள தொடர்பினை விளக்குகின்றார்.

2.10

அசத்தின் ஆட்சியில் அசுத்தஞ் சுத்தம்
சத்தினுட் சமையா திவை

(இ-ள்)

யாது முதற்பொருட்களாகிய சுட்டுறு காலத்திலும் இடத்திலும் பட்டுழல்கின்றதோ, அதனின் அசத்தறிவுகளையே அறிவுகளாகப் பெற்று மகிழ்கின்றதோ அதன்பாலேயே தோன்றும் ஒன்றினை சுத்தம் என்றும் அசுத்தமென்றும் மதிப்பிட்டுக்காண் திறம்(ethical judgement) நிற்கும் என்றவாறு. இவற்றினின்று கழன்று காலவுணர்வும் திக்குயிடவுணர்வும் இன்றி பரமான்மாவாகி இறையருளேக் கண்ணாகக் கொண்டு காண்கின்றபோதெழும் சத்தறிவின் கண் சுத்தாசுத்த விவேகம், நந்நய அந்நய சீர்தூக்கல் எழாதொடுங்கும் என்பதாம். இதையே இருவினை ஒப்பு எய்தல் என்பர் சித்தாந்திகள்.

இது ஏன் எனில், சுத்தாசுத்த விவேகம் நிற்பதின் காரணமே, அசத்தறிவினை மகிழும் ஆன்மாக்கள் மாட்டு, அது நயமல்ல வென்று உணர்த்தி மேலே எழுந்து சத்தினை நோக்கிச் செல்ல ஓர் ஊந்தலை பிறப்பிக்கவே என்பது. இஇந்த விவேகம் இல்லையெனில் ஒருவன் அசத்தறிவிலேயே மயங்கி அதனுளேயே அழுந்தி கிடப்பன் என்க.

இனி சுத்தத்தின் இன்னொரு பண்பினையும் விளக்கியவாறு.
2.11

நந்நய மனைத்தின் நாதனார் அறிதரு
எந்நயமு மின்பயிதமென் றறிக

(இ-ள்)

சுத்தத்தைக் கண்டான் ஒருவன் அதனை விரும்பிப் பற்ற, அசுத்தத்தை வெறுத்துத் தள்ளி ஒதுக்குவன் என்பதாம். விருப்பு வெறுப்பு என்ற இருவினைகள், நல்லது தீது என்னும் மதிப்பீடுகளும் இன்னும் இவைபோன்ற பிறவும் இறைவனால் அறிவினிலே எழுப்பப்பட்டு ஆன்மாக்களால் உணரப்படுவவையாம். இஇவற்றில் அனைத்து நந்நயங்களின் மூலமாக நிற்கும் இறைவனே, யாது நயமென்று உணர்த்தி அருளுகின்றானோ அவையே மேலான இதமென்றும் இன்பமென்றும் ஆய்நிற்கும் உயிர்கட்கு என்றவாறு. நல்லது என்னும் ஆதிமூலத்தை நாம் தேடித்தேடிச் செல்ல, முடிவில் இறைவனே அதற்கு ஆதாரமாக நிற்பதை அறிவோம் என்றவாறு. இஇறைவன் தனது ஆணையை உலகில் நிறுத்தி அனைத்தையும் தொழிற்படுத்த, அதனால் இஇதமென்றும் அகிதமென்றும் சுத்தமென்றும் அசுத்தமென்றும் பிரித்தறியும் திறனும், சுத்தத்தையேப் பற்றி அசுத்தத்தை ஒதுக்கும் திறனும் வந்தமைகின்றது என்கின்றார் மெய்கண்டாரும். சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரத்தில் இவ்வாறு:

அவையேத் தானே ஆய், இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

ஆன்மாக்களோடு இறைவன் அவையேத் தானேயாய் இரண்டற்று நின்று, தனது ஆணையை நிறுத்தி அதன்வழி ஆன்மாக்கள் சுத்தம் போற்றி அசுத்தம் போக்கி பிறந்திறந்து உழறுமாறும், மலம் நீங்கியக்கால் அந்த உழற்சியினின்றூ விடுபடவும் வழிவகுத்து உலகினை நடாத்திச் செல்கின்றான் என்பது இதன் பொழிப்பு.
அடுத்து இதற்கு மாறாக இருப்பதனைப் பற்றி ஓர் விளக்கம். ஏன் அந்நயங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பதினை ஓரளவு தெளிவு செய்தவாறு.

