சிலப்பதிகாரம் பேசப்படும் அளவுக்கு மணிமேகலையும், சீவகசிந்தாமணியும் பேசப்படுவதில்லையே, ஏன்?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

பகுதி 1

முனைவர் பா.வளன் அரசு


சமய நல்லிணக்கம் இல்லாமையே!

ஒரு சிறந்த காப்பியம் என்றால் அது சமய நல்லிணக்கக் காப்பியமாக விளங்க வேண்டும்.

சிலப்பதிகாரம் சமணச் சார்புடையதாகக் கருதப்படுகிறது.

எனினும் சைவ, வைணவக் கருத்துகள் போற்றப்படுகின்றன!

மணிமேகலை புத்த சமயக் காப்பியமாகவும், சீவகசிந்தாமணி சமண சமயக் காப்பியமாகவும் அமைந்துள்ளன.

பிற சமயங்களைப் புறக்கணிக்காமல், அவற்றையும் தழுவி மெய்ப்பொருளை எடுத்து மொழியும் ஆற்றலும் ஏற்றமும் வாய்ந்தது சிலப்பதிகாரம்.

அடுத்து, வலிவான கதையும் பொலிவான கற்பனையும் வேண்டும்.

சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியுடன் வாழ்ந்து, மாதவியுடன் இணைந்து மணிமேகலை என்னும் பெண்ணுக்குத் தந்தையாகத் திகழ்ந்து "கருணை மறவன்", "இல்லோர் செம்மல்", "செல்லாச் செல்வன்" என்று பாராட்டப்பட்டவன், மதுரைக்குச் சென்று புதுவாழ்வு மேற்கொள்ள முயன்றபோது, அரண்மனைப் பொற்கொல்லன் "கள்வன்" என்று குற்றம் சாட்டிக் கோவலனைக் கொன்றுபோட்டான்.

தன் காற்சிலம்பையே கோவலன் விற்க வந்த செய்தியை எடுத்துரைத்து, "சிலம்பின் வென்ற சேயிழையாக விளங்கும் கண்ணகி, பத்தினித் தெய்வமாகப் பாராட்டப்படுகிறாள்.

மணிமேகலை, துறவியாகவும் உலகின் அறச் செல்வியாகவும் விளங்கினாலும், துறவற வாழ்வு பெரிதும் போற்றப்படவில்லை.

மேலும், பதிமூன்று கதைகளின் தொகுப்பாக மணிமேகலை அமைந்துள்ளது.

சீவகசிந்தாமணி எண்மரை மணக்கும் சீவகனின் மணநூலாக ஒளியுடன் மிளிர்கிறது.

எனினும் கதை வலிவும் கற்பனைப் பொலிவும் மக்கள் உள்ளங்களை அள்ளவில்லை!

மூன்றாவதாக, காப்பியப் பரவலுக்குத் துணைபுரியும் சான்றோரும் இயக்கமும் வேண்டும்.

சிலப்பதிகாரத்தை ஆர்வத்துடன் பரப்ப, பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற புலவர் பெருமக்களும் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் முழு மூச்சுடன் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.

பாரதியின் எழுத்தோவியங்களைத் தேசிய இயக்கத்தாரும் பாரதிதாசன் எழுத்தோவியங்களைத் திராவிட இயக்கத்தாரும் பேணிப் போற்றிப் பரப்பி வந்தனர்.

சிலப்பதிகாரத்தின் செழுமையைப் பாரதியாரும், பாவேந்தரும் பரப்பி வந்தனர்.

சிலப்பதிகாரம் என்பதை "சிறப்பதிகாரம்" என்றார் தமிழ்த்தாத்தா உ.வே.சா.

தமிழ் மரபும் தொல்காப்பியச் சால்பும், திருக்குறள் நெறியும் செறிந்தது சிலப்பதிகாரம்.

குடிமக்கள் காப்பியமாகவும்; தமிழ்நாட்டு ஒருமைப்பாட்டுக் காப்பியமாகவும்; மூவேந்தர் புகழ்பாடும் பனுவலாகவும் திகழும் சிலப்பதிகாரம் அறுபத்து நான்கு கதை மாந்தருடன் கலைக் காப்பியமாகவே திகழ்கிறது.

தமிழ்த்தாத்தா உ.வே.சா. கூறுவது போன்று, சிலப்பதிகாரம் ஐம்பெருங் காப்பியங்களில் "சிறப்பதிகாரம்" என்று சொல்லும் அளவுக்குப் பெருமை வாய்ந்ததாக விளங்குவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.



பகுதி 2

புலவர் சி.சுவாமிநாதன்


புறந்தள்ளப்பட்டதே காரணம்.


