சித்தர் வழியில் பிராந்தர் 21மரபு விக்கி இருந்துவிடியலுக்கு அடையாளமாக,அறிகுறியாக கிழக்கு வானம் வெளுக்கும், வெளிச்சம் பரவும். பறவை இனங்கள் பலவித இனிமையான இரைச்சலுடன் பறக்கத் தொடங்கும். குளக்கரையில் படுத்திருந்த அந்த மனிதர் எழுந்தார். ஆடைகள் அழுக்கடைந்து, கிழிந்திருந்தது குளித்து பல நாட்கள் ஆகியிருக்கும். தலை எண்ணை கண்டு பல காலமாகியிருக்கும். ஆனால்.., கண்களில் தீட்சணயமான ஒரு ஒளி.இதழின் ஓரத்தில் வித்தியாசமான சிரிப்பு. சிரிப்பா அல்லது பரிகாச இளிப்பா ! அவர் பெயர் நாராயணன்.அவர் யாருடன் பேசுவதில்லை. தனியாக இருப்பார். தீடீரென்று சிரிப்பார், தனக்குத்தான் பேசுவார், சில சமயங்களில் அழுவார், ஓடுவார், ஆடுவார், ஆனால் இவை எல்லாம் எதற்கும் காரணம் மட்டும் புரியாது. இது போதாத நம் மக்களுக்கு. அவரை பிராந்தன் என்று அழைப்பார்கள். பிராந்தன் என்றால் மலையாளத்தில் கிறுக்கன் என்று பொருள். அதே சமயம் அந்த பிராந்தரின் மனதில் என்ன இருக்கிறது என்று அறிய யாரும் முயற்சித்ததில்லை.
‘மக்கள் வந்துவிடுவார்களே..! என்று விரைவாக அருகிலிருக்கும் குன்றின் அடிவாரம் ஓடுவார். அங்கே இருக்கும் எந்த பயனுமில்லா ஒரு பெரிய உருண்டைக் கல்லை மலையின் உச்சிக்கு மிகவும் சிரமப்பட்டு, தன் பலத்தை முழுவது திரட்டி மலையின் உச்சிக்கு நகர்த்தி செல்வார். இடையில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்வார். பிராந்தர் சிரமப்பட்டு நகர்த்திய சென்ற கல்லை அங்கிருந்து கீழே உருண்டி விட்டு,அதனுடன் கூடவே, கைகொட்டிச் சிரித்தபடியே துரத்திக்கொண்டு வருவார். வேகமாக உருண்டு வரும் கல்லைக் கண்டு மக்கள் சிதறி ஓடுவார்கள். கல் அடிவாரத்தை அடையும் போது பிராந்தாரும் அடிவாரம் வந்தடைவார். பிராந்தன்… பிராந்தன் இவன் எப்பதான் திருந்துவான்? என்று கோபத்துடன் திட்டிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் செல்வார்கள்.
அதன் பின் சாய்ந்திரம் பிச்சை, சிவசிந்தனை, தூக்கம் என்று திரும்பவும் மலை உச்சிக்கு கல்லை உருட்டிச் செல்வது என தொடரும். இந்த காரியத்தைச் சிரத்தையுடன், ஒரு கடமை போல செய்துக்கொண்டு இருப்பார்.இந்த அன்றாட வாழ்க்கைக்கு என்ன காரணம் என்பதை ஒருவராலும் அறிய முடியவில்லை.
மாலையான பின் ஊருக்குள் சென்று பிச்சை எடுப்பார். பிச்சையாக அரிசிதான் கேட்பார். ஒரு கைப்பிடி கொடுத்தால் போதும் அடுத்த வீட்டுக்கு நகர்ந்து விடுவார். அதுவும் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கான அரிசி கிடைத்தால் போதும்! அதற்கு மேல் தேவையில்லை என வந்துவிடுவார். அரிசியுடன் வரும் பிராந்தர் சுற்றுமுற்றும் பார்ப்பார். ஏதாவது ஓர் அடுப்பில் கொதித்துக்கொண்டு இருக்கும் உலையை இறக்கி வைத்துவிட்டு, தன் அரிசி இருக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றிச் சாதமாக்கிக் கொண்டு திரும்புவார். அங்கு இருப்பவர்களுக்குக் கோபம் வந்தாலும், ஏதுவும் கேட்க மாட்டார்கள். பைத்தியத்திடம் கேட்டு என்னபிரயோசனம்? அது மட்டுமல்ல, அவர்களுக்குப் பிராந்தரிடம் பயமும் கூட!