2.12

புன்மய மலத்தின் பொய் நயமெல்லாம்
நந்நய மில்லைநாசந் தரும்

(இ-ள்)

நந்நயமனைத்தின் நாதனாம் இறைவனைச் சார்ந்திராது விழுந்து, ஆணவமலமாம் அஞ்ஞானவிருளிலே, துன்பமனைத்திற்கும் மூலமாகிய அந்த புன்மய மலத்தின் பிடியில் சிக்குண்டு ஆகின்ற அனைத்தையும் நஞ்செனக் கொள்ளாது அமுதமெனப் பருகி மகிழும் மாந்தரை, அவை பொய் நயங்களே, மெய்யான நந்நயங்கள் அல்ல, இன்பமாய் நின்று பிறகு துன்பத்தையே தரும் என்றது. ஒருவன் ஒன்றினைச் செய்ய, அதன்வழி மனக் கலக்கங்களும் துக்கங்களும் துயரங்களும் அவதூறுகளும் பழியும் இன்னும் இதுபோன்ற இஇன்னாத பல அமையும்போதே, தான் செய்தது நந்நயமல்ல என்று உணர்கின்றான். அதுபொழுதே தான் மலத்தின் சேர்க்கையால் அதனை செய்தொழிந்தேன் என்றும் தெளிகின்றான். அதுபொழுது இதுவரை தனக்கு நயமென்று பட்டதை பொய் நயமென்றுந் தெளிகின்றான். ஆணவமலஞ் செறிய, அதனால் இறைவன் அகத்திலிருந்து தூரமாகிட இத்தகைய இன்னா அனுபவங்கள் என்றும் உணர்கின்றான்.

2.13

சுத்தமசுத் தச்சோர்வு கழன்று கடந்தரிதின்
அத்தந்தா ளணையவவதி இல்லை

(இ-ள்)

சுத்தம் அசுத்தம் யாது என்று ஒடிவின்றி தொடர்ந்து வரும் கேள்விகள் உளத்திற்கு ஓர் சோர்வினைத் தரும் என்றவாறு. மனவருத்தங்களும் துக்கவனுபவங்களும் பீதி பயம் போன்ற மெய்ப்பாடுகளும் சித்த விபரீதங்களும் வீணான கற்பனைகளும் நரகவேதனைகளும் இன்னும் இதுபோன்ற பிறவும் தோன்றுதற்கு காரணமாக இருப்பது சுத்தாசுத்த விவேகமே. எல்லா சுத்தங்கட்கும் மூலனாகிய, அனாதியே அமலனாகிய இறைவனது திருவடிகளைச் சார்ந்து அவன் ஆணைவழி சென்றாலேயொழிய இந்த அவதிகளிலிருந்து தப்பித்தல் ஒவ்வாது என்றவாறு. இருக்கின்ற இறையாணையோடு இயங்குகின்ற பொழுது இன்பமேத் தவிர துன்பமில்லை என்றவாறு.

இவ்வாறு சத்தறிவு அசத்தறிவு பாகுபாடும், சுத்தம் அசுத்தம் என்ற அறிவு வகைகளயும் அவற்றிற்கிடையே யுள்ள உறவுகளையும் விளக்கிய பின், அடுத்து இருந்தறிவு எண்ணறிவு என்று அறிவுகளின் பிறப்பியல் நோக்கி அறிவுகளை வகைபடுத்திக் காட்டுகின்றார்.

2.14

இருத்தலை அழித்தல் இயலாதெவ்வு யிருமாணையின்
இருவினையின் இறந்துபிறந் துழலும்

(இ-ள்)

இல்லது தோன்றாது, உள்ளது இலவாகா என்ற சற்காரிய வாதத்திற்கிணங்க , இருக்கின்றதாகிய ஆன்மாக்கள் யாண்டும் யாதாவதோர் இருப்புநிலையைப் பற்றியதாகவே இஇருக்கும். முத்தியடையும் போதுகூட, ஆன்மாக்கள் அதற்கேற்ற இருப்புநிலையோடே இருக்கும், இவ்வாறு இருப்புநிலையிலிருந்து அழித்தல் முடியாது. இனி இவ்வாறு இருப்புநிலைகள் பல மாறிக்கொண்டே வருவதின் காரணமென்னை எனின், அனைத்தையும் நடாத்துகின்ற இறைவனது ஆணையின் வழி எழுகின்ற இருவினை சிந்தனையே யாம் என்றது. செய்கின்ற புண்ணிய பாவங்கட்கு ஏற்ப அமைகின்றன மாறுகின்றன இருப்புநிலைகள் என்றவாறு. இருப்பு நிலையாவது உலக வாழ்க்கையில் தாயாய் தந்தையாய், அரசனாய் ஆண்டியாய், பாலனாய் விருத்தனாய் இருப்பது போல, பிரபஞ்ச நெடுஞ் செலவில் உடலோடு இருப்பதும், உடலின்றி இருப்பதும் , உடலோடு இருக்கின்றபோது ஓர் பக்குவத்தில் இருப்பதும் இன்னும் இதுபோன்ற கணக்கற்ற பிறவுமாம். உளதாகிய ஆன்மா யாண்டும் யாதாவதோர் முறையில் இருந்துகொண்டே இருக்கும், கானல்நீர் போலவோர் காலத்தில் பொய்யாகி இல்லாது போய்விடாது.
இவ்வாறு யாதாவதோர் இருப்புநிலையைப் பற்றி( Being-state) ஆன்மாக்கள் இருப்பதால் அதற்கேற்பவே அறிவுகள் உதிக்கும் என்கின்றார்.

