சித்திரம் பேசுதடி, தேவகிரிக் கோட்டை 5மரபு விக்கி இருந்துஎல்லோரா குகைகளுக்குச் செல்லும் முன்பே நாங்கள் முதன் முதல் சென்றது தவுலதாபாத் கோட்டை. தற்சமயம் தவுலதாபாத் என அழைக்கப் பட்டாலும் இதன் உண்மையான பெயர் தேவகிரிக் கோட்டை ஆகும். யாதவ வம்சத்து அரசர்களால் ஆளப்பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கும் இந்தப் பெயரே நீடித்து இருந்திருக்கின்றது, முகமதியர் வரும் வரைக்கும். அதுவும் முகமது- பின் – துக்ளக்கை யாருக்கும் மறக்கவே முடியாது. துக்ளக் புத்தகத்தால் மட்டுமல்ல, நாடகம் கூட வந்தது, நினைவிருக்கலாம். அந்த துக்ளக் மன்னனால் டெல்லி தலைநகருக்குரிய பெருமையில் இருந்து நீக்கப் பட்டு, மொத்த இந்தியாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, இந்தியாவின் மத்தியில் உள்ள இந்தத் தட்சிண பூமியின் தேவகிரிக் கோட்டைதான் சரியாக இருக்கும் எனத் தீர்மானித்து அங்கே சிலகாலம் தலைநகரம் மாற்றப் பட்டது. இதைப் பற்றி அறியும் முன்னர் தேவகிரிக் கோட்டையின் வரலாறு பற்றிச் சிறிது தெரிந்து கொள்ளுவோமா??
12-ம் நூற்றாண்டு வரையில் இந்து அரச குடும்பங்களாலேயே ஆளப்பட்டு வந்தது இந்தக் கோட்டை. தேவகிரி, தேவர்களின் மலை என்ற பெயரால் அழைக்கப் பட்டு வந்தது. இது அநேகமாய் எவராலும் வெல்ல முடியாதபடிக்குச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தது. பில்லமராஜா என்ற யாதவ அரசனால் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. ஒளரங்காபாத்தில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது இந்தக் கோட்டை. மலையின் கற்களாலேயே வெட்டி எடுக்கப் பட்டுக் கட்டப் பட்ட கோட்டைகளின் முன்மாதிரியாகவும் சொல்லப் படுகின்றது. என்றாலும் வலுவான அரசன் இல்லாததால் 14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களின் வசம் சென்றது. சுல்தான்களின் வசம் சென்ற 30 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் ஆட்சிக்கு வந்த முகமது பின் துக்ளக் என்ற அரசன், இந்தக் கோட்டைக்கு தவுலதாபாத், (செல்வங்களின் இருப்பிடம்) என்ற பெயர் மாற்றம் செய்து, தலைநகர் இனிமேல் இந்தக் கோட்டையில் இருந்து செயல்படும் என அறிவித்தான். ஒருவேளை அப்படியே மக்கள் அவரவர் இருப்பிடத்தில் இருந்திருக்கலாம், மன்னன் செய்த ஒரு தவறினால் அது சரிவர நடக்கவில்லை. டெல்லியின் மொத்தக் குடி மக்களையும் மன்னன் மாற்ற முற்பட, வயதானவர்கள், நோயுற்றவர்கள், ஏழைகள், குழந்தைகள் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் இது மிகுந்த சிரமத்தையும், பொருட்செலவையும் கொடுத்தது. இதில் மிகுந்த நோயுற்றவர்களும் தப்பவில்லை. பலரும் டெல்லியில் இருந்து தேவகிரி செல்லும் வழியிலே இறந்தனர். பின்னர் தாமதமாய் மனம் வருந்திய மன்னன், மீண்டும் அதே