இதுபோல்தான் ஒருமுறை பிராந்தரை ஒருவன் அடிக்கப் போக, ஓங்கிய கை அந்தரத்தில் அப்படியே நின்றுவிட்டது. இறக்கவே முடியவில்லை. ஒருநாள் முழுக்கத் துன்பப் பட்டவன் பிராந்தரிடம் கெஞ்ச, “போய்க்கோடா” என்றபடி அவன் கையை வருடிவிட்டார். உடனே, கை பழைய நிலைக்கு வந்தது.இந்த அனுபவத்தில், பிராந்தனை அதன் பிறகு யாரும் ஒன்றும் சொல்லவில்லை.வடித்த சாதத்தை பிராந்தர், குளத்தின் கருங்கல் படியில் கொட்டுவார்.அப்படியே அள்ளிச் சாப்பிடுவார். ஊற்றிக் கொள்ளவோ,தொட்டுக் கொள்ளவே ஒன்றும் கிடையாது. சாதத்தில் உப்புகூடப் போட்டுக் கொள்ள மாட்டார். உயிர் வாழ, உடலைப் பராமரிக்க, ஆன்மாவுக்கு சிறிது சத்து தேவை. அதற்காகத்தான், இந்த ஒரு பிடி சாதம்! அதற்கு கூட ஒருமுறை வழியில்லாமல் போயிற்று.
ஒருநாள் வழக்கம்போல பிராந்தர், பிச்சையெடுத்த அரிசியுடன் குளக்கரைக்கு வந்தார். திகைத்துப் போனார். அங்கே மக்கள் யாரும் இல்லை. திகைத்துப் போனார். மக்கள் யாருமேயில்லை. ஓர் அடுப்பு கூட எரியவில்லை. பாவம் மக்கள்! வேறு எங்காவது கூலி வேலை கிடைத்து இருக்கும். மொத்தமாகப் போயிருப்பார்கள்.. ம்ம் ஆண்டவன் படைப்பில் இப்படியும் சில சீவன்கள் அல்லல் பட வேண்டி-யிருக்கிறதே! என்று நினைத்துக்கொண்டார். அரிசியைச் சமைக்க வேறென்ன செய்யலாம். சட்டென்று யோசனை வந்தது. அட! ஆமாம், அங்கே எப்படியும் நெருப்பு இருக்குமே! உற்சாகமாக அவர் சென்ற இடம் மயானம்! மயான பூமியில், ஆங்காங்கே கிடந்த கற்களைப் பொறுக்கி எடுத்து அடுப்பு அமைத்தார். அங்கே எரிந்து கொண்டு இருந்த தீயிலிருந்து, சில விறகுகளை அள்ளிக்கொண்டு வந்து அடுப்பில் அரிசியை போட்டு சமைத்து முடித்தார்.
காரியக் கடன்கள் செய்யும் மேடையின் மீது சாதத்தைக் கொட்டினார். சோற்றை அள்ளிச் சாப்பிட்டார். இடுகாட்டின் புகை நாற்றமோ வெடிக்கும் சிதையின் சத்தமோ, எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. சாப்பிட்டு முடித்ததும்., கல்லும் மண்ணும் காற்றில் பறக்கும் புழுதிச் சாம்பலுக்கு நடுவே இருந்த மயானத் தரையிலேயே படுத்துக் கொண்டார்.நடுநிசி நேரம். ஆந்தைகள் அலறின. கோட்டான்கள் கத்தித் தீர்த்தன. ஒரு இறுக்கத்தை ஏற்படுத்தியது. மை பூசியது போல் இருள் கவிழ்ந்திருந்தது. அப்போது அங்கே வந்தாள் காளி. பிணங்களின் மீது அவள் உக்கிர தாண்டவம் ஆடும் நேரமது. அங்கே படுத்திருந்த பிராந்தரைப் பார்த்தாள். ஆச்சரியப்-பட்டாள். காளியின் உக்கிர தாண்டவத்தின் போது அவளைப் பார்ப்பவர்கள், இரத்தம் கக்கிச் செத்துப்போவார்கள் என்பது நடைமுறை.
