சித்தர் வழியில் யாக்கோபு(ராம தேவர்)சித்தர் 14

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

நாகப்பட்டினத்தில் அனுதினமும் அம்பிகையின் நினைவாக வாழ்ந்து கொண்டிருந்த சித்தர்தான் இராமதேவர். சித்தர்கள் அனைவரும் சக்தி வழிபாடு உடையவர்கள்.அண்டத்தின் சக்தியைப் பிண்டத்தில் அறிந்து வழிபட்டவர்கள் சித்தர்கள்.அகத்தெளிவும் சமுதாய ஈடுபாடும், மனச்சான்றின் பேரெழுச்சியும்தான் சமயம் என்பதை வலியுறுத்தியே சித்தர் பூசா விதிகளை வரையறுத்துள்ளனர். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற மெய்யுணர்வு பெற்றவர்கள் சித்தர்கள்.


மனிதர்கள் அனைவரும் உதட்டில் ஒரு குணமும், உள்ளத்தில் ஒரு குணமுமாக வேடமிட்டு வாழ்வதை எண்ணி வேதனைப்பட்டு, மனம் வெம்பி அன்றாடம் தேவியுடம் கண்ணீர் விட்டழுவதும்அரண்டுவதும் சித்தர் இராமதேவர் வழக்கமாக இருந்தது. இதே சிந்தையுடன் விரக்தியுமாய் நாகபட்டினத்திலிருந்து காசிக்குச் சென்றார். கங்கை நதியில் மூழ்கி குளித்து விட்டு கரையேறும்போதுகங்கைக் கரையோரத்தில் சட்டைநாதர் சுவாமியின் விக்ரகம் ஒன்று அவருக்கு கிட்டியது.


பக்தகளின் துணையோடு இராமதேவர் சட்டைநாதரின் விக்ரகத்தை நாகபட்டினம் கொணர்ந்து பிரதிஷ்டை செய்தார். இரவு பகலாக இடையறாது சட்டைநாதரை உருகி வழிபாடு செய்து வந்தார். வழிபாட்டின் பயனாக பல சித்தர்களின் அபூர்வத் தொடர்புகள் ஏற்பட்டன. தொடர்பின் பயனாக சித்தர்கள் பலரும் இராமதேவரை வேண்டினர். “ இராமதேவரே! மக்கா நகரில் பல அபூர்வமான சக்தி வாய்ந்த கல்ப மூலிகைகள்  ஏராளமாகஉள்ளன. அவை யாவும் உயிர் காக்கும் மூலிகைகள் மட்டுமல்ல இமைக்கும் நேரத்தில் பலனைக் கொண்டு வரும் மந்திர சக்தி வாய்ந்த மூலிகையாகும். மக்கள் நலத்திற்காக அந்த மந்திர மூலிகைகளின் இரகசியங்களால் இந்த உலகையும், உயிரையும் காக்கும் பொருட்டு, நீங்கள் மக்கா நகருக்குச் சென்று வாருங்கள் “ என்றனர்.


நன்மைக்கும் தீமைக்கும் ஏதுவான மந்திரங்களை “அதர்வணாங்கிரஸ்” என்று வேதம் கூறுகிறது. அவற்றிம் வெளிப்பாடாகவே அன்றைய சித்தர்கள் மந்திர தந்திர ஜாலங்களையும்,மந்திர மூலிகைஇரகசியங்களையும் பரிபாஷையாகத் தெரிவித்துள்ளனர்.இராமதேவர் இயற்றிய ‘பூஜாவிதிப் பாடல்கள்’’ இதனை ஆதி என்றமணிவிளக்கு எனப் போற்றினார்.


ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்’

அகண்டபரி பூரணத்தை காண வேண்டும்,

சோதியென்ற தூய்யவெளி மார்க்க மெல்லாஞ்

சுகம் பெறவே மனோண்மணியென் னாத்தாள் தன்னை

நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்

நிற்குணத்தி நினின்ற நிலை யாரும் காணார்,

வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று

விளங்குவதும் பூசையிது வீண்போ காதே.