சிலப்பதிகாரம், மக்களின் இயல்பு வாழ்க்கையோடு ஒத்ததாய் - மக்கள் காப்பியமாக, முத்தமிழ்க் காப்பியமாக மிளிர்கிறது. திருக்குறள் போல் சமயப் பொதுமையுடைய நூலாகவும் சேர, சோழ, பாண்டியர்களைச் சமமாகக் கருதும் மனப்பான்மையை வளர்க்கும் நூலாகவும் திகழ்கிறது.


கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வமாய், நகரெங்கும் ஊரெங்கும் தீப்பாய்ந்த நங்கையாய், கொற்றவை என வணங்கத் தக்கவளாய் கண்ணகி போற்றப்பட்டமையால் சிலப்பதிகாரம் அன்றும் இன்றும் என்றும் போற்றப்படும் நிலை எய்திற்று.


சிலப்பதிகாரம் சமணரான இளங்கோவடிகளால் இயற்றப்பட்டிருந்தாலும், காப்பியத்துள் அறவண அடிகளும் கவுந்தியடிகளும் வந்தாலும் இவர்கள் கூறுவதுபோல வரும் சமண மதக் கருத்துரைகள் மிகமிகக் குறைவே!


அடுத்து, மணிமேகலை நூலின் மீது குத்தப்படும் முதல் முத்திரை அது பெளத்தம் சார்ந்தது என்பதே.



கி.பி.6ஆம் நூற்றாண்டு (பல்லவர்களின் காலம் முதல்) சைவ, வைணவ எழுச்சி பெற்ற சமய மறுமலர்ச்சிக் காலம்.


வைதிக மதத்தால் சமணமும் பெளத்தமும் புறம் தள்ளப்பட்ட காலம். அதனால் குறிப்பாக சிந்தாமணியும், மணிமேகலையும் ஒதுக்கி வைக்கப்பட்ட காலம் இதுவே.


இந்த நூல்கள் செல்வாக்குப் பெறாமைக்கு முக்கிய காரணம், இத்தகு நூல்களைப் பார்த்தாலும், படித்தாலும், வைத்திருந்தாலும் ஆகாது; தீது என்று வற்புறுத்தப்பட்ட காலம்.


பெரும் புலவர் உ.வே.சாமிநாதையர், சிந்தாமணியையும், மணிமேகலையையும் பதிப்பிப்பதற்குத் தான்பட்ட துயரையும் வஞ்சகத்தையும் தம் நூலில் மிக அருமையாக எழுதியிருத்தலே மிகச் சிறந்த சான்றெனக் கொள்ளலாம்.

இவ்விரு நூல்களின் மீது படித்தவர்களே வெறுப்பையும் நெருப்பையும் உமிழ்ந்ததாக உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.


பகுதி 3

தமிழாகரர் தெ.முருகசாமி


தேசியப் பார்வை இல்லாமையே...!


சிலப்பதிகாரத்தை அடிக்கடி எடுத்தாளும் அளவுக்குப் புலவர்கள் கூட மணிமேகலையையோ சிந்தாமணியையோ ஆளுவதில்லை.

அந்த அளவுக்கு மக்கள் வாழ்விலிருந்து அவை விலகிவிட்டன என்பது பொது உண்மை.

மேலும் சிறப்பான பல உண்மைகளும் உள்ளன.

சிந்தாமணியின் ஓர் அகப்பையை மட்டுமே கம்பர் முகந்து கொண்டார் எனக் கம்பரின் விருத்தப்பா மூலத்துக்குச் சிந்தாமணியின் பாவைப் போற்றினாலும், நெஞ்சையள்ளும் சிலம்பு என்ற பன்முகப் பரிமாண உரை சிந்தாமணிக்கு அமையவில்லை.

சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரைபோல சிந்தாமணியின் நச்சினார்க்கினியர் உரை பாராட்டுக்குரியது. இவைபோன்ற உரைச்சிறப்பு மணிமேகலைக்கு இல்லை என்றாலும் சாத்தனாரின் சொல் நுட்பம் பாராட்டுக்குரியது. இவ்வாறு சிந்தாமணி, மணிமேகலையின் நுட்பங்களைப் புலவர்கள் அரிதாகப் பாராட்டினரேயன்றி, பலரது பாராட்டுக்குரியதாக அமையவில்லை.

சிலம்பின் நுட்பம் பலராலும் பாராட்டுக்குரியதாகும்.

சிலப்பதிகாரம் முத்தமிழ் பாவிய காவியம். அதுபோல் அவ்விரண்டும் இல்லை. சிலம்புக்கான பதிகச் சிறப்புபோல் அவ்விரண்டிற்கும் அமையவில்லை. சிலம்பு சமயப் பொதுநோக்குடைய நூல். ஆனால், மணிமேகலை சமய வாதங்களால் பெளத்தத்தை நிலைநாட்ட, சிந்தாமணியோ சமணத்தை வற்புறுத்துகிறது. சமயப் பொதுமைக்குள்ள வரவேற்பை வற்புறுத்தும் தனிமைச் சமயம் பெறவில்லை. இதனால் காமம் செப்பாது கண்டது மொழிந்த பொதுமைச் சிறப்பால் இளங்கோவடிகள் பேசப்படுகிற அளவுக்குச் சாத்தனாரோ, திருத்தக்கதேவரோ பேசப்படவில்லை.