தவறைச் செய்தான். இம்முறை டெல்லியில் இருந்து கிளம்பிய அத்தனை மக்களையும் மீண்டும் டெல்லிக்கே போகச் சொல்ல, இப்போதும் அதே போல் மக்களுக்குத் தீங்கே விளைந்தது. எனினும் அனைத்துக்கும் தப்பி வந்த ஒரு சிலரால் தேவகிரிக் கோட்டை ஏற்றமே பெற்றது. கோட்டையின் வளர்ச்சி அபரிமிதமாய் இருந்தது. மிகப் பெரிய நகரமாய் தலைநகரம் ஆன டெல்லிக்கே சவால் விடும் வகையில் அதன் வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் இருந்தது. பின்னர் இந்தக் கோட்டை பாமனி சுல்தான்களின் கையில் வந்து சேர்ந்தது. அவர்கள் டெல்லியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுயாட்சி புரிந்து வந்தனர். 16-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தட்சிண பீடபூமியின் சுல்தான்கள் ஆட்சி முடிந்து இந்தக் கோட்டை டெல்லியின் முகலாயர் வசம் போய்ச் சேர்ந்து அதன் கடைசிச்சக்கரவர்த்தி ஆன ஒளரங்க சீப் காலம் வரையிலும் அவனிடமே இருந்து வந்தது. சிவாஜியின் காலத்திற்குப் பின்னர் சிலகாலம் மராத்தியர்கள் வசம் இருந்து வந்தாலும் பின்னர் இந்தக் கோட்டை ஹைதரபாத் நிஜாம் வசம் போய்ச் சேர்ந்தது. 1949-ம் ஆண்டு வரையிலும் நிஜாம் மன்னர்களிடமே இருந்து வந்த இந்தக் கோட்டை நிஜாம்களின் சரணாகதிக்குப் பின்னர் இந்திய யூனியனிடம் வந்து சேர்ந்தது. இப்போது கோட்டையின் அமைப்பைப் பார்க்கலாமா???
பலமான சுற்றுச் சுவர்களுடன் கூடிய இந்தக் கோட்டை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு அரசர்களால் பல்வேறு விதமான ஆட்சிக்கு உட்பட்டிருந்த காரணத்தால் அந்த அரசர்களின் திறமைகளுக்கும், வலுவான அரசாட்சிக்கும் ஏற்ற வகையில் பலப் படுத்தப் பட்டிருக்கின்றது. வியக்க வைக்கும் கட்டிடக் கலையைக் கொண்டிருக்கும் இந்தக் கோட்டை பல பாகங்களாய்ப் பிரிக்கப் பட்டிருக்கின்றது. மொத்தக் கோட்டையிலும் தண்ணீர் நிரப்பும் தொட்டிகள், மேலே ஏறிச் செல்லப் படிகள் என்று காணப் படுகின்றன. மேலே ஏறிச் செல்லும் வழியில் படை வீரர்கள் நின்று கொள்ள இடமும், ஓய்வெடுக்கும் இடங்களும், மறைந்து கொள்ளும் இடங்களும் காணப் படுகின்றன. நாங்கள் சென்ற சமயம் நல்ல வெயில் காலம். சுட்டெரிக்கும் மே மாத வெயில். இந்த வெயிலில் தான் மேலே ஏறிச் செல்லவேண்டும். குன்று செங்குத்தாய் இருப்பதால் கொஞ்சம் கஷ்டம் தான் மேலே ஏறிச் செல்ல, அங்கங்கே சில படிகள், சில இடங்களில் சாய்வான நடைபாதைகள் மேலே செல்லவும் கீழே இறங்கவும் காண முடிகின்றது. பிரதான நுழைவாயிலில் இருந்து அடுத்த நுழைவாயில் அமைத்திருக்கும் கோணத்தால் உள்ளே நுழையும் எதிரிக்கு இன்னொரு வாயில் உள்ளே அமைந்திருப்பதைக் காண முடியாது. ஆனால் உள்ளே இருப்பவர் நுழைபவரைக் காண முடியும், தாக்கி அழிக்கவும் முடியும். யாதவர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் கட்டப் பட்டிருந்த