[தியானத்தின் போது குண்டலி சிரசை அடைந்து புருவ மத்தியில் வெண்ணிறவொளியாய் காட்சி தரும் இதுவே பரிபூரண இன்பமாகும். மனோன்மணியேகுண்டலி சக்தியாகும்.மனோன்மணியைப் பெண் சக்தியாக பரிபாஷையில் சித்தர்கள் குறிப்பிடுவார்கள். ஆத்தாள்(அகத்தாள்) எனவும்,தாயாகவும் கருதுகிறார்கள். அகத்தில் பேரொளியாய் சக்தி திகழ்வதால் இச்சக்தியை அகத்தாள் என்கிறார்கள்சித்தர்கள்]



அந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி குண்டலினி யோகத்தாலும், இரசமணி சித்தியாலும்,குளிகையாலும் நாகப்பட்டினத்திலிருந்து மக்கா நகரத்துப்  பாலைவன மணலில் வந்துசேர்ந்தார்.வறண்ட பாலைவனம் எங்கும் மணல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல். ஒட்டங்களின் வரிசை.அப்போதுதான் இராமதேவருக்கு மிகபெரிய சோதனை வந்து சேர்ந்தது.தங்கள் நாட்டில் யாரோ அந்நியன் புகுந்து விட்டதைக் கண்டு, கூட்டமாய் அரேபியர்கள் இராமதேவரைச் சூழ்ந்து கொண்டனர்.’’யார் நீ…. திடிரென்று இந்த இடத்திற்கு எப்படி வந்தாய்? ஏன் வந்தாய்? தீன் தேசத்துக்குள் உன் வரவின் நோக்கம் என்ன? உண்மையிலேயே நீர் யார்? உன்னைக் கொல்லாமல் நாங்கள் விடபோவதில்லை” என்று அலறினார்கள்.


‘’ அய்யா, இங்கு வருவது தவறு என்று எனக்குத் தெரியாது.’’


‘’ அப்படியென்றால் நீ வேற்று மதத்துக்காரானா? உனக்கு இங்கு என்ன வேலை?’’


‘’ அய்யா, நான் தவசாதனையில் ஈடுபட்டுள்ள சித்தர். எல்லா மதமும் சம்மதமே. நான் மத வேறுபாடுகளை பார்ப்பதில்லை.எனக்கு மனித உயிர்கள்தான் முக்கியம்.இங்குள்ள உயிர்காக்கும் கல்ப மூலிகைகளுக்காகவே நான் வந்தேன்’’


‘’ ஓ! நீங்கள் தவயோகியா? சித்தரா? நீங்கள் இங்கே தங்க வேண்டுமானால் மதம் மாற வேண்டும். மத வேறுபாடு நீங்கள் பார்ப்பது இல்லை என்பது உண்மையானால் அதற்குச் சம்மதிக்கிறீர்களா?’’


‘’ சம்மதிக்கிறேன்”


‘’ இனிமேல் நீர் குரான் ஓத வேண்டும் ‘’


“எல்லாம் இறைவன் செயல்” என்று கூறிய இராமதேவர், அன்று முதல் யாக்கோபுவாக மதம் மாறினார்.மக்கா நகரத்து மனிதர் யாவருடனும் இன்முகத்துடன் பழகினார்.அங்குள்ள காயகல்ப மூலிகைகளைக்கண்டறிந்து அவற்றை சாதனைக்குப் பயன்படுத்தியதுடன் மற்றவருக்கும் அதன் மகத்துவம் பற்றிஎடுத்துரைத்தார்.மக்கா நகரின் இசுலாமிய மக்களிடையே இரண்டறக் கலந்து அவர்களின் நோயகற்றும் மருத்துவராக இருந்து எல்லா காலங்களுக்கும் பயன்படும்படியான மருத்துவ நூல்களை அராபிய மொழியில் பாடி வைத்தார்.அங்குள்ள நபிகள் நாயகம் சமாதியைத்  தொழுது துதித்து வருவதை யாக்கோபுச் சித்தர் வழக்கமாகக் கொண்டு வந்தார். ஒருநாள் ஆகாயம் அதிரும்படியான பெருத்த ஓசை ஏற்பட்டது. அன்பர்கள் அனைவரும் குரானை ஓதித்தொழுத போது யார் கண்ணிலும் படாமல் நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் காட்சி தந்தார். ஆத்ம அநுபவம், தெய்வ நுட்பம் போன்ற உயரிய சாதனைகள் பற்றி நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் உபதேசித்து மறைந்தார்.


யாக்கோபுச் சித்தர் அதன்பின் சமாதி நிலையடைய விரும்பி அதற்காக சாதகம் செய்து வந்தார். மனமானது ஒன்றையே எண்ணியிருந்து வேறு நிலையில் எண்ணா நிலைக்காதிருக்குமானால் அதுவே சாமதி. ஒரு பூரணத்துவம் வாய்க்கப்பெற்ற சித்தர் ஆன்ம ஞானத்தைப் பெருக்கிக்கொண்டு தாம் உடலுடன் இருக்கும் போது நினைவு, செயல் யாவற்றையும் துறந்து சிவனுடன் சேர்ந்து விடுவார்.பரத்தோடு சேர்ந்து பரப்பிரம்மமாய் எங்கும் நிறைந்தவர்களாகி விடுவார்கள். அரேபிய நாட்டின் பல்வேறு கல்பமூலிகைகளைப் பற்றி அறிவதற்காக தமிழ் நாட்டிலிருந்து போகர் சித்தர் மக்காவுக்கு வந்திருக்கின்ற செய்தி அறிந்து யாக்கோபுச் சித்தர் அவரை எதிர்கொண்டு வரவேற்றார். காயசித்தி,யோகசித்தி,கற்பசித்தி அனைத்தும் பெற்றவர் சித்தர்லலவா போகர்! முதன் மையான சித்தராக போகர் கருதப்படுகின்றார். போகமுனிவர் யாக்கோபுச் சித்தருக்கு உபதேசம் செய்தார்.