இதற்குச் சான்றாகவே இளங்கோவடிகளின் வரலாறு, சிலம்பில் பதிவானதுபோல ஏனைய இருவரின் வரலாறுகள் அந்தந்தக் காப்பியங்களில் பதிவாகவில்லை.

குடிமக்கள் காப்பியமாகச் சிலம்பு பெருமையுறுவதுபோல் அவ்விரண்டும் இல்லை.

நாட்டுப்புறவியல் பாங்கில் முல்லை, பாலை, குறிஞ்சி, மருதம், நெய்தலான ஐந்து நிலமக்களும் சிலம்பில் பங்குகொள்ளும் பாங்கு அவ்விரண்டிலும் இல்லை.

சிலப்பதிகாரத்தின் அவலமும், துன்பியலும் கற்பவர் நெஞ்சைவிட்டு நீங்கா இடம் பிடித்துவிடுகின்றன. மணிமேகலையின் அவலம் இயல்பானதாக இல்லை. சிந்தாமணியில், அவலத்தினும் கானல் நீரான மனித இயல்புக்கு எதிரான இன்பச் சுவை பற்றிய செய்திகள் ஏற்புடையனவாக இல்லை.

நினைவு கூரத்தகும் செம்மொழிச் செழுந்தொடர்கள் சிலம்பில் ஏராளமாக உள்ளன. கதை நிகழ்ச்சி நினைவுகளோடு அவை அடிக்கடி பயிலப் பெறுவனபோல் அவ்விரு காப்பியங்களில் தொடர்கள் எடுத்துக்காட்டப் படுவதில்லை.

பாத்திரப் படைப்பு, கதைக்கரு, கதைப்பின்னல், கதைத் திருப்பம், நாடக உத்திகள், சிலேடைக் கூற்று, சொற்கட்டு போன்ற சிலம்புக்குள்ள கட்டமைப்புகள் ஏனைய இரண்டிலும் குறைவு எனலாம்.

தமிழகப் பரப்பு முழுவதுக்குமன்றி இந்தியப் பரப்பளவைத் தொடும் கதை தழுவிய தேசியப் பார்வையைத் தரும் சிலம்பைப் போல் மணிமேகலையும் சிந்தாமணியும் இல்லை.

காண்டம், காதை, மாலை, வரி, குரவை என்ற பிரிவுகளால் கற்போரை ஈர்க்கும் சிலம்புபோல் இல்லாமல் மணிமேகலை காதை என்ற பிரிவையும், சிந்தாமணி இலம்பகம் என்ற பிரிவையுமே பகுப்பாகக் கொண்டது - நூல் அமைப்பில் அவைகளுக்குள் உள்ள மாற்றமாகும்.

நாட்டுப்பற்றை இளங்கோவடிகள் மிகுதியும் வற்புறுத்துகிறார்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற முத்தரப்புச் செய்திகள் சிலம்பில் உள்ளதுபோல் அவைகளில் இல்லை.

சிலம்பில்,

  • அரசியல்கூறு
  • நாடகக்கூறு
  • இசைக்கூறு
  • கதைக்கூறு
  • கதாபாத்திரக்கூறு
  • மெய்யியல்கூறு
  • நீதிக்கூறு
  • ஊழ்வினைக்கூறு
  • இன்பியல்கூறு
  • துன்பியல்கூறு
  • நாட்டுப் புறவியல்கூறு
  • சமூகவியல்கூறு

போன்றவற்றைத் தனித்தனியே பிரித்தறிய வாய்ப்புள்ள தெளிவு மணிமேகலையிலும் சிந்தாமணியிலும் இல்லை.


தொடக்கத்தில் மூன்று நீதிகளை அறிமுகப்படுத்தும் ஆர்வத்தில் பதிகம் அமைந்தாலும் சிலப்பதிகார இறுதியில் காப்பிய சாரம் போல் இளங்கோவடிகள், "தெளிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் என விளித்துக் கூறும் இருபத்திரண்டு நீதிகள் போல் மணிமேகலையிலும், சிந்தாமணியிலும் அமையாதது பெருங் குறையே!