2.15

ஒன்றாயி ருந்துணர்தல் உயர்வுடைத்து ஓதாது
நன்றாயு லகறித லிங்கு

(இ-ள்)

ஒன்றாயிருந்துணர்தல் அறிவு எழும் வகைகளில் ஒன்று என்றும், இது ஓதாதே வருவதென்றும், இதனாலும் உலகத்தை மெய்யாக அறிதல் உண்டென்றும், பலவகையில் இது உயர்வுடைத்து என்றும் கூறியவாறு. இது எவ்வாறெனின், பெண்ணாக இருக்கின்றவள் பெண்ணாய் இருப்பதின்வழி பெண்மையை அறிகின்றாள்; தாயாய் இருக்கின்றவள் தாய்மையை அறிகின்றாள்; வீரனாய் இருக்கின்றவன் வீரத்தை அறிகின்றான்; சிவஞானியாக இருக்கின்றவன் சிவஞானத்தை அறிகின்றான் என்றவாறு ஒன்றாய் இருந்தறிதல் விரியும். தாய்மை என்பதனை பிறர்வாய் கேட்டும், நூற்களைப் படித்தும் கண்டு கொண்டு, பிற தாய்மார்களைப் பார்த்தும், அவர்களது ஒழுக்கங்களைக் கண்டு சிந்தித்து அனுமானித்து பெறுதலும் போன்றவற்றால் முற்றிலும் அறியவொணாததுபோலும், தாயாக நின்றே தாய்மையை அறிதல் சாலும் என்பதுபோலும் இருந்தறிவு என்றறிக. தாய்மை பெண்மை ஆண்மை குடிமை வீரம் கோழைத்தனம் இளமை மூப்பு பண்பாடு உடைமை, அது இலாமை ஞானம் உடைமை அது இலாமை என்றவாறு உலகும் படுதலால், இவ்வாறு இருந்தறிந்து இவற்றையெல்லாம் புரிந்து கொளலும் உலகறிவில் அடங்கும் என்றாயிற்று.

இவ்வாறான அறிவுகளின் இலக்கணத்தை அடுத்த சூத்திரத்தில் விளக்குகின்றார்.

2.16

இருந்தறிவு இயல்ப தாமறிவு அஃதேரண
துணிந்தறி விலென்றுந் தோன்றா

(இ-ள்)

மேற்கூறிய தாய்மை, பெண்மை ஆண்மை தறுகண்மை பற்பல பண்புகள் உடைமை இல்லாமை போன்றவை அனைத்தும் இயல்புகள் எனப்படும். இயல்பாவது ஓர் பொருளிற்கு அது இன்னது என்ற பெயரிட்டு அழைப்பதற்கு ஏதுவாயுள்ள, அதனின்றே வெளிப்பட்டு நிற்கின்றவொன்று. பெண்மை ஆண்மை போன்றவை இயல்புகளாம். இத்தகைய இயல்புகளை மெய்யாக அதுதானாக இருந்தே அறியலுறும் எனப்பட்டது. இப்படி ஒன்றாயிருந்து அது வெளிப்படுத்தும் இயல்பினை, தான் அதுவாக நின்று அறியும் அவ்வறிவு, பற்பல குறிகளையும் அடையாளங்களையும் ஏதுவாகக் கொண்டு அனுமானித்து பெறற்பாலதாய அனுமேயங்கள் அல்ல என்றயிற்று. இருந்தறிவு என்பதும் வாழ்ந்தறிதல் என்பதும் ஓர் வகையில் ஒக்கும். வாழ்தல் ஓர்வகைய இருந்தறிவினை தனதாக்கலாம்.

இனி இருந்தறிவின் முதன்மையை விளக்கியவாறு.