”மக்காவில் யாக்கோபுவாகவும், தமிழ்நாட்டில் இராமதேவராகவும் இருக்கின்ற நீ சமாதி அடைய வேண்டி காலம் இதுவல்ல. இந்தப் பூதலத்தில் உன்னால் பலரும், பாமர மக்களும் பயன் கிட்டியபின் நீ சமாதி நிலை நாடுவதுதான் சரியான வழி”


போகமுனிவரிடம் அவ்வாறு உபதேசம் பெற்ற யாக்கோபுச் சித்தர் அதன்பின் தம்முடைய ஒப்பற்ற சித்தியால் யார் கண்ணிலும் தென்படாது அங்கிருந்து மறைந்தார். யாக்கோபுச் சித்தர் காடு,மலைஎல்லாம் சுற்றி அலைந்து திரிந்தார்.தம்மை சந்தித்தவர்கள் எல்லார்க்கும் உபதேசம் செய்ததுடன் பிரச்சனைகளைக் களைந்து மகிழ்வித்தார். காற்றையே உடலாகக் கொண்டவர் என்றும்; காலனை போன்ற நெருப்பானவர் என்றும்; காலனால்நெருங்க முடியாதவர் என்றும் கூறப்படும் காலங்கிநாதர் எனும் சித்தரின் ஆசியைப்பெற விரும்பினார் யாக்கோபுச் சித்தர். பலயுகம் கடந்து வாழ்ந்துவரும் காலங்கிநாதர் ரிஷிகள் பலரின் ஆசீர்வாதங்களைப்பெற்றவர். எனவேதான் யாக்கோபுச் சித்தர் அவரது ஆசீர்வாதத்தை பெற விரும்பினார். ஒருநாள்காலங்கிநாதர் சமாதி முன் சென்று அவர் வணங்கிபோது சமாதியிலிருந்து அவர் வெளிப்பட்டுயாக்கோபுச் சித்தரை ஆசீர்வதித்தார்.தம்முடைய அனுபவ இரகசியங்களை யாக்கோபுச் சித்தருக்குஉபதேசித்தார்.


தான் சமாதிநிலை அடைய இதுவே சரியான தருணம் என முடிவுசெய்து தமது சீடர்களை அழைத்தார் ’’சீடர்களே நான் இப்போது சமாதியில் அமரப் போகிறேன். பத்து ஆண்டுகளுக்குப் பின்பு சமாதியிலிருந்துமீண்டும் நான் எழுந்து வருவேன்,நான் சாமதியிலிருந்து வெளிவரும் காலத்தில் இங்கு பல அற்புதங்கள்நிகழும். விலங்குகள் கூட ஞானம் பேசும். நறுமலர்கள் பூத்து மணம் கமழும். இது போன்ற அடையாளங்கள்நான் திரும்பி வரும் நாள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இப்போது சமாதியைமூடிவிடுங்கள்.” என்று கூறியபடி யாக்கோப்பு சித்தர் சமாதி உள்ளே சென்று விட்டார்.


“மாயத்தைக் கண்ட சித்தர் மதியதைப் பெருக்கிக் கொண்டு காயத்திலிருக்கும் போது கர்த்தனைக் கலந்துகொள்வார் ” என அகத்தியருக்கு கந்தபெருமான் அட்டமாசித்தி உரைத்தன் பொருளாய் யாக்கோபுச் சித்தர்உடம்போடு சமாதி நிலை கொண்டார்.யாக்கோபுச் சித்தர் சமாதிக்குள் போனவர் இறந்துவிட்டார் என்றேமக்கள் யாவரும் நம்பினர். அவரது சீடர்களும் பல இடங்களுக்கு சென்றுவிட்டனர். யாக்கோபுச் சித்தர்மீண்டும் வரமாட்டார் என்று சீடர்களும் நம்பினார்கள்.ஆனால் ஒரு சீடர் மட்டுமே நம்பிக்கையோடுசமாதிக்கருகிலேயே இருந்து வந்தார். அந்த சீடரின் நம்பிக்கை வீண் போகவில்லை.தன்னுடைய குருநாதர்கூறியதைப்போலவே சமாதியிலிருந்து எழுந்து வந்ததைக் கண்டு சீடர் மகிழ்ந்தார்.