எனவே, யாப்பில், சொற்செட்டால் பன்முகப் பாங்குடன் அமைந்த சிலப்பதிகாரம் பெண்மையை உயர்த்திய அதாவது, கடவுளாக்கிய புதுமையால் புரட்சிக் காப்பியம் எனப் பெயர்பெற்று, எல்லோராலும் கையாளப்படும் இலக்கியமாக - செம்மொழித் தகுதிக்குப் பெருமை சேர்க்கும் முதன்மைக்குப் பிந்தியதாக மணிமேகலையும், சிந்தாமணியும் உள்ளதால், சிலம்பு பேசப்படும் அளவுக்கு அவை பேசப்படவில்லை.


"உரையிடையிட்டப் பாட்டுடைச் செய்யுள்",என்ற புதுப்பொலிவு சிலம்பிற்கே உள்ளதால் எல்லா வகையாலும் அரவணைத்து நிற்பது சிலப்பதிகாரமே.



பகுதி 4

ப.இரமேஷ்


சமயப் பூசலே காரணம்.

"காப்பியம்" என்பது "காவியம்" என்பதன் வட சொல்லின் திரிபு ஆகும்.

ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கு பிற்காலத்தில் தோன்றியது என்பதை இதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் இலக்கிய வரிசை போல பிற்காலத்தில் ஐம்பெருங்காப்பியங்கள் என்னும் வரிசையும் வழங்கிவரத் தொடங்கியது.

வடமொழியில்,

நைடதம்
இரகுவம்சம்
குமாரசம்பவம்
கிராதர்ஜுனியம்
சிசுபாலவதம்
ஆகிய ஐந்தும் ஐம்பெருங் காப்பியங்களாக விளங்கின.

அந்த வடமொழி மரபைப் பின்பற்றியே தமிழில் காப்பியங்களை

ஐம்பெருங்காப்பியங்கள் என்றும்,

ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும்

வகைப்படுத்தி உள்ளனர்.

வடமொழி மரபைப் பின்பற்றி காப்பிய வகைப்பாடு செய்து இருப்பதால் காப்பியத் தகுதி இல்லாத நூல்களையும் காப்பியம் என்று கூறுகிற போக்கைக் காணமுடிகிறது.

வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை அடியொற்றி, கம்பர் இராமாயணத்தை திருந்திய வடிவில், காவிய இன்பத்தோடு வளம் பொருந்தியதாக அமைத்துள்ளதை,"நாரதன் கருப்பஞ் சாறாய் நல்ல வான்மீகன் பாகாய்சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன்பார் அமுது அருந்தப் பஞ்ச தாரையாய்ச் செய்தான் கம்பன்வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருந்தினானே(மிகை:28) என்ற பாடல் நமக்கு உணர்த்துகிறது.

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தோன்றியது என நாம் கம்பராமாயணத்தின் காலத்தை வரையறுத்தாலும் அதன் வடிவமும், கம்பரின் கவிதை நயமும் எக்காலத்துக்கும் இன்பத்தை வாரி வழங்குகிறது என்றால் அது மிகையாகாது.

கம்பராமாயணம் தோன்றிய காலத்தில் சமண, பெளத்த சமயக் கருத்துகளே மேலோங்கி இருந்தன. "வீடுபேறு" என்ற தத்துவமே சமயத்தில் சிறப்பாகக் கொள்ளப்பட்டது. தமிழில் உள்ள சிலப்பதிகாரம் முதலிய ஆரம்பகாலக் காப்பியங்கள் யாவும் சமண, பெளத்தக் காப்பியங்களாக இருந்ததால் அவை ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறத் தகுதியானதாகக் கொள்ளப்பட்டது. மேலும், கம்பரை அவர் வாழ்ந்த காலம் எளிதாக ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழல் இருந்தது. அது அவரைத் தனித்துவப்படுத்தியே காட்டியது. இதுபற்றி கம்பரே வருந்திக் கூறியுள்ளார் என்பதை இராமாவதாரம் தற்சிறப்புப் பாயிரம் எடுத்துக் கூறுகிறது.

ஐம்பெருங்காப்பியங்களுள் இருந்து கம்பராமாயணம் புறந்தள்ளப்பட்டதற்கு மேற்சுட்டிய காரணங்களே பொருத்தமாக இருக்கிறது.

ஐம்பெருங்காப்பியங்களாக விளங்கக்கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய இவை ஐந்தும் சமண, பெளத்தக் காப்பியங்களாகவே இருக்கின்றன. இதனால், அக்காலத்தில் சமணமும் பெளத்தமும் தழைத்தோங்கியது என்பதை உணரமுடிகிறது.

மேலும், கம்பரது வைதீக நெறி கம்பராமாயணத்தில் பிரதிபலித்தது. அதனாலேயே இதைச் சமணர்களும் பெளத்தர்களும் ஏற்கவில்லை. சமயப் பூசல் காரணமாகவே கம்பராமாயணம் ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறவில்லை.


நன்றி: தினமணி

--Ksubashini 11:42, 9 ஜூலை 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 9 ஜூலை 2010, 11:43 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,482 முறைகள் அணுகப்பட்டது.