கோயில் பின்னாட்களில் பல்வேறு கைகளிலும் மாறியதால் இன்று அங்கே பாரதமாதா கோயில் என்று மாற்றம் செய்யப் பட்டு, பாரதமாதா தரிசனம் கொடுக்கின்றாள். இதைத் தவிர, “ஆம்காஸ் மண்டபம்” மன்னர் பொது மக்களைத் தரிசிக்கும் இடம், ரங் மஹால், சினிமஹால், போன்றவை தவிர ஒரு இருட்டான பாதையும் காணப் படுகின்றது. இது தான் இந்தக் கோட்டையின் அதிசயமே. சுற்றிச் சுற்றி வந்து உள்ளே செல்லும் பல்வேறு முக்கிய வாயில்களைக் கடந்துக் கொஞ்சம் மேலே ஏறினால், ஒரு பரந்த வெளி வருகின்றது. அதன் இருபக்கமும் வீரர்கள் நிற்கும் இடம். அதைக் கடந்தால் திறந்த ஒரு முற்றம். மேலே பார்த்தால் சுற்றுச் சுவர்கள் தெரியும். திறந்த முற்றத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் நுழைவாயிலுக்குள் நுழைந்தால் ஒரு பெரிய அறை போன்ற ஒரு இடம் வருகின்றது. அங்கே நுழையும் முன்னரே கையில் வைத்திருக்கும் அனைத்து வெளிச்சம் தரும் வஸ்துக்களையும் அணைக்கச் சொல்லி விடுகின்றனர். ஒரு தீவட்டியும், அதை ஏற்ற ஒரு நெருப்புப் பெட்டியும் வழிகாட்டி, (அரசால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டிகள் மட்டுமே) எடுத்து வருகின்றார். ஒரு குழு நுழைந்து உள்ளே சென்று பார்த்துவிட்டு, வேறு வாயில் வழியாக வெளியேறியதுமே மற்றொரு குழுவுக்கு அனுமதி. உள்ளே சென்றால் கண்ணை மயக்கும் இருட்டு. எதிரே என்ன இருக்கின்றது? சுவரா? வெட்டவெளியா, மனிதரா?? என்ன என்றே புரியாதவண்ணம் மனதைக் குழப்பும் இருட்டு. நம் மனதையும் கண நேரம் அந்த இருட்டு மனதைக் குழப்புகின்றது. அதற்குள் வழிகாட்டி கையில் வைத்திருக்கும் தீவட்டியை ஏற்றி விடுகின்றார். கொஞ்சம் நிம்மதி. மற்றொரு பக்கமாய்த் தப்பித்துச் சென்று விடலாம் என்று இந்த இருட்டில் இருந்து தப்பிக்கும் ஒற்றர்களோ, வேற்று நாட்டு வீரர்களோ தப்பிக்க முடியாதபடிக்கு அங்கே சிறு இடத்திற்குச் செல்கின்றது. மேலே உயர்ந்த நீண்ட சுவர்கள். அதன் மேலே இருந்து எண்ணெய்க் கொப்பரை மூலமோ, அல்லது வேறு வகையிலோ நெருப்புக்களோ, கொதிக்கும் எண்ணெயோ ஊற்றப் பட்டால் வந்தவர் தப்பிக்கவே முடியாது. அப்படி ஒரு வகையில் கட்டப் பட்டிருக்கின்றது, நம் கட்டிடக் கலையில் சிறப்புக்கு ஒரு மாட்சிமை கொடுக்கின்றது. இதன் பின்னர் யாதவர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் ஜைனக் கோயிலாக இருந்த பாரதமாதா கோயிலுக்குச் சென்று தரிசித்துவிட்டுத் திரும்பும்போது “ஹாதி ஹவுஸ்” என்னும் இடத்தில் உள்ள தண்ணீர் சேமித்து வைக்கும் இடத்தைப் பார்க்கலாம். சுற்றிலும் படிக்கட்டுகள் கீழே இறங்க அமைத்துள்ளது, அது அளவில் மிக மிகப் பெரியதாய் இருக்கின்றபடியால் இந்தப் பெயரில் அழைக்கப் படுகின்றது.
--Geetha Sambasivam 08:34, 22 ஜூலை 2011 (UTC)
|