“குருவே! தாங்கள் சமாதிக்குள் சென்ற பின்பு மக்கள் எல்லோரும் தாங்கள் இறந்து விட்டதாகவும்,தங்களிடம் சித்து ஏதும் இல்லை என்றும் கேலி பேசினார்கள்” என்று சீடர் கூறியதைக் கேட்டார்.“சீடனே! அவ்வாறு கூறியதில் தவறு இல்லை.இந்த உடல் நிலையானதல்ல.என்றேனும் ஒருநாள் மண்ணுக்குஇரையாகத்தான் வேண்டும்.நான் மீண்டும் சமாதியில் இறங்க்கப் போகிறேன். முப்பது ஆண்டுகள் கழித்துத் திரும்பவும் வருவேன்.என்னைப் பற்றி தவறாகப் பேசியவர்கள் கண்கள் குருடாகப் போய்விடும்” என்று யாக்கோபுச் சித்தர் கூறியபடி மீண்டும் சாமதிக்குள் இறங்கிச் சென்று விட்டார்.


கேலி செய்த மக்கள் யாக்கோபுச் சித்தர் சாபத்தினால் கண் பார்வை அற்றவர்களாயினர். தங்கள் தவறைஅவர்கள் உணர்ந்தனர்.கண் பார்வை கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போல் வருந்தினர். தங்களுக்குக் கண்பார்வை வேண்டி யாக்கோபுச் சித்தர் சமாதியிலிருந்து வெளியே வரும்வரை அவர்கள்யாவரும் சமாதிக்குப் பூஜை செய்து வணங்கிக் காத்திருந்தனர். நீண்ட காலம் என்பதால் அதில் பலர் இறந்தும் போய்விட்டனர். முப்பதாண்டுகள் கழித்துச் சமாதியில் இருந்து எழுந்து வந்த யாக்கோபுச் சித்தர் நடந்தது யாவும் அறிந்தார். தன்னிடம் மன்னிப்பு கோரியவர்களுக்கெல்லாம் அவர்களின் குறைபாடுகளை போக்கிஅருள் புரிந்தார். அதன் பின் உலகிலிருக்கும் பற்று நீங்கப்பெற்றவராக யாக்கோபுச் சித்தர் நிரந்தர சமாதிக்குள்சீடர்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.


தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு;

தனதான் நூற்றெட்டுக் குள்ளே சித்தி

ஆனென்ற அண்டர்பதி யெட்டு மாடும்;

அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்;

கோனென்ற கோடிசித்துக் கனத்தி லாடுங்

குணமாக ரேவதிநாட் செய்ய நன்று;

வானென்ற அட்டமியிற் செய்ய நன்று;

வளர்பிறையின் செய்தவனே யோகி யாமே.


[ குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் எழுப்ப 108 மாத்திரையால் கும்பிக்க மூலாதாரம் சித்தியாகும்.இந்த மூலாதார சித்தியால் தேவலோங்கள் வசப்படும்.64 மூலிகைகளின் இரகசியங்கள் வெளிப்படும்.எந்த மூலிகை எப்படி இருக்கும்என்பது சித்தர்க்கு மட்டுமே தெரியும். இச்சித்தியை ரேவதி நட்சத்திர நாளில்செய்யலாம்.அல்லது எட்டாம் திதியாகிய அட்டமியில் செய்யலாம். இதனைவளர்பிறையில் செய்தவன் யோகியாவான். ]


சித்தர்களின் பாடல்கள் யாவும் பெரும்பாலும் அவர்களின் அனுபவத்தால்முகிழ்ந்தவைகள். பொதுவாக சித்தர்களின் பாடல்களுக்கு அகராதியில்

பொருள் தேடக்கூடாது. சித்தர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு வித பரிபாஷையை முதலில் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அதன்பின் பாடல்களுக்கு பொருள் தேட முயற்சிக்க வேண்டும்.சித்தர்களின் பாடல்களுக்கு எளிய தமிழ் அகராதிகளில் பொருள் தேடிப்படிப்பது தவறானதாகி விடும். சித்தர் பாடல்களுக்கென்றே சில அகராதி இருக்கின்றன. அவற்றைத் தேடிப்படித்தல் நலம் பயக்கும்.


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


-Geetha Sambasivam 09:26, 11 மார்ச் 2011 (UTC)


பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 11 மார்ச் 2011, 09:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,763 முறைகள் அணுகப்பட்டது.