2.17

எண்ணறிவு இயங்கா எவணும் இல்லெனின்
இருந்தறிவு எழூஉம் பொருள்

(இ-ள்)

எண்ணறிவாவது பற்பல மனோகரணங்களால் ஒற்றுமைகள் வேற்றுமைகள் கண்டு வகை படுத்தலும், தெளிவற்றதாக இருக்கின்றதை உன்னி தெளிவு படுத்தலும், நிருவிகற்பமாய் இருப்பதை விகற்பித்து காண்டலும், ஆதிசித்தாக இருப்பதைத் தெளிந்து அந்தசித்தாக்களும் இன்னும் இவை போன்றவையுமாகும். இத்தகைய எண்ணியல் திறங்கள் இயங்குதற்குக் காரணம், ஒன்றாய் இருந்து ஆங்கெழும் பொருள் யாதோ அது ஓர் வகையில் அறிவிற் படுதலாலேயே என்றது. பாலை நிலன் புகுவான் ஒருவன் பாலையின் கனலை அறிந்து அதனை சிந்திப்பான். கடலுள் புகுவான் ஆங்கு தென்படும் சீவராசிகளின் குணங்களையும் திறன்களையும் வடிவங்களையும் கண்டு அவற்றைப் பற்றி சிந்தித்து தெளிவான். இஇதைப் போன்றதே அகச் செலவுகள் பல. மறைநிலங்களாக கிடக்கின்ற பல அறிவு நிலங்களிற் புகுந்து ஆங்கே இருக்க, பற்பல விடயங்கள் சிந்தனைக்கு எழும். இத்தகைய அறிவு நிலங்களை அடைந்து இருந்திராவிடில் அந்நிலன்களுக்கே உரிய விடயங்கள் அறிவிற் படா. ஆதாரத் தலங்கள் எனும் கற்றளிகள் இத்தகைய என்பதை அறிக. காட்டாக மணிபூரகக் கற்றளி என்பது மறைநிலங்களில் ஒன்றாகும். அக்கற்றளி புகுந்து இருந்தான் ஒருவனுக்கு அறிதுயில் சித்திக்க, அதுவரை அவனுக்கு விடயமாகாதிருந்த மந்திர சொரூபங்கள் பல அறிவிற்பட்டு விடயங்களாகி எண்ணுதல் தொழிலை செய்ய வூக்கும். விடயங்களைத் தருவது இஇருந்தறிவு, அவ்வாறான விடயங்களைப் பற்றி சிந்தித்துத் தெளிவு படுத்தி தனதாக அகப்படுத்துவது எண்ணறிவு என்றாயிற்று. இதனால் விடயங்களை, பொருட்களைத் தரும் இருந்தறிவு இல்லையெனின் எண்ணறிவு இயங்காதொழியும் என்றவாறு.

மெய்யறிதற்கு இருந்தறிவு வேண்டுமென்கின்றார் அடுத்த சூத்திரத்தில்.

2.18

அடையார்க்கு இருந்தறிவு ஆய்ந்துதெளி தலிலையது
உடையாரே ஓர்ந்தார் உண்மை

(இ-ள்)

இருந்தறிவு அடையாதார் அனுபூதி பூர்வமாக ஒன்றாக நின்று, அதன்வழி அறியற்பாலதை அறியாதாராகும். "மெய்ஞானி" என்னும் இயல்பினை மெய்ஞானியாக நின்று அறியாதார், அங்கு நிலவும் சூனியத்தை நிரப்பும் பொருட்டு பொய்வேடமிட்டும், ஞானநூற்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தும் ஞானிகளாக நின்ற சிலரின் கருத்துக்களைக் கற்று தனதாக்கி கிளிப்பிள்ளைகளாக ஒப்புவித்தலும் போன்ற இழிவான பல செய்து தன்னை ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றுவர். இவர்கட்கு அனுபூதி பூர்வமாக எழுதுவது பொய்ஞானி இயல்பேயாகும். இதற்கு மாறாக , மெய்ஞானியாக இருப்பான் ஒருவன்கண் அவன் இருக்கின்ற அறிவு நிலத்தின் காரணமாக, பற்பல விடயங்கள் மனதிலே உதித்தவாறு இருக்கும். இவ்வாறு உதிப்பனவற்றைப் பற்றி விடயங்களாக்கி சிந்திக்கும்போது யாது மெய் யாது பொய் என்பது தெளிவாகும். இருந்தறிவின் வழி, நுழைவுகள் பெற்று விடயங்களை பொருளாய்ப் பெறவேண்டும். இல்லையேல் செய்யப்படும் சிந்தனைகளெல்லாம், பிறர்வாய் கேட்டதை மீண்டும் உமிழ்வதாய், விடய ஆழமில்லாத சலசலப்பாய், வீண் சழக்காய் வீணாகிவிடும் என்பது இதன் பொருளாயிற்று.
அடுத்து இந்த இருந்தறிவுகளின் தனிப்பட்டவோர் பண்பினை விளக்குகின்றார்.