பிராந்தரை எழுப்பி, பயமுறுத்தி விரட்டியடிக்க நினைத்தாள். . தன் கால் சலங்கையால் கலகலவென ஒலி எழுப்பினாள். பிராந்தர் அந்தச் சலங்கை சத்தத்தை கண்டு கொள்ளவே இல்லை.கண் திறக்கவே இல்லை. கட்டைபோல் தூங்கிக்கொண்டு இருந்தார்.காளி உதைத்த போது பிராந்தர் படுத்த நிலையிலேயே எச்சலனமும் இன்றி கண்களை விழித்துப்பார்த்தார்.’’அம்மா, தாயே இராத்திரி நேரம். கொஞ்சம் நிம்மதியாக தூங்கவிடாமல் ஏன் இந்த ஆர்ப்பாட்டம் செய்து என்னையும் தூங்கவிடாமல் தொல்லை செய்கிறாய்?” என்று பிராந்தர் கேட்டார். காளிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன்னைக் கண்டு பயப்படாத மானுடனும் இருக்கிறானே என்று எண்ணியவளாய் “ஏய் மனிதா, யார் நீ? என்று மிரட்டலாகக் கேட்டாள்.
“நான் யார் என்பதை அறிய இன்று வரை முயன்றும் எனக்கே விடை தெரியாது இருக்கும் போது உனக்கு எப்படிச் சொல்வேன். சொன்னால்தான் உனக்குப் புரியுமா? இப்போது போய் வா, நான் தூங்கவேண்டும்“ என்றார் பிராந்தர்.
“என்னிடமே இவ்வல்ளவு அலட்சியமா? நான் காளி என்பது உனக்கு தெரியுமா?
’’ தெரியாமல் என்ன தாயே! நெருப்பு விழிகள், கரியின் நிறம், கடைவாயில் நீண்ட கோரைப் பற்கள், முகத்தில் கோபத்தின் தாண்டவம், முளைத்திருக்கும் அத்தனை கைகளிலும் கோரமான ஆயுதங்கள்,கழுத்தில் மண்டை ஓட்டு மாலை, இத்தனைக்கும் பிறகும் நீ காளியென்பதை அறியாத பிராந்தனா நான்?" எவ்வித சனமும் இன்றி பதில் சொல்லிக்க்கொண்டிருக்கும் பிராந்தரை இப்போது காளி பார்த்தாள். இவர் நிச்சயம் சாதாரண மானிடன் கிடையாது நிச்சயம் சித்தராகத்தான் இருக்கவேண்டும். அதனால்தான் தன்னைப் பார்த்த பிறகும் சிறிதும் அச்சமின்றி இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டாள்.எவ்வித சலனமும் இன்றி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் பிராந்தரை இப்போது காளி பார்த்தாள். பின் அழகுத் திருமேனியுடன் தோன்றினாள்.அதன் பிறகு சாந்த சொருபியாகப் பேசினாள்.
“சித்த மகானே! என் தரிசனம் பார்த்தவர்களுக்கு, ஏதாவது வரம் தருவது என் சுபாவம். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேளுங்கள்.‘எனக்கு எதுவும் வேண்டாம் தாயே, தொல்லைப்படுத்தாதே! போய் வா! என்று கொட்டாவி விட்டார் பிராந்தர்.’இல்லை, அப்படி மறுத்துப் பேசாதே, ஏதாவது பெற்றுக் கொள் ‘ என்று வற்புறுத்தினாள் காளி ”என்னம்மா நீ ! சரி இத்தனை வற்புறுத்துவதால் கேட்கிறேன். என் இந்த வலது காலில் ஆனைக்கால் நோய் வந்து வீங்கிப் போய்விட்டது! இந்த வீக்கத்தை இடது காலுக்கு மாற்றிவிடு” என்று தன் வலது காலை நீட்டிக் காண்பித்தார். காளி தயங்கியபடி சொன்னாள். “சித்தரே, இது போன ஜென்மப் பாவம். அந்தப் பிறவியில் நீங்கள் ஒரு சாத்வீகமான ரிஷியை எட்டி உதைத்தீர்கள். அந்த பாவத்தின் பலன்தான் இந்த ஆனைக்கால் நோய். வேண்டுமானால், இரண்டு கால்களையும் ஒன்றும் இல்லாமல் சரிப்படுத்தி விடட்டுமா?
”வேண்டாம் தாயே, வேண்டாம்.செய்த பாவத்துக்கான தண்டனை அனுபவிக்கவிட்டால், பின்பு அதற்கு வேறு கூடுதல் பாவம் சேரும்.மறுபடியும், அதற்கென்று ஒரு பிறவி எடுத்து அனுபவிக்க வேண்டி வரும்.ஒன்று செய்யேன். அந்த பாவமே இல்லாமல் போக்கிவிடேன்”
”அது மட்டும் முடியாது. இதைத்தவிர, வேறு என்ன வேண்டுமானாலும் கேள் “
பிராந்தர் கடகடவெனச் சிரித்தார். பிறவியில் உயர்ந்த பிறவியாகிய மனிதப் பிறவியைப் பெற்றும் மனிதர்கள் அனைவரும் நினைவாலும், வாக்காலும், நடத்தையாலும் கீழான நிலையிலேயே இருக்கிறார்கள். எத்தனை சொன்னாலும் மக்கள் கேட்பதாக இல்லை. ஆன்மா, உயர்நிலையை அடைவதுதான் சிரமம். கீழ்த்தரமாக இறங்கி விடுவது வெகு சுலபம் என்பதை விளக்குவதற்காகத்தான் கஷ்டப்பட்டுக் கல்லை மலைமேல் ஏற்றி, பிறகுகீழே உருட்டி விட்டேன்.அதனை கண்டு பயந்து ஓடினார்களே தவிர ஏன் இப்படி என்று என்னை என்றும் கேட்டது இல்லை. அவர்கள் விதி வழி மதி இயங்குகிறது. புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே நல்வழியில் அறிவு செல்லும். இதனை மக்கள் உணர்வதாக இல்லை. பிராந்தன் என்று என்னை அழைப்பார்கள், தாங்களே ஆசைப் பைத்தியங்களாக இருப்பதை புரிந்து கொள்வதில்லை… தாயே ” என்றார்.
“போகட்டும் தாயே! ஏதாவது கேட்கச் சொன்னாய் அல்லவா? இரவில் உன்னைக் கண்டு மனிதர் யாரும் பயப்படாதபடி, உன் கோர வடிவத்தை மறைத்துக்கொண்டு நடமாடு தாயே! இதுதான் என் வேண்டுகோள் என்றார் பிராந்தர்.தனக்கென எதுவும் கேட்காமல், மக்களின் நலனைப் பற்றி மட்டுமே யோசிக்கும் பிராந்தரை மதிப்புடன் பார்த்தாள் காளி, “அப்படியே ஆகட்டும். இனி, எந்த மனிதர் கண்களிலும் நான் தென்பட மாட்டேன்” என்று சொல்லி மறைந்தாள்.கடைசி வரை நாராயணரை, மக்கள் பிராந்தராகவே பார்த்துப் பயந்தார்களே தவிர, அவரை நெருங்கி நன்மை பெற்றுகொள்ள யாருக்கும் விதி பயன் இல்லை. அதன் பின்பு பிராந்தர் காடு மலையெல்லாம் சுற்றியலைந்து திரிந்து தவயோகம் செய்து சமாதி நிலை அடைந்தார்.'
எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்
--Geetha Sambasivam 09:48, 22 மார்ச் 2011 (UTC) |