2.19

இருந்தறியு முயர் ஞானமேற்ற முடைத்து
அரிதெனினு மொழியி னியம்பல்

(இ-ள்)

பொருள் எனப்படுவது சொற்பொருளாகிய பதார்த்தம் (பதம்-அர்த்தம்) என்றும் அறிவாவது மொழியின் இயம்பப்படுவது என்றும் விளக்குவர் சிலர். அதனை மறுத்தது இது. மேலான மெய்ஞானம் எனும் அறிவு, அது எழும் ஓர் மறைநிலத்தை அடைந்து ஆங்கே இருப்பதால் அனுபூதி பூர்வமாக மகிழ்வதாகும். இதனாற்றான் சிவயோகம் போன்ற பலவகையான தவங்கள் மேன்மக்களால் பயிலப்படுகின்றன. சில ஞானவகைகள் இவ்வாறு அது பயக்கும் நிலனிற் புகுந்து இஇருந்தே யாதென்று அறியலுறுவதாகும். இப்படி அறியப்படுவது முற்றிலும் மொழியாக்கப்பட வாராதென்பதும் அனுபவித்தார் தம் துணிவு. மொழியினால் ஆகக்கூடிய அறிவிற்கு வரம்புண்டு. மொழிக்கு எட்டாத அறிவுகளும் உண்டு. இருந்தறிவில் எழும் பல உயர்ஞானங்கள் இத்தன்மைத்து என்றவாறு. குறிப்பாக சிவஞானம் இத்தன்மையது என்றவாறு.

இனி இவற்றின் விரிவெலாம் அருட்குறள் உகத்திணை மெய்யியல் படலத்திற் காண்க. சிவயோகம் பயிற்சிகட்கு அடிப்படையாக இருப்பது இருந்தறிவு என்ற கருத்தே என்க. புறவுலகத்தொடு பொறிபுலன்கள் வழி தொடக்குற்று கிடக்கும் இருப்புநிலை கழன்று, புதிது புதிதான இருப்புநிலைகளை அடைந்து ஆங்கு எழும் விடயங்களை நுகர்ந்து சிந்தித்து அறிந்து, பிறகு ஆங்கும் தவங்கள் செய்து அந்நிலங்களிருந்து கழன்று இன்னும் மேலான நிலங்களை புதிய விடயங்களை நுகர்ந்து மகிழும் இயல்புடையது சிவயோகங்களும் அதனால் வரும் பக்குவ முதிர்ச்சிகளும் அறிவின் புடை பெயர்ச்சிகளும் என்க. இத்தகைய ஆன்மச் செலவுகளே, அகத்து யாத்திரைகளே புதியப் புதிய மறைநிலங்களை ஆன்மா நுழைந்திருக்கவும், அவ்வாறு இருக்கின்றபோது புதியப்புதிய விடயங்களை பொருளாக நுகரும் பேற்றினையும் நல்குகின்றன. இதுவே இறையருள் எனப்படுவதும் ஆகும்.

இவ்வாறு அறிவுகளை பல்வேறு வகையில் வகைபடுத்தினாலும் அவற்றிடையே ஓர் தொடர்பும் உண்டு. கால இட கட்டோடு நின்று இருப்பு நிலையில் எழுவதெல்லாம் அசத்தறிவு என்றும், அவை நீங்கிய இருப்பு நிலையில் எழுவது சத்தறிவு என்றும் படும். ஆக சத்தறிவும் அசத்தறிவும் இருவெவ்வேறான இஇருந்தறிவுகள் ஆகின்றன. இதேப்போன்ற சுத்தாசுத்த அறிவுகளும் - இறைவனோடு தொடக்குற்று நின்று அறிகின்றபோது சுத்தம்; மலத்தோடு தொடக்குற்று அறிகின்றபோது அசுத்தம் என்றும் படும். ஆகவே இவையும் இருந்தறிவின் சில கூறுகளாகின்றன.

சிவஞானகற்பம்: இரண்டாம் தந்திரம் : அறிவு வகையியல் முற்றும்.


பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=சிவஞான_கற்பம்-2&oldid=10953" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 23 மே 2012, 07:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,585 முறைகள் அணுகப்பட